அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 23 January 2021

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


யாழ்ப்பாணப் பண்பாட்டின் தெரியப்படாத பக்கங்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பேராசிரியர்.கா.சிவத்தம்பி  
Wednesday, 04 August 2004

(திரு.க.முத்துராஜாவின் "ஆழியவளை" என்ற ஆய்வேட்டுக்கான முன்னுரை)

பேராசிரியர். சிவத்தம்பிஇவ் ஆய்வு நூல் இலங்கையின் தமிழ்ப் பிரதேச உள்ளுர் (Local) வரலாறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எனக்குப்படுகிறது. இந்நுலாசிரியர் தாம் இப்பொழுது வசிக்கும் கனடா நாட்டுப் பின்புலததிலிருந்து, தனது கிராமத்தை தான் விட்டுப் போன வாழ்க்கையை, பதிவு செய்யும் முயற்சியாகக்கொண்ட இப்பணி, ஒரு பல்கலைக்கழக முதற்பட்டத்திற்கான ஆய்வேடு என்ற வடிவினூடாக வரும் பொழுது, இந்நூல் அறியாமலே விஞ்ஞான பூர்வமான ஒரு சமூக ஆவணமாக அமைந்து விடுகின்றது.

இந்நூலுக்கான தனது அணிந்துரையில் பேரா.தொ.பரமசிவன் கூறுவதிலிருந்து தமிழகத்து வரலாறு எழுதியற் பின்புலத்திலும் கூட இது முக்கியத்துவம் பெறுகின்றது என்பது புலனாகின்றது. இம்முன்னுரையில் இந்நூல் அல்லது இத்தகைய ஊர் வரலாறுகள் குறிப்பாக நமது வரலாற்றுப் பாரம்பரியச் சூழலில் பார்க்கப்பட வேண்டிய முறைமை பற்றிச் சிறிது நோக்குவது அத்தியாவசியமாகின்றது.

வரலாறு என்பது எப்பொழுதுமே அதன் தேவை உணரப்படும் பொழுதுதான் தோன்றுகின்றது. மக்களுக்கு அவர்களுடைய குடும்ப, குழும நிலைகளில் அடையாளம் தேவைப்படுகின்ற பொழுது "நாங்கள் யார்?" என்று வரைவுபடுத்திப் பார்க்க வேண்டிய சமூக, பொருளாதாரத் தேவைகள் ஏற்படும்பொழுது வரலாறு தோன்றும். இது காரணமாகவே ஒவ்வொரு குடும்பத்துக்கும் அந்தக் குடும்பத்துக்கு மேற்பட்ட அலகுகளான சமுதாயம் (Community), வர்க்கம் (Class), நாடு (Country), தேசம் (Nation) என இந்த வரலாறு விரிந்து செல்லும். வரலாறுகள் முதலில் வாய்மொழி நிலையிலேயே ஆரம்பமாகின்றன. குழும நிலைகளில், கணக்குழு நிலைகளில் இந்த வரலாறுகளைப் பாடுதற்கென்றே பாடுநர் குழாங்கள் (Bards) இருக்கும். சங்க இலக்கியத்திற் பேசப்படும் பாணர் இததகைய வம்சவழிப் பாடுநர்களே. இந்த வாய்மொழி வரலாறுகள் விஞ்ஞான பூர்வமான வரலாறுகளாக மாறுவது, தேச, அரச நிறுவன வாக்கத்துடன் தொடர்புறுகின்ற ஒரு விடயமாகும்.

இன்றுள்ள நிலையில் நாம் வரலாறு எனும் பொழுது முதலிற் கணக்கெடுப்பது தேச, நாட்டு வரலாறுகளே. அந்த வரலாற்றினுள்ளும் அரசியல் வரலாற்றையே நாம் பெரிதும் முனைப்புறுத்திக் கூறுகின்றோம். அந்த அரசியல் வரலாறு மன்னராட்சிக் காலங்களில் ஆட்சிப் பரம்பரைகளின் வரலாறாக அல்லது அத்தகைய பரம்பரைகளின் இடையே நிலவிய ஊட்டாட்டங்களாக அமையும். இன்றைய நிலையில் நாம் நாட்டு வரலாறுகளையும், இனக்குழும வரலாறுகளையும் முதன்மைப்படுத்துகின்றோம். பிரதானமாக இத்தகைய வரலாறுகளையுடைய தளமாக அமைவது ஒரு புவியியற் கூறு ஆகும். ஒரு குறிப்பிட்ட புவியியல் வரையறைக்குள் வாழுகின்ற மக்களிடையே ஏற்பட்ட ஆட்சிகள் அவற்றுக்குப் பின்புலமாக அமைகின்ற விடயங்கள் முக்கியமாகின்றன.

