அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிர்வாண விழிகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: முல்லையூரான்  
Saturday, 22 April 2006

முல்லையூரான்

(முல்லையூரான் அவர்கள் நினைவாக அவரது நிர்வாண விழிகள் கவிதைத் தொகுப்பிற்கு எழுதியிருந்த முன்னுரை இங்கே பிரசுரமாககின்றது.)

ஈழத்தின் வன்னிப்பகுதியிலுள்ள ஒரு அழகிய கிராமத்தின் மண் என்னை ஏற்றுக்கொண்டது. அந்த கிராமத்தின் வைரம் நிறைந்த தாய்மையின் ஒவ்வொரு அணுவிலும் எனது வாழ்வு தொடங்கிற்று. மண்புழுதிகள், கோவிற்கரைகள், வயல் வெளிகள், அழகான நந்கிக் கடற்கரை வறுமையிலும் சுரண்டலிலும் சிக்கித் தவிக்கும் விவசாயிகள், சாதி ஒடுக்குமுறையால் கோணிப்போய் மானுட எலும்புகளே இன்னொரு மானிடத்தின் உணவாகும் கறள்பிடித்துப்போன தமிழ் இழிவுகளும்தான் என் சிந்தனையை கிளறிவிட்ட தீச்சுவாலைகள். மலையளவு மாராப்பு ஒன்றை முதுகிலிட்டு சிறிய பொட்டணி ஒன்றை கைகளில் சுமந்து துறைக்குச் செல்லும் சின்னக் கட்டாடியின் வளைந்த வில்லின் தோற்றம் எனது கவிதைகளுக்கு நிமிர்ந்த சொற்கள் பலதைத் தந்தன. இத்தகைய ஒடிந்துபோன மக்களே எனது பள்ளிக்கூடங்களாயினர்.
மழை ஓய்ந்து முற்றத்தில் ஒட்டியிருக்கும் கலங்கிய மழை வெள்ளத்தின் உள்ளேதான் நான் என்னை முதன் முதலில் கண்டேன். அங்கே பசுந்தென்னைகள் எல்லாம் தலைகீழாகத் தெரிந்தன. அதுவே நான் பார்த்த முதற்கவிதை. இவை எல்லாமே நான் எனது திண்ணையில் கிடந்து பார்த்தது. என்றும் எனது மனதிற்குள் மழை தூறும் அந்தக் காட்சியை என்னால் இலகுவில் மறந்துவிட முடியாது. கால ஓட்டத்தில் இன்று தனிமரமாய், தோப்பிழந்த குருவியாய், பிறிதொரு தேசமொன்றில் அகதியாயான பின்பும்
'நரகத் தமிழனே' என வீதிகளில் தூற்றப்படும்போதும் எனது கிராமமே ஓடிவந்து எனக்கு ஆறுதல் சொல்கின்றது. எனது வீட்டு திண்ணைக்கும் நிம்மதி வேண்டும். இந்த உலகம் சுதந்திரம் அடைகின்றபோது என நினைக்க முடிகின்றது. இவர்களின் நிற, இன, பிரதேச வர்க்க பேதங்களை நினைத்துப் பார்க்கும்போது.
ஒரு கலைஞன் என்ன செய்யலாம் இப்படியாகிவிட்ட பின்பு. தாயக நினைவுகளுடனும், அதன் விடிவுகளுக்காய் பாடுபடுவோருடனும் நான் நேசமாக இருக்க விரும்புகிறேன். எந்த கூடாரத்துள்ளும் முற்றுமுழுதாக அடைபட்டுப்போகாத ஒரு நல்ல சுதந்திரம் ஒரு கலைஞனுக்கு அவசியம் தேவையென உணருகிறேன். அதன்பால் விருப்பமும் கொண்டுள்ளேன். இத்தகைய விருப்பம் ஒன்றும் புதியதல்ல இன்று. ஆனால் திடீரென ஒருநாள் டென்மார்கின் ஓரு பகுதியிலுள்ள அகதி முகாமொன்றில் புதியவர்களின் மத்தியில் விடப்பட்டபோது அது மிக அவசியமாக இருந்தது.
