அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 22 June 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 10 arrow கொடிதுயர்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கொடிதுயர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி. சந்திரமோகன்  
Thursday, 07 October 2004

(பாரிசில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் முற்றம் சஞ்சிகையின் நாய்ச் சிறப்பிதழில் இருந்து இக்கட்டுரை இங்கு மீள் பிரசுரமாகின்றது. இப்படி ஒரு சிறப்பிதழை தயாரிக்க எண்ணியதுடன் அதனை சிறப்புறத் தயாரித்தளித்த நண்பர் மனோ (ஓசை,அம்மா ஆகிய இதழ்களின் ஆசிரியர்) அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். அந்த சிறப்பிதழின் பல படைப்புகள் இங்கு இடம் பெறுவதால்   வண்ணச் சிறகின் தோகை-10 நாய்க்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த இதழ் உங்களிடம் நாய்கள் பற்றிய அருட்டலை ஏற்படுத்துமாயின் அவற்றை படைப்புகளாக்கி (கதை,கவிதை, கட்டுரை) எமக்கு பாமினியில் எழுதி அனுப்புங்கள். நிச்சயம் பிரசுரிப்போம் அனுப்ப வேண்டிய முகவரி kipian@gmail.com.)

பொலிஸ்!


என்ன! ஆரம்பத்திலேயே புருவங்கள் உயர்கின்றனவா? இல்லை உண்மையும் அதுவே. ஆம் எம் ஜீவனை, எங்கள் வீட்டில் அனைவரையும் வளையவரும் அவனை நாங்கள் வாஞ்சையுடன் அப்படித்தான் அழைத்தோம்.

பழையவர் விடைபெற புதியவர் வீட்டினுள் புகுவர். அப்படித்தான் எங்கள் ஜிம்மி விடைபெற பொலிஸ் வந்தான் எங்கள் வீட்டின் நாயகனாக. ஜிம்மி வயதாகி இறந்துபோக எங்கள் வீட்டில் புதியவர் தேடும் படலம் அரங்கேறியது. பல சந்துபொந்துகள், அயலூர்கள் எல்லாம் வேட்டையைத் தொடங்கினோம். அண்ணன்மார் இருவரோடு நானும் இணைந்து கொண்டேன் உற்சாகமாக.

கிடைக்கப்பெற்றவையோ பல. ஆனால் சித்திஎய்தியவையோ ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம் ஒன்று எமக்கு அது கடுவனாக இருக்கவேண்டும். இரண்டாவது கடியனாக இருக்கவேண்டும். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக தேடினோம்.

கடுவனாக இருக்கவேண்டும் என்பதில் முதல் வெற்றி கண்டோம். ஆனால் கடியன் என்பதில் தான் சிக்கலே தோன்றியது. இளவயதில் கடுவனாக இருக்கவேண்டும் இருந்தால்தான் பிற்காலத்தில் கடியனாக வருவான் என்ற 14வயதே நிரம்பப்பெற்ற என் அண்ணனின் மூதுரைக்கேற்ப ஒரே குடும்பத்தைச்சேர்ந்த அறுவரில் ஒருவரைத்தேர்ந்தெடுக்கும் படலம் ஆரம்பமாகியது.
ஒரு வாரம் காலை, மாலை என்று மூவரும் ஒன்றுகூடி போட்டிகளை நடாத்தினோம். அறுவரில் மூவர் தான் முதற்சுற்றில் தேறினர். கடுவன்கள்.

அடுத்த சுற்றுக்கு அவர்களைத் தயார்படுத்தினோம். கை விரல்களை நீட்டி கடிக்கவைத்தோம். பாற்பற்கள் கூட இல்லாத அந்த பாலகர்கள் எட்டி எட்டிக் கடித்தார்கள். மேலும் பலமணிநேரங்கள் போட்டி வைத்து எங்கள் மகாராசனைத் தேர்ந்தெடுத்தோம்.

