அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 30 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 12
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 12   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Sunday, 17 April 2005

12.

பொழுது விடிவதற்கு முன்பாகவே பாலியார் எழுந்து பதஞ்சலியையும் எழுப்பிவிட்டுத் தன் வீட்டுக் காரியங்களைக் கவனிக்கப் புறப்பட்டு விட்டாள். அந்த வைகறைப் பொழுதிலேயே கதிராமன் பல் துலக்கியவாறு வாய்க்கால் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தான். பாலியார் அவனைச் சமீபித்ததும் 'இஞ்சை நில்லணை ஒரு கதை' என்றவன் தொடர்ந்து 'பதஞ்சலியை சிவசம்பர் கூட்டிக்கொண்டுபோற எண்ணத்தைக் காணேல்லை. அப்பிடி அவர் கேட்டாலும் இவள் கூடிக்கொண்டு போவாள் எண்டு நான் நினைக்கேல்லை' என அமைதியாகக் கூறி நிறுத்தினான். பாலியாருக்குத் தன் மகனின் மனதில் உள்ளதும் அவன் என்ன சொல்லப் போகின்றான் என்பதும் நன்கு விளங்கின. இருப்பினும் அவள் எதுவும் பேசாது அவனுடைய முகத்தைப் பார்த்தாள். 'நீ என்ன நினைக்கிறாய்' எனக் கதிராமன் தாயைக் கேட்டபோது, 'கொப்பு என்ன சொல்லுறார் எண்டு தெரியாது மோனை! எதுக்கும் நான் அவருக்குச் சொல்லிப் பாக்கிறன்' என்று கூறிவிட்டு, அவள் தன்னுடைய அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். அவள் பதில் கூறிய தோரணையில் பதஞ்சலியைத் தங்கள் வீட்டுக்குக் கூட்டிவரத் தாய்க்கும் விருப்பமிருக்கிறது தெரிந்தது. ஆனால் மலையர்தான் இதையிட்டு என்ன சொல்வாரோ என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. 'முதலில் அம்மா கேக்கட்டும், பிறகு பாப்பம்!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் நெஞ்சில், ஒருவேளை பதஞ்சலி எல்லோருடைய வற்புறுத்தல்களுக்கும் இணங்கி, சிவசம்பருடன் இன்றே போய்விடுவாளோ என்று ஒரு இனம்புரியாத ஏக்கமும் பிறந்தது. ஆனால் கடந்த இரவு அவள் கூறிய வார்த்தைகளை மறுபடியும் நினைத்துப் பார்க்கையில், என்னதான் நடந்தாலும் அவள் தண்ணீருற்றுக்குப் போகவே மாட்டாள் என அவனுடைய மனம் ஆறுதல் பட்டுக்கொண்டது. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் இங்கு நடக்கும்போது நான் இங்கிருக்கக் கூடாது என நினைத்துக் கொண்டவனாய் அன்றைக்குக் காட்டுக்குச் செல்வதற்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டான்.

காலையில் பல அலுவல்களையும், ஓடியோடிச் செய்து கொண்டிருந்த பாலியாரின் நெஞ்சில், கதிராமன் கூறிய விஷயந்தான் மேலோங்கி நின்றது. நல்தொரு சமயமாகப் பார்த்துக் கணவனிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தவளுக்கு மலையரை எண்ணியதும் வயிற்றில் புளியைக் கரைத்தது. எந்த நேரம் எதைச் சொல்வார், எதைச் செய்வார் என்று அவரைப்பற்றி நிச்சயமாகக் கூறமுடியாது. இவ்வளவு காலத் தாம்பத்ய வாழ்க்கையிலும் அவளால் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் புரிந்துகொள்ளவும்  முயற்சிக்கவில்லை. கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதும், நாளாந்தக் கருமங்களில் ஈடுபடுவதுமாக இருந்த அவளுக்கு, தனக்கொரு மகளில்லை என்ற கவலையைத் தவிர வேறு பிரச்சனைகளே இருந்ததில்லை. பதஞ்சலி தண்ணிமுறிப்புக்கு வந்தபின் அதுவும் நீங்கிவிட்டிருந்தது. இப்போதுதான் அவளுக்கென்று ஒரு ஆசை பிறந்திருந்தது. ஆனால் தன் கணவன் என்ன சொல்வாரோ என உள்ளுரப் பயந்துகொண்டே இருந்தாள் பாலியார்.

