அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சுனாமி கொன்றதும் கொல்லாததும்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா - வை.ஜெயமுருகன்  
Monday, 05 September 2005

கொடியுயர்த்தி வாழ்ந்தவொரு
குடிவாழ்க்கை
இடிவிழுந்து எல்லாமிழந்து
இருக்கிறது சூனியமாய்
நாளையிது மீண்டும் நிமிரும்
மீள அழகொழிரும்
-புதுவை இரத்தினதுரை –


1.
அமெரிக்க சிந்தனையாளரும் வெள்ளைமாளிகையின் ஆலோசகர்களில் ஒருவருமான பிரான்ஷிஸ் புக்குயாமா வரலாற்றின் முடிவு பற்றிப் பேசினார். 'வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்' (The end of history and the last man)  என்ற தனது நூலின் மூலம் மனித வரலாற்றின் முடிவை பிரகடனம் செய்தார். புக்குயாமாவின் கருத்து நிலை ஐரோப்பிய புத்திஜீவித்துவ உலகில் பெரும் சர்ச்சைகளையும் எதிர்வினைகளையும் உருவாக்கியது. எனினும் அவர் தனது வெளிப்பாடு குறித்த விமர்சனங்களை பெரியளவில் பொருட்படுத்தவில்லை என்றே கூறப்படுகின்றது. ஆனால் 2001 செப்டம்பர் 11ல் இடம்பெற்ற அமெரிக்காவின் மீதான அல்கய்டாவின் தாக்குதல் புக்குயாமாவின் கருத்துநிலையை அடியோடு தகர்த்தது. இறுதியில் அவரது வரலாற்றின் முடிவு பற்றிய கனவு கனவாகவே போனது. ஒடுக்குமுறை அரசியலும் எதேச்சாதிகாரங்களும் இருக்கும்வரை வரலாறு ஒருபோதும் முடிந்துவிடப் போவதில்லை என்ற உண்மையை செப்டம்பர் 11, தாக்குதல் மீண்டும் ஒரு முறை உலகிற்கு உணர்த்தியது. உண்மையில் செப்டம்பர் 11 தாக்குதல் ஒரு ஒற்றையொழுங்கு உலக அரசில் போக்கினை கேள்விக்குள்ளாக்கியது. ஒரு வகையில் இதே போன்றதுதான்  2004 டிசெம்பர் 26இல் இடம்பெற்ற சுனாமி அனர்த்தமும். செப்டம்பர் 11 ஒரு ஒற்றையொழுங்கு அரசியல் போக்கை தகர்த்தது போல் டிசெம்பர் 26 சுனாமி ஆசிய அறிவியலாளர்களின் அறிவியல் கனவுகளை கலைத்தது எனலாம். வல்லசுப் பிரகடனங்களை செய்து கொண்டிருந்த இந்தியா ஒரு இயற்கை அனர்த்த்திலிருந்து தனது மக்களை பாதுகாப்பதற்கான உபாயங்களற்றிருந்தது. இதனை பிறிதொருவகையில் சொல்வதானால் டிசெம்பர் 26இன் சுனாமி நமது ஆசிய அறிவியல் உலகிற்கு விடப்பட்டிருக்கும் சவால், நமது அறிவியலின் தோல்வியை பறைசாற்றும் ஒரு பதிவு என்றும் கொள்ளலாம். அதேவேளை சுனாமி அனர்த்தம் மக்கள் மத்தியில் பிறிதொரு உணர்வலையையும் தோற்றிவிருக்கக்கூடும். சுனாமி கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுநாள் நிகழ்ந்தது. முதல் நாள் கிறிஸ்துவை நினைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்கள் பலர் மறுதினம் கடலால் அள்ளிச் செல்லப்பட்டனர். இது ஒரு வகையில் கடவுள் குறித்த கேள்விகளை உருவாக்கியிருக்கக் கூடும். நமது தமிழ் சமூகத்தைப் பொருத்தவரையில் வெறுமனே சடங்குகளில் மட்டுமே அவ்வப்போது உயிர்பெற்றுவந்த கடவுள்வாதம் உணர்வுபூர்வமாக உயிர்பெற்றிருக்கவும் கூடும். இதனை எதிர்மறையாகப் பார்ப்பதற்கும் இடமுன்டு. இவை சுனாமி பற்றிய சில பொதுநிலைக் குறிப்புக்கள்.

