எழுதியவர்: நளாயினி தாமரைச்செல்வன்
|
|
|
Sunday, 19 June 2005
கவிஞர்: மு.புஸ்பராஐன். கவிதைத் தொகுப்பு: மீண்டும் வரும் நாட்கள். கவிதைகள்: ஐம்பது. பதிப்பகம்: தமிழியல்-காலச்சுவடு.
வாழ்வின் அக புற நிலைகளை இவரின் கவிதைகள் தத்துரூபமாக சொல்லி நிற்கிறது.
ஒரு காலை என்ற தலைப்பிட்ட கவிதை நாம் ஈழத்தில் வாழ்ந்த காலத்தை அப்படியே காட்சியாக நம் மனக்கண் முன் விரிக்கிறது. ஆனந்த வாழ்வை ஏக்கப் பொருமூச்சோடு வாசித்து முடிக்கிறபோது மீண்டும் மீண்டும் விடியல்வரும் என்கின்ற நம்பிக்கை தீபத்தை ஏற்றுகின்றதான வரி.
... வெள்ளாப்பின் அடிவானச் செம்மை நோக்கி கரைந்து செல்கிறது காகம் ஒன்று. ...
நீதியும் சமாதானமும் என்ற தலைப்பிட்ட கவிதையில் வறுமைக் கோட்டின் விழிம்பில் தத்தழிக்கும் எம்மின மக்களின் அவலத்தை மிக அழகான வாற்தை கொண்டு வடித்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தவரிகள்:
... கால நகர்வில் மீண்டும் எழுந்தன வறுமையின் ஓச்சம். அடிவயிற்றில் எழுந்த தீயோ சிரசில் கொதிக்க வயிறு தடவிய கைகள் எங்கும் எழுந்தன. நீண்டு உயர்ந்த கைகளை வாள் கொண்டு வீசினர். வாள் முனையில் வடிந்த குருதியை வழித்தெறிந்து குன்றில் ஏறிக் குரலிடுகின்றார். இந்த நாடே நீதியும் சமாதானமும் நிலவும் நாடென. ...
இது பசிக்கொடுமையையும் அது தரும் வேதனையையும் அதனால் ஏற்பட்ட புரட்சியையும் அப்புரட்சி நசுக்கப்படும் முறையையும் நமக்கு சொல்லி நிற்கிறது. இதையே நீண்ட பெருமூச்சுக்கள் என்ற கவிதையும் அம்மாவும் அப்பாவும், வாடைக்காற்றே என்ற கவிதைகள் சொல்லி நிற்கின்றன மாறுபட்ட கோணங்களில்.
இத்தனை சோகங்களைச் சொன்ன கவிஞன் மீண்டும் புத்துயிர் பெற்று அழகிய கவிதையாகின்றான். கரைவும் விரிவும் என்ற தலைப்பிலான கவிதையில், இயற்கையை காதலிப்பவன் அடிக்கடி தன்னை நல்லதொரு கவிஞன் என வாசகர்களிற்கு அடையாளப்படுத்தப்படுகிறான். அந்த தரிசனத்தை கவிஞர் நமக்கு தந்துள்ளார். நாம் இயற்கையை ரசிப்பதற்கும் அந்த இயற்கையை வர்ணிக்கிறபோது கேட்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. நம்மையெல்லாம் மௌனமாக அழைத்துசெல்கிறார் தனது கவி வரிகளோடு. இன்னும் நிறையசொல்லுவார் என நினைத்த வாசகனை ஏமாற்றிவிடுகிறார். ஆனாலும் பாருங்கள் இந்த வரியில் ஒரு சுகமே நம்மை சூழ்கிறது.
... என்னுள் நானே மெல்ல மெல்ல கரைதல் கண்டேன். மெல்ல மெல்ல கரைந்து நிற்க சொல்லில் விரியாச்சுகம் சூழலெங்கும் சூழ்ந்திருந்த கவிதைச் சுகமெல்லாம் எந்தன் சிரசுள் இதமாய் இறங்க நானே கவிதையாய் செறிந்து பரந்தேன். ...