வேiலைகளை முடித்துக்கொண்டு பதஞ்சலியின் வீட்டுக்குப் பாலியார் சென்றபோது, அங்கு சிவசம்பர், மம்மதுக் காக்கா, மலையர் முதலியோர் அமர்ந்திருக்க, பதஞ்சலி வீடுவாசலைப் பெருக்கிவிட்டு, அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டிருந்தாள். மனைவியைக் கண்ட மலையர், 'கெதியிலை பொட்டையை வெளிக்கிடச் சொல்லன்! சிவசம்புவோடை கூடிக்கொண்டு போகட்டும்!' என்று கூறிவிட்டு, சிவசம்பரைப் பார்த்து, 'என்ன? வண்டிலைப் பூட்டச் சொல்லட்டே?,' என்று கேட்டார்.

இதற்குள் குசினிக்குள்ளிருந்து வெளியே வந்த பதஞ்சலிää 'நான் ஒருதரோடும் போகேல்லையம்மா, இஞ்சை இந்த வளவிலைதான் இருக்கப் போறன்' எனக் கண்கள் கலங்கக் கூறினாள். 'நல்ல விளயாட்டு! ஒரு குமர் தனியச் சீவிக்கிறதெண்டால் முடிஞ்ச காரியமே? விசர்க் கதையை விட்டிட்டு வெளிக்கிடு புள்ளை!' என்று மலையர் கூறவும், பதஞ்சலி விக்கி விக்கி அழத்தொடங்கி விட்டாள். சிவசம்பரும் இதுதான் தருணமென, 'எனக்கு அப்பவே இவளைக் கூட்டிக்கொண்டு போக மனமில்லை. வரமாட்டன் எண்டு நாண்டுகொண்டு நிக்கிறவளை நான் என்னண்டு கூட்டிக்கொண்டு போறது? எல்லாம் உன்னாலை வந்த கரைச்சல்! வரமாட்டன் எண்ட என்னை இழுத்துக்கொண்டு வந்திட்டாய்!' என மம்மதுக் காக்காவைக் காரசாரமாக ஏசியவாறே சிவசம்பர் படலையைத் திறந்துகொண்டு குமுளமுனையை நோக்கி வேகமாக நடந்தார்.

மம்மதுக் காக்காவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மலையர்ää தெருவில் கோபமாகச் செல்லும் சிவசம்புவையும்ää குடிசைத் திண்ணையில் இருந்து அழும் பதஞ்சலியையும் பார்த்தார். பின் எழுந்து நின்றுகொண்டே தன் மனைவியைப் பார்த்துää 'நீதான் இந்தப் பொட்டைக்கு நல்ல புத்தியைச் சொல்லு! நாங்களெண்டாலும் இவளை நாளைக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தண்ணியூத்திலை விட்டிட்டு வருவம்' எனக் கூறிவிட்டு, 'நீயும் போய் சிவசம்பனுக்குச் சொல்லு. இரண்டொரு நாள் கழிச்சுக் கூட்டிக்கொண்டு வாறமெண்டு!' என மலையர் மம்மதுவுக்கு நிதானமாகக் கூறிவிட்டுத் தன் வளவை நோக்கி நடந்தார். மம்மது காக்காவும் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு குமுளமுனையை நோக்கிச் செல்லும் அந்தச் செம்மண் பாதையில் இறங்கினார்.

