அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 11 arrow ஐந்தாவது கதிரை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஐந்தாவது கதிரை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….முத்துலிங்கம்  
Thursday, 04 November 2004

ஆந்தை பகலில் வெளியே வந்தால் அதிலே ஒரு விசேஷம் இருக்கும்.  அப்படித்தான் தங்கராசா இன்று வெளியே புறப்பட்டதும். பத்மாவதியைச் சமாதானப்படுத்துவதற்கான இன்னொரு முயற்சி. ஒரு சதுரமைல் பரப்பைக் கொண்ட அந்த மா அங்காடியில் கிடைக்காத பொருட்களே இல்லை.  விநோதங்களுக்கும் களியாட்டங்களுக்கும் குறைவில்லை. ஒவ்வொரு தடவையும் பத்மாவதியை இங்கே கூட்டிவரும்போது அவள் சிறு பொண்ணாக மாறிப் பரவசமாகிவிடுவாள்.

எல்லாம் ஒரு கதிரையால் வந்த கஷ்டம்தான். உப்பு பெறாத சமாச்சாரம்.  இன்றைக்கு இவ்வளவு பெரியதாக வளர்ந்துவிட்டது. அவள் பிடித்த பிடிவாதமாக இருக்கிறாள். இதிலே விட்டுக்கொடுத்தால் அவ்வளவுதான்.  இனி அவரை ஒரு சதக்காசுக்கும் மதிக்க மாட்டாள்.

இந்தக் கதிரை காஷ்மீரத்தில் செய்யப்பட்டு, ஏற்றமதியாகிக் கனடாவில் விற்பனையானது. கம்பளத்துக்கு அடுத்தபடி காஷ்மீரில் பேர்போனது இந்த வால்நட் மரம்தான். பதப்படுத்தப்பட்ட வால்நட் மரத்தில் செய்த இந்தக் கதிரை சாதாரணமானதில்லை. ஒரு ராஜபரம்பரையை உத்தேசித்தும், அசௌகரியத்தை மனதில் கொண்டும் படைக்கப்பட்டது.  நுணுக்கமான மரவேலைப்பாடுகள் கைப்பிடிகளிலும் கால்களிலும், முதுகு தாங்கியிலும் காணப்பட்டன. இளநீல வர்ண வெல்வெட்டில் மெத்தைகள் அலங்கரித்தன.  ஏறியிருந்தால் கால்கள் கீழே தொங்கும். அந்தக் கதிரைதான் வாங்க வேண்டுமென்று அடம் பிடித்தாள் இந்த பத்மாவதி.

அவர்கள் வீட்டிலே நாலு கதிரைகள்தான் இருந்தன. மெத்தை வைத்து, மண்புழு கலரில் ஊத்தை தெரியாமல் இருப்பதற்கும், நீண்டகால பாவனைக்குமாக வாங்கப்பட்டவை.  ஒன்று இணை சோபா, மற்றவை துணை சோபாக்கள். இவர்கள் மனக்கணக்கு தாண்டி ஓர் உபரி விருந்தாளி வந்துவிட்டால், அவர் இருப்பதற்குச் சமையல் கட்டிலிருந்து கதிரை எடுத்து வரவேண்டும் அவமானம். அதுதான் அவள் இந்தக் கதிரையில் மிகவும் ஆர்வமாய் இருந்தாள். அதனுடைய விலைகூட அவளுடைய ஒரு வாரச் சம்பளத்திலும் குறைவுதான் என்று குத்திக் காட்டினாள்.

தங்கராசாவும் பிடிவாதமாக இருந்தார். சண்டை என்று வந்தால் இறுதியில் சரணடையும் பெருமை அவருக்குத்தான். ஆனால் இம்முறை அவர் விட்டுக்கொடுப்பதாய் இல்லை. தன் கைவசமிருந்த யுக்திகள் சகலதையும் கையாண்டு தன் அதிகாரத்தை நிலைநாட்டவே தீர்மானித்திருந்தார்..

ஆனால் பத்மாவதி இவரைவிடப் பெரிய சூழ்ச்சிக்காரியாக இருந்தாள். அவள் தன்னிடமிருந்த மிகச்சிறந்த படைக்கலத்தைப் பிரயோகிப்பதற்குத் தருணம் பார்த்திருந்தாள். அதைச் செய்தால் அவர் நிர்மூலமாகிவிடுவார் என்பது அவளுக்குத் தெரியும். அவள் துணிச்சல்காரி. செய்தாலும் செய்வாள்.

அவளுக்கு அப்ப பதினாலு வயது இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு வெள்ளைச் சீருடையில் போய்விட்டு திரும்பிக்கொண்டிருந்தாள்.  அவளோடு பல மாணவிகள் வந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒரே சைஸ் பெண்கள். அப்போது ஒரு வண்டிக்காரன் வண்டியிலே சிமென்ட் மூட்டை ஏற்றிவிட்டு ஓர் ஒடிசலான மாட்டைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தான். அது கால்களைப் பரப்பிவைத்து மூச்சிரைக்க நுரை தள்ளி நின்றது.

