அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 27 January 2021

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow குண்ணான் பூச்சிகளும் சோளகரும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குண்ணான் பூச்சிகளும் சோளகரும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எஸ்.வி.ராஜதுரை  
Thursday, 12 May 2005

கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்ஸிற்கு  அண்மையில் ஸ்பெயின் நாட்டில் நடந்த ஸ்பானிய மொழியிலாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக ஒரு செய்தி. உலகில் உள்ள மொழிகள் அனைத்திற்குமான இலக்கண விதிகள் அகற்றப்பட வேண்டும் என்னும் கருத்தை மார்க்வெய்ஸ் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. அவரது படைப்புகளின் ஆங்கில மொழியாக்கங்களைப்  படிக்கையில்  எடுத்துரைப்பு முறை, கற்பனை வளம், மொழி லாவகம், வெளிப்பாட்டுத் திறன்  ஆகியவற்றில் மெய்மறந்து ஸ்பானிய மொழியில் அவருக்குள்ள அபாரத் தேர்ச்சியைக் கற்பனை செய்து பார்க்கக் கூடிய   நமக்கு  மொழியின் இலக்கண விதிகளை ஏன் அவர் விரும்புவதில்லை  என்பது விளங்குவதில்லை.  ஆனால் இலக்கண விதிகளில்  குறைத் தேர்ச்சிகூடப் பெறாத எனக்கு அவற்றின்மீது பற்றையும் பரிவையும் ஏற்படுத்திவருகின்றன   முறைசாராப் பரஸ்பரப் பாராட்டுச் சங்கங்களில்  இலக்கிய ராமர்களால்  முதுகு சொரியப்படும்  அணில் எழுத்தாளர்களின் எழுத்துக்களும்  சன் தொலைக்காட்சியின் செய்தி ஒலிபரப்பு நிகழ்ச்சிகளும். உருவம்-உள்ளடக்கம் பற்றியக் கடந்தகால உணர்ச்சிகரமான விவாதங்களைப் போல “படைப்பிலக்கியத்தில் இலக்கண விதிகள்” என்னும் புதிய விவாதத்தைத் தொடங்க வேண்டும் என்னும் அவாவும் எழுகிறது. இப்படிப்பட்ட சிந்தனை என்னை ஆட்கொண்டிருப்பதாலோ என்னவோ.
‘சோளகர் தொட்டி’   நாவலைப் படிக்க எடுத்ததும் இலக்கண அமைதியோ வாக்கிய அமைதியோ இல்லாத பகுதிகளே முதலில் என் கண்களை உறுத்தின. இவை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற முடிவுடன் மீண்டும் படிக்கத் தொடங்கினேன். “ எல்லாவற்றையும் தன்னுள் தாங்கிக்கொண்டு, பசுமையுடன் கண்ணுற்று, தாய்மையோடு குளுகுளு காற்று வீசி, தனது குழந்தைகளை வரவேற்க பசுமை கொண்ட இதயத்தின் வெளிப்பாடாய்” எப்போதும் காத்துக் கொண்டிருக்கும் ‘சோளகர் தொட்டி’யில் ஏற்படுத்தப்பட்ட இரத்தக் காயங்கள், இனப் படுகொலைகள் பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விவரண நாவலை நமக்குத் தந்திருக்கிறார் மனித உரிமைப் போராளியும் வழக்கறிஞருமான ச. பாலமுருகன். தமிழகத்தில் பட்டியலிடப்பட்ட பழங்குடிகளைச் சேர்ந்த சோளகர்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வனப் பகுதிகளிலும் கர்நாடக எல்லையோர வனப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். அவர்களது மொத்த எண்ணிக்கை  யாருக்கும் தெரியாது. சமவெளிப்பகுதிகளிலேயே மக்கட்தொகைக் கணக்கெடுப்பு ஒழுங்காக நடைபெறாதபோது, தொலைதூரக் கானகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்திருக்கும்
ஓலைக்குடிசைகளுக்குள் எட்டிப்பார்க்க அகவிலைப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் யாருக்கு நேரமிருக்கிறது?

