அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 22 arrow இடுக்குகளின் வழியே...
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இடுக்குகளின் வழியே...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்.  
Thursday, 10 November 2005

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்  வாழ்க்கையென்பது புயலுக்கூடான ஓரு பயணமானது.  சூறாவளிகளுக்குள் அகப்பட்டு வடிவிழந்து சிதைந்து  போன ஒரு கனவாகிப்போனது நம்மவர் இருப்பு.

கப்பல் உடைந்தபின் கட்டுமரங்களைக்  கட்டிப்பிடித்தவர்போல் ஆகினர் "தப்பியோடியவர்கள்".   மாயைக் கரைகள் தென்படும் வரையும் தன் மெலிந்த  துடுப்புகளை வலித்துக் கொண்டே கட்டுமரங்களைக்  கரைகொண்டு செல்லும் எதிர்பார்ப்பினூடக  ஓடிக்கொண்டிருக்கிறது நமது காலம். நிரந்தர, சுதந்திர  எதிர்காலக் கனவை ஈடு வைத்து வான்கடிதங்களும்,  வர்ணப்புகைப்படங்களும், "உண்டியல்களும்"  கொண்டுவரும் தற்காலிகச் சுகங்களுக்குள் உறக்கம்  கொண்டுவிடனர் தப்பியோடமுடியாதவர்களில் பலர்.  மற்றவர்கள்... ?

நாளையைப் பற்றியதும், அதற்கு மறுநாள் பற்றியதும்,  தொடர்ந்துவரும் காலங்கள் பற்றியதுமான  நிச்சயமின்மைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுப்போன  பிரக்ஞையின் கூறுகளுக்கிடையில் எழும் உராய்வுகளும், மோதல்களும் மனவெளியில் முழக்கங்களையும்,  மின்னல்களையும், மழையையும் தோற்றுவிக்கின்றன.

மின்னல்களாகவும், முழக்கங்களாகவும், மழையாகவும்,  புயலாகவும், தன் பெயரை மறுக்கும் சூறாவளியாகவும்  தோற்றங்கொண்டுள்ளன கவிஞர் மெலிஞ்சி முத்தனின்  கவிதைகள்.

போர்க்காலக் கொடூரங்கள், அந்நிய ஆக்கிரமிப்பினால்  சிதறுண்டு போன நம்பிக்கைகள், மீள ஒருநாள் திரும்ப  எண்ணும் எதிர்பார்ப்பு, வரையறுக்கப்பட்ட  நியைதிகளுக்கெதிரான போர்க்கோலம், அபத்தங்களின்  கணக்கீடு, சமுக வாழ்க்கையில் கலந்து போன  அறியாமைப் பரிமாணம், அதன் நாடகப்பரிமாணம்,  இருத்தலின் மீதான ஆத்மீக விசாரம் எனப்  பல்வகைப்பட்ட தளங்களில் தம்மை அடையாளம்  காட்டிக்கொள்கின்றன அவரின் கவிதைப் படைப்புகள்.

புகலிட அனுபவங்களில், புறப்பட்டுப் போனவர்களின்  வாழ்வுத்தடயங்களில் எப்போதும் தவிர்க்கமுடியாதபடி  நினைவு மீட்டல்களும், நினைந்தழல்களும் நிறைந்தே  கிடக்கின்றன. இழந்து போனவற்றை மன  ஆழங்களிலிருந்து மீட்டெடுத்துப் பார்ப்பது ஒரு  துன்பியல் தோய்ந்த அழகியல். மெலிஞ்சி முத்தனின்  கவிப்படைப்புகளில் இச்சாயல்கள் இடங்கொள்கின்றன.

இவரின் கவிதைகளுடன் உறவை  ஏற்படுத்திக்கொள்வதென்பது அனைத்துக்குள் முதலில்  அவை காவிவரும் "உளப்பாங்குடன்" நெருக்கமான  தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதிலிருந்து  ஆரம்பிக்கப்படவேண்டியது.

