Tuesday, 03 May 2005
கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள் இலகுவில் மறந்துவிடமுடியாத சில பெயர்வரிசைகளில் ஒன்றுதான் லூசியா,யசிந்தா,பிரான்சிஸ்.
1917ம் ஆண்டு, சோவியத் ரசியப் புரட்சியுடன் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல அது தேவமாதாவுடனும் சம்மந்தப்பட்ட ஆண்டாகவும் வரலாற்றில் அமைந்துவிட்டது. அவ்வாண்டில் போத்துக்கல் நாட்டின் 'பற்றிமா' என்ற இடத்தில் மூன்று இடையர்குலச் சிறுவர்களுக்கு தேவமாதா தெடர்காட்சி அளித்த காலமும் அதுதான். அச் சிறுவர்கள்தான் லூசியா,யசிந்தா,பிரான்சிஸ்.
இத் தொடர் காட்சியின்போது தேவமாதாவின் மூன்று செய்திகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றில் இரண்டு மாதாவின் கட்டளைப்படி குறிப்பிட்ட காலங்களில் வெளிப்படுத்தப்பட்டு அச்செய்திகள் உண்மையென நிரூபிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. மூன்றாவது செய்தி இரகசியமாக முத்திரையிடப்பட்டு, கடிதம் 1960ம் ஆண்டு உடைக்கப்படுமெனவும் அப்போது உலகம் அழிந்துவிடுமெனவும் எங்களுக்குக் கூறப்பட்டது. இச் செய்தியில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை, எவ்வளவு இட்டுக் கட்டப்பட்டது என்பதெல்லாம் சிந்திக்க முடியாதவொன்றாக அக்காலத்தில் எங்களது அறிவு அமைந்திருந்தது.
இன்றும் என் ஞாபகத்திலிருக்கிறது எனது இரண்டாவது தம்பி 1960ம் ஆண்டுக்கு முன் தனது முதல்நன்மையைப் பெற்றுவிடவேன்டுமென பிடிவாதமாக இருந்தான். ஆதற்கு அவன் சொன்ன காரணம் '1960ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் முதல்நன்மை பெற்றுக்கொள்ளாவிடில் நரகத்து க்குப் போய்விடுவேன்' என்பதுதான். எனக்கும்கூட மிக இளவயதில் நான் இறந்துவிடுவதென்பது மிகவும் கவலையாகவே இருந்தது.
இப்போது 2005ம் ஆண்டுக்கு வந்துவிட்டோம்.13-02-2005ல் லுசியா என்ற அந்தச் சிறுமி தனது 97வது வயதில் காலமான செய்தியைப் படித்தபோது என் இளமைக் கால நினைவுகளே மேலெழுந்தன.
அம்மூவரது வாக்குகளின்படி 13-05-1917ம் ஆண்டு தேவமாதா ஒரு 'ஓக்' மரத்தில் காட்சியளித்ததாயும் ஒவ்வொரு மாதத்தின் 13ம் திகதியில் அதே இடத்திற்கு வரும்படி பணித்ததாகவும் அத்தொடர் காட்சி அதே ஆண்டு ஐப்பசி 13வரையிலும் தொடர்ந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் உரையாடலின் ஒலியை லூசியாவே கேட்கக்கூடியவராக இருந்ததாகவும் இவரே தன் பெற்றோர் மூலமாகவும் பின் குருவானவர் மூலமாகவும் செய்தியை வெளித்தெரிய வைத்ததாகவும் சொல்லப்படடது.
