அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பூபாள இராகங்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: என்.செல்வராஜா  
Thursday, 09 June 2005
பக்கம் 1 of 3

கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயத்தின் பூபாள இராகங்கள் சிறுகதைத் தொகுதி 2004.

1.

புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலில் மிக முக்கிய விடயமாக அமைவது, இன்று தம்மை இனங்காணச் செய்தலாகும். தாம் பிறந்து வாழ்ந்து வளர்ந்த தாய்நிலத்தை தமது அன்றாட வாழ்வியலில் அடையாளப்படுத்திக்கொண்டு அதன்வழியாகத் தாயகத்துடனான தம் தொப்புள்கொடித் தொடர்பை நிலைநிறுத்திக்கொள்ளத் துடிக்கும் ஈழத்தமிழர்களை நாம் புலத்தில் அன்றாடம் காண்கின்றோம்.

மலாயாவுக்கு இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் இடம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தம்மை "யாழ்ப்பாணத்துத் தமிழர்கள்" என்றே அடையாளப்படுத்தி வைத்தார்கள். இன்றும்கூட தமிழகத்திலும் சிங்கப்பூர்- மலேசியாவிலும் ஈழத்தமிழர்களை யாழ்ப்பாணத் தமிழர்கள் என்று குறிப்பிடும் வழமை நிலவுகின்றது. ஈழத் தமிழர்களைப் போலல்லாது தமிழகத்திலிருந்து மலேயாவுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள், தம்மை இந்தியர்கள் என்றே ஆரம்பத்தில் இனம்கண்டனர். தமிழ்நாட்டவர்கள் என்றோ மதுரைக் காரர்கள் என்றோ தம்மை இனம்காட்டிக்கொள்ளவில்லை.

மலேசியப் புலப்பெயர்வு கண்டு நூற்றாண்டுகள் நெருங்கிய நிலையில் சுதந்திரத்துக்குப் பின்னரான மலேசியாவில் பிறந்த இரண்டாம் மூன்றாம் தலைமுறைத் தமிழர்களிடையே தேசிய விழிப்புணர்வு ஏற்பட்ட 20ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் தமது தேசியத்தை அடையாளப்படுத்தும் நிலை வந்தது. தாம் இந்தியரா? மலேசியரா என்ற கேள்வி அப்பொழுது அவர்களுக்கு எழுந்தது. அக்காலகட்டத்தில் அங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்த இந்தியத் தமிழர்களில் பெரும்பங்கினர் தம்மை மலேசியத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ள காண ஆரம்பித்தார்கள். அதன்வழியாகத் தம்மை நிரந்தரமாகத் தாம் புலம்பெயர்ந்த மண்ணின் புதல்வர்களாக சுவீகரித்துக் கொண்டார்கள். அக்காலகட்ட மலேசியத் தமிழ் இலக்கியங்கள் இப்பணியை செவ்வனே செய்து முடித்தது. அதன் பின்னரே மலேசிய மண்வாசனையுடனான படைப்பிலக்கியங்கள் அந்த மண்ணில் தமிழில் உருவாகத் தலைப்பட்டன. அவ்வேளையிலும் தம்மை மலேசியத் தமிழர் என்று இனம்காண ஈழத்தமிழர்கள் முன்வரவில்லை. பெரும் எண்ணிக்கையில் தாயகத்தை நோக்கித் திரும்பி, அங்கு யாழ்ப்பாண மண்ணில் தம்மை "மலாயன் பென்சனியராகவே" அடையாளப்படுத்திக் கொண்டார்கள். தமது இனசனங்களுக்கிடையே தம்மை ஒரு மேலோங்கிச் சமூகமாக இனங்காட்டிக்கொண்டார்கள். இவ்வாறு தாயகத்துக்கு மீளாத இலங்கைத் தமிழர்களில் சிறு பகுதியினர் இன்னமும் அங்கு வாழ்கின்றார்கள். அவர்கள் உயர்பதவிகளில், அரசாங்க உயர்மட்டங்களில் பதவிவகித்துவந்தபோதிலும் மலேசியாவாழ் இலங்கைத் தமிழராகவே தம்மை இன்னமும் இனம்காட்டி சிறு சமூகமாக வாழ்ந்து வருகின்ற நிலை அங்கு காணப்படுகின்றது. தமக்கென்று தனிக்கோவில்களையும் நிறுவி, அதன் பின்புலத்தில் தமது தாயக உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு அவர்கள் அங்கு வாழ்கின்றார்கள். பெரும்பங்கினரான இந்தியத் தமிழர்களே தம்மைப் பின்னாளில் மலேசியத் தமிழர்களாக அடையாளப் படுத்திக்கொண்டனர் என்பது பற்றி இங்கு சமூகவியலாளர்கள் தான் ஆராயவேண்டும்.

