அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 17 May 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அப்பால் தமிழ் நோக்கர்களுக்கு...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Thursday, 10 February 2005

வணக்கம்

நிலக்கிளி பாலமனோகரன் எழுதுவது

முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின், வன்னியிலிருந்து ஆறாயிரம் மைல்கள் வடக்கே இருந்துகொண்டு, அப்பால் தமிழுக்காக, எனது முதலாவது நாவலான நிலக்கிளியை கணினியில் மறுபதிப்புச் செய்துகொண்டிருக்கின்றேன். தமிழ் எழுத்து முறையிற்கூடச் சில மாற்றங்கள் ஏற்பட்டு, அவை இன்று இயல்பான விஷயங்களாகவும் அமைந்துவிட்டன.

இந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாகவும், சுவையாகவும் உள்ளது.

உரியவயதில் நமக்கு மணமாகி, பிள்ளைகள் பிறந்து அவர்கள் வளர்கின்றனர். ஒரு முப்பது ஆண்டுகளின் பின்னர், எமது பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தை நாம் நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தாலும் அது யாவருக்கும் இலகுவில் கிட்டுவதில்லை. இளவயது, ஆர்வமிகுதி, ஆசை, பயமறியாமை என்பவை காரணமாக நாம் எமது ஆரம்ப வாழ்க்கையை நின்று நிதானமாகச் சுவைத்ததில்லை.

ஆனால், அதிர்ஷ்டவசமாக நமது பேரப்பிள்ளைகளின் மூலம் எமது இந்த ஆசை நிறைவேறுகின்றது. அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளிலும்; நாம் மறுபடியும் எமது பிள்ளைகளின் சிறுவயதுக் காலத்தை ஆசைதீர அனுபவிக்க முடிகின்றது! நிலக்கிiளியைப் பிரதி செய்யும்போது இவ்வகையான ஓர் இன்பத்தை நான் பெறுகின்றேன்!

நிலக்கிளி எழுதுகையில் எனக்கு முப்பது வயது! இளங்கன்று பயமறியாதென்பர்! படைப்புலகைப் பொறுத்தவரை நானும் ஓர் இளங்கன்றாகவே இருந்தேன். அன்றைய வன்னியின் அழகும், எளிமையும், இனிமையும், கள்ளமற்ற தன்மையும் என்னைச் சூழ நிறைந்திருந்த அந்தக் காலத்தையும், அன்றைய மனிதர்களையும் நான் மிக இயல்பாக எனது படைப்புக்களில் கொண்டுவர முடிந்ததை இப்போது அவதானிக்கின்றேன்.

பத்தாண்டுகால புலம்பெயர் வாழ்க்கையின் பின் நான் மீண்டும் வன்னிக்குச் சென்றிருந்தேன். ஒரு கொடுமையான போர் வன்னியின் இயற்கையையும், மனிதர்களையும் எவ்வளவு கடுமையாகப் பாதித்துள்ளது என்பதை நான் நேரடியாகக் காணமுடிந்தது. காட்டின் அமைப்பே மாறியிருந்தது. சாலையோரம் உயர்ந்து வளர்ந்து கிளைபிணைந்து நின்ற மரங்கள் இல்லை. வண்ணமயில்கள், காட்டுக்கோழிகள், பாதையைக் குறுக்கறுக்கும் மான் கலைகள், புற்றுக்களில் சுகமாக வெய்யில் காயும் பெரிய உடும்புகள், இனிமையாக விசிலடிக்கும் தில்லம் புறாக்கள், இருளும் பசுமையும் விரவிக்கிடக்கும் காடுகள் இவை எவற்றையுமே என்னால் காணமுடியவில்லை. வீதியோரக் காடுகள் வெட்டி வீழ்த்தப்பட்டு வெட்டைகளாக இருந்தன. தலைதறிக்கப்பட்ட பெரு மரங்களில் குண்டுகள் பாய்ந்த காயங்கள்.

