அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 01 December 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத்து மலையகக் கூத்துக்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.நித்தியானந்தன்  
Wednesday, 05 October 2005

(வெளிவரவுள்ள கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளையின் 'ஈழத்து மலையகக் கூத்துக்கள்'  என்னும் ஆய்வு நூலுக்கான முன்னுரை அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இங்கு நன்றியுடன் பிரசுரமாகின்றது.)


லங்கையின் மத்திய மலைநாட்டின் திகிலூட்டும்  வனாந்தரப்பிரதேசங்கள் அழிக்கப்பட்டு அங்கு முதல் மனித  மூச்சு உணரப்பட்டபோதே அங்கு கூத்தும் கும்மியும்  கோலமிட்டிருந்தன. ஒப்பந்த கூலிகளாக - பஞ்சை பராரிகளாக  தமிழகத்துக் கிராமங்களில் இருந்து மேகம் மூடிய  மலைச்சரிவுகளில் கால்பதித்த தமிழ் மக்கள் தமது ஊனோடு்ம்  உயிரோடும் கலந்துவிட்ட கலாச்சார பாரம்பரியத்தையும்  சுமந்தே வந்திருக்கிறார்கள். வானம் பொய்த்த பூமியையும்  காய்ந்துபோன கண்மாயையும் புறந்தள்ளிவிட்டு அந்த மக்கள்  கூட்டம் அலைகடல் தாண்டி வனாந்தரங்கள் கடந்து  மலைத்தாயின் மடியிலே சங்கமி்த்தபோதும் அவர்களின் கூட்டு  மனதின் ஆழ்மனப்படுக்கையில் அருவித்தாரையாய்  காலாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும் கலைப்பெருக்கின்  பிரவாகம் ஒருபோதும் வரண்டதில்லை. அவர்களின்  நம்பிக்கைகள், வழிபாடுகள், சடங்குகள், சம்பிரதாயங்கள்,  ஐதீகங்கள் அனைத்திலும் வேரோடியிருந்த  பண்பாட்டுக்கூறுகளை அந்த சமூகம் புதையலாகச் சுமந்து  வந்திருக்கின்றது.
கூலிகளாக, வறுமை மிஞ்சிக்கெட்ட கடைநிலைச் சமூகமாக,  நிரட்சர குட்சிகளாக அந்த சமூகம் நாட்டுப்பாடலில்,   தெம்மாங்கில், தாலாட்டில், ஒப்பாரியில், கும்மியில்,  லாவணியில், கரகத்தில், காவடியில், கோலாட்டத்தில்,  ஒயிலாட்டத்தில், கோடாங்கியில், உடுக்கடியில், பூசாரிப்பாட்டில்,  வெட்டியான்-வெட்டிச்சி பாட்டில், காமன்கூத்தில் தங்களின்  பண்பாட்டு முதுசத்தை அழிந்துபோகவிடாமல் பாதுகாத்து  வந்திருக்கினறது.
மலையகம் தனித்தேசிய இனமாகத் தன்னை  பிரக்ஞைபூர்வமாகப் பிரகடனம் செய்யும் இன்று மலையக  சமுதாயத்தின் பண்பாட்டு வேர்களை அடையாளம் காண்பதும்  அவற்றப் பேணிப்பாதுகாப்பதும் அவசரப்பணிகளாக  அமைகின்றன. பொதுக்கலாச்சார பாரம்பரியத்திற்கும்,  பொதுவான வரலாற்று இருப்பிற்கும், பொதுச்சமூக  உணர்விற்கும் பாததியதை கொண்டாடும் போதுதான் சமூகம்  பிறப்பெடு்க்கின்றது. மலையகத்தின் நாட்டார் வழக்காறுகள்  சார்ந்த அனைத்தும் தொகுத்து பேணிப் பாதுகாக்கபடவேண்டும்  என்ற தேடலும் நாட்டமும் இன்று அதிகரித்து வருகின்றது.
மலையக நாட்டாரியலில் மலையக நாட்டுப் பாடல்களைத்  தொகுத்த அரும்பணியின் பிதாமகராக ஸி.வி.வேலுப்பிள்ளை  சரித்திர முக்கியத்துவம் பெறுகிறார். 'மலைநாட்டு மக்கள்  பாடல்கள்' ஸி.வி.யின் மிகமுக்கிய தொகுப்பாகும். காமன்கூத்து பற்றி ஈழநாடு(1959) இதழிலும், கோடங்கி பற்றி தினகரன் (1959) ஏட்டிலும் ஸி.வி. எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.  நாட்டுப்பாடல் பற்றியும், ஒயிலாட்டம் பற்றியும், கோடங்கி  குறித்தும், காமன்கூத்து பற்றியும் Born to Labour (1970)  என்ற  ஆங்கில நூலிலும் பதிவு செய்துள்ளார்.