உமாபதி இறந்தபோது பதஞ்சலி அவரின் பிரிவைத் தாங்கமுடியாது குழறி அழுதாளேயொழியத் தன்னுடைய எதிர்காலம் என்ன? தான் இனி என்ன செய்யப் போகின்றேன்? என்பனவற்றையிட்டு அவள் அவ்வளவு ஆழமாகச் சிந்திக்கவில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை தற்போது உடனே பதில்காண வேண்டியதொரு வினாவாக இருக்கவே அவள் மனங் குழம்பிப் போனாள். அவளுக்குத் தன் இனத்தவர்களுடன் போய்த் தங்குவதை எண்ணிப் பார்க்கக்கூட வெறுப்பாக இருந்தது. இந்தச் சின்னக் குடிசையிலேயே தான் வாழ்ந்தால்தான் என்ன? பாலியாரின் துணை அவளுக்கு என்றும் இருக்குமல்லவா? என்றெல்லாம் குழந்தைத்தனமாக எண்ணினாள். மெல்ல மெல்ல அந்தக் குழந்தைத்தனமான நினைவே, ஆதாரம் எதுவுமில்லாமல் தத்தளித்த அவளுக்கு, ஆரம்பத்தில் ஒரு சிறிய பற்றுக்கோடாகிப் பின்னர் அதுவே அவளுடைய தீர்க்கமான முடிவாயும் போயிற்று.

பாலியாரின் நிலையோ பெரிய சங்கடத்துக்கு உள்ளாகிவிட்டது. பதஞ்சலியைத் தன் மருமகளாக்கித் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை அவளுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஆனால் இந்த ஆசை நிறைவேறுவதற்கு மலையரின் சம்மதம் கிடைக்குமோ என்பது பெரும் சந்தேகமாக இருந்தது. எனவே அவள் தன்னுடைய ஆசையை மனதுள் மூடிவைத்துக்கொண்டு, வயதான ஒரு தாய், இளம் பெண்ணொருத்திக்குச் சொல்லவேண்டிய புத்திமதிகளைப் பதஞ்சலிக்குக் கூறிக்கொண்டிருந்தாள். 'ஒரு குமர்ப்பெண்ää ஒருதற்றை துணையுமில்லாமல் தனிய இந்தக் காட்டுக்கை சீவிக்க முடியாதம்மா! நீ இப்போதைக்குக் கொஞ்ச நாளைக்கெண்டாலும் உன்ரை ஆக்களோடை இருக்கிறதுதான் மோனை நல்லது!' என அன்பொழுக அவள் சொன்னபோதுää 'என்ரை ஆக்களெண்டு ஆரம்மா எனக்கு இருக்கினம்? இஞ்சை இந்த வளவுக்கை நிக்கிற வாழையளும், பயிர் கொடியளுந்தானம்மா எனக்கு இப்ப சொந்தக்காறர்! நான் இஞ்சை இருக்காமல் வேறை எங்கையம்மா போவன்?' எனக் கல்லுங் கனியப் பதஞ்சலி கேட்டபோது, பாலியாருக்குக் கரகரவெனக் கண்ணில் நீர் வந்துவிட்டது. வாழ்க்கை அனுபவத்தை நிறையப் பெற்றிருந்த பாலியார், 'அதுசரி மோனை! நீ உன்ரை வயித்துப்பாட்டுக்கு என்ன செய்வாய்?' என்று பிரச்சனையைக் கிளப்பினாள். இதைக் கேட்ட பதஞ்சலியின் முகத்தில் தானாகவே ஒரு துணிவும், கம்பீரமும் ஏற்பட்டன. 'எங்கடை இந்த வளவுத் தோட்டம் என்ரை தேவைக்குக் காணும்! அதோடை களை புடுங்கவும், அருவி வெட்டவும் எனக்குத் தெரியதெண்டு நினைச்சியளே?'. பதஞ்சலி வீராப்புடன் பேசினாள். உண்மையிலேயே பதஞ்சலி இந்த வேலைகளிலெல்லாம் கெட்டிக்காரிதான். அவள் கைதொட்டது துலங்கும். அறுவடைக்கு வயலில் இறங்கினால் ஆண்களுக்குச் சமமாகவே அறுத்துக் குவிப்பாள். உமாபதியர் அவளை இந்த வேலைகளைச் செய்ய விடுவதில்லை அல்லாது அவளுக்கு இந்த வேலைகள் தெரியாது என்றல்ல. இது பாலியாருக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் தெரிந்த விஷயம்.

