அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 18 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 26 arrow மின்னலோடு விரியும் சிறகுகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மின்னலோடு விரியும் சிறகுகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மு.புஷ்பராஜன்.  
Tuesday, 18 April 2006

வாழ்வின் இன்றியமையாத ஒரு அம்சமாகக் கவிதை தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. எல்லோரும் ஒரு சந்தர்ப்பத்திலாவது கவிதை மனநிலைக்கு வசமாகியே இருப்பர். கவிதை அழகியல் உணர்வு வாய்த்தவர்களுடன் மட்டுமே உறவுகொள்ளக்கூடியது என இன்னமும் சிலர் தந்தக்கோபுரத்திலிருந்து நினைத்துக் கொண்டிருக்கக்கூடும். இது தம்மை ஒரு விசேட பிறவியாகக் கருதுபவர்களின் மனநிலையேதான். கவிதை எல்லா மனநிலை வாய்த்தவர்களுடனும் இணங்கி வரக்கூடியதுதான். முக்கியத்துவம் வாய்ந்த கவிதைகளில் சில சிறைக்கூடங்களில்தான் உருவாகியிருக்கின்றன. கொலைகளுக்காக மரணதண்டனை விதிக்கப் பெற்றவர்களின் உணர்வுவெளிப்பாடாக கவிதை அமைந்துள்ளதை உலகம் பலமுறை நம்முன் வைத்துள்ளது. மொழிமூலம் உருவாகும் படைப்பு  வெளிப்பாட்டிற்கு மொழியின் தேர்ச்சியே ஆதாரமானது. இத்தேர்ச்சி இலக்கண,கல்விசார் வகைகளைக் குறிப்பிடுவதல்ல. மாறாக மனத்தில் உருவாகிவரும் உணர்வுகளை வடித்து எடுக்கக்கூடிய செறிவான, கூர்மையான வார்த்தைகளைக் கையாள்வதையே குறிக்கின்றது. à®®à®©à®®à¯à®šà®¾à®°à¯à®¨à¯à®¤ தந்திகளில் கவிதையால் இலகுவில் அதிர்வுகளை எழுப்ப முடியும். இவ்வதிர்வுகள் எவ்வுணர்வு சார்ந்தவையாகவும் இருக்கலாம். மொழி வளைந்து குழைந்து உணர்வின் தந்திகளைத் தழுவுகையில் இந்த அதிர்வுகளுக்கான உயிர் அசைகிறது.

மன உணர்வுகளின் முன்னால் மொழி தொடர்ந்தும் தோற்றுக் கொண்டே வருவதாக உணர்கிறேன். நிலவின் தேஜசையும் அந்தி அடிவானிலும், கடலிலும் மாறிமாறி உருவாக்கிக்கொள்ளும் வர்ணக் கலவையை பூரணமாக ஏந்திய மொழிக் கிண்ணம் இதுவரை உண்டா? நம் கைவசம் வைத்திருக்கும் வார்த்தைகளுடன் பொருத்திப் பார்த்து ஒரு இணக்கப்பாட்டிற்கு வருகிறோமே தவிர நம் உணர்வுகளுடன் அவை உண்மையில் இசையவில்லை என்பதை நாம் அறிவோம். இந்த இசைவின்மையை உணர்பவர்கள்தான் புதிய மொழிக்கான தேடவலுக்குரியவர்களாக இருப்பர்.

இத் தேடலுக்குரியவர்கள் இன்றைய புதுக்கவிதைத் தளத்தில் அருகியே வருகிறார்கள். மரபின் விலங்குடைத்து அக்கினிக் குஞ்சாக வெளிவந்த புதுக்கவிதை இன்று அதன் எளிமையையும் செழுமையையும் சிதைக்குமளவிற்கு வித்துவச் செருக்கின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளன.

படிமங்கள்மூலம் கவிதையின் ஆழங்களை வெளிப்படுத்தும்நிலை தலை கீழாக மாறி படிமங்களே கவிதையின் ஊற்றை அடைத்து உயிரைத் திருகிச்  சாகடிக்கும்  நிலைக்கு  வந்துள்ளது.  கவிகையில் படிமங்களின் தன்மைபற்றி  மு.பொன்னம்பலம் இவ்வாறு கூறுகிறார் 'படிமங்கள் பாற்கஞ்சியில் பயறு கலந்துள்ளதுபோல் இருக்க வேண்டும்; பயறே பாற்கஞ்சியாக மாறிவிடக்ளுகூடாது.' சிலரது படிமங்கள் படைப்பிலிருந்து பெறும் அனுபவங்களைச் சந்திக்கவிடாது பயமுறுத்தியபடி நம்மைவழிமறித்து சுற்றுப்பாதை வழியாக அழைத்துச் செல்கிறது. நாமும் விரல்பிடித்துப் பின்தொடர்தையில் நடுவழியில் அது எங்கோ மறைந்துபோக திருதிருவென திருவிழாச் சிறுவனாகிவிடுகிறோம். சில புதுக்கவிதைகளோ உணர்விழந்த வெற்றுச் சொற்களால் அடுக்கப்பட்டுக்கோண்டே இருக்கிறது. சொற்கள் அளவிற்கு அதிகமாகி நீர்த்துப் போகிறது. மொழி உரைநடையிலிருந்து கவிதைக்கு மாறும் தளத்தை கைவிட்டுப் பின்வாங்கியவர்களாகவே இருக்கிறார்கள்.படைப்பாக அமைந்திருக்கும் சொற்கள் வாசக உள்ளத்தில் 'நீர்வளையங்களை'  தோற்றுவிக்க வேண்டும். மொழியின் ஒரு புள்ளியில் மின்னி சிறகுகள் கொள்ள வேண்டும். எழுதியவனும் வாசகனும் இணையும் இந்தப் புள்ளிதான் - பின்நவீனத்துவக்காரரின் பிரதி, வாசகன் என்ற யானை க்கும் குருடனுக்கும் அப்பால் - படைப்பு முயற்சியின் குறைந்த பட்ச வெற்றி எனலாம்.