காவப்படும் கருப்பொருள், எடுத்துரைக்கும் யுக்தி,  கவிநயம் என்பவற்றிற்கப்பால் படைப்பாளியின்  நுண்மையை நோக்கிய பார்வையை வாசகர்  தன்வசப்படுத்துதல் மெலிஞ்சி முத்தனின் கவிதைகளை  உள்வாங்கலின் அடிப்படை நிபந்தனையாகிறது.

கவிதையின் பிறப்பு மூலமான படைப்பாளியின்  அனுபவத்தளத்தின் ஆழமும் விசாலமும் வாசகரினால்  அணுகப்படல் வேண்டும். கவிதை எதேச்சையானதல்ல.  அதன் வெளிப்படல் காலக்கிரமத்தை மீறியதல்ல.  கவிஞருக்கும் வாசிப்பவருக்குமான சந்திப்பு ஒரு  கணப்பொழுதுத் தொடுகையினால் ஆரம்பிக்கக்கூடும்.  ஆனால், கவிதைக்கூடான பயணம் கணப்பொழுதில்  நிறைவேறக்கூடியதல்ல. ஒவ்வொரு வாசிப்பும்  ஒவ்வொரு ஒளிக்கற்றையைக் கவிதையில்  விரவக்கூடும். அந்த வெளிச்சத்தில் வாசகர் கவிதையை  அதன் உள்மைக்குள் நுழைந்து கண்டடையும்  தருணத்திலேயே கவிஞரின் "உளப்பாங்கு"  கைவசப்படுகிறது. கவிதை வெளிப்பாட்டிற்கு ஒரு  பயன்பாடு இருக்கவேண்டுமெனில் அதுவும்  இத்தருணத்திலேயே சாத்தியப்படுகிறது.

கவிதைத் தொகுப்பு ஒரு கவிஞன் தனது வாழ்காலத்தின் ஒரு பகுதியைப் பற்றிக் கூறிய சாட்சியம் அல்ல. அது  அவனின் வாழ்காலம் அவனில் வீழ்த்திய விம்பம்.  இவ்வகையில் கவிதைகளுள் ஊடறுத்து நிற்கும்  கவிஞனி;ன் "உளப்பாங்கைக்" கண்டடைதல் என்பது  அவனின் வாழ்காலத்தின் சம்பவிப்புகளுள்  சஞ்சரிப்பதற்கு வாசகருக்குக் கிடைக்கும்  அனுமதிப்பத்திரமாகின்றது. ஏனெனில் "படைப்பாளியின்"  உளப்பாங்கென்பது சமூக-பொருளாதார-அரசியல் எனும்  முப்பரிமாணத்தில் தளத்தில் கருவமைக்கப்பட்டு  அழகியல் எனும் ஒற்றைப்பரிமாணத்தில்  வடிவமைக்கப்படுகிறது.

உதாரணமாக இத்தொகுப்பிலுள்ள "விழித்துக்கொண்ட  ஒரு பொழுது" எனும் தலைப்பிலான கவிதையை  நோக்குமிடத்தில், இங்கு பின்வரும் விடயங்கள்  துல்லியமாகத் தோன்றுகின்றன.

- இராணுவ ஆக்கிரமிக்கு அஞ்சி எந்நேரமும்  தப்பியோடுவதற்கான  பயம்குடிகொண்ட "கனத்த  இரவுகளுடான" வாழ்க்கை. (இங்கே மனித ஆக்கிரமிப்பு  அரசியலின் அடாவடித்தனமும் அதனால் ஏற்படும்  துன்பமும் துலங்கி நிற்கிறது.)
- எந்தக் கணமும்ஓடுவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட  "உடுப்புப் பொட்டலம்" எனும் நேரடியானதும்,  உளவியல்ரீதியானதுமான குறியீட்டுப் பெறுமானம்       ( இங்கு நிரந்தரமின்மையும், நிச்சமின்மைகளும்  வெளிப்படுகின்றன.)
- உயிரொன்றைக் கொன்று உடமை காத்தல் பற்றிய  அறவியல் நெருக்கடி.
- உடைமையை அழிக்கவரும் ஆக்கிரமிப்புச்  சக்திக்கெதிரான தவிர்க்க முடியாத போராட்டமாக  "எலிப்பொறி".
- இருப்பினும் ஆக்கிரமிப்பின் சுவடுகளாக "ஓரே  சாரத்தில் எலிகள் போட்ட  ஓட்டைக் கோலங்களும்"  இடம்பெயர்வும்.
- ஓட்டைகளை மறைக்க "சாரத்தை உயர்த்திக்  கட்டிக்கொள்ளல்" எதிர்கொள்ளும் ஒழுக்கவியல்  தீர்ப்புகள்.
(மரியாதை தெரியாத "பயல்" - என்று
புரியாத சமூகம் புலம்பிக் கொண்டது அன்று.)


