அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 03 December 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சர்வதேச தமிழ் மாநாடு - மல்லிகை ஜீவா கோரிக்கை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எம்.ஏ.எம். நிலாம்  
Friday, 04 March 2005

தமிழைச் சர்வதேச மயப்படுத்துவதில் ஈடுபாடு காட்டும் ஈழத்துப் படைப்பாளிகள்


ஈழத்து தமிழ் இலக்கியம் இன்று சர்வதேச மட்டத்தில் உயர்ந்து காணப்படுவதாகவும் இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கு இலக்கியம் வளர்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கும் "மல்லிகை" டொமினிக் ஜீவா இலங்கையில் உள்ளூர் தமிழ் படைப்புகளுக்குச் சரியான சந்தை வாய்ப்பு இல்லாமைக்கு விசனம் தெரிவித்ததோடு தென்னிந்திய குப்பை இலக்கியங்கள் வந்து குவிவதாகவும் வேதனைப்பட்டார்.

ஈழத்து தமிழ் இலக்கியப் படைப்புகளையோ, படைப்பாளர்களையோ தமிழகம் மதிக்கவில்லை எனவும், மாறாக அங்கிருந்து வருபவர்களுக்கு நாம் குருதட்சணை வழங்கும் நிலையே தொடர்வதாகவும் தமது ஆத்திரத்தை அவர் வெளியிட்டார்.

கடந்த சனிக்கிழமை மாலை கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள "மல்லிகை" அலுவலகத்தில் நடைபெற்ற, அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த ஈழத்துப் படைப்பிலக்கியவாதி லெ.முருகபூபதியுடனான இலக்கிய சந்திப்பின் போதே டொமினிக் ஜீவா இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.மல்லிகை' வட்டத்தைச் சேர்ந்த இலக்கிய நண்பர்கள் பலரும் கலந்து கொண்ட இச்சந்திப்பில் டொமினிக் ஜீவா தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:

எமது இலக்கியப் பபடைப்புகள் இலங்கை ரூபாவால் கூட சந்தைப்பட முடியாத ஒரு காலமிருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. எமது படைப்புகள், நூல்கள், சஞ்சிகைகள் டொலரில், ஸ்ரேலிங் பவுணில், யுரோவில் வாங்கப்படுகின்றன. ஈழத்து தமிழ் இலக்கியம் இன்று சர்வதேச சந்தையில் விலைபட்டுக் கொண்டிருப்பது எமக்கெல்லாம் பெரிய சந்தோஷத்தைத் தருகின்றது. இதனைச் செய்தவர்கள் புலம் பெயர்ந்த தமிழ் மக்களே ஆவர்.மேற்குலகுக்குச் சென்ற இந்தியர்கள் தமது பிள்ளைகளுக்கு பரத நாட்டியத்தைக் கற்பிப்பதோடும் கோயில் கட்டுவதோடும் நின்று விட்டனர். ஆனால், எம்மவர்களோ மேற்குலகில் சிறுசிறு குழுக்களாகச் சேர்ந்து இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அங்கு இலக்கியம் வளர்ப்பதில் எம்மவர்கள் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இன்று பல இலக்கிய அமைப்புகளை நடத்தி வருகின்றனர். 32க்கும் மேற்பட்ட தமிழ் சஞ்சிகைகள் எம்மவரால் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டின் புத்திஜீவிகள் அறிவைப் பணம் பண்ணுவதிலேயே கருத்தாக இருக்கின்றனர். ஈழத்துத் தமிழர்களோ தமிழை சர்வதேச மயப்படுத்துவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இங்கிருந்து தமிழர்கள் அவல வாழ்வு வாழ விரும்பாமல் அகதிகளாக மேற்குலகுக்குச் சென்றனர். அவர்கள் கொண்டு சென்றது தமது தாய்மொழி தமிழை மட்டுமே ஆகும். இதனைத் தமிழகம் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அங்கிருந்து தமிழ் நூல்கள் அச்சாகி மேற்குலகுக்கு அனுப்பப்படுகின்றன. அவை இந்திய ரூபாவில் இரண்டாயிரம், மூவாயிரம் என்று விலை மதிப்புக் கொண்டவையாகும். அவர்களது சர்வதேச சந்தைக்கு மூலாதாரமாக அமைந்திருப்பது ஈழத்துத் தமிழர்கள்தான். அறிவுசார் புத்தகங்களை விட, ஆசைப் புத்தகங்களே தமிழ் நாட்டில் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. அரசியல்வாதியினதும் சினிமாக்காரியினதும் படங்களைப் போட்டு எமது தமிழினம் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றது.பாரதியும் பாவேந்தனும் எமக்குப் பாதை காட்டினர். புதுமைப் பித்தன் பேனா பிடித்துத் தந்தான். அதற்காக எமது அறிவு விலை போக நாம் அனுமதிக்க முடியாது.தமிழ் நாடு எமது இலக்கியத்தை, எழுத்தாளர்களை மதிப்பதாக இல்லை. ஆனால், நாம் தமிழகத்திலிருந்து வரும் குப்பைகளையும் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அங்கிருந்து வருபவர்களுக்கு குருதட்சணை கொடுத்தாக வேண்டியுள்ளது. இதற்கு ஒரு காரணமும் இருக்கின்றது. இந்தியச் சட்டத்தில் 16 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழும் ஒன்று. இதன் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளைக் கொண்ட இலக்கியங்களோ, புத்தகங்களோ அங்கு வரக்கூடாது என்பது விதிகளுள் ஒன்றாகும்.