அடடா கவிஞனை பாராட்டாமல் என்னால் இருக்க முடியவில்லை. இந்த கவிதையை வாசிக்கிறபோது இதை எழுதிய கவிஞனே அந்த இயற்கையோடு கரைந்து ஆவியாகிற நிலமையை காணக் கூடியதாக உள்ளது. இதற்கெல்லாம் நல்லதொரு குழந்தை மனசும் கவிமனசும் தான் காரணம். இதற்கூடாக தன்னை இரண்டாவது முறையாக நல்லதொரு கவிஞன் என வாசகரின் உள்ளம் சொல்ல வைத்திருக்கிறார்.
இதைப்போலவே அகலிப்பு, புரிதல் கவிதைகளும் இயற்கையை பாடி நிற்கிறது. அகலிப்பு --
... இரவே இதயம் படிந்த தடைகள் துடைக்க ஏக்கமாக நானிங்கு. ...
இரவின் நிசப்பதத்தை அங்கலம் அங்குலமாக ரசித்த கவிஞனுக்கு புலம்பெயர் வாழ்வும் இயந்திரத்தனமான வாழ்வும் இரவின் நிசப்தத்தை கூறுபோடுவதாய் வந்தமர்ந்த கவிதையும் அந்த இரவின் யௌவன வரிவடிவங்களும் அழகு.
கவிஞர்கள் அடிக்கடி யோகநிலைக்கு வருவார்கள் அந்த நிலையை புரிதல் என்கின்ற கவிதையில் இந்த கவிஞன் அனுபவித்திருக்கிறார்.
... இன்னமும் நானுனக்கு புரியாத புதிரா? அதிக மௌனத்திலும் உறவுகள் விலகி உள்ளொடுங்கிப் போவதிலும் வழிதவறிப்போனவனாய் விசனமேன் கொள்கின்றாய். ...
இப்படி பாடிய கவிஞர் இயற்கையை அணுவணுவாக ரசித்த செல்கின்ற காட்சி என்னை உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது. இதில் என் விழியோரம் ஈரக்கசிதலை தந்து செல்கின்றதான வரிகள் . உண்மையிலேயே துடித்துப் போனேன்.
... கண்கொள்ளும் தூரம் வரை அதோ இணையாது நீண்டு செல்லும் இரயில் பாதையில் படிந்துள்ள துயரின் மெல்லொலியை கேட்பதுண்டா...... காட்டிடையில் சூடிக்களிக்கவோ பார்த்து மகிழவோ எவருமின்றி பூத்தப் பின் உதிர்வு கொள்ளும் மலர்களின் சோகத்தில் கசிந்ததுண்டா... ...
இந்த கவிதையோடு ஒன்றித்த எனக்கு இந்த கவிதையில் இருந்து மீள்வது என்பது முடியாத காரியமாகிவிட்டது. 81 மே 31 இரவு - அன்றைய இராணுவ அடாவடித்தனங்கள் பற்றி சொல்லி நிற்கிறது. இதில் பெரிய ஆச்சரியம் ஒன்று - மரணவாசலை நமக்கு மொழிவடிவில், கவிவடிவில் தந்திருப்பது தான். வாசகனை அப்படியே மரணவாசல்வரை கொண்டு வந்து விட்டிருக்கிறார் தனது அந்த கவிதையூடாக.
... உயிரை கையில் பிடித்தபடி குண்டாந் தடிக்கும் துப்பாக்கி வெடிக்கும் தப்பியோடிய மக்களில் ஒருவனாய் என்னை நினைத்திருப்பாய் நானோ நம்பிக்கையின் கடைசித்துளியும் வடிந்து மரணத்தருகே. ...
இதற்கூடாக இன்னொன்றையும் நமக்கு சொல்லிச்செல்கிறது கவிதை - ஈழத்தவர் தினம் தினம் சாகடிக்கப்படாமலே செத்து செத்துப் பிளைக்கும் வாழ்வாகிப்போனவர்களென்று. இந்த கவிதை எழுதி பதின்நான்கு வருடங்களாகிறது - இந்த நிலை இன்னமும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கிறது. இதே போலவே இக்கணத்தில் வாழ்ந்துவிடு கவிதையும் எமது துயர வாழ்வை சொல்லி நிற்கிறது. அதில் ஒரு பந்தி:
... முனை முறிந்த தராசில் நிறுக்கப்பட்டு தீர்மானித்த இலக்கு நோக்கி நகர்த்தப்படுவீh. ...