இனக்குழுமங்களின் வரலாற்றை பேசும் பொழுது கூட இந்த புவியியல் தளம் முக்கியமாகின்றது. அப்புவியியல் வரையறையைத்தான் நாங்கள் "நாடு" எனக்கொள்கின்றோம். நாடு ஆட்சிக்கூறாக அமையும். (அரச உருவாக்கத்துக்கும் வர்க்க உணர்விற்கும் மக்களின் அடையாள உணர்வுகளுக்கும் உள்ள ஊட்டாட்டங்களினூடேயே வரலாறு மேற்கிளம்புகின்றது. விரிவஞ்சி அந்த விளக்க முறைமைக்குட் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுகிறேன்).

வரலாறு எழுதியல் நோக்கில் ஒரு பொதுக்கூறாக நாடு - தேசத்தை எடுத்துக்கொண்டால் அந்த நாட்டு உருவாக்கத்தினுள் பல கூறுகள் வரும். பிராந்தியம் (Region) என ஒரு மட்டமும் அதன் கீழ் அலகாக ஒரு உள்ளுர் (Locality) பிரதேசம் வரும். மேற்கு நாடுகளில், குறிப்பாக எனது பரிச்சயத்திற்கு உட்பட்ட அளவில், இங்கிலாந்தின் வரலாற்றில் இந்த உள்ளுர் அலகுகளின் வரலாறு மிக முக்கியமானதாகும். அந்த நாட்டில் அல்லது தேசத்தின் ஒட்டு மொத்தமான, முழுமையான வரலாற்றை எழுதுவதற்கு அப்பிரதேசத்தினுள் வரும் சகல மக்களினதும் வளர்ச்சி நிலைகளையும் சுட்டிக்காட்டல் வேண்டும். நாட்டின் வரலாற்றொருமைக்குள் அந்நாட்டின் செழுமைக்கு உதவும் பன்முகப்பாடுகள் பல கணக்கிடப்படாமலே போய்விடலாம். வரலாற்றினை மேலிருந்து கீழாக எழுதாது அந்த நாட்டினது ஆக்கக்கூறுகள், அலகுகளின் ஒட்டுமொத்தமான இணைவாகப் பார்ப்போமேயானால் அந்த வரலாறு ஒரு மேலாண்மைச் சக்தியின் வரலாறாக அமைவதை ஓரளவேனும் தவிர்க்கலாம். இந்த வகையில்தான் உள்ளுர் வரலாறு யாது என்பது பற்றிய நம்முடைய மனப்பதிவுகள் பல்வேறுபட்டனவாக இருப்பதை நாம் காணலாம்.

நமது சமூகம் இயல்பாகவே அதிகாரப்படிநிலையை சமூக-சமயத்தின் அடிப்படை உண்மைகளுள் ஒன்றாக நம்பித் தொழிற்படுவதால் உள்ளுர் மட்டங்களில் எழுதப்படும் வரலாறுகள் அந்த ஊர் "பெரியவர்களின்" வரலாறாகவோ அல்லது "முக்கியமான குடும்பங்களின்" வரலாறாகவோ அமைந்து விடுவது இயல்பு. "சமரகவி" கூட ஒரு வரலாற்று ஏடுதான். (சமரகவிக்கான யாழ்ப்பாண வழக்குச் சொல் 'கல்வெட்டு" ஆகும். இது நடுகல் மரபு வழியாக வருவது. வீரர் இறந்தவிடத்து அக் கல் அவர் உருவ வரைவையும் பெயரையும் முக்கிய புகழையும் கொண்டிருக்கும். ஏறத்தாழ 7ஆம் நூற்றாண்டுக்குரிய "செங்கம்" நடுகற்களில் இப்பண்பினைக் காணலாம்.)

இன்னொரு நிலையில் சாதிகளின் வரலாறு முக்கியமாவதைக் காணலாம். கிராமத்திலுள்ள ஒவ்வொரு சாதிக் குழுமங்களுக்கும் தங்கள் தங்கள் சாதி பற்றிய ஐதீகங்கள் உண்டெனிலும் மேலாண்மையுடைய அன்றில் மேலாண்மையை அவாவுகின்ற சாதிக் குழுமங்களே வரலாறு எழுதும் வழக்கம் உண்டு. இத்தகைய வரலாறுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்றன. பிரதானமாக முக்குவ குலத்தோருடைய வரலாறுகளில் பல இப்பண்பினை உடையவை. வேறு சில நூல்கள் மாவட்ட, பிரதேச வரலாறுகளை பெருந்தனக் குடும்பங்களின் வரலாறாகவே எழுதும் முறை உண்டு. உண்மையில் மயில்வாகனப்புலவருடைய யாழ்ப்பாண வைபவமாலை யாழ்ப்பாணத்தில் குடியேறிய முதலிமார் குடும்பங்களை மையமாகக் கொண்டே எழுதப்பட்டது. அந்தக்குடும்பங்களின் வழிவந்தவர்களே பிற்காலத்தும் சமூக மேலாண்மையுடையோராக விளங்கியமையால், யாழ்ப்பாண வைபவமாலை யாழ்ப்பாண வரலாற்றின் மூலச்சான்றாயிற்று.