2.
தழிழ் தேசிய அரசியலைப் பொறுத்தரையிலும் ஒட்டுமொத்த இலங்கை அரசியலை பொறுத்தவரையிலும் சுனாமி ஒரு தீர்க்கமான அரசியல் மாறுநிலை காலகட்டத்தில் நிகழ்ந்தது. அது பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களையும், பலகோடிக்கணக்கான சொத்துக்களையும் அழித்து ஓய்ந்தது. ஆனால் சுனாமி அழித்தொழித்திருக்கவேண்டிய ஆயினும் சுனாமியால்  அருகில் கூடச் செல்ல முடியாத ஒரு விடயமும் இருந்தது. அது என்ன என்பதை இறுதியில் பார்ப்போம்.

ஆரம்பத்திலிருந்தே சுனாமி அனர்த்தம் ஒரு மனிதாபினப் பிரச்சனையாகப் பார்க்கப்படவில்லை. ஓவ்வொருவரும் தங்களது அரசியல் நலன்களில் நின்றே சுனாமியை அனுகினர். தெற்காசியாவில் தனது ஏகாதிபத்திய நலன்களுக்கான இடைவெளிகளை தேடிக் கொண்டிருந்த அமெரிக்கா சுனாமியை தனக்கான இடைவெளியாக்கிக் கொண்டது. குறிப்பாக அமெரிக்கா, படைகள் சகிதம் இலங்கை வந்தது அந்தச் சூழலில் பல்வேறு சந்தேகங்களையும் எதிர்வினைகளையும் உருவாக்கியது. இந்தியாவும் தனது புவிசார் அரசியல் நலன்களில் நின்றே சுனாமி அனர்த்தத்தை அணுகியது. எனினும் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்ததைத் தொடர்ந்து அது தனது தலையை உள்ளிளுத்துக் கொண்டது எனலாம்.

