அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 06 May 2021

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இந்தியமாயை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - யதீந்திரா -  
Wednesday, 08 December 2004

இந்தியா எங்களது தந்தை நாடு; அது எங்களை ஒரு போதும் கைவிடாது என்பதெல்லாம் எங்களது பழைய நம்பிக்கை. பின்னர் இந்தியாவின் உண்மை முகம் அறிந்தபோது எங்களது கனவுகள் கலைந்து போயின. இந்தியாவை மையப்படுத்திய அரசியல் கனவுகளிலிருந்து யதார்த்ததிற்கு திரும்பவேண்டிய அவசியத்தை காலம் உணர்த்தியது. அரசியல் கனவுகள் கலைந்துவிட்டாலும் சில பழைய ஜென்மங்கள் இந்தியா குறித்த மாயைகளிலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை. சமீபத்தில் eye அலைவரிசையில் கம்ப வியாபாரி; மன்னிக்க வேண்டும் கம்பவாரிதி என்று சிலரால் அழைக்கப்படும் திரு.ஜெயராஜின் நேர்காணலொன்று இடம்பெற்றது. அதில் “ஈழத்தில் கவிஞர்கள் பெரிதாக வளரவில்லை. இருக்கிறார்கள்தான் ஆனாலும் தமிழகத்தோடு ஒப்பிடுமிடத்து இங்கு கவிஞர்கள் இல்லை. அதனால்தான் நாங்கள் தமிழகத்திலிருந்து கவிஞர்களை அழைக்கின்றோம்.” என்று தனது கண்டுபிடிப்பை பறைசாற்றியிருக்கிறார். மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள்  இந்த ஆண்டிற்கான சிறந்த நகைச்சுவையாளருக்கான விருதை நாம் ஜெயராஜ்ற்கு வழங்காமல் இருப்பது நியாயமாகுமா?  இதுவரை இவரால் நடாத்தப்பட்ட கம்பன் கழக விழாவின்போதான கவியரங்குகளில் ஈழத்து கவிஞரொருவர் தலைமைதாங்கிய வரலாறில்லை. நமது கவிஞர்கள் சிலரும் இந்தியத் தலைமையின்கீழ் அடக்கமாக வாசித்து வந்ததுமுண்டு. இன்னும் வாசிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பது வேறுவிடயம். எனது இலக்கிய நன்பரொருவர் கூறினார் அங்கு தலைமைதாங்குவோருக்கு இந்தியர் என்ற தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியிருப்பதாக் கொள்ளமுடியாது. அதே வேளை அந்த நன்பர் ஜெயராஜ் பற்றிச் சொல்லும்போது அவர் தன்னையொரு இலக்கியச் சன்னிதானமாகக் கருதிக் கொண்டிருக்கிறார். அதனது நீட்சிதான் இப்படியான அபத்தங்களெல்லாம் என்றார்.