என முடிக்கிறார். .அந்த அநீதியை மிக இலகுவாக வாசகரின் மனதில் படியச்செய்யும் படியான வாற்தை பிரயோகம் இது.
பீனிக்ஸ் என்ற தலைப்பிலான கவிதையில் தமிழனாக பிறந்ததால் எத்தனை அவலங்களை நம் ஆட்சிபீட அரசு செய்கிறது என்பதனை மென்மையாக சொல்லி இருக்கிறார்.
... அன்னை மடியில் தவழ்ந்த போது சிறுவிழிகாட்டிச் சின்ன வாயால் அம்மாவென்று அழைத்ததாலோ நித்தம் நித்தம் முள் முடி சூட்டியும் ஆணிகள் அடித்தும் சிலுவையில் அறைகிறாய்.? ...
தலைப்பிடப்படாத கவிதை - அதற்கூடாக காந்திதேசத்தை தோலுரித்தும் காட்டுகிறார். வெல்பவர் பக்கம் என்ற தலைப்பிலான கவிதையில் கவிஞர் சற்று தளர்ந்து போகிற நிலமையை காட்டுகிறது. 1987 இல் இந்த கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த காலம் இந்திய இராணுவகாலம். அன்றைஈழத்தவரின் உண்மை நிலமையை அழகாக காட்டி இருக்கிறார். எதவுமே செய்ய முடியாத நிலை. அந்தச் சோர்வை அவரின் கவிதை தத்துரூபமாக இயம்பி நிற்கிறது. அதனை தொடர்ந்து இந்திய இராணுவ அடாவடித்தனங்களையே அடுத்த கவிதையும் சொல்லி நிற்கிறது. கவிதை கைவிடப் பட்டோர் (பக்கம் 63) - கவிஞரின் கையறு நிலை. மிகவும் மனம் நொந்து போயிருந்து எழுதியது தெரிகிறது.
... வாளேந்திய சிங்கமும் தூணேந்திய சிங்கங்களும் இணைந்த போது கைவிடப்பட்டோர் ஆகி சிதறடிக்கப் பட்டனர். மீண்டும் தாய்மார் இழுத்துச் செல்லப்படும் புதல்வர்களுக்காய் அந்நிய ஐPப்புக்களின் பின்னால் தலைவிரி கோலமாய் கதறத்தொடங்கினர். ...
வீழ்தலும் சோர்வும் எழுதலுக்கே என்பதற்கேற்ப உதிர்வு கவிதை. இரண்டு வருட இடைவெளியில் உதிர்வு நல்லதொரு பிரசவமாக வந்துள்ளது. பாராட்டுக்கள். என்னை ஒரு கணம் அதிரச் செய்த கவிதை விழியோரம் நீர் சிந்த வைத்த கவிதை அதற்கு தக்க மனமாற்றத்தை அள்ளிக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறது இந்த உதிர்வு.
... சிதைவுறாத மலர்களின் உதிர்வு மகத்துவம் அன்றோ. அடடா அங்கே மனசு கனமானது இந்த வரிகளுக்காய் காட்டிடையில் சூடிக்களிக்கவோ பார்த்த மகிழவோ எவருமின்றி பூத்துப் பின் உதிர்வு கொள்ளும் மலர்களின் சோகத்தில் கசிந்ததுண்டோ. ...
அதற்கு ஒத்தடம் தருவதாய் இந்த கவிதை
உதிர்வு ... பொன் ஒளிர் காலையில் கண் மலர்ந்து மௌனத்தில் கவிதை சொல்லும் வண்ண மலர்கள் அந்தி மென் இருளில் வனப்பு இழந்து வாடிப் பின் உதிர்கையில் துயரம் என்னுள் கசியும். ஒரு நாள் பொழுதிலா இவ்வெழில் வாழ்வென ஏக்கம் என்னுள் வழியும். இவை எல்லாம் இன்று அற்பமாய் போயின. வேண்டாப் பொருளாய் வள்ளத் தளத்தில் வீசியடித்த கடுக்கா நண்டகளுக்காய் வானின்று வீழ்ந்த பகையில் உடல் சிதறிபஇபோகும் உயிர்கள் முன்னால் சிதைவுறாத மலர்களின் உதிர்வு மகத்துவம் அன்றோ. ... கொடியும் கொம்பும் என்ற தலைப்பிலான கவிதையூடாக மூன்றாவது முறையாக தன்னை ஒரு கவிஞன் என அடையாளமிட வைத்திருக்கிறார் வாசகர்களுக்கு. காதல் என்பது ஒரு வரம். காதல் செய்யாதவர் இவ்வுலகில் யாருமே இருக்க முடியாது. அதே போல காதல் வலியை அல்லது காதலை பாடாதவன் கவிஞன் அல்லன்.
