அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு பயணமும் சில நினைவுகளும்...   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Wednesday, 25 January 2006

1.
நண்பர்களே!
மழை வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் உங்களை நான் மீளவும் சந்தித்தேன். ஏறத்தாழ பதினேழு ஆண்டுகளின் பின்னான சந்திப்பு அது. இதனையோர் அரிய தருணம் என்றே சொல்வேன். ஆம் 16-11-2005  முதல் 14-12-2005 வரையில் உங்களிடை நான் இருந்தேன்.  உங்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளத்தால் சீர்குலைந்திருந்தது. வானிலை அறிக்கைகள் நாள்தோறும் எச்சரித்த வண்ணம் இருந்தன. மழை தொடர்ந்து பெய்த வண்ணமே இருந்தது. இயற்கை மீதான கவனமும், அச்சமும் எல்லோரிடமும் மிகுந்திருந்தது. கடந்த ஆண்டு ஆழிப்பேரலையின் பின்னால் உலகில் யாருக்குத்தான் இந்த கவனமும் அச்சமும் இருக்கவில்லை. 
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அதிகாலை இரண்டு மணிக்கு சென்னை நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த என்னை சில்லென்ற மென்காற்று தழுவிச் சென்றது. இது சென்னையின் இயல்பாய் எனக்கு படவில்லை. வரண்ட வெப்பக் காற்றை எதிர்பார்த்த எனக்கு இந்த குளிர்மை இன்ப அதிர்ச்சியை அளித்தது. உண்மையில் இதனை இரண்டாவது இன்ப அதிர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும். சென்னை  விமான நிலையத்திற்கு வெளியே வரும்வரையில் மனதிற்குள் புழுக்கமாகவும் பரபரப்பாகவும் இருந்தது. ஆனால் எந்த சிக்கலும் இன்றி பத்து நிமிடத்தில் எல்லா வேலைகளையும் முடித்து வெளியே அனுப்பிவி்ட்டார்கள். முதல் இன்ப அதிர்ச்சி அது. ஏன் நான் புழுக்கமாக இருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் தானே. 1978ம் ஆண்டு முதல் 1988ம் கி.பி.அரவிந்தன் - சென்னை 1983ஆண்டுவரையான பத்து ஆண்டுகள்  எவ்வகைப் பணிகளை ஆற்றுவதற்கு அங்கு நான் தங்கியிருந்தேன் என்பதும் அவ்வேளையில் என்னொத்தவர்களும் நானும் எவ்வகையான சங்கடங்களை எதிர்கொண்டோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். 1988ல் தமிழகம் விட்டு புறப்படும் நேரம் 'நட்புறவுப் பாலம்'  இதழில் நான் உங்களுக்கு எழுதிய மடலை மறந்திருக்க மாட்டீர்கள். எது எப்படியாயினும் அவ்வேளையில் à®¨à®¾à®©à¯ மகிழ்ச்சிப் பெருங்கடலில் மிதந்த வண்ணம் இருந்தேன். நெஞ்சுள் உறைந்து கிடக்கும் பிரிந்து சென்ற காதலியின் தோற்றத்தை அடையாளம் காண தவிப்பவன்போல், அந்த இரவிலும் சென்னையை நியான் ஒளி வெளிச்சத்தில் அடையாளம் காண முயற்சித்தேன். சற்று ஏமாற்றம்தான். என்னுள் உறைந்து கிடக்கும் சென்னையை தரிசிக்க இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்பது புரிந்தது.
காலையில் எழுந்ததும் நான் தங்கியிருந்த ஜி.என்.செட்டித் தெருவில் அமைந்திருந்த விடுதியின் 7ம் மாடி ஐன்னல் வழியாக வெளியே பார்த்தேன். மொட்டை மாடி வாழ்க்கை மாற்றமின்றி அழகுடன் இருந்தது. துணி துவைத்தல், காயப்போடுதல், பாத்திரம் தேய்த்தல், குடங்களில் தண்ணீர் கொணர்ந்து தொட்டிகளை நிரப்புதல் என பெண்கள் சேலையை இடுப்பில் சொருகியபடி சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தனர். இடுப்பில் துண்டணிந்து பல் துலக்கியபடி ஆண்கள் உலாவந்தனர். தண்ணீர் நிரப்பும் எந்த ஆணையும் பார்க்க முடியவில்லை. சென்னையில் நமக்கும் மொட்டைமாடி வாழ்க்கைதானே வாய்த்தது. மொட்டைமாடி அறைகள்தான் நமக்கு வாடகைக்குக் கிடைத்தன. புறத்தியாருக்கு யார்தான் வீடு கொடுப்பார்கள். வீட்டு வாழ்க்கை கிடைத்தபோதும் அறை வெப்பம் தாங்காமல் மொட்டைமாடியில் வானம் பார்க்க உறங்குவதுதானே நமக்கு இயல்பாய் இருந்தது. இப்படி விட்டு விடுதலையாகி நிற்றல்தானே நம்மை இணைத்திருந்தது.