யாழ்ப்பாணத்து முக்குவ குலத்தவரின் குல மரபுப் பாரம்பரியங்களைக் குறிக்கும் "வெடியரசன் மாலை" வெளியிடப்பட்ட பொழுதுதான் வைபவமாலையில் பேசப்படாத பிற வரலாற்று நிகழ்ச்சிகளும் உள்ளவென்பது தெரியவந்தது. ஆனால் இன்றுவரை வெடியரசன் மாலை யாழ்ப்பாணத்தின் உயர் ஆராய்ச்சி மையங்களில் ஒரு சான்றாவணமாகப் பயன்படுத்தப்படவில்லை என்றே கூறலாம்.

உள்ளூர் வரலாறு எனும் எண்ணக்கரு எவ்வாறு திரிபுபடுத்தப்படலாம் என்பதற்கான சில தடயங்களை மேலே காட்டினேன். உள்ளூர் வரலாறு என நாம் கொள்ள வேண்டுவது அவ்வப் பிரதேசத்தினுள் வருகின்ற யாதேனும் ஒரு வாழ்வியல் ஒருமையுடைய, பிரதானமாக ஒரு புவியியல் வரையறையுடைய ஒரு உள்ளூர்ப் பிரதேசமாக இருத்தல் வேண்டும். இது கிராம-பட்டின-நகர நிலைப்பட்ட ஒன்றாக அமைந்து அதன் பிரதான பண்புக்கான அமைவிடம் முழுவதையும் தனக்குள் கொண்டுவருதல் வேண்டும். அந்த உள்ளூருக்குள் ஒரு சமுதாய உணர்வு இருத்தல் வேண்டும். சாதிகள் வேறுபடினும், அவற்றுக்கிடையே உயர்வு தாழ்வு பேசப்படினும் சிற்சில ஊரவர்கள், பிரதேசவாசிகள் சாதி வேறுபாடுகளை ஊடறுத்து அந்தப் பிரதேசம் முழுவதையுமே உள்ளூர் அலகாகக் கொள்ளுவர். யாழ்ப்பாணத்தினுள் அத்தகைய பருமட்ட பிரதேச அலகுகளாக வடமராட்சி, தென்மராட்சி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு, தீவுகள் ஆகியனவற்றைக் கூறலாம்.

ஆழியவளை

உள்ளுர் வரலாறு (Local History)

உள்ளுர் வரலாறு என்பது உண்மையில் ஓர் இடம் சார்ந்ததாகவே அமையும். ஒரு வரையறுக்கப்பட்ட இடப்பரப்பைச் சுட்டுவதாகும். இத்தகைய ஒரு வரலாற்றை மேற்கொள்ளும் பொழுது அந்த இடப்பரப்பின்:

1. புவியியல் அமைப்பு
2. வளங்கள்
3. வாழும் மக்களின் குழும நிலை அம்சங்கள் - சமூக ஒழுங்கமைப்பு
4. அவ்விடப் பரப்பினுள் வரும் பல்வேறு பொருளாதார உற்பத்தி முறைமைகள் அல்லது உறவுகள் பற்றிய விளக்கம், சந்தைப்படுத்தல் போன்றவை உட்பட.
5. வாழ்வுமுறை/பண்பாட்டு அம்சங்கள்.
 அ. மதம்சார் ஒழுங்கமைப்புக்கள்
 ஆ. மதம் சாரா ஒழுங்கமைப்புக்கள்
6. இடப்பகுதியின் நிர்வாக ஒழுங்கமைப்புக்கள் (எவ்வெப் பெரும் பாகங்களின் கீழ் இவ்விடப்பகுதி வருகின்றது என்பதும் அவற்றுக்கும் இதற்குமான ஊடாட்டங்கள் என வருபவை, முதல்மட்ட அல்லது தொடக்கமட்ட ஆய்வுத் தேடல்களாக அமையும்)

இவற்றுக்கு மேல்,

7. அவ்விடப்பகுதியின் தொல்லியற் சான்றுகள்.
8. ஐதீகங்கள், வாய்மொழி மரபுகள் என்பன தேடிப் பெறப்படும்.

