அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 24 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஆப்பரேஷன் மகா சங்காரம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: நாகரெத்தினம் கிருஷ்ணா  
Friday, 30 December 2005

நீங்க எப்படிப் பட்டவர்? ரோம் பத்தி எரிஞ்சதுக்கோ, காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிப்போனதற்கோ, ஹிரோஷிமொ - நாகசாகி வெந்து துடித்ததற்கோ அல்லது அதற்கும் முன்னாலே இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதற்கோ வருந்தும் ரகமா? அப்படியானால் உங்களால் உதவமுடியும். இந்த பூமியைக் காப்பாற்றமுடியும்.

வரவிருக்கும் ஆபத்து, இங்கே மேலே குறிப்பிட்ட, அல்லது சொல்ல மறந்த எல்லாத்துக்கும் பெருசு, ரொம்பப் பெருசு. எதிரிகள்-அந்நிய மனிதர்கள்-உறவுகள் உயிர்களுக்குமட்டுமல்ல, விலைமதிக்கமுடியாத உங்கள் உயிருக்குங்கூட ஆபத்து காத்திருக்கிறது. அபிஷேக ஆராதனை, மெழுகுவர்த்தி பிரார்த்தனை, ஐந்துவேளை தொழுகைங்கிற வழக்கமான உத்திகள், உங்களை இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்றிவிடாது.  ஓடியாகணும். ஓடி, சம்பந்தப்பட்டவங்களுக்கு நிலைமையை நீங்க புரியவைக்கணும். புத்திசாலிகள், மூத்திரம் முட்டிக்கொண்டஅவசரத்துடன் செயல்பட்டாகணும்.

இச்செய்தியின்மீது உங்களுக்குள்ள நம்பகத் தன்மையின் சதவீதம் எவ்வளவு என்பதனை என்னாலே ஊகிக்க முடியலை. முடிந்தமட்டும் உங்கள் அவநம்பிக்கையைக் குறைக்கின்றவகையில் பிரச்சினையைத் தெளிவாகவும் ஆனால் எனக்கிருக்கும் ஆபத்து காரணமாக சுருக்கமாகவும் சொல்லப் பார்க்கிறேன். எதற்கும் நீங்களும் ஒருமுறை இதனை வாசிப்பதற்கு முன்னால், பாதுகாப்பான இடத்தினை தேர்வு செய்துகொண்டு வாசித்தல் நலம். அமெரிக்காவென்றால் உயர்ந்த கட்டிடங்களையும், இஸ்ரேலென்றால் பேருந்துகளையும், அரேபிய நாடுகளென்றால் திறந்தவெளிகளையும், இந்தியாவென்றால் காவல் நிலையங்களையும் தவிர்க்கவும்.

எம்பேரு ஆ.லெ. வள்ளியப்பன். அதாவது ஆந்தங்குடி லெட்சுமணன் (அப்பா பிறந்தது நாகர்கோவிலென்பதால் 'ல' 'லெ'யாகி விட்டது) சீமந்த புத்திரன் வள்ளியப்பன். வானசாஸ்திரத்தையும், துணைக்கு கணினி அறிவையும் 3:1 என்ற விகிதாசாரத்தில் மூளையில திணிச்சுக்கிட்டவன். அப்பாகொடுக்கும் 'பாக்கெட்-மணியில்' பகலானால் ஆஸ்திரேலியா, ஐரோப்பா என அலைஞ்சுட்டு ராத்திரியானா, வாலிபவயசு உடல் உபாதைகளுக்காக யூதரினத்து வெள்ளைக்கிளி நீல் எத்ரியாவை கணிணியிலிருந்து முப்பரிமாண நிழலாக வரவழைச்சு, அவளோட(?) கெட்டகாரியங்களைச் செஞ்சுக்கிட்டிருந்தேன் (ஒரு காதற் குறிப்பு: கொஞ்சலுக்கு ஹீப்ரு மொழி உகந்ததல்ல).

