அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 03 December 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு கிழவரும் இரு கிளிகளும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: அ.பாலமனோகரன்  
Tuesday, 08 March 2005

வெகுநேரமாகத் தங்கராசர் அந்தக் கிளிகளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மகனும், மனைவியும், மக்களும் வெளியூர் போனதுமே, அவர் அக் கிளிகளை அப்படியே கூண்டோடு மேல்மாடிக்கு, தனது அறைக்கு எடுத்து வந்திருந்தார். யாரோ நண்பர்கள் வீட்டுத் திருமணமாமாம். தங்கராசருக்கு அவர்களைத் தெரியாதுதான். இருந்தாலும் மகனோ, மருமகளோ, 'நீங்களும் வாருங்கோவன்" என ஒரு பேச்சுக்காயினும் கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தால், 'நான் ஏன் புள்ளையள் உந்தத் தூரத்துக்கு! ஆக்களையும் எனக்குத் தெரியா..... அதோடை அஞ்சாறு மணித்தியாலம் காறுக்குள்ளை காலை மடக்கிக் கொண்டிருக்கவும் என்னாலை ஏலாது!" என்றுதான் நிச்சயமாகச் சொல்லியிருப்பேன் என, தங்கராசர் இப்போது நினைத்துக் கொண்டார்.

மகனையும், அவனுடைய குடும்பத்தையும் பார்ப்பதற்கென, இரண்டு வருடங்களுக்கு முன்னர் டென்மார்க்குக்கு வந்த தங்கராசர் ஏதேதோ காரணங்களுக்காக மகனுடனேயே வசிக்க நேரிட்டிருந்தது. இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இப்படி எத்தனையோ சிறுசிறு சம்பவங்கள் - இலேசாகச் சுடுகின்ற சொற்கள். ஆனால் அவர் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவருடைய சுபாவம் அப்படி. அவர் பிறருடன் பழகியது குறைவு. தனது வாழ்வின் அறுபத்தியெட்டு வருடங்களையும் கமக்காரனாகவே வாழ்ந்துவிட்டவர். தனது வயலின் பயிர்களும், தோட்டத்து வாழைகளுந்தான் அவருக்கு உற்றமும், சுற்றமும். பயிர் பச்சைகளுடனேயே மானசீகமாக உரையாடி மகிழ்பவர். அவருடைய மனைவி பாக்கியமும் அப்படித்தான். ஆனால் கூடவே உலக விவகாரங்களும் தெரிந்தவள். அவளுக்கு மூளைக் காய்ச்சல் வந்த திடீரென இறந்தபோது அவர் திகைத்துத்தான் போனார். திருவிழாவில் தொலைந்துபோன குழந்தைபோன்று. அப்போதுதான் அவருடைய மகன் அவரை டென்மார்க்குக்கு அழைத்திருந்தான்.

இங்கு வந்தது தவறோ எனத் தங்கராசர் இந்த இரண்டு ஆண்டுகளில் அடிக்கடி நினைத்தபோதும், 'நான் திரும்பிப் போகப்போறன்" என்று சொல்ல அவரால் இயலவில்லை. பாக்கியம் இல்லாத வீடும், ஊரும் அவரை அந்த அளவுக்கு ஈர்க்கவில்லை. ஆனாலும், அந்தப் பிணைப்பிலிருந்து அறுந்துபோய் இங்கு வந்து ஏதோ அந்தரத்தில் தவிப்பது போலிருந்தது.

தங்கராசருக்குத் தன் பேரப்பிள்ளைகள் அருகில் வாழ்வது ஆறுதலாக இருந்தது. அவர்களைத் தனது மடியில் தூக்கி வைத்திருப்பார், கொஞ்சுவார். ஏதோவெல்லாம் அவர்களுடன் பேசவேண்டும் என ஆசைப்படுவார். ஆனால் அது முடிவதில்லை. பேரனாவது 'அப்பப்பா, இந்தாங்கோ!" என்று ஏழெட்டுத் தமிழ்ச் சொற்களாவது பேசுவான். அனால் இளையவளான பேத்தியோ அதுவும் இல்லை. முழுக்க முழுக்க டெனிஸ்தான்.அவர்கள் இப்போ அவர் முன்பே அந்தக் கூண்டிலிருக்கும் சின்னக் கிளிகள் போன்று, அழகியகுழந்தைகள். அவரைப் பொறுத்தவரையில் இந்தக் கிளிகளின் மொழியும், அவரது பேரக்குழந்தைகளின் பேச்சும் ஒன்றே. மிக இனிமைதான், ஆனால் புரியாது!முதலாவது குழந்தை பிறந்ததும் மகனும் மருமகளும் செய்துகொண்ட தீர்மானமே, இன்று அவர்களது குழந்தைகள் டெனிஸ் மொழியை மட்டும் பேசுவதற்குக் காரணம் என்பதை, வந்த சில நாட்களிலேயே தங்கராசர் உணர்ந்து கொண்டார்.

