Wednesday, 01 September 2004
(15-08-2004 அன்று யேர்மனி மெசடெயில நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் ஆற்றிய உரையின் பிரதி நன்றியுடன் இங்கு பிரசரமாகின்றது)
இன்றைய உலகில் ஐம்பது ஆண்டுகள் வாழ்வது என்பதே பெரியவிடயம். ஐம்பது ஆண்டுகள் பத்திரிகைப்பணி ஆற்றுவது என்பது சாதாரண விடயமல்ல. அதுவும் திரு.சங்கர் அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டது போல ’’வாழ்நாள் முழுவதும் இதழியலாளனாகவே வாழ்வேன்’’ என்று வாழ்வது கௌரவிக்கப்பட வேண்டிய மிகப்பெரிய விடயமாகும்.
நூலின் முன்மட்டையில் வரையப்பட்டிருக்கும் பேனாவே எடுத்த எடுப்பில் எங்களை அறுபதுகளுக்குக் கூட்டிச்செல்கிறது.
60-70 ஆண்டுகளுக்கு முன்புள்ள பொருளாதார நிலையை வீரகேசரி 5 சதத்துக்கு வாங்கி வாசிப்பது என்று திரு.வரதர் அவர்கள், அணிந்துரையில் அழகாகக் கோடிட்டுக் காண்பித்திருப்பது சிறப்பான விடயம்.
ஒரு பத்திரிகை ஆசிரியனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என்ன? ’’பலரையும் அனுசரித்துப்போதல், ஒவ்வொருவரையும் சரியாக இனம் கண்டு கொள்ளல், சமயோசித புத்தி, நேர்மை, அஞ்சாமை, ஒரு கதாசிரியனைப்போல வர்ணிக்கும் திறன், ஒரு கவிஞனைப்போல, எடுத்த எடுப்பிலேயே செய்திகளுக்கு கவர்ச்சிகரமான தலைப்புகள் போடும் திறன். இவையெல்லாம் கோபுவிடம் இருந்ததனால்தான் தனது ஐம்பது வருட பத்திரிகைத்துறை வாழ்வை வெற்றிகரமாக வாழ்ந்திருக்கிறார்’’ என்று திரு.வரதர் அவர்கள் கோபு ஐயா அவர்களுக்கு மகுடம் சூட்டியிருப்பது புத்தகத்துக்கு மேலும் மெருகூட்டி வாசிக்கத் துண்டுகிறது.
இப்புத்தகம் ஆசிரியரை அடையாளம் காட்டுகின்றது. பலபழைய செய்திகளையும், பலபெரிய புள்ளிகளையும், அவர்களின் குணாதியங்களையும் அறிந்துகொள்ள உதவுகிறது என்று அணிந்துரையில் வரும் வசனங்கள்தான் இப்புத்தகத்தின் சிறந்த விமர்சனமாகும். கோபு ஐயா அவர்கள் ஒரு பத்தரிகையாளர் மடடுமல்ல, ஒரு சிறுகதை எழுத்தாளரும்கூட என்ற நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி இப்புத்தகத்தின் என்னுரைமூலம் வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இப்புத்தகத்தை வாசித்து முடித்தபோது எமக்கு வரும் எண்ணம், ஆதங்கம், பரிவு, வேதனை எல்லாம் கோபு ஐயா அவர்கள் பத்திரிகைத்துறையில் தன்னை நிலைநாட்டிக்கொள்ள எவ்வளவு பாடுபட்டிருக்கிறார் எவ்வளவு வேதனைகளைத் தாங்கியிருக்கிறார் என்பதுதான். தமிழ்சமூகத்துக்குச் சொந்தமான அத்தனை தீயகுணங்களாலும் அவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்பது உண்மையிலேயே வாசிப்பவர் மனதை தாக்கியே தீரும். அவர் தொடக்கத்திலேயே என்னுரையை எழுதும்போது பத்திரிகையில் பற்றும், தொழிலில் விசுவாசமும் உள்ள ஒருவன் பத்திரிகை அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் எரிச்சல், பொறாமைக்கும், நெருக்கடிக்கும், உள்ளாவான் என்பதை எனது அனுபவம் எடுத்துக் காட்டும் என்று எழுதி அதனை வெளிப்படுத்தியுள்ளார். பலஇடங்களில் தனது சகாக்களால், தன்னால் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டவர்களால், தான் பட்ட துயரங்கள், தனக்கு சரிவு வரும்போதெல்லாம் இவர்கள் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது பற்றியெல்லாம் எழுதியிருப்பவை உண்மையில் நெஞ்சசைத் தொடுகின்றது. இவை புதிய பத்திரிகையாளர்களுக்கு சிறந்த பாடமாகவும் அமைந்துள்ளது.