கேணையன், பின்னால் இந்தப் பெண்ணால் எனக்கும் உங்களுக்கும் ஏற்படவிருந்த ஆபத்தைப்பற்றி அறிந்துணரும் விவஸ்தையில்லாமலேயே, கேப்பையில் நெய்வடிகிறதென்று நம்பிக்கொண்டிருந்திருக்கிறேன். அப்பா சொன்னபடி என் மாமாவின் ஏகபுத்திரி ஆவுடைநாயகியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு அவளது தகப்பனார் பதிப்பகத்தில் 'காற்றில் தண்ணீர் பிடிப்பதெப்படி', 'கழுதையை குதிரையாக்குவதெப்படி' மாதிரியான புத்தகங்களைப் பதிப்பித்து நாலு காசு பார்த்திருக்கலாம். எல்லாம் விதி. கடந்த பத்து வருடமா நீல் எத்ரியாவின் மாய வலையில் விழுந்து, இன்றைக்கு ஏதோவொரு கிரகத்தின், பேர்வைக்காத கோளொன்றில் சிக்கித் தவிக்கிறேன்.

நீல் எத்ரியாவுடன் எனக்கேற்பட்ட சிநேகிதம் எப்போதுண்ணு நாள், கிழமையோட ஞாபகத்திலில்லை. ஆனால் சூரக்குடிச் சந்தைக்குப் போயிருந்த அப்பா மென்பொருள் செயலியொன்றை வாங்கிவந்திருந்த அன்று ஆரம்பித்தது, என்பதுமட்டும் உறுதி. அப்பா வாங்கித்தந்திருந்த செயலியைக் கணிணியில் இணைத்தவன், விசை பட்டனை அழுத்திவிட்டுக் கைகள் துறுதுறுக்கக் காத்திருந்தேன். திரை விழித்துக்கொண்டது, அங்கேயிங்கேயென்று அலறியடித்துக்கொண்டோடி ராம், ரோம் என இருக்கின்ற கணிணியின் நினைவு எல்லைகளை 'பிட்' பிட்'டாக மிதித்துத் திரும்பி, அப்பாடா என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டு நிற்கின்றது. திரைக்குள் முப்பரிமாண முகமொன்று தோன்றுகிறது. ஒட்டிக்கொண்டிருக்கும் உதடுகள் மேலும் கீழும் முன்னும்பின்னுமாய் அசைய, எச்சிலில்லாத வார்த்தைகள் வந்து விழுகின்றன.

"வணக்கம் டியர்! உனக்கு அலாவுதீனும் அற்புதவிளக்கும் கதை தெரியுமா? இன்றையதினத்திலிருந்து, நீயுமோர் அளவான அதிகாரங்களுள்ள அலாவுதீன். உன்னுடைய ஏவல்களை நிறைவேற்றவென்று ஏற்படுத்தப்பட்டுள்ள பைனரி(Binary) பூதம் நான், வேண்டுமென்றால் உன்னுடைய விருப்பத்திற்கேற்ப என்னை உருமாற்றம் செய்துகொள்ளலாம். விரும்பிய பேரால் அழைக்கலாம், வேண்டியதைக் கேட்டுப்பெறலாம்" என்று சொற்களால் தூண்டில்போட, அன்றைக்குப் பிடித்தது சனி.

ஆவுடைநாயகி மீதிருந்த கசப்பில், உலக அழகிகளை பக்க வரிசையில் கணிணியில் நிறுத்தி, பிடித்த உடற்பாகங்களை இரவல்பெற்று முப்பரிமாண நிழலுக்குக் கொடுத்து, நடக்கவிட்டுக் கீழே பார்த்ததில்... வேண்டாம் அதையெல்லாம் இங்கே சொல்லுவது நாகரீகமாகாது. அமெரிக்க இணைய தளங்களைத் தேட கிடைத்த பெயர், 'எத்ரியா'. இந்த யூத பெயருக்கு 'பலமானவள்' என்பதாய் அர்த்தமாம். 'நீல்,' எனது விருப்பத்தில் பேரில் ஒட்டிக்கொண்ட அவளது 'கற்பனை தகப்பன்' பெயர். வாய்கொள்ள "நீல் எத்ரியா!" என்றழைத்தேன். புகைமண்டலத்தை எழுப்பிக்கொண்டு என்னருகில் வந்து நின்றாள்.