தமிழர்கள் மிகக் குறைவாக வாழ்கின்ற ஒரு பட்டணத்தையே அவர்கள் வசிப்பதற்குத் தேர்ந்தெடுத்திருந்தனர். தமது பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே முழுமையான டெனிஸ் சூழலில் வளர்ந்தாற்றான், அவர்களால் எதிர்காலத்தில் இங்குள்ள வாய்ப்புக்களை டெனிஸ் மக்களுடன் சமமாகவும், முழுமையாகவும் பயன்படுத்த முடியுமென நம்பியமையே அதற்குக் காரணமாகவிருந்தது. இந்த நம்பிக்கை சரியா, பிழையா என்பது சாதாரண விவசாயியான தங்கராசருக்குத் தெரியவில்லை.

சுற்றுப்புறத்தில் தமிழரே இல்லாத காரணத்தினாலும், ஆங்கிலமொழிப் பரிச்சயம் சொற்பமும்  இல்லாத படியினாலும், அவர் இடைசுகம் வெளியே உலவப்போனாலும், அவரால் எவருடனும் பேசவோ, பழகவோ முடியவில்லை. காலை ஏழு மணிக்கு வெறுமையாகிப் போகும் வீடு, மாலை ஆறு மணிக்குத்தான் மறுபடி உயிர்க்கும். அதனால் தங்கராசருக்குத் தனிமை பழகிப் போயிற்று. நாளடைவில் அதுவே அவருக்குப் பிடித்தமாயும் போயிற்று.

தனிமை பிய்த்துத் தின்னும் அந்தப் பகற் பொழுதுகளில், அவர் கீழே வந்து, வரவேற்பறையின் ஓரு பக்கத்தில் இருந்த கிளிக்கூண்டையே, அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார். கிளிநொச்சியில் இந்த மாதிரிக் கிளிகள் இல்லைத்தான். அவருக்குத் தெரிந்தவரை அங்கு எவர் வீட்டிலும் இல்லை. ஆங்கிலத்திலும் லவ்பேட்ஸ் என்பார்களாம். பேரப்பிள்ளைகள் உண்டுலேற் என்று சொல்வார்கள். பேரன் அவற்றுக்கு வைத்துள்ள பெயர்கள் அவருக்குத் தெரியும். காயாம்பூப்போன்று இளநீலக் கிளி ஆண். அதன் பெயர் லாஸ். கதலிவாழைக் குருத்து நிறத்தில் பச்சை கலந்த மஞ்சள் நிறமான கிளி பெண். பெயர் இஸபெல்லா. இரண்டுமே டெனிஸ் பெயர்கள்தானாம். ஆனால் அவையிரண்டும் பேசும் மொழி டெனிஸ் அல்ல என்பது தங்கராசருக்கு நிச்சயமாகத் தெரியும்.

எந்த நாய் எங்கு போனாலும், எந்த நாய் எந்த நாட்டில் குட்டி போட்டாலும், அவற்றின் தாய்மொழி எப்போதுமே நாய்மொழிதானே! எதற்காக இந்த மனித இனத்தில் மட்டும் இத்தனை வேறுபட்ட மொழிகள் எனத் தங்கராசரால் வியக்காமல் இருக்க முடியவில்லை. டென்மார்க் மைனாக்களும் கிளநொச்சி மைனாக்கள் போன்றே பாடுகின்றனவே! ஏன் காகங்கள்கூட இங்கும் காகா என்றுதானே கரைகின்றன! எனது பேரப்பிள்ளைகள் மட்டும் ஏன் இப்படித் தாய் மொழி பேசத் தெரியாமல்?.... அதுமட்டுமல்ல... பேரனுக்குப் பெயர் டனுஷன், பேத்தியின் பெயர் டனிஷா! தங்கராசர் தனக்கிசைவாக தனு, தனி என்று சொல்லிக் கொள்வார்.

