அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அழுகைக் குரலாளன் - பொப்மார்லி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Tuesday, 08 March 2005
பக்கம் 2 of 5

2.

பொப்மார்லிஐரோப்பிய தொலைக்காட்சி ஒளிபரப்பின் இசை அலைவரிசைகளில் தேர்வு பெறும் முதல பத்து பாடல்களில் படதடவைகள் பொப்மார்லியும் இருக்கின்றான். மெத்ரோவினுள், மெத்ரோ நடைபாதைகளுள், பலர்கூடும் பரந்த வெளிகளில், துள்ளும் இளைஞர்களின் சேர்க்கையில், காணும் இடந்தோறும் அவனைத்தரிசிக்கின்றேன். அவனது வாழ்க்கை விவரணத்தொகுப்பான Time Will Tell படத்தை திரையில் பார்க்கையில் பல ஐன்னல்கள் என்னுள் திறந்து மூடின. இசைக்காற்றில் அறைந்து அதிர்ந்தன. கண்களை மூடிய மோனநிலையிலேயே பெரும்பாலும் அவன் பாடுகின்றான். அளவுக்கதிமாக அலட்டிக்கொள்ளாத உடல் அசைவுகள், துள்ளல்கள். இசைச் சேர்க்கைகளில் பாடல்கள்தான் எப்போதும் முன்மொழிவுகளாகின்றன. றேகே இசையின் சிறப்பம்சமே பாடல்கள்தான். றேகே இசையின் அரசன் என்றே பொப்மார்லி வர்ணிக்கப்படுகின்றான். குறியீடாக கொள்ளப்படுகின்றான். அவன் பாடகன் மட்டுமல்ல, பாடலாசிரியன், மெட்டமைப்பவன், இசைக்கருவிகளை கையாளபவன், இசைஞன், கலைஞன்.

கரீபியன் கடலில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒன்றான யமேக்கா தீவுதான் றேகே இசையின் உற்பத்தி இடமும், றேகே இசையரசன் பொப்மார்லியின் பிறந்த இடமுமாகும். வடஅமெரிக்காவிற்கும் தென்அமெரிக்காவிற்கும் இடையே அத்திலாந்திக்மாகடல் உட்குழிந்த பகுதியே கரீபியன் கடல். இக்கடலிடை எழும் புயற்காற்றுத்தான் ஹரிகேன் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. இப்புயற்காற்றில் அணையாமல் இருக்கக வடிவமைத்து தயாரிக்கப்பட்டதுதான் ஹரிகேன் லாம்ப்.  அதுவே நம்மிடை அரிக்கன் லாம்பென புழக்கத்தில் உள்ளது. இக்கடலில் காணப்படும் தீவுக்கூட்டங்களே மேற்கு இந்தியத் தீவுகளாகும். இத்தீவுகளில் ஒன்றில்தான் இநதியாவுக்க கடல்வழி தேடிப் புறப்பட்ட கிறிஸ்தோபர் கொலம்பஸ் வந்திறங்கினான். அத்தீவுக் கூட்டத்திடை அளவில் மூன்றாவது பெரிய தீவு யமேக்கா. இதன் பூர்வீக் மக்கள் அரவாக்கள். அமெரிக்க பூர்வீக மக்களினங்களில் ஒரு வகையினர். 1494ல் கொலம்பஸ் இத்தீவுக் கூட்டஙகளிடை வந்திறங்கியதன் பின் ஸ்பெயின் நாட்டின் கொலணியான யமேக்கா,1855ம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் கைக்கு மாறியது. கரும்பினை பெருந்தோட்ட பயிர்ச்செய்கையாகவும் தொழிற்துறை உற்பத்தியாகவும் மேற்கெர்ணட பிரித்தானியா அவற்றில் உழைக்க ஆபிரிக்க மக்களை, கறுப்பர்களை, அடிமைகளாகவும் கூலிகளாகவும் பிடித்து வந்தனர். இந்த அடிமைகளின் சோகம், கோபம், ஏக்கம்... இவைதான் றேகே இசை.

'NO WOMAN NO CRY' 'வேண்டாம் பெண்களே அழவேண்டாம்...' எனும் பொப்மார்லியின் புகழ்பெற்ற பாடலினை கேட்கும் போதெல்லாம் என் காதில் பாரதியின் குரல்தான்.