"டியர்!.. இனிமே நான் உங்களது நிரந்தர அடிமை", காதருகே கிசுகிசுக்கிறாள். அவள் கையைப் பிடித்துக்கொண்டு, கிரகங்கள் தோறும் நானுனக்கு அடிமை என்கிறேன். அவள் சிரிக்கிறாள். எத்ரியாவின் பணிகளை இன்னதென்று, திட்டவட்டமாச் சொல்லமுடியாது. மின்னஞ்சல்களுக்குப் பதில்கள் எழுதுவது, இணைய குழுக்களுக்குச் சென்று விவாதங்களில் கலந்துகொள்வது, இணைய தளங்களுக்கு எழுதுவது, கோப்புகளை வரிசைபடுத்துவது - நிராகரிப்பது - அழிப்பது, பைரவிராகத்துலே பாம்பே ஜெயஸ்ரீ குரலில் 'மனதில் உறுதிவேண்டும்' என்பது, சாப்பிடவைப்பது, தூங்கவைப்பது, டாய்லெட் பேப்பரை உபயோகித்து என் ..............பதென்று, நிறைய வினைச்சொற்களை எனது மனதைப்படித்து, அவள் விரையம் செய்ததில், அவளில்லாமல் ஆ.லெ.வள்ளியப்பனில்லை என்றாகிவிட்டேன்.

ஒருநாள், கொஞ்சம் அதிகப்படியான மையலில் பிதற்றிக்கொண்டு கிடக்கிறேன். அவள், எனது காதினை மெல்லக் கடித்துவிட்டு,"வள்ளியப்பன் நமக்கு அதிஷ்டம் வந்திருக்கிறது", என்றாள்.

"எப்படி?"ன்னு கேட்கிறேன்.

"எங்க ஆட்களுக்கொரு சா·ப்ட்வேர் நாம எழுதணும். அப்படி எழுதினா எங்களுக்கும் இலாபம். உங்களுக்கும் லாபம். என்ன சொல்றீங்க.?"

"எத்ரியா.. என்னிடம் நிக்கோலஸ் கோபர்னிகஸ் குறித்துக் கேளு. கிரகங்களின் எண்ணிக்கையைக் கேளு, அவற்றின் வழித்தடங்களைக் கேளு, அந்தக் கிரகங்களுக்குள்ள வெப்பத்தன்மையையும் அவற்றுக்கான வண்ணங்களையுங் கேளு, ஒவ்வொரு கிரகத்துக்கும் இடையே உள்ள தூரத்தை வானியல் அளவில்(A.U.) கேளு. அதைவிடுத்து சா·ப்ட்வேர் எழுதணும்னு சொல்ற. ஏதோ மீயுரை (HTML) குறியீட்டில் சிலவரிகள் எழுதுவேன். அதைவச்சு பெருசா எதையாவது கனவு காணாதே. சத்தியமாச் சொல்றேன், சா·ப்ட்வேர்பற்றி எனக்கு, ஒரு மசுரும் தெரியாது."

"பயப்படாதே. உன்னோட வானசாஸ்திர அறிவுதான் எங்களுக்கு வேணும். மற்றபடி, சா·ப்ட்வேர் எப்படி எழுதணுங்கிறதை நான் வழிநடத்துவேன். இதை மட்டும் நீ எழுதிமுடிக்க உதவுவாயென்றால், உனக்குப் பெரிய புதையல் காத்திருக்கிறது."

"என்ன அது? இந்தியாவைத் தூக்கி என் கையில் கொடுக்கப்போகிறார்களா?"

