அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 17 arrow எதிர்ப்புக் கவிதைகள்..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எதிர்ப்புக் கவிதைகள்..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Thursday, 09 June 2005

அறபாத்தின் “வேட்டைக்குப்பின்” கவிதைத் தொகுப்பை  முன்னிறுத்தி எதிர்ப்புக் கவிதைகள் தொடர்பாக ஓர்  அரசியல் புரிதல்.
                                  - யதீந்திரா -

1

அறபாத்தின் கவிதைகள் குறித்து நிற்கும் அரசியல் பற்றி  பார்ப்பதற்கு முன்னர் எதிர்ப்பு இலக்கியம் என்ற  வகைப்படுத்தல் பற்றி சிறிது பார்ப்போம். நீண்ட  நாட்களாக எதிர்ப்பு இலக்கியம் குறித்து எங்காவது சில  குறிப்புக்களை பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம்  இருந்தது. இப்பொழுதுதான் அதற்கான சந்தர்ப்பம்  வாய்த்திருக்கிறது. எப்பொழுதுமே நமக்கு ஏதாவது  ஒன்றைப்பற்றி எழுதுவதற்கு ஏதாவதொரு தூண்டுகோல்  தேவைப்படுகிறது அல்லது சில புறச்சூழல் அழுத்தம்  தேவைப்படுகிறது. அறபாத் தனது கவிதைத் தொகுப்பை  “புலிகளால் ‘ஷஹிதா’க்கப்பட்ட (கொல்லப்பட்ட)  புலிகளுக்கு” என சமர்ப்பணம் செய்திருக்கிறார். இதுதான்  என்னை எழுதத் தூண்டியது. இவ்வாறான  வெளிப்பாடுகளை வெறுமனே ஒரு படைப்பாளியின்  சுதந்திரம் என குறுக்கிவிடுவதில் எனக்கு  உடன்பாடில்லை. இந்த தொகுப்பின் முன்னுரையில்  ரமீஸ் அப்துல்லா எதிர்ப்புக் கவிதைகள் பற்றி  குறிப்பிட்டிருக்கின்றார். அதிலிருந்தே இக்கட்டுரையை  நகர்த்திச் செல்லலாமென  நினைக்கின்றேன். அவர்  குறிப்பிடுகின்றார்…

“1980 களுக்கு பிந்திய ஈழத்து தமிழ் கவிதை மரபில்  எதிர்ப்புக் கவிதைகள் மிக முக்கிய இடத்தைப்  பெறுகின்றது. ஈழத்தின் சமூக அரசியல் வரலாறு  எண்பதுகளில் முக்கியமான ஒரு மாற்றத்தை  எதிர்கொண்டது. பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு  சூழலிலே மக்களது வாழ்வு நிலையை சமூக அதிகார  மேலாதிக்கங்கள் பாதிப்புறச் செய்தபோது எழுந்த  எதிர்ப்புணர்வுகளை சித்தரிக்கும் முகமாக இத்தகைய  கவிதைகள் தோற்றம் பெறுகின்றன”

தனது பார்வையினூடாக அறபாத்தின் கவிதைகளுக்கு  எதிர்ப்புக் கவிதைகள் என்ற அந்தஸ்த்தை  வழங்கியிருக்கின்றார் அப்துல்லா. இப்பொழுது இந்த  இடத்தில் நாம் கேட்க வேண்டிய கேள்விகள்; எதிர்ப்பு  இலக்கியம் என்றால் என்ன? அது ஈழத்துச் சூழலில்  என்னவகையான அரசியல் அர்த்ப்படுத்தலில்  கையாளப்பட்டு வருகிறது? உண்மையில் எதிர்ப்பு  இலக்கியம் என்பதுதான் என்ன? …