கொடியும் கொம்பும் ... நீண்ட இடைவெளிகளின் பின் சந்தித்த போது முகமறியாதவள் போல் கடந்து சென்றாய். கையில் குழந்தை இடைவெளிகளில் கணவன். கொடியும் கொடிபடரும் கொம்பும். கல்லானாலும் புல்லானாலும் சமூகம் திணித்த ஒழுக்கக் காற்றில் நீயோர் அலையும் பஞ்சு. இவற்றிடையே நூல் நிலைய வேப்ப மரமும் நீண்ட பஸ்தூர பயணங்களும் உயிர்ப்புற உன்மன அலையில் என்கலம் ஆடும். ...
சந்தோச பெருங்கடலை வாசகர் முன் தந்து செல்கின்றார். இதே போல இன்னோர் காதல் கவிதை யாரது? எனும் தலைப்பிலான கவிதை.அதிலே கடைசி பந்தி நமது வயற்கால நினைவுகளை மனத்திடை நீர்சொட்ட வைத்துவிடுகிறான் இந்த கவிஞன். வயற்கரைக் காற்று பட்டாலே ஒரு சுகம் தான்.
... இலையலையாய் நெல்மணிக்கதிராட நிரைநிரையாய் வளையல்கள் களை பிடுங்கி வாய்க்கால் குளித்து வரப்போரம் நடை பயில நீர் தெளித்துப்போகும் ஈரக்கால்கள் யாரது கால்கள். பெயர்வு கவிதை (பக்கம். 65) ...
... மண்ணின் ஈர்ப்பை உதைத்து விண்வில் விரைகிறது விமானம். (அடடடா) முன்னோர் பெயர்ந்தோர் முகவரி இழந்து பனி உறைந்த மலைச்சிகரங்களிடையே விறைத்துப் புதைந்தும் சிவப்பு விளக்காய் முன் தெரிந்த போதிலும். ...
அபாயம் என தெரிந்தும் இங்கு வந்து சேர்தவர்கள் தான் நாம். ஆனாலும் இன்று வாழப்பழகிக் கொண்டோம். இது பெரியதொரு சிந்தனைச் சிதறலாக வேதனைக்குரிய பகுதியாக பார்க்கப்பட வேண்டியது. பதிவைப்பு என்ற தலைப்பிலான கவிதை புலம்பெயர்ந்தோர் பலரது வாழ்வின் கொடுமையை நிறுவமுயலும் கவிதை. பாராட்டுக்கள். புலம்பெயர்ந்தோர் அவல வாழ்வை கோடிடும் கவிதை.
... வேரோடு பிடுங்கி வளம் கொள் பூமியில் பதிவைத்த வாழ்வோ வேர் கொள்ளவில்லை. மூடுண்ட அறையும் அயலறியா வாழ்வும் நினைவுகளாய் வெந்து சிவந்த எனது மண்ணின் அழிவுகளின் குவியலும் சிதறிப்போன உறவுகளும் உடல்களும் முன் விரித்த முடிவறியாப் பாதையில் நினைவுகளும் பெருமூச்சுக்களும் சுமையாய் கொண்ட தனித்த பயணம். ஆசைகளும் வாழ்வும் வேறு வேறாக தவறாய் நடப்பட்ட வாழ்வின் விதிப்பில் தொடரும் இருப்பு. ...
அம்மாவின் மரணம் ------- அனேகரது உறவுகள் மரணம் இப்படித்தான். புலம்பெயர் வாழ்வோரின் அவல வாழ்வை நிதர்சனப்படுத்தும் அடுத்த கவிதை இது.
கூடும் குயிலும் ... தன் குரலுக்காய் இரத்தம் வழியக் குதறப்பட்டு வீதியில் விழுந்து துடிக்கிறது கூடில்லா குயிற்குஞ்சு. ...