தேவைக்கு மேல் எதையும் தேடிக்கொள்ளாத எளிமையான ஒரு கூட்டு சமுதாயமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருந்த  சோளகர்கள், அவர்களால் ‘தொட்டி’ என்றழைக்கப்படும் அவர்களது சிற்றூர், அடர்ந்த வனம் ஆகியற்றைத் தனது படைப்பிலக்கியத்திற்கு உயிர் தந்தவையாகக் கூறும்  பாலமுருகன் 1980 களிலும் 1990 களிலும் தனக்கேற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில்  இந்த நாவலை எழுதியதற்கான நோக்கத்தைக் குறிப்பிடுகிறார்: “ நான் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையைவிடக் கனமானவை. இருளைவிடக் கருமைமிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றைச் சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னோரு காலத்தில், நான் சுமக்க இயலாத  அவை கற்பனையாகக்கூடக் கருதப்படும்”. நாவலைப் படித்து முடித்ததும் மலையை  விடக் கனமாகிவிடும் நமது நெஞ்சத்தில் கனன்றெழுகிறது ஒரு கோபம். கையறு நிலைக் கோபம்!

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால்  தொட்டிகளில் வாழ்ந்த சோளகர்கள்  எவ்வாறு குண்ணான் பூச்சிக்குழிகளுக்கு மாற்றப்பட்டார்கள் என்பது  இந்த நாவலின் கதைபின்னலில் உள்ள ஒரு முக்கிய அம்சம்: “அந்தப் பூச்சி தன் உடலைக் கொழித்த மண்ணின் வட்டமான குழியில் மறைந்து காத்திருக்கும். எறும்போ சிறு பூச்சிகளோ அந்தக் குழியில் விழுந்துவிட்டு மேலே ஏறும் சமயம் மண்ணின் அசைவை ஏற்படுத்தும்போது குண்ணான்பூச்சி அந்த இரையைக் கடித்து மண்ணுக்குள் இழுத்துச் சென்றுவிடும். அந்தக் குழி சிறு இரைகளின் மரணக் குழி. அந்தக் குழியிலிருந்து பாதிப்பற்று தப்பிப்பது இயலாத ஒன்று”.  ‘குள்ளாண் பூச்சிக் குழி’யை, வீரப்பனைத் தேடும் ‘நடைப் பயணத்திற்காக’ காவல் துறையினரால் அமைக்கப்பட்ட சித்திரவதைக்கூடங்களுக்கான (‘ஒர்க்ஷாப்’)  உவமையாக நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளபோதிலும், பிற ‘குள்ளான் பூச்சிக’ளையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்: வனத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், சமவெளிப்பகுதியிலிருந்து வந்து அரசியல், பண பலத்தோடு பழங்குடி மக்களின் நிலங்களையும் மூலவளங்களையும் அபகரிப்பவர்கள். இந்த மும்முனைத் தாக்குதல்களுக்குப் புதிய பரிமாணம் சேர்க்கின்றது வீரப்பன் கூட்டத்தின் வருகை.  பழங்குடிமக்களைச் சேர்ந்த ஒரிருவரை வீரப்பனின் முகாமிற்குள் தள்ளியது காவல்துறையினரின் அக்கிரமங்களே எனக் கூறும் இந்த நாவல் அந்த முகாமிற்கு ‘ரொமாண்டிக்’ வண்ணம் எதனையும் பூசுவதில்லை.  தனது பாதையில் குறுக்கிடாத சோளகரையோ பிறரையோ வீரப்பன் கூட்டம் துன்புறுத்தியதில்லை.  வீரப்பனைப் பிடிக்க வக்கற்றுப்போன தமிழக, கர்நாடகக் காவல் துறையினருக்குத் துப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் இலக்கான சோளக ஆண்கள், பெண்களுக்குக் கணக்கில்லை.சித்திரவதை முறைகளில் புதினங்கள் படைத்த இக் காவல் துறையினர் இருந்திருக்க  வேண்டிய இடம்  நாஜி ஜெர்மனி: “கெம்பனை விசாரணைக்காகக் கூட்டிப் போனார்கள். வழக்கம்போல அம்மணமாக்கி உடலில் மின்சாரம் ஏற்றப்பட்டது. மெக்கர் பெட்டியினைச் சுற்றிப் பொத்தானை அழுத்துவதற்குப் பதிலாக சில நொடிகள் அழுத்திப் பிடித்து அவனுக்கு மின்சாரம் பாய்ச்சினர்...உடலில் மின்சார கிளிப் மாட்டியிருந்த பகுதி வெந்துபோயிருந்தது. அவன் மயங்கித் தரையில் விழுந்தான். வாயிலிருந்து நுரை வழிந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அவன் கைகால்களை அசைத்ததும் கணேஷ் போலிஸ் ஒரு வழவழப்பான சிறிய உலக்கை போன்ற பருத்த சிறு தடியினைக் கொண்டு வந்தான். கெம்பனின் முகத்தில் தண்ணீர் அடித்து... அவனது கைவிரல்களை அகலமாகத் தரையில் பரப்பி வைத்து...இடதுகையில் சுண்டு விரலின்மீது ...தடியால் ஒரு குத்துக் குத்திக் கீழே இழுத்தான். சுண்டு விரல் நகம் பிய்ந்து கீழே விழுந்து சீத்தென்று இரத்தமடித்தது. அடுத்து மோதிர விரல் நகம். அதன் பின் ஐந்து விரல் நகங்களும் கழண்டு கீழே கிடந்தன...”
“மதியம் மாதி கண் விழித்தபோது அவள் மார்புத் தோல் மின் அதிர்வினால் வெந்து புண்ணாகியிருந்தது. காலையில் அவளைத் தலைகீழாய்த் தொங்கவிட்டு மின் அதிர்வு தரப்பட்டபோது அந்த நொடியே தான் உயிர்வாழும் கடைசி நொடி என்றுகூட அவள் நினைத்தாள். அவள் கண் விழிப்பதற்குச் சற்று முன்புதான் சித்தியின் கைக்கட்டுகளை அவிழ்த்து, துணி உடுத்திக்கொள்ள அனுமதித்து  சங்கிலியால் பிணைத்து ஜன்னலில் கட்டியிருந்தார்கள்”.