இதே போன்று வேறு சிலரும் அறைகளுக்குள் இருந்தவாறு ஈழத்து கவிதையின், இலக்கியத்தின் எதிர்காலம் குறித்து ஆருடம் கூறி வருவதையும் நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறானவர்களுக்கு புறச் சூழல் குறித்து எந்தவிதமான அறிவோ உணர்வோ கிடையாது. தங்களது சாளரத்தின் வழியாக ஒரு போதும் எட்டிப் பார்ப்பதற்கு விரும்பாதவர்கள் இவர்கள்.
முதலில் இலக்கியம் என்றாலே அது கம்பராமாயாணம்தான், என்று நினைக்கும் ஜெயராஜின் குற்றச்சாட்டைப் பார்ப்போம். ஈழத்தில் கவிஞர்கள் இல்லையென்றால் புதுவைஇரத்தினதுரை, வ.ஜ.ச.ஜெயபாலன், சு.வில்வரெத்தினம், சி.சிவசேகரம், சேரன், சேலைக்கிளி, மு.பொன்னம்பலம், மு.புஸ்பராஜன் இவர்களெல்லாம் யார்? இன்று புதிய தலைமுறையில் எத்தனையோ கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். குறிப்பாக போராளிகளுக்குள்ளிருந்து எத்தனையோ கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். புலம்பெயர் சூழலில் பல்வேறு கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். வேற்று மொழிகளிலேயே கவிதையாக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்கள். ஈழத்து இலக்கியத்தின் சமகாலப்போக்கு பற்றி எந்தவிதமான அறிவுமில்லாமல் கருத்துக் கூறுவது ஒரு வகையில் சிறுபிள்ளைத்தனமானது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழகத்தின் கவிஞர்களும் (கவனிக்க சினிமாக் கவிஞர்கள் அல்ல) உயரிய இலக்கிய கர்த்தாக்களும் கவிதை ஈழத்திலேயே வளர்ந்திருப்தாகக் கூறிவருகின்றனர். அதற்கு காரணம் எமது கவிதைகள் போராட்டத்தின் நீட்சியாக இருப்பதும் மானுடவிடுதலையை அடித்தளமாகக் கொண்டிருப்பதும்தான். இன்றைய சூழலில் தலித்திய அடிப்டையிலும் பெண்விடுதலை நோக்கிலும் எழுதப்படும் கவிதைகளைத் தவிர்த்து பார்த்தால் தமிழகத்தின் கவிதைகள் பற்றி பெரிதாக சொலவதற்கு ஒன்றமில்லை. இது பற்றியெல்லாம் ஜெயராஜ்ற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. பாவம் அவருக்கு கம்பராமாயணத்தை மனனம் செய்வதற்கே நேரம் போதுமானதாக இருக்கும். அதனை நாம் பிழையாகச் சொல்லுதலும் கூடாது. செய்யும் தொழிலே தெய்வம்.
ஒருவேளை சிலரால் தமிழ்காப்போனாக உளரப்படும் ஜெயராஜ் ஜயா வைரமுத்து வாலி பழனிபாரதி தரத்தில் கவிஞர்களை மதிப்பிடுகிறாரோ தெரியவில்லை. அப்படியானால் நிட்சயமாக ஈழத்தில் கவிஞர்கள் வளரவில்லை என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்.


2
பொதுவாக நமது சூழலில் ஒரு வகையான இந்தியமாயை நிலவுகிறது. அவர்களிடமிருந்து வருவதெல்லாம் அற்புதங்கள் என்னும் அறியாமை நிலவுகிறது. குறிப்பாக சில வியாபார நலன் கருதிச் செயற்படும் ஊடகங்களால் அவ்வாறானதொரு கருத்து கட்டமைக்கப்படுகிறது. குறிப்பாக சக்தி என்னும் வியாபார ஊடகத்தின் வருகையினுடனேயே இந்நிலைமை முன்னரைக்காட்டிலும் வலுவடைந்தது. இவ் ஊடகம் ஈழத்துச் சூழலில் தமிழகத்தின் திராவிட வழித்தோன்றல்களால் நடாத்தப்படும் சண்-தெலைக்காட்சியின் பிரதி விம்பமாகத் தொழிற்பட்டது தொழிற்படுகிறது. உண்மையில் சக்திக்கு என்று எந்தவிதமான தனித்துவமோ சுயசிந்தனைத்தேடலோ கிடையாது. இன்றுவரை இதுதான் நிலை. முழுக்க முழுக்க தமிழக்ததையே சார்ந்திருக்கிறது. தமிழக சினிமாப் பாடல்களும் தமிழக மெகா (எ.கா-அண்ணாமலை) தொடர்களும் இல்லாவிட்டால் சக்தியில்லை. சக்தி நிகழ்ச்சிகளை நடாத்துவதற்குக் கூட தமிழக சினிமா நடிகைகளையும் பாடகிகளையும் அவ்வப்போது பயன்படுத்திவருகிறது. ஓ-போடு இளையகானங்கள்  தீம்திமிதக போன்ற நிகழ்ச்சிகளை உதாரணங்களாக குறிப்பிடலாம். ஓ-போடு போன்ற உதவாத நிகழ்சிசிகளை நடாத்த சினிமா நடிகைகளை பயன்படுத்துவது வேறுவிடயம்.  இதில் வேடிக்கை என்னவென்றால் இறுதியாக நடாந்த பாராளுமன்ற பொதுத் தேர்தல் பற்றி மதிப்பிடுவதற்கு இந்திய அவுட்லுக் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் பன்னீர் செல்வன் என்பவர் அழைக்கப்பட்டார். ஈழத்து வாசகர்கள் முன்னாள் இந்தியா டுடேயின் ஆசிரியர் மாலனிடம் தமிழ்தேசியம் பற்றி விளக்கம் கேட்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. இது ஒரு வகையில் இந்தியமேலாதிக்கத்தை திணிப்பதற்கான முகவர் தெழிற்பாடாகும். உண்மையில் இது பலரும் பார்க்கத் தவறுகின்றதொரு விடயமாகும். இதைத்தான் ஜெயராஜ்ஜூம் செய்து வருகிறார். இந்த விடயத்தில் ஜெயராஜ்ஜை சக்தியின் தந்தை எனச் சொல்லலாம். ஆனால் காத்திரமான குறிப்பாக ஈழத்து தமிழரில் அக்கறைகொண்ட தமிழக சிந்தனையாளர்களை இலக்கியகர்த்தாக்களை அழைப்பதும் கௌரவிப்பதும் அவசியமானதுதான்.