நான்கே வரியானாலும் மனத்திடை பீதியை தருகிற வரிகள். இதற்கு எனது மௌனம் மட்டுமே பதிலாகிறது. இதே போல இன்னோர் கவிதை நான்கே நான்கு வரிகள் தான் - மீறல் என தலைப்பிட்ட கவிதை:
மீறல் ... வீதிக்காய் விரித்து நெரித்த கற்களிடையே சிறு புல் ஒன்று பூத்திருக்கு. ...
மீறல் இல்லா வாழ்வென்ன வாழ்வு. விதிக்கப்பட்ட கோட்டில் வாழ்கிறபோது புரட்சி ஏது? பாராட்டுக்கள்.
குளிர்கால மரம் (பக்கம். 69) - பெரியதொரு மனச்சுமை பலவீனம் நம்பிக்கையீனம். ஈழத்து மற்றும் புலம்பெயர் வாழ்நிலை சூழல் தந்த கொடுமையின் ரணம் நிறந்த கவிதை.
யன்னல் என்ற தலைப்பிலான கவிதை இன்னமும் புலத்தமிழர் பலரது மன, வாழ் நிலையை கூறிநிற்கிறது. புலம் பெயர் வாழ்நிலையோடு ஒன்றிடாத மனசும் வாழ்வியலும்.
கனவுகளும் வாழ்த்துக்களும் என்ற தலைப்பில் அமைந்த கவிதை - இதுவும் இன்றைய புலம்பெயர் வாழ்வோடு ஒன்றிக்க இயலாத மனஇயல்பை காட்டி நிற்கிறது. பல ஏக்கங்களையும் சோக சுமைகளையும் அன்றைய நல்வாழ்வையும் எண்ணி ஏங்கி நிற்கும் நிலை. ஆனாலும் கவிஞருக்கு ஒன்று இக்கணத்தில் வாழ்ந்த விடு என தலைப்பிட்டு ஓர் கவிதையை எழுதிவிட்டு இன்றய கையிலமர்ந்த வாழ்வை வாழ முடியாமல் தத்தழிப்பதை நிறுத்தி விட்டு இன்றய பொழுதில் புலமானால் என்ன வாழப் பழகிக்கொள்ளுங்கள். இழப்பு... என்ற தலைப்பிலான கவிதை - இந்த மனநிலை இன்றைய புலம்பெயர் வாழ்வின் பலரது - அதாவது அன்றைய காலத்தில் ஈழத்தில் பிரபல விளையாட்டு வீரர்களது ஏக்க பெரு மூச்சை கொண்டு வந்து தருகிறது. எனக்கும் இன்றைய பந்தயங்களை தொலைக்காட்சியில் பார்க்கிறபோது சில சமயம் அழுதுவிடுவேன். இந்த கவிஞன் நல்லதொரு விளையாட்டு வீரனாகவும் ஈழத்தில் வாழ்ந்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெட்டத்தெளிவாகிறது.
... நண்பனுக்கு என்ற தலைப்பிலான கவிதை நண்ப சுதந்திரத்திற்கான இருப்பு உனதென்றாய். நன்று. சுதந்திரம் இனிது . நிறைவும் தருவது. உனக்கு ஒவ்வாதோருடன் நட்பு நான் கொள்கையில் உன்னுள் நிகழ்வது என்ன? நண்ப அவரவர் கருத்துடன் புரிதலுடன் வாழப்பழகுதலே இனிதும் நிறைவும். ...
இப்படி நினைத்து விட்டால் பிரச்சனைகள் தான் ஏது? சுதந்திரத்தின் மகிமையும் ஒவ்வொருவரினதும் உறுதியான இருப்பும் இது தான். மண்ணும் மனமும் கவிதையில் - இக் கவிதையும் புலப்பெயர்வு நமக்கெல்லாம் தந்த சோகத்தை சுமந்து நிற்கிறது.
... ஒருகாலை நேரப் புல்லாங்குழல் ஓசையாய் மனதை வருடும் மனைவி நினைவுகளும் மார்பில் தூங்கிய மழலைச் செல்வங்களும் இன்னும் இவையாய் என்மனக்காவில் குதிரையோடு வருவதற்கு குத்தகை தந்தது யார்? மண்ணுக்கும் மன உறவுக்குமான வோர் ஆத்மார்த்தமானது அதிகாரத்தால் அறுவதில்லை அறிக. ...