பேசிக்கொண்டு போனவள் திடீரென்று திரும்பினாள்.  வண்டிக்காரனிடம் வந்து அவன் திகைத்தபடி பார்க்க அவனுடைய துவரங்கம்பைப் பிடுங்கினாள்.  நடுவீதியில் முறித்து எறிந்தாள்.  பிறகு வந்தமாதிரியே போய்ச் சிநேகிதிகளுடன் கலந்துகொண்டாள்.  இவ்வளவும் செய்ய சரியா அவளுக்கு இருபது விநாடிகள் எடுத்துக்கொண்டன.  சிநேகிதிகளுடன் சேர்ந்தபிறகு அவள் ஒருதரம்தானும் வண்டிக்காரனைத் திரும்பிப் பார்க்கவில்லை.

இது அவள் சுபாவம்.  தங்கராசா இவளிடம் மனதைப் பறிகொடுத்ததற்கும் இந்தச் துணிச்சல்தான் காரணம்.  அகதியாகக் கனடாவில் வந்து  இறங்கிய பிறகு அவர் செய்த முதல் வேலை முகவர் மூலம் அவளையும் எடுப்பித்ததுதான்.

அவர்கள் கல்யாணம் கோயிலில் கோலாகலமாக நடந்தது.  பிளாஸ்டிக் வாழைமரம், அசல் அம்மிக்கல், இருந்து வாசிக்கும் நாயனக்காரர், நின்று வாசிக்கும் நாயனக்காரர் (இவருக்கு சார்ஜ் கூட), யாளிவைத்த மணவறை, வானத்தில் பறந்து வந்த வாழையிலை, ஆழ்குளிரில் இருந்து எழும்பிய மாவிலைகள், பால் ரொட்டி, பயத்தம் பணியாரம் போன்ற அபூர்வமான பலகாரங்கள் எல்லாம் தவறாமல் பங்கேற்றன.  வீடியோ புகழ் ஜகன்னாத குருக்கள் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்திவைத்தார்.

சேலை கட்டுவதில் அவள் தேர்ச்சி பெற்றவள் அல்ல.  சிரத்தையில்லாமல் உடுத்தி கவனமின்றித் தாவணியை விசிறியிருப்பாள்.  இந்த சேலையில் சிலபேருக்கு உடல் அழகு பிரமாதமாக வெளிப்படும்.  இன்னும் சிலருக்கு அழகு அமுங்கி வெகு சாதாரணமாகிவிடும்.  இவள் இரண்டாவது வகை.  மிகச் சாதாரணமான உடல்வாகு போன்ற தோற்றம்.  தவிட்டு நிறமாக இருந்தாள். 

கண்கள் ஏமாற்றும் என்பதை முதன்முதலில் அனுபவித்தது அப்போதுதான்.  நாணம், பயம் என்பது அவளுக்குத் துளியும் கிடையாது.  போலியில்லாமல் மிக இயல்பாக இருந்தாள்.  இதுதான் அவருக்குப் பிடித்தது.  பிடிக்காததும் இதுதான்.

அன்று இரவு தங்கராசாவுக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.  அவள் புஜங்கள் ஒரு மல்யுத்த வீராங்கனை உடையதுபோல இறுக்கமாகவும் மினுமினுப்பாகவும் இருந்தன.  திடீரென்று தோன்றிய மார்புகள் மிக உருண்டையாகவும், முதலையின் அடிப்பாகம்போல வெண்மையாகவும் காணப்பட்டன.  ஒரு மரம் ஏறியின் வயிறுபோல அவள் வயிறு ஒட்டியிருந்தது.  பெண்மையைப்பற்றி இவர் இரவிரவாகச் சிந்தித்து வைத்திருந்த சித்திரம் எல்லாம் உடைந்துவிட்டது.  அது அவருக்கு மிகவும் உவகை தருவதாக இருந்தது.

அவள் முயங்கும்போது முழுமூச்சோடு முயங்குவாள்.  தன்னை மறந்த நிலை.  உலகை மறந்த சுகம்.  கைகளும் கால்களும் மாறுப்பட்டு யாருடைய கால்கள், யாருடைய கைகள் என்று தெரியாத குழப்பமான நிலை.  கண்களை மூடி அனுபவிப்பாள்.  மனத்தை இழுத்துக் கட்டிப்போட்டு வெட்கத்தைப் படரவிட்டு, முழுச் சுகத்தையும் அனுபவிப்பதற்கு அவள் தடை போட்டதில்லை.

