அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 21 arrow வாழ்புலம் இழந்த துயர்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வாழ்புலம் இழந்த துயர்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.புஷ்பராஜன்  
Wednesday, 19 October 2005

வாழ்ந்த இடத்தை விட்டுப் பிரிதல், அதுவும் பலவந்தமாகப் பிரித்தல் என்பது மிகத் துயரமானதே. தமது வாழ்வின் மகிழ்ச்சி நிறைந்த, சோகம் கவிந்த சுவடுகளை அந்த மண்ணோடு விட்டுவிட்டு நினைவுகளை மாத்திரம் துயர்சுமந்த மனத்தோடு கூடக் கொண்டு செல்வதன் பாதிப்பு அவரவருக்கான தனித்த ஆழங்களைக் கொன்டிருப்பது. மற்றவர்களால் அதன் ஆழங்களை உணர முடியுமென்பது சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல.

வாழ்விடம் என்பது வெறும் சடப்பொருள் சார்ந்த ஒன்றல்ல. அதுவாழ்வின் ஆர்த்மார்த்தமான மூச்சு. அந்த வாழ்விடத்திற்காக இழக்கப்படும் உயிர்களும் சிந்தப்படும் இரத்தங்களும் மிகமிக அதிகமானவை மாத்திரமல்ல, அது வாழ்விடத்திற்கான உரமாகவும் கொள்ளப்படுகிறது. வாழ்விடத்தின் சாரத்தை அலெக்சான்டர் சொல்செனிஸ்ரன் தனது The bonfire and the ants எனும் வசன கவிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

'உக்கிய மரக்குற்றியுள் எறும்புகளின் குடியிருப்பை அறியாது அதை நெருப்பினுள் எறிந்தேன்.சுவாலையில் குற்றி எரிந்து சடசடத்தது. எறும்புகள் தடுமாற்றத்துடன் வெளிவந்து அங்கும் இங்கும் ஓடின. வெந்த குற்றிநுனியை நோக்கி ஓடிய அவை துடித்துப் புரண்டு நெளிந்தன. குற்றியை எடுத்து அருகில் உருட்டிவிட்டேன். அநேக எறும்புகள் சுதாகரித்து மணலில் தப்பிச் சென்றன. ஆனால் அதிசயம் அவை நெருப்பை விட்டு ஓடிச் செல்லவில்லை.மிக விரைவில் பயத்திலிருந்து மீண்டு ஒருவகை வேகத்துடன் திரும்பி வந்து, கைவிடப்பட்ட தமது வாழ்விடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. அவைகளிற் பல எரிந்துகொண்டிருந்த மரக்குற்றியில் மீண்டும் ஏறின. அவற்றின்மேல் ஓடின. எரிந்து இறந்தன.' (1).

வாழ்விடம் பற்றியும் வாழ்விடத்திற்கான போராட்டம் பற்றியும் மிகச்செறிவுடன் கூடிய கவித்துவ வெளிப்பாடு இது. இந்த வாழ்விடத்திற்கான போராட்டத்தையும் வாழ்விடமிழந்த சோகத்தையும் இலங்கையின் மூவின மக்களும் அரசியல் காரணங்களின் நிமித்தம் அனுபவித்துள்ளனர். இலங்கைக்கு அப்பால் எங்கு இன ஒடுக்கலும் இன அழிப்பும் நடைபெறுகிறதோ அங்கு இத்துயரநிலை மீணடும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

இப்போது காசாப் பள்ளத்தாக்கிலிருந்து இஸ்ரவேலிய அரசினால் குடியேற்றப்பட்டவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தாங்கள் பலவந்தமாக வெளியேற்றப்படுவதையிட்டு ஆற்றாமை கொன்டு அழுகிறார்கள். கோபத்தால் கொதிக்கிறார்கள். தமது எதிர்ப்பைக் காட்டும் முகமாக பச்சைக் குழந்தையை மாடியிலிருந்து தலைகீழாகப் பிடித்துப் பயமுறுத்துகிறார்கள். பிரார்த்தனை செய்கிறார்கள். ஏதாவது அதிசயம் நடந்து இந்த வெளியேற்றத்தைத் தடுக்காதா என்பதுபோல் இறைவனிடம் மன்றாடுகிறார்கள். பலர் தமது உடமைகளைத் தம்முடன் கூடக்கொண்டு செல்கிறார்கள். சிலர் விட்டுச்செல்கிறார்கள். சிலர் பலஸ்தினியர்களுக்கு எதுவும் போகக்கூடாது எனத் தமது உடமைகளை எரிக்கிறார்கள். இவர்களின் இந்த உணர்வுவெளிப்பாட்டில் சந்தேகம் கொள்வதற்கில்லைத்தான். கடந்த முப்பத்தைந்து வருடங்களாக இந்த மண்ணில்தானே பல உயிர்களின் ஜனனமும் மரணமும் நிகழ்ந்து கொண்டிருந்தது.

