அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு சொட்டுத் தேன்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 04 January 2006

மாரிகாலந்தான். இருப்பினும் கந்தனுடைய முகத்திலும் உடலிலும் வியர்வை ஆறாக வழிந்து கொண்டிருந்தது. வெறிபிடித்தவன் போலக் கோடரியைக் கையில் ஏந்தியபடி, அவன் செடிகளையும் புதர்களையும் விலக்கியவாறே காடேறிக்கொண்டிருந்தான்.

காடு இருண்டு கிடந்தது. அடிக்கடி பெருமழை பெய்ததால் மரங்களெல்லாம் ஈரங்குடித்துக் கறுத்;துப் போய்க் காணப்பட்டன.

அவனுடைய நடையில் வேகமிருந்தாலும் அவன் விழிகள் மட்டும் எந்தவொரு மரத்தையும் தவறவிடாது கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தன. கலங்கி, சற்றுச் சிவந்து போயிருந்த அவ்விழிகளில் தீவிரம், ஏமாற்றம், சோகம் யாவுமே குழம்பிப்போய்க் கிடந்தன. ஈரஞ்சுவறியிருந்த பாதங்களில் சுருக்கென்று தைக்கும் முட்களையும் பொருட்படுத்தாமல் அவன் எதையோ தேடிச் சென்று கொண்டிருக்கின்றான்.

ஆனால் அவன் தேடி வந்ததன் சுவடு எந்த மரத்திலுமே காணப்படவில்லை. ஆனாலும் அவன் சோர்ந்து விடவில்லை.

எதிரே குறுக்கிட்ட காட்டாற்றில் முழங்காலளவுக்கு இறங்கி, முகத்தில் சில்லிடும் நீரை அடித்துக் கழுவி, இரண்டு வாய் தண்ணீரையும் பருகிக்கொண்டு ஆற்றைக் கடந்து அப்பாற் கிடந்த காட்டினுள் நுழைகின்றான் கந்தன்.

000

முல்லைத்தீவு மாவட்டத்தின் காடுகளில் காணப்படும் இந்தக் காட்டாறுகள் கோடையிலே வரண்டுபோய் மணற் படுக்கைகளாகக் கிடக்கும். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குளங்களில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால் மாரிகாலம் வந்தாலே காய்ந்துபோய்க் கிடக்கும் காட்டாறுகள் சிலமணிநேர மழை வீழ்ந்ததுமே, கட்டுக்கடங்காமல் பிரவகிக்கும். குளங்கள் நிறைந்து தளும்பும்.

மார்கழி பீடை பிடித்த மாதம் என்பார்கள். மனைவியின் ஒரே நகையான தாலிக்கொடி, வித்துக்கென்று வைத்திருந்த நெல், அங்குமிங்கும் சில்லறையாக வாங்கிய கைக்கடன் எல்லாமே மாரியில் குடிசைகளைவிட்டு வெளியேறிவிடும்.  விதைநெல், அடைவு வைத்து எடுத்த பணம் அத்தனையையுமே வயல்களுக்குள் உழுது புதைத்துவிட்டு, அண்ணாந்து வானத்தைப் பார்த்தவாறே இருப்பார்கள். கோதுமை மாவும், மரவள்ளிக்கிழங்கும் வயிறுகளை அரைகுறையாக  நிரப்பிக் கொண்டிருக்கும்.

வயல்கள் ஒருபடியாக விளைந்து மாசி பங்குனியில் அறுவடை முடிந்ததும் கைக்குவரும் பணத்தைக் கொண்டு கொடியை மீட்பார்கள், கடனை அடைப்பர்கள். வருடப்பிறப்பு வந்தால் ஒருசில துணிமணிகள், இரண்டு போத்தல் சாராயம், இவற்றுடன் வந்தபணம் சென்றுவிடும். வைகாசி போய் ஆவணி வருவதற்குள் மீண்டும் கடன், அடைவு என்ற ரீதியில் சகடயோகமாகச் சுழன்று கொண்டிருக்கும் இவர்களுடைய வாழ்க்கை.