இன்னொரு மட்டத்தில், அவ்விடப்பரப்பில் வாழ்ந்த உள்ளூர் நிலைப்பட்ட, வெளியூர் நிலைப்பட்ட முக்கியஸ்த்தர்களின் தொழிற்பாடுகள் பற்றிய அறிகை ஆகியனவும் இடம்பெறும். ஓட்டுமொத்தமாக நோக்கும் பொழுது அவ்விடப்பிரதேசத்தின் பேரலகாக உள்ள அந்தப் பெரும்பாகத்துடன் (அது மாவட்டமாக, மாநிலமாக, நாடாக, பிராந்தியமாக, சர்வதேசியமாக விரிக்கப்படலாம்.) இந்த அலகுக்குள்ள உறவுகள் யாவற்றையும் ஒன்றிணைத்து, ஏறத்தாழ ஒரு முழுமையான பகுதியாகவும் பகுதியின் முழுமையாகவும் பார்த்தல் வேண்டும்.

இத்தகைய வரலாற்றுத் தேடலில் அறிகையில் ஈடுபடுவோரது உளப்பாங்கு, கருத்துநிலை ஆகியன முக்கியமானவையாகும். அவ்விடப்பகுதியை முதன்மைப்படுத்துவதோ, அதன் ஏதோவொரு அம்சத்தை முதன்மைப்படுத்துவதோ என்ற விருப்பு வெறுப்பில் ஈடுபடாது, உண்மைக்கான தேடலாக அமைதல் வேண்டும். ஒட்டுமொத்த முழுமையினுள் இவ்விடப்பகுதி பெறும் தனித்துவம், இத்தனித்துவம் இடையலகு, பேரலகுகளில் வகிக்கும் வகிபாகம் ஆகியவை பற்றிய அறிவு முக்கியமாகும்.

கடந்த சில வருடங்களாக வரலாறு எழுதியலில் அடிநிலை மக்கள் பற்றிய வரலாறு மிக முக்கியம் பெறுகின்றது. இதனை ஆங்கிலத்தில் Subaltern Studies என்பர். இத் தொடரை "விளிம்பு நிலை" மனிதர்கள் பற்றிய ஆய்வியல் எனச் சிலர் மொழிபெயர்ப்பர். உண்மையில் இந்த ஆங்கிலப்பதம் படைச்சேவையில் உள்ள அடிநிலைப் போர் வீரர்களைக் குறிப்பதாகும். போர்களின் வரலாறு எழுதப்படும் பொழுது பொதுவாக உயர்பதவி உத்தியோகத்தர்களின் பெயர்களே குறிப்பிடப்படுவது வழக்கம். சாதாரண படை வீரரின் வகிபாகம் எடுத்துப் பேசப்படுவதே இல்லை. இந்தச் Subaltern Studies வரலாற்றை எழுதும் போது இந்தக்கடைநிலை ஊழியர்களின் வகிபாகத்தை முக்கியப்படுத்தியே எழுதும்.

பொதுவாக தேச-நாட்டு, பெரும் பிரதேச வரலாறுகள் எழுதப்படும் பொழுது முக்கியமான பெருமனிதர்களின் நிலைநின்றே வரலாற்று எடுத்துரைப்பு நிகழும். ஆனால் ஒரு விரிவான உள்ளுர் வரலாறு எழுதப்படும் பொழுது அந்த ஊரின் சகலரும் - அடிநிலை, கடைநிலை மக்கள் உட்பட எல்லோரது வரலாறும் வரும். இதனால் உள்ளுர் வரலாறு சரியாக அணுகப்படுமேயானால் நியமமான "மக்கள் வரலாற்றை" (People History) எழுதுவதற்கான ஒரு சூழமைவு ஏற்படும். உள்ளூர் வரலாறு எழுதப்படும் பொழுது இக்கண்ணோட்டங்கள் தவிர்க்கப்பட முடியாதவையாக அமையும்.

உள்ளூர் வரலாறு என்ற எண்ணக்கரு பற்றி நாம் இதுவரை பார்த்த உண்மைகளை மனங்கொண்டு யாழ்ப்பாணப் பிரதேசத்திற்கும் இந்நூலுக்கும் வருதல் அவசியமாகின்றது.

