அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 03 December 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கவிக்குழந்தை..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்.  
Monday, 27 March 2006

'1966ம் ஆண்டு ஒக்ரோபர் எழுச்சி' யின்
கவிக்குழந்தை...
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைப் பயணம் அல்லது இலக்கிய வாழ்வு நாற்பதாவது ஆண்டைத் தாண்டுகின்றது எனக் கேள்வியுற்றபோது எனக்கது ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் அவர் ஒரு கவியரங்கில் படித்த கவிதையை நேரில் நான் கேட்டே முப்பது ஆண்டுகளாகி விட்டன (அது 1975). அப்போது நானெல்லாம் ஒரு சிறுகவிதையேனும் எழுதிப்பார்த்திருப்பேனா சந்தேகம்தான். சமகாலத்தில் அவரைப்போல் ஈழத்துக் கவிஞர்கள் யாரேனும் இவ்வளவு அதிகமாகக் கவிதைகள் எழுதியிருப்பார்கள் என்றும் நான் நம்பவில்லை. அவரது கவிதைகள் சந்தம் கூடிவரும் ஓசை நயம் நிரம்பியவை, எளிமையானவை, எழுச்சிகரமானவை, இசைக்கும் தன்மை கொண்டவை. மலையிலிருந்து கொட்டும் அருவிபோன்று புதுவையின் கவிதையிலும் சொற்கள் நெருடலின்றிக் கொட்டும் அதேவேளையில் அவை படிகம் போன்று தெளிந்துமிருக்கும். மானுடம் பாடும் வானம்பாடி என இம்மலருக்குத் தலைப்பிட்டிருப்பது மிகமிகப் பொருத்தமானது.
 
1975ம் ஆண்டில் அரசியல் பணிக்காக பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றிருந்தபோது அங்கு புதுவையின் கவியரங்கத்தை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அந்த விழாவில் 'சோறா? சுதந்திரமா?" என்ற கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சோறென கவிஞர் புதுவை இரத்தினதுரையும்  சுதந்திரமென கவிஞர் காசி ஆனந்தனும் எதிரெதிராக நின்று கவிதைச் சமராடியது இன்றைக்கும் நினைவில் உள்ளது. அந்நிகழ்வில் தாள்களைப் புரட்டிப் புரட்டி புதுவை கவிதை படித்தபோதும் அவை எழுதப்படாத வெற்றுத்தாள்கள்தான் என்பதை நிகழ்ச்சி முடிவில் அறிந்தபோது ஏற்பட்ட வியப்பு இன்றைக்கும் நீங்கவில்லை. அதுதான் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஆளுமை. 'வானம் சிவக்கும்" தொகுப்பில் இருந்து 'பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும்" வரையான அவரது கவிதைத் தொகுப்புகளில் அவரது மானுட நேசம் வெளிப்படுவதையும் அடக்குமுறையாளர்களுக்கு எதிரான கோபம் கொப்பளிப்பதையும் நாம் காணலாம்.
   
புதுவை இரத்தினதுரையின் கவிதையை நான் குமரன் இதழில்தான் முதலில் படித்தேன் என்று ஞாபகம். குமரன் இதழ் எழுத்தாளர் செ.கணேசலிங்கனை ஆசிரியராக கொண்டு கொழும்பில் இருந்து வெளிவந்தது. இதழ் முழுவதும் மார்க்சிய கண்ணோட்டத்துடனான படைப்புகளே இடம்பெறும். வாசிப்பதற்கு கடினமான அரசியல் கலைச்சொற்கள் நிரம்பிய அந்தக் குமரன் இதழை இவரது கவிதைக்காகவும், சாருமதியின் கவிதைக்காகவும் தொடர்ச்சியாக படித்து வந்தேன். புதுவை அவர்கள் குமரனில் வரதபாக்கியான்-உவர்மலை என்ற பெயரில் எழுதுவதுண்டு. இவரது கவிதைகள்தான் அந்த இதழின் அரசியலை எளிமையாக வெளிப்படுத்தின என்றால் மிகையில்லை. திருக்கோணமலையில் நான் அரசியல் பணிக்காக தங்கியிருந்த வேளையில் கவிஞர் திருக்கோணமலைக் கவிராயர்தான் (இயற்பெயர் வில்வராஐன்)  புதுவை இரத்தினதுரையும் வரதபாக்கியானும் ஒருவரே என எனக்கு தெரியப்படுத்தினார்.