இடையில் தப்பித்தவறி வானம் பொய்த்துவிட்டால், அல்லது தண்ணியைப் போட்டுவிட்டு சில்லறை அடிதடியில் இறங்கி வழக்குக் கணக்கென்று வந்துவிட்டால், அந்த வீழ்ச்சியிலிருந்து எழுந்து மீண்டும் பழைய வாழ்க்கை வட்டத்தினுள் நுழைவதென்றால் மிகவும் சிரமந்தான்!

000

கந்தனும் இவர்களில் ஒருவன். அவனுக்கும் மனைவி மக்களுண்டு. பிரச்சனைகளுண்டு.

காலை நடந்த நிகழ்ச்சியை நினைத்தாலே கந்தனுக்கு நெஞ்சு குமுறியது.

அவனுடைய  நான்காவது குழந்தையான ராணிக்கு நான்கைந்து நாட்கiளாகவே சுகவீனம். எதைத் தின்றாளோ தெரியவில்லை. ஒரேயடியாக வயிற்றால் போகத் தொடங்கிவிட்டது. இரண்டொருநாள் அதையும், இதையும் கொடுத்துப் பார்த்தாள் கந்தனுடைய மனைவி. குணமில்லை. கடந்த இரவு முழுவதுமே குழந்தைக்கு நினைவில்லை.

விடியற்காலையில் கந்தன் குழந்தையையும் தூக்கிக்கொண்டு, அயற்கிராமத்துப் பரியாரியாரிடம் ஓடினான். அவர் குழந்தையின் கையைப் பிடித்துப் பார்த்து உதட்டைப் பிதுக்கிவிட்டு, ஒரு தூளைக் கையிற்கொடுத்து, 'இதை மூண்டுநேரம் சுத்தமான தேனிலை குடு!.. நாளைக்குத்தான் பொடி தப்புமோ இல்லையோ எண்டு சொல்லிலாம்!" என்று கூறியபோது கந்தனுக்கு வயிற்றை என்னவோ செய்தது.

இருப்பினும் மிகவும் பயபக்தியுடன் மருந்தை வாங்கிக்கொண்டு, சந்தியிலிருக்கும் சங்கக்கடை அருகில் வந்தபோதுதான் அவனுக்குத் தன்வீட்டில் மருந்துக்குக்கூடத் தேன் இல்லை என்பது நினைவுக்கு வந்தது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் அவனுடைய குக்கிராமத்திலே தேனாறு பாய்ந்தது. அந்நாட்களில் கந்தன் தினமும் தன் ஊரவருடன் சேர்ந்து காட்டுக்குச் செல்வான். எடுக்கும் தேனைப் பிழிந்து பகிர்ந்து கொள்வார்கள். அந்த முறை கந்தனுடைய வயல்வேலிக்கு முட்கம்பி மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது. எனவே தனக்குக் கிடைத்த முப்பதுபோத்தல் தேனையும் அப்படியே மொத்தமாக அயற்கிராமத்தில் கடை வைத்திருக்கும் ஒருவருக்கு விற்றுவிட்டான். .. சே! மருந்துக்குக்கூட ஒரு சொட்டுத்தேன் வைக்காமல் விற்றுவிட்டது எவ்வளவு பிழையாய்ப் போயிற்று!.. என்று சிந்தித்தவண்ணம் நடந்துகொண்டிருந்த கந்தனுக்குச் சட்டென்று ஒரு யோசனை பிறந்தது. அவனிடமிருந்து தேனை மொத்தமாக வாங்கிக்கொண்டவரின் கடை அருகில்தானே இருக்கின்றது. மருந்துக்குக் கொஞ்சம் தேன் கேட்டால் நிச்சயமாகக் கொடுப்பார் என்று எண்ணியவன், வேகமாக நடந்துசென்று அக் கடை வாசலில் ஏறினான்.