அந்த நேரங்களில் எல்லாம் இவருக்குத் தோன்றும் இந்த மனித உடம்பு பிணையலுக்கு ஏற்றது இல்லையென்று.  இந்தக் கையும் காலும் வேண்டாத இடங்களில் வந்து இடைஞ்சல் கொடுத்தபடியே இருக்கும். பாம்பின் உடம்பு ஒன்றுதான் கூடலை மனதில் வைத்துப் படைத்த ஒரே உடம்பு.  புணரும்போது பாம்புபோல இருக்கப் பிரியப்பட்டார்.  சுருண்டு, பிணைந்து, நெளிந்து தேகசம்பந்தம் கொள்ள இந்த அற்ப மானுட உடல் சாத்தியமற்றது என்று ஆதங்கப்படுவார்.
அநேக நாட்களில் இந்த வேகத்தில் ஒரு விபரீதம் நடந்துவிடும்.  அவளுடைய கால் சங்கிலிகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மாட்டிக்கொள்ளும்.  பாதி இரவில் இது அடிக்கடி நடந்துவிடுவது அவருக்கு வேடிக்கையாக இருக்கும்.  ஆனந்தமாகவும் இருக்கும்.  அவள் பரிதாபகரமாக 'ஐயோ, கொழுவிப் போச்சு இதைக் கழட்டி விடுங்கோ' என்று மன்றாடுவாள்.  இவர் அந்தத் தவிப்பைப் கொஞ்சம் நீடிக்கவிட்டு ரசிப்பார்.  ஓரங்களில் வெளிறிப்போய் இருக்கும் அந்தப் பாதங்களைத் தடவியபடியே கால் சங்கிலிகளைக் கழற்றுவார்.  வெகுநேரம் கழட்டுவார்.

மாடியிலே இருந்து கீழே இறங்கும் வேகத்திலும் பார்க்க அதிகமான விசையுடன் மேலே ஏறுவாள்.  அவளுக்குப் புவியீர்ப்புடன் ஒரு ரகஸ்ய ஒப்பந்தம் இருந்தது.  அவள் மூச்சிரைத்து அவர் கண்டதில்லை.  கால் சங்கிலிகள் 'சிலுங் சிலுங்' என ஒரு அணில் குஞ்சின் லாவகத்துடன் ஏறி இறங்கியபடியே இருப்பாள்.

இதெல்லாம் ஆரம்ப காலங்களில். பிறகு பிறகு புத்தி வந்து இரவு வேலைகளை முடித்துவிட்டு சயனத்திற்கு வரும்போது கால் சங்கிலியைக் கழற்றி வைத்துவிடுவாள்.  அதற்குப் பிறகு அதுவே ஒரு சைகை ஆயிற்று.  சில நாட்களில் அவளே கொலுசைக் கழற்றி வைத்துவிட்டு சிரித்துக் கொண்டு வருவாள்.  அவருக்குப் புரிந்துவிடும்.  தயாராக இருப்பார்.  இன்னம் சில நாட்களில் கொலுசைக் கழற்றாமல் 'சிலுங் சிலுங்' என்று நடந்து வந்து படுக்கையில் தொப்பென்று விழுந்துவிடுவாள்.  அன்று விடுமுறை.

மகள் பிறந்த பிறகும் இது தொடர்ந்தது.  அதுவே ஒரு சங்கேத வார்த்தையாக உருவெடுத்தது.  மகளை வைத்துக்கொண்டே அவர்கள் சம்பாஷணை இருக்கும்.  'கால் சங்கிலியைக் கழட்டி வைத்துவிடும், விழப்போகுது' என்பார் அவர்.  'பரவாயில்லை, இண்டைக்கு கழட்டத்தேவையில்லை.  நாளைக்கு பார்க்கலாம்', இது அவள்.  இப்படி அவர்கள் சம்பாஷணை போகும்.

அதுவும் பழைய கதை.  இப்ப அவள் கால் கொலுசைக் கழற்றுவதே இல்லை.  அவள் மனதில் என்ன நடக்கிறது என்று யாருக்குத் தெரியும்.  வெங்காயம் வெட்டுவதுபோல முகத்தை மறுபக்கம் திருப்பி வைத்துக்கொண்டுதான் பேசினாள்.  உரம் போட்டுப் பயிர் வளர்ப்பது போல இவர் பியர் போட்டு வண்டி வளர்ந்திருந்தார்.  இவளுடைய உடல்வாகு என்றால் அப்ப பார்த்தது போலவே யௌவனத் துடிப்போடு இருந்தது. இவரை இப்பொழுதெல்லாம் அவள் அண்டுவதற்கே கூசினாள்போல பட்டது.  தங்கராசாவின் உள்தவிப்பு கொதிநிலையை அடைந்தது அப்போதுதான்.