1967ன் இஸ்ரவேலிய பலஸ்தினிய யுத்தத்தின் பின் இஸ்ரவேலின்திட்டமிட்ட குடியேற்றம் இராணுவ பலத்துடன் நிகழ்ந்தபோது கைவிடப்பட்ட பலஸ்தினியர்கள் தமது வாழ்விடங்களை விட்டுப் போகும்போது இதே உணர்வுகளுக்குத்தானே ஆளாகியிருப்பர். தங்கள் கோபத்தை வெளிக்காட்ட வலுவற்றவர்களாக எதிர்காலமற்ற ஏக்கத்தை தமது கண்களில் நிறைத்தல்லவா வெளியேறினார்கள். பங்குனி 2000தில் மேற்குக்கரை அகதி முகாமிற்குச் சென்ற காலஞ்சென்ற பாப்பரசர் இரண்டாம் ஜோண் போல் அவர்கள் இவர்கள்பற்றி இவ்வாறு கூறினார்.

'மனித வர்க்கத்தின் அடிப்படைத் தேவைகளைப் பிரதிநிதிதிதுவப்படுத்துவதான பொருத்தமான வீடு, சுகாதாரவசதி, கல்வி, வேலை போண்ற அனேக விடயங்களைப் பறிகொடுத்துள்ளீர்கள். இவற்றிற்கு மேலாக உங்கள்பின்னால் விட்டுச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட துயர நினைவைச் சுமந்துள்ளீர்கள். அவை உலேகாயுத உடமை மட்டுமல்ல. உங்கள் சுதந்திரம், உறவுகளுடனான நெருக்கம், பழகிப்போன சூழல், கலாசார மரபுகள் என்பவை. இவை உங்கள் தனிப்பட்ட வாழ்விற்கும், குடும்ப வாழ்விற்கும் உரமூட்டுபவது,' (2).

இன்று இத்தனை எதிர்ப்புக்கு மத்தியிலும் இஸ்ரவேலிய பொலிசார் தம் மக்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாமல் மிகுந்த பொறுமையுடன் வெளியேற்றிக் கொன்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்கள் தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்வதுபோல் 'தெரிந்தெடுக்கப்பட்ட' மக்கள்தானோ என்னவோ! ஆனால் பலஸ்தினியர்கள் வெளியேற்றப்படும்போது கைவிடப்பட்டு நிச்சயமற்ற எதிர்காலத்துடன் பயத்தையுமல்லவா தம்முடன் கூட்டிச் சென்றனர். கிட்லரின் வதைமுகாம்களில் நொந்து சிதைந்த யூத மக்கள் தமக்கான அரசிற்குப்பின் அதன் இராணுவ வலிமையில் பெருமைகொண்ட அவர்கள் அதே இராணுவ வலுவால் தாங்கள் வெளியேற்றப்பட நேருமென்பதைக் கனவிலும் கருதியிருக்க மாட்டார்கள். இன்று தமது இராணுவத்தை நாசிகள் என்றும் அவர்களைவிட மோசமானவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். தனது ஏழு உடன்பிறந்தவர்களை 'ஆஷ்விச்'ல் இழந்த ஒருவர் கூறுகிறார் 'நீங்கள் ஏரியல் சரோனுடன் நாசிகளை ஒப்பிட முடியாது. நாசிகள் சரோனைப்போல் மோசமானவர்கள் அல்ல. நாசிகள் தங்கள் சொந்த மக்களுடன் யுத்தம் செய்தவர்கள் அல்ல.' (3). அன்று இஸ்ரவேலிய குடியேற்றத்தை இராணுவ அதிகாரியாயிருந்து செயல்வடிவம் கொடுத்த ஏரியல் சரோன் பிரதமரானபின் 'netzarian' குடியேற்றத்தை அது இஸ்ரவேலின் ஒரு பகுதியெனக் கூறியவர் தனது ஆட்சிக் காலத்தில் அவ்வகைக் குடியேற்றங்கள் தனது அதிகாரத்தால் நொருக்கப்படுவதை சரோனும்கூட கனவிலும் நினைத்துப் பார்திதிருக்க மாட்டார். அதனால்தான் 'மனதை நொருங்க வைக்கும் இத் துயரத்திற்கு நானே பொறுப்பு. உங்கள் வெறுப்பைச் சீருடை அணிந்தவர்களிடம் காட்டவேண்டாம்' என வானொலியில் வேண்டுதல் விடும் நிலைக்கு வந்துள்ளார். இதைத்தான் வரலாற்றின் முரண்நகை எனக் கூறுகிறார்களோ?