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் போக்கு என இன்று நம்மில் பலரிடையே பதிந்துள்ள, நமது மாணவரிடையே நாம் பரப்பும் கருத்து நிலைகளைச் சிறிது நோக்கினாற் கூட அவ்வரலாற்றோட்டம் ஒட்டுமொத்தமான வரலாற்றினது அல்லாத ஒரு சமூக அதிகார வலுவும் ஏற்புடைமையுள்ள ஒரு குழுமத்தினரின் கருத்து நிலைப்பாச்சலின் பாய்தளமாகவே இருப்பதை அவதானிக்கலாம். பட்டினப்பாலைக் குறிப்புகள் ஈழத்துப் பூதன் தேவனாருடன் தொடங்கி சைவ நாயன்மார்களுக்கு வந்து யாழ்ப்பாண அரசின் வரலாற்றோடு வந்து போர்த்துக்கேய ஒல்லாந்த காலத்து ஒடுக்கு முறைகளைக் கடிந்து ஆங்கில ஆட்சியை, நிர்வாக முறைமையை ஏற்று, அதனுள் நின்று தொழிற்படுகின்ற சமூகக்கல்விக் கொள்கைகளை ஆதரித்து அவற்றின் பிரதிநிதியாக ஆறுமுக நாவலரைக் கொண்டு, ஆறுமுக நாவலர் சுட்டி நிற்கும் மதப் பண்பாட்டுக் கருத்து நிலையின் தொடர்ச்சியாக சேர்.பொன்னம்பலம் இராமநாதனைக் கொண்டு, இந்தப் பாரம்பரியங்களின் தொடர்ச்சியாகவே இனக்குழும அரசியலுக்கு வர விரும்புவதற்கான ஏறத்தாழ ஒரு நேர்கோட்டைக் காணலாம்.

இந்தப்பாய்வின்பொழுது வந்து சேரும் சக்திகளின் பங்களிப்புக்களை தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளாகப் பார்த்து தமிழைச் சைவத்துடன் மாத்திரமே இணைத்துப்பார்ப்பதான ஒரு மௌனப் போராட்டத்தின் தொடர்ச்சியாக காணப்படுவதை அவதானிக்கலாம்.

இந்த யாழ்ப்பாண, தமிழ் வரலாற்றினுள் "நற்குலங்களிலே" பிறவாதவர்கள் வரலாறோ அவர்கள் பங்களிப்போ பேசப்படுவதில்லை. பிரதேச வேறுபாடுகள், மதப் பண்பாட்டு வேறுபாடுகள் முதல் அரசியல் வேறுபாடுகள் பற்றிய வரலாறுகள் ஏறத்தாழ எழுதப்படாமலே போய்விட்டன. உதாரணமாக யாழ்ப்பாணத்தின் நவீனமயப்பாடு (Modernization)இ ஜனநாயக மயப்பாடு (Democratization)- சமபோசனம் சமவாக்குரிமை ஆகியன எவ்வாறு நிகழ்ந்தன என்பது பற்றியோ, யாழ்ப்பணத்தின் தீண்டாமை எதிர்ப்பு வரலாற்றையோ, நாமின்னும் இப்பிரதேசத்து வரலாற்றின் ஓரங்கமாகப் பதிவு செய்யவே இல்லை. சைவ மத நம்பிக்கை உடையோரிடையே தானும் காணப்படும் அகவேறுபாடுகள் பற்றிய ஆய்வுகளும் குறிப்புகளும் கிடையாது. ஆகமம் சாராத வழிபாடுகள் பற்றிய ஆய்வு இப்பொழுதுதான் முன்னிலைக்கு வருகின்றன.

இவை யாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாண வாழ்க்கையின் சமூக யதார்த்தமான சாதி முறைமை அரசியல் ரீதியாகப் போற்றப்படமுடியாத, போற்றப்படாத அரசியற் சூழ்நிலைக்கு வந்த பின்னரும் கூட, சமூக வாழ்வியலில் அவற்றைப்பற்றி பேசாது, நாடகங்களில் வரும் பக்கச் சொல் போன்று (Aside) சாதி முறைமையினைப் பேசுமொரு நிலையும் காணப்படுகின்றது.

நாம் இவை பற்றி மிக ஆழமாக மிகுந்த உன்னிப்புடன் சிந்தித்தல் வேண்டும் நம்மிடையே நிலவும் அக வேறுபாடுகளை, சமவீனங்களை வாய்திறந்து, மனந்திறந்து எவ்வித தயக்கமும் இன்றிக் கூறமுடியுமோ அப்பொழுதுதான் நாம் ஒரு நாட்டினமாக மேற்கிளம்பலாம். இத்தகைய ஒரு விரிநிலைச் சிந்திப்பு மிகமிக அவசியம், அத்தியாவசியம் என்று கூடச் சொல்லலாம். இவ்வாறு சிந்திக்கும் பொழுதுதான் திரு.முத்துராஜாவின் இந்த நூல் முக்கியமாகப்படுகின்றது.