இங்கு வந்த பிறகு அவள் குதிக்கால் வெடிப்பில் ஒட்டியிருந்த செம்பாட்டு மண் முற்றிலும் மறைவதற்குச் சரியாக ஆறுமாதம் எடுத்தது.  ஆனால் அவள் அடியோடு மாறுவதற்கு ஆறுவாரம்கூட எடுக்கவில்லை.  கனடா அவளுக்குச் சொர்க்கலோகமாகப் பட்டது.  மற்றவர்களைப்போல் அல்லாமல் குளிரை அலட்சியப்படுத்தினாள்.  வாழ்நாள் முழுக்க அங்கேயே பிறந்து வளர்ந்தது போல ஒரு வித தடங்கலும் இன்றி உற்சாகத்தோடு அந்த நீரோட்டத்தில் கலந்து ஐக்கியமானாள்.
தங்கராசா இன்னமும் பழக்க தோஷத்தில் உலர் சலவை சேட்டை உதறிப்போட்டும், காலணிகளை அதிகாலை வேளைகளில் கவிழ்த்துப் பார்த்தும் போட்டுகொண்டு இருக்கையில் பத்மாவதி லீவாய் ஜீன்சும், வாசகம் எழுதிய ரீ சேட்டும் அணிந்து, சீராக வெட்டிய குட்டை மயிர் காதைத்தொட, தானாகவே சுவாசிக்கும் நைக்கி காலணியில் சுப்பர் மார்க்கட்டில் சாமான் வாங்கிவிட்டுக் கடன் அட்டையில் கணக்குத் தீர்த்துக்கொண்டிருந்தாள்.
அவர் கொழும்பில் வேலை பார்த்த சமயம் நல்ல உத்தியோகத்தில் இருந்தார்.  ஒரு தனியார் கம்பனியில் ஊழியர் செயலாளர்.  அவர் வேலையில் எவ்வளவுக்குக் கெட்டிக்காரோ அவ்வளவுக்குச் சோம்பேறி.

வைனின் வயது அதிகரிக்க அதிகரிக்க அதன் ருசியும், அருமையும் கூடும் என்று சுவை நிபுணர்கள் கூறுவார்கள்.  இந்த சித்தாந்தத்தைப் பின்பற்றி  அவர் மேசைக்கு வரும் ஏடுகளும் அவற்றின் வயது மிகவும் அதிகரித்த பிறகே திருப்பி அனுப்பப்படும்.  பல தருணங்களில் பதவி உயர்வு கோரும் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஏடு திரும்பக் காத்திருந்து காத்திருந்து இறுதியில் இந்தப் பதவி வேண்டாம் சிவலோக பதவியே போதும் என்று தேடிப்போனதும் உண்டு. 
கனடா வந்த பிறகும் இவர் தன் சூட்சுமத்தை மாற்றவில்லை.  ஒரு வருட பயிற்சிக்குப் பிறகு இவருக்குக் கம்பயூட்டர் நிரல் எழுதும் வேலை கிடைத்தது.  இவர் திறமையான வேலைகாரர்.  இவர் நிரல்களை பூச்சி அரிப்பதில்லை.  ஒருக்கால் எழுதினால் எழுதினதுதான்.  ஆதைச் சரி பார்க்கவேண்டிய அவசியமேயிராது.  ஆனாலும் இவர் மேசைக்கு வரும் கோப்புகள் நத்தை வேகத்தில்தான் நகர்ந்தன.

ஒரு புது கம்புயூட்டரை பெட்டியில் இருந்து எடுக்கும்போதுகூட மிகவும் வேகமாகத்தான் எடுக்கவேண்டும் என்று சொல்வார்கள்.  அல்லாவிட்டால் அதனிலும் சிறப்பான ஒரு தம்பி கம்புயூட்டர் வந்து வாசலில் குந்திவிடும்.  இவருடைய நிரல்கள் பல தம்பிகளின் வரவால் பலமிழந்தன.  இவர் வேலையையும் இழந்தது அந்த சமயத்தில்தான்.

வேலை போனபின் வீட்டிலேயே சுவாசித்துக்கொண்டு இருந்தார்.  அதுவரையில் சாதாரண தவறுகளையே செய்து பழகியிருந்தவர், பத்மாவதி தந்த துணிச்சலில் ஒரு மாபெரும் தவறைச் செய்ய நேரிட்டது.  ஒரு தொழிற்சாலையில் வேலை ஒன்று காலியாகவிருந்தது.  அவளை அதில் சேர அனுமதித்தார்.  அப்பொழுது அவர் கையைவிட்டுபோன ஆட்சியை அவர் இன்னமும் திருப்பிக் கைப்பற்றவில்லை.  அவருக்கு வேலை கிடைத்தபிறகும் அது அவளிடமே தங்கிவிட்டது.

பத்மாவதி வேலை செய்யும் இடத்தில் பல தென் அமெரிக்கப் பெண்கள் வேலை பார்த்தார்கள்.  அவர்கள் எல்லோரும் இவளுக்கு நல்ல சிநேகம்.  கொஞ்சம் ஸ்பானிஷ் பாஷை பேசவும் பழகிவிட்டாள்.  இவளுடைய உடை, கலர், தோற்றம், தலைமயிரைப் பார்த்தவர்கள் இவளை கொலம்பியன் என்றோ, கொஸ்டாரிக்கன் என்றோதான் நினைத்தார்கள்.  அவர்களைப்போல உடுக்கவும் நிற்கவும் நடக்கவும் பல்லுக் குத்தவும் பழகிக்கொண்டாள்.  பஸ் தரிப்பு நிலையங்களில் யாராவது அவளிடம் ஸ்பானிஷ் பாஷையில் பேசிவிட்டால் பரவசமாகிவிடுகிறாள்.