இந்த இடத்தில் தென்பகுதி பற்றி சொல்லவே தேவையில்லை அந்தளவிற்கு அது தனது கீழ்த்தரமான அரசியல் முகத்தைக் காட்டியது. தமிழர்விரோத அரசியலூடாக தனது பெருந்தேசியவாத நலன்களைப் பேனிக் கொள்ளும் வழமையான நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே தமிழர் தேசத்தின் சுனாமி அழிவுகளையும் பார்த்தது. சுருங்கக்கூறின் சிங்களம் சுனாமி அனர்த்தத்தை முழுமையாக மனிதாபிமான நீக்கத்திற்குள்ளாக்கியது (Dihumanised). இந்நிலைமைகள் தவிர்க்கமுடியாமல் தமிழர்தேசத்தையும் சுனாமியை அனர்த்தத்தை, அரசியலால் அளவிடும் நிலைக்குத் தள்ளியது.  இதில்  சுவையானதும் முக்கியமானதுமான ஒரு விடம் இருக்கின்றது. இன்று பொதுக்கட்டமைப்பை நடைமுறைப்படுத்தப் போவதாக பேசிவரும் திருமதி. சந்திரிக்கா குமாரதுங்கா அவர்கள்தான் சுனாமியை மையப்படுத்திய அசியலுக்கான தொடக்கப் புள்ளியை இட்டவராவார். இது பலரும் பார்க்க தவறியதொரு விடயமாகும். சுனாமி தாக்கிய மறுதினம் இத்தீவு முழுவதும் மக்களின் ஒப்பாரிகளால் நிரம்பியிருந்தது. அந்த வேளையில்  சந்திரிக்கா குமாரதுங்கா அவர்கள் கூறினார் “விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றது எனவே இப்போதைக்கு அவர்களால் யுத்தத்திற்கு வரமுடியாது” அவர் இதனை மிகவும் பகிரங்கமாகவே கூறியிருந்தார். ஒரு கட்சி சார்ந்த அரசியல் பார்வையாளர் இதனை ஜனாதிபதியின் பொறுப்பற்றதனம் என வர்ணிக்கக்கூடும். நமது நிலையில் இது வேறுவிதமான அரசியல் பகுப்புக்குரியதாகும். உண்மையில் இக்கருத்து வெளிப்பாடானது சந்திரிக்கா குமாரதுங்க என்னும் ஒரு தனிநபரின் குரலல்ல. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் கருத்து பேதமற்று கைகோர்த்து நிற்கும் சிங்கள இனவாதிகளின் ஒட்டு மொத்த வெளிப்பாடாகும். திருமதி. சந்திரிக்கா குமாரதுங்கா அவர்கள் தனது வெளிப்பாட்டின் மூலம் மறைமுகமாக ஒரு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த செய்தியையும் எங்களுக்கு சொல்லியிருக்கிறார். அதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்லலாம். கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் புரிந்துனர்வு ஒப்பந்தக் காலத்திலும் விடுதலைப்புலிகளின்; இராணுவ வலுச்சமநிலையை சிதைக்கும்; முயற்சியில் சிங்கள அரசும், அரச எந்திரங்களும் (Gevrnment Mesenaris)    தொடர்ந்தும் முயன்று வந்திருக்கின்றன என்பதுதான் அந்தச் செய்தி. அரசியல் சொல்லாடல்களை கட்டுடைத்துப் பார்க்கும் பகுப்பாளர்களுக்கு இது ஒன்றும் புதிய தகவலல்ல. தனது தொடர் முயற்சியில் தோல்வி கண்ட சிங்களம் தனது எதிர்பார்ப்பிற்கான ஈடேற்றத்தை சுனாமியின் முலம் எதிர்பார்த்தது. சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து சில தினங்களாக சிங்கள, ஆங்கில இனவாத ஊடகங்களின் வெளிப்பாடுகளை அவதானித்தோர் இதனை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளமுடியும். இதேவேளை இந்திய பார்ப்பனிய அரசியல் ஆய்வு வட்டாரங்களிலும் சிங்களக் கருத்துக்களுக்கு நிகரான கருத்துக்களே வெளியாகின இந்தியாடுடேயின் தற்போதைய ஆசிரியரும் பார்ப்பனிய அரசியல் ஆய்வாளருமான பிரபுசாவ்லா விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு 75வீதம் அழிந்துவிட்டதாக தனது கற்பனாவாத ஆய்வை அவசரமாக வெளியிட்டிருந்தார். எப்பொழுதுமே விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்பதில் சிங்கள இனவாதமும் தமிழக பார்பனியமும் ஒரு நோர் கோட்டில் சந்தித்து வருவதுண்டு சுனாமியை மையப்படுத்திய அரசியலிலும் அந்த சந்திப்பு நிகழத் தவறவில்லை.

3.
இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது பொது கட்டமைப்பு கைச்சாத்தாகி விட்டது. திருமதி. சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் தனது பங்காளிக் கட்சியான J.V.P.யினதும், தீவிர சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளினதும்  பாரிய எதிர்ப்பையும் மீறித்தான் இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். இப்பொழுது திருமதி.சந்திரிக்கா அவர்கள் குறித்து சில அபிப்பிராயங்கள் உருவாகக்கூடும். அவர் இனவாதத்தை எதிர்த்து வெற்றியீட்டியுள்ளார் எனச் சிலர் சொல்லக்கூடும். அல்லது இது பண்டாரநாயக்க பாரம்பரியத்திற்கே உரித்தான முற்போக்கு பாரம்பரியத்தின் நீட்சியெனவும் சிலர் கணிக்கக்கூடும். அல்லது இதனை சிங்கள பெருந்தேசியவாதப் போக்கு நெகிழ்வடைய தொடங்கியிருப்பதற்கான ஒரு புள்ளியெனவும் சிலர் மதிப்பிட முனையலாம். நாம் நினைக்கிறோம் பொதுக்கட்டமைப்பின் அடிப்படையிலான அரசியல் நீளுமாக இருந்தால் நாம் மேற் குறிப்பிட்டவாறான குரல்களை நிச்சயம் கேட்க முடியும். இந்த இடத்தில் நாம்சில கேள்விகளை  கேட்டுக் கொள்வோம். உண்மையிலேயே சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் இனவாதத்தை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கின்றாரா? சிங்கள இனவாத போக்கில் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா? அல்லது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளாவது இருக்கின்றதா? சந்திரிக்கா அம்மையாரின் விடயத்திற்கு வருவோம். ஆரம்பத்தில் தனது உயிரே போனாலும் பொதுக்கட்டமைப்பில் கையெழுத்திடுவேன் என சூழுரைத்தவர் இறுதியில் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தின் முன் மண்டியிட்டார். ஒரு அமைச்சரை கூட கையெழுத்திடுவதற்கு சிங்கள பௌத்த அடிபடைவாதம் இடமளிக்கவில்லை. சிங்களம் தனது தமிழர் விரோத நிலைப்பாட்டின் வெற்றியை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக் கொண்டது.