இந்நூலை வாசிக்கும் பொழுது நமது மனப்பதிவில் பட்டுத் தெறிப்பது இந்த நூலின் ஒளிவு மறைவற்ற எடுத்துக்கூறல் முறையாகும். திரு.முத்துராஜா அவர்கள் ஆழியவளைக் கிராமத்தைப் பற்றிய இந்த ஆய்வியல், சாதிகளின் பெயரை மிகமிக இயல்பாக எவ்வித மனத்தயக்கமுமின்றிக் கூறிச் செல்கின்றார்.

"நாம் இதுகளைப் பற்றியெல்லாம் இப்பொழுதும் பேச வேண்டுமா?" என்ற பூசிமெழுகும் நியாயிப்புகளுக்கு இடம்கொடுக்காது உள்ளதை உள்ளவாறே கூறுகின்றார். அவ்வாறு உள்ளதை உள்ளவாறே கூறுவதனால், ஒருவரைத் தாழ்த்தியோ, மற்றவர்களை உயர்த்தியோ கூறாது செல்வதுதான் முறைமை. உண்மையில் ஏறத்தாழ 19 வருட காலத்துக் கனடா வாழ்க்கை இவருக்குத் தனது சொந்த கிராமத்தையே ஒரு விடயப் பொருளைப் பார்ப்பது போன்ற (தனக்குப் புறம்பாக உள்ள Object ஒன்றைப் பார்த்தல். அதாவது objective நிலையில் பார்த்தல். புறநோக்கு எனும் மொழி பெயர்ப்பு இதற்கு பொருந்தாது.) அவதானிப்புணர்வுடன் அங்குள்ளவற்றை விபரிக்கின்றார்.

யாழ்ப்பாணத்து வாழ்க்கை பற்றிய சமூக மானிடவியல் ஆய்வுகள் ஒருபுறம் மிகமிகக் குறைவு. யாழ்ப்பாணத்தவர் எவருமே அத்தகைய நோக்கில் எழுதவில்லை எனலாம். (சித்தார்த்தனுடைய The Karmic Theatre ஓரளவில் விதிவிலக்கானது. ஆனால் அது கூடப் பண்பாட்டு நெருடலான விடயங்களைக் கூறவில்லை). மறுபுறத்தில் எழுதப்பட்டவை எல்லாமே ஆங்கிலத்திலேயே உள்ளன. (பகவத்சல பாரதியின் நூலைத்தவிர தமிழர் மானிடவியல் பற்றிய நூல்களைத் தமிழில் காண்பது அரிது)

முத்துராஜா மெச்சத்தகுந்த உணர்திறனுடன் சாதிகள் பற்றிய விடயங்களை மிகத் தெளிவாகச் சொல்லுகின்றார். இந்நூலின் எடுத்துக் கூறு முறைமை, இந்த நூலினை ஒரு சமூக ஆவணமாக்கியுள்ளது.

இந்திய இலங்கைச் சூழலில் சாதி முறைமையின் ஒரு முக்கிய அம்சம், சாதிகளின் மேல் நிலையாக்கத்துடன் ஏற்படுகின்ற நவீன மயப்பாடு கொண்டு வரும் சமஸ்கிருத மயப்படுகையாகும். இந்த நூலில் அந்த சமஸ்கிருத நெறிப்படுகையை விபரிக்கும் அதே வேளையில் அதற்கு முந்தைய நிலையை மிகத் தெட்டத்தெளிவாக விபரிக்கின்றார். உண்மையில் யாழ்ப்பாணத்து மீன்பிடித் தொழில் பற்றிய இவரது விவரணத்தில் ஆசிய, ஆபிரிக்க மட்டங்களில் அபிவிருத்தியடையாத நிலையில் நடைபெற்று வந்த மீன்படி முறைமைகள் மனக் கூச்சமின்றி சொல்லப்படுகின்றன. ஆழியவளைக் கிராமத்தில் மீன்பிடி இருநிலைகளில் செய்யப்படுகின்றது. இச்சமூகத்தினர் ஆழ்கடலிலும் பரவைக் கடலிலும் பரிச்சயமுள்ளவர்களாவர். இந்த மீன்பிடி முறைமைகள் எவ்வாறு ஒரு வாழ்க்கை முறையின் தளமாக அமைகின்றன என்பதனை இவர் நூலிலிருந்து தெளிவாக அறியமுடிகின்றது. உண்மையில், மரபு மாற்றங்களுக்குப் பின்புலத்திலுள்ள உற்பத்தி முறைமை மாற்றங்கள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை. நவீனமயவாக்கத்தின் வருகை, சந்தைப்படுத்தப்படல் முறைமை மாற்றங்கள், உபரிச் சேகரிப்பின் வேறுபடும் தன்மை ஆகியனவும் கல்வி, வீதிப் போக்குவரத்து வசதி போன்ற நவீனவாக்கச் செயற்பாடுகளும் எவ்வாறு அச்சமூகத்தை மாற்றியுள்ளன என்பதனைப் பொருளியல் வரலாற்று நோக்குடன் பார்த்தல் அவசியம்.