"இல்லை எத்ரியாவை, உனக்கே உனக்கென்று கொடுக்கப்போகிறார்கள்"

"எனக்குப் புரியலை"

"உன்னுதவியால் எழுதப்படவிருக்கும் மென்பொருட் செயலி எங்கள் எதிர்பார்ப்பின்படி அமையுமானால், இனி நீ, இந்த முப்பரிமாண எத்ரியாவுடன் கொஞ்ச வேண்டிய அவசியமில்லை. அசலான எத்ரியாவுடனேயே காதல் செய்யலாம். நான் சொல்வதெல்லாம் சத்தியம். ஏதாவதொரு கோளில், கோட்டையை எழுப்புவோம். அங்கே நமக்கென்றொரு அரண்மனை, உப்பரிகை, நந்தவனம், அந்தப்புரம், சப்பிரமஞ்சம், ஓய்வு நேரங்களில் புஷ்பக விமானம் என்று ஏற்பாடுசெய்துகொண்டு, தேவையான எண்ணிக்கையில் பிள்ளைகள் பெற்று, நம்முடைய இனத்தை விருத்தி செய்வோம், சம்மதமா?"

"மூட்டை மூட்டையாய்ச் சம்மதம். எப்போ புறப்படலாம்?"

'இப்போதில்லை. நாளைக்குக் காலையில் பயணம். பூலோகத்திலிருந்து, புவர்லோகம் போகணும். வழியில் மூணு அல்லது நான்கு கிரகங்களில் தங்க வேண்டியிருக்கும்."

எத்ரியா சொன்னதுபோலவே, வழியில் இரண்டொரு கிரகங்களில் தங்கி எங்கள் வாகனத்திற்கு எரிசக்தியை நிரப்பிக்கொண்டு, அவள் குறிப்பிட்டிருந்த புவர்லோகத்துக் கோளொன்றில் எழுப்பியிருந்த அந்தக் கம்ப்யூட்டர் சா·ப்ட்வேர் கம்பெனியை அடைய ஒருமாதம்பிடித்திருந்தது.

முதலிரண்டு கிழமைகளும் வேலைகளேதுமில்லாமல் கேப்ஸ்யூல்களை விழுங்கிக்கொண்டு, அத்தியாவசிய கடன்களின் நிர்ப்பந்தமின்றி இருந்தேன். ஆனால் நாட்கள் ஆகஆக எத்ரியாவைக் காணாமல் நான் தவிக்க ஆரம்பித்தேன். ஒருநாள் பக்கத்து ஆசாமியிடம், ராஜாக்களுக்கான உடை அலங்காரத்துடன் அசப்பில் என்மாமா மாதிரியான ஒருவன் தானழைத்துவந்த பெண்மணியை லாபியில் உட்காரவைத்துவிட்டு, எனது பக்கத்து ஆசாமியிடம், வெகுநேரம் பேசிவிட்டுப்போனான். எனக்கென் மாமாதான், மோப்பம்பிடித்து ஆவுடை நாயகியை இவ்வளவுதூரம் அழைத்துவந்திருப்பாரென்கிற சந்தேகம். அந்தப்பெண்மணியைப் பார்க்க லட்சணமாகயிருக்க, சந்தேகம் தீர்ந்தது. ஆனாலும், வந்த நபரை யாரென்று அறிந்துகொள்ளும் ஆவலில், பக்கத்து ஆசாமியிடம் கேட்டுவிட்டேன்.

"யார் இந்த ஆள்? ஏதோ நாடகத்திலிருந்து மேக்கப் கலைக்காமல் வந்தவன் மாதிரி இருக்கிறானே? அவனுக்கு இங்கென்ன வேலை?"

"மெல்லப் பேசு. நாடகத்து ராஜாயில்லே. நிஜ ராஜா, இலங்கை ராச்சியத்தின் அதிபதி. பேரு இராவணன். அவன் இந்தியாவைச் சேர்ந்த அயோத்தி மன்னன் ராமனின் மனைவியான சீதையைத் கடத்தியிருப்பவன். இலங்கைக்குத் திரும்பற வழியில இங்கு வந்திருக்கிறான்."

"என்னவாம்?"