அவ்வெண்ணம் உந்தித்தள்ள உடனேயே நாம் தங்கியிருந்த, பணியாற்றிய மொட்டைமாடிகளை, வீடுகளை தரிசிக்கப் புறப்பட்டேன். அக்கால இனிமை நெஞ்செங்கும் பரவியிருந்தது.  பரபரப்பு மிகாத அந்தக் காலை நேரத்தில் அண்ணா சாலை வழியாக பயணத்தை தொடங்கிய நான் கூவத்தைக் கடந்து புதுப்பேட்டை வழியாக எழும்பூருக்குள் நுழைந்தேன். அண்ணா சிலை அமைந்திருக்கும் அந்தச் சந்திப்பு பொதுவாகவே எல்லோருக்கும் பழக்கமானது. கைகாட்டி நிற்கும் அண்ணா சிலையின் இடது பக்கம் திருவல்லிக்கேணி வழியாக மெரினா கடற்கரைக்கு செல்லும் தெரு இருக்கின்றது. அந்த தெருவின் இடது பக்கத்தில் அரச தோட்டம் இருக்கின்றது. கலைவாணர் அரங்கம் இருக்கின்றது. இந்த அரச தோட்டத்துள்தான் சட்டசபை உறுப்பினர் விடுதி இருக்கின்றது. உங்களுக்கு தெரியாததா. 77ம் ஆண்டில் முதல் தடவையாக கள்ளத்தோணியில் தமிழகம் வந்தபோது இவ்விடுதியில் தங்கிச் சென்றிருக்கிறேன்.  ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான சத்தியசீலன் அவர்கள் இங்கு தங்கியிருந்ததால் அந்த வாய்ப்புக் கிடைத்தது. 78க்கு பின்னும் இந்த சட்டசபை உறுப்பினர் விடுதியில் இடைக்கிடை வந்து செல்வதும் தங்குவதும் உண்டு. இங்குள்ள கன்ரீனில் ஒரு ரூபாவுக்கு ஐனதா சாப்பபாடு கிடைக்கும். எங்களின் பொருளாதார நிலை அப்படிதான் இருந்தது. அதற்காகவே நானும் என்னொத்தவர்களும் அங்கு வந்து செல்வோம். இந்த கலைவாணர் அரங்கத்தில் துயர இரவுகள் என்னும் கலைநிகழ்ச்சியை நடாத்தியிருக்கிறோம். அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளனாய் ஒழுங்கமைப்பாளனாய் நான் இருந்தேன். இந்த அண்ணா சிலைக்கு எதிரே வலதுபக்கத்தில் 24மணிநேர அஞ்சலகம் இருந்தது. இரவு 11 மணிக்கு பின்னால் நாங்கள் முகாமிட்டிருக்கும் பகுதிகளில் இருந்து நடந்து வந்து பணம் அனுப்பும்படி இலண்டனுக்கு தொலைபேசியில் கெஞ்சி விட்டு நள்ளிரவு கடந்த நிலையில் எழும்பூர் வழியாக பொடி நடையாய் சென்ற நாட்கள் நினைவில் அலைந்தன. கூவம் நாறியது. புதுப்பேட்டை மாற்றமில்லாமல் சேரியாக தெருவோர வாழ்வாக படிந்து கிடந்தது. மலக் கழிவுகளின் வரண்ட நாற்றம் மூக்கை சுழிக்கச் செய்தது. உறைந்து கிடந்த சென்னையை உசுப்பியது எழும்பூர். எழுபதுகளுக்கு முன்னர் இந்தியா என்பது எழும்பூர் எனத்தான் இலங்கையர் பலருக்குத் தெரியும். இங்கு வந்து தங்கிவிட்டு இந்தியா சென்று வந்தாதாக பலரும் கூறுவர். எழும்பூரில் கண்ணை உறுத்தும் மாற்றம் எதுவும் தெரியவில்லை. எழும்பூர் வழியாக பூந்தமல்லி நெடு்ஞ்சாலையில் இறங்கி வேப்பேரியிலிருக்கும் பெரியார் திடலுக்குள் அமைந்திருக்கும் பெரியார் ஈவெராவின் நினைவிடத்தில் தனியாக நின்றிருந்தேன். பள்ளிப் பருவத்தில் இருந்து நான் பெரியாரை அறிந்தவனாக நேசிப்பவனாக இருந்தேன். எனது தந்தையார் வைத்திருந்த