அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு arrow செய்திகள் arrow உலா arrow அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: குயிலி  
Wednesday, 31 August 2005

ஓகஸ்ட் மாதம் (2005ம் ஆண்டு) 27ம் நாள், சனிக்கிழமை மாலை  ஈலிங் கனகதுர்க்கை அம்மன்கோவில் மண்டபத்தில் (இலண்டன்) இளைஞன் சஞ்சீவ்காந்தின் "உராய்வு" கவிதை நூல் வெளியீடு சிறப்புற நிகழ்ந்தது. நூல் வெளியீட்டை முதன்மையாகக் கொண்டு அரங்கு ஒன்று நிகழ்வு மூன்று என்ற நோக்கில் நூல் வெளியீடு, ஆவணக்கண்காட்சி, கலைநிகழ்வு என மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றன. இம் மூன்று நிகழ்வுகளினதும் நாயகர்கள் இளந்தலைமுறையினராய் இருந்தது குறிப்பிடத்தக்கது.



மாலை 3:30 மணிக்கு
ஆவணக்கண்காட்சி தொடங்கியது.இந் நிகழ்வினை கவிஞரும், தமிழ்ப்பற்றாளருமாகிய திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள்  மரபுவழியாக ஒளியேற்றி தொடக்கி வைத்தார். யேர்மனியில் வசித்து வரும் திரு.அன்ரன் யோசப் அவர்களால் நடத்தப்பட்ட இக் கண்காட்சியில் இலங்கை - இந்திய - உலக நாணயங்கள், பணஓலைகள், முத்திரைகள், செய்தித்தாள்கள், கேலிச்சித்திரங்கள் என பல்வகையான சேகரிப்புக்களும், ஆவணங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் தமிழ் மன்னர் காலத்து நாணயங்கள் தொடங்கி, ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் என இதுவரை பலர் பார்த்திராத நாணயங்கள் மற்றும் பணஓலைகள் காணக்கிடைத்தன. தனது சேகரிப்பின் ஒரு சிறு பகுதியையே திரு.அன்ரன் யோசப் அவர்கள் இந்நிகழ்வில் காட்சிக்கு வைத்திருந்தார் - இருப்பினும் அத்தனை பொருட்களும் நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்களை  வியப்புக்குள்ளாக்கியது. பலரின் ஆர்வத்தையும் தூண்டிய இந்நிகழ்வை பலரும் வரவேற்றார்கள் - அதேபோல் இந்த அரும் பெரும் பணியை விடாமுயற்சியுடன் செய்துகொண்டிருக்கும் திரு.அன்ரன் யோசப்பின் செயல்வீரத்தை வியந்து பாராட்டினார்கள். கிடைத்தற்கரிய இந்த ஆவணங்களை நம் நாட்டில் மக்கள் பார்க்கவேண்டும் - எனவே ஈழத்திலும் இதுபோன்ற கண்காட்சிகளை வைக்கவேண்டும் என்கிற கருத்துக்களை சிலர் கூறினர். புலம்பெயர்ந்த இளந்தலைமுறையினர்க்கு பயனுள்ள இக் கண்காட்சியை இலண்டனில் இன்னும் விரிவாக நடத்தவேண்டும் என்கிற கருத்தையும் இன்னும் சிலர் முன்வைத்தார்கள். நாம் பலவிடயங்களை முன்னர் ஆவணப்படுத்தத் தவறியமையால் தான் இன்று பலதை இழந்து நிற்கிறோம் என்கிற ஆதங்கக்குரல்களையும் கேட்க முடிந்தது.





  
மாலை 4:30 மணிக்கு உராய்வு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு தொடங்கியது. இந் நிகழ்வினை திருமதி.சங்கரலிங்கம் அம்மையார் மங்கள விளக்கேற்றி மரபுவழி தொடக்கி வைத்தார்.அடுத்து தாயக விடுதலைக்காய் தம்முயிர் நீத்த மாவீரர்க்கும், மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.  அதனைத் தொடர்ந்து செல்வி.அபிராமி இராஜமனோகரன் தாய்மொழி வாழ்த்து பாட நிகழ்வு இனிதே தொடங்கியது.