 காவல் துறையினரின் பாலியல் வன்முறையைச் சித்திரிப்பதில்பெண்களின் பிறப்புறுப்புகளைப் பற்றிய அதிர்ச்சி தரும் வர்ணனைகள் எதையும்  நாவலாசிரியர் கையாள்வதில்லை. பாலியல் பலாத்காரத்திற்கு முன்பு இருந்த அதே பெருமையுடனும் தன்மான உணர்வுடனும்தான் அவரது பெண் பாத்திரங்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டிச் செல்கின்றனர். பாலியல் பலாத்காரம் என்பது அவர்களைப் பொருத்தவரை ஒரு உடல்ரீதியான துன்பம்; மேனியில் படிந்த  அழுக்கு. அவ்வளவுதான். அழுக்கைத் துடைத்துவிட்டு அடுத்த நாளைத் தொடங்குகின்றனர். ‘அக்கினிப் பிரவேசம்’ ஏதும் அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை.

 எனினும் இந்த நாவல் சித்திரவதைக் கதைகளின், சோளகரின் துன்பங்களின் தொகுப்பு அல்ல. மானுடவியல் களஞ்சியம். சோளகரின் ச்மத்துவ வாழ்க்கை, தொன்மங்கள், ஐதீகங்கள், இயற்கைமீதும் சகமாந்தர் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் உன்னத அறவியல் நிலைப்பாடு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவர்களது சடங்குகள், உணவு வகைகள், சாகுபடி முறைகள், ஆண்-பெண் உறவுகள், ஆடல் பாடல்கள் முதலியன கதையோட்டத்தின் நுட்பமான பின்னல் வேலைகளாக்கப்பட்டுள்ளன. கொடிய விலங்கென்றாலும் தேவையில்லாமல் அதைக் கொல்வது ஒரு தீராப் பழி எனக் கருதும் அறவியல்; வேட்டை நாய்களுக்குக்கூட இறைச்சியில் சமபங்கு பிரித்துக் கொடுக்கும் சமதர்ம உணர்வு, கொடிய வறுமையிலும் பகிர்ந்துண்பதைத் தவிர்க்காத மாந்தநேயம், இந்த விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கும் குலத்தலைவன் கொத்தல்லி - இவற்றையெண்ணி வியக்கும் நமக்கு மற்றொரு விஷயம் உறுத்தலாகப் படுகிறது. “தீண்டாமை என்பது ஏணிமரப்படி போல நம் சமுதாயம் முழுவதிலும் நிலவுகிறது” என்று பெரியார் கூறியதைப் போல, வனப் பகுதிகளிலுள்ள லிங்காயத்துகளுக்கு ( சாதியை ஒழிக்கப் பாடுபட்ட பசுவண்ணரைப் பின்பற்றுபவர்கள் இவர்கள்!) சோளகர்கள் தீண்டத்தகாதவர்கள். சோளக இளம் பெண்ணொருத்தி ‘செருப்புத் தைக்கும் சாதி’யைச் சேர்ந்த இளைஞனைத் திருமணம் செய்துகொள்வது சோளகர்களைப் பொருத்தவரை ‘வெளியில் சொல்லக்கூடாத அவமானகரமான விஷயம்’ - சாதியம் மலைமுகடுகளிலும் ஊடுருவியிருப்பதைக் கதையோட்டத்தினூடாக நுட்பமாகச் சொல்கிறார் பாலமுருகன்.

