அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 27 January 2021

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow மனித உரிமைகளும் விலங்கு உரிமைகளும் :
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மனித உரிமைகளும் விலங்கு உரிமைகளும் :   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எஸ்.வி.ராஜதுரை  
Sunday, 24 July 2005

மனித உரிமைகளும் விலங்கு உரிமைகளும் : சில கேள்விகள்

‘ஆதார உயிரினங்களில்’ (keystone species) ஒன்றான யானைகள் குறித்து, அழிந்து வருகின்ற - சரியாகச் சொல்லப் போனால் அழிக்கப்பட்டு வருகின்ற இந்தப் பேருயிர் குறித்து - ஏராளமான உயிரியல், சூழலியல், வரலாற்று, பண்பாட்டுத் தகவல்கள் நிறைந்த முதல் தமிழ் நூலை நமக்குத் தந்துள்ள ச.முகமது அலியும் க.யோகானந்தும் நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்குரியவர்கள். யானைகளின் உயிரியல் அமைப்பு, அவற்றின் பரிணாமம், அவற்றின் வகைகள், மானிட வரலாற்றிலும் பண்பாட்டிலும் அவற்றுக்குள்ள இடம், அவற்றின் வாழ்வியல், சூழலியலுக்கு அவற்றின் பங்களிப்பு , அவை எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், அவற்றின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள், ஆராய்ச்சிகள் எனப் பல்வேறு செய்திகளைத் தமிழ் வாசகருக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைக்கும் இந்த நூல், உலகெங்கிலும் - குறிப்பாக இந்தியாவில் அந்தப் பேருயிர்கள் முற்றாக அழிக்கப்படும் அபாய அறிவிப்பைத் தனது முக்கிய பகுதியாகக் கொண்டுள்ளது. அந்த மென்மையான ஜீவன்களுக்கு மட்டுமின்றி மனிதர்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகியுள்ள மற்றொரு பிரச்சனையையும் - அதாவது காடுகள் கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டு வருவதையும் தனது அக்கறைக்குள் கொண்டு வந்துள்ளது. பாமர மக்கள் மட்டுமல்லாது படித்த வர்க்கத்தின்ரும்கூட யானைகள் குறித்துக் கொண்டிருக்கும் தவறான தகவல்களையும் புரிதல்களையும் நயம்படப் போக்குகிறது இந்த நூல்.

இன்று ‘விலங்கு உரிமை’ (animal rights) பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. ‘விலங்கு உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உலகெங்கிலும் -குறிப்பாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் - நூற்றுக்கணக்கான அமைப்புகள் உள்ளன. குறிப்பிட்ட உயிரினமொன்றின் மீது அக்கறை செலுத்தி அதனைப் பாதுகாக்கவோ அல்லது அதனைக் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவோ தொடங்கப்பட்ட முந்திய அமைப்புகளிலிருந்து பண்புவகையில் முற்றிலும் வேறுபட்டதாய் இந்த ‘விலங்கு உரிமை’ அமைப்புகள் விளங்குகின்றன. ‘விலங்கு உரிமைகள்’ என்ற கருத்து பீட்டர் சிங்கெர் என்பார் 1975 இல் எழுதிய ‘ விலங்கு விடுதலை ‘ (Animal Liberation) என்னும் நூலிலிருந்து பெறப்பட்டதாக ‘விலங்கு உரிமைகள்’ குறித்துப் பேசும் இயக்கத்தினர் கூறுகின்றனர். எனினும் பீட்டர் சிங்கெர் இத்தகைய சொற்றொடர்களைத் தனது நூலில் பயன்படுத்துவதில்லை. மாறாக ‘விலங்கு நலன்கள்’ என்பது குறித்தே பேசுகிறார். அதாவது மனிதர்களைப் போலவே வேதனையையும் இன்ப நுகர்ச்சியையும் அனுபவிக்கும் ஆற்றல் விலங்குகளுக்கும் உண்டு என்று கூறுகிறார்.