இதில் ஆக்ரோசம் பொங்க புலம்பெயர்ந்தோரது ஒட்டுமொத்த குரலாய் பதிவுசெய்திருக்கிறார்.
மைனாவிடு தூது - ஈழத்து சோகத்தை சுமந்து நிக்கும் கவிதை. பனிக்காலம் தான் இங்கு எமக்கு அதிக தனிமையை தந்து நிற்பது. அத்தகையதொரு பனிக்கால தனிமையில் இருந்து இந்த கவிதையை எழுதி இருக்கிறார் கவிஞர்.
... இலைகளை இழந்த கிழைகளின் நடுவே சிறகு கோதும் மைனாவே மைனாவே (பிறகு இப்படி கொதித்தப்போகிறார்.) அவர்களுக்கான வீடு இழந்ததனால் நாடிழந்தவன் நான். இன்றவர்கள் ஊரும் இழந்து வாழ்ந்த மண்ணின் வேரும் இழந்தனர். ...
1996 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த கோபம் கொதிப்பு யதார்த்தமானது தான். காரணத்தை இந்த கவிதையிலேயே கதையாக சொல்லி இருக்கிறார். உணர்வுகளை வெளிப்படையாக எழுத்தில் தெரிவிக்காதவன் கவிஞன் இல்லையே. நல்லதொரு காலப்பதிவு இது. இதே போல வெண்புறா என தலைப்பிட்ட கவிதை வெண்புறாவை வரவேகின்றதான கவிதை இது.
... நின் செங்காந்தள் விரல் பதியா மண்ணெங்கும் அவலக்குரல்களும் அழிவுகளின் குவியல்களும். ஆண்டு பலவாய் அழிவும் அவலமுமாய் நீண்டு கிடக்கும் எம் வீட்டு முற்றத்தில் நடைபழகல் ஆகாதோ? ... என முடித்திருக்கிறார். தனிமை என்பது கொடுமை. அதைவிட கொடுமை சகல இன்பங்களிலும் துன்பங்களிலும் ஒன்றாய் வாழ்வாகிப்போன தம்பதிகள் பிரிவது. அந்த சோகச்சுமையை இந்த தனிமை சொல்லி நிற்கிறது.
தனிமை ... உன்னால் தான் எனது தனிமை உன்னால் தான் ஆயினும் இருக்கிறென் என்கிறாய். குண்டு விச்சில் சிதறிய வீட்டில் முத்தங்களுடன் பிரிந்தோம் பனித்தன உன் விழிகள். நேசித்த மண்ணையும் உன்னையும் விட்டு விதிக்கப்பட்ட இருப்பில் பனித்த விழிகளே இன்றும் என்னுடன். பனிமூடிய கூரையில் குந்திய ஒற்றைக் குருவியாய் வரண்ட குளத்தில் ஒற்றை மலராய் வாழ்வின் நீட்சி. தனிமைதான் யாரக்கு யாரால்? ...
வல்லூறும் வெண்புறாவும் என்ற தலைப்பிலான கவிதை - இதை நல்லதொரு சுவாரசியமான கதைவடிவாக கொண்டு போகிறார். சிங்கள அரசு நமக்கு செய்த கொடுமைகளின் காலப்பதிவு. மிக சுருக்கமாக வரலாறை சொல்ல முனைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. நாலே நாலு பக்கங்களிற்குள் எமது நீண்டகால இனவெறி அரசின் அராஐகத்தை இரத்தினச்சுருக்கமாக தந்திருக்கிறார்.
கண்ணடி என தலைப்பிடப்பட்ட கவிதை - எப்போது ஒருவன் தன் அழகை இரசிக்கிறானோ அப்போ அவனுக்கு இந்த உலகம் பிடித்து போகிறது அல்லது வாழத் தொடங்கிவிட்டான் என பொருள். சோகத்தையும் பிரிவுத்துயரங்களையும் பாடிய கவிஞன் வாழத்தொடங்கி இருப்பது மனதுக்கு மகிழ்வைத் தருகிறது. இப்படி நான் எழுதி முடித்துவிட்டு அடுத்த கவிதைக்குள் நுழைகிறபோது நான் சொன்ன இந்த வாழ்தல் அங்கே தெரிகிறது. கவிதை அந்தியின் மின்னல் - அதோபோல கோடை - அதே போல ஓயாத அலை. இந்த கவிஞன் வாழத்தொடங்கி இருப்பது மனதிற்கு சந்தோசத்தை தருகிறது. வாழ்த்துக்கள். அம்மாவின் முகம் இதில் இந்த வரிகள் நம்மையும் பலத்த சோகத்திற்குள்ளாக்குகிறது.