3
நம்மவர்கள் சிலர் தென்னிந்திய மாயையில் கிடக்க தமிழகத்தின் சிந்தனையாளர்கள் சிலர் தமிழ் சிங்கள முரண்பாடும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச்சூழலும் தமிழ் அறிவுத்துறையைப் பொறுத்த வரையில்  பேரிழப்பெனக் கூறிவருகின்றனர். சமீபத்தில் ஈழம் வந்திருந்த SVR என அழைக்கப்படும் S.V.இரைஜதுரை அவர்கள் ஈழத்தின் போர்ச் சூழல் தங்ளைப் பொறுத்தவரையில் சிந்தனைத்துறையில் பெரியதொரு இடைவெளியை ஏற்படுத்தி விட்டதாகக் கூறினார். ஒரு கைலாசபதி போன்றோ ஒரு கா.சிவத்தம்பி போன்றோ அல்லது எ.ஜே.கனகரட்ணா, நுஃமான் போன்றோ இன்றுவரைக்கும் தங்களது சூழலில் ஆட்கள் இல்லை என்றார். போர்ச் சூழலால் சிந்தனைத்துறையில் கவனம் செலுத்தமுடியாமை, புல்ப்பெயர்வு போன்றவற்றால் ஏற்பட்ட இடைவெளி என்பவை தமிழ் ஆறிவுத்துறையைப் பொறுத்தவரையில் பேரிழப்பாகும். மாக்சியரான திரு.S.V.இரைஜதுரை அவர்கள் தமிழகச் சூழலின் மிக முக்கிய ஆழுமைகளில் ஒருவராவார்.
இது சில திருந்தாத ஜெனமங்களுக்கு விளங்கப் போவதில்லை. உண்மையில் சிங்களத்தின் ஒடுக்குமுறையும் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய தேவைப்பாடும் தத்துவார்த்த சிந்தனைப் போக்குகளில் கவனம் செலுத்த முடியாத நிலையைத் தோற்றுவித்துவிட்டது. நாம் ஒரு சிந்தனை வறுமைக்கு ஆட்பட்டோம். குறிப்பாக தமிழ் ஆய்வுச் சூழலில் பெரியதொரு வறுமை நிலை தோன்றியது எனலாம். ஆனால் இது இயாலாமையால் தோன்றிய வறுமை நிலையல்ல புறச்சுழலால் ஏற்பட்ட நிலை. இது மாற்றிமைக்கக் கூடிய ஒன்றே. இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இந்த நிலை ஏற்படவில்லை குறிப்பாக கவிதைத்துறையில் சிறந்ததொரு வளர்ச்சி ஏற்பபட்டிருக்கிறது. அது எத்தகைய வளர்ச்சி என்பதை இலக்கியமும், ஈழத்து இலக்கியச் சூழலும்  அறிந்தோர் அறிவர். சிறுபிள்ளைத்தனமான ஜென்மங்களுக்காக இதனை விளக்கிக் கொண்டிருக்க முடியாது. அந்த நேரத்தில் உருப்படியாக எதையும் செய்துவிடலாம்.. இப்படியும் சிலர் நமது சூழலில் இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பாக அவர்கள் கருத்துச்சொல்லும் அளவிற்கு பெரியமணிதர்களாக வலம்வருகிறார்கள் என்பதனையும் இனங்காட்டுவதே  இச் சிறு குறிப்பின் நோக்கம்.

 


     இதுவரை:  20597668 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2679 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com