அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 25 arrow நிலமும் நெருப்பும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலமும் நெருப்பும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சிங்கநெஞ்சன்  
Tuesday, 04 April 2006

பேருந்து சென்னையில் புறப்பட்டதிலிருந்தே பக்கத்திலிருந்த தன் அப்பாவை பையன்  கேள்விக்கணைகளால் துளைத்துக் கொண்டிருந்தான். பையனுக்கு 13 அல்லது 14 வயது இருக்கும்.  வழியில் உணவகத்தில் வண்டி நின்றது. இறங்கினோம். பக்கத்தில் பழைய டயர்கள்  அடுக்கப்பட்டிருந்தன. அருகே 'வல்க்கனைசிங் செய்யப்படும்' என்று எழுதியிருந்தது. "வல்க்கனைசிங்னா என்னப்பா?'' - இது பையன். "வல்க்கனசிங்னாக்க பஞ்ச்சர் ஒட்றது'' - இது அப்பா. "பஞ்ச்சர் ஒட்றதுக்கு  வல்க்கனைசிங்ன்னு ஏன்ப்பா சொல்றாங்க''?; "தொண தொணன்னு கேள்வி மேல கேள்வி கேக்காம  பேசாம வண்டியில ஏறு'' - அப்பாவின் இயலாமை கோபமாக மாறியது.
எனக்கு என் சிறு வயது நினைவிற்கு வந்தது. அந்தச் சிறுவனிடம் சென்று "தம்பி, 'வல்க்கன்' என்றால்  ரோமானிய மொழியில் 'நெருப்புக் கடவுள்' என்று பொருள். பெரிய ட்யூப்களில் பஞ்சர் ஒட்டும்போது, தீ மூட்டி அதில் வரும் வெப்பத்தால் ரப்பரை இளக வைத்து ஒட்டுவார்கள். தீயின் உதவியால் இது  செய்யப்படுவதால் 'வல்க்கனைசிங்' எனப்படுகிறது" என்றேன்.
"ஓஹோ, எரிமலைக்கு அதனால்தான் 'வல்க்கனோ'ன்னு சொல்றாங்களா''? பையன் தனக்குத்தானே  சொல்லிக் கொண்டு உற்சாகமானான். என்னைப் பார்த்து "அங்கிள், இந்தியாவில இப்பல்லாம் எர்த்  க்வேக் வருதே, அதுமாதிரி திடீர்னு வல்க்கனோவும் வருமா? எர்த்க்வேக்கிற்கும் எரிமலைக்கும்  தொடர்பு இருக்கா? இந்தியாவில இதுக்கு முன்னாடி எப்பவாவது எர்த் க்வேக் வந்திருக்கா - இனிமேல எப்பவாவது வருமா'' பையன் வினாக்களை முடிக்கும்முன் விழுப்புரம் வந்துவிட்டது. "எறங்கு எறங்கு"  என்று அப்பா, பையனை அழைத்துக் கொண்டு இறங்கிவிட்டார். அவன் விட்டுச் சென்ற வினாக்கள் என் சிந்தையில் சுழன்று கொண்டிருந்தன.
எரிமலை என்றதும் கூம்பு வடிவ மலை, அதன் உச்சியின் நடுவே ஓர் பெரிய ஓட்டை, அதன் வழியே  வான்நோக்கி சீற்றத்தோடு வீசி எறியப்படும் கனல் கக்கும் பாறைத்துகள்கள் - துண்டுகள், உருகிய  பாறைக்குழம்பு (லாவா), நீராவி மற்றும் வாயுக்கள் கலந்த புகை இவையெல்லாம்தான் நினைவிற்கு  வரும். இதுசரிதான். ஆனால் விஞ்ஞானிகளின் விளக்கப்படி, இவை மட்டுமே எரிமலைகள் அல்ல. சிறு விரிசல்களில் தொடங்கி பல நூறு கிலோ மீட்டர் நீளமுள்ள பெரும் வெடிப்புகள் வாயிலாக  பாறைக்குழம்பு வெளிப்படும் இடங்களும் எரிமலைகள் என்றே அழைக்கப்படுகின்றன.
விரிசல்கள், வெடிப்புகள், மலை நடுவே உள்ள பெரிய திறப்புகள் இவற்றின் வழியே வெளியேறும்  எரிமலைக்குழம்பு (LAVA) பூமியின் மேற்பரப்பில் பரவும்போது விரைந்து குளிர்ந்து இறுகி,  பாறைகளாக மாறுகின்றன. கடலுக்கடியில் வெளிப்படும் எரிமலைக் குழம்புகள் இன்னும் வேகமாகக்  குளிர்ந்து இறுகுகின்றன. இவையே எரிமலைப் பாறைகள் (Volcanic Rocks) என்று  அழைக்கப்படுகின்றன. எரிமலைப் பாறைகளில் உள்ள ரூபீடியம் - ஸ்ட்ரேன்ஷியம்; பொட்டாஷியம்  ஆர்கான் மற்றும் காரீயம் ஆகியவற்றின் ஓரகத் தனிமங்களை (ISOTOPES) ஆய்வு செய்து  அப்பாறைகள் எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவானவை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.
