அவர்கள் கரையிலேயே நிற்கிறார்கள்
|
|
|
|
எழுதியவர்: தா.பாலகணேசன்
|
|
|
Tuesday, 01 June 2004
மரத்தில் செதுக்கிய வள்ளம் துடுப்பை வலித்த படி போகிறது நிழலாய் அசையும் அவள் காதலனின் உருவை கண்களில் ஒற்றி மெல்ல இமைக் கதவுகளை திறந்து வைத்தாள் உள்ளும் வெளியும் ஒன்றென விரிய
நீலக் கருவசையும் கோளப் பெரு முட்டையுள் அவள் ஆழப் பரந்து பாய் விரித்தாள் மோனக் கிறுக்கேறி ஆழி ஆர்த்தெழுகிறது விண்ணை முட்டும் காதலின் தீரம் மிக மிகக் கொண்டு
வையக் கரையில் வந்து மோதி, வீழ்ந்து மீளத் தன்னுடல் கரைத்து ஆழ்கிறது ஆழி
அவள் சேலை காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது
மாலைக் கதிர்க் கீற்றுக்கள் முகத்தில் படரும் பேரழகாள் பிரிவெனும் பெரும் துயருள் பனிபோலும் உருகித் தகித்தாள்
ஆனந்தமயப் பொழுதிற்காக அவள் கரையிலேயே காத்து நின்றாள்
அவன் வள்ளம் நிறைய ஆழியின் சங்கீதத்தை பொழியும் சங்குகளோடு கரை நோக்கி வந்து கொண்டிருக்கிறான் அவர்களோ கிழிஞ்சல்களையும் சிப்பிகளையுமே சேகரித்துக் கொண்டு கரையிலேயே நிற்கிறார்கள்
14.10.03
|