"அனுமன் சீதையைத் தேடிக்கொண்டு இலங்கைக்கு வருகிற பாதையை மாத்தணுமாம்"

""எல்லாம் முடிஞ்சு பக்கம் பக்கமா எழுதிவச்சிருக்காங்களே? இனி செய்யறதுக்கு என்ன இருக்குது?, முடியுமா?"

"அடடே! உனக்கு நம்ம கம்பெனியின் பிராஜெக்ட் பற்றி எதுவும் தெரியாதா? இன்றைக்கு மதியம் இரண்டு மணிக்கு நம்ம பிராஜக்ட் லீடர் மிஸ்டர் சாரங்கன் இங்கே வறார், அவர் விளக்கமாச் சொல்வார். பிரம்மலோகத்துலே வேலை பார்த்தவரை நம்ம கம்பெனிதான் எத்ரியா டெக்னிக்கைப் பயன்படுத்தி இங்கே அழைச்சுவந்தது."

"எத்ரியா டெக்னிக்கா?"

"ஆமாம் உன்னையும் என்னையும் அழைத்துவர உபயோகப்படுத்திய தந்திரம். மிஸ்டர் சாரங்கன் இங்கே வந்து சேர்ந்ததும் அப்படித்தான்."

"ஆனா எத்ரியா என்றபேரு நான் வச்சதுதானே?"

"இல்லை! அப்படி உன்னை நம்ப வச்சிருக்காங்க. நடந்ததெல்லாம் ஆப்பரேஷன் மகா சங்காரத்தின் முதற்படி. இரண்டு மணிக்கு எத்ரியா பிராஜக்ட் லீடரோட வருவா, எல்லாம் தெரியவரும். அதுவரை அமைதியாயிரு."

பகல் இரண்டுமணிக்கு, பக்கத்து ஆசாமி சொன்னதுபோல எத்ரியா வந்தாள். அவளோடு உச்சந்தலையில் குடுமியும், நெற்றியில் திரு நீறும், மார்பில் முப்புரியும், இடுப்பில் தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுமாக ஒரு மனிதர்.

"மிஸ்டர் வள்ளியப்பன்.. மீட் மிஸ்டர் சாரங்கன். நம்ம பிராஜெக்ட் லீடர்." மூவரும் மாற்றிமாற்றி கைகுலுக்கிக்கொண்டு, அறிமுகம் முடிந்தபின் நாற்காலிகளில் அமர்ந்தோம்.

"வள்ளியப்பன் நேரடியாக விஷயத்துக்கு வறேன். இந்த பிராஜக்டுக்குப்பேரு 'ஆப்பரேஷன் மகா சங்காரம்'. இந்த யூ.எஸ்.பி.கீயில் உள்ள தகவல்களைப் பிரம்மலோகத்திலேயிருந்து தந்திரமாக் கொண்டுவந்திருக்கோம். இந்தக்கோப்பிலே உள்ளபடிதான் 'உலகத்தில் நடந்ததும் நடக்கவிருப்பதும்' என்று நம்பப்படுகிறது. இதைத்தான் நாம மாத்தி எழுதணும். அப்படி மாத்தி எழுத முடியும்னா நம்ம கம்பெனி எம்.டி.தான் அடுத்த பிரம்மா. எப்படிங்கிற சந்தேமெல்லாம் வேண்டாம். முடியும், நம்மால் முடியும். கிரகங்களின் பாதையை மாத்தமுடியும்னா உலகத்தின் தலையெழுத்தையும் மாற்றமுடியும்னு நம்பறோம். இதற்கொரு சா·ப்ட்வேர் நாம் எழுதப்போறோம். அதன் மூலமா கிரகங்களின் பாதையை மாற்றுவதென்று தீர்மானிச்சுருக்கோம்."

"புரியலை?"

"இந்த உலகம் பூகம்பம், புயல், கடல்கொந்தளிப்பால் சிறு அளவில் அழிவுகளைச் சந்தித்து அழிந்தும் தோன்றியும் வருகிறதென்று சொல்லப்படுகிறது. ஆனால் உலகமனைத்தும் ஒரேகாலத்தில் அழியுமென்றால் அதற்கு மகா சங்காரம் என்று பெயர். அதற்கான ஏற்பாடுகளைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அதற்குப்பிறகு நம்ம பிரம்மா உருவாக்குற உலகில குறையற்ற மனிதர்கள், தர்ம ஆத்மாக்கள் மாத்திரமே ஜனிப்பார்கள்".