ஈழநாடும், தினக்கதிரும் ஒரு தினப்பத்திரிகை எப்படி வெளிவரவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கின. அதேவேளை ஒரு பத்திரிகை நிர்வாகம் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் இப்பத்திரிகைகள் எடுத்துக்காட்டாய் விளங்கி மடிந்துபோயின என்று ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
ஆசிரியர் அவர்கள் என்நினைவுப் பண்ணையிலிருந்து தோண்டி எடுத்தேன் என்று அழகான வார்த்தைப் பிரயோகத்தை பாவித்துள்ளார் மிகவும் சிறப்பாக உள்ளது. நினைவுப்பண்ணை என்ற சொல் எமக்குப் புதிதுதான்.
இந்தநூலை வாசிக்கு முன்பாக எல்லோரும் ஆசிரியரின் என்னுரையை வாசிக்க வேண்டும். அதில் அவர் செய்திருக்கும் சுயவிமர்சனமே எல்லோருக்கும் எடுத்துக் காட்டு. அதுவும் புலம்பெயர் எழுத்தாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்.
அதில் அவர் தன்னைப்பற்றிக் குறிப்பிடும்போது ’’இந்நூலில் நான் என்னைச் சத்தியவந்தனாகக் கொள்ளவில்லை. அப்படி யாரும் தவறாகப் புரிந்துகொள்ளவும் கூடாது. நானும் மனிதன்தான் என்று குறிப்பிடும் அவர் இன்னும் ஒருபடி மேலே போய் மனிதனிடமுள்ள அதற்கும் சிறிது கூடுதலாகவும் என்னிடம் குறையும் தவறும் இருக்கலாம்’’ என்று குறிப்பிடுகையில் எங்கள் மனதில் ஆழப்பதிந்து புத்தகத்தை வாசிக்கத் துண்டியுள்ளார். அவரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் முத்திரை பதித்துள்ளார் என்றே கொள்ள வேண்டும்.
பத்திரிகைத்துறையில் தன்னுடன் வாழ்ந்தவர்களுக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்துள்ளார். கோயில் நிலத்தில் வீடு கட்டி, வீதி விஸ்தரிப்பில் காணாமல் போக, சந்தியும் தெருவும் வாழிடமாக உதவியவர்களுக்கு வள்ளுவன் வழிநின்று நன்றி சொல்லியிருக்கிறார். இளம் எழுத்தாளர்கள் கீறிட்டு வைத்துக் கொள்ள வேண்டிய பகுதி இது.
பக்கத்திலிருந்து கதைப்பது போல இலகு தமிழில் தன் நினைவுக்கு வந்தவை எல்லாவற்றையும் வாசகர்களுக்காக அள்ளித்தந்துள்ளார். வெள்ளை உள்ளத்தில் பதிபோட்டு வைத்திருந்த நினைவுப் பண்ணையிலிருந்து தோண்டியெடுத்து வெள்ளைத் தாளில் து}வி எமக்களித்த வெள்ளை மனிதர் இவர். பல இடங்களில் நினைவில் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனை வாசிக்கும்போது இன்னும் சிறிது காலம் முன்பு இந்நூல் வெளிவந்திருந்தால் இன்னும் நிறைய விடயங்கள் வெளிவந்திருக்கக் கூடும் என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. அவரது முதலாவது புத்தகமே பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் வெளிவந்தது. இந்த நூல் இப்போதாவது வெளிவந்து அவரின் நினைவுப்பண்ணையின் பொக்கிஷங்கள் எமக்குக் கிடைத்திருக்கின்றன என மகிழ்வு கொள்வோம்.