கடந்த பத்து லட்சம் ஆண்டுகளில் பூமியின் பரப்பில் எங்கெல்லாம் எரிமலைக் குழம்பு  வெளியேறியிருக்கிறது என ஆய்வு செய்து அந்த இடங்களை உலகப்படத்தில் புள்ளிகளாகக் குறித்துப் பார்த்தபோது சில அதிசய உண்மைகள் புலப்பட்டன(படம்). அவை (1) பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எரிமலை சீற்றங்கள் நிகழ்வதில்லை. (2) சில பகுதிகளில் எரிமலை சீற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.  (3) பொதுவாக பூமியின் பரப்பிலுள்ள தட்டு விளிம்புகளில் (Tectonic Plate Boundaries) எரிமலைச்  சீற்றங்கள் அதிகம். (4) குறிப்பாக தட்டுகளின் கூடும் விளிம்புகளில் இவை மிக அதிகம் (5) அதிலும்  குறிப்பாக இருவேறு தட்டுகளிலுள்ள பெருங்கடல் பகுதியும் கண்டப்பகுதியும் கூடும் இடங்களில்  இவை மிக மிக அதிகம். (6) இந்தப் பகுதிகளில் உள்ள எரிமலைகள் தீவிர சீற்றத்துடன் சீறக்  கூடியவை; சில சமயங்களில் வெடித்துச் சிதறக் கூடியவை. (7) இப் பகுதிகளில் வெளிப்படும்  எரிமலைக் குழம்பு அதிகம் பரவுவதில்லை - இவை குவியல் குவியல்களாக இறுகிப் போய் கூம்பு  போன்ற மலைகளாக உருவெடுக்கின்றன. (8) தட்டுகள் பிரியும் விளிம்புகளில், பெரும்பாலும்  பெருங்கடல்களின் அடியில் உள்ள நிலப்பரப்பில் அதிக சீற்றம் இல்லாமல் வெளிப்படும் எரிமலைக்  குழம்பு அந்நிலப்பரப்பின் மேல் நீண்ட தூரம் ஓடி, பரவி, இறுகி, படுக்கைகள் போல் உருவெடுக்கிறது.  இதுபோன்ற நிகழ்ச்சி சிறிது இடைவெளிக்குப் பின் மீண்டும் நிகழ்கிறது. பழைய படுக்கையின்மேல்  புதிய படுக்கை உருவாகிறது. இது தொடர்ந்து நிகழ்வதால் பல படுக்கைகள் கொண்ட அடுக்கு போன்ற அமைப்பு உருவாகிறது.
தட்டுகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதிக் கொள்ளும் போதும், ஒன்றின் கீழ் ஒன்று அழுத்தும்  போதும் நிகழும் இடப்பெயர்ச்சிகளின்போது வெளிப்படும் சக்தியே நிலநடுக்கமாக மாறுகிறது. இதே  நிகழ்ச்சிகளின் போது ஏற்படும் சிதைவு, வெப்ப உயர்வு, இதன் விளைவாக பாறைகள் உருகி மேல்  நோக்கி உயர்ந்து பொங்கி வழிதல் போன்றவையே எரிமலைகள் உருவாகக் காரணம். எனவே, நிகழிடம் மட்டுமன்றி காரணங்களைப் பொறுத்த அளவிலும் கூட எரிமலை சீற்றங்களுக்கும்  நிலநடுக்கங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. பெரும் எரிமலை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன் சிறு நில அதிர்வுகள் ஏற்படும். ஆனால் எல்லா நிலநடுக்கங்களின் போதும் அதன் தொடர்பாக எரிமலை  சீற்றங்கள் நிகழ்வதில்லை.
பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள வட, தென்அமெரிக்க கண்டங்களின் மேற்குப் பகுதி, ஆசிய -  ஆஸ்திரேலிய கண்டங்களின் கிழக்குப் பகுதி இவையெல்லாம் கண்டத்தட்டுகளும் - பெருங்கடல்  தட்டுகளும் கூடும் இடங்களாகும். எனவே தற்போது உலகில் மிக அதிகமாக எரிமலை சீற்றங்கள்  நிகழும் இடங்கள் இவைதான். இப் பகுதிகள் பசிபிக் பெருங்கடலைச் சுற்றி ஒரு 'வளையம்' போல்  அமைந்திருப்பதால் இப்பகுதி 'நெருப்பு வளையம்' (Ring of Fire) எனப்படுகிறது.
நிலநடுக்கங்களைப் போலவே எரிமலைச் சீற்றங்களும் பேரழிவை ஏற்படுத்த வல்லவை. கடந்த  நூற்றாண்டில் மட்டும் எரிமலைச் சீற்றங்களுக்கு ஆளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு  லட்சத்திற்கும் மேல். ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு 44,000 கோடி ரூபாய்க்கும் மேல். 1902ஆம் ஆண்டு  கரீபியன் தீவுகளில் உள்ள 'மௌண்ட் பேலே' என்னும் எரிமலை சீறியதில் அருகிலுள்ள செயின்  பிய்யரா எனும் நகரம் தீயிலும் சாம்பலிலும் மூழ்கி அழிந்து போனது. அங்கிருந்த 29,000 மக்கள்  உயிரிழந்தனர்.
தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள 'க்ரகாடூவா' எனும் எரிமலை 1883ஆம் ஆண்டு  கடலுக்கடியில் சீறிய போது ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள் 36,000 மக்களைப் பலி வாங்கின.
சாதாரணமாக, எரிமலையின் சரிவுகளிலும் பக்கவாட்டிலும் ஏற்படும் மாற்றங்கள், அப்பகுதியில்  ஏற்படும் நிலஅதிர்வுகளின் எண்ணிக்கையில் ஏற்படும் உயர்வு, சுற்றுப்பகுதியிலுள்ள வெந்நீர்  ஊற்றுகளில் ஏற்படும் வெப்ப உயர்வு இவற்றைத் துல்லியமாகக் கணிப்பதன் மூலம் எரிமலை  சீறப்போவது எப்போது என்பதை முன்கூட்டியே அறிய முடியும். மௌண்ட் செய்ண்ட் ஹெலன்  எரிமலையைச் சுற்றி 1978ஆம் ஆண்டு முதல் ஆய்வு நடத்தி வந்த அமெரிக்க புவியியல் துறையைச் சேர்ந்த புவியியலர்கள், அந்த எரிமலை 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் சீறக் கூடும் என்று  கணித்தார்கள். அந்தக் கணிப்பு நிஜமானது. ஏராளமான மக்கள் காப்பாற்றப்பட்டனர். இதே போன்று  1991 ஆம் மௌண்ட் பினாடூபோ (ஃபிலிபைன்ஸ்) எரிமலையின் சீற்றமும் முன்கூட்டியே  கணிக்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
இந்தியாவில் தக்காண பீடபூமி, பீடபூமியாக இருப்பதற்குக் காரணமே, பெசால்ட் (BESALT) எனப்படும்  எரிமலைப் பாறைகள்தான். தக்காண பெசால்ட் எனப்படும் இப்பாறைகள், நீண்ட பிளவுகளின் வழியே  வெளியேறிய எரிமலைக் குழம்பு பல ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் பரவி குளிர்ந்து  இறுகியதால் ஏற்பட்டவை. அடுக்கடுக்கான படுக்கைகள்போல் பரவிக் கிடக்கும் இப்பாறைகள் மொத்த  தடிமன் 2000 மீட்டருக்கும் அதிகம். பரப்பளவு 5 லட்சம் சதுர கிலோ மீட்டர்கள் (மகாராஷ்டிரம்  மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில்). சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாறைகள் உருவாகின என்று கணிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த "பேரன் தீவுகளில்' (Baren islands) உள்ள எரிமலைதான்  இந்தியாவில் உள்ள ஒரே எரிமலையாகும். இந்த எரிமலை 188 ஆண்டு அமைதிக்குப் பின் கடந்த 6- 4-1991 அன்று மீண்டும் சீறத் தொடங்கியது. பிறகு, சுமார் 14 ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு  கடந்த 2005 ஆம் ஆண்டு மீண்டும் சீறியது. இது சீறுவதற்கு முன்னால் இம் மலை அடிவாரத்தில் குழி பறித்து தங்கியிருந்த பெருச்சாளிகள் வெளியேறிக் கடலோரம் சென்றுவிட்டன என்பது வியத்தகு  உண்மை.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எரிமலைச் சீற்றங்கள் நிகழ்ந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை.  எதிர்காலத்திலும் இங்கு எரிமலைச் சீற்றங்கள் நிகழும் அபாயம் இல்லை.

நன்றி:தினமணி


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08
TamilNet
HASH(0x55da811c32b8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08


புதினம்
Thu, 28 Mar 2024 18:08
















     இதுவரை:  24713453 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6315 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com