கல்லுப் பிள்ளையார்போல் உட்கார்ந்திருந்த கடைமுதலாளியின் பின்னே, உயரமான பிராக்கிகளில் தேன் போத்தல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டதும் கந்தனின் மனம் ஆறியது.

'புள்ளைக்குச் சுகமில்லை முதலாளி!.. மருந்துக்குக் கொஞசம் தேன் வேணும்!"

'ஒரு போத்தில் பன்ரண்டு ரூபாய் கந்தன்!"

கந்தன் திகைத்துப் போனான். தன்னிடமிருந்து ஒரு போத்தல் நான்கு ரூபாவுக்கு கொள்வனவு செய்த தேன் இபபோது பன்னிரண்டு ரூபாவா! அவனால் பேசவே முடியவில்லை.

'எத்தினை போத்தில் வேணும் கந்தன்?"

'இப்ப கையிலை ஒருசதமும் இல்லை முதலாளி! புள்ளைக்கு மருந்து குடுக்க ஒரு சின்னக் குப்பிப் போத்திலுக்கை ஐஞ்சாறு சொட்டுத் தேன் தந்தாக் காணும்!". கந்தன் கூனிக் குறுகிக் குழைந்தான்.

'நான் கடன் குடுக்கிறேல்லை எண்டு உனக்குத் தெரியுந்தானே கந்தன்!"

'முதலாளி! கொஞ்சம் தயவு செய்யுங்கோ!" கந்தன் இரந்தான்.

ஆனால் அந்த முதலாளி அதற்குமேல் எதுவுமே பேசவில்லை. அவன் அங்கு நிற்பதையே உணராதவர்போல் பழைய பத்திரிகை ஒன்றில் மூழ்கிவிட்டார்.

கந்தன் ஊரைநோக்கி நடந்தான். தோளில் துவண்டுகிடந்த குழந்தையின் உடல் தணலாகத் தகித்தது. அதைவிட அதிகமாக அவனுடைய நெஞ்சு கொதித்தது.

கிராமத்தை அடைந்ததும், மனைவியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு, அங்கு உள்ள ஆறேழு குடிசைகட்கும் சென்றான். ஆனால் எல்லா இடத்திலும் ஒரே பதில்தான் கிடைத்தது.

'இஞ்சையும் ஒருசொட்டுத் தேனும் இல்லைக் கந்தன்! உன்னோடைதானே நாங்களும் தேன் வித்தனாங்கள்! கொஞ்ச நஞ்சம் கிடந்த தேனையும் பொடியள் மருந்துக்கும் இல்லாமல் திண்டிட்டுதுகள்!"

தேனாறு பாய்ந்த அந்தக் கிராமத்தில் மருந்துக்குக்கூட ஒரு சொட்டுத்தேன் இல்லை. குமுறும் நெஞ்சுடன் வீடு திரும்பிய கந்தன், தாயின் மடியில் வதங்கிப் போய்க்கிடந்த குழந்தையின் நெற்றியிலே கையை வைத்துப் பார்த்தான். நெருப்பாய்ச் சுட்டது. பாதங்கள் சில்லிட்டுக் கிடந்தன.

ஒன்றுமே பேசாது கோடரியை எடுத்துக்கொண்டு நண்பகல் நேரம் காட்டில் நுழைந்தவன் கிராமத்தைவிட்டு வெகுதூரம் வந்திருந்தான்.

இப்போ பொழுது சாய்வதற்கும் இன்னும் அதிக நேரமில்லை. தேன் இன்னமும் சந்திக்கவேயில்லை.

ஆங்காங்கு அவர்கள் முன்பு தேன் தறித்த மரங்களில் இருந்த தேன்குடிகள் யாவும் எங்கோ சென்றுவிட்டன. போதாக்குறைக்கு நிலவு எறிக்கும் காலம்! தேன்குடி கண்ணில் பட்டாலும் அந்த வதைகளில் தேனிருப்பது மிகவும் அசாத்;தியம். நிலவுக்குத் தேனீக்கள் தேனைக் குடித்துவிடும்.