வெளியேற்றப்பட்ட பலஸ்தினியர்களும் குடியேற்றப்பட்ட இஸ்ரவேலியர்களும் தத்தம் அரசியல்வாதிகளால் அரசியல்மயப்படுத்தப்பட்டு இருவேறு பகை இனங்களாக உருமாறியிருக்கிறார்கள். இந்தப் பகை தலைமுறை தலைமுறையாக உரமாகி இளகல் தன்மையற்ற நிலைக்கு கெட்டிப்போய் விடுவதும், ஏதாவது ஒரு அரசியல் சம்பவத்தின் எதிர்வினை இக்குடியிருப்புக்களின் ஒரு பக்கத்தின் பாதிப்பிலிருந்தே முதல் தெரிய வருவதுண்டு. ஒரு இன மக்களது இழப்பு மறு இன மக்களது மகிழ்ச்சி என்றாகி விடுகிறது.

இவ் வெளியேற்றம் பற்றிய பலஸ்தினியர்களது நிலை எவ்வாறு இருக்கிறது? முகமட் அல் சல்குவாய் என்பவர் கூறுகிறார், 'நான் எனது நிலங்களை மீளப் பெறுவேன். இஸ்ரவேலியரது குடியிருப்பிற்காக இடித்து நொருக்கப்பட்டதால் நான் எனது வீடுகளை இழந்தேன்.'(4)  இன்னொருவர்: 'இன்று நான் மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறேன். இன்று அவர்கள் வீடுகள் இடித்து நொருக்கப்பட்டு அவர்கள் காசாவிலிருந்து துரத்தப்படுகிறார்கள். இது பதில்சொல்லும் காலம்.' (5)

இவ்விரு வேறுபட்ட மனநிலைக்கு அப்பால் ஒரு பலஸ்தினிய தாய் கூறுகிறாள்: 'கடந்த ஐந்து வருடங்களாக எனது மக்களின் கண்களைப் பார்க்க மிகுந்த அச்சமுற்றுள்ளேன். இராணுவ அத்துமீறலின்போதும் செல்வீச்சுக்களின்போதும் எனது அன்பைத்தவிர வேறு எந்தப் பாதுகாப்பையும் அளிக்க முடியாதவளாயிருக்கிறேன். இப்போது எனது அன்போடு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்கள் தங்கள் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வார்கள்.' (6). பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடல், மன ரீதியான பாதுகாப்பைத் தவிர வேறு எதைத்தான் ஒரு தாயால் அவாவ முடியும்? தாய்மடியும் தாயகமும் இருவெறு பட்டதா...?