2

பொதுவாக இலக்கியம் என்பதே சமூகத்தின் பொதுப்  போக்கிலிருந்தும் சமூதாயத்தின் ஒழுக்க  சட்டகங்களிலிருந்தும் ஏதாவதொருவகையில்  மாறுபட்டதாகவே அமைந்திருக்கும். பொதுப்போக்குடன்  முட்டி மோதுவதாகவே இருக்கும். இந்தமாறுபாடு  அல்லது மோதுகை தீவிர நிலைப்பட்டதாகவும்  இருக்கலாம் அல்லது சில முரண்பாடுகளை  அடையாளப்படுத்துவதாகவும் இருக்கலாம். அது அந்த  படைப்பு தோன்றும் புறச் சூழலை அனுசரித்த  ஒன்றாகும். இப்படியான தன்மையிலிருந்து விலகும்  எழுத்துக்களை நாம் சனரஞ்சக எழுத்துக்கள் என்போமே  தவிர இலக்கியம் என்பதில்லை. எனவே இலக்கியம்  சமூகத்தின் பொதுப்போக்கிலிருந்து மாறுபடும்போது அது  எதிர்ப்புக் கூறுகளை உட்கொண்டதாகவே இருக்கும்.  அந்தவகையில் நாம் இலக்கியம் என்பதே எதிர்ப்பு  நிலைப்பட்ட ஒன்றுதான் என்று சொல்லமுடியும். ஆனால்  எதிர்ப்பு இலக்கியம் என்னும் அழுத்தமான  வகைப்படுத்தல் இவ்வாறானதொரு பொதுநிலை  வகைப்படுத்தல் அல்ல. அது ஓர் அரசியல்  உள்ளடக்கத்தைக் கொண்ட வகைப்படுத்தலாகும்.  குறிப்பாக 1980களுக்கு பின்னரான இலக்கியச் சூழலில்  இவ் வகைப்படுத்தல் முக்கியத்துவம் பெற்றதும்  அத்தகையதொரு அந்த உள்ளடக்கத்தின்  அடிப்படையில்தான். அது என்ன அரசியல் என்பதைப்  பின்னர் பார்ப்போம்.

பாலஸ்தீனத்தின் காஷா பள்ளத்தாக்கு இஸ்ரவேலியரால்  கைப்பற்றப்பட்ட பின்னர் அங்கு தோன்றிய  படைப்புக்களை எதிர்ப்பு இலக்கியம் என  வகைப்படுத்துகின்றார் பாலஸ்தீன எழுத்தாளர் காஷான்  களபாணி. இதனைப் படித்தபோது எனக்குள் எழுந்த  கேள்வி  சிங்கள மேலாதிக்கத்தின் ஒடுக்குமுறையை  பல்வேறு வகையில் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் நாம்  ஏன் நமது படைப்பியல் சூழலில் இத்தகையதொரு  வகைப்படுத்தலை செய்ய முடியாது? தமிழ்ச் சூழலில்  சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிராண உணர்வு நிலையை  முன்னிறுத்தும் படைப்புக்களை நாம் சிங்கள மேலாதிக்க  எதிர்ப்பு இலக்கியம் என வகைப்படுத்தலாம். குறிப்பாக  சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரியல்  காலகட்டத்தை முதலாம் கட்ட ஈழப்போர், இரண்டாம்  கட்ட ஈழப்போர், மூன்றாம் கட்ட ஈழப்போர் என்று  பிரித்துப்பார்க்கும் அரசியல் பகுப்பு நிலை நம்மத்தியில்  உண்டு. இந்த காலகட்டச் சூழலை பிரதிபலிக்கும்  படைப்புக்களை நாம் குறிப்பிட்ட போரியல் கால கட்ட  எதிர்ப்பு இலக்கியங்கள் என வகைப்படுத்த முடியும்.  முக்கியமாக 1987 இந்திய - சிறிலங்கா ஒப்பந்த  காலகட்டத்தில் தோன்றிய படைப்புக்களை நான் இந்திய  எதிர்ப்பு இலக்கியம் என்பேன். வில்லுக்குளத்துப்  பறவைகள் போன்ற தொகுப்புக்களை இந்த  வகைப்படுத்தலுக்கான உதாரணங்களாகச்  சொல்லமுடியும். ஆனால் நமது சூழலில் இத்தகைய  தன்மையிலெல்லாம் பார்க்கப்படுவதில்லை. இதற்கு நமது  ஆய்வுச் சூழலில் உள்ள தேக்க நிலையும் அரசியல்  புரிதலற்று எல்லாவற்றையும் அற்பதமென்னு சொல்லும்  முட்டாள்தனங்களும் காரணமாக இருக்கக் கூடும்.