இதில் ஆழியவளை என்னும் அலகு, வடமராட்சி என்னும் பிரதேச அலகினுள் இணையும் முறைமை ஆகியவற்றை நோக்கும் பொழுது உண்மையில் நாம் ஆழியவளைக் கிராமத்தின் வரலாற்றினூடாகவே, யாழ்ப்பாண மாவட்டத்தினது வரலாற்றின் தெரியப்படாத பக்கங்களுக்கு வருகின்றோம். இந்த ஆய்வு, முதற் பட்டத்துக்கான இறுதி வருடத் தேர்வுத் தேவைக்காகச் செய்யப்பட்டது. எனவே இதற்குள் எல்லாம் இருப்பதாகவோ, பேசப்படுவதாகவோ கொள்ளமுடியாது, கொள்ளவும் கூடாது. ஆனால் இந்த நோக்குமுறை முக்கியமானது.

தாங்கள் தங்கள் வாழ்க்கைப் பின்புலம் பற்றிய தாழ்ச்சியுணர்வு, குற்றவுணர்வுகள் இல்லாமல் தயக்கமின்றிப் பட்டவர்த்தனமாக எடுத்துப்பேசும் பலம் வருகின்றபோது தான் நாம் நமது பிரதேசத்தினுள், மாநிலத்தினுள் உண்மையான ஒற்றுமை, அதிலும் பார்க்க ஒருமைப்பாடு உடையவர்கள் ஆகின்றோம். இந்நூல் கவர்வதற்கான இந்னொரு காரணம், அண்மைக்காலத்தில் வளர்ந்துவரும் பண்பாட்டாய்வியற் துறையின் (Cultural Studies) ஒரு முகிழ்ப்பினை இதிலே நான் காணுகின்றேன். பண்பாட்டாய்வியல், பண்பாட்டு மானிடயியலிலிருந்து வேறுபடும் புள்ளிமையம் முக்கியமானது. பண்பாட்டு மானிடவியல், வாழ்க்கையின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க, பண்பாட்டு ஆய்வியலோ நவீன உலகின் இன்றியமையா வாழ்க்கை முறைகள் (ஊடகம், உடுப்பு மோஸ்த்தர்கள் போன்றவை) எவ்வாறு மக்களின் பண்பாட்டு இருப்பினையும் அவர்கள் நடைமுறைகளையும் விருப்பு வெறுப்புகளையும் பாதிக்கின்றன என்பதனைப் பற்றி ஆராய்கின்றது. இந்த ஆய்வியல் பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளிலேயே பெரிதும் வளர்ந்துள்ளது.

மூன்றாவது உலக நாட்டு சூழல்களில் இவை எவ்வாறு தொழிற்படுகின்றன என்பது பற்றிய ஆய்வுப் பரிச்சயம் மிகக் குறைவே. முத்துராஜா அவர்கள் ஆழியவளையின் மாறிவரும் சமூகத்தின் சமூக ஊடாட்டங்கள் அரசியல் மயவாக்கம் போன்றவை பண்பாட்டு முறைமைகளுடன் குறிப்பாக புதிய குறியீடுகளைத் தோற்றுவிப்பதன் மூலம் அல்லது பழையவற்றை எவ்வாறு பதுக்கி அமைத்துக் கொள்கின்றது என்பதன் மூலம் நிகழ்கின்றன என்பதைப்பற்றி எழுதவில்லை. ஒரேவிடங்களில் ஆழியவளைப் பண்பாட்டை நாட்டார் நிலை (Folk) நின்று நோக்குகின்ற ஒரு தன்மையும் காணப்படுகின்றது. ஆயினும் இந்தத் தகவல்களினூடாக நாம் பண்பாட்டு ஆய்வியலுக்கான கூறுகளை மிகத் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