சோளகரின் அவலங்கள் இந்தியாவின் வனப்பகுதிகளிலுள்ள பிற அனைத்துப் பழங்குடியினரின் துயர வரலாற்றிலிருந்து பிரிக்கப்படமுடியாதவை. காலனியாட்சிக்காலத்தில் தொடங்கிய நில அளவை, பட்டாமுறை போன்றவை வனப் பகுதிகளிலுள்ள பழங்குடியினருக்கு ஒருபோதும் விரிவுபடுத்தப்படவில்லை.  எனவே அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாகுபடி செய்துவந்த நிலங்கள் வருவாய்த்துறை நிலங்களாக அங்கீகரிக்கப்படவில்லை. 1927-இல் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் தன்னிச்சையாகப் பிறப்பித்த வனச் சட்டம் அந்த நிலங்களை வன நிலங்கள் என்று வரையறை செய்து ஒரே நாளில் அவர்களை ‘சட்ட விரோதமான ஆக்கிரமிப்பாளர்களாக’ ஆக்கியது.  சுதந்திரத்திற்குப் பின், சில மாநில
அரசாங்கங்கள் பழங்குடியினருக்குப் பட்டா வழங்குவதில் மிகவும் பலகீனமான முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் இவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசாங்கம் 1980-இல் கொண்டு வந்த வனப் பாதுகாப்புச் சட்டம், மாநில அரசாங்கங்களின் அதிகாரத்தைப் பறித்துக்கொண்டது. முறைப்படி பட்டா வழங்கப்படாத நிலங்கள் யாவும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் என அறிவிக்கப்பட்டன.  1972 ம் ஆண்டு கானுயிர் பாதுகாப்புச் சட்டம், 1986-ம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1988 ம் ஆண்டு தேசிய வனக் கொள்கை ஆகியன பழங்குடி மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை. பழங்குடி மக்களின் நலன்களில் உண்மையான அக்கறை கொண்டிருந்தவரும் மத்திய அரசாங்கத்தின் பழங்குடி மக்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தவருமான பி.டி.சர்மா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, மத்திய அரசாங்கத்தின் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், 1980 க்குப் பின் வன நிலங்களை ஆக்கிரமித்தவர்களை மட்டும் வெளியேற்றலாம் என்ற ஆணை பிறப்பித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், பழங்குடியினருக்கு ஒருபோதும் பட்டாக்கள் வழங்கப்படாதிருந்த நிலையில் 1980க்கு முன்பு ஆக்கிரம்ப்பு செய்திருந்தவர்கள் யார், அதற்குப் பிறகு ஆக்கிரமிப்பு செய்தவர்கள் என்பதை கண்டறிவதற்கான சான்றுகள் ஏதும் இருக்கவில்லை என்பதுதான். எனினும் வனத்துறை, வருவாய்த்துறை, பழங்குடிகள் நலத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைத்து 1980க்கு முன் வனப்பகுதிகளிலிருந்த பழங்குடி மக்களின் நிலப்பட்டாக் கோரிக்கையைத் தீர்க்குமாறு அந்த அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை விடுத்தது. ஆனால் ஒரு மாநில அரசாங்கம்கூட இதுவரை அத்தகைய குழுவை அமைக்கவில்லை. இதற்கிடையே வன நிலங்களை ஆக்கிரமித்துள்ள அனைவரையும் உடனடியாக வெளியேற்றுமாறு உச்ச நீதி மன்றம் 2001, 2002 ம் ஆண்டுகளில் ஆணை பிறப்பித்தது.  1996 இல் அது
வழங்கிய மற்றொரு தீர்ப்பு, ஒதுக்கப்பட்ட காடுகள் ( reserved forests) தவிர தனியார் காடுகள், பிறவகைக் காடுகள் அனைத்தையும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவந்தது. வனப் பகுதிகளில் மரங்கள் வெட்டுதல், தொழில்களை நடத்துதல், கனிவளங்களுக்கான சுரங்கங்கள் தோண்டுதல் முதலியவற்றைத் தடை செய்தது. ஆனால் இத் தொழில்களில் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்த எந்த ஆணையையும் அது வழங்கவில்லை. 2002 ம் ஆண்டிலும் மற்றொரு ஆணையை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த ஆணையைக் காரணம் காட்டி மாநில அரசாங்கங்களுக்கு ஒரு சுற்றறிக்கை விடுத்த மத்திய வன, சுற்றுச்சூழல் அமைச்சகம் ( டி.ர்.