ஊருக்குள் போனால், முன்பு அழகுக்காக மட்டுமே வெளியூர்களிலிருந்து வசதியுள்ளவர்களினால் கொண்டுவரப்பட்ட குறோட்டன்கள், கடதாசிப் பூச்செடிகள், கள்ளிகள், முட்புதர்கள் போன்ற வன்மரங்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் வளர்ந்து இடம்பிடித்து நிற்கக் கண்டேன். வறட்சியையும், கந்தகநெடியையும், அழிவையும் இந்த வகைத் தாவரங்களினால் மட்டுமே தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்ததோ என்னவோ! எனக்குத் தெரிந்த வயதான வன்னி மாந்தர்களின் முகங்களிலே நான் முன்பு கண்டு மகிழ்ந்த இயல்பான சிரிப்பைக் காணமுடியவில்லை. மரங்கள் குண்டுகளினால் காயப்பட்டதுபோல் இவர்களுடைய மனங்களும் காயப்பட்டிருந்தனவோ? முன்பு மனந்திறந்து பேசும் அவர்கள் அனைவருமே முடிக்கொண்ட புத்தகங்களாகிப் போயிருந்தனர்!

போன இடமெல்லாம் புதிய முகங்கள். இடப்பெயர்வால் வன்னியில் அதிக மனிதர்கள்.

சுருங்கக் கூறின் அன்றைய வன்னி இன்றில்லை. அது மீண்டும் தோற்றுவதற்குரிய சூழலும் இனிமேல் வராது. இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார்கள். உண்மைதான்! ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த வன்னியையும், அதன் மக்களையும் நாம் இனிமேல் சந்திக்க வேண்டுமெனில், நிலக்கிளி போன்ற வன்னிக் கதைகளில்தான் காணமுடியும்! எனது அன்றைய படைப்புக்கள் பெரும்பாலும் நானறிந்து அனுபவித்த வன்னியையே களமாகக் கொண்டிருந்ததை எண்ணுகையில் மனதுக்கு நிறைவாகவிருக்கின்றது. அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டுமென்ற எண்ணமும் கூடவே தோன்றுகின்றது.

இதனால், முன்பிருந்தவைதான் சிறந்தவை என்பது எனது கருத்தாகாது. அந்தந்தக் காலம் தனக்குரிய சூழலையும், மனிதர்களையும் உருவாக்குவதுபோன்றே, அவ்வக்கால மனிதர்களும் தமது வாழ்சூழலையும்ää வரலாற்றையும் ஆக்குகின்றனர்.
 
வன்னியில் இன்று வாழும் இளந்தலைமுறையினர் போர்ச்சூழலில் பிறந்தவர்கள், வளர்பவர்கள். வெவ்வேறு பிரதேசங்களையும் ஊர்ர்களையும் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு வலிமையான பரம்பரையாக உருவாவதைக் காணமுடிகின்றது. குண்டும், குழியுமான வீதிகளில், இருளிற்கூட மிக நீண்ட தூரம், துவிச்சக்கர வண்டிகளில் கலகலவெனப் பேசிக்கொண்டு செல்கின்ற இளைஞர்கள், யுவதிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன். பொறுப்புக்களில் உள்ள இளைய தலைமுறையின் கம்பீரம், நிதானம், தெளிவான சிந்தனை, அச்சொட்டான வார்த்தைப் பிரயோகம் என்பன நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன.