வீட்டுக்கு வந்தான் எங்கள் சிங்கன் பொலிஸாக. எங்கள் பொழுதுகள் அவனுடனே கழிந்தன. படிப்பதில்லை நாயோட நேரத்தைப்போக்குறோம் என்று அர்ச்சனைகள் குறைவில்லாமல் விழுந்தன.
நாங்கள் அவைகளை அசட்டை பண்ணினோம். எங்களுக்கு அவன் என்றால் உயிர்.  எங்களுக்குத் தரும் பால் எல்லாம் அவனுக்கே ஊற்றினோம். அவன் குளு குளு என்று குண்டு குண்டாக வளர்ந்தான். அவன் ஓடும்போது பாக்க ஆசையாக இருந்தது.

அவனை இப்போதே கடியன் ஆக்குவதற்கு பயிற்றுவிக்கவேண்டும். மூத்த அண்ணன்தான் சொன்னான். பாலுக்க நல்ல கடி எறும்புகளை விட்டுக்குடுத்தால் நல்ல கடியனாக வருவான் என்று. நாங்களும் நல்ல கட்டெறும்புகளாக தேடித்தேடி விட்டுக்கொடுத்தோம். அவனோ தந்திரசாலி. பாலை மட்டுமே குடித்தான். எறும்பைக்கண்டதும் காலால் தட்டி உதைத்தான்.
நாங்கள் செல்லம் கொஞ்சினோம். எங்கள் குறும்புகளும் அவனுமாக நாங்களும் வளர அவனும் வளர்ந்தான்.

வாரம் ஒருதடவையாவது மாறிமாறி போட்டிபோட்டு அவனைக் குளிக்கவார்த்தோம். இப்பபடி ஒரு முறை குளிக்க வார்க்கும் போது அவனது தேகத்தில் ஒரு புள்ளி கண்டோம். நாட்கள் செல்ல செல்ல அவை இரண்டு மூன்றாக அவன் உடம்பு முழுவதும் குட்டையானான். உரோமங்கள் முழுவதையும் இழந்தான். எங்கள் அழகன் கவிழ்ந்தான். நாங்களே தொடக்கூசினோம்.
அவனோ தன்னைத் தூக்கிவிளையாடும்படி பார்வையால் கெஞ்சினான். எனது இரண்டாவது அண்ணன் விக்கி விக்கி அழுதான். நாங்கள் செய்யாத மருத்துவம் இல்லை. ஒரு பலனுமில்லை. அவன் சில வேளைகள் கிடந்து துடித்தான். எங்கள் கைகளில் என்னவாய் தவழ்ந்து விளையாடியவன் எங்கள் அரவணைப்புக்காக ஏங்கினான்.
இப்போ அவனைப்பார்ப்பதையே தவிர்க்கத்தொடங்கினோம்.

மூத்த அண்ணன்தான் சொன்னான். அவன் பாவமடா. அவனைக் கொன்றுவிடுவோம் என்று. ஊரில் நாய்களுக்கு குட்டைபிடித்தால் கொன்றுவிடுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இரண்டாவது அண்ணனோ விடவே மாட்டேன் என்று அடம்பிடித்தான்;. அம்மாவும் தான். ஆனால் நாங்களும் விடாப்பிடியாக அவர்களுடன்; கதைத்து கொல்வதென்று முடிவு பண்ணினோம்.
ஆம் இது கருணைக்கொலை. தவிர்க்கவே முடியாதது. ஆனால் அப்பாவோ  கடைசிவரை சம்மதம் தெரிவித்துவிட்டு எங்கள் இறுதி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

நாங்கள் வளர்த்த எங்கள் பாசத்தை நாங்கள் கொல்லத் தீர்மானித்துவிட்டோம். திட்டங்கள் தீட்டினோம்.

கொல்லைப்புற பூவரசில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுகிடந்தான் எங்கள் பாசமகன்;. சோற்றுடன் நஞ்சினைக் கலந்து நான்தான் கொண்டு போகிறேன். ஐயோ! ஏழுபிள்ளை நல்லதங்காளே! நீ என்னடி செய்தாய் பாதகீ!