நிகழ்வில் முதலாவதாக நாடகக் கலைஞர், ஊடகவியலாளர் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் [IBC] தொடக்க காலப் பணிப்பாளர் - தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தின் [TTN] தலைமைப் பொறுப்பில் இருந்தவர்) திரு.ஏ.சி.தாசீசியஸ் அவர்கள் நிகழ்விற்கு தலைமையேற்று தலைமையுரை நிகழ்த்தினார். தொடர்ந்தும் நிகழ்வுகளை அவரே நெறிப்படுத்தினார். இந்த உராய்வு கவிதைத் தொகுப்பின் கவிஞன் எப்படி தனக்கு அறிமுகமானான், அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (IBC) அவனது கவிதை வாசிப்புக்கள், தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (TTN) உண்டான நேரடிச் சந்திப்பு என தனக்கும் கவிஞனுக்கும் இடையிலான பல்வேறு அனுபவங்களை நிகழ்வின் இடையிடையே பகிர்ந்துகொண்டார். இளங்கவிஞன் சஞ்சீவ்காந்த்தை உரிமையோடு கவிக்கூர் என்று அழைத்து, தனக்கு பிடித்த கவிதைகளை கவிஞனின் குரலிலேயே வாசிக்கச் செய்து தனது விளக்கத்தை உணர்வுபூர்வமாகவும், சுவாரசியமாகவும் கூறினார். நாடகபாணியிலான இந்த தலைமையுரையை பலரும் இரசித்தார்கள்.



அதனையடுத்து சிவசிறி பாலகுமாரக் குருக்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். உராய்வு என்கிற கவிதை நூலின் பெயரை அறிவியல் அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும் அணுகி விளக்கம் சொன்னார். உராய்வு என்பது இரு பொருட்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது உருவாகிறது என்றும், அதுபோலவே இக் கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளும் சமூகத்தினது பல்வேறுபட்ட உராய்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இக் கவிதைகள் வேண்டிநிற்கும் சமூகமாற்றங்கள் நம் சமூகத்தில் நிகழவேண்டும் என்பதைக் கூறி, கவிஞனை வாழ்த்தி தனதுரையை நிறைவுசெய்தார்.

அடுத்ததாக கவிஞர் திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார். இவ்வெளியீட்டு நிகழ்வை ஒழுங்குபடுத்தும் வாய்ப்பு எப்படித் தனக்கு கிட்டியது என்றும், கவிஞனுக்கும் தனக்குமிடையிலான அறிமுகம் பற்றியும் குறிப்பிட்டார். அத்துடன் இந்த நிகழ்வு மூன்று நாடுகளை உள்ளடக்கி நடைபெறுகின்றது அதாவது கவிஞரும் கண்காட்சியாளரும் à®¯à¯‡à®°à¯à®®à®©à®¿à®¯à®¿à®²à¯ இருந்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பிரான்சில் இருந்தும், நிகழ்ச்சி நடைபெறுவது இலண்டன் என்றும் à®…வர் சுட்டிக்காட்டினார். கவிதைத் தொகுப்பில் கையாளப்பட்டுள்ள அறிவியல், பெண்விடுதலை போன்ற பல்வேறு கருப்பொருட்களையும் முன்னிறுத்தி அவை சார் கவிதைகளையும் வாசித்து தனது உரையை ஆற்றினார். உராய்வு என்றால் என்ன என்கிற விஞ்ஞான விளக்கத்தையும் அளித்தார். உராய்வு தொகுப்பில் உள்ள கவிதைகள் ஒலிநயத்துடன் இருக்கின்றன என்றும், ஒலிநயமுள்ள கவிதைகள் உணர்வை தீண்டுவனவாகவும், இலகுவாக பிறரைச் சென்றடைவனவாகவும் அமையும் என்றும் கூறினார்.அதேபோல் இவ்வயதிலேயே தனது கவிதைகளை சமூகம் சார்ந்து இயற்றும் இவ் இளங்கவிஞன், தம் வயதில் மாபெரும் கவிஞனாக திகழ்வான் எனக் கூறினார்.

அதன்பின் திரு.கந்தையா இராஜமனோகரன் அவர்கள் உராய்வு கவிதை நூலை வெளியிட்டு வைக்க, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும் - தமிழ் மாணவர் பேரவையின் நிறுவனருமான பொன் சத்தியசீலன் அவர்கள் நூலைப் பெற்றுககொண்டார். அதைத் தொடர்ந்து வாழ்த்துரை நிகழ்த்திய பொன் சத்தியசீலன் அவர்கள் இளங்கவிஞன் சஞ்சீவ்காந்தை மனதார வாழ்த்தியதோடு, இந்த இளந்தலைமுறையினரையும் அவர்களது முயற்சிகளையும், படைப்புக்களையும் வரவேற்றார்.