இது இவ்வாறிருக்க, இரண்டாம் புலப்பெயர்வு கண்டு இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த புலம்பெயர் தமிழர்கள் தம்மை ஈழத்தமிழர்களாகவே பெருமையுடனும், உறுதியுடனும் இனம்காட்டிக்கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடப்படவேண்டியதொன்றாகும். இன்று இந்தப் பூமிப்பந்தின்; பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் புலம்பெயர்ந்து வந்து நீண்டகாலமாக ஐரோப்பாவில் வாழ்ந்து வருகின்றபோதிலும், புலம்பெயர் தமிழர் என்ற அடையாளத்தை ஈழத்தமிழர்களுக்கே உலகம் வழங்கியுள்ளது என்பதையும் இங்கு கவனிக்கவேண்டும்.

இதற்குக் காரணம், புலம்பெயர்ந்த தமிழர்களில் ஈழத்தமிழர்களே தமது தாயகத்தின் நினைவுகளைத் தம் அன்றாட வாழ்வில் அழியவிடாது பாதுகாத்து வருகிறார்கள் என்பதாகும். தத்தம் பெயர்களுடன் தமது ஊர்ப்பெயர்களை சேர்த்துக் கொண்டு வாழும் பலரை நாம் புலத்தில் அன்றாடம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

படைப்பிலக்கியங்களில் கூடத் தமது தாயக உணர்வுகளைப் பதிந்து, அதைச் சமூக வரலாறாக்கி வருவதிலும் எம்மவர்கள் முன்னணியில் இருந்து வருகிறார்கள். இந்த வகையில் அண்மைக்காலத்தில் தாயகப் பிரதேச வரலாறு கூறும் குறிப்பிடத்தக்க நூல்கள் பல வெளியாகியுள்ளன. பல நூல்கள் வெளியிடப்படும் நோக்கில் ஆய்வுகள் செய்யப்பட்டும் வருகின்றன. அண்மையில் கனடாவுக்குச் சென்றிருந்த போது இரண்டு அரிய நூல்கள் எனக்குக் கிடைத்தன. ஆழியவளை: யாழ்ப்பாணத்துக் கடலோரக் கிராமம் ஒன்றின் மரபும் மாற்றமும் என்று ஒரு ஆய்வு நூலை கந்தசாமி முத்துராஜா என்பவர் கனேடிய ஒன்ராரியோ மாநிலத்திலிருந்து எழுதியுள்ளார். கனடாவில் உள்ள தமிழ்த் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் இளங்கலைமானித் தமிழ்ப் பட்டப்படிப்பின் ஆய்வுத் தேவையை நிவர்த்திசெய்யும் நோக்கில் எழுதப்பட்டது இந்நூல்.

நெடுந்தீவு மக்களும் வரலாறும் என்ற மற்றொரு நூலும் இங்கு விதந்து குறிப்பிடத்தக்கது. இதுவும் கனேடிய மண்ணிலிருந்தே வெளிவந்துள்ளது. சு.சிவநாயகமூர்த்தி அவர்கள் எழுதியுள்ள இந்நூல் நெடுந்தீவின் வரலாறு, அதன் புவியியல் முக்கியத்துவம், நிர்வாக அமைப்புகள், நெடுந்தீவு பிரபலஸ்தர்கள் போன்ற இன்னோரன்ன தகவல்களைத் தருகின்றது. இவ்வாறே, யாழ்ப்பாணம், நல்லூர், மட்டக்களப்பு, சப்த தீவுகள் என்று விரிந்து செல்லும் ஊர் வரலாறுகளை எம்மவர்கள் தாயக உணர்வுடன் எதிர்காலச் சந்ததியினருக்கும், சமகால தாயகப் பற்றுடையவர்களுக்கும், பன்னாட்டுத் தமிழ் உறவுகளுக்கும் பயன்படும் வகையில் உருவாக்கியுள்ளார்கள்.

தாயகத்தில் தம் இஷ்டதெய்வங்களுக்கு கோவில் எழுப்பி வருவதுடன் தாயகத்தின் பிரபல கோவில்களை அதே பெயரில் புலத்தில் தாபிப்பதிலும் எம்மவர்கள் பின்நிற்கவில்லை. கனடாவில் நல்லூர் கந்தசாமி கோவில் உள்ளது. அங்கே கதிர்காமக் கந்தன் கோவில் உள்ளது. இப்பொழுது நயினை நாகபூஷணி அம்மன் பேரிலும் கோவில்கள் எழுந்து சர்ச்சைகள் பல கிளம்பியுமுள்ளன.



     இதுவரை:  24784441 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5169 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com