அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


'ஏஜே' பற்றி..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சுப்ரமணியம் சிவநாயகம்  
Thursday, 12 October 2006

மாறிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில் மாறாத ஒரு மனிதன்

வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மனிதனைப்பற்றி