பாலு அப்போதைய அமைச்சர்) ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வன நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இவ் விஷயத்தில் மீண்டும் தலையிட்டு மற்றொரு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் க்கிரமிப்புகளை அகற்ற மத்திய அதிகாரக் குழுக்களை (Central Empowered Committee)   நியமிக்க வேண்டும் என்னும் மற்றொரு ஆணை பிறப்பித்தது. 2002 அக்டோபரில் மத்திய அமைச்சகம், 1989க்கு முன் வனப் பகுதியிலிருந்தோர்களுக்குப் பட்டா வழங்குதல், பிறரை வெளியேற்றுதல் போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மாவட்ட அளவிலான குழுக்களை நியமிக்கும்படி மாநில அரசாங்கங்களுக்கு ஆலோசனை கூறியது. மேலும், தாவாவுக்குட்பட்ட நிலங்களும் மக்களும் உலக வங்கி பரிந்துரைத்த ‘கூட்டு வன நிர்வாகத் திட்டத்தின்’ கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. இத் திட்டத்தின்படி மக்கள் வனப் பாதுகாப்பிலும் புதிய காடுகளை வளர்ப்பதிலும் ஈடுபடுத்தப்படுவர். ஆனால் அவர்களுக்கு இந்த வனப் பகுதியில் குத்தகை உரிமை உட்பட எந்த உரிமையும் இருக்காது. மத்திய அமைச்சகத்தின் செயற்பாடுகள் அரசியல் சட்ட விதி 338(9) க்குப் புறம்பானவை. அட்டவணை
சாதியினர்/பழங்குடியினர் தொடர்பான எல்லாப் பிரச்சினைகளிலும் இவர்களுக்குரிய தேசிய ஆணையத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும். மத்திய அமைச்சகம் அதைச் செய்யவில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு தேசிய ஜனநாயக அரசாங்கம் பாரத் அலுமினியம் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது தெரியவந்தது போல பல லட்சக்கணக்கான ஏக்கர் வன நிலங்கள் பெரும் தொழில் இல்லங்கள், பன்னாட்டு மூலதன நிறுவனங்கள், பெருந்தோட்ட முதலாளிகள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரின் வசம் உள்ளன. ஆனால் இவர்களை வெளியேற்ற நிர்வாகத் துறையோ, நீதித் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக வனங்களையே தாயகமாக, பிறந்த வீடாக, புகுந்த வீடாகக் கொண்டுள்ள வனப் பகுதிப் பழங்குடி மக்கள் தங்களது சொந்த மண்ணிலேயே தொடர்ந்து அன்னியப்படுத்தப்பட்டு வருவதுதான் இன்று வரை நீடிக்கும் தொடர்கதை.   ‘சோளகர் தொட்டி’ இதில் ஒரு அத்தியாயம்.

 

 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 27 Jan 2021 03:45
TamilNet
Adding to the series of deceit by his predecessors and using the same modus operandi, SL President Gotabaya Rajapaksa has now appointed another domestic Commission of Inquiry (COI) on accountability. The three-member COI, announced through an extraordinary Gazette Notification on Thursday is tasked to find out about the preceding domestic COIs and Committees revelations on “any human rights violations, serious violations of the international humanitarian law and other such serious offences”. Further stating in the gazette that even though Colombo has withdrawn from “co-sponsorship policy”, it would continue to “work with the United Nations and its Agencies to achieve accountability and human resource development for achieving sustainable peace and reconciliation”.
Sri Lanka: Gotabaya sets up deceptive COI citing ‘sovereignty’and ‘non-aligned’foreign policy


BBC: உலகச் செய்திகள்
Wed, 27 Jan 2021 03:26


புதினம்
Wed, 27 Jan 2021 04:06
     இதுவரை:  20200393 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3415 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com