அந்தக் காதற்கிளிகளை அவர் வைத்தகண் வாங்காது பார்த்தவாறிருந்தார். அவற்றின் மொழி புரியாவிடினும், அவற்றைப் பார்த்துக் கொண்டேயிருப்பதில் அவர் தன்னை மறக்கக் கூடியதாகவிருந்தது. அவை பெரும்பாலும் ஒன்றையொன்று அணைந்தபடி, கூண்டின் குறுக்காக இருந்த கிடைக்கம்பியில் உட்கார்ந்திருக்கும். அவை கொஞ்சிக் கொள்ளும்போது ஒன்றையொன்று உண்ண முயற்சிப்பதுபோல அவருக்குத் தோன்றும். லாஸ், அதுதான் அந்த ஆண்கிளி, கூண்டினுள் தொங்கவிடப்பட்டிருந்த சின்னஞ்சிறு மணியின் நாக்கைத் தன் அலகால் மெல்லத் தட்டிவிடும். அதிலிருந்து எழும் ஒலி தங்கராசருக்குக் கேட்காவிடினும், இஸபெல்லா தனது அழகிய சிறு தலையை நளினமாகச் சாய்த்து, விழிகளைப் பாதிமூடி இரசிக்கும்போது, அவ்வொலி மிக இனிமையாகத்தான் இருக்கவேண்டும் என நினைத்துக் கொள்வார். இப்படி அன்னியோன்னியமாக, பாசமாக இருக்கும் அவை, இருந்தாற்போல் காச்சுமூச்செனக் கத்திக்கொண்டு, நாலுபுறமும் சிறகடித்துப் பறக்க முடியாத அந்தச் சிறிய கூண்டுக்குள், பறக்க முயன்று, ஒன்றிலொன்றி மோதியும், கம்பிகளில் அடிபட்டும் அவஸ்தைப்படும்போது தங்கராசர் தவித்துப் போவார்.

பாதுகாப்பான அழகிய கூண்டு, வண்ணக் கிண்ணத்தில் பலவகைத் தானியங்கள், தாகத்துக்குத் தண்ணீர், இசை கேட்க மணி, இவையெல்லாம் இருக்க பின்பு ஏன்தான் இந்தக் கிளிகள் பறந்தடிக்கின்றன? குடும்பச் சண்டையா? எனக் கலவரப்பட்டவராக தங்கராசர் இருக்கையைவிட்டு எழுந்து கூண்டருகில் செல்வார். அவரை அருகில் கண்டதுமே, கிளிகள் அவரிடமிருந்து எவ்வளவு தூரத்திற்குத் தம்மால் விலகமுடியுமோ, அவ்வளவுக்குக் கூண்டின் ஒரு பக்கத்தில் முடங்கிக் கொள்ளும். லாஸ் சிலசமயம் இவருடைய பக்கமே திரும்ப விரும்பாது தலையைச் செட்டைக்குள் புதைத்துக் கொள்ளும். அப்போதெல்லாம் தனுவையும், தனியையும், தன்னையும் அவரால் நினைக்காமல் இருக்க முடிவதில்லை

லாஸையும், இஸபெல்லாவையும் தங்கராசர் தன்னுடைய அறைக்குக் கொண்டுவந்து அங்கிருந்த சிறிய மேசைமீது வைத்ததுää தனது படுக்கையில் படுத்திருந்தவாறே அவற்றைப் பார்த்திருக்கத்தான்.

இப்போதெல்லாம் பெரும்பாலும், தனது இந்தச் சிறு அறையிலேயே தரித்திருப்பதுதான் தங்கராசருக்குப் பழகிப்போன சுகமாக ஆகிவிட்டிருந்தது. கனதியான மரச்சட்டமிட்ட ஒரு மெத்தைக் கட்டில். அதன் எதிர்ச் சுவரோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமாரி.

வீட்டின் சாய்வான கூரையிலே வெட்டிப் பதித்ததுபோல ஒரு நீள்சதுர, கண்ணாடிச் சாய்சன்னல். அதன் கீழ் ஒரு சிறிய மேசையும் கதிரையும். இவற்றைத் தவிர அந்தச் சிறிய அறையில் குறிப்பிடக்கூடிய வேறு பொருட்கள் எதுவுமில்லை.

அந்தச் சின்ன, கம்பியில்லாத சன்னல்தான் தங்கராசருக்குத் தன் பார்வையையும், எண்ணங்களையும் வெளிச்செலுத்துவதற்கு ஒரு வாயிலாக இருந்தது. அது சாய்வாக இருந்ததனால் எதிர்ச்சாரியில் உள்ள வீடுகளின் கூரைகள்கூட அதனூடாகத் தெரியாது. கதிரைமீது ஏறிநின்றால் மட்டுமே அவற்றின் மேற்பகுதி கண்ணுக்குத் தெரியும்.

