அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 26 November 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நாகத்தீவு என்னும் ஈழம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: டாக்டர். இரா. நாகசாமி  
Saturday, 02 July 2005

(இரா.நாகசாமி தமிழகத் தொல்பொருள் ஆய்வுத்துறையின்  முன்னாள் இயக்குநர். வரலாற்றுத்துறையில் நேர்மையுடனும்  திறமையுடனும் அரும்பணி ஆற்றிவரும் மிகச் சிலருள் ஒருவர். தமிழக வரலாற்றுக்கு அடிப்படையாக உள்ள அரிய பல  சான்றுகளாக விளங்கும் கல்வெட்டுகள், பட்டயங்கள், சிற்பங்கள்,  படிமங்கள், கட்டடங்கள் மற்றும் ஓவியங்கள் முதலானவற்றை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர். கோவை  மாவட்டம், ஈரோடு தாலுகா, ஊஞ்சலூரில் 1930-ல் பிறந்த  நாகசாமி, சமஸ்கிருத மொழியில் முதுகலைப் பட்டமும் டில்லி மத்திய தொல்பொருள் ஆய்வுப் பள்ளியில் அகழ்வாய்வு,  பண்டைய சின்னங்களைப் பழுது பார்த்தல் முதலிய  பயிற்சிகளையும் பெற்றவர். சென்னை அருங்காட்சியகக்  கலைப்பிரிவின் தலைவ ராகவும் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். இவரது மாமல்லபுரம் தொடர்பான ஆராய்ச்சி  உலகப்புகழ் பெற்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்துக்கும்  மேற்பட்ட புத்தகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இக்கட்டுரை அவரின் தவம்  செய்த தவம் என்னும் நூலில் இருந்து நன்றியுடன் இங்கே மீள்  பிரசுரமாகின்றது.)

"இஸ்துகினே பூட்டான்" இது என்ன என்று நினைக்கிறீர்களா!  தமிழ்நாட்டில் தலைநகரில் வழக்கில் உள்ள தமிழ்தான் இது.  இழுத்துக் கொண்டு போய்விட்டான். என்ற சொல் சிதைந்து  இவ்வாறு வழங்குகிறது. சொற்கள் சிதைந்தால் ஏற்படும் மாற்றம்  இது. இதுபோல்தான் கீழ் வரும் சொற்றொடரும்.
"ஸித்தம் மஹாராஜ வஹயஹராஜேஹி அமேச இஸிகிரய  நாகதிவ புஜமேனி பதகர அதேனஹி பியகுதிஸ விஹார  காரிதே"
பிராகிருத மொழியும் தமிழ் மொழியும் கலந்து இப்படி  மலர்ந்துள்ளது. ஸித்தம் மங்கள சொல். மஹாராஜ  விருஷபராஜனுடைய அமைச்சன் இஸகிரியன் நாகத்தீவு  உடையானாயிருக்க பகதர பட்டணத்தில் பியங்குதிஸ்ஸன்  விஹாரம் கட்டினான் என்பது இதன் தமிழாக்கம்.
"கஸமுஸதஸ" என்பது போல் ஒலிக்கும் இந்தச் சொற்றொடர்  வரலாற்றுக்கு மிக முக்கியமான செய்தியைக் குறிக்கறது. 1800  ஆண்டுகளுக்கு முன்தையது. அப்போழுதே பொன்னேட்டில்  எழுதிவைக்கப்பட்டுள்ள செய்தி இப்பொழுது பத்திரிகையிலும்  ரேடியோ டீ.வி. ஆகிய அனைத்திலும் நாள் தவறாது "ஈழம்"  என்றும் யாழ்பாணம் என்றும் கூறப்படுகிறதே அதில் ஒரு  பகுதியின் தொண்மையான பெயர் என்ன என்று மேலே குறித்த  சொற்றொடர் தான் கூறுகிறது. இப்பொழுது நாம் ஈழம் என்று  கூறும் பகுதி வடமராச்சி தென்மராச்சி வலிகாமம் காரைநகர்  எழுவத்தீவு அனலைத்தீவு நயினாதீவு புங்குத்தீவு நெடுந்தீவு  எனப் பல பகுதிகளையும் சிறு தீவுகளையும் கொண்டது. இங்கு  வடமராச்சியில் "வள்ளிபுரம்" என்ற ஊர் உள்ளது. இங்கு தமிழ்  பேசும் ஹிந்துக்களே பெரும்பான்மையினராக வசிக்கின்றார்கள்.  இவ்வூரில் புகழ் வாய்ந்த திருமால் கோயில் ஒன்றுள்ளது.  இவ்வூரில் மணற்குன்றுகள் உள்ள பகுதியில் பண்டைய  கட்டிடப்பகுதிகளும் பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.  சிலசமயங்களில் பழங்காசுகளும் கிடைத்துள்ளன. திருமால்  கோயில் இருக்கும் பகுதியில் ஒரு புத்தர் சிலை 50  ஆண்டுகளுக்கும் முன்னர் கண்டெடுக்கப்பட்டது. இது ஆந்திர  மாநிலத்தில் அமராவதியில் புத்த சைத்தியத்தை அலங்கரித்த  சிலைகளைப் போலவே இருந்தது. அதே கல்லாலும்  செய்யப்பட்டிருந்தது. 1966 ஆம் ஆண்டில் இச்சிலை தாய்லாந்து  நாட்டு அரசுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது. இங்கு மேலும்  ஒரு பண்டைய கட்டிடத்தின் அடியில் ஒரு பேழையில்  தங்கத்தாலான தாமரை மலர்களும் ஆமை உருவமும் ஒரு  தங்கத் தகட்டோ லையும் காணப்பட்டன. 1936 ம் அண்டு இவை  கண்டெடுக்கப்பட்டன. பெத்த ஸ்தூபங்களோ கோயில்களோ  எடுக்கப்படும் போது அவற்றின் அடியில் வைக்கப்படும் "கர்ப்பப்  பொருட்கள்" இவை. இவற்றோடு கூட வைக்கப்படும் புனிதப்  பொருள்களை "தாதுகர்ப்பம்" என்று கூறுவர். அச்சொல் தான்  மேலை நாட்டார் வழக்கில் சிதைந்து "டகோபா" என்று ஆகி  பின்னர் "பகோடா" எனத்திரிந்தது.