இவ் வெற்றியை இன்றைய சில புதுக்கவிதைக் காரரைவிட அதிக அளவில்  அன்றைய எமது கிராமியக் கவிக் குயில்கள் சாத்தியமாக்கி உள்ளனர் என்றே கருதுகிறேன். இன்றும் அவர்களின் ஒப்பாரிப்பாடல்களின் சோகம் செறிந்த கவித்துவம் மலைப்பூட்டுவதாகும். இவர்களுக்கு புதுக் கவிதை, ரி.எஸ்.எலியட், பாரதி என்பது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாது.

சிலர் பாரதியை பேரப்பிள்ளைகளின் பாடப் புத்தகத்திலோ, கலண்டர் மட்டையிலோ பார்த்திருப்பார்கள். இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தமது வாழ்வும் தாம் எதிர்கொள்ளும் சூழலும்தான். வாழ்வு அளித்த உணர்வுகளை சுதந்திரமாக வெளியிடும் ஆற்றல், எப் பத்திரிகையில் வெளிவரும், விமர்சகர்கள் எவ்வாறு விமர்சிப்பார்கள் என்ற படைப்பாளிகளின் முதுகுச் சுமைகள் இல்லாத வெளிப்பாடுகள். எளிமையானவை, கவித்துவமானவை.

இன்றைய சில கவிஞர்களின் ஆழங்கள் இல்லாமலிருந்துங்கூட. இக் கிராமியக் கவிக் குயில்களின் தாக்கம் இன்றைய நவீன கவிதையிலும் தமிழரின் கவனத்தை அதிகமாக ஈர்த்த சினிமாவிலும் நிறையப் பாதிப்பினை எற்படுத்தி உள்ளது. ஈழத்தின் கிழக்கில் வழங்கும் 'ஆக்காண்டி ஆக்காண்டி' என்ற நாட்டார் பாடலை மையமாகக் கொண்டு சண்முகம் சிவலிங்கம் ஒரு அருமையான கவிதையைப் படைத்துள்ளார். மலையக மக்களின் நாட்டார் பாடலின் 'ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனைத் தோப்பிழந்தேன்' என்ற  வரிகளைக் கொண்டு சேரன் ஒரு பாடலை எழுதியுள்ளார். ஸ்பானிய கவிஞரான GARCIA LORCA, ரசியக் கவிஞரான SERGEI YESININ  ஆகியோரது கவித்துவ ஆழுமைகள் கிராமியப் பாடல்களின் பாதிப்பினால் உருவானவை என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழ்ச் சினிமாப் பாடல்களுள் கலந்துள்ள கிராமியக் குயில்களின் பாடல்கள் பற்றி விரிவான ஆய்வையே மேற்கொள்ளலாம்.சில நவீன கவிதைகள் வெற்று வசனமாக வெளிவரும்பொழுது சில கிராமியப் பாடல்களை வசனமாக அடுக்கி வைத்தாலும் அவை
கவிதையாகவே விரிந்து கொள்ளும். உதாரணத்திற்கு:


01.
சில்லென்று பூத்த
சிறுநெருஞ்சிக் காட்டிடையே
நில்லென்று கூறி
நிறுத்தி வழி போனீரே


02.
வாடாத பூவே
என் மகனார்
வதங்காத மல்லிகையோ
மானீன்ற கண்ணே
என் மகனார்
மயில் பொரிச்ச குஞ்சோ


03.
கச்சான் அடிச்ச
காட்டில் மரம் நிண்டதுபோல்
உச்சியிலே நாலுமயிர்
ஓரமெல்லாம் தான்வழுக்கை


04.
இரவில் வீசும்
இளம் காத்தும் சந்திரனும்
அரவாத வாள்போல
அறுக்குதே என் மனசை


05.
வாழையில கொலயிருக்க
வாழ்மயிலாள் சிறையிருக்க


06.
வேளாக் கடலில்
விளமீன் பிடிப்பான்
வீட்டில வந்தா
விளக்கெண்ணை எரிப்பாள்
சாய்வாள் சரிவாள்
சந்தணம் தருவாள்


மின்னல் ஒளியாக வந்துவிழும் அவர்தம் வாழ்வு சார்ந்த மொழி நம்மை அசர வைப்பவையே. கி.இராஜநாராயணன் எழுத்தோடு பரீட்சயம் கொண்டவர்கள் அல்லது சுந்தர ராமசாமியின் 'ஜே ஜே சில குறிப்புகள்'படித்தவர்கள் இந்த மின்னலின் உள்நுழைதலை உணர்ந்திருப்பார்கள். 'இலக்கியத்தைப் புரிந்துகொள்ள நாட்டின் இதயபாவம் தெரியவேணும் கிராமியப் பாடல்களே அதற்கு உதாரணங்கள்.' இது யார் கூற்றென நினைக்கிறீர்கள் நம்ம புதுமைப்பித்தனுடையதுதான்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)
         

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 18 Apr 2024 02:10
TamilNet
HASH(0x563f4d914d10)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 18 Apr 2024 02:11


புதினம்
Thu, 18 Apr 2024 02:11
















     இதுவரை:  24776140 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2696 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com