ஒழுக்கவியல் பெறுமானமும் அதிலிருந்து உருவாக்கம்  கண்ட காலத்திற்கு ஒவ்வாத   ஒழுக்கவியல் தீர்ப்பும்  இங்கு முரண்நகையாக வடிவங்கொண்டுள்ளது. வேலியே அழிந்து கொண்டு செல்கையில் "படலைக்குப்"  பூட்டுப்போடும் நிகழ்வாக "ஒழுக்கவியற்" பெறுமானம்  இங்கு பரிகாசத்திற்குரியதாகிறது.

வாழ்வியல் பற்றிய ஜீவன அதிர்வுகளின் பதிவுகள்  பாரதூரமானவை. அவை மேலெழுந்தவாரியான  பார்வைகளுக்குள் அகப்படுவதில்லை. வார்த்தைகளின்  கீழ் பதுங்கிக் கிடந்து பராக்குப் பார்க்கும் வாசகரின்  கழுத்தைப் பாய்ந்து கவ்விக்கொள்ளும் சிந்தனைகள்  மெலிஞ்சி முத்தனின் கவிதைகளுக்குள் படர்ந்து  கிடக்கின்றன.

"மாடு சூப்பிய பனங்கொட்டைக்குள்ளிருந்தும்
மறுபடி துளிர்க்கும் ஒரு பனை மரம் எனும்போது
வாழ்வின் பூரணப் பக்கம் எனக்கும்
வசப்படும் எனும் எண்ணத்தில்..."
எனும் கவிஞனின் வரிகள் வாழ்க்கை பற்றிய  நம்பிக்கையைச் சுமந்து நிற்கின்றன. நகர்ந்து  வேறிடம்சென்றால் "வெளிச்சங்களைப் பொறுக்கி  இருள் செய்கிறேன்" எனும் கூற்றுத் தடுக்கி வீழ்த்துகிறது.

"இயற்கையின்
சமன்பாட்டு இயக்கத்தில்
நானும் உள்ளடங்கியதால்
இருக்கும்அனைத்திலும்
எனக்கும் உரிமையுண்டு.
இருக்கும் அனைத்தின்பாலும்
எனக்கும் கடமையுண்டு.
நான்தொலைந்து போகவில்லை."
என ஒரு துண்டம் உரக்கக் கூறுகிறதேயென்னு நிமிர்ந்து நடந்தால்,
"வயிறிரையும் ஓசைக்குள் மனசின் பாஷைகள்  தொலைந்து போகாமல் குப்பையைக் கிளறி  முட்டையிடும் கோழிபோல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தோழா"
எனும் புகலிடச் சோகம் ஆக்கிரமித்து சுமையைத்  தோற்றுவித்துவிடுகிறது. அவ்வப்போ  நம்பிக்கைகளையும், பெரும்பாலான நேரங்களில்  வாழ்வின் எதிர்மறையான பக்கங்களின் சோகங்களையும் சுமந்து நிற்கின்றன இத்தொகுப்பின் கவிதைகள்.