நூல்கள் மூலம் பெரியார் எனக்கு அறிமுகமாகி இருந்தார். இன்றைக்கும் விமர்சனங்கள் தாண்டிய எனது நேசிப்புக்கு உரிவராக பெரியார் இருக்கின்றார். தமிழகம் அவரை தவறவிட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எனக்குள் இருக்கின்றது. இந்த பெரியார் திடல்தான் தமிழகத்தின் ஏராளமான நண்பர்கள் அறிமுகமாகவும் நட்பை வளர்க்கவும் களனாக இருந்தது. இங்கு நடைபெறும் எந்தக்கூட்டத்தையும் மாநாட்டையும் நான் தவறவிட்டதில்லை. சேலம் பாவரசுவுடன் முதல்தடவையாக இங்கு வந்ததும் அங்கு விடுதலையில் பணியாற்றிக்கொண்டிருந்த பல பத்திரிகை நண்பர்களை சநதித்ததும் நினைவில் அலைபுரண்டது. இந்த பயணத்தில் சேலம் பாவரசை சந்திக்க முடியாமலே போனது உறுத்திக்கொண்டே இருக்கின்றது. தமிழகத்தின் முக்கிய நண்பரான சேலம்பாவரசு பற்றிய தகவல்கள் உங்களிடமிருந்து தெளிவாக கிடைக்கவில்லை. 79ம் ஆண்டில்  சென்னை வந்த ஜேஆருக்கு தன்னந்தனியாக கறுப்புக்கொடி காட்டி பொலிசாரிடம் அடிவாங்கிய உணர்வுமிக்க, தோழமைமிக்க நண்பன் அவன். ஈழத்து தமிழரின் நிலையை 78ல் இருந்து தமிழக மக்களிடையே கொண்டு சென்றதில் அவனது பங்களிப்பு பாரியது. இந்த பயணத்தில் அவனைச் சந்திக்க முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றம்தான். நண்பர்கள் உறவில் இருந்து அவன் விலகிச சென்றானா விலக்கப்பட்டானா? இனியும் அவனைச் சந்திக்க முடியுமா? அதேபோல்தான் அரணமுறுவலையும் சந்திக்க முடியாமல் போனது. மழையின் தொடர்ச்சியினால் அவரது சந்திப்பு சாத்தியமற்று போனது. அவர் திருநெல்வேலியில் இருந்தார். 78ம் ஆண்டு காலகட்டத்தில் ஆழ்வார்ப்பேட்டையில் ஒண்டுக்குடித்தனத்தில் எங்களுக்காக தனது வீட்டின்கதவை தயங்காமல் திறந்து அரணமுறுவல் வரவேற்றமை அன்றைக்கு இயல்பானதொன்றலல. நான் வாழ்ந்த பத்தாண்டின் போது அவருடனான உறவின் விலகலுக்கு காரணங்கள் பல இருந்தபோதும் அந்த நட்பின் ஆழம் பழுதுபடவில்லை. அரணமுறுவலிடம் இருந்து நான் ஓயாத உழைப்பை கற்றுக்கொண்டேன். தனது ஈருருளியில் ஏற்றிக்கொண்டு சென்னை நகரின் ஒவ்வொரு மூலைக்ககும்  என்னை அழைதது சென்றதை எப்படி மறப்பது. அவருடைய உழைப்பும் மலர்ந்த சிரிப்பும் எவரையும் கவரக்கூடியது. முனைவர் இரா.இளவரசு - 2005முனைவர் இரா.இளவரசு அவர்கள் வயதில் மூத்தவர் தமிழறிஞர்.  சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். ஈழத்தின் நேசமிக்க நண்பர். பணி ஓய்வு பெற்றிருந்தார்.  அவரது உடல் நலம் குன்றியிருந்தது. அவரைச் சந்திக்க கிடைத்தது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தது. அந்த தளர்ந்த நிலையிலும் அவர் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்றார். மேடையை ஆளுமைப்படுத்தும் அவரது குரல்வளம் தளதளத்தது. அந்த நாட்களை நினைவுகூர்ந்ததும், வரும் நாட்கள் பற்றிய செய்திகளை அறிய ஆர்வம்கொண்டதும் என்னை நெகிழச் செய்தது. அவருடைய வீட்டில்தான் லங்காராணி நாவல் நூல் வெளியீடு நண்பர்களுடன் நடந்தது. இப்போதும் ஈழத்து எழுத்துக்களை படித்துக் கொண்டிருப்பதும் அவைபற்றி அறியவிரும்புவதும் அவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியது.  