நெற்றியில் குங்குமம் வைப்பதை நிறுத்தியதுபோல மெல்லப் பெயரையும் மாற்றிவிட்டாள்,  இவருக்குத் தெரியாமல். தொழிற்சாலையில் ஒருநாள் அவளை தொலைபேசியில் அழைத்தார்.  மிக அவசரம். அங்கே 'பத்மாவதி' என்று யாருமில்லை.  'பத்து' என்று சொல்லியும் தெரியவில்லை.  பிறகுதான் தெரிந்தது இவள் தன் பெயரை 'PATTY' என்று மாற்றிவிட்டாள் என்று.

பதினாறு வயதில் அவளுக்கு ஒரு பெண் இருப்பதைச் சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள்.  ஒருநாள் 'பாலே' வகுப்பில் சந்தித்த ஓர் அம்மா 'அது உங்கடை தங்கச்சியா?' என்று கேட்டுவிட்டாள்.  பத்மாவதி அன்று முழுக்க மிதந்தபடியே இருந்தாள். கணவரிடம் இதைத் திருப்பித் திருப்பிச் சொன்னபோது அவருடைய பயம் இன்னும் அதிகரித்தது.

சங்கேத பாஷை நாட்களில் அவர்களுக்கிடையே எவ்வளவு புரிதல் இருந்தது.  'பத்மாவதி' என்று முழுப்பெயரும் கூறி அழைத்தால் அவர் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தமாகும்.  பிரியமாக இருக்கும்போது 'பத்து' என்று அழைப்பார்.  பிறர் முன்னிலையில் 'பத்மா' என்றே கூப்பிட்டுப் பழக்கம்.  ஆனால் படுக்கை அறையில் மாத்திரம் விஷயம் வேறு.  பத்தூஊ, பத்தூஊ என்று அளபெடைத் தொடரில் அழகு குறையாமல் அழைப்பார்.

அதெல்லாம் மறந்து இப்போது பல வருடங்கள் ஆகிவிட்டன.
அவளுடன் நடந்த சண்டைகளில் எல்லாம் தோல்வி அவருக்குத்தான்.  அவர் தோற்கும் வேகத்தைப் பார்த்தால் தோற்றுப்போவதற்காகவே அவர் போரைத் தொடங்குகிறார் என்று தோன்றும்.  அவளை வேலையை விட்டுவிடச் சொன்னார்.  அவள் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தாள்.  மகளைப் பரதநாட்டிய வகுப்பில் சேர்க்கவேண்டும் என்றார்.  அவள் மறுத்துவிட்டாள்.  கார் ஓட்டப் பழகவேண்டும் என்றாள்.  இவர் எதிர்ப்புத் தெரிவித்தும் பயனில்லை.  கடன் அட்டை தர மறுத்தார். ஒருநாள் பார்த்தால் பளபளக்கும் ஒரு புது அட்டையுடன் வந்து நிற்கிறாள்.
கடைசியில் இந்தக் கதிரைப் போராட்டத்தில் வந்து நின்றது.  இதில் அவர் வெகு தீவிரமாக இருந்தார்.  அவர் அறியாமல் அவள் கதிரை வாங்கினால் அதைத் துண்டு துண்டாக உடைத்துவிடுவதாகச் சபதம் எடுத்திருந்தார்.  இது இறுதிப் போராட்டம்.  இதில் தோற்றால் அவள் அவரைச் சுத்தமாக மட்டம் தட்டி வீட்டின் நிலவறையில் தளபாடங்களுடன் போட்டுவிடுவாள் என்பது அவருக்கு நிச்சயமாயிருந்தது.

மகளும் அவளுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டாள்.  வாய்க்கு ருசியான உணவு சாப்பிட்டு வருடக்கணக்காகிறது.  தோசை, இட்லி, வடை, அப்பம் போன்ற சமாச்சாரங்களுக்கு ஒரேயடியாக விடுதலை கொடுத்துவிட்டாள்.  வீட்டிலே பேர்கர் என்ற பேயும், பிஸா என்ற பிசாசும் தலைவிரித்து ஆடின.  தினம் இந்தச் சாப்பாடு சிவப்பு பூப்போட்ட பிளாஸ்டிக் மேசைவிரிப்பில் பரப்பப்பட்டு, பழைய புதினப் பேப்பரால் மூடப்பட்டுக் கிடக்கும்.  அதன் மணம் வயிற்றை குமட்டும்.  ஒருநாள் இட்லி வேண்டுமென்று கேட்டதற்கு அவள் இப்படி வெடித்தாள்:

புளித்த மாவில் அவித்த இட்லி சாப்பிட்டு, புளித்த மாவில் சுட்ட தோசை சாப்பிட்டு, புளித்த மாவில் சுட்ட வடை சாப்பிட்டு, புளித்த மாவில் சுட்ட அப்பம் சாப்பிட்டுப் பழகிய உங்களுக்கு புளித்துப்போன சிந்தனைதான் இருக்கும்.  வேறென்ன இருக்கும்.  நான் சும்மாவா இருக்கிறன். நாலு மணிக்கு எழும்புறன்.  சமைச்சுப் போடுறன்.  வீட்டைப் பார்க்கிறன்.  உங்களைப்போல சமமாய் வேலைக்குப் போய் உழைச்சுக்கொண்டு வாறன்.  ஒரு குமரைக் கட்டி வளர்க்கிறன்.  நீங்கள் பியர் குடித்துவிட்டுக் கால் விரியக்கிடக்கிறியள்.  ஆறுமாதமாய் குக்கர் வேலை செய்யவில்லை.  நீங்கள் என்றால் போய் ரிமோட் கொன்ரோல் வாங்கிறியள்.  நான் ஒரு நாளைக்கு என்ன செய்வன் என்று எனக்கே தெரியாது.