ஆனால், எப்போதுமே ஆகாயம் தெரியும். நித்திரையில்லாமல் தவிக்கின்ற நீண்ட இரவுகளில், கிளிநொச்சி வயலும், அதன் காவற்குடிலும் தெரியும். மனைவி பாக்கியத்தையும் அவர் அந்தச் சின்ன ஆகாயத் துண்டில் அந்த நேரங்களில் தேடுவதுண்டு. அவளைக் காண முடிவதில்லை. ஆகாயத்துக்கும் அப்பால் போய்விட்டவள் எப்படி இங்கு வருவாள்.... அதுவும் நான் டென்மார்க்குக்கு வந்துவிட்டது அவளுக்குத் தெரியுமோ என்னவோ என எண்ணியவாறே படுத்திருப்பார்.

இப்போதும், படுக்கையில் வசதியாகப் படுத்துக்கொண்டு, கைகளைத் தலைக்குப் பின்னால் மடித்து வைத்தவாறே அக் கிளிகளையும், சாய்சன்னலூடாகத் தெரிந்த வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போதுதான், அந்தச் சன்னலின் வெளிவிளிம்பில் இரண்டு கரிக்குருவிகள் பறந்துவந்து அமர்ந்தன. அவர் டென்மார்க் கரிக்குருவிகளை ஒருநாளும் இத்தனை அண்மையில் கண்டதில்லை. அவற்றின் இறகுகள் படுகறுப்பு என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால் இப்போது, காலை வெய்யிலில் அவற்றின் முதுகின்மீதும், வாலின்மீதும், மயிலிறகில் காணப்படும் கருநீலமும், கரும்பச்சையும் பளிச்சிடுவதைக் கண்டு தங்கராசர் குழந்தைபோலச் சிரித்துக்கொண்டார். உள்ளம் முழுவதுமே சந்தோஷத்தினால் நிறைந்திருப்பதை உணர்ந்தார். பாக்கியத்தின் மறைவுக்குப் பிறகு இன்றுதான் அவர் மறுபடியும அப்படியொரு மனநிலையை அனுபவித்தார்.

அந்த இன்பத்தில் அவர் தன்னை மறந்திருந்தபோது, அந்தக் கரிக்குருவிகள் இரண்டும் ஜிவ்வென்று மேலெழுந்து, வானில் வட்டமிட்டு, மீண்டும் தாழப்பறந்து வந்து, சாய்சன்னல் விளிம்பில் உட்கார்ந்து சிறகுகளைக் கோதிவிட்டுக் கொண்டன.

எத்தனை சந்தோஷமாக அப் பறவைகள் இரண்டும் பறந்து சுகிக்கின்றன! சிறகுகள் இருப்பதே பறப்பதற்கல்லவா! விரும்பும் திசையெல்லாம் விண்ணென்று எழுந்து பறந்து மகிழமுடியாவிட்டால் பின் என்ன மண்ணாங்கட்டிக்கு வாழ்க்கை! எனச் சிந்தித்த தங்கராசரின் பார்வை, கூண்டுக் கிளிகளில் பதிந்தது.

  மறுகணம், அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதை உடனே செயலாக்க வேண்டுமென்ற ஒரு உத்வேகமும் கூடவே எழ, ஒரு குறும்புச் சிரிப்புடன் படுக்கையிலிருந்து எழுந்தார் தங்கராசர். துடிப்பு மிக்கவராய் கதிரையில் ஏறி நின்று முதலில் சாய்சன்னல் கதவின் கொழுக்கிகளைக் கழற்றி, அதனை முடியுமான அளவிற்கு உயர்த்தி வைத்தார். பின் கீழே இறங்கி, கிளிக்கூண்டின் கதவைத் திறந்து வைத்தார்.