அரசியல் கட்சிகள் சாராத ஈழத்தமிழருக்கான ஆதரவு அமைப்பான தமிழக - ஈழ நட்புறவுக் கழகத்தின் தூண்கள் இந்த மூவரும். 1978ல் ஆரம்பிக்கப்பட்ட அந்த நட்புறவுக் கழகத்தின் ஆதாரமாக இவர்கள் விளங்கினர். இந்த பெரியார் திடலுக்கும் இந்த தமிழக - ஈழ நட்புறவுக் கழகத்திற்கும் ஈழப்பிரச்சனையை முன்னெடுத்ததில் உயரிய பங்களிப்பு உண்டு. அவ்வகையானதுதான் பெரியார் அன்பர்களினதும், தனித்தமிழ் அன்பர்களினதும் பங்களிப்புகள். பெரியாரின் சந்திப்பை முடித்துக் கொண்டு டவுட்டன் சந்திக்கு வந்து புரசைவாக்கம் கெல்லீஸ் வழியாக அண்ணா நகர் செல்ல புறப்பட்டேன்.புரசைவாக்கம் சாலையின் அமைப்பு அடையாளம் புதியதாய் இருந்தது. சட்டக்கல்லூரி மாணவர் விடுதியை தாண்டுகையில் 1983க்கும் முன்னைய நினைவுகள் எழுந்தன. இந்த விடுதியில் தங்கியிருந்த பல மாணவர்கள் எனக்கு நண்பர்களாய் இருந்தனர். தோள்கொடுத்தனர்.  பெரும்பாலான மாலைப் பொழுதுகள் இவர்களுடனான விவாதங்களாக உரையாடல்களாகவே கழிந்திருந்தன.1983ம் ஆண்டில் தமிழகத்தில கிளர்ந்த ஈழத்தமிழர் ஆதரவுக்கு இச்சட்டக்கல்லூரி மாணவர்களின் முன்னெடுப்பு முக்கியமானது.  அபிராமி தியேட்டர் தொகுதி முக அமைப்பையே  களியாட்ட வளாகமாய் மாற்றி நின்றது. என்னுள் உறைந்த நினைவுகளுடனான அந்தப்பகுதி சென்னை முக மாற்றத்தின் அடையாளமாய் இருந்தது. கெல்லீஸ் முனையில் இடது பக்கமாக கீழ்பாக்கம் கார்டன் வழியாக அண்ணாநகர் நோக்கிய வண்ணம் வண்டி விரைகின்றது. கெல்லீசில் முகாமிட்டிருந்த 1978ம் ஆண்டில்தான் 'இலங்கையில் ஈழம்' என்னும் சிறு நூலை நான் எழுதினேன். தமிழக - ஈழ நட்புறவுக்கழகம் தனது முதல் வெளியீடாக அதனைக் கொணர்ந்தது. அன்றைக்கு நமது பரப்புரைக்கு கையிலிருந்த நூல் அதுதான். இரண்டாவது வெளியீடாக யார் இந்த ஜெயவர்தனா என்ற சிறு நூல் வெளியிடப்பட்டது. கெல்லீசுக்கு அருகே இருக்கும் இநத கீழ்பாக்கம் கார்டனில்தான் பத்திரிகையாளர் சோலை ஆசிரியராக இருந்த மக்கள் செய்தி மாலை நாளிதழின் பணியகம் இருந்தது. குசேலர் தலைமை தாங்கிய உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் ஆதரவில்தான் மக்கள் செய்தி வெளிவந்து கொண்டிருந்தது. அங்கு பணியாற்றியவர்களில் எங்கள் நண்பர்களான நீங்களும் இருந்தீர்கள். அண்ணாநகருக்குள் நுழைந்துவிட்டேன் என்னால் நம்பவே முடியவில்லை.  