அந்த மூன்று இரகசியங்கள்தான் என்ன? முதலாவது லூசியாவின் மற்றைய சகோதர முறையினரான யசிந்தா,பிரான்சிஸ் ஆகியோர் மிக விரைவிலேயே இறந்து விடுவார்கள். இரண்டாவது முதலாவது உலக யுத்தத்தின் முடிவும், போல்சவிக்கினது புரட்சியும் ஆதனால் கிறிஸ்தவர்களது நம்பிக்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்புப் பற்றியும், ஆரம்பமாகப்போகும் இரண்டாவது உலக யுத்தம் பற்றியதுமாகும்.லூசியாவின் கூற்றுப்படி இரசியா தனது தவறை இந்த உலகத்தின்மீது படரவிடப்போகிறது,யுத்தத்தையும் கத்தோலிக்க கோவில்களின் அழிவையும் ஊக்குவிக்கப் போகிறது.மூன்றாவது, வெள்ளை அங்கி அணிந்த பாப்பானவர் துப்பாக்கி மூலம் மரணத்தில் வீழ்வார் என்பது.
இவற்றின் முதற் செய்தியின்படி யசிந்தா,பிரான்சிஸ் ஆகியோர் காட்சி கொடுத்தபின் மூண்று வருடங்களுக்குள் இறந்து விட்டார்கள். இரண்டாவது செய்தி உண்மையில் நிறைவேறிய போதிலும் இரு விடயங்கள் நெருடலாகவே இருக்கிறது. சோவியத் புரட்சியும் அதன் பரவலும் தவறு என்ற அர்த்தப்படுகிறதல்லவா? புரட்சியும் அதன் நடைமுறை மாற்ற ங்கள், முதலாளித்துவ சக்திகள் அதன் சிதைவுக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்த பொழுதிலும் அதன் உள்ளார்ந்த அர்த்தம் மனித குலவிடுதலை,மேன்மை என்பன அதன் சாரமல்லவா? இரண்டாவது உலக யுத்தம் சோவியத்தின்மீது திணிக்கப்பட்டதல்லவா? அவ்யுத்தத்தின் வெற்றிக்கு அத்திவாரமிட்டவர்கள் சோவியத் படைகளே. 'நோர்மண்டியில்' நேச நாடுகளின் படையணிகள் தரையிறங்குவதற்கு முன் லெனின்கிறாட்டிலிருந்து நாசிப் படைகள் பின்வாங்கத் தொடங்கி விட்டனவே.
மூன்றாவது செய்தி மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது. இது பலருக்கு ஊக்கச் சக்தியாக மாறி கொலை முயற்சி மேற்கொள்ளப்படலாமென்ற அச்சத்தினால். ஆயினும் 1981ல் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி படுகாயங்களுடன் முடிவுற்றது.
1981ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி மொகமட் அலி அக்கா என்பவரால் சென் பீற்றர் திடலில் பாப்பரசர் ஜோன் போல்11ன் மீது ஒரு கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிஸ்ரவசமாகத் தப்பிக் கொண்ட பாப்பரசர், இம் முயற்சியை முன்னறிவித்த நிகழ்விற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக பற்றிமாவிலுள்ள மாதா கோவிலுக்குச் சென்றார். துப்பாக்கி மனிதன் பாவித்த 9எம்.எம் ரக வெற்றுத் தோட்டாவைத் தம்முடன் எடுத்துச் சென்று மாதாவின் முடியில் காணிக்கையாக வைத்தார்.
இங்கும் எதிர்வுகூறல் பிழைத்த போதிலும் கொலை முயற்சி நடந்த மாதமும் திகதியும், மாதா காட்சி கொடுத்த திகதியும் ஒன்றாக இருப்பது தற்செயல் என அறிவு உணர்த்தினாலும் மத நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதில் வலுவான அர்த்தம் இருப்பதாகவே கருதப்படுகிறது.
ஆயினும் ஒரு சிறுமியால் அதுவும் இரசியா என்பதை ஒரு பெண்ணாக அதுவும் ஒரு தப்பான பெண்ணாக கற்பனை செய்த ஒரு பத்து வயதுச் சிறுமியால் இந்த நிகழ்வுகளை எதிர்வுகூறும் சாத்தியத்தை பொது அறிவு நிராகரித்தாலும் அவ்வாறுதானே நிகழ்ந்திருக்கிறது. சில வேளைகளில் மதம் சார்ந்த விடயங்கள் நம் புத்திக்கு வசப்படாமலே நழுவிச் சென்று விடுகிறதே.
20-03-2005
|