கூண்டில் அவரது கை பட்டதுமே கிளிகளிரண்டும் கத்திச் சிறகடித்து, ஏதேவொரு மூலையில் ஒளிந்துகொள்ள முயற்சித்தன. கையைக் கூண்டுக்குள்ளே நுழைத்து முதலில் இஸபெல்லாவைப் பிடித்து, சன்னலருகே கொண்டுபோய்க் கைப்பிடியைத் தளர்த்தினார் தங்கராசர். சடசடவெனச் சிறகடித்த இஸபெல்லா சன்னலுக்கு வெளியே பறக்கவில்லை! அது உள்ளே பறந்து அறையினுள் இருந்த அலுமாரியின் மேல் அமர்ந்துகொண்டு மலங்க மலங்க விழித்தது. இதற்குள் லாஸ் உயிரே போவதுபோல் கீச்சிட்டவாறே கூண்டுக்குள் சூறாவளிபோல் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. மீண்டும் கையைக் கூண்டினுள் நுழைத்து ஒருவாறாக அதைத் தங்கராசர் பிடித்தபோது, அது ஆவேசங்கொண்டு அவருடைய கையை மூர்க்கமாகக் கொத்தியது. அதைப் பொருட்படுத்தாது, லாஸை வெளியே எடுத்து, கதிரையில் ஏறி நின்றுகொண்டு, சன்னலின் வெளியே கையைப் புகுத்தி அதை விடுவித்தார். அவருடைய கையைவிட்டு விசுக்கெனப் பறந்த லாஸ், கண்மூடி முழிப்பதற்குள் மறுபடியும் சன்னலினூடாக அறையினுள் நுழைந்துவிட்டது.

இதைக் கண்ட தங்கராசர் அதிசயித்துப்போனார். வெளியில் விட்ட லாஸ் ஏன் உள்ளே வந்தது? .... ஓகோ! ... அதன் துணை இஸபெல்லா இப்போது அறையினுள் அல்லவா இருக்கின்றது! அதைவிட்டுப் போவதற்கு அதற்கென்ன விசரா என எண்ணிக்கொண்டு கீழே இறங்கினார்  தங்கராசர்.

இறங்கி நின்று பார்த்தபோது, அலுமாரியின்மேல் அடைக்கலந் தேடிக்கொண்ட கிளிகள் அவருக்குத் தெரியவில்லை. அவை அவலமாகக் கத்திக் கீச்சிடுவது மாத்திரமே கேட்டது.

எப்படியாவது அவையிரண்டையும் அங்கிருந்து விரட்டி, சன்னலினூடக வெளியேற்றிவிட வேண்டுமென்ற ஒரு அவசரத்துடனும், தவிப்புடனும் தங்கராசர் கதிரைமீது ஏறி அலுமாரிமேல் பார்வையைச் செலுத்தினார்.

லாசும், இஸபெல்லாவும் அவருடைய வழுக்கைத் தலையைக் கண்டதுமே பறந்தடித்துக் கொண்டு சுவருடன் ஒதுங்கி, தங்கள் கிளிமொழியில் அவரைத் தாறுமாறாகத் திட்டின. கதிரையை அலுமாரிக்கருகில் இழுத்து நிறுத்தி அதில் ஏறிநின்று, தன் கரங்கள் இரண்டையும் மேலே உயர்த்திக் அவற்றைப் பிடிக்க முயனறபோதுதான் அவர் சமநிலை குலைந்து சரிய நேரிட்டது. கதிரையின் விளிம்பிலிருந்து அவரது இடது பாதம் சறுக்கியது. திடீரென நிகழ்ந்த அந்தச் சறுக்கல் காரணமாக அவருடைய கைகள் பிடிமானம் தேடிக் காற்றைத் துழாவின. இந்த முயற்சியில் உடல் ஒரு பக்கமாக ஒருக்களித்துச் சரிய, அவர் கீழேயிருந்த கட்டிற் சட்டத்தில் பிடரி பலமாக மோதும் வகையில் விழுந்துவிட்டார்.

 தடால் எனக் கும்பத்தில் பட்ட அடியில் துடித்துப்போன தங்கராசர் கட்டிலின் பக்கத்தில் தரையில் துவண்டுபோய்க் கிடந்தார்.

அப்போது அந்தச் சின்ன சன்னலினூடாகத் தெரிந்த நிர்மலமான நீலவானத் துண்டில், மனைவி பாக்கியத்தின் சிரித்த முகம் தெரிவதுபோலவும், அவள் 'வாருங்கோ வீட்டை போவம்!" என அன்புடன் அழைப்பது போன்றும், தங்கராசருக்குத் தெரிந்தது.

எல்லாச் சந்தடியும் அடங்கிய பின்னர், லாசும் இஸபெல்லாவும் அலுமாரியின் மேலிருந்து தாமாகக் கீழே வந்து, தமது கூண்டுக்குள் நுழைந்து, அமைதியாய் அமர்ந்து கொண்டன.

அக் கூண்டின் கதவும், சாய்சன்னலும் இப்போதும் திறந்தே கிடந்தன.

நன்றி - பாலம் சஞ்சிகை, பெப்ரவரி 1998

 


     இதுவரை:  19976864 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3301 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com