அவள் இப்படி அரற்றியதற்குக் காரணம் இருந்தது.  சமையலறையில் பத்மாவதியின் சமையலடுப்பில் மூன்று எரிவாய்கள் எரியவில்லை.  ஆறுமாதமாக ஒரு எரிவாயை வைத்துச் சமாளித்து வந்தாள்.  எவ்வளவு சொல்லியும் அதை மாற்றவேண்டும் என்ற எண்ணம் தங்கராசாவுக்கு வரவில்லை.  ஆனால் அவசரமாக ஓடிப்போய்த் தொலை இயக்கி கார் ஒன்று வாங்கியிருந்தார்.  அத்துடன் தானாகத் திறக்கும் கராஜ் கதவுகள்.  தேகம் முறிய உழைக்கும் அவளிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை.  அவளுக்கு அதுதான் எரிச்சல் எரிச்சலாக வந்தது.

அந்த எரிச்சலைச் சமாளிப்பதும் அன்றைய சுற்றுலாவின் பிரதான அம்சம்.  அவள் முன்னால் நடந்துகொண்டிருந்தாள். பின்னுக்கு இருந்து பார்க்கும்போது அசல் அப்படியே ஒரு கொஸ்டாரிக்கன் பெண்போலவே இருந்தாள்.  இவள் முற்றிலும் மாறிக்கொண்டு வருகிறாள்.  அவளிடம் எவ்வளவுக்குக் கவர்ச்சி இருந்ததோ அவ்வளவுக்கு இப்போதெல்லாம் கடுமையும் சேர்ந்து கொண்டது.  வீடு அவள் பெயரில் இருந்தது.  வீட்டுக் கடனை இவர் அடைத்து வந்தார்.  இந்தத் தேசத்துச் சட்டங்கள் மனைவிகளுக்கு அநுகூலம்.  இவளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று மனது கட்டளையிட்டது.

எதிர்வருவோர் இவளை இரண்டுதரம் பார்த்துவிட்டு நகர்ந்தார்கள்.  ஜீன்சும், முடிச்சுப்போட்ட மேற்சட்டையும் அணிந்திருந்தாள்.  வார் இழுத்துக்கட்டிய மத்தளம் போல வயிறு ஒடுங்கி இருந்தது.  இவரைவிட்டுப் போவதற்கு அவசரம் காட்டுவதுபோல அவள் நடந்துகொண்டிருந்தாள்.  ஒரு சோற்றுப் பிராணிபோல இவர் அவள் பின்னாலே, விட்டுவிடுவாளோ என்ற அச்சத்துடன், அசைந்தசைந்து ஓடினார்.

ஒரு சைனாக்காரன் பச்சை குத்திக் கொண்டிருந்தான்.  வாட்டசாட்டமான வெள்ளைக்காரன் ஒருத்தனுடைய முறுக்கேறிய புஜத்தில் டிராகன் ஒன்றை வரைந்து கொண்டிருந்தான்.  இந்த அதிசயத்தைக் கண் கொட்டாமல் இருவரும் நின்று பார்த்தார்கள்.  நீண்ட புடலங்காய்போல வலுவோடு இருக்கும் இவள் புஜங்களை மெள்ள கையினால் வருடி இறுக்கிக் கொண்டார். அது இரவுக்கான சமிக்ஞை என்பது அவளுக்கு தெரியும்.

அழகு சாதனக் கடைக்கு அவளைக் கூட்டிப்போனபோது அவள் முகம் பிரகாசமானது.  அவள் கேட்ட கண் மை, முகச்சாந்து, நக வர்ணங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.  உதடுகளுக்குக் கடும் ஆராய்ச்சிக்குப் பிறகு அவள் தெரிவு செய்த பளபளக்கும் கபில நிறத்துக்கும் கறுப்புக்கும் இடைப்பட்ட பெயர் தெரியாத ஒரு வர்ணத்தை வாங்கித் தந்தார்.  உடனேயே அதைப் பூசிக்கொண்டாள்.  ஒரு சிறு பூச்சில் அவளுடைய உதடுகள் குவிந்து மிகக் கவர்ச்சிகரமாகக் காட்சியளித்தன.