ஐம்பது வருடங்களுக்கு முன்பு இலங்கையில் ஒரு மாதச்சம்பளம் 72.50 ரூபா. ஒரு இரவு வேலைபார்த்தால் ஒரு ரூபாய் கிடைக்கும். என்று கூறி எடுத்த எடுப்பிலேயே எங்களை 50 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறார்.
1953இல் டட்லி அரசில் நிதியமைச்சராக இருந்த ஜே.ஆர். ஒருபடி அரிசியை 25 சதத்திலிருந்து 75 சதமாக உயர்த்தினார். அதனால் எதிர்க்கட்சிகளால் அரசு பல போராட்டங்களைச் சந்தித்து. ஊரடங்கு போடப்பட்டது. அப்போது வீரகேசரியின் நிர்வாக இயக்குனரான ஈஸ்வர ஐயர் ஊழியர்களை அலுவலகத்திலேயே தங்க அனுமதித்தார். இதில் ஆசிரியர் எமக்கு மூன்று செய்திகளைத் தருகிறார். 53ம் ஆண்டு அரிசிவிலை இருபத்தைந்து சதம் என்பது ஒரு செய்தி. டட்லிக்கு ஆட்சி கைக்கு வந்தபோதிலும் அனுபவமில்லை என்ற ஒரு வார்த்தையிலேயே அன்றைய நிகழ்வுகளைப் பற்றிய தனது கருத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் என்பது ஒரு செய்தி. அலுவலகத்தில் ஊழியர்கள் தங்கியிருந்ததன் மூலம் அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்கினார்கள் என்பது ஈஸ்வர ஐயரின் தீர்மானம் என்று எழுதி அவரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதே ஈஸ்வர ஐயர் தமது போனஸ் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரைமாதச் சம்பளத்தை போனசாகக் கொடுத்துவிட்டு தனது பதவியையே உதறித்தள்ளிவிட்டு வெளியேறினார் என்ற செய்தி எம்மை நெகிழ வைக்கிறது.
தனிச்சிங்களச் சட்ட நிகழ்வுகளை எழுதும்போது வீரகேசரியில் சிங்களத்துக்கு தமிழ் சக்களத்தியா சகோதரியா என்ற தலைப்பை போட்டு குன்றக்குடி அடிகளாரை இழுத்துவிட்ட செய்தி பற்றி ஆசிரியர் எழுதியிருப்பது அவரின் துணிச்சலுக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டு.
காந்தி ஜெயமெனிக்கா கற்பழிப்பு வழக்கில் அன்று தந்திமூலம் செய்திகள் பெறும் கஸ்ரங்களை எமக்குப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இதுபோன்ற வழக்குகளில் தான் மொழிபெயர்த்து செய்திகளைக் கொடுப்பதனால் தனக்கு றேப் எடிட்டர் என்றொரு பெயருண்டு என்று துணிச்சலுடன் எழுதியுள்ளார். இந்த வழக்கில் ஜீ.ஜீ.பொன்னம்பலம் எதற்காக ஆபாசக் கேள்விகள் கேட்கிறார் என்பதையும், அதை அப்படியே எழுதி ஆசிரியர் ஹரனிடமும் செய்தி ஆசிரியர் வாசிடமும் தான் மாட்டிக் கொண்டதை அழகாக எழுதியுள்ளார்.