இப்பொழுது எதிர்ப்புக் கவிதைகள் என்ற  கருத்துருவாக்கத்திற்கு வருவோம். ஈழத்து இலக்கியச்  சூழலைப் பொருத்தவரையில் சிறுகதை, நாவல், நாடகம்  போன்ற படைப்பியல் முயற்சிகளில் எதிர்ப்பு என்ற  சொற்பதம் பெரியளவில் பயன்படுவதில்லை. மாறாக  கவிதைகளிலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதிலும்  1980 களின் பின்னரான கவிதைப் போக்கில்தான்  எதிர்ப்புக் கவிதைகள் என்ற வகைப்படுத்தல் முக்கிய   இடத்தைப் பெற்றது. இதற்குள் பதுங்கியிருக்கும்  அரசியலைப் பார்ப்பதற்கு முன்னர் ஒரு கேள்வியைக்  கேட்டுக் கொள்வோம். 1980 களுக்கு முன்னரான நமது  கவிதை மரபில் எதிர்ப்புக் கவிதைகளை அடையாளம்  காணமுடியாதா? சமூக அரசியல் மேலாதிக்கங்களுக்கு  எதிரான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதான் எதிர்ப்புக்  கவிதைகளுக்கான ஒரே தகுதியெனில், அவ்வாறான  எதிர்ப்புக் கவிதைகளை 1980களுக்கு முன்னரும் நாம்  அடையாளம் காட்டலாம். குறிப்பாக தமிழ்ச் சூழலில்  இடதுசாரித்துவ அரசியல் செயற்பாடுகள்  மேலோங்கியிருந்த காலத்தில் முதலாளித்துவத்திற்கு  எதிராகவும் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் பல  கவிஞர்கள் குரலெழுப்பியுள்ளனர். சாருமதி, புதுவை  இரத்தினதுரை, சுபத்திரன் போன்றோர் இதில்  முக்கியமானவர்கள். இவர்களது கவிதைகள்  அந்தக்காலத்தில் சாதியத்தினடிப்படையிலான சமூக  மேலாதிக்கத்திற்கு எதிரான காட்டமான குரல்களாக  ஒலித்தன. கவிதைகளில் இவர்களை குறிப்பிட  முடடியுமென்றால் நாவலில் டானியலை  குறிப்பிடமுடியும். இந்தவகையில் டானியலின்  நாவல்களை எதிர்ப்பு நாவல்கள் எனச் சொல்லலாம்.  80களுக்கு முன்னர் இவ்வாறான நிலைமை இருந்த  போதும் 80களுக்கு பின்னரான கவிதைப் போக்கில்  மட்டும் எதிர்ப்புக் கவிதைகள் முக்கியப்படுத்தப்படுவதன்  சூட்சுமம் என்ன? இதனை தெளிவாகப் பார்ப்போமானால்  இதிலுள்ள அரசியல் என்பது விடுலைப்புலிகளை  எதிர்த்தல் என்பதாகும். 80 களுக்கு பின்னரான எதிர்ப்புக்  கவிதைகள் என்றாலே அவை விடுதலைப்புலிகளை  எதிர்க்கும் அல்லது நிராகரிக்கும் விமர்சிக்கும்  உள்ளடகத்தை கொண்ட கவிதைகள்தான் என்பேன்.  இந்தப் பின்னணியில்தான் 1980களுக்கு பின்னர்  முக்கியம்பெற்ற சேரன் போன்ற கவிஞர்களும், சில  புலம்பெயர் புலி எதிர்ப்பு கவிஞர்களும் எதிர்ப்பு இலக்கிய  கர்த்தாக்களாக கொண்டாடப்படுகின்றனர். இந்த  அடிப்படையில்தான் அறபாத்தின் புலி எதிர்ப்புக்  கவிதைகளும் இலகுவாக எதிர்ப்புக் கவிதைகள் என்ற  அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகின்றன.