கந்தன் நம்பிக்கையை இழக்கவில்லை.

அதோ! அந்த சரிந்த வேலமரத்தில் கரடி ஏறிய அடையாளங்கள் தென்படுகின்றனவே! கரடி தேன் எடுப்பதற்காகத்தான் மரங்களில் ஏறும். கந்தன் நெருங்கிச்சென்று கரடியின் கால் நகங்கள் மரத்தில் ஏற்படுத்தியிருந்த அடையாளங்களைக் கவனிக்கின்றான். அவை எத்தனையோ நாட்களின் முன்னர் ஏற்பட்டவை! அவன் சோர்ந்துவிடாமல் சட்டென மரத்தில் ஏறித் தேன்கொட்டருகில் வருகின்றான். பூவாசல் கறுத்துக் கிடக்கின்றது. இதழ்களைக் குவித்துப் பூவாசலினுள் ஊதிவிட்டுக் காதைக் கொடுத்துக் கேட்கின்றான். தேன் பூச்சிகள் இரையும் ஓசை கேட்கவேயில்லை! ஏமாற்றத்துடன் கீழே இறங்கியவன் மிகவும் வேகமாக நடக்கின்றான்.

ஐயோ! பொழுதுபடமுதல் ஒரு சின்னத் தேன்குடி எண்டாலும் சந்திச்சுதேயெண்டால்!.. ..

மகள் ராணியின் முகம் அவனுடைய மனக்கண்ணில் தெரிகின்றது.

பொழுது சாய்ந்துவிட்டது. நன்றாக இருட்டிவிட்டால் காட்டில் வழி தெரியாது. இனி எப்படித் தேன் பார்க்கமுடியும் என்று நினைத்து, தன் கிராமம் இருக்கும் திசையில் திரும்பி, நாலைந்து பாகம் நடந்தவனுடைய காதில் குளவி இரைவது கேட்டது. கண்களை இடுக்கிக்கொண்டு கவனமாகப் பார்த்தான்.

ஒரு பாலைமரத்தில், மொக்காக இருந்த ஒரு பகுதியைச் சுற்றிக் குளவிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

குளவிகள் தேன்கூட்டில் நுழைந்து தேன் குடிக்க முயல்வது வழக்கம். ஆகவே நிச்சயம் இந்தக் கொட்டில் தேன் இருக்கத்தான் வேண்டும் என்று நினைத்து, விறுவிறென்று மரத்தில் ஏறிப் பூவாசலை அவதானித்த கந்தனின் முகம் சற்று மலர்ந்தது. தேனீக்கள் பூவாசலில் நுழைவதும், வெளிப்படுவதுமாகக் காணப்பட்டன.

மரத்தைக் கோடரியால் தட்டிப் பார்த்து, கொட்டு எவ்விடம் என்பதை நிச்சயம் செய்துகொண்டு, கந்தன் விரைவாகத் தறிக்கத் தொடங்கினான்.

சில நிமிடங்களுக்குள்ளாகவே பூவாசலின் கீழ் ஒரு நீள்சதுரமான பகுதி, அப்படியே ஒரு கதவுபோலப் பெயர்ந்து விழுந்தது. அந்தத் துவாரத்தினுள் கந்தன் வாயால் ஊத, ஊத தேனீக்கள் தாம் மொய்த்திருந்த வதைகளைவிட்டு மேலே கொட்டுக்குள் போய் அடங்கிக்கொண்டன.

கந்தன் நம்பிக்கையுடன் கொட்டினுள் கையைவிட்டு ஒவ்வொரு வதைகளாகப் பிய்த்தெடுத்தான். வதையில் தேன் இருந்தால் ஈயம்போலக் கனக்கும். கந்தனின் கையில் வந்தவையோ காற்றுப்போல் இலேசாக இருந்தன. வெள்ளை வெளேரென்றிருந்த அந்த வெற்றுவதைகளை எறிந்துவிட்டு, மீண்டும் கொட்டுக்குள் கையைவிட்டுப் பதற்றத்துடன் துளாவினான் கந்தன்.