எமது நாட்டைப் பொறுத்த மட்டில் இங்குள்ள படைப்பாளிகளின் கஷ்டம் இன்னமும் உணரப்பட்டதாகத் தெரியவில்லை. எமது தமிழ் அந்நியரால் எவ்வளது மோசமாக சுரண்டப்படுகின்றது. இதற்குத் தொடர்ந்தும் இடமளிக்க முடியுமா?இந்தச் சந்தர்ப்பத்தில் மிக முக்கியமான விடயத்தை உங்கள் சிந்தனைக்கு முன்வைக்க விரும்புகின்றேன். ஈழத்து எழுத்தாளர்கள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரே வழி மிக விரைவில் தலைநகர் கொழும்பில் சர்வதேச எழுத்தாளர் மாநாடொன்று கூட்டப்பட வேண்டும். ஈழத்துத் தமிழ் இலக்கியம், தமிழ் எழுத்தாளர்களின் பிரச்சினைகள் இந்த மாநாட்டின் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உலகில் தமிழ் எங்கெல்லாம் வாழ்கிறதோ, வளர்க்கப்படுகின்றதோ அங்கிருந்தெல்லாம் அறிஞர்கள், ஆய்வாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கச் செய்யப்பட வேண்டும். எங்களுக்குத் தமிழ்தான் வாழ்வு, தமிழ்தான் உயிர் மூச்சு என்பதை உலகுக்கு உணர்த்தியே ஆகவேண்டும்.