சோற்றுத் தட்டை அவன் வாய்க்கு கிட்டவாக வைத்துவிட்டுத் திரும்பினேன்.
மல்லாக்க கிடந்தபடி தன் மேல்ஓரக்கண்ணால் என்னைப்பார்த்தான். அந்தப்பார்வை என்னை வாட்டி எடுத்தது. நான் ஓட்டமும் நடையுமாக ஓடி வந்துவிட்டேன்.
ஒரு மணிநேரம் கழித்து போய்ப்பார்த்தோம். சோற்றுதட்டு அப்படியே கிடந்தது. அப்போதும் கூட அவன் வாஞ்சையோடுதான் எங்களைப்பார்த்தான். நாங்கள் இந்த முயற்சியை இரண்டுமூன்று தடவைகள் முயற்சித்துப்பார்த்தோம். பயனில்லை.
பொல்லால் அடித்துக் கொல்வது பற்றி யோசித்தோம். ஆனால் அண்ணனோ, அம்மாவோ அறவே சம்மதிக்கமாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏன் நாங்களும் கூடத்தான்.

நாட்கள் செல்லச்செல்ல அவனின் நிலை மோசமானது. நாங்களும் வீட்டுக்கு வருவோர் போவோரிடமெல்லாம் ஆலோசனைகள் கேட்டோம்.
கடைசியில் நண்பன் ஒருவனின் ஆலோசனையின் படி நஞ்சினைப்பருக்கத் தீர்மானித்தோம்.
அவனுக்கு விளங்கிவிட்டது.
கடைசிக்கணத்தில் அவன் உச்சகட்டப்போராட்டம் நடாத்தினான். நாங்களும், நண்பனுமாக இணைந்து கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலப்போராட்டத்தின் பின் அவனை மடக்கி கால்கள் நான்கினையும் சுருக்குகயிற்றில் மாட்டியபின் சாக்குப்போர்வையினுள் அவனைத்திணித்தோம். போராட்டத்தின் ஒவ்வோரு கட்டத்திலும் ஆம்! இது கருணைக்கொலை! கருணைக்கொலை! என்று எங்களையே நாங்கள் சமாதனப்படுத்திக்கொண்டோம். அண்ணணின் கண்ணிலிருந்து ஒரமாக கசிந்து கொண்டிருந்தது.

நஞ்சுப்போத்தல் என் கைக்கு வந்தது. அவனோ வாயைத் திறக்கிறானில்லை. நாங்களும் மாறிமாறி பிரகண்டப்பட்டோம். அவன் எங்ளைக் கெஞ்சினான். அண்ணன்  வீட்டுக்குள் ஓடிஒளித்துக்கொண்டான். விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது.

நண்பன் ஒரு மாதிரி வாயைத் திறந்துவிட்டான். மூத்த அண்ணன் உடனடியாக ஒரு கட்டையை எடுத்து அவன் கொடுப்பிற்குள் திணித்தான் . இனி அவனால் ஒன்றும் செய்யமுடியாது. அவனது கண்கள் மட்டுமே இப்போது பேசின. இரஞ்சின. நான் கண்களை மூடிக்கொண்டு ஆம் கருணைக்கொலை கருணைக்கொலை என்று உச்சரித்துக்கொண்டு அவனது வாய்க்குள் நஞ்சினை ஊற்றினேன். அண்ணை வாய்க்குள் வைத்த கட்டையை எடுத்தான்.

எங்கள் பாசமகன் நிலத்தில் வீழ்ந்தான். நிலத்தில் இரண்டுமூன்றுமுறை கால்களை உதைத்தான். வாய் முணுமுணுத்தது. அந்தநேரத்திலும் எங்களுக்கு ஏதோ நன்றி செலுத்த அவன் அந்தரப்பட்டிருக்கவேண்டும். அப்படித்தான் அவன் செய்கை இருந்தது. முன்னங்கால்கள் இரண்டையும் கூப்பி எங்கைளைப்பார்த்து நன்றி சொன்னான். அவனது கண்கள் சொருகின. சொருகிக்கொண்டே போயின.

 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 22 Jun 2024 08:41
TamilNet
HASH(0x564032335890)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 22 Jun 2024 08:41


புதினம்
Sat, 22 Jun 2024 08:41
     இதுவரை:  25243386 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 14252 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com