கொட்டின் மேலே, தேனிக்கள் மொய்த்திருந்த பகுதியில் இருந்த 'கணக்கன் வதை" அவனுடைய நடுங்கும் விரல்களுள் அகப்பட்டது. அதைப் பிய்த்தெடுத்ததுமே தேனீக்கள் மொய்த்துக் கொட்டின. சுரீரென்று கடுக்கிய விஷத்தின் வேதனையையும் பொறுத்துக்கொண்டு அவன் அந்தக் கணக்கன் வதையை எடுக்கின்றான். உள்ளங்கை அகலமேயுள்ள அந்த வதை ஈயக்குண்டு போலக் கனத்தது.

தேன் பிலிற்றும் அந்த வதையைக் கைக்குள் அடக்கியபடியே கந்தன் தன் கிராமத்தை நோக்கிப் புயலென விரைகின்றான்.

இதோ வலது கையினுள் தேன்கசியும் அந்த வதையைக் கொண்டுபோய் ஒரு பேத்தி இலையில் பிழிந்து விட்டு அதனுள் பரியாரியார் கொடுத்த தூளைக் குழைத்து ராணியின் நாவில் தடவவேண்டும் என்ற தவிப்பில் அவன் காட்டில் மூச்சிரைக்க ஓடுகின்றான்.

சூரை முட்கள் தோலைப் பிய்க்கின்றன. கரம்பை முட்கள் காலில் ஏறுகின்றன. மேனியில் காயம்பட்ட இடங்களில் வியர்வை வழிந்து சொல்லொணா எரிவை ஏற்படுத்துகின்றது.

இருப்பினும் கந்தன் தன் குழந்தையின் உயிரைத் தடுத்து நிறுத்திவிடுவதற்காக மரங்களில் மோதிக்கொண்டும், கொடிகளில் இடறுப்பட்டுக்கொண்டும் தன் குடிசையை நோக்கி ஓடுகின்றான்.

தேனில் குழைத்த மருந்தைத் தின்றதும் குழந்தை கண்களைத் திறப்பாள், மனைவியின் முகம் மலரும், மற்றப் பிள்ளைகள் மறுபடியும் சிரித்து விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை அவனுடைய கால்களுக்கு வலுவைக் கொடுக்கின்றது.

ஓடி, ஓடி அவன் கிராமத்தின் எல்லைக்கு வந்தபோது நிலவு பாலாய்ப் பொழிகின்றது. நிலவொளி தேங்கித் ததும்பும் அந்த அமைதியைக் குலைத்துக்கொண்டு அவனுடைய மனைவியின் ஒற்றைப் பிலாக்கணம் அவன் காதில் நாராசமாகப் பாய்கின்றது.

ஓடிவந்த பாதையில் சட்டென நின்றுவிட்ட கந்தன், ஆத்திரத்தில் பற்களை இறுகக் கடித்துக் கொண்கின்றான். இரைக்கும் மூச்சு கனலாகத் தகிக்கின்றது.

எந்த நிலமை ஏற்படினும் இலகுவில் மனதைத் தளரவிட்டுவிடாத அந்தக் கிராமத்தானுடைய கண்கள் கலங்குகின்றன.

அந்தச் சின்னஞ்சிறு 'கணக்கன்வதை" அவனுடைய பலம்மிக்க வலது கைவிரல்களுக்குள் நசுக்கப்பட்டுக் கசங்குகின்றது. அதனிலிருந்து தேன்துளிகள் சொட்டுச் சொட்டாக மண்ணில் சிந்திக் கொண்டிருக்கின்றன.

நன்றி, வீரகேசரி வாரமஞ்சரி - 30.09.1973

 

 

 


     இதுவரை:  24715674 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4277 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com