அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 17 May 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 09 -10   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: Aravinthan  
Friday, 01 April 2005

9.

வவுனியா மாவட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்திருந்த ஒதியமலை வைத்தியர் சேனாதியாருக்குக் கொக்கிளாய், கொக்குத்தொடுவாயிலிருந்து முறுகண்டியீறாகப் பலபேரைத் தெரியும்.

ஏறக்குறையப் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் தண்ணீருற்றில் வைத்தியம் செய்வதற்காக சேனாதியார் சென்றிருந்தபோதுதான், உமாபதியரின் மகள் முத்தம்மா கிணற்றிலே விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்திருந்தது. அந்த ஈமச் சடங்குகளிலே கலந்து கொண்டபோது சேனாதியார் முத்தம்மாவின் கதையைக் கேள்விப்பட்டார்.

முத்தம்மாவுக்குத் தாய் இல்லை. உமாபதியர்தான் அவளுக்குத் தாயாகவும், தந்தையாகவும் இருந்து வளர்த்து வந்தார். உமாபதியார் வேலைக்குப் போகும் நேரமெல்லாம் முத்தம்மா வீட்டில் தனியாகத்தான் இருப்பாள். அந்தத் தனிமையையும், அவளின் பருவத்தையும் பயன்படுத்திக்கொண்டு அவளைக் கெடுத்துவிட்டான் ஒருவன். மலேரியாத் தடுப்புக்கு நுளம்பெண்ணெய் விசிறவரும் ஆட்களை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தன் அவன். அவனுடைய அழகான தோற்றமும், கம்பீர தோரணையும், ஆசை வார்த்தைகளும் கிராமத்துப் பெண்ணான முத்தம்மாவை மிகவும் கவர்ந்தன. அவனோ அவளுடைய பருவத்தைப் பதம் பார்த்துவிட்டு, விஷயம் முற்றியதும் தலைமறைந்துவிட்டான். ஆனால் அவன் முத்தம்மாவின் வயிற்றில் விட்டுச்சென்ற வித்து முளைக்க ஆரம்பித்தது. நடந்ததை அறிந்கொண்ட உமாபதியார் கொதித்தார்,குமுறினார், மகளை நையப்புடைத்தார். ஈற்றில் அவனைத் தேடிப் பல இடங்களுக்கும் அலைந்து திரிந்தார். ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த கல்வியறிவில்லாத உமாபதியாரால் என்னத்தைச் செய்துவிட முடியும்? மனம் சோர்ந்துபோய்த் திரும்பி வந்தார்.

முத்தம்மா அவமானத்தால் குன்றிப் போனாள். அவளையே உரித்துப் படைத்துக்கொண்டு தங்க விக்கிரகம் போன்றதொரு பெண் அவளக்குப் பிறந்தாள். முத்தம்மா தன்னுடைய தாயாரின் பெயரையே அந்தக் குழந்தைக்கு வைக்க வேண்டுமென விரும்பியபோது, உமாபதியார்தான் பதிவுகாரரிடம் சென்று பதஞ்சலி என்ற பெயரைப் பதிந்தார்.

பதஞ்சலி வளர்ந்தாள். அவளடைய தளர்நடை அழகிலும், மழலை மொழியிலும் மனதைப் பறிகொடுத்து நடந்தவற்றை மறக்கப் பழகிக் கொண்டார் உமாபதியார். ஆனால் முத்தம்மாவுக்கு, தன் வாழ்வே அஸ்தமித்துவிட்டது போன்றதொரு உணர்வு.

காலத்தைவிட இவ்வகைப் புண்களை ஆற்றுவதற்குச் சிறந்த மருந்து எதுவுமேயில்லை. சிறிது சிறிதாக மனப்புண் ஆறிக்கொண்டுவர, முத்தம்மாவிடம் இளவயதுக்கேயுரிய வாளிப்புத் திரும்பிவிட்டது. நல்ல அழகியான அவள், சீவிமுடித்துப் பொட்டிட்டுப் புனிதமாக இருந்தது இனத்தவர்க்கும்,அயலவர்க்கும் பொறுக்கவில்லை. ஒருத்தி வாழ்வில் கெடவேண்டி நேரிட்டுவிட்டால், சதா தன் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு, மூலைக்குள் அடைந்து கிடந்து வேதனைப்பட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் முத்தம்மாவோ காலப்போக்கில் தானடைந்த வேதனையை மறந்து மீண்டும் சிரிப்பதற்கு முயன்றபோது அயலவர்கள் தாறுமாறாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஏற்கெனவே கெடுக்கப்பட்ட ஒரு இளம்பெண்அதுவும் தந்தையைத் தவிர வேறு நாதியற்றவள், சிரித்துச் சந்தோஷமாக இருக்க முற்பட்டபோது, மழைக் காளான்கள் போன்று பல கதைகள் முளைத்தெழுந்து நாற்றம் பரப்பின.