சில விலங்கினங்களின் நரம்பு மண்டலமும் அவற்றின் மூளைகளின் சில பகுதிகளும் நமக்கு உள்ளனவற்றைப் போலவே இருக்கின்றன; ஒரு வகையில் அவை வேதனையையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கத்தான் செய்கின்றன. சிம்பன்ஸி போன்ற பெரும் வாலில்லாக் குரங்குகள் மிகத் தொடக்க நிலையிலான மொழியை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளன. சிம்பன்ஸி உள்ளிட்ட சில விலங்கினங்களுக்கு மனிதர்களைப் போலவே சமூக வாழ்க்கையும் உள்ளது. ‘விலங்குப் பேச்சு ‘( Animal Talk) என்னும் புத்தகத்தில் அமெரிக்கப் பத்திரிகையாளர் டிம் ·ப்ரெண்ட்(Tim Friend) சில சுவையான செய்திகளைத் தருகிறார்: ஒஹையோ அரசுப் பல்கலைக்கழகத்தில் வளர்க்கப்படும் ஷீபா என்னும் சிம்பன்ஸி, தான் பொறுக்கி எடுத்துக் கொள்ளும் ஆரஞ்சுப் பழங்களைப் பொருத்தவரை 1 முதல் 4 வரை எண்ணக் கற்றுக் கொண்டிருக்கிறது. அட்லாண்டாவிலுள்ள ஜார்ஜியா அரசுப் பல்கலைக் கழக மொழி ஆராய்ச்சித் துறையில் வ்ளர்க்கப்படும் ஒரு பொனொபொ சிம்பன்ஸி, ஒரு விசைப்பலகையிலுள்ள சில் குறியீடுகளைப் பயன்படுத்தித் தனது பயிற்சியாளர்களுடன் தகவல் தொடர்பு கொள்கிறது. "Pour the lemonade in the Coke" என்னும் வாக்கியத்திற்கும் "Pour the Coke in the lemonade" என்னும் வாக்கியத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்கிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் நியூ கலெடோனியாத் தீவிலிருந்து கொண்டுவ்ரப்பட்ட காக்கையொன்று உள்ளது. ஒரு சமயம் அதற்கு சிறப்புத் தீனி போடப்பட்டுள்ள வாளியொன்று அதனால் எடுக்க முடியாத இடத்தில் சரிந்து விழுந்துவிட்டது. பரிசோதனைக்கூடத்திலுள்ள மேசையிலிருந்த விரிசலொன்றில் ஒரு கம்பியைச் செருகி அதன் முனையைக் கொக்கியாக வளைத்து அதைக் கொண்டு அந்த வாளியை இழுத்துக் கொண்டது. திமில்களுள்ள திமிங்கிலங்களில் ஆண் திமிங்கலங்கள் சிக்கலான பாடல்களைப் புனைவதோடு பருவங்களுக்கேற்ப அவற்றில் மாற்றங்களையும் செய்து கொள்கின்றன. வெர்வெட் குரங்குகள் (Vervet monkeys) வெவ்வேறு எச்சரிக்கை ஒலிகள் மூலம் வருவது கழுகா அல்லது பாம்பா என்பதைத் தெரிந்து கொள்கின்றன. மரத் தவளையொன்று மரத்திலுள்ள துவாரமொன்றில் உள்ள தண்ணீரில் ஒரளவே முழ்கி அந்தத் துவாரத்தின் அளவுக்கேற்ப தனது குரலை மாற்றிக் கொண்டு அந்த மரத்தையே இரு இசைக் கருவி போல இசைக்கிறது. இது போன்ற பல தகவல்களைத் தரும் டிம் ·ப்ரெண்ட், " மனிதர்களும் சரி, பிற உயிரினங்களும் சரி ஒவ்வொரு நாளும் தமக்கிடையே பேசிக்கொள்ளும் விஷயங்கள் ஒரேமாதிரியானவைதான். அதாவது " பாலுறவு, ரியல் எஸ்டேட் விவகாரங்கள், நம்மில் யார் மேலதிகாரி (boss), இரவு சாப்பாட்டிற்கு என்ன இருக்கிறது? என்பன போன்றவைதான் என்னும் முடிவுக்கு வருகிறார். ". ·ப்ரெண்ட் இதோடு நிறுத்திக் கொள்வதில்லை. உலகின் எல்லா மக்களும் தமக்கிடையே தகவல் பரிமாறிக் கொள்வதெற்கென செயற்கையாக உருவாக்கப்பட்ட எஸ்ப்ராண்ட்டோ மொழியைப் போல் மனிதர்களும் மனிதரல்லாத பிற விலங்குகளும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு விலங்கு எஸ்ப்ராண்ட்டோவையும் உருவாக்க முடியும் என்றும் கூறுகிறார்.