"அய்யய்யோ.. அப்படியானால் மகா சங்காரத்தின்போது அழிவு எல்லா உயிர்களுக்குந்தானே?"

"அப்படியில்லை. மகாசங்காரத்தின் முடிவில் மாயையில் இறைவன் ஒடுங்குகிறான். பிரம்மனுக்கு அழிவில்லை. அதாவது மகா சங்காரத்தின் கர்த்தராகிய நம்ம எம்.டிக்கு அழிவில்லை. அழிவின் முடிவில் முதல் ஜனனம் நாமதான். அவரது வார்த்தைகளைப் பரிபூரணமா நம்பலாம். அதற்கான உத்தரவாதங்களை எனக்குக் கொடுத்திருக்கார். மகா சங்காரத்தை நாம் வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு உலகத்தைத் தயார் செய்யணும். 'இதுவரை நடந்ததையும் இனி நடக்கவிருப்பதையும்' புரட்டிப்போடணும். வரிசையாக நாம செய்யபோற காரியங்களையும் வரிசைபடுத்தி உங்களிடம் கொடுத்த யு.எஸ்.பி. கீயில் குறிச்சி வச்சிருக்கேன். அப்போதுதான் அழிவினை வேகமாக நெருங்க முடியும். மிஸ்டர் வள்ளியப்பன் மிகவும் ஜாக்கிரதையாக எழுதவேண்டிய செயலி. எங்காவது எசகுபிசகாக நடக்குமானா, நம்ம எல்லோரையும் கோளுக்குவெளியே உதறிவிடுவார்கள். முதலில் நீங்கள் பிராஜக்டோட மாடலிங் சா·ப்ட்வேரை எழுதுங்க, அதன்பிறகு பிராஜக்ட் உறுப்பினர்கூடி விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம். இனி, மிஸ். எத்ரியா இந்த நிமிடத்திலிருந்து ஆப்ரேஷன் மகா சங்காரம் சா·ப்ட்வேரை எழுதி முடிக்குவரை உங்களோடுதானிருப்பாள். நான் வரட்டுமா?"

குடுமிக்கார கிழவன் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் எத்ரியா என் பக்கத்திலிருந்தாள்.

"சாரி டியர்! இரண்டுவாரமாக உங்களை ரொம்பவே காயப்போட்டுட்டேன். அதற்குப் பரிகாரமாக ஏதேனும் செஞ்சாகணும். எங்கே வச்சுக்கலாம்?"

"போடி பொட்டைநாயே, எனக்கு முதலில் மூத்திரம் போகணும்" என்று கத்திவிட்டு டாய்லெட்டுக்குள் புகுந்துகொண்டேன். பாக்கெட்டிலிருந்த கைக்கணிணியில் யு.எஸ்.பி. கீயை செருகி அவசரகதியில் தரவுகளில், பூமியில் நீங்கள் வாழும் காலத்திற்குப் பொருந்துகிற தகவல்களை மாத்திரம் அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை ஆப்பரேஷன் மகா சங்காரத்திற்கு ஆதரவாக இந்தக்கூட்டம் தீர்மானித்திருப்பவை..

75692 அக்டோபர் 9 2005, தெற்கு ஆசியாவில்.......
75691 டிசம்பர் 26 2004, சுனாமி. ..
75690. நவம்பர் 2002, சீனாவில் சார்ஸ் நோயினைப் பரவச் செய்தல்.
75689. செப்டம்பர் 6 2002 ஈராக்மீது அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் தாக்குதல்...
75688. செப்டம்பர் 11 2001 அன்று, அமெரிக்க இரட்டைகோபுரங்.....

 


     இதுவரை:  24798187 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2814 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com