மலையக நாட்டுப்பாடல்களை உணர்வு பூர்வமாகவும்  அறிவுபூர்வமாகவும் திரட்டித்தந்திருக்கும் சாரல்நாடனின்  'மலையக வாய்மொழி இலக்கியம்'(1993) என்ற தொகுப்பு  முயற்சி பாராட்டத்தக்க பணியாகும். இப்பணியில்  சி.வே.ராமையா, சி்.எஸ்.காந்தி, சி.அழகுப்பிள்ளை,  ஏ.பி.வி.கோமஸ், டி.எஸ்.ராஜு, எஸ்.வேதாந்தமூர்த்தி  ஆகியோரின் முயற்சிகளும் வரலாற்றுப்பதிவுக்குரியன.
'இலங்கை மலையகத்தமிழரின் நாடகமரபும் காமன்கூத்தும்'  என்ற தலைப்பில் எஸ்.திருச்செந்தூரன்  இலங்கைப்பல்கலைகழகக் கொழும்பு வளாகத்தின்  கல்வித்துறைக்கு சமர்ப்பித்த கல்வி-நாடகவியல்  டிப்ளோமாவிற்கான ஆய்வுக் கட்டுரையும் மலையக நாடகமரபு  பற்றிய முன்னோடி ஆய்வு முயற்சியாகும்.
'மலையக பாரம்பரிய கலைகள்'(1992) என்ற மாத்தளை  வடிவேலனின் ஆய்வுநூல் மலையகத்தின் பாராம்பரிய  இசைக்கருவிகள், மலையகக் கூத்துகள் பற்றி  மேற்கொள்ளப்பட்ட முதல் முக்கிய வரலாற்றுப் பதிவாகும்.  'மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும்'(1994) என்ற மற்றுமொரு ஆய்வுநூலை 'அசாத்திய துணிச்சலுடன் கூடிய  தீமிதிப்பு' என்று இரா.சிவலிங்கம் குறித்துள்ளார்.
மலையக நாட்டாரியலின் இந்த ஆய்வுப்பரப்பில் கலாநிதி  காரை.செ.சுந்தரம்பிள்ளை ஆக்கியுள்ள 'ஈழத்து மலையகக்  கூத்துக்கள்' என்ற இந்த ஆய்வு நூல் தனித்துவ  முக்கியத்துவத்தை பெறுகின்றது. 'வடஇலங்கை நாட்டார்  அரங்கு' என்ற காரை.செ.சுந்தரம்பிள்ளையின் ஆய்வு நூல்  ஈழத்தின் கூத்துமரபு பற்றிய அவரது ஆழ்ந்த புலமையின்  சாட்சியமாகும். இவர் எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்ட  பதினைந்திற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்து நூல்கள்  நாட்டுக்கூத்தின்பால் இவர் கொண்டுள்ள ஆத்மார்த்த  ஈடுபாட்டினை வெளிப்படுத்துவன. ஈழத்து இசை நாடக வரலாறு, நடிகமணி வி.வி.வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும் போன்ற  நூல்களும் சிங்கள நாடகமரபு பற்றிய ஆய்வும் கூத்துணர்வு  இவரது சுவாசப்பையின் நுண்ணறைகளில் உலா  வந்துகொண்டிருப்பதை கட்டியங் கூறுகின்றன.
ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பயிலப்பட்டுவந்த கூத்து  மரபினை ஆய்வதை தன் வாழ்நாளின் இலட்சியமாக  வரித்துக்கொண்டுவிட்டதைப்போலவே காரை.செ.சுந்தரம்பிள்ளை செயற்பட்டு வந்திருக்கிறார். பல்கலைக்கழக ஆசிரியனின்  நுட்பத்தோடும், கூத்துக்கலையின் மகத்துவம் உணர்ந்த  கலைஞனின் ஆத்மார்த்த ஈடுபாட்டுடனும், இசைப்புலமையும்  மொழி நுண்ணுணர்வும் கொண்ட அறிவார்ந்த நோக்குடனும்,  கல்விமானின் விசாலமான மனப்பக்குவத்துடனும் மலயக  கூத்துகளின் தோற்றத்தையும் அவை பயிலப்பட்டுவரும்  பாங்கினையும் காரை.செ.சுந்தரம்பிள்ளை சிறப்பாகவே ஆய்வு  செய்திருக்கிறார்.
'மலையகக் கூத்துக்களின் ஊற்றுக்கால்களை மலையகத்தில்  தேடமுடியாது' என்ற பிரகடனத்தோடு இந்த நூல் தனது  ஆய்வுத்தேடலை ஆரம்பித்துள்ளது. மலையகக் கூத்துகளின்  ஊற்றுக்கால்களை ஆராய தமிழகத்தின் கூத்துமரபை  சரியாகவே இனங்கண்டிருக்கிறார். இதனால்தான் ODDVAK  HOLLUP என்ற நோர்வே ஆய்வாளர் மலையகத் தமிழரின்  சாதிஅமைப்பு, கலாச்சாரா அடையாளம் பற்றிய தனது  ஆராய்ச்சிக்கு MICHAEL MOFFATTன் செங்கல்பட்ட மாவட்ட  தலித் மக்களின் சமய நம்பிக்கை பற்றிய ஆய்வையும்,  BRENDA BECKன் கோவை மாவட்ட மக்களின் பண்பாடு  பற்றிய ஆய்வையும், LOUIS DUMONTன் தமிழகத்தின்  பரமலைக்கள்ளர் பற்றிய ஆய்வையும் துணைக்கழைக்க  நேர்ந்தது.