   உண்மையில் சிங்கள இனவாதப் போக்கில் நாம் ஒரு போதுமே  நெகிழ்வை எதிர்பார்க்க முடியாது. வரலாறு இதனை  தெளிவாகவே நிரூபித்திருக்கிறது. சுருக்கமாக சொல்வதானால் சிங்கள மக்கள் என்போர் இறந்தகாலத்தில் வாழும் ஒரு இனமாகும். சுனாமி பொதுக்கட்டமைப்பு என்பது அடிப்படையில் மனிதநேயப்பிரச்சனையுடன் தொடர்புடையது. ஆனால் அதனை மனிதாபிமானப் பிரச்சனையாகப் பார்க்கக்  கூடிய பக்குவ நிலையில் சிங்கள மக்கள் இல்லை. இன்று பொதுக்கட்டமைப்பை எதிர்த்து J.V.P. அரசமைப்பிலிருந்து வெளியேறியது. J.V.P. யின் பின்னால் ஒரு மக்கள் தளமொன்று இருப்பதை நாம் மறக்கலாகாது. சிங்கள தேசத்தின் முக்கிய மூன்று சிங்களபௌத்த பீடங்களும்; பொதுக்கட்டமைப்பை எதிர்த்தன. சனாதிபதியை சிங்கள பௌத்த சமூகத்திலிருந்து  வெளியேற்றி விடுவதாக எச்சரித்தன. அந்த எச்சரிப்பின் முன் சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் மண்டியிட நேர்ந்தது. ஜாதிகஹெல உறுமய, பிக்குகள் முன்னனி,  சிங்களதேசப்பிரேமிகள், என ஒரு பெரும் அணியினரே வீதியில் இறங்கினர். மார்க்சினுடைய மொழியில் இழப்பதற்கு எதுவுமற்றோர் என்போரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் 80 தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கின. இவைகளெல்லாம் சிங்கள பெருந்தேசியவாதத்தின் நிலைமாற்றத்திற்கு தயாரற்ற பண்புநிலையையே காட்டுகின்றன.  இத்தனைக்கும் விடயம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக்க கட்டியெழுப்புவதற்கான ஒரு கட்டமைப்புத்தான். திருமதி சந்திரிக்கா குமாரதுங்கா அவர்கள் கண்டி மக்களுடனான தனது தொலைக்காட்சி உரையாடலில் “சுனாமி கட்டமைப்பானது பிரதேச சபைகளுக்கு இருக்கும் அதிகாரத்தைக் கூடக் கொண்டிருக்கவில்லை” என்று கூறியிருந்தார். அதனைக் கூட எதிர்க்கும் சிங்களத்திடமிருந்த நாம் எதை எதிர்பார்க்க முடியும். இன்னொரு வேடிக்கை இப்பொழுது இந்தக் கட்டமைப்பிற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருக்கிறது. கட்மைப்பின் முக்கிய நான்கு சரத்துக்கள் ஏற்புடையவை அல்ல எனக் கூறப்பட்டுள்ளது.  சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட டி.சிவராம் குறிப்பிடுவார் இலங்கையில் எவர் ஆட்சியமைத்தாலும் பாராளுமன்றத்தில் பெரும்பாண்மையாக இருக்கப்போவது சிங்களவர்களாவர் எனவே அங்கு எடுக்கப்படும் முடிவுகள் என்பது எப்போதுமே சிங்களவர்களுக்குச் சாதகமாகவே இருக்கும். சத்தியமான வார்த்தைகள். உண்மையில் சுனாமிக்கட்டமைப்பு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பானது, இலங்கையின் அரசயந்திரங்கள் அனைத்தும் சிங்கள மயப்பட்டிருப்பதன் வெளிப்பாடாகும். அவற்றைப் பொருத்தவரையில் இலங்கையின் நீதி என்பது சிங்களவர்களுக்கான நீதியாகும். சமீபத்தில் பிந்துணுவௌh படுகொலை வழக்கில் கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன என்பதை எல்லோருமே அறிவர்.

நாம் முதலில் குறிப்பிட்டிருந்தோம் சுனாமி கொன்றழித்திருக்க வேண்டிய ஆனால் சுனாமியால் அருகில்கூட செல்லமுடியாத ஒரு விடயம் பற்றி. அதற்கான பதிலை நீங்கள் ஓரளவு ஊகித்திருக்கவும் கூடும். சுனாமி பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் கொன்றது. ஆசிய அறிவியலாளர்களின் கனவினைக் கொன்றது. ஆனால் சிங்கள இனவாதத்தை, சிங்கள பௌத்த அடிப்படை வாதத்தை கொல்ல முடியவில்லை. கொல்லவதற்கு அப்பால் அவற்றின் அருகில்கூட செல்லமுடியவில்லை. ஒரு சுனாமியால் மட்டுமல்ல ஆயிரம் சுனாமிகளாலும் அது சாத்தியப்படக் கூடிய ஒன்றல்ல என்பதையே சுனாமிக்கு பின்னரான சிங்கள அரசியல் போக்கு நமக்கு உணர்த்தி நிற்கிறது. சுனாமி அனர்த்தம் தமிழர் தேசத்தை பொறுத்தவரையில் நமது இழப்பை இரட்டிப்பாக்கியிருக்கின்றது.  ஆக்கிரமிப்பு யுத்தமொன்றினை சுமந்து நின்ற நமது தேசம் சுனாமி அனர்த்தத்தால் இன்னுமொரு பெரும்துயரத்தையும் சுமக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றது.
கலாநிதி சோமஸ் கந்தன்  தனது கட்டுரையில் “2004 டிசெம்பர் – 26 சுனாமி எம்மைப் பொறுத்தவரையில் இரண்டாவது சுனாமியே” எனக் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையில் அது மெத்தச் சரியான வரிகள். எனினும் முதலாவது சுனாமியை எதிர் கொண்டு நிமிர்ந்த நமது தேசம் இரண்டாவது சுனாமியிலிருந்து மீன்டெழ அதிக காலம் எடுக்கப் போவதில்லை என்பதில் நாம் நம்பிக்கை கொள்வோமாக. எமது விடுதலைப் போராட்ட வரலாறு அத்தகையதொரு நம்பிக்கைக்கான கற்றலை எமக்கு  தந்திருக்கிறது. நம்பிக்கை கொள்வோம் நமது கனவுகள் எதுவும் வீண் போகப்போவதில்லை.


இந்தப் பின்னணியில்தான் இத் தொகுப்பு வெளிவருகிறது. இது சுனாமி பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவாகவும் ஒரு குறிப்பிட்ட கால கட்ட அரசியல் போக்கின் ஆதாரமாகவும் இருக்குமென நாம் நம்புகிறோம். இது ஒரு கூட்டு முயற்சியின் அறுவடையாகும். குறிப்பாக அப்பால் தமிழ் குழுமத்தினருக்கான இத் தொகுப்பின் வெளியீட்டாளரும் அப்பால் தமிழ் இணையத்தளத்தின் (www.appaal-tamil.com) தனநெறியாளருமான கி.பி.அரவிந்தன் அவர்களது தொடர்ச்சியான உற்சாகப்படுத்தலும் உறுதுணையும் இல்லாதிருந்தால் நிச்சயமாக இத்தொகுப்பு சாத்தியப் பட்டிருக்கப் போவதில்லை. இப்படியொரு முன்னுரையை நாம் எழுத வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. தமிழ் தேசியத்திற்கான பணியில் தொடர்ந்தும் நீடிப்போம்.

யதீந்திரா
வை.ஜெயமுருகன்
திருக்கோணமலை.
11-07-2005

(அப்பால் தமிழின் வெளியீடான உள்முகம் - சுனாமி பற்றிய பதிவுகள் நூலுக்கான் முன்னுரை இது.)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  24779271 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3099 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com