இந்த சந்தோசத்தை அவர் கலையவிட விரும்பவில்லை.  உணவகம் ஒன்றைக் கடந்தார்கள்.  அவளுக்கு 'சன்டே' மிகவும் பிரியமானது.  வேண்டுமா என்று கேட்டார்.  அவள் சிணுக்கமாகித் தலையசைத்தாள்.  அவ்வளவுதான்.  இலச்சினை மோதிரம் கிடைத்த வந்தியத்தேவன் போல ஒருவித உற்சாகத்துடன் புறப்பட்டார்.  மூன்று குவியல் ஐஸ்கிறீம், உருகிய சொக்லேட், பிஸ்கட், பாலாடை, மேலே மகுடமாக சிவந்த செர்ரி பழம் இவற்றடன் திரும்பினார்.  ஓர் அரை ஆள் உயரத்துக்கு அது இருந்தது.  தன் சொக்லேட் நிற உதடுகளை நாக்கினால் தடவியபடி அவள் சாப்பிடத் தொடங்கினாள். 

சந்தையில் இருந்து புறப்பட்டபோது மெல்லிய குளிர் காற்றின் உராய்வுத் தன்மை அதிகமாயிருந்தது.  எதிர்ச்சாரியில் கார்கள் விரைந்தன.  சில படகுகளை இழுத்துக்கொண்டும், வீடுகளைத் தொடுத்துக்கொண்டும் ஓடின.  இன்னும் சில சைக்கிள்களைத் தாங்கிக்கொண்டு பறந்தன.  இனிமையான விடுமுறையின் அதிர்வு எங்கும் சூழ்ந்திருந்தது.  தங்கராசா மனதில் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.

இவ்வளவு செய்தும் அன்றிரவு அவருக்குப் பெரிய ஏமாற்றமே காத்திருந்தது.  வெறும் ஐஸ்கிறீமை காட்டி அவளை மயக்க முடியாது என்று அப்போது கண்டுகொண்டார்.  ஒரு கிருமி நோய்க்காரர்போல அவரை ஒதுக்கினாள்.  திமிறியபடி தள்ளித்தள்ளிப் போனாள்.  சவுக்கால் அடிக்கப்பட்டதுபோல தங்கராசா பின்வாங்கினார்.   அப்படியேபோய் டிவியின் முன்னால் விழுந்தார்.  படுக்கை அறைக்கு அன்று அவர் திரும்பவே இல்லை.

அடுத்த நாள் காலை பத்மாவதி பதினாறு காலி கார்ல்ஸ்பேர்க் பியர் டின்களை வரவேற்பறை முழுக்கவும் தேடித்தேடிப் பொறுக்கினாள்.
கடந்த இரண்டு வாரமாக அந்த வீட்டில் ஒரு மௌனம் சூழ்ந்துபோய் கிடந்தது.  ரகஸ்யமானதும், சதித்திட்டம் கொண்டதுமான ஒரு துவந்த யுத்தம் அங்கே நடந்து கொண்டிருந்தது.  வீங்கின உதடுகளைச் சாமர்த்தியமாக அவள் உதட்டுச் சாயத்தினால் மறைத்திருந்தாள்.  வீட்டிலே வளர்க்கும் மணிக்கொடி வாடினாலே அவள் வாடிவிடுவாள்.  வன்முறையை எப்படிச் சகிப்பாள்.  தங்கராசா தன் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பாடத்தை, மற்றவர்களிடம் பகிரமுடியாத ஒரு அவமானத்தை, பலாத்காரம் தவிர்த்த முறையில் அவருக்குத் திருப்பித் தருவதற்கு சமயம் பார்த்திருந்தாள்.

நாமகள் மகா வித்தியாலயத்தில் படித்த பெண், ஒரு சொட்டு ஆங்கில வாசனையும் அறியாதவள்.  சித்திரக்கதை புத்தகத்தைத் தாண்டி வராதவள், back space விசையை ஒடித்துவிட்டு கம்புயூட்டர் நிரல் எழுதும் வல்லமை படைத்த தங்கராசாவுக்கு இப்படி ஒரு சவாலாக வந்து வாய்த்திருந்தாள்.

தங்கராசா தான் பேராபத்தில் இருப்பதை உணர்ந்தார்.  போரின் விளைவுகள் அவருக்குச் சாதகமில்லை என்பதும் தெரிந்தது.  எப்பாடுபட்டும் அவளைக் கனியவைத்து வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.  அதற்கான முயற்சிகளில் கம்புயூட்டர் நிரல் எழுதும் ஒரு தர்க்கத்துடனும் திட்டத்துடனும் அவர் இறங்கினார்.

அன்றைய இரவை எப்படி ஆரம்பிப்பது என்று விஸ்தாரமாகவே கணித்து வைத்திருந்தார்.  சிணுக்கம் நிறைந்த அவளுடைய முக ஞாபகமாகவே அன்று முழுக்க இருந்தது.  திட்டமிட்டபடி இரவு உணவு சாப்பிடும்போது இது தொடங்கியது.  காதல் நாட்களில் செய்த சைகைகள், சங்கேத பாஷைகள் எல்லாம் பரிமாறப்பட்டன.  மகளுக்குப் புரியாதவாறு ஒரு முழுச் சம்பாஷணை அந்த உணவு மேசையில் நடந்து ஒப்பேறியது.