இந்து நாகரிகம் குறிந்த காரை.செ.சுந்தரம்பிள்ளையின்  செழுமையான ஞானம் மலையகக் கூத்துகள் பற்றிய ஆய்வுக்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. புராணங்களை  அடிக்கொண்டெழுந்த காமன்கூத்தினையும், இதிகாசத்தை  ஆதாரமாகக் கொண்டெழுந்த அருச்சுனன் தபஸையும், உண்மை வரலாற்றையும் ஐதீகத்தையும் அடிக்கொண்ட பொன்னர் -  சங்கர் கூத்தையும் ஆராயும் துல்லியத்தில் காரை  சுந்தரம்பிள்ளையின் இந்துசமய ஞானம் பிளச்சிடவே  செய்கிறது.
STUART BLACKBURN என்ற நாட்டாரியல் அறிஞர் கூத்து  ஆற்றுகைக்கான ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை  (Performance profile) முன்வைக்கிறார். கூத்தின் பெயர், கூத்து  நிகழும் பகுதி, சூழல் அமைவு, பயன் நோக்கு, நிகழ்த்துநர்கள்,  பார்வையாளர்கள், கதை பாட்டு ஆட்டம் ஆகிய ஊடகம்,  புத்தாக்கங்கள், உள்ளடக்கம் கூத்துப்பிரதியின் வடிவங்கள் என்ற பதது அடிப்படைக்கூறுகளை வலியுறுத்துகிறார்.  காரை.செ.சுந்தரம்பிள்ளை இத்தகைய ஒரு விரிந்த சட்டகத்தில்
மலையக் கூத்துகளை ஆயும் பாங்கினை இந்நூல்  எடுத்துக்காட்டுகின்றது.
காமன்கூத்தில் வெட்டியான்-வெட்டிச்சி என்ற இரண்டு  பாத்திரங்களும் மன்மதன்-ரதி ஆகிய பாத்திரங்களின்  தோழன்,தோழி போலச் செய்ற்படுகின்றன என்று சுட்டிக்காட்டும் காரை.செ.சுந்தரம்பிள்ளை சாதி பேதம் பெரிதும் பாராட்டாத  மலையகத்திற்குரிய சிறப்பம்சம் என்று கூறுகிறார்.
ஆனால் R.Jayaraman தனது CASTE CONTINUITIES IN  CEYLON (1975) என்ற தனது ஆய்வு நூலில் காமன் கூத்தினை விபரிக்கும்போது சாதியமைப்பின் பாரம்பரிய தொழிற்பாடு  காமன்கூத்தில் வெளிப்படுவதை சுட்டிக்காட்டுகிறார். இக்காமன்  கூத்தில் வெளிப்படும் பாரம்பரிய சாதியமைப்புத்  தொழிற்பாடுகள் மலைநாட்டின் படிமுறை அமைப்பில்  சாதிவகிக்கும் இடத்தை புலப்படுத்துவதாக ஆர்.ஜயராமன்  குறிப்பிடுகிறார்.
காமன்கூத்து பயிலப்படும் வெவ்வேறு இடங்களில் அவை  வெவ்வேறு வெளிப்பாட்டை கொண்டு நிற்பதையே இது  காட்டுகிறது.
ஒரு கூத்துக்கலைஞனின் வெளி பிரபஞ்ச வெளி. ஒரு  வட்டாரத்தின் புழுதி மண்ணில் கூத்துக்கலை  வேர்கொண்டிருந்தாலும் அதன் வெளிப்பாடு பிரபஞ்சம்  அவாவியது. பிராந்திய எல்லை கடந்து இந்த காரைநகர்க்  கலைஞன் மலையகக் கூத்து பாரம்பரியத்தைத் தனது சொந்தக் கலைப்பாரம்பரியத்தின் ஒரு கூறாகவே கருதி இக்கூத்து பற்றி  ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். அதேவேளை மலையகக்  கூத்துகளின் தனித்துவ பண்புகளை ஏனைய கூத்துக்களுடன்  ஒப்பி்ட்டு வெளிப்படுத்தும் அவதானக் கூர்மையையும்  வெளிப்படுத்தவே செய்கிறார்.
மலையகத்தில் பணியாற்றிய அனுபவத்துடன் மலையகக்  கூத்துக்களை முறையான கள ஆய்வு மூலம் விரிவாக  ஆராய்ந்து இந்த அரிய நூலைத் தந்திருக்கும்  காரை.செ.சுந்தரம்பிள்ளைக்கு மலையகம் நன்றிக்கடன்  பட்டிருக்கின்றது.
மலையக நாட்டாரியல் ஆய்வில் 'ஈழத்து மலையகக்  கூத்துக்கள்' என்ற இந்நூல் கள ஆய்வின் மூலம் பெறப்பட்ட  முக்கிய ஆவணமாகப் போற்றப்டும் என்பதில் ஐயமில்லை.
29-03-2005

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  19968672 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4269 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com