அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 13 arrow அலைவாய்ப்படல்…
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அலைவாய்ப்படல்…   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: • கி.பி.அரவிந்தன்  
Wednesday, 19 January 2005

வெண்நுரையாய் நீ சிரித்தாய்
உன்னிரைச்சல் கேட்டபடி
காலாற நடந்திருந்தோம்
கரைதனை வருடி நீ
முத்திக்கும் கணந்தோறும்
எம்கால்கள் தழுவி நீ
நுரைநாவால் நக்கினாய்
கடலலையே கடலலையே
ஓய்வறியா கடலலையே

"நீராரும் கடலுடுத்த
நிலமடந்தைக் கெழில்"1 என்றே
வீறார்ந்த மரபுடன் நாம்
பாமாலை சூடி நின்றோம்
ஐந்திணை நிலம் வகுத்து
கடல்சார் வாழ்வதனை
நெய்தல் எனக்கொண்டோம்
திரைகடல் ஓடினோம்
திரவியம் தேடினோம்
நிரைஅலை ஏறினோம்
கடல்மடி துழாவினோம்
குறைமதி மனிதர் நாம்
உயிரின மையம் நீ
உன்மத்தமேன் கொண்டாய்
ஊழிக் கூத்தாடினாய்
கடலலையே கடலலையே
பொங்குமாக் கடலலையே
உன்மடி வெடித்ததனால்
வெகுண்டு நீ வந்தாயோ

பசியாறா வெறிகொண்டோ
பேரலையாய் சாவலையாய்
சுனாமியெனப் பெயர்கொண்டாய்
கரையேறி ஊர்புசித்தாய்
மழலையர் கைப்பண்டத்தை
எத்திச் செல்லும் காக்கையாய்
குஞ்சுகுருமான்களை நீ
உறிஞ்சிச்சென்ற மாயமென்ன..?
மழலையர்தான் ருசித்தனரோ
மங்கையர்தான் ருசித்தனரோ
நுரைகக்கும் உன்நாவினிற்கு
ஆழியாளே ஆதித்தாயே
எங்கள் தொல்நிலங்களையும்
முந்தைப் பெருங்குடிகளையும்
கடல்கோள் கொண்டதென்று
இலக்கியங்கள் செப்பினவே
செப்பியவை புனைவல்ல
இதோ பாரீர் மானிடரென்றே
கடலலையே கடலலையே
ஆர்ப்பரிக்கும் கடலலையே
அதனைத்தான் நீ
மீள்நிகழ்த்தி காட்டினையோ

போர் வாய்ப்பட்டதே
எம் சிறுதேசம்
திசைகள் தோறும் நாம்
சிதறித்தான் போனோம்
அதையே எங்களின்
பலமெனக் கொண்டோம்
பகையினை வென்றோம்
மெல்லவே நாம் நிமிரவும்
முனைந்தோம்
கடலலையே கடலலையே
கரைதின்னும் கடலலையே
எங்கள் முதுகெலும்பையும்
உடைக்கவோ நீ நினைத்தாய்
பட்ட காலிலே பட்டது போலுந்தன்
அலை வாய்பட்டதே எங்களின் தேசம்
சரிதான் போ… ஆறிவிட்டதா உன்பசி

இயற்கையே உன் வல்லபம் அறிவோம்
ஐம்பூதங்களான பேரியக்கம் உணர்வோம்
எம்வாழ்வும் இருப்பும் உனதே மறவோம்
மானிடர் நாங்கள் வாழவே விழைந்தோம்
முகங்கொள்வதே வாழ்வென மகிழ்வோம்
கடலலையே கடலலையே
இயற்கை வடிவான கடலலையே

நிலவெறிந்த இரவுகளில்
வெண்நுரையாய் நீ சிரிப்பாய்
உன்னிரைச்சல் கேட்டபடி
காலாற நடந்திருப்போம்
கரைதனை வருடி நீ
முத்திக்கும் கணந்தோறும்
எம்கால்கள் தழுவி நீ
நுரைநாவால் நக்குவாய்
கடலலையே கடலலையே
ஓய்வறியா கடலலையே
"சிறு நண்டு மணல்மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை அதைவந்து
கடல்கொண்டு போகும்"2
போனாலும் என்ன
சிறு நண்டு மீளவும் படம் ஒன்று கீறும்
சிறு நண்டு மீளவும் படம் ஒன்று கீறும்

கடலலையே கடலலையே
…

14-01-2005

குறிப்பு: இக்கவிதையில் 1மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்தாய் வாழ்த்துப்பாவில் இருந்தும்
2மகாகவியின் புதியதொரு வீடு பாநாடகத்தில் இருந்தும் கவிதை வரிகள் நன்றியுடன் எடுத்தாளப்பட்டுள்ளன.

 

 


 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Apr 2024 19:21
TamilNet
HASH(0x55fb25361a60)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Apr 2024 19:26


புதினம்
Thu, 18 Apr 2024 19:26
















     இதுவரை:  24778039 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3095 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com