எலும்பை உறிஞ்சும்போது அதற்கேற்ற அசையுடன் அதை உறிஞ்சினார்.  இவளைப் பார்த்த கண் எடுக்கவில்லை.  அவள் பாத்திரம் அலம்பும்போது இவர் பூனைபோல அடிவைத்துப் போய் பின்னே நின்றுகொண்டார்.  கைகள் கட்டிப்போட்ட நிலையில் பின்னாலிருந்து அவள் இடையை ஸ்பரிசித்தார்.  அவள் மறுப்பு சொல்ல முடியாமலும், தடுக்க இயலாமலும் நெளிந்தாள்.  இவருக்கு இருப்புக் கொள்ளவில்லை.  மீதி அத்தியாயத்தைத் தொடருவதற்காக ஒரு பதினாறு வயதுப் பையனுடைய ஆவேசத்துடன் காத்திருந்தார்.

அவள் ஒருவித அவசரமுமில்லாமல் தன் வேலைகளை முடித்தாள்.  அது வேண்டுமென்றே நேரம் கடத்துவது போலத்தான் இருந்தது.  ஈரப்பதன் எந்திரத்தை இசையவைத்தாள்.  பிறகு பூட்டுகள் சரிபார்க்கும் சத்தம்.  இப்பொழுது படிகள்.  அலார்ம் சிஸ்டத்தில் ரகஸ்ய எண்கள் பதியும் ஒலி.  விளக்குகள் அணைந்தன.  இதோ வந்துவிட்டாள்.
மேதுவாகக் கதவு திறக்கிறது.  இன்றும் கால் கொலுசு கழற்றிவைக்கவில்லை.  சத்தம் வரக்கூடாதென்று வெகு பிராயத்தனம் நடக்கிறது.  கால்களைப் பக்கவாட்டில் நுழைத்து நகர்த்தி நகர்த்தி வந்தாள்.  இவர் துடிதுடிப்பானார்.
அவ்வளவு அவசரம் அவருக்கு.  அவள் மேலங்கியைப் பிடித்து இழுத்தார்.  'வேண்டாம், இன்றைக்கு வேண்டாம்.  நீங்கள் கோபிப்பீர்கள்' என்று அவள் கத்தினாள்.  அவர் கேட்பதாயில்லை.  ஓர் உத்வேகம் வந்துவிட்டது.  அவசரத்தில் அவர் இழுத்தபோது பட்டன்கள் தெறித்தன.  அப்படியும் அவள் ஒரு பொக்கிஷத்தைக் காப்பதுபோல சட்டை விளிம்புகளை இழுத்துப்பிடித்தபடி எதிர்ப்புக் காட்டினாள்.
இப்பொழுது அவர் திரும்ப முடியாத எல்லைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.  ஆவேசம் வந்து அவள் கன்னத்தில் அடித்துச் சட்டையை வலிந்து இழுத்தார். அது பிரிந்தது. தளும்பல் குறைவில்லாத மார்புகள்.
ஆனால் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது.
அவளுடைய இரண்டு மார்புகளிலும் பச்சை குத்தியிருந்தது.  அந்த சைனாக்காரனின் டிராகன் வாயை ஆவென்று விரித்துக்கொண்டு உறுமின.  அவளுடைய முலைக் காம்புகள் நாக்குபோல துரத்திக்கொண்டு நிற்க, ஒரு ஓவியனின் வேலைப்பாடுகளுடன் அந்த டிராகன்கள் இவரை ஏந்திய முகமாகப் பார்த்தன.  ஒரு பென்சில்கூட இடையில் புகமுடியாத நெருக்கமான மார்புகள், தன்னுடைய சொந்தப் பாவனைக்காகப் படைக்கப்பட்டவை என்று நினைத்திருந்த மார்புகள், யாரோ ஊர் பேர் தெரியாத நடைபாதைச் சைத்திரிகன் வரைந்த ஓவியங்களின் கனம் தாங்காமல் ஆடின.

இருண்ட வனத்திலே பதுங்கியிருந்த மிருகம் ஒன்று தாக்கியது போல உணர்ந்தார்.  மெல்லப் பலமிழந்து சரிந்தார்.
அவள் மறுபடியும் கைகளினால் சட்டையை அவசரமாக இழுத்து மூடிக்கொண்டாள்.  அவள் கடைவாயில் ஒரு சிரிப்புத் தோன்றி அதே கணத்தில் மறைந்தது.  இவர் கவனிக்கவில்லை.
இதுதான் அவர்களுடைய கடைசிச் சமர்.  இந்த வெற்றிதான் அவளுடைய கடைசி வெற்றி.  இதற்குப் பிறகு அந்த வீட்டில் கதிரை வாங்கும் கதை எழும்பவே இல்லை.  இவர்தான் இப்ப ஐந்தாவது கதிரை.


(இக்கதை இலண்டனில் இருந்து 1999ல் வெளிவந்த 'யுகம்மாறும்' தொகுப்பில் இருந்து நன்றியுடன் மீள் பிரசுரமாகின்றது)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 16 Jul 2024 11:19
TamilNet
HASH(0x55930587d3d0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 16 Jul 2024 11:19


புதினம்
Tue, 16 Jul 2024 11:19
     இதுவரை:  25367098 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 7040 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com