அவரைத் தொடர்ந்து "அப்பால் தமிழ்" இணையத்தள நெறியாளரும், சிறந்த மேடைப்பேச்சாளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். இளந்தலைமுறையினர் மீது நம்பிக்கை கொள்ளுதல் பற்றியும், தலைமுறை இடைவெளியை குறைப்பதுபற்றியும் குறிப்பிட்ட அவர், இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழ் அழியப் போகிறது என்று எதிர்காலம் பற்றி புலம்புவதை தவிர்த்து - இப்படியான இளைஞர்களை வரவேற்று செயலில் இறங்கவேண்டும் என்பதை அழுத்திக் கூறினார். கவிஞன் சஞ்சீவ்காந்தின் புனைபெயரான இளைஞன் என்பதைக் குறியீடாகப் பயன்படுத்தி, இன்றை இளைஞர்களும் - தமிழ் சமூகமும் பற்றி சிறப்பாக தனது கருத்துக்களை முன்வைத்த அவர், கவிதை பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. கவிதையின் இயல்பு கவிதையின் எளிமை என்றும், சாதாரண சொற்களே கவிதையாக மாறுகிறது என்றும் சில எடுத்துக்காட்டுக்கள் மூலம் தெளிவாக விளக்கினார்.

அடுத்ததாக மேடையேறிய அரசியல் ஆய்வாளர் திரு.பற்றிமாகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அறிவுடை சமூகத்தின் தேவை பற்றியும், தேடல் பற்றியும் பேசிய அவர் உராய்வு கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் அவற்றைத் தான் காண்பதாகவும் தெரிவித்தார். அறிவியல் - தொழில்நுட்பம் சார் கவிதைகளை முன்னிறுத்திப் பேசி, இக் கவிஞன் கவிதை என்கிற படைப்போடு மட்டும் நின்றுவிடப்போவதில்லை வேறுபல துறைகளிலும் மிளிர்வான் என்று கூறி உரையை நிறைவுசெய்தார்.



மாலை 19:00 மணியளவில் கலைநிகழ்வுகள் தொடங்கின. நூல் வெளியீட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வாக அமைந்த இந்நிகழ்வில் முதலாவதாக இசை நிகழ்வு  இடம்பெற்றது. உராய்வு கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் மூன்றைத் தெரிவு செய்து அவற்றைப் இனிமையாக இசையமைத்து செல்வி அபிராமி இராஜமனோகரன் மிக அற்புதமாகப் பாடினார். செல்வன் செந்தூரன் இராஜமனோகரன் வேய்ங்குழல் இசைக்க, செல்வி சிவகாமி இராஜமனோகரன் வயலின் இசைக்க, செல்வன் செந்தூரன் அனந்தசயனன் மிருதங்கம் இசைக்க இசை நிகழ்வு செவிக்கு விருந்தாகியது.

அதைத் தொடர்ந்து நடன ஆசிரியை திருமதி சாந்தி தயாபரன் நெறிப்படுத்திய இரண்டு நடனங்கள் இடம்பெற்றன. அவரது மாணவர்களான செல்வன் கஜிநாத் ஜெயக்குமார், செல்வன் சாயிபிரகாஷ் இராமகிருஷ்ணன், செல்வி சோபனா தயாபரன், செல்வி தீபிகா குணராஜா, செல்வி நிஷாந்தினி பாஸ்கரன், செல்வி ஸியான் யேசன், செல்வி கரோஷினி சிவராஜா, செல்வி ஷர்மி சிவராஜா, செல்வி பிரியங்கா குமாரகுலசிங்கம், செல்வி சரணியா குமாரகுலசிங்கம் ஆகியோர் சிறப்புற அபிநயித்த நடன நிகழ்வு பார்வையாளர் கண்களுக்கு விருந்து படைத்தது. குறிப்பாக திருக்குறளுக்கு பொருள் சொல்வதாய் அமைக்கப்பட்ட நடனம் பலரைக் கவர்ந்தது.

இறுதியாக உராய்வு கவிதைத் தொகுப்பின் கவிஞன் சஞ்சீவ்காந்த் ஏற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்வை இனிதே நிறைவுசெய்து வைத்தார்.





இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)


கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Apr 2024 02:24
TamilNet
HASH(0x5568075a0db8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 19 Apr 2024 02:33


புதினம்
Fri, 19 Apr 2024 02:33
















     இதுவரை:  24779045 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2980 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com