முத்தம்மா இந்த விஷயங்கள் தெரியாமல், குழந்தையையும் தூக்கிக்கொண்டு, குமாரபுரம் சித்திர வேலாயுதர் கோவிற் திருவிழாவுக்குப் போய்விட்டாள். இளமங்கையான அவள், திருவிழாவுக்குப் போக ஆசைப்பட்டது குற்றமா? அல்லது அங்கு போகையில் தன்னை ஏதோ கொஞ்சமாவது அலங்கரித்துக் கொண்டது குற்றமா? ஊர்ப்பெண்கள் வெகுண்டு எழுந்துவிட்டார்கள், ஏதோ தங்களுடைய கற்பே பறிபோனதுபோல்! திருவிழாக் கும்பலில் பெண்கள் மத்தியில் குழந்தைகளோடு தானும் ஒரு குழந்தையாய் இருந்துகொண்டு, வாணவேடிக்கையைப் பார்த்துத் தன் முத்துப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டாள் முத்தம்மா. அவ்வளவுதான்!

ஏற்கெனவே மனம் புழுங்கிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்துப் பெண்கள், 'வம்பிலை ஒண்டு பெத்தது காணாமல், மற்றதுக்கும் ஆள்பிடிக்க அலங்காரி வெளிக்கிட்டிட்டா!" என்று முத்தம்மாவைத் தமது நெருப்புக் கொள்ளிகள் போன்ற நாக்குகளால் சுட்டுத் தீய்த்துவிட்டார்கள். அப் பெண்களின் சொல்லம்புகளின் கொடுமையைத் தாங்கமுடியாது, கண்ணீரும் கம்பலையுமாகத் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டவளை மறுநாள் காலையில் பிணமாகத்தான் கண்டார்கள் அண்டை அயலிலுள்ள பத்தினிப் பெண்டிர்கள்.

அவளுடைய சாவு உமாபதியாரின் நெஞ்சிலே பெரியதொரு இடியாக விழுந்துவிட்டது. அந்தப் பேரிடியைத் தாங்க இயலாது அவரும் அப்பொழுதே போய்விட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். ஆனால் முத்தம்மா விட்டுச்சென்ற அந்த இளங்குருத்து, 'அப்பு! எணையப்பு! அம்மாவை எங்கை கொண்டு போகினம்?" என்று கல்லுங்கரையக் கேட்டபோதுதான் அவர், தான் வாழவேண்டிய அவசியத்தை உணர்ந்தார். வாழ்வில் எத்தனையோ அடிகளைத் தாங்கிக்கொண்ட அவர்ää இதையும் மௌனமாகவே தாங்கிக்கொண்டார்.

நடுச்சாமத்துக்கு மேலாகிவிட்ட இந்த நேரத்தில் வைத்தியம் சேனாதியார், உமாபதியின் பேத்தி பதஞ்சலியின் நிலை என்னவாகும் என்று யோசித்துக்கொண்டே மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார்.


10.

'பதஞ்சலி இனி என்ன செய்யப்போகின்றாள்?" என்ற வினா இன்னொரு நெஞ்சையும் குடைந்து கொண்டிருந்தது. ஒதியமலையிலிருந்து தண்ணிமுறிப்பை நோக்கிச் செல்லும் காட்டுப் பாதையில் நடந்துகொண்டிருந்த நெஞ்சுதான் அது!

பதஞ்சலி இனி என்ன செய்ப் போகிறாள்? அப்பு! அப்பு! என்று சதா வாஞ்சையுடன் சுற்றிவரும் அவள் இனி யாரைத் தன் வாய்நிறைய அப்பு என்று அழைக்கப் போகின்றாள்? என்று அவனுடைய நெஞ்சு வேதனைப்படவே செய்தது. ஆனாலும் அந்த இருளோடு இருளாகக் கலந்து தண்ணிமுறிப்பை நோக்கி விரைந்துகொண்டிருந்த அவனுடைய முகத்தில்மட்டும் எந்த வேதனையும் தெரியவில்லை. அவனுக்குத் தன் வேதனையைக் காட்டிப் பழக்கமேயில்லை. நிலம் தெரியாத அந்த வேளையில் அவன் உமாபதியரின் குடிசையை நெருங்கவும், பதஞ்சலியின் பரிதாபமான ஓலம் உயர்ந்து ஒலிக்கவும் சரியாக இருந்தது.