இவ்வாறே பாலியார் ஒவ்வொரு காரணத்தைக் கூற, பதஞ்சலி அதற்கு நியாயங்கள் காட்டித் தன் கட்சியைப் பலப்படுத்திக் கொண்டே வந்தாள். பாலியாருடைய மனதில், பதஞ்சலி தண்ணீருற்றுக்குப் போகவேண்டுமென்ற எண்ணம் திண்ணமாக இல்லாததால், அவள் பதஞ்சலியிடம் தோற்றுப்போனாள். ஆனால் அவள் இப்போதுங்கூடப் பதஞ்சலியிடம் 'நீ எங்கடை வீட்டிலை வந்திரு மோனை! என்று அழைக்கவில்லை. அவளுக்கு உண்மையிலேயே அந்த விருப்பம் இருந்தும், மலையர் என்ன சொல்வாரோ என்ற அச்சத்தில் அவள் அப்படிக் கேட்கவில்லை. மானஸ்தனான உமாபதி வளர்த்த பெண்ணாகையால், பதஞ்சலியும் தன்னுடைய குடிசையில் வாழவேண்டுமென்று நிளைத்தாளே அன்றி, வேறெங்கும் ஆதரவு தேடிப்போகும் எண்ணமே அவளுடைய இளநெஞ்சில் ஏற்படவில்லை. அவளுடைய முடிவை மாற்ற முடியாதெனக் கண்ட பாலியார், உண்மையில் மனதுக்குள் மகிழ்ச்சி நிறைந்தவளாகத்தான் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இந்நேரம் தண்ணிமுறிப்புக் காட்டில் வெகுதூரம் சென்றுவிட்ட கதிராமன், என்றுமில்லாத வேகத்துடன் செடிகளையும்ää கொடிகளையும் விலக்கியவாறே காடேறிக் கொண்டிருந்தான். அவனுடைய நாய்கள் இரண்டும் மோப்பம் பிடித்தவாறே காடுலாவிச் செனறுகொண்டிருந்தன.

திடீரென்ற நாய்களின் குரைப்பும், ஏதோவொரு மிருகத்தை அவை பிடித்துவிட்ட அமளியும் கேட்கவே, கதிராமன் அந்தத் திக்கை நோக்கிக் கோடரியுடன் ஓடினான். அங்கே அவன் வழக்கத்துக்கு மாறான புதியதொரு காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனான்.

வழக்கத்தில் மான்கள், நாய்கள் வருவதை அறிந்ததும் புகையென மறைந்துவிடும்! ஆனால் இன்றோ ஒரு பெண்மான் ஓட முயற்சிக்காமல்,  à®¤à®©à¯ முன்னங்கால்களை மடித்துக் கூர்மையான குளம்புகளால் நாய்களை எதிர்த்துக்கொண்டு நின்றது!

காட்டிலே கரடிகளைக்கூட மடக்கிவிடும் அந்த வேட்டை நாய்களுக்கு இந்தப் பெட்டைமான் எந்த மூலைக்கு? அவனைக் கண்டதும் அவை மீண்டும் ஆவேசத்துடன் மானின்மீது பாய்ந்தன. ஒன்று அதன் கழுத்தைக் கடித்துக் குதற, மற்றது அதன் பின்னங்கால் தொடையைக் கவ்விக் கிழித்தது. இரண்டு நாய்களினதும் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட மானுடைய உடல பிய்ந்து இரத்தம் பெருக்கெடுத்தது. மான் சோர்ந்துகொண்டே போவதை உணர்ந்த நாய்கள் மேலும் வேகுரத்துடன் பாய்ந்தன. மானின் தலையில் கோடரியால் அடித்ததும் அதன் வேதனைகளெல்லாம் சட்டென்று நின்று போனதுபோல் அடங்கி உயிரை விட்டது. அதனருகில் குந்திக்கொண்டு கவனித்தான் கதிராமன். மானுடைய மடி பெரிதாகக் காணப்பட்டது. ஒரு முலைக்காம்பைப் பிடித்துப் பிதுக்கியதும் பால் பீறிட்டு வெளிவந்து அவனுடைய விரல்களை நனைத்தது. 'அட! ஊட்டுக் குட்டிபோலை!" என்று சொல்லிக் கொண்டவன் எழுந்துநின்று நாய்களை, 'இரு பேசாமல்" என்று அதட்டினான்.