ஒட்டுசுட்டானிலிருந்து மாங்குளம் செல்லும் வீதியின் இருமருங்கும் வெட்டையாக்கப்பட்ட வெளிகளில், அளவான இடைத்தூரத்தில், மலைவேம்பு மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. அவற்றை, நவீனபோர்க்காலம் தந்த பிளேட்டுக் கம்பிகளால் அமைக்கப்பட்ட கூடுகள் பாதுகாக்கின்றன. மலைவேம்புக் கன்றுகளுக்குப் பின்னே சற்று இடைவெளி தூரத்தில் பொன்னாவரசஞ் செடிகள் தொடர்வரிசையாக நாட்டப்பட்டு வளர்ந்து, மலர் சுமந்து நிற்கின்றன. இன்னுமோர் இருபது ஆண்டுகளில் இந்த நெடுஞ்சாலை எவ்வளவு அகலமானதாக, அழகியதாக இருக்கும் என்பதைக் கற்பனைசெய்ய முடிகின்றது. மலைவேம்பு நிழலும், பொன்னாவரச மலர்களின் மூலிகைச் சாரமும் எதிர்கால சந்ததிக்கு அளிக்கப்போகும் ஆறுதலையும், ஆரோக்கியத்தையும் எண்ணத்திற்கொண்டு, இன்றே திட்டமிட்டுச் செயற்படும் விடுதலைப் புலிகளின் நிர்வாகத் திறமையை வியக்கமுடிகின்றது. பல பக்கங்களில், பலதுறைகளில் காட்டப்படும் கரிசனையிலும், தூரநோக்கிலும் இந்த நெடுஞ்சாலை அமைப்பு ஒரு சிறிய உதாரணமே என்பதும் புரிகின்றது.

இன்றைய, தமிழீழ கலை இலக்கியப் படைப்புக்களில் பெரும்பான்மையானவை வன்னியிலிருந்தே பிறக்கின்றன. அவை தாம் பிறந்த காலத்தை எமது வருங்காலத்தினர்க்குச் சொல்லும். குருதியும், கண்ணீரும், மானமும், வீரமும் விரவிக்கிடக்கும் புதுநானூறுகள் அவை.

நான் அன்று கண்ட தண்ணிமுறிப்புக் குளமும், இருண்ட காட்டினூடகச் செல்லும் தண்மை நிறைந்த வண்டிச்சாலைகளும் இன்று எவ்வளவோ மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன. தண்ணிமுறிப்பின்; ஒரு சில குடியிருப்பாளர்களும், விவசாயிகளும் அங்கில்லை. அந்த முல்லை, மருதப் பிரதேசங்களின் இயல்புநிலை தோன்றுவதற்கு இன்னமும் காலம் அவசியம்.

இன்றோ வன்னியின் நெய்தல் நிலம் சுனாமி கடற்கோளினால் நொந்த நிலமாகிக் கிடக்கின்றது. இந்த அனர்த்தம் எமது மனங்களில் ஏற்படுத்திய காயம் இன்னமும் காயவில்லை. தொடர்ந்து வலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இருந்தாலும், நாம் அந்தச் சோகத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு நமது கடமைகளைச் செய்தாதல் வேண்டும்.

அங்கு, எதையும் தாங்கிக்கொண்டு, தம்மைச் சுதாரித்துக்கொண்டு நம்பிக்கையுடன் எழும் ஒரு சந்ததியைக் காண்கையில் இருண்டுபோன இதயங்களில் புதிய ஒளிக்கதிர்கள் தோன்றத்தான் செய்கின்றன. நாம் விட்டுச் செல்லும் பதிவுகள், அவர்கள் சற்று ஓய்ந்திருந்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வேளைகளில் ஒரு நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த வன்னியைத் தரிசிக்க வைக்கும் என்பதை நினைக்கையில் கிடைக்கின்ற மகிழ்ச்சி சிறிதல்லத்தான்.

இந்த நாவலுக்குத் தமது, அப்பால் தமிழ் இணையத்தள மஞ்சரியில் இடமளிக்க முன்வந்த திரு. கி. பி. அரவிந்தனுக்கும், அவரது குழுமத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இந்தத் தளமூலமாக நிலக்கிளியை உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்குமென்பது சாதாரண விஷயமல்ல.

நிலக்கிளியைப் படிக்கின்ற வாசகர்கள் விரும்பின் மின்னஞ்சல் வழியாக என்னுடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர்களது எண்ணங்கள் படைப்பாளிக்கு விருந்தாக மட்டுமல்லää மருந்தாகவும் அமையும்.

பணிவன்புடன்

அண்ணாமலை பாலமனோகரன்
balamanoharan@get2net.dk
Denmark
01.02.2005


     இதுவரை:  24901873 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2563 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com