சர்வதேச அரங்கில் அமெரிக்க,பிரிட்டன் தலைமைகளுக்கு ஏற்பட்ட கடும் விமர்சனங்களும், இரன்டாவது வியட்நாமாக மாறிக்கொன்டிருக்கும் ஈராக்கில், இத் தலைமைகளுக்கு ஏற்படும் இழப்புகளும் அதன் எதிரொலியாக உள்நாட்டிலெழுந்த அதிருப்திகளும், அதனை வெளிப்படுத்திய கருத்துக் கணிப்புகளும் சேர்ந்து சேடமிழுத்த 'road map'பிற்கு உயிர் கொடுத்திருக்கிறது. இவற்றின்மூலம் ஒட்டகத்தின் முன்னால் கரட்டைக் கட்டியது போல் பலஸ்தினியர்களுக்கான தனியரசு தொங்கிக் கொண்டு இருந்தாலும்

இப்போது பந்து பலஸ்தினியர்களது பக்கம்தான். ஆயதங்களைக் கைவிடமாட்டோம் எனக் கூறும் 'கமாஸ்' இயக்கம் இந்த வெளியேற்றத்தைத் தமது ஆயதபலத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறது. தற்போதய பலஸ்தினிய ஆட்சியாளர்களுக்கும் கமாஸ் போன்ற தீவிர ஆயதப்போராட்டக் குழுக்களுக்கும் இடையேயுள்ள முரன்பாடுகளே இனி மேலோங்கக் கூடியவை. இஸ்ரவேலும் விரும்புவது அதைத்தான். தாம் இரத்தம் சிந்திக் கொன்டிருந்த ஒரு செயல்திட்ட வடிவத்தை அல்லது பாரத்தைப் பலஸ்தினியர்களது தலையில் சுமத்திவிட்டு தான் விலகிக் கொண்டது.

இந்திய இராணுவம் இலங்கை சென்றபோதும் இந்த அபத்த நாடகம்தான் சற்று வேறுபட்ட வடிவில் அரங்கேறியது. ஆட்சியாளர்கள் எப்போதும் தமக்கான எதிர்ப்புச் சக்தியை அகற்றுவதிலேயே அக்கறையுடையவர்களாக இருப்பார்கள். அது எந்தவழியாயினும் அவர்களுக்குச் சரிதான். இந்தச் சூதுகளத்தின் மூலம்தான் எல்லா எதிர்ப்புச் சக்திகளும் செயலிழக்க வைக்கப்பட்டன. அல்லது தமக்குள் தாமே மோதிக்கொள்வதாக முடிந்திருக்கிறது. இஸ்ரவேலிய மக்களும் சரி, பலஸ்தினிய மக்களும் சரி அரசியலுக்காய் குடியேற்றல்,வெளியேற்றல் என்ற சதுரங்கக்காய்கள் ஆக்கப்படுவதற்கு அப்பால் தங்கள் தங்கள் சொந்த நிலங்களில் மீளக் குடியேறவேன்டும். அவர்களின் மண் அவர்களுக்கானதே. பலஸ்தினிய பெண்கவிஞர் Fadwa tuqan:

'எனது தேசத்து மண்ணில் சாவதே
எனக்குப் போதும்
அதற்குள் புதைக்கப்படுவதும்
எனக்குப் போதும்
உருகி
அந்த மண்ணுடன் கலந்து
மறைந்து போவதும்
எனக்கப் போதும்
எனது தேசத்தின் புனித முற்றத்தில்
ஒரு கைப்பிடியளவு புழுதியாய்
ஒரு புல்லின் இதழாய்
ஒரு பூவாய் இருப்பதும்
எனக்குப் போதும். 7.

இது அரசியல் காரணங்களுக்காக வாழ்விடங்களை விட்டு வெளியேறிய எல்லா இனங்களுக்கும் பொதுவானவையாகும்.

21-08-2005
நன்றி: காலம் 25வது இதழ்.

1.Stories and prose poems( Penquin-1971)
2.The Guardian: 22-03-2000
3,4,5,6 The Guardian:18-08=2005
7. தமிழில்: M.A. நுஃமான் பலஸ்தீனக் கவிதைகள்(மூன்றாவது மனிதன்)


இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...
நான்..
ஈழத்து மலையகக் கூத்துக்கள்
அமெரிக்காவில் அறிவியல் படும்பாடு
சாயம் வெளிறிய சீலையொன்றின் கதை
மோகினிப் பிசாசு
நானும் என் எழுத்தும்
நேர்காணல் ஒன்றில்:

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 07:18
TamilNet
HASH(0x5625a6bc14a8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 07:18


புதினம்
Fri, 29 Mar 2024 07:18
















     இதுவரை:  24715383 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4313 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com