வள்ளிபுரத்தில் பேழையில் கிடைத்த தங்கத் தகட்டோலை  வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதில் கி.பி. 2ம் நூற்றாண்டைச்  சார்ந்த பிராம்மி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. அந்த ஏடு  அந்நாட்டின் அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் தான்  மஹாராஜ வஹபன் என்பவனின் ஆட்சியில் நாகத்தீவை  இஸகிரீயன் என்ற அமைச்சன் ஆண்ட காலத்தில்  பியங்குகதிஸ்ஸன் என்ற பிக்கு படகர பட்டணத்தில் ஒரு பெளத்த  விஹாரம் கட்டியதை அந்தத் தகடு குறிக்கிறது. எறக்குறையக்  கி.பி. 125 லிருந்து 170 வரை வஹபன் என்ற அரசன் இலங்கைத்  தீவில் ஆண்டிருக்கிறான் என்றும் அவன் ஆட்சியில்  வள்ளிபுரத்தில் இந்த பெளத்த விஹாரம் கட்டப்பட்டது என்றும்  வரலாற்று வல்லுநர் கூறுவர். விருஷபன் என்ற சம்ஸ்கிருதப்  பெயரே என்று பிராகிருதத்தில் சிதைந்தது வஹபன் மகாராஜா  என்று தங்கத் தகட்டில் குறிக்கப்படுகின்றான். "இஸகிரய" என்ற  சொல் சிங்களச் சொல் அல்ல தமிழிலிருந்து வந்திருக்க  வேண்டும். "இஸகி அரயன்" என்ற சொல்லே இவ்வாறு  வந்திருக்க வேண்டும் என்று லங்காவில் தலை சிறந்த  தொல்லியல் வல்லுநர் பரனவிதானா கூறினார். இப்பொழுது  புங்குத்தீவு என்னும் பகுதி அக்காலத்தில் பியங்குத் தீவு என  வழங்கப்பட்டது. அத்தீவில் சிறந்த திஸ்ஸன் என்ற புத்தபிக்கு  துட்டகமணி என்ற அரசனைக் காணவந்ததாக மகாவம்சம்  என்னும் நூல் கூறுகிறது. அந்த பிக்குவே வள்ளிபுரத்து  விஹாரத்தை எடுத்தவராக இருக்கக் கூடும். இவை அனைத்தைக்  காட்டிலும் மிகவும் சிறப்பான செய்தி இப்பகுதியை நாகத்தீவு  என இத்தகடு கூறுவதேயாம். இவ்வோலையிலிருந்து யாழ்பாணம்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகத்தீவு என்று  அழைக்கப்பட்டது என்று தெரிகிறது. யாழ்பாணம் பல  பகுதிகளைக் கொண்டது எனக் கண்டோம். வடமராச்சி என  அழைக்கப்படும் பகுதியே அன்று நாகத்தீவு என பெயர்  பெற்றிருந்தது எனலாம். இன்று வள்ளிபுரம் என அழைக்கபடும்  ஊர் அன்று பிடகரே அதன என்று அழைக்கப்பட்டது. பத்தனம்  என்னும் சொல் அதனம் என சிதைந்து வழங்கியது. படகரே  என்பது வடகரை என்பதன் திரிபாக இருக்கலாம். எப்படி  இருப்பினும் வடமராச்சி என்று அழைக்கப்படுவது அன்று படகரே  என்பதில் ஐயமில்லை.
தமிழ் பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரமும்  மணிமேகலையும் நாகநாடு என்ற ஒரு நாட்டைக் குறிக்கின்றன.  எல்லா போகங்களும் நிறைந்து விளங்கும் நாடு நாகநாடு என்றும்  அது போல் எல்லா போகங்களும் நிறைய காவிரி  பூம்பட்டினத்தில் கண்ணகிக்கு மணம் செய்வித்து மகிழ்ந்தான்  என்று அவளது தந்தை மாநாயக்கனை இளங்கோவடிகள்  கூறுகிறார். இந்த நாகநாடு நானூறு யோசனை நீண்டிருந்தது  என்றும் இதை வலை வண்ணன் என்ற அரசன் ஆண்டான்  என்றும் மணிமேகலை கூறுகிறது. யாழ்ப்பாணமே நாகநாடு என  பல வரலாற்று ஆசிரியர் கூறிப்பர். சிலப்பதிகாரத்திற்கு உரை  எழுதிய அடியார்க்கு நல்லார் நாகநீணகர் என்றால் சொர்கம்  என்றும் நாகநாடு என்றால் பவணம் என்றும் குறிக்கிறார்.
நாகநாடு என்பது வேறு நாகத்தீவு என்பது வேறு எனக்கருத  இடம் உள்ளது. எது எப்படியிருப்பினும் நாகத்தீவு எது என்பதை  நிச்சையமாகக் கூறலாம். அதைக் குறிக்கும் அருமையான  வரலாற்று ஆதாரம் கிடைத்துள்ளது. இது சாதாரணமான ஆதாரம்  அல்ல பொன்னான ஆதாரம்.  
(இக்கட்டுரை பற்றிய கருத்துக்களை எழுதுங்கள்.)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  19950800 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3636 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com