3

இனி அறபாத்தின் தொகுப்பிற்கு வருவோம் அறபாத் ஒரு  முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை மனதில்  இருத்தியே இந்த தொகுப்பு பற்றிய எனது  மனப்பதிவுகளை வெளிப்படுத்த முயல்கிறேன். தமிழத்;  தேசியம் குறித்த எனது அறிவுநிலையும் தமிழ் முஸ்லீம்  உறவு குறித்த எனது அக்கறையும் இவ்வாறான  வெளிப்பாடுகள் குறித்து நிதானத்தை கடைப்பிடிக்குமாறு  எனக்கு கற்பித்துள்ளன. இந்த தொகுப்பில் 37 கவிதைகள்  உள்ளன. இரண்டு கவிதைகளைத்தவிர மற்றைய  அனைத்தும் தமிழ் மேலாதிக்கத்தால் முஸ்லீம் சமூகம்  எதிர்கொண்ட நெருக்குவாரங்களைச் சொல்வதாகப்  புனையப்பட்டுள்ளது. ஆனால் அறபாத் தனது தொகுப்பை  புலிகளால் கொல்லப்பட்ட புலிகளுக்கு என சமர்ப்பணம்  செய்திருப்பதன் மூலம் அவர் பூடகமாக ஒர் அரசியலைச்  சொல்லிவிட்டார் விடுதலைப்புலிகளை முஸ்லீம்  சமூகத்தின் பிரதான எதிரிகளாகச் சித்தரித்துவிடுகிறார்.  அறபாத் தனது சமூகத்தின் நிலைநின்று  விடுதலைப்புலிகளை பார்ப்பது பற்றி நான் எதுவும்  கூறிவிடப்போவதில்லை. ஆரோக்கியமான விமர்சனங்கள்  எப்போதுமே வரவேற்கப்பட வேண்டியவை என்பதில்  என்னிடம் கருத்துபேதமில்லை. ஆனால் சமூக  பொறுப்புமிக்க படைப்பாளிகள் ஒரு விடுதலை அமைப்;பு  குறித்து விமர்சிக்கும் போது அல்லது அபிப்பிராயங்கள்  தெரிவிக்க முற்படும்போது ஒரு படைப்பாளிக்கே  உரித்தான அடிப்படையான சமூகப்  பொறுப்புணர்விலிருந்து விலிகிவிடுதல் கூடாது.  அறபாத்திடம் அத்தகைய பொறுப்புணர்வை  காணவில்லை. ரமீஸ் அப்துல்லா தனது முன்னுரையில்  அறபாத்தின் பின்னனிகள் பற்றிக் கூறியிருக்கிறார் “  அறபாத் அவர்களுக்கு சில பின்னணிகள் இருக்கின்றன.  அவர் ஒரு இளைஞர், இஸ்லாமிய மார்க்க  அடிப்படைகளை உடையவர், இஸ்லாத்தை தெளிவாகக்  கற்றவர், உலக அறிவுளோடு இணைந்தவர், சமூக  உணர்வுள்ள நல்ல இலக்கியவாதி”

ஆனால் இந்த தொகுப்பை பார்க்கும்போது அவ்வாறான  பண்புகள் எதுவும் அறபாத்திடம் இருக்குமென  நம்பமுடியவில்லை. தொகுப்பின் பின் அட்டைக்  குறிப்பில் அறபாத் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.  “மனிதனின் மனச்சாட்சியுள்ள குரலாக கவிதைகள் பேச  வேண்டும் என்ற என் அடங்கா வெறி வேட்டைக்குப்பின்  முலம் ஓரளவு தணிந்திருக்கிறது என்பதில் ஆசுவாசம்.”  இன்னொரு இனத்தின்,  பல தியாகங்களால் பரிணமித்த  விடுதலை இயக்கத்தை கொச்சைப்படுத்த முயலும்போதே  ஒரு கவிஞனின் மனச்சாட்சி இறந்துவிட்டது என்பதை  அறபாத் புரிந்து கொள்ளவேண்டும். எப்படியோ  புலிகளுக்கு எதிராக எழுதவேண்டுமென்ற அறபாத்தின்  நிண்டநாள் அடங்கா வெறி ஒரளவு வேட்டைக்குப்பின்  முலம் தணிந்திருக்கக் கூடும்.

