அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 30 May 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 10 arrow ரொமி - காலம் ஆகிவந்த கதை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ரொமி - காலம் ஆகிவந்த கதை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®…. இரவி  
Thursday, 07 October 2004

(பாரிசில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் முற்றம் சஞ்சிகையின் நாய்ச் சிறப்பிதழில் இருந்து இக்கட்டுரை இங்கு மீள் பிரசுரமாகின்றது. இப்படி ஒரு சிறப்பிதழை தயாரிக்க எண்ணியதுடன் அதனை சிறப்புறத் தயாரித்தளித்த நண்பர் மனோ (ஓசை,அம்மா ஆகிய இதழ்களின் ஆசிரியர்) அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். அந்த சிறப்பிதழின் பல படைப்புகள் இங்கு இடம் பெறுவதால்   வண்ணச் சிறகின் தோகை-10 நாய்க்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

இந்த இதழ் உங்களிடம் நாய்கள் பற்றிய அருட்டலை ஏற்படுத்துமாயின் அவற்றை படைப்புகளாக்கி (கதை,கவிதை, கட்டுரை) எமக்கு பாமினியில் எழுதி அனுப்புங்கள். நிச்சயம் பிரசுரிப்போம் அனுப்ப வேண்டிய முகவரி kipian@gmail.com.)

மழை பெய்து ஓய்ந்தாப்பிறகு வருகிற காற்றுப்போல சுகமான காலம் அது. பனிக் குளிர்போன்ற கடுமையானதல்ல அந்தக் காலம். நிலாப்பொழுதில்சோழகம் வீசும் நேரத்தில் மணலில் சுகமாகத் தூங்கும் வேளை அது. நாமும் அழுததில்லை யாரையும் அழவைத்துப் பார்த்ததுமில்லை. ஆடு அழுகிறதேயென்று அள்ளிக் குழை போட்டோம். வாழை வாடுகிறதேயென்று வாய்க்கால் வெட்டி நீர் விட்டோம். நாய்க்குக் கல்லெறிந்து கதறியழப் பார்த்ததில்லை. பனையோலை வெட்டி இரவிரவாய் ஈர்க்கு நீக்கி, ஓலை கிழி;த்து மாட்டுக்கு வைத்தோம். தவிடு புண்ணாக்கு என்று தேடித்தேடிக் கொடுத்தோம். (விசாலாட்சி வாத்தியார் பிண்ணாக்கு என்று பிழைதிருத்தத்தில் சொல்லித் தந்தார். புண்ணாக்கு என்று அதற்குப் பொருத்தமான வேறொரு சொல் வருமா? ஆட்களை ஏசும் அழகான சொல் அது.)

சின்னையன் கொக்கத்தடியும் கொண்டு இரவிரவாக களவாக, குழைவெட்டி ஆட்டுக்குக் கொடுத்தான். (பேய் உலாவுகிற நேரத்தில் எப்படி அதனைச் செய்தான்?) அரிசி கழுவிய தண்ணியும், அதனுள் மரக்கறிகளின் தோலும், முனையும், அடியும் போட்டு கழுநீர்த் தண்ணி என்று அம்மா ஆட்டுக்கு வைப்பா. மீன் கழுவுகிறபோது பூனையும், நாயும் பக்கத்தில் நின்று-மீதியைத் தின்னும். பூனை தன் பங்கை கிறுகிறுவெண்டு திண்டு முடித்து நாயின்வாயில் உள்ளதையும் பறித்துக்கொண்டு ஓடும். அதற்காக எங்கள் ரொமிக்கு வீரம் இல்லை என்றல்ல. கொஞ்சம் தள்ளி சிங்கம் அண்ணையின் ரெக்ஸ் எனும் அல்சேஷன் நாய் ஒளிந்திருந்து கடிப்பதற்காகத் தருணம் பார்த்திருந்தது, றெக்ஸின் கழுத்தாங்குத்தியில் கவ்விப் பிடித்திருக்கிறது. றெக்ஸ் தன்னால் ஏலுமானவரைக்கும் தலையை உதறி உதறிப் பார்த்திருக்கிறது. விடுபட முடியவில்லை. நாங்கள்தான் ரொமியை அடித்து, உதைத்து றெக்சைக் காப்பாற்றினோம்.

ரொமி பாவம், நல்ல நாய். எல்லாத்திலயும் அன்பு. ரொமிக்கு சில வரையறை உண்டு. இவ்வளவையும் இவ்வளவு பேரையும் தன்னுடையது என்று உறுதியாக நம்பியது. பூனையும், எங்கள் வீட்டுக் கோழிகளும் எங்களது ஆடும் அதனுள் அடங்கும். எங்கள் வீட்டுப் பூனை மகா குழப்படி. அற்றும் பயந்தாங் கொள்ளி, புஸ் புஸ்  என்றால் ஓடிவரும். ரொமி வாடா . . . .  என்றால் ரொமி விரைவாக ஓடிவருவது போல். புஸ் ஓடி வராது. ஆனால் வரும். அது வீரம் காட்டுவது எங்களுடனும் ரொமியுடனும் மாத்திரம்தான். சேவல் கொத்த வருகிறதென்றால் ஓடுகிற சுறுக்கைப் பார்க்கவேணும். சரசரவென வேப்ப மரத்தில் ஏறிமுழுசுகிற முழுசலைப் பார்க்கவேணும். ஆரும் வந்தார்கள் என்று ரொமி வாலை ஆட்டமுடியாது. ரொமி வால் ஆட்டினால் புஸ் பாய்ந்து ரொமியின் வாலைக் கவ்வி தன் கால்களின் இடையில் வைத்து விறாண்டி விளையாட்டுக் காட்டும். இதே பாம்பைக் கண்டால், சாரைப்பாம்பு அல்லது கோடாரிப் பாம்பாகத்தான் இருக்கட்டுமன் - பாம்பைக் கண்டால் துள்ளித் துள்ளி ஓடிப்போய் வேப்ப மரத்தில் ஏறும். வேப்பமரம் எங்களது பூனைக்காகத்தான் முளைத்து, இந்த மாதிரி விரிந்திருக்கிறதோ தெரியாது.