நான் அந்த அகதி முகாமில் பட்டமரங்கள் இடையே சஞ்சலித்துக் கொண்டிருந்தபோது ஒரு இலக்கிய நண்பரிடமிருந்து குறிப்பெடுக்கும் புத்தகமும் ஒரு பேனாவும் கிடைத்தது. அன்று தொடக்கம் எழுதிவீசிய கவிதைகள்போக மீதமுள்ளவையே இங்கு நிர்வாணவிழிகள் என்னும் நூலாக தொகுக்கப்படுகின்றது. ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தின் பின்னால் ஓடுகிற காய்ந்த இலைகள் போல எதனைக் கண்டாலும் உடனே நாட்டு நினைவு தொற்றிக்கொண்டு விடுகின்றது. இதனையே பேசிப்பேசி சக ஈழத்தமிழ் அகதிகள் பலரின் கோபத்திற்குள்ளாகி இருக்கிறேன். புதியதொரு நாட்டு பிரஜாவுரிமைக்காக காததிருப்போருக்கு இந்த நூலில் எதுவும் இல்லாமலிருக்கலாம். மற்றும் நாட்டுநலம் விரும்பிகளுக்கும், கவிதை எனும் அழகை விரும்புவர்களுக்கும் இந்த நூலில் ஏதாவது அகப்படுமாயின் நானும் சந்தோசமடையலாம். இந்த நூல் வெளிவரவும் அதற்காக பின்புலத்தில் நின்று என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் நான் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும். ஈழத்தின் நூல் வெளியீட்டுத்துறையும் அதனையே நம்பியுள்ள ஈழத்து எழுத்தாளர்களது நிலையும் அறுபதுகளைப் போலன்றி எழுபதுகளின் பிற்பகுதியில் தென்னிந்திய நூல் வெளியீட்டு நிறுவனங்களின் வாசல்கள் பெரும் உதவிபுரிந்தன. ஆனால் இன்றைய இந்திய சாம்பிராச்சிய தன்மைகள் அவற்றிற்கும் மூடுவிழா வைத்தாகிவிட்டது. ஆக மீண்டும் நாம் அறுபதுகளை நினைவில் நிறுத்தி மீண்டும் அதே உற்சாகத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கடமையினை சக எழுத்தாளர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன். இதற்கு உறுதுணையாக நவீன கணிணிப் பொறியின் வருகை எமககு சாதகமாகவே உள்ளது. தொய்ந்து கிடக்கும் ஈழத்து நூல் வெளியீட்டுத் துறையினை சீர்செய்வது எமது எல்லாருடைய கடமையுமாகும். உலகம் முழுதும் சிதறிக்கிடக்கும் ஈழத்து எழுத்தாளருக்கான ஒரு கூட்டுறவினை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் ஈழத்துக்குமிடையிலான தொடர்புகள் மெல்ல மெல்ல அறுந்துகொண்டு வருவதையும் குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலம்பற்றிய சிந்தனை ஈர்ப்பொன்றிற்கான தேவை இன்று எம்முன்னுள்ளது. தொடர்ந்து வரும் காலங்களில் எமது வேலைகள் இவற்றை நிறைவு செய்யும்படியாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
நான் எனது வீட்டுத்திண்ணையில் மறுபடியும் படுத்திருந்து ஈழத்து மண் முற்றத்தில் ஒட்டிக்கிடக்கும் மழை வெள்ளத்தினுள் தெரியும் பசிய தென்னைகளின் உருவத்தை மீண்டும் பார்க்க வேண்டும் போலவும் வற்றாப்பளை கிராமமெங்கும் ஓடி.. ஓடி.. அதன்மடியில் காலாற வேண்டும் போலவும் இந்த உலகத்தில் சீவித்துக் கொண்டிருக்கிற இந்த ஏழைக்கவிதையின் தீராக்காதல். நான் பார்த்த அந்த முதல் கவிதையை நான் பார்ப்பேன்.
இந்த நூலுக்கு உரை தந்த எனது அன்புக்குரிய பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கட்கும் எனது நன்றி. எனது கவிதைத் தொகுதியின் முதற்பிரதியை பெற்று எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நண்பர் திரு.சி.கருணாகரன் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்
முல்லையூரான்
1992 மார்கழி 18

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


     இதுவரை:  24778981 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2943 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com