புதுவை இரத்தினதுரை அவர்களை 1966ம் ஆண்டு ஒக்ரோபர் எழுச்சியின் கவிக்குழந்தை என்றும் அழைக்கலாம். இலங்கையில் தமிழ்பேசும் மக்களிடையே புரையோடிப்போயிருந்த சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினால் (சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சி) முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆரம்பமே '1966ம் ஆண்டு ஓக்டோபர் 21 எழுச்சி" எனக் குறிக்கப்படுகின்றது. (அந்த எழுச்சிக்கும் இந்த ஆண்டுதான் நாற்பதாண்டு என்பதையும் கவனிக்கவும்) இந்த நாளில் சுன்னாகம் சந்தையில் இருந்து ஆரம்பித்த பொலிசாரின் தடையை மீறிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒரு சமூக கலம்பகம் தொடக்கிவைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இக்கலம்பகம் 1967ல் சங்கானையிலும், 1968ல் மாவிட்டபுரத்திலும் தேநீர்கடைப் பிரவேசமாகவும், ஆலயப்பிரவேசமாகவும் உச்சநிலையை அடைந்தது. இந்த எழுச்சிக் காலகட்டத்தினூடே கலை இலக்கிய வெளிப்பாடுகளும் பெருக்கெடுக்கத் தொடங்குகின்றன. கவிதை சிறுகதை நாவல் நாடகம் என அனைத்து வடிவங்களிலும் இக்கலம்பகம் தெறிக்கத் தொடங்குகின்றது.
 'எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்
நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்"
என்ற கவிஞர் சுபத்திரனின் கவிதை அன்றைய சூழலின் கொதிநிலையை, சங்கானை நிகழ்வை எடுத்துணர்த்துவதாகும்.
அதேபோல் மஹாகவியின் தேரும் திங்களும் கவிதை:
'கல்லொன்று வீழந்து
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு,
சில்லென்று செந்நீர் தெறித்து
நிலம் சிவந்து,
மல்லொன்று நேர்ந்து
மனிசர் கொலையுண்டார்."
மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலின் நிகழ்வை இக்கவிதை படம்பிடிக்கின்றது.
இதேவேளையில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை ஒன்று இப்படிச் சொல்கின்றது.
'சாதி வழக்கத்தை தள்ளிவை - அதைச்
சாத்திரம் என்றிடில் கொள்ளிவை
நீதி வரும்வரை மோதி நில் - சாதி
நீசரை போரிடை நின்று வெல்."
இந்தப் பின்னணியில்தான் புதுவை இரத்தினதுரையின் 'வானம் சிவக்கும்" கவிதைத் தொகுப்பு 1970ல் வெளியிடப்பட்டது. இன்றைக்குப் படிக்க அந்தத் தொகுப்பு கிடைக்குமா தெரியவில்லை.
இதேகாலத்தின் சமாந்தரமாகவே ஈழவிடுதலைப் போராட்டத்தின் கூறுகளும் தீவிரமடையத் தொடங்குகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளல் வேண்டும். இந்த 1965 - 1970ம் ஆண்டு காலகட்டத்தில்தான் தமிழரசுக்கட்சி ஐக்கியதேசியக் கட்சியுடன் இணைந்து அரசமைத்ததும் அமைச்சர் பதவி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கட்சிக்குள்ளும் தமிழரசு கருத்தாளர்களுக்கும் இடையே முரண்பாடு முற்றி வெடித்ததும் சுயாட்சிக்கழகம் தோற்றம் பெற்றதும் இவ்வேளையில்தான். 1970ல் ஈழவிடுதலையை முன்நிறுத்தி தமிழ் இளைஞர்கள் இயக்கமாக உருப்பெறத் தொடங்கியபோது, இந்த '1966ம் ஆண்டு ஓக்டோபர் எழுச்சி"யில் இருந்தும் சில படிப்பினைகளைப் பெற்றனர் என்பதற்கும் அனுபவங்களை கைமாற்றிக் கொண்டனர் என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. அந்த சமூக விடுதலை எழுச்சி ஈழத்தேசிய விடுதலைக்கு கையளித்தவற்றில் கவிஞர் புதுவை இரத்தினதுரையும் அடங்குவார். இன்றைக்குமுள்ள உயிர்ச்சான்று அவர்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  19976809 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3307 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com