இந்த தொகுப்பலுள்ள  கவிதைகளின் பொதுநிலை  அரசியல் விடுதலைப்புலிகளை முஸ்லீம் மக்களுக்கு  எதிரான பயங்கரமாகனதொரு அமைப்பு என்னும் கருத்து  நிலையை முன்னிறுத்தும் நோக்கிலானதாகும்.  என்னளவில் நான் வேட்டைக்குப்பின் என்னும் இந்த  தொகுப்பை முற்றிலுமாக நிராகரிக்கிறேன்.  விமர்சனங்களுக்கு செவிசாய்க்கலாம்  கொச்சைப்படுத்தல்களுக்கு அல்ல. என்னைப்  பொறுத்தவரையில் வேட்டைக்குப்பின் என்ற கவிதைத்  தொகுப்பை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். தமழீழ  விடுதலைப்புலிகள் அமைப்பை கொச்சைப்டுத்தும்  எத்தவொரு எழுத்தையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை.  அவை ஏற்றுக் கொள்ளக் கூடியவையும் அல்ல. அறபாத்  ஆக்கிரமிப்பு குறித்து தனது கவிதையொன்றில் இப்படிக்  கூறுகிறார்.

ஆக்கிரமிப்பாளனே தெரிந்துகொள்
நீ இரந்தளிக்கும் குயில்களைவிட
என் காகக் குரலில் கரைந்தபடி சாகச் சித்தம்
இறுதிவரை இம் மண்ணின் மேல்.               
 (எனதுகீதம் - ப.ம்-6)

ஆற்றல்மிக்க வரிகள்தான். அவசியம்  எழுப்பப்படவேண்டிய குரல்தான். ஆனால் அறபாத்திடம்  நான் கேட்க விரும்புகிறேன். சிறிலங்கா அரசின்  இரந்தளிக்கும் அரசியல்தானே முஸ்லீம் மக்களின்  அரசியலாக இன்றுவரை இருந்துவருகிறது. முஸ்லீம்  மக்கள் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை  நசுக்குவதற்கான அரசியல் தந்திரோபாயத்தின்  பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டபோது அதனை அறபாத்  போன்றவர்கள்  ஏன் எதிர்க்கவில்லை. தமிழர் தரப்பால்  முஸ்லீம் மக்கள் தொடர்பாக விடப்பட்ட தவறுகளை  எவரும் நியாயப்படுத்திவிட முடியாது. அதேவேளை  அரசின் சதிமுயற்சிகளுக்கு பலியாகிப்போன முஸ்லீம்  தரப்பினராலும் சில தவறுகள் இழைக்கப்ட்டன  என்பதையும் அறபாத் நினைத்துப்பார்க்க வேண்டும்.

தமிழ் - முஸ்லீம் உறவு குறித்து எனக்கு  அக்கறையுண்டு. அது குறித்து பணியாற்ற  வேண்டுமென்ற ஆர்வமும் உண்டு. இன்றும் தீவிர  இனவாதத் தரப்புகளெல்லாம் முஸ்லிம்மக்களின்  உரிமை தொடர்பாக அக்கறை கொண்டு கண்ணீர்  வடிப்பது முஸ்லிம் மக்களமீது கொண்டுள்ள  அக்கறையாலல்ல. அவை தமிழர் தேசத்தின் அரசியல்  முனைப்பை பலவீனப்படுத்துவதன் நோக்கத்தினாலாகும்.  இது அறபாத் போன்றதொரு படைப்பாளியால்  விளங்கிக்கொள்ள முடியாத புதிருமல்ல. அறபாத் எனக்கு  பரிச்சயமான ஒருவரல்ல. ஒருமுறை திரு.பௌசரின்  கடையில் நான் நின்று கொண்டிருந்தபோது, நான் அறபாத்  எனச் சொல்லி ஒரு நண்பர் கைகுலுக்கிவிட்டுச்  சென்றதாக நினைவு. இருநிமிட அறிமுகம். இப்பொழுதும்  நான் அறபாத்துடன் மிகவும் அழுத்தமாக கைகுலுக்கிக்  கொள்ளவே விரும்புகிறேன். அவர் சிங்கள  பெருந்தேசியவாதம் பற்றிய சரியானதொரு  பார்வையுடனும் தமிழ்-முஸ்லீம் உறவு குறித்த  ஆழமானதொரு புரிதலுடன் வருவாராக இருந்தால்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 22:09
TamilNet
HASH(0x556accd7e310)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 22:09


புதினம்
Thu, 28 Mar 2024 22:09
















     இதுவரை:  24714166 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4364 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com