இந்நூலின் பிற சேர்க்கையாக வரும் இறுதி அத்தியாயம் உண்மையில் ஏறத்தாழ முற்றுருப்பெற்றபின் சேர்க்கப்பட்டதாகும். ஏனெனில் இந்நூலின் அச்சுருவாக்கத்திற்கான படியைத் தயார் செய்த பின்னரே இவர் அந்த அத்தியாயத்திற் பேசப்பெறும் பயணத்தை மேற்கொண்டார். ஊரிலிருந்து திரும்பி வந்தபொழுது அவர் பதிவு செய்திருந்த மாற்றங்கள் விபரித்த பொழுது அவை தவிர்ப்பின்றி பதியப்படவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தினேன். பிற்சேர்க்கையாக உள்ள அத்தியாயம் இந்நூலின் முழுமைக்கு உதவுகின்றது. ஏறத்தாழ 1950 இல் இருந்து 2003 டிசம்பர் வரை ஏற்பட்ட மாற்றங்கள் இந்நூலிலே பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூக மானிடவியல் ஆராட்சிகளை மேற்கொள்ளுபவர்கள் தாம் ஒரு கால கட்டத்தில் ஆராட்சி மேற்கொண்டு அவ்வாராச்சியினைப் பிரசுரித்தவர்கள், பதினைந்து இருபது வருடங்களின் பின்னர் அங்கு மீளவும் சென்று தாம் விட்ட இடத்திலிருந்து ஏற்பட்ட மாற்றங்களைப் பதிவு செய்வர். இந்த எழுதுமுறையை ஆய்விடத்துக்கு மீளச் செல்லுதல் (Revising the Area of Study) என்பர்.

உண்மையில் ஆழியவளை எப்படி அண்மைக்காலப் பிரச்சினைகளினூடே நவீனவாக்கத்தைப் பெற்றுள்ளது என்பதும் இந்த நவீனவாக்கம் ஏற்படுத்தியுள்ள சமூக மாற்றமும் இந்தச் சமூக மாற்றத்தினைக் காட்டும் காட்சிப்புல மாற்றங்களும் அவற்றுக்கு மேலாக பெறுமன நியம மாற்றங்களும் எவ்வாறு நிகழ்ந்துள்ளன என்பதை மிகத்துல்லியமாக வெளிக்கொணருகின்றன. இந்தப் பிறசேர்க்கை அத்தியாயத்தின் இந்த நூலை யாழ்ப்பாணச் சமூகத்தின் அடிநிலைப்பட்ட நுண்குறு (Micro-History) வரலாறாக, அந்த வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு முக்கிய அம்சமாக முத்தாய்ப்பு வைக்கின்றது.

இசை மொழியிற் கூறினால் அந்த அத்தியாயம் கவர்ச்சிமிக்க "ஆவர்த்தனத்தின்" வனப்புமிக்க "தீர்மானமாகின்றது".

இந்நூலின் முக்கியத்துவம் அது ஆழியவளையைப் பற்றித் தரும் தகவல்கள், தரவுகளில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. யாழ்ப்பாணச் சமூகக்கட்டமைப்பு, பண்பாட்டுருவாக்கம் போன்ற விடயங்களைப் பார்ப்பதற்கான ஓர் அணுகுமுறை-புலமைக் குற்றங்கள் அதிகமில்லாத ஒரு கற்றறி ஒழுங்காற்றலுக்கான ஒரு விதை இதனுள் இருக்கின்றது. இதுவே இந்த நூல் மிகப்பரந்து பட்ட நிலையில் வாசிக்கப்பட வேண்டும் என்பதற்கான தேவையாகும்.

இறுதியாக ஒரு குறிப்பு,

ஆழியவளையின் பெயர்ப்பொருத்தம் முதல் அங்கு காணப்படும் பொருளாதாரப் பண்பாட்டு நடைமுறைகள் எவ்வாறு ஐந்திணை மரபுக் காலத்துத் தமிழ் மரபின் தொடர்ச்சியைக் காட்டுகின்றன என்பது ஆழியவளைக் கரைவலை முறைமையை அகநானூற்றுப் பாடல் வரிகள் சிலவற்றின் தொடர்ச்சியாகப் பார்ப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகின்றது. ஆகம மரபுகளுக்குள் அழிந்துபோன தமிழ்ப் பாரம்பரியத் தொடர்ச்சிகள் பலவற்றை மிகச் சாதாரண மக்களிடையே அவர்கள் பேச்சு வழக்கிலே காணக்கூடியதாக உள்ளது என்பது ஒரு முக்கியமான அம்சமாக எனக்குப் படுகின்றது.

பண்பாட்டு வளர்ச்சிகளில் முன்னேற்றங்களில் வேர் அறாத வளர்ச்சிகளே பொதுமைகளுக்குள் தனித்துவங்களைப் பேணுவதற்கு உதவுவதாகும். ஆவ்வகையில் இந்நூலின் பொருள், அதனிலும் பார்க்க அது சொல்லப்பட்டுள்ள நெஞ்சந் திறந்த எடுத்துரைப்பு முறைமை இந்த நூலின் மிக முக்கியமான பலம் என்று கருதுகின்றேன். இதைச் சொல்கின்றபொழுது இது ஒரு முன்னோடிப் பணி என்பதனையும் மனந்திருத்திக் கொள்ளல் வேண்டும்.

* Dec, 25 – 2003

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  20185352 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6309 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com