நாய்களை அடக்கி இருத்திய கதிராமன், மானுடைய காலடித் தடங்களைப் பின்பற்றிச் சென்றான். அவன் பாடசாலையில் எழுதப் படிக்கக் கற்றதில்லை. ஆனால் காட்டில் காணப்படும் ஒவ்வொரு காலடிச் சுவடும், தடயங்களும் அவனுக்கு அட்சரங்கள், சொற்கள் போன்றவைதான். அவற்றைப் பார்த்ததுமே அவற்றின் பொருள் அவனுக்குப் புரிந்துவிடும். இங்கே நிற்கும் போதுதான் மான், நாய்கள் வருவதை அறிந்திருந்கின்றது. இந்த இடத்தில்தான் அது நாய்களை நோக்கி ஓடியிருக்கிறது என்று பார்த்துக்கொண்டே சென்றவன், சற்றுத் தூரத்தில் தெரிந்த ஒரு அடர்ந்த புதரைக் கவனித்துவிட்டு, சந்தடி எதுவுமின்றிப் பதுங்கி முன்னேறினான். அந்த நிமிஷம் கதிராமனைப் பார்ப்பவர்கள், அவனை ஒரு காட்டு விலங்கு என்றே எண்ணுவார்கள். அவனுடைய கருமையான நிறமும், அங்க அசைவுகளும், அவனைக் காட்டோடு காடாகவே காட்டின. அந்தப் புதர் அருகிற் சென்று மெல்ல எட்டிப் பார்த்தவன், கவனமாகக் கைகளை நீட்டி அந்த மான்குட்டியைப் பிடித்தான்.

  மான்குட்டியைக் கதிராமன் தூக்கியதும், வெளியுலகம் சரியாகத் தெரியாத அந்தச் சின்ஞ்சிறு மான்குட்டி, அவனைத் தன் நீண்ட விழிகளால் மருட்சியுடன் பார்த்து மலங்க மலங்க விழித்தது. அதைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்ட கதிராமனுக்கு அதன் நெஞ்சு படபடவென அடித்துக் கொள்வது கேட்டது. அந்தக் குட்டியின் கள்ளமற்ற தன்மையையும், ஆதரவற்ற நிலையையும் கண்ட அவனுக்குப் பதஞ்சலியின் நினைவுதான் சட்டென்று வந்தது. ஏதோ எண்ணியவனாக அதைத் தன் முகத்தோடு சேர்த்தணைத்துக் கொஞ்சினான். இரண்டொரு தடவை அங்குமிங்கும் பார்த்துவிட்டு அந்த மான்குட்டியும் அவனுடைய மார்போடு ஒண்டிக்கொண்டது.

கதிராமனுக்கு அப்போதே போய்ப் பதஞ்சலியைக் காணவேண்டும்ää தாயை இழந்த மான்குட்டியைப் போல நிர்க்கதியாய் நிற்கும் அவளைத் தன் கைக்குள் வைத்து நெஞ்சுடன் சேர்த்தணைத்துக் கொள்ளவேண்டும் என்ற வேகம் ஏற்படவே, மான்குட்டியுடன் புறப்பட்டான். நாய்களிரண்டும் அவனைப் பின்தொடர்ந்தன.


 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 30 Apr 2024 09:40
TamilNet
HASH(0x564d7f639500)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 30 Apr 2024 09:40


புதினம்
Tue, 30 Apr 2024 09:40
















     இதுவரை:  24846842 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10412 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com