"பட்டி மாடுகள்" எனும் கவிதையின் சமூகப்பரிமாணம்  ஓரே  நேரத்தில் ஆழமான ஒரு அரசியற்பரிமாணமாணத் தளத்திலும் வியாக்கியானம் பெறக்கூடியது. வாசகரின்  அறிவாழத்தின் தன்மைக்கேற்ப  நெகிழ்வடைந்து  பல்நிலைக் கருத்தியல்களை வெளிக்கொணரக்கூடிய  கவிதைகள் பல இத்தொகுப்பில் காணப்படுகின்றன.   அடர்தியான கருப்பொருட்களைச் சுருங்க வைத்து  இறுக்கமாக படிமங்களை முன்வைக்கும் "வாழ்வின்  ருசி" எனும் கவிதை எடுத்த எடுப்பில் ஆதி  மனிதனிடமிருந்த இயல்பின்பத்தை இழந்த  கிளர்ச்சியையும்அக்கிளர்ச்சிக்கு இலக்காகும்  எதிரியையும் ஒருவகை அச்சத்துடன் பூடகமாக  வெளிக்கொணர்கிறது.

இங்கு நேரடி மொழி இல்லை. சொல்ல வந்ததை   வெடிக்கப்போகும் ஒரு வெடிகுண்டை அச்சத்துடன்  எறிவதுபோல் லாவகமான புரிந்துணர்வின் எல்லைக்கு  வெளியில்  வீசிவிட்டிருப்பது  கவிஞர் தன்னைத்  தாண்டிச் சிலதூரம் செல்லவேண்டியிருப்தை  அறிவிக்கிறது.

இத்தொகுப்பில் காணப்படும் "சர்ரியலிசக்" கவிதைகள்  எனக்கருதக்கூடிய இரண்டொரு கவிதைகள்  மிகுதியுடனான ஒப்பீட்டு அடிப்படையில்  ஒட்டுமொத்தமான முறையில் அந்நியப்பட்டு  நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

போர்க்கால நினைவுகள் பற்றிய கவிதைகள் இன்றைய  ஈழத்தழிழ் கவிஞர்களின் "கவிதைப் பாரம்பரியத்தில்"  கவிஞர் மெலிஞ்சி முத்தனையும் இணைக்கும் அதே  நேரத்தில், அவரின் "கவி சொல்லும்" தனிப்பாணி  அவருக்கென ஒரு தனியிடத்தையும் ஒதுக்கிக்  கொடுக்கிறது.

"நினைந்து வருந்துதலை" வெளிக்கொணரும் புகலிட  மனோநிலையைப் புலப்படுத்தும் கவிதைகள் இயல்பான  மறைக்க முடியாத வாழ்பனுபவங்களாகப்  பதிவடைந்துள்ளன.

தேவைகள் செறிந்த புகலிட வாழ்க்கையும் அதன்  அவலமும் எழுதுதலை இலகுபடுத்தக்கூடியதல்ல. பல  திசைகளில் இழுபட்டு, பல அவலங்களுள் அலையும்  புகலிட வாழ்வில் எழுதுதல் ஒரு தியாகம். ";இக்கவிதை  முடியவில்லை" எனும் கவிதை மெலிஞ்சி முத்தனின்  எழுதற்தாகம் அல்லது எழுதற்தேவை எப்போதுமே  முடியடையப் போவதில்லை என்பதை எடுத்துரைத்து  நிற்கிறது.

(க.வாசுதேவனின் இம் முன்னுரை நூலை அறிமுகப்படுத்தும் வகையில் இங்கு நன்றியுடன் மீள் பிரசுரமாகின்றது.)

03.09.2005.

{mos_sb_discuss:}


மேலும் சில...
பிரெஞ்சு தீவு
ஒரு நாள் ஒரு கனவு…
கலாயோகி ஆனந்த குமாரசாமி
நிர்வாண விழிகள்
வள அறிஞராக ஜீவா..
அம்மா எனக்கொரு சிநேகிதி.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 14:06
TamilNet
HASH(0x55d51e8f5ab0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 14:06


புதினம்
Thu, 28 Mar 2024 14:06
















     இதுவரை:  24712560 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5574 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com