ரொமி எவ்வளவு உதவிகள் புஸ்சுக்கு செய்து விட்டது. புஸ்சுக்கு அது ஒன்றும் விளங்குவதில்லை. எங்கள் வீட்டில் கண்ணாடி அறைக்குள் அம்மா கிடாரங்கள், குடங்கள்,சருவச்சட்டிகள் என்று வைத்திருப்பா. ஒவ்வொன்றும் அரிசியாலும், மாவாலும், உழுந்தாலும்,பயறாலும், குரக்கனாலும், உப்பாலும், புளியாலும், ஊறுகாயாலும், வடகத்தாலும், செத்தல் மிளகாயாலும், அவித்த மிளகாயாலும், புழுக்கொடியலாலும் நிறைந்திருக்கும். எனக்குப் பொடியங்கள் பிறந்த பிறகும் அம்மா அப்படித்தான் வைத்திருந்தா. பொடியங்களுக்கு இரண்டு மூன்று வயதானபோது எங்கிருந்துதான் அவங்களுக்கு இந்த வம்புக் குணம் முளைத்ததோ? அவங்கள் கிடாரத்துக்குள்ளோ, குடத்துக்குள்ளோ, சருவச்சட்டிக்குள்ளொ மூத்திரம் பெய்து விட்டு வருவார்கள். அரிசியும் மாவும் அடியில் காய்ந்து திரணையாக இருக்கும். அட அம்மா தோசைசுட உளுத்தம்மா குழைத்துவைத்த ஏதனத்துக்குள்ளும் கூட மூத்திரம் பெய்திருக்கிறாங்கள். இந்த மாதிரிக் குழப்படி அல்ல புஸ் அப்பொ செய்தது. கூரையில் சாரைப்பாம்பு துரத்த ஓடுகிற எலிகள் தவறிப்போய் கண்ணாடி அறைக்குள் விழுந்தால் அந்தப் பெரிய பாத்திரங்களுக்கிடையே சடார் பிடாரென ஓடும். பெரும் சத்தமாயிருக்கும்.அந்த நேரம் வீட்டினுள்ளே புஸ் நின்றால் வாலையும் கிளப்பிக் கொண்டு பாய்ந்து ஓடிப்போய் வேப்பமரத்தின் உச்சியில் ஏறி நின்று பார்க்கும். வெளியில் நிற்கும் ரெமி அந்தக் கடகடச் சத்தம் கேட்டு, கண்ணாடி அறையில் ஓடிவந்து, எப்படியோ எலியைப் பிடித்துவிடும். எலி துடிக்கத் துடிக்க கவ்விக் கொண்டு வெளி வரும். வேப்பமரத்தின் உச்சியில் இருந்த புஸ், கிறுகிறுவென கீழிறங்கி ஓடிவந்து ரொமியின் வாயில் இருக்கும் எலியை பறித்துக் கொண்டு பற்றைப் பக்கம் ஓடும். தன் கடமை முடிந்ததென ரொமி வேப்பமரத்தின் அடியில் படுக்கும

ஆனால் ரொமிக்கு கடமை முடிவதில்லை. அது எங்களுக்கும், எங்களால் விரும்பி வளக்கப் படுகிற அனைத்து உயிர்களுக்கும் சேவகம் செய்தான். அம்மா ஆடுகளைப் பற்றைப் பக்கம் கொண்டுபோய் மேயக்கட்டுவா. ரொமியும் கூடப் போகும். இடையில் ஆட்டுக்கு கழுநீர்த்தண்ணி கொண்டுபோய் வைக்கப் போவா. ரொமியும் கூடப்போகும். மத்தியானம், நடுவெய்யில். ஆடு பாவம் என்று அம்மா ஆட்டை அவிழ்த்து வருவா. ரெமியும் கூடவரும். இடைப்பட்ட நேரம் ஒருநாள், ஆடே அவிழ்த்துக் கொண்டு தோட்டப்பக்கம் மேயப் போய்விட்டது. என்ன நடந்ததோ, எப்படி நடந்ததோ தெரியாது. ரொமி ஆட்டின் கயிற்றை வாயில் கவ்விக்கொண்டு வீட்டை இழுத்துக் கொண்டு வந்தது.

பிறர் வீட்டுக் கோழிகள் எங்கள் வளவினுள் வரமுடியாது. எங்கள் வளவு எங்கள் கோழிகளுக்கு மட்டுமே உரியது. அது ரொமிக்குத் தெரியும். பிற கோழிகளை வேலிவரை கலைத்து வெளியே அனுப்பி விட்டு வரும்.

நானோயா மாமாதான் ரொமியாய் பிறந்திருக்கிறார் என்று அம்மா சொல்வா. அம்மா மாத்திரமல்ல, நானோயா மாமாவைத் தெரிந்த ரொமியைப் புரிந்த அனைவரும் சொல்வார்கள்.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 30 May 2024 11:18
TamilNet
HASH(0x563fadcba890)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 30 May 2024 11:18


புதினம்
Thu, 30 May 2024 11:18
     இதுவரை:  24998131 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 18136 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com