இந்த நாட்டிலுள்ள ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராவது இன்று வரை தேசத்தின் தமிழ் எழுத்தாளர்களைப்பற்றி குரல் கொடுத்திருக்கின்றாரா? இல்லவே இல்லை. நாங்கள் அமைக்கும் மேடைகளுக்கு வந்து எங்களுக்கே உபதேசம் செய்து விட்டுப் போகிறார்களே தவிர, அவர்கள் மேடை போட்டு எமது பிரச்சினை குறித்து ஒரு நாளாவது பேசியதுண்டா? ஏன் பாராளுமன்றத்திலாவது குரல் எழுப்பியதுண்டா? இல்லவே இல்லை.புரவலர் ஹாஷிம் உமரைப் புகழ்ந்தால் பிடிக்காதவர்கள் நிறையவே உள்ளனர். இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் ஏராளமாக இங்கு இருக்கின்றனர். ஆனால், ஒரு ஹாஷிம் உமர் மட்டும்தான் எப்போது வேண்டுமானாலும் எழுத்தாளர்கள் அழைத்த மாத்திரத்தில் முகம் சுழிக்காமல் ஆயிரமாயிரம் என அள்ளித் தந்து மகிழ்விக்கிறார். அந்த மனிதனை போற்றி வாழ்த்தாமல் வேறு யாரைப் பற்றித்தான் எழுத முடியும்?வெறுமனே கடந்து போன காலத்தைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றி பேசிக் கால விரயம் பண்ண வேண்டியதில்லை. எமது பிரச்சினையைப் பேச, இனி சர்வதேச மாநாடுதான் கூட்டப்பட வேண்டும். எமது மக்கள், எமது இனம், எமது மொழி இன்று உலகெங்கும் பரவியுள்ளது. இந்த நிலையில் நாம் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கொண்டிருக்க முடியாது, வெளியே வந்தாக வேண்டும்.எமது மக்கள் புலம் பெயர்ந்ததால் வந்த மாற்றம் பெரியது. டேனிஸ் மொழியைப் படித்த தமிழன் அந்த இலக்கியத்தைத் தமிழில் கொண்டு வருகின்றான். அதேபோன்று, பிரான்ஸ் மற்றும் சர்வதேச மொழிகளைப் படித்து அந்த இலக்கியங்கள் தமிழுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இது பெரிய சங்கதியாகும், உயர்வானாதாகும்.தமிழ் நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் பத்திரிகைகள் வெளி வருகின்றன. தமிழில் இலத்திரனியல் ஊடகங்களும் நிறையவே இருக்கின்றன. ஆனால், அவை எழுத்தாளர்களை, இலக்கியவாதிகளை மதிப்பதாக, கௌரவிப்பதாகத் தெரியவில்லை. இங்கு நிலைமை அப்படியல்ல. ஒரு எழுத்தாளன் தும்மினால் கூட மறுநாள் அது செய்தியாக தமிழ்ப் பத்திரிகைகளில் வெளிவருகின்றது. எழுத்தாளர்களுக்கு இங்குள்ள ஊடகங்கள் உயர்ந்த இடத்தைக் கொடுக்கின்றன. தமிழ் நாட்டிலோ சினிமாக்காரிக்கும் அரசியல்வாதிக்கும் தான் இடம் தரப்படுகின்றது. இது ஒரு சாபக்கேடாகும். கைலாசபதியை, டானியலை உலகில் தெரியாத தமிழன் இருக்க முடியாது. தமிழர் நெஞ்சங்களில் அவர்களைப் போன்றவர்கள் வாழ்கின்றார்கள். இதில் புதுமை என்னவென்றால் மரணத்தின் பின்னரே நாங்கள் பேசப்படுகின்றோம், தேடப்படுகின்றோம். உயிர்வாழும் போது, அவர்களை முழுவதுமாக நேசிக்கத் தவறுகின்றோம். இக்கோணத்தில் பார்க்கின்றபோது முருக பூபதியும் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்தான். அவர் நிரந்தரமாகவும் முழுமையாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றார். சமூக உணர்வுடன் செயற்படுகின்றார். நாம் விளையும் அந்த அற்புதமான மாநாட்டை நடத்த சர்வதேச ரீதியிலான பங்களிப்பைச் செய்யும் பொறுப்பை பூபதி ஏற்றாக வேண்டும்.