சி்ந்தாமணியில் இருந்து திருமங்கலம் வரையான அந்த நெடுந்தெரு வணிக வளாகத்தால் நிறைந்து காண்பியகூடங்களால் நுகர்வோரை வசீகரித்த வண்ணம் விரிந்து கிடந்தது. நாங்கள் வசித்த இடங்கள் காணாமல் போய்விட்டன. உறைந்து கிடக்கும் அடையாளங்கள் எதையும் அங்கே காணமுடியவில்லை. சென்னையின் முகமாற்றம் இங்கே அப்பட்டமாகத் தெரிந்தது. கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினேன். இந்த அண்ணா நகரில் ஒரு வீட்டின் மொட்டைமாடியில் நாங்கள் தங்கியிருந்த அறையில்தான் அருளர் அவர்களால் லங்காராணி நாவல் எழுதி முடிக்கப்பட்டது. அந்நாவல் 1978 டிசம்பரில் நூலாக வெளியிடப்பட்டது. அமிஞ்சகரையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏறி நெல்சன் மாணிக்கம் தெருவழியாக சூளை மேட்டுக்குள் நுழைந்து ஒரு சுற்று சுற்றி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஏறாமல் உள்ளாலேயே கோடம்பாக்கம் கங்கை அம்மன் கோயில் தெருவுக்கு வந்தேன். இநத கோடம்பாக்கமும் சுற்றுப்புறமும் எங்கள் சென்னை வாழ்க்கையுடன் பிணைந்தது. எங்கள் வாழ்வின் வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள் இங்கேயும் நிகழ்ந்தன. கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் வசித்துவந்த தமிழறிஞர் தா.கோவேந்தன் அவர்களை பதிப்பாசிரியராக கொண்டு பொதுமை என்னும் இதழை வெளிக்கொணர்ந்தோம். இங்கு பல இடங்களில் எங்கள் குடியிருப்புகள் இருந்தன. பணிமனைகள் இருந்தன. இவைகளில் ஒரு பணிமனைதான் இயக்கங்களின் கூட்டமைப்பான ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் பணிமனையாகவும், பத்திரிகையாளர் மொய்க்கும் இடமாகவும் இருந்தது. நண்பர்களே உங்களுடனான சந்திப்பு மையங்களும் இந்த பணிமனைகள்தானே.  அந்த தெருக்கள் சந்துகளில் எல்லாம் நினைவுகள் நிழலாட காலாற நடந்தேன். அந்த பகுதியில் குடியிருந்த நண்பர் எழில் இளங்கோவனும் வீடு மாற்றி தொலைவுக்கு சென்றுவிடடார். தற்போது அவரும் நீண்ட நாளின் பின் என்னுடன் கூடவே அந்தப் பகுதியில் இருந்தார். ஒவ்வொரு இடமாக ஒவ்வொரு தெருவாக அடையாளம் சொல்லி நடந்து கொண்டிருந்தோம். பக்கத்தில்தான் அதாவது தெற்கு சிவன் கோவில் தெருவில் அலைகள் பதிப்பகம் இருந்தது.  அலைகள் பதிப்பக நிறுவனர் பெ.நா. சிவம் எங்களை ஆரத்தழுவி  வரவேற்றார். இவருடைய அச்சகத்தில்தான் 'இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைதனம்' என்னும் நூலை அச்சிட்டோம்.  எழுத்துக் கோர்க்கும் அச்சகமாக தொடங்கி அதனை இன்று பெரிய பதிப்பகமாக வளர்த்தெடுத்துள்ளார் பெ.நா.சிவம். இப்படியே தாயைத் தவறவிட்ட கன்றுக்குட்டியைப்போல் நண்பர்களைப் பழகிய இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.
(வளரும்...)

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  24714841 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4932 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com