'விம்மிவிம்மி விம்மி விம்மியழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல்
மீட்டும் உரையாயோ?அவர்
விம்மியழவும் திறங்கெட்டு போயினர்..'
                        (கரும்புத்தோட்டத்திலே)


எனும் சோகச் சொற்களால் நெஞ்சம் துன்புறுமே, எழுத்துதரும் துன்பமே தாங்க முடியாதபோது நரம்பு சுண்டும் இசையில் குழைந்துவரும் குரலில் 'NO WOMAN NO CRY' அப்பப்பா... ஆம் அவன் பாடல்கள் துயரப்பட்டவர்களுக்கானது.

யமேக்கா தீவின் தலைநகரான கிங்ஸ்ரனில் தெருமுனைப்பாடகனாக பாடித்திரிந்த ஏழை பொப்மார்லி, தன் இசை அறிவினால், பாட்டுக்கட்டும் ஆற்றலினால், அதன் வீச்சினால் றேகே இசையின் உற்பத்தி இடமாய் யமேக்காவை குறிக்கச் செய்ததுடன், உலகின் கவனத்தையும் யமேக்கா மீது குவியச் செய்தான் பெருமை சேர்த்தான் என்கிறது யமேக்காவின் வரலாற்றுக் குறிப்பு.

06-02-1945ம் ஆண்டில் பிறந்த பொப்மார்லி பாடல் எழுதவும், பாடவும் வல்லமை கொண்டிருந்த தன் தாயிடமிருந்தே இசையை கற்றுக் கொண்டதாகவும், கிட்டார் இசைக்கருவியை தானே பயின்றதாகவும், புகழ்பெற்ற பின்னர் பத்திரிகையாளரின் கேள்வியொன்றின் போது பதிலளித்துள்ளான். பொப்மார்லி தன் இளவயது வாழ்க்கைபற்றி  'CONCRETE JUNGLE' என்னும் பாடலில் இப்படிப் பாடுகின்றான்....

இன்றுள்ளதைப்போல் எனது நாட்களில்
சூரியன் எப்பொதும் ஒளிர்ந்ததில்லை.
உயரத்தே மஞ்சள் நிலா
விளையாட வெளிவந்ததில்லை
நான் சொல்கிறேன்
என் வாழ்வின் ஒளியை
இருள் மூடி இருந்தது.
எனது நாட்கள் இரவினுள்தான்
நகர்ந்தது.
அன்பை அமைதியை
எங்கே நான்
கண்டடையலாம்..
எவரும் எனக்கு
சொல்லவில்லை
சுற்றிலும் எங்கேனும்
இருக்ககூடுமென
கொங்கிறீற் வனத்தைக் காட்டினர்..


இப்படித் தன்வாழ்க்கையை, தன்சுற்றத்தை, தன்கவலையையே எப்பொழுதும் தன் பாடலில் பதிவுசெய்தான். தன் நண்பர்களுடன் தொடங்கிய இசைக்குழுவிற்கு 'WAILERS' என்றே பெயரிட்டான். இந்தச் சொல்லை விவிலியத்தில் (Bible) இருந்தே தான் பெற்றதாய் கூறுகிறான். 'WAIL' என்பது அழுகை, புலம்பல் என்பதைக் குறிக்கும். தனது இசைக்குழுவிற்கு 'அழுகைக் குரலாளர்' எனப்பெயரிட்டதன் பொருத்தத்தை அவனது பாடல்களை கேட்பவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஒருமுறை அவன் கூறினான் 'நீதிக்கும் நியாயத்திற்குமாய் எவனொருவன் குரலெழுப்புகின்றானோ அவன் 'WAILERS' என்றான். அவனது பாடல்களில் யமேக்கா அடிமை மக்களின் துயரம் வெளிப்பட்ட போதும் அவை உலகெங்குமான துயரங்களுடன் அடையாளங்காணப்பட்டதும், ஒன்றித்ததும் தற்செயலானதல்ல. ஒரு எழுத்தாளர் அவனை 'மூன்றாம் உலகின் பாடல் குரலோன்' எனச் சிறப்பித்துள்ளார்.




     இதுவரை:  24776566 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2611 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com