கலந்துரையாடல்

அதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கருத்து வெளியிட்ட எழுத்தாளர் திக்குவல்லை கமால், அரசு பாடசாலைகளுக்கு சில தேவைப்பாடுகளைச் செய்து கொள்வதற்காக அதிபர்களுக்கு ஒரு தொகைப் பணம் ஒதுக்கிக் கொடுக்கப்படுகின்றது. அதில் ஆண்டு தோறும் புத்தகங்களை கொள்வனவு செய்ய 5 ஆயிரம் ரூபா செலவிட முடியும். இதனை எத்தனை அதிபர்கள் செய்கின்றனர். அவர்கள் துணை நூல்களை மட்டுமே வாங்குகின்றனர். எமது மண்ணின் இலக்கிய நூல்கள வாங்க அவர்கள் தூண்டப்பட வேண்டும். இதற்கு நாம் மேல்மட்டத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அதிபர்கள் கட்டாயப் படுத்தப்பட வேண்டும். அப்போது தான் அது சாத்தியப்பட முடியும்.அரசு கலாசார அமைச்சினூடாக வழங்கும் நூல் வெளியீட்டு உதவித் திட்டத்தை சரியாகப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். இம்முறை சிறுவர் நூல்களுக்கு நிதி உதவி வழங்க அறிவிக்கப்பட்டது. 168 சிங்கள நூல்களுக்கான பிரதிகளும் 18 ஆங்கில நூல்களுக்கான பிரதிகளும் வந்துள்ளன. ஆக தமிழில் 16 நூல்களுக்கான பிரதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.இது விடயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நூலொன்றை வெளியிடுவதற்காக நாம் எழுத முன்வர வேண்டும். சர்வதேச மாநாட்டுக்கான மையத்தளமாக முருக பூபதியை பயன்படுத்துவோம். இங்கிருந்து நாமனைவரும் இயங்குவதோடு சர்வதேச மட்டத்தில் பூபதி இயங்கினால் மாநாடு நிச்சயம் வெற்றியளிக்கும் என்றார்.

"ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் ஞானசேகரன் கருத்துக் கூறும் போது எமது படைப்புகள், சஞ்சிகைகள் உள்ளூரிலும் சர்வதேச ரீதியிலும் சந்தைப்பட வேண்டுமானால், அதற்கு ஒரு வலைப்பின்னல் (NET WORK) உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். நாம் கஷ்டப்பட்டு சஞ்சிகைகளை, நூல்களை வெளியிட்டு தபால் செலவையும் செய்து பிரதிகள் அனுப்புகின்றோம். அவற்றுக்குப் பணம் வருவதுமில்லை, சந்தாக்கள் கிடைப்பதுமில்லை எனவும் அவர் கவலை தெரிவித்தார். இதில் புலம்பெயர்ந்த இலக்கிய நண்பர்கள் எமக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக மெய்யியல் துறை விரிவுரையாளர் எஸ். வாசுகியும் ஆரோக்கியமான ஆலோசனைகளை முன்வைத்தார். இறுதியாக, முருகபூபதி தமதுரையின்போது நாம் கடந்தகாலக் குறைகளைத் தேடி அலட்டிக் கொள்வதை விட, இனி என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம். சர்வதேச மாநாட்டுத் திட்டம் இலகுவான பணியல்ல. மிகக் கடினமான பணி. பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். அதற்கு எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.நாம் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு விடக்கூடாது. பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும். மாநாடு தொடர்பில் ஆழமாக ஆராயப்பட வேண்டும். திட்டமிட்டுச் செயற்பட வேண்டும். இந்த மாநாடு, எழுத்தாளர்களின் அடிப்படைப் பிரச்சினையுடன் தேசியப் பிரச்சினை குறித்தும் பேசக் கூடியதாக அமைய வேண்டும். மாநாட்டை டிசம்பரில் நடத்துவது பொருத்தமானதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.இந்தச் சந்திப்பில் வதிரி ரவீந்திரன், தேவகௌரி, ப.ஆப்தீன், மு.பஷீர், ஷ்ரீதர்சிங், ஆ.கந்தசாமி, அனோஜா ராஜ ஷ்ரீகாந்தன், எஸ்.செல்வம், கனிவுமதி உட்பட பல இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி: தினக்குரல்


     இதுவரை:  19976993 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3295 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com