5.06.1956இல் தனிச்சிங்களச் சட்டத்தினையும் அதனை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்த தமிழரசுக்கட்சியினரின் செய்திகளையும் நாகநாதன் தாக்கப்பட்டமை அவருக்கு வெள்ளைக்காரன் உதவிசெய்தமையையும் எம்முன்னால் நிழலாட விட்டுள்ளார். இவை பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
1953இல் 72.50 ரூபாய் சம்பளத்துக்கு சேர்ந்து 1960 இல் 278 ரூபாய் சம்பளம் வீரகேசரியில் பெற்றேன். ஊழியர் வேலை நிறுத்தம் தொடர்ந்த போது தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டி 175ரூபாய் சம்பளத்தக்கு ஈழநாட்டில் சேர்ந்தேன் என்ற செய்தியை வாசிக்கும்போது கண்கள் கலங்குகின்றன. தனது மகனுக்கு பால்மா வாங்கக் கூடக் காசு இல்லை என்ற தனது வறுமையை ஒளிவுமறைவு இன்றி எழுதி ஆசிரியர் உயர்ந்து நிற்கிறார். ஆனால் 103ரூபாய் இழந்தாலும் இதே ஈழநாடுதான் அவரை பத்திரிகை உலகின் ஜாம்பவானாக உலகுக்கு காட்டப் போகிறது என்பதை அவர் அப்போது அறியவில்லை. நாமும்தான். ஆனால் அந்தச் செய்திகளை பின்னால் அறியும்போது உழைப்புக்கு உதாரணமாக ஆசிரியர் திகழ்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
1961ம் ஆண்டு சத்தியாக்கிரகத்தின்போது விற்பனையானதைவிட உருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலைவழக்கு செய்திகளால் அதிகவிற்பனை அதாவது 21ஆயிரம் பிரதிகள் விற்பனையாகின என்ற செய்தியை எழுதி அன்றைய மக்களின் இரசனையையும், ஒரு கொலைக்கு மக்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் சிறப்பாக எழுதியுள்ளார். அன்று ஒரு கொலை நடந்ததென்றால் அது பெரிய செய்தி. இன்று ஒரு கொலை நடக்கவில்லை என்றால் அது ஒரு செய்தி.
1967இல் தி.மு.க: பெற்ற வெற்றிச்செய்தியை தலைப்புச் செய்தியாகப் போட மறுத்த ஹரன் பின்பு அதற்கு ஒப்புக்கொண்டதை எழுதி ஹரனின் குணாம்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மும்மொழிச்சட்டத்தில் பொட்டர் நடராஜா தனக்குச் சோறுபோட்டார் என்பதனைப் பாராது “சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி’ என்ற தலைப்பில் அதிலுள்ள குறைகளை எழுதியதும், பின்னர் ஹரனிடம் தனது நியாயத்துக்காக வாதாடியமையும் அவர் எழுதியுள்ள விதம் அவருக்குள்ள அரசியல் தெளிவை எடுத்துக் காட்டுகிறது. மும்மொழிச்சட்டச் செய்தி அரசியல் ஆர்வலர்கள் ஆவணப்படுத்த வேண்டிய செய்தி.
1981ம் ஆண்டு தான் வேலைக்கு எடுத்தவர்கள்கூட தனக்கு ஒரு பிரிவுபசாரம் செய்ய முன்வரவில்லை. தன்னைப் பார்க்கவோ பேசவோ அஞ்சியது விந்தை. 21ஆண்டுகள் ஈழநாடு பத்திரிகையுடன் ஐக்கியமாகி உழைத்தேன். ஆனால் எனது சேவைகாலப் பணத்தைப் பெறுவதற்குகூட நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. நான் விலகியபின்பு ஈழநாட்டில் முதன்முறையாக போனஸ் கொடுத்தார்கள். யாருமே அதுபற்றி எனக்கு வாய்திறக்கவில்லை. எனது ஆதங்கத்தை சொல்ல நான் இருப்பேனோ தெரியாது என்று ஆசிரியர் எழுதியிருக்கிறார். பின்பு ஒரு சமயத்தில் இயக்குனருடனும், சகாக்களுடனும் எந்நேரமும் மோதிக்கொண்டு எந்த ஒத்துழைப்புமில்லாமல் தினமும் வேலைபார்ப்பதென்பது ஒரு போராட்டமாகவே இருந்தது என்று குறிப்பிட்டிருக்கின்றார். பழுத்த அனுபவசாலி பட்ட துயரங்கள், தான் பட்ட வேதனைகளை வார்த்தைகளால் எழுதிக் கவலைப்பட்டிருக்கிறார்.