... வைத்திய அழைப்பிற்கான காத்திருப்பு. அருகே அடிக்கடி எழும் பெருமூச்சுக்களுடன் அணைத்திருந்த கரங்களிடையே இரு சிறு விழிகள். சின்ன உடலில் என்ன நோயோ? வேதiனையை விளக்க முடியாப்பிஞ்சு. அன்னை துயர் ஏன் என்பதும் அறியாத தளிர் மலங்க மலங்க விழிக்கும் விழிகள். மனதைப் பிழிகிறது. ...
இவரது முதல் கவிதையான ஒரு காலை என்ற கவிதையில் காகம் என்ற பறவையை மட்டும் ஏன் எழுதி இருக்கிறார் என்கின்றதான கேள்வி எனக்கு ஆரம்பம் முதலாய் வந்து கொண்டே இருக்கிறது. காரணம் நான் கூட காகம் என்ற தலைப்பிலான கவிதை ஒன்றை எழுதி இருக்கிறேன். இதனால் தான் இவரது கவிதைகளோடு ஒன்றித்தேனோ என்று கூட ஒரு சந்தேகம். ஆனாலும் இக் கவிஞனது கவிதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தபோது தான் புரிந்தது, அப்படியல்ல என. காகம் யாருக்குமே தீங்கு செய்யாத பறவை. அழுக்குகளை அகற்றுகின்ற பறவை. தனது இனம் ஒன்று மரணித்துவிட்டால் ஊரையே கூட்டி வைத்து அழும். அத் தன்மையான கவி மன உணர்வை இந்த கவிஞன் கொண்டுள்ளான் என்பது இக்கவிஞனது கவிதைகளிற்கூடாக தெரிகிறது. ஆக மொத்தத்தில் இந்த கவிஞன் நல்லதொரு சமூக அக்கறை கொண்ட கவிஞனாகவே மிளிர்கிறான்.
வசதியாக, மரம் பற்றிய பாடல் ஆகிய கவிதைகள் என்ன சொல்ல வருகின்றன என்பதனை புரிந்தும் புரியாத நிலை. ஆனாலும் ஓரளவு உணரமுடிகிறது. சரியானதா தவறாய்ப்போகுமா என்பதில் சற்று மனத் தயக்கம் எனக்கு. ஆனாலும் பலமுறை வாசித்ததில் நல்லதொரு சமூக, குடும்ப அக்கறை தெரிகிறது. அதே போல ஸ்ராலின் கைகுலுக்க மறுத்த போது என்ற கவிதையிலும் சமூக அக்கறை தெரிகிறது.
இறுதியாக கவிதை என்கின்ற தலைப்பிலான கவிதை பற்றி.
... வேலைச்சுமையிடை மின்னலாய் தெறித்தன கவிதை வரிகள் தெறித்த பொறியில் விகாசம் கொள்ளாது மன யன்னலை மூடி வேலை முடித்து மின்னல் ஒளியை மீட்க முயல்கையில் உயிர் இழந்து கிடந்தது கவிதை. ... கவிதையும் வாழ்வும் ஒன்று. கவிதை வருகிற போது எழுதிவிடவேண்டும். அதே போல் தான் நமக்கொல்லாம் கிடைத்த மனிட வாழ்வும். இன்று வாழாது போனால் நாளை ஏது அந்த வாழ்வு? திரும்பி வந்துவிடுமா என்ன....!? எனது தந்தை அடிக்கடி சொல்வார் இன்று செத்தால் நாளை பால் என்பார். இன்றைய பொழுதை இன்பமாக்குவதே பேரின்ப வாழ்வு. இன்றைய நாளையும் இனிவரும் காலங்களை நமதாக்குவோம். வாழ்ந்து முடிப்போம்.
... வாழ்க்கை ஒரு முறைதான் வாழ்ந்து விடு . வீழ்ந்துவிடாதே. ...
|