'என்னை விட்டிட்டுப் போட்டியே என்ரை அப்பு!" என்று அழுத அவளுடைய கதறல் அவனுடைய நெஞ்சை உருக்கியது. படலையைத் திறந்துகொண்டு அவன் உள்ளே போனதுதான் தாமதம், பாலியாரின் அணைப்பில் கதறியழுது கொண்டிருந்த பதஞ்சலி, பாய்ந்து சென்று கதிராமனுடைய காலில் விழுந்து கோவென்று கதறினாள். கதிராமன்  à®¤à®¿à®£à¯à®£à¯ˆà®¯à®¿à®²à¯ வளர்த்தியிருந்த உமாபதியாரின் சடலத்தையே அசையாது நோக்கினான். அங்கு வந்த நாள்முதல் அவனுடன் பற்பல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்ட அந்த உழைப்பாளியின் உடல் ஓய்ந்துபோய்க் கிடந்தது.

அழுதழுது குரல் கம்மிப் போயிருந்த பதஞ்சலி, மேலும் அழமுடியாமல் சோர்ந்து போனாள். கலைந்த கூந்தலும், சிந்திய மூக்குமாக அவளைப் பார்க்கையில் பாலியாருக்கு வயிறு பற்றியெரிந்தது. 'இனி என்ன மோனை செய்யிறது! நாங்கள் இருக்கிறந்தானே, நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை!" என்று அவள், அடிக்கடி பதஞ்சலியை ஆதரவோடு தேற்றிக்கொண்டாள்.

பிற்பகல் இரண்டு மணிக்கும் மேலாயிற்று. குமுளமுனைக்குச் சென்ற கதிராமனும் பொருட்களுடன் திரும்பிவிட்டான். இழவுச் செய்தி கூறப்போயிருந்த மணியனும் வந்துவிட்டான். 'என்ன உமாபதியின்ரை ஆக்களுக்கெல்லாம் அறிவிச்சியே?" என்று மலையர் கேட்டபோது  'ஓமப்பு! ஆனால் அவையள் வாற நோக்கத்தைக் காணேல்லை!" என்றான் மணியன்.

'ம்ம்... சரி, சரி... அப்ப பிறகேன் நாங்கள் வைச்சுப் பாத்துக் கொண்டிருப்பான்.... பொழுது படக்கிடையிலை எல்லாத்தையும் முடிச்சுப் போடுவம்!" என்று கூறியபடியே அங்கு கூடியிருந்தவர்களைப் பார்த்தார் மலையர். அவருடைய முடிவைக் கரடியரும் அங்கு கூடியிருந்த மற்றவர்களும் ஆமோதிக்கவே விஷயங்கள் துரிதமாக நிறைவேறின.

பிரேதத்தைத் தூக்கிப் பாடையில் வைக்கும் வேளையில்தான் தண்ணீருற்றிலிருந்து இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் உமாபதியரின் ஒன்றுவிட்ட சகோதரர். மற்றவர் அடிக்கடி அங்கு வந்துபோகும் மம்மதுக் காக்கா.

தகனக் கிரியைகளை முடித்துக்கொண்டு அவர்கள் திரும்பி வருகையில் பொழுது சாய்ந்து விட்டது. இதற்குள் பாலியார் பதஞ்சலியை வாய்க்காலில் முழுகச் செய்து,  à®‰à®Ÿà¯ˆ மாற்றிக்கொள்ளச் சொல்லிவிட்டு, அன்றைய இரவுக்கான உணவைத் தயாரிப்பதற்குத் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். கதிராமனுடைய தம்பி ராசு குடிசைக்குள் பதஞ்சலியுடன் இருந்தான். அவனுடைய சின்ன உள்ளத்தில், தான் அந்நேரம் பதஞ்சலியுடன் இருக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டதால் பாயில் அவளுடன் ஒண்டிக் கொண்டிருந்தான். எல்லையற்ற துன்பம் நேர்கையில் யாருடனாவது அணைந்து கொண்டிருப்பது உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் ஆறுதலாக இருக்கும் என்பதைப்போல், பதஞ்சலியும் ராசுவை அணைத்தவாறே அமர்ந்திருந்தாள். அவளது நினைவுகள் ஒவ்வொன்றும் உமாபதியையே சுற்றி வந்தன. அவர் உபயோகித்த பொருட்கள், அவர் அவளுக்கு ஆசையுடன் வாங்கிக் கொடுத்தவைகள், என்பவற்றைப் பார்க்கையில் மீண்டும் அவளுடைய விழிகள் கண்ணீரினால் நிறைந்தன.

 


     இதுவரை:  24901731 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2494 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com