நான்காவது தமிழராய்ச்சி மாநாட்டின் சம்பவங்களையும்: அதில் ஈழநாடு பத்திரிகையின் செய்திகளையும் சுவைபட எழுதியுள்ளார். இந்த மாநாட்டுக் கலவரம் பற்றிய தலைப்புச் செய்தியில் அன்றைய அரசாங்க அதிபர் அபயசேகரா தன்னைக் கட்டளையால் கட்டிப் போட்டதையும் சுவைபட எழுதியுள்ளார். ஆனால் இதில் என்னைக் கவர்ந்துள்ள செய்தியொன்று உண்டு. அதனைச் சொல்லியேயாக வேண்டும். கலைஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்கின்ற போதே கௌரவிக்கப்பட வேண்டும். அவர்கள் இறந்தபின்பு கௌரவிப்பதில். பிரயோசனமேயில்லை. நடிகமணி.வி.வி.வைரமுத்து அவர்கள் அண்மையில் யாழ்பல்கலைக்கழகத்தால் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். ஆனால் 1974ம் ஆண்டிலேயே அவர் தனிக்கௌரவம் கொடுத்து தமிழாராய்ச்சி மாநாட்டில் கௌரவிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் அவர்கள் வாதாடியிருப்பதாக எழுதியிருப்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
துரையப்பா கொலையில் ஈழநாட்டில் வந்த தலைப்புச் செய்தியால் ஆத்திரப்பட்ட குமாரசூரியரின் நடவடிக்கையால் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை ஆசிரியர் தனக்கேயுள்ள பாணியில் சுவைபட எழுதியுள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு செய்திகளை மெயில் றெயிலில் கொடுத்துவிடும் முறை எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கும் செய்தி. அதுவும் தமிழ் எம்.பி.க்கள் என்ன பேசினார்கள் என்பதனை அவர்களிடமே கொடுத்துவிடுவது. எஸ்.பி.சுந்தரலிங்கத்திடமே செய்தி கொடுத்தவிட்டமை எல்லாம் புதுமையான செய்திகள். அன்று அரசியல்வாதிகள், பொலிசார், பத்திரிகையாளரிடம் எப்படி உறவு இருந்தது என்பதனை அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
1979இல் நவாலி இன்பம் படுகொலை பற்றிய விபரங்களை ஒழுங்காக எழுதியுள்ளமையும், இப்படுகொலையைப்போல் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதும் அங்குதான் நீதிக்கும் சமத்துவத்துக்குமான மேர்ஜ் அமைப்பு உருவாக்கப்பட்ட செய்தியை பதிவு செய்துள்ளமையும் இதனைப் பாதுகாக்கவேண்டிய ஒரு ஆவணநூலாக எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
அமெரிக்கத்தூதுவர் ஒருமுறை யாழ்ப்பாணம் வந்தபோது அவரது நிகழ்ச்சித் திட்டத்தில் கோபாலரட்ணத்தை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததும். அந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த ஈழநாடு இயக்குனர் கோபு ஐயாவின் பெயரைப் பார்த்து நிகழ்ச்சிக்கு வர மறுத்ததும் அன்று இவர் யாழ்ப்பாணத்தில் எவ்வளவு முக்கியம் பெற்றிருந்தார் என்பதனைப் புலப்படுத்தும் செய்தியாகும்.
சம்பளத்துக்காக வேலைசெய்பவர்கள், வேண்டா வெறுப்பாக வேலை செய்பவர்கள், ஏனோதானோ என்று வேலை செய்பவர்கள், கொடுத்த பொறுப்பை ஒழுங்காக வேலை செய்யாதவர்கள் இவர்களினால் என்ன நடக்கும் என்பதையும் அக்கறையில்லாதவர்களைச் சுட்டிக்காட்டியதோடு, பொறுப்புள்ளவர்கள் தமக்கு கொடுக்கப்பட்ட விடயத்தை ஒழுங்காக செய்து முடிப்பார்கள். செயலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தாமே அல்லும் பகலும் பாடுபட்டு எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பார்கள் என்பதை தான் ஈழநாடு 20ம் ஆண்டு மலரினை செய்து வெளியிட்டு வெற்றியீட்டியதனையும் எழுதித் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
பத்திரிகை நடத்துவதற்கு எல்லோருக்கும் ஆர்வம் இருக்கலாம். நல்லவசதியும், சொந்த அச்சகமும், அனுபவமும் இல்லாதவர்களை நம்பி ஒரு சிறு சஞ்சிகைக்குக்கூடப் போகக் கூடாது என்பது காலைக்கதிர் என்ற பத்திரிகையின் மூலம் தனக்குகக் கிடைத்த அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளமை இளம்பத்தரிகையாளர்களுக்கு நல்ல வழிகாட்டியாகும்.
ஒரு உதவிஆசிரியர் செய்தி சேகரிப்பதற்கு அக்காலத்தில் 50சதம் முதல் 2.50வரைதான் சம்பளம் கிடைக்கும் என்று ஆசிரியர் எழுதியிருப்பதும், ஈழநாடு தினசரிப்பத்திரிகையாக 11.02.1961இல் வெளிவந்தபோது ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமலேயிருந்து அதனை வெளிக்கொணர்ந்துள்ளார் என்ற செய்தியும் எம்மை விழிஉயர்த்த வைக்கிறது.
1961ம் ஆண்டு கச்சேரி மறியல் போராட்டத்தில் பொலிசாரினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு கலைக்கப்பட்டு யாழ்பஸ்நிலையம் வந்த மக்கள் ஈழநாடு பிந்திய செய்தியில் கச்சேரியடிச் செய்தி கண்டு பரவசப்பட்டனர். இதுதான் ஈழநாடு மக்கள் மத்தியில் பெயர் பெறுவதற்கு காரணமாயிருந்தது என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியை வாசிக்கும்போது வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில் எவ்வளவு விரைவாக அச்சுக்கோர்த்து அந்தச் செய்தியை மக்களிடம் சென்றடையச் செய்யவேண்டும் என்ற சமுதாய உணர்வுடன் செயற்பட்டிருக்கிறார் என்பதும் தனது தொழில்மீதும் தனது பத்திரிகை மீதும் எவ்வளவு பக்தியும், விசுவாசமும், பொறுப்புணர்வும் கொண்டு செயற்பட்டிருக்கிறார் என்பதனை ஆசிரியர் எமக்குப் புலப்படுத்தியுள்ளார்.
இறுதிப் பதினேட்டுப் பக்கங்களும் ஈழநாட்டில் தான் எதிர்கொண்ட பிரச்சனைகளும், தன்கெதிராக நடைபெற்ற சம்பவங்களையும், தனது குடும்பவாழ்க்கை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இனி ஆழமறியாமல் எந்தப் பத்திரிகைக்குள்ளும் காலைவிடுவதில்லை என்ற நோக்கோடு உலகம் சுற்றவும், ஊர் சுற்றவும் தொடங்கியிருக்கிறேன் என்று முடித்திருக்கிறார்.
இன்று வெளிவரும் தமிழ்நூல்களை வாசிக்கும்போது. பத்துச் சொற்களுக்கு ஐந்து சொற்கள் பிழையாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இந்நூல் ஒரேயொரு எழுத்துப்பிழையுடன் வெளிவந்திருப்பதும் ஆச்சரியமான விடயம்தான். 21ம் பக்கத்தில் இறுதிப் பந்தியில் சுதந்திரமான என்பதற்கு சுகந்திரமான எனவுண்டு.
33ம் பக்கத்தில் யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம் பற்றிய செய்தியை எழுதியுள்ளார். பின்பு அதன் தொடர்ச்சி 37ம் பக்கத்தில் வருகிறது. அவை தொடர்ச்சியாக வந்திருப்பின் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இதே போல் ஞானமூர்த்தி, பிரிகேடியர் வீரதுங்கா பற்றிய செய்தியை எழுதி அதில் மகாதேவா முரண்பட்டதையும் 54 55ம் பக்கத்தில் எழுதிவிட்டு பின்பு மகாதேவா பற்றி எழுதி மீண்டும் 59,60,61ம் பக்கங்கங்களில் மீண்டும் எழுதியுள்ளார். ஞானமூர்த்தி, பிரிகேடியர் வீரதுங்கா பற்றிய செய்தியைத் தொடர்ச்சியாக எழுதிவிட்டு பின்பு மகாதேவா பற்றி எழுதியிருப்பின் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இந்நூல் பத்திரிகைத்துறை சார்ந்தவர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, ஊடகவியலாளர்களுக்கு, அரசியல் ஆர்வலர்களுக்கு ஒரு ஆவணப்படுத்தப்பட வேண்டிய சிறந்த நூல். அதிக நிறைவுகளுடன் வெளிவந்திருக்கும் ஒரு நூல். இதனை அனைவரும் வாசித்துப் பயன் அடைய வேண்டும்.
|