‘விலங்குகள் சிந்திக்கின்றனவா?"( Do Animals Think?) என்னும் நூலை எழுதியுள்ள ·ப்ளோரிடாப் பல்கலைக் கழக உளவியல் அறிஞர் க்ளைவ் வைன் (Clive Wynne) என்பாரும் பூச்சியினங்கள், வெளவால்கள் போன்ற உயிரினங்கள் நிகழ்த்தும் பல்வேறு வகையான சுவாரசியமான செயல்பாடுகளை விவரிக்கிறார். எடுத்துக்காட்டாக, பூச்சிகளை இரையாகக் கொள்ளூம் வெளவால்கள் எவ்வாறு தாம் பறக்கும்போது எழுப்பும் அக ஒலியின் (ultra sound) எதிரொலி எவ்வளவு நேரத்திற்குப் பின் திரும்பிவருகிறது என்பதைக் கொண்டு தூரத்தை அளவிடுகின்றன என்பது போன்ற செய்திகளைத் தருகிறார். ஆனால் மொழியும் சிந்தனையும் பண்பாடும் மாந்த இனத்திற்கு மட்டுமே உரியனவென்றும் நமது பண்புகளையும் ஆற்றல்களையும் பிற விலங்குகளுக்கு ஏற்றிச் சொல்வது அறிவுடைமையாகாது என்றும் கூறுகிறார். விலங்குகள் சிக்கலான பணிகள் சிலவற்றைச் செய்கின்றன; மிகச் சிக்கலான சூழ்நிலைமைகளை எதிர்கொண்டு சமாளிக்கின்றன. எனினும் இவையெல்லாம் உயிரியல்ரீதியாக அவை பெற்றிருக்கும் ஆற்றல்கள், உயிரியல்ரீதியாக தாமாகவே, தன்னிச்சைச்செயல்களாகவே (automatic mechanism) நிகழ்பவையேயன்றி சிந்தனையின் விளைவாக அல்ல என்பதை வலியுறுத்துகிறார். "அவை தாம் செய்யும் வேலைகளைப் பற்றிய ஒர்மையை , உணர்வைக் கொண்டுள்ளனவா என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவற்றைப் பார்த்து மகிழும் வாய்ப்பு நம்க்குக் கிடைத்ததே என்னும் உணர்வு, ஒர்மை நமக்கு இருந்தாலே போதும் " என்கிறார்.

டிம் ·ப்ரெண்டின் கருத்துகளை ஒப்பிடுகையில் க்ளைவ் வைனின் கருத்துகளை எற்றுக் கொள்வது அவ்வளவு கடினமானதாகத் தொன்றவில்லை. ஏனெனில் ·ப்ரெண்டின் கருத்துகள் இன்று ‘விலங்கு உரிமைகளுக்காக’ப் போராடுபவர்களின் நிலைபாட்டிற்கு மிகவும் நெருக்கமானதாகத் தோன்றுகின்றன. விலங்கினங்கள் சிலவற்றுக்கு துன்பத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கும் ஆற்றல் உள்ளமை, அவற்றுக்குள்ள சமூக வாழ்வு, அவற்றிடம் காணப்படும் தொடக்க நிலைப் பேச்சு வடிவம், எளிய கணக்குகள் போடும் ஆற்றல் , எளிய கருவிகளைச் செய்யும் திறமை முதலியவற்றின் அடிப்படையில் விலங்குகள் அனைத்தையும் மனிதர்களுக்குச் சமமானவையாகக் கருத வேண்டும், விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையில் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதைத் தங்களது அடிப்படைத் தத்துவமாகக் கொள்கின்றனர் ‘விலங்கு உரிமைகள்’ பற்றிப் பேசுபவர்கள். மனிதர்களுக்குச் சில உரிமைகள் இருப்பதை, இருக்க வேண்டியதை இவர்கள் ஒப்புக் கொண்டாலும் விலங்குகளுக்கும் ,மனிதர்களுக்கு இருப்பது போலவே (எடுத்துக்காட்டாக ‘ உயிர் வாழும் உரிமை") எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்பது இவர்களது வாதம். இதை ஏற்றுக்கொள்ளாதவர்களை ‘மனித இனவாதிகள்’ (speciesist) என்றழக்கிறார்கள்!

ஒரு சிம்பன்ஸி தனது இனத்தைச் சேர்ந்த மற்றொரு சிம்பன்ஸியைக் கொல்கிறது; ஒரு யானை மற்றொரு யானையைத் தாக்குகிறது; காயப்படுத்துகிறது. இவற்றுக்கான காரணங்கள் எத்தகையனவாக இருந்தாலும், இத்தகைய செயல்களைச் செய்கிற மனிதர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பது போல , அல்லது அவர்களைத் துக்கில் போடுவது போல், கொலை செய்த சிம்பன்ஸியைத் தூக்கில் போட வேண்டும், காயப்படுத்திய யானையைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோருவதைப் போன்றதுதான் ‘விலங்கு உரிமையாளர்களின்’ கோரிக்கையாகும் . சுதந்திரமான நடமாட்டச் சுதந்திரத்தை மனிதர்களுக்குத் தருவது போல ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தில் குரங்குகள் சுதந்திரமாக நட்மாட வேண்டும் என்று யாரும் கேட்க மாட்டார்கள் எனக் கருதுவதில் தவறில்லை. விலங்குகளுக்கு ‘உரிமைகள்’ வழங்கப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் ஆற்றலும் மனிதர்களுக்குத்தான் வாய்க்கப் பெறுகின்றனவேயன்றி அந்த ‘உரிமைகள்’ பெற்ற விலங்குகளுக்கு அல்ல. எனவே விலங்குப் பாதுகாப்பு என்று பேசலாமேயன்றி ‘விலங்கு உரிமை’ எனப் பேசுவது அறிவுடைமையாகாது என்பது என் கருத்து.

.

‘பண்பாடு’ (culture) என்பது குறித்து ‘விலங்கு உரிமை’ போராளிகள் பேசுவது உயர்வகைப்பாலூட்டிகள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்போர் பலரது (primatalogists) கருத்துகளை ஒத்ததாக உள்ளது. எளிய கருவிகளைச் செய்தல், அல்லது இயற்கையில் கிடைக்கும் பொருட்களையே கருவிகளாகப் பயன்படுத்துதல், திமிஙகிலங்கள் பாடல்கள் அமைத்தல் போன்ற பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொள்வதைத்தான் இவர்கள் ‘பண்பாடு’ என்று கருதுகிறார்கள்.

ஆனால் நாம் மனிதப் பண்பாடு என்று பேசுகையில் மற்றவர்களிடமிருந்து பழக்க வழக்கங்களை அறிந்துகொள்வதை மட்டுமல்ல, வரலாற்றில் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் மாற்றக் கூடிய நமது ஆற்றலையும்தான் பண்பாடு என்கிறோம். பரிணாம வளர்ச்சியில் அறுபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சிம்பன்ஸியின் வளர்ச்சிப் பாதையும் மனிதனின் வளர்ச்சிப் பாதையும் தனித்தனியாகப் பிரிந்தன. இந்த அறுபது இலட்சம் ஆண்டுகளில் சிம்பன்ஸி இனம், மனித இனம் கிய இர்ண்டுமே பரிணாம வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஆனால் ஒரு சிம்பன்ஸி மற்றொன்றுக்கு வழைப் பழம் கொடுப்பதையோ , அது இரண்டு கற்களைப் பயன்படுத்தி ஒரு தேங்காயை உடைத்துத் தின்பதையோ, ஒரு தடியைப் பயன்படுத்திக் கறையான் புற்றுகளைக் கலைத்துக் கறையான்களைத் தின்பதையோ சிம்பன்ஸிகள் கடந்த அறுபது இலட்சம் ஆண்டுகளாக ஒரே மாதிரியாகத்தான் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு தலைமுறையைச் சேர்ந்த சிம்பன்ஸிகள் தமது அனுபவத்தையும் அறிவையும் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்துச் செல்வதில்லை. ஆனால் கடந்த அறுபது அல்லது எழுபதாயிரம் ஆண்டுகளில் மனிதர்களாகிய நாம் நம்மை நாமே மாற்றவும், முந்தைய தலைமுறையினரிடமிருந்து கற்றுக் கொள்ளவும், எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டவும், நாட்டார் கலைகளிலிருந்து செவ்வியல் இசைக்குச் செல்லவும், பீதோவெனின் சிம்·பொனியையும் ஜாஸ் இசையையும் உருவாக்கவும் , குகை ஓவியங்களிலிருந்து குவான்டம் இயற்பியலுக்கு வளர்ந்து செல்லவுமான ஆற்றலைப் பெற்றிருக்கிறோம். மற்றெல்லா விலங்குகளுக்கும், அதாவது மனிதனைத் தவிர்த்த எல்லா உயிரினங்களுக்கும் பரிணாமம் என்னும் கடந்தகாலம் மட்டுமே உள்ள்து. மனிதர்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகின்றனர்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு உண்மையைப் புறக்கணிக்க முடியாது. உலகிலுள்ள விலங்கினங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் தன்னிகரற்றதாக விளங்குவது மனித இனம்தான். மாந்தர்களால் தமது கைகளையும் மூளையயும் கொண்டு உழைக்கவும், திட்டமிடவும், உற்பத்தித் தொழில் நுட்பங்களை வளர்க்கவும் பன்னூற்றாண்டுக் காலப் பண்பாட்டையும் அறிவையும் திரட்டிக் கொள்ளவும், அவற்றைக் கொண்டு இயற்கையை வசப்படுத்தவும் முடியும். இயற்கையை மட்டுமல்ல, மானுட சமுதாயத்தையுமே திட்டமிட்ட, உணர்வுபூர்வமான வகையில் மாற்றுவதற்கான ஆற்றல் மானுடர்களுக்கு உண்டு. எனவே வெறும் உயிரியல்ரீதீயான மட்டத்தில் வலி, வேதனை, துன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிப்பதைக் காட்டிலும் கூடுதலான ஆற்றல்கள், உணர்வுகள், கற்பனைகள் மனிதர்க்கு.உண்டு. இந்த ஆற்றல்களை, உணர்வுகளை, கற்பனைகளை உருவாக்குவதில் மொழி சிறப்புப் பாத்திரம் வகிக்கிறது. எனவே, மனிதரல்லாத விலங்குகள் வெறும் உயிரியல்ரீதியாக அனுபவிக்கின்ற வலிகள், வேதனைகள் , மகிழ்ச்சிகள் ஆகியவற்றுடன் மனித உணர்ச்சிகளை ஒப்பிடுவதும், இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் விலங்குகளுக்கும் மனிதருக்கும் சம உரிமைகள் கோருவதும் ஏற்றுக் கொள்ளத்தக்கனவாகத் தோன்றவில்லை.

மேலும், கருணை, பிற உயிர்கள் மீது இரக்கம் என்பன போன்ற அறவியல் அடிப்படையில் பேசுவதாக உரிமை கொண்டாடும் ‘விலங்கு உரிமை ‘ அமைப்புகள் மனித விரோதத் தன்மையுடையவையாய் இருப்பதையும் நாம் காண்கின்றோம். எடுத்துக்காட்டாக Animal Liberation Front என்னும் அமைப்பு நடத்தும் இணைய தளத்தில் உள்ள ஒரு அறிக்கையின் பகுதியைப் பார்ப்போம்:

In the midst of our high-tech, ostentatious, hedonistic lifestyle, among the dazzling monuments to history, art, religion, and commerce, there are the ‘black boxes.’ These are the biomedical research laboratories, factory farms, and slaughterhouses—faceless compounds where society conducts its dirty business of abusing and killing innocent, feeling beings. These are our Dachaus, our Buchenwalds, our Birkenaus. Like the good German burghers, we have a fair idea of what goes on there, but we don’t want any reality checks. We rationalise that the killing has to be done and that it’s done humanely.

இந்த ‘விலங்கு உரிமை’ போராளிகளைப் பொருத்தவரை, உணவுக்காக விலங்குகளைக் கொல்வதும் (இது மனிதகுலம் தோன்றிய நாள் முதலே நடந்து வருகிறது) அறிவியல் பரிசோதனைகளுக்காக விலங்குகளைப் பயன்படுத்டுவதும் (இது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது) நாஜிக்கள் தங்களது சித்திரவதை முகாம்களில் நடத்திய மனிதப் படுகொலைகளுக்கு நிகரானவையாகும். இத்தகைய ‘விலங்கு உரிமை’ போராளிகளின் தீவிரவாதம், மனிதர்களின் நோய்களைத் தீர்ப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆகியோரையும் பரிசோதனைக் கூடங்களையும் தாக்குவதில் போய் முடிந்துகொண்டிருப்பதை அண்மைக் காலமாக ஐரோப்பாவிலிருந்து, குறிப்பாக, பிரிட்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.விலங்கு உரிமைகளைத் தீவிரமாக ஆதரிக்கும் டாக்டர் ஜெர்ரி விளாசக் (Jerry Vlasak) என்பார் பிபிசி வானொலி 4க்குக் கொடுத்த பேட்டியொன்றில், ‘பல இலட்சம் விலங்குகளைக் காப்பாற்றுவதற்காக ஒரு சில விஞ்ஞானிகளைக் கொலை செய்வது அதர்மமல்ல" என்று கூறியிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இத்தகைய போக்கிற்கு நமது நாட்டிலிருந்தே ஒரு உதாரணத்தைக் காட்டலாம். கோவில்களில் உயிரினங்கள் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டமொன்று தமிழக அரசால் இரண்டாண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட போது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களில் ஒரு துறவியும் அடங்குவர். இத் துறவி ராமகிருஷ்ணா மிஷனைச் சேர்ந்தவர். இந்த மிஷன் தனக்கு சிறுபான்மையினர் தகுதி தரப்பட வேண்டும் என்று கோரி சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. ஆனால், ‘கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம்’ , ‘ கோவில்களில் உயிரினங்களின் பலி தடை சட்டம்’ ஆகிய வந்தவுடனேயே தன்னை ஒரு ‘ இந்து’வாக அடையாளப் படுத்திக் கொண்டு அவற்றை ஆதரிக்கத் தொடங்கினார். ‘துறவிகளாகாத’ சில ‘ஆன்மீகப்’ பெருமக்கள் சந்தடி சாக்கில் புலால் உண்ணாமையின் , சைவ உணவின் பெருமையைக் கூட்டங்கள் போட்டு பேசத் தொடங்கினர். இவர்களில் ஒருவர்கூட குஜராத்தில் நடைபெற்ற மனிதப் படுகொலைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மாய்மாலவாதிகளை முகமது அலியும் யோகானந்தும் தங்கள் நூலில் சிறப்பாக அடையாளம் காட்டுகின்றனர். யானை முகத்தானை முழுமுதற் தெய்வமாகக் கருதும் சமயத் தலைவர்களிலிருந்து சாதாரண பக்தர்கள் வரை, அந்தப் பேருயிரை எவ்வாறெல்லாம் வதைக்கின்றனர், துன்புறுத்துகின்றனர், இழிவுபடுத்துகின்றனர் என்பதை விரிவாக விளக்கும் அவர்கள், கொடியவர்களால் சட்ட விரோதமாகக் கொல்லப்படும் யானைகளின் தந்தங்களிலிருந்து உருவாக்கப்பட்ட விநாயகர் உருவச் சிலைகளை வணங்கும் அளவிற்கு அவர்களது பக்தி வக்கிரப்பட்டுள்ளதை அம்பலப்படுத்துகிறார்கள். தமிழக அரசாங்கம் சென்னை நகரில் நடத்தும் ‘பூம்புகார்’ விற்பனை நிலையத்தில்கூட இத்தகைய தந்த வேலைப்பாடுகளைக் காணலாம்.

உலக அளவில் ‘விலங்கு உரிமைகள்’ பேசும் அமைப்புகளில் நுற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது சதவீத அமைப்புகள் மனிதப் படுகொலைகளுக்கு எதிராக, குறிப்பாக ஈராக் போருக்கு எதிராக ஒரு சொல் கூடப் பேசவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத் துறைப் பேராசிரியரும் ‘விலங்கு உரிமை’ ஆர்வலருமான காரி ·ப்ரான்ஸியோன் (Gary Francione) தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ள ‘ The American Left Should Support Animal Rights: A Manifesto" என்னும் ஆவணத்தில் கூறுகிறார்: ‘ பெரும்பாலான பெரிய (மற்றும் பணவசதி நிறைந்த) தேசிய (விலங்கு உரிமை) அமைப்புகள் (விலங்கு உரிமை தவிர) வேறு எந்த சமூகப் பிரச்சனைகளையும் பற்றிப் பேசாமலிருப்பதை மனதாரச் செய்துவருகிறார்கள். காரணம் அவற்றைப் பற்றிப் பேசினால் அவர்களது புரவலர்களாக உள்ள பழமைபேண் சக்திகளைப் பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதுதான்". அமெரிக்கவிலுள்ள் ‘விலங்கு உரிமை’ அமைப்புகளில் ஒன்றே ஒன்றுதான் 1990-91 இல் நடந்த ஈராக் போரைக் கண்டனம் செய்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன் ‘விலங்கு உரிமைகள்’ பற்றித் தான் பேசியபோது தனக்கு ஆதரவாக யாரும் அப்போது குரல் கொடுக்கவில்லை , ஆனால் இப்போதோ எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் ஆதரவு கிடைத்து வருகிறது என்று மகிழும் பேராசிரியர் பீட்டர் சிங்கெர், மனிதர்களின் உணவுத் தேவைக்காக உயிரினங்களைப் பெருமளவில் வளர்த்து அவற்றிலிருந்து இறைச்சி எடுக்கும் தொழிற்கூடங்களைக் கண்டனம் செய்து விரிவான நூலொன்றை எழுதியிருக்கும் மேத்யூ ஸ்கல்லி (Mathew Scully) என்பாரைப் புகழ்ந்து தள்ளுகிறார். கிறிஸ்துவ வலதுசாரிப் பிற்போக்குவாதியான ஸ்கல்லிதான் ஜார்ஜ் புஷ்ஷிற்கு சொற்பொழிவுகளை எழுதித் தருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தங்களுக்காக யானைகளைக் கொல்பவர்களுக்கு கடும் எச்சரிக்கையாக தந்தக் குவியல்களுக்கு எரியூட்டிய கென்ய அதிபர் அரப் மொய் மனித உரிமைகளைத் துச்சமாக மதிக்கும் ஒரு கொடுங்கோலன் என்பதையும் நூலாசிரியர்களுக்கும் சேர்த்துச் சொல்ல வேண்டியிருக்கிறது.

இத்தகைய ‘விலங்கு உரிமை’ சொல்லாடல்களைக் கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளும் நூலாசிரியர்களால் எழுதப்பட்டுள்ள ‘யானைகள்: அழியும் பேருயிர்’ என்னும் நூல் ‘மனித உரிமைகள்’ பற்றி நேரடியாகப் பேசாவிட்டாலும் அவற்றுக்குத் தடையாக இருந்துவரும் சாதியம், மூட நம்பிக்கைகள், சொல்லுக்கும் செயலுக்கும் சற்றும் தொடர்பற்ற மத நம்பிக்கைகள் முதலியவற்றைக் கடுமையாகச் சாடுகிறது. சுற்றுச் சூழல் சீர்கேடுகளுக்கு மூல காரணமே மேற்கத்திய அறிவியல்-தொழில் நுட்பம், யூத-கிறிஸ்துவச் சிந்தனை மரபு, ஐரோப்பாவின் அறிவொளி மரபின் தாக்கங்கள் ஆகியனதான் என்ற கருத்து இன்று பல அறிவுஜீவிகளால் ஒரு மோஸ்தராகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனோடு தொடர்புடைய மற்றொரு கருத்து, மேற்கத்திய மரபுகளுக்கு வெளியேதான் இயற்கையயும் விலங்குகளையும் கருணையோடு பார்க்கும் பார்வை இருந்தது என்பதாகும். இந்தக் கருத்தை மறுப்பதற்கான பல செய்திகளை ‘யானைகள்: அழியும் பேருயிர்’ நூலில், குறிப்பாக ‘பண்பாட்டில் யானைகள்’ என்னும் பகுதியில் காணலாம். ஆயிரக்கணக்கான யானைகளை மனிதர்களுக்கிடையிலான போர்களில் ஈடுபடுத்தி அவற்றுக்கும் சேர்த்து அழிவுகளை உண்டாக்கியவர்களில் ஹன்னிபால் என்னும் ஆப்பிரிக்க மன்னனும் நமது சங்ககால அரசர்களும் அடங்குவர். தமிழ் செவ்வியல் இலக்கிய மரபினை ஆழ்ந்து கற்று முற்றிலும் புதிய செய்திகளைத் தருகின்றனர் நூலாசிரியர்கள்.

பழங்குடி மக்கள் இயற்கையைப் பாதுகாத்து வந்தனர் , உயிரினங்களின் சமநிலையைப் பாதுகாத்து வந்தனர் என்பதெல்லாம்கூட முழுமையாக ஏற்கத் தக்க உண்மைகளல்ல.அமெரிக்க இந்தியர்கள், உணவுக்காக ஒரு பீவரையோ அல்லது மானையோ கொல்ல வேண்டியிருந்தால் தங்களை மன்னிக்கும்படிசம்பந்தப்பட்ட கடவுள்களிடம் வேண்டிக்கொள்வார்களாம். ஆனால் அதே அமெரிக்க இந்தியர்கள்தான் நூற்றுக்கணக்கான காட்டெருமைகளை மலை முகட்டுக்குத் துரத்திச் சென்று அங்கிருந்து அவை படுகுழியில் விழும்படி செய்து, இறந்துபோன எருமைகளின் இறைச்சியை குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைப்பார்களாம். இப்படிச் செய்கையில் தேவையற்ற அளவில் எண்ணற்ற எருமைகள் மடிந்தன. நியூஸிலாந்திலுள்ள மவோரி பழங்குடி மக்கள், ஒரு மரத்தை வெட்டும்போது மரக் கடவுளுக்கு நன்றி செலுத்தி விருந்து படைப்பார்களாம். ஆனால் அதே மவோரி மக்கள்தான் தேவையின்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழிக்கவும் செய்தனர்.

இத்தகைய உண்மைகளைக் கருத்தில் கொள்கையில் . இயற்கையையும் காட்டுயிர்களையும் அழிப்பதற்கான முழுப் பொறுப்பையும் நூலாசிரியர்கள் கூறுவது போல ‘ ஆறறிவு படைத்த மனிதர்கள்’ மீது சுமத்தும் எண்ணம் நமக்குத் தோன்றலாம். எனினும் இப்படிப் பொத்தம் பொதுவாக எல்லா மனிதர்கள் மீதும் சரிசமமாகக் குற்றம் சுமத்தி விட முடியுமா என்னும் கேள்வியும் எழத்தான் செய்கின்றது. இயற்கை மீது கைவைக்காமல், அதன் தொடர்ச்சியாக விலங்கினங்கள் மீதும் கைவைக்காமல் மனித குலம் ஒரு போதும் நீடித்து இருந்திருக்க முடியாது. எனினும், மனிதர்களுக்கிடையிலான உறவின் வடிவம்தான் மனிதர்களுக்கும் இயற்கைகுமுள்ள உறவின் வடிவத்தைத் தீர்மானித்து வந்துள்ளதை வரலாறு நெடுகக் காண்கிறோம். நாம் வாழும் காலத்தைப் பொருத்தவரை , எவ்வகையிலேனும் இலாபமீட்டுவதையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட முதலாளியச் சமூக அமைப்பு முறையும் அதனோடு சேர்ந்த அரசியல் சக்திகளும்தான் மனித குலத்தின் இருப்புக்கே அச்சுறுத்தலாக இருக்கும் அளவிற்கு இயற்கையை அழிப்பதிலும், சுற்றுச் சூழல் கேடுகளையும் மாசுகளை உருவாக்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த உண்மையான குற்றவாளியை மக்கள் அடையாளம் கண்டுகொள்ளவிடாமல் தடுக்கும் வேலையை நமது சமுதாயத்தில் திக்கம் செலுத்தும் கருத்துகளும் கருத்துப் பரப்பு சாதனங்களும் செய்துவருகின்றன என்பதை நூலாசிரியர்கள் பல இடங்களில் சுட்டிக் காட்டுகின்றனர். வணிக நோக்கங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன; இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன; ஆனால் மழை வேண்டி யாகங்கள் நடத்தப்படுகின்றன. கானங்கள் இசைக்கப்படுகின்றன.

அறிவோடும் அறவியல் உணர்வோடும் நீதியும் நியாயமும் நிறைந்த சமுதாயத்தையும், இயற்கையைத் தம் வசப்படுத்தும் அதே நேரத்தில் அதனை அழித்துத் தம்மையும் அழித்துக் கொள்ளாத முறையில் அமைந்த ஒரு உறவையும் உருவாக்கிக் கொள்ளும் உள்ளுறையாற்றல் மனிதர்களிடம் உள்ளது என்று உறுதியாக நம்புகிறவ்ர்களில் நானும் ஒருவன். அந்த உள்ளுறையாற்றல்கள் வெளியே வ்ராதபடி தடுத்து நிறுத்துபவை ‘ஆற்றிவு படைத்த’ மனிதர்களிடம் இயல்பாகவே குடியிருப்பதாகக் கருதப்படும் அழிவுச் சக்தியல்ல; சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிறைந்த சமுதாய அமைப்பும் அதற்கு முட்டுக் கொடுக்கும் கருத்துகளும்தான்.

இந்த நூல் ஆழ்ந்த மனிதநேயம் உடையவர்களால், மனித உரிமைகளைக் கருத்தில் கொண்டும் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு மேலுமொரு சான்றாக அமைந்துள்ளது ‘ சூழலியல்’ என்னும் பகுதியாகும். ‘ஆதார உயிரினம்’ என்பதற்கான இலக்கணம் என்ன? அந்த உயிரினத்தால் காட்டில் உள்ள பிற விலங்கினங்களுக்கும் தாவர இனங்களுக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன? இவற்றால் காடுகளின் செழுமை எவ்வாறு பேணப்படுகிறது? சுரண்டுபவர்களும் சுரண்டப்படுபவர்களுடன் சேர்த்து சுரண்டுபவர்களும் பயனடைய இந்தச் செழுமை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு அறிவாழம் மிக்க விடைகளைத் தருகின்றது இப் பகுதி. பருவ மழைக்கு உதவுபவை கழுதைக் கத்தல்களல்ல, ’மலைபடு கடாம்’ தான் என்பதை நம் சமுதாயத்தில் உள்ள படிப்பறிவில்லாப் பாமரர்கள், படித்த முட்டாள்கள் ஆகிய இரு சாரார்க்கும் உணர்த்துகிற பகுதி இது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 27 Jan 2021 05:45
TamilNet
Adding to the series of deceit by his predecessors and using the same modus operandi, SL President Gotabaya Rajapaksa has now appointed another domestic Commission of Inquiry (COI) on accountability. The three-member COI, announced through an extraordinary Gazette Notification on Thursday is tasked to find out about the preceding domestic COIs and Committees revelations on “any human rights violations, serious violations of the international humanitarian law and other such serious offences”. Further stating in the gazette that even though Colombo has withdrawn from “co-sponsorship policy”, it would continue to “work with the United Nations and its Agencies to achieve accountability and human resource development for achieving sustainable peace and reconciliation”.
Sri Lanka: Gotabaya sets up deceptive COI citing ‘sovereignty’and ‘non-aligned’foreign policy


BBC: உலகச் செய்திகள்
Wed, 27 Jan 2021 05:27


புதினம்
Wed, 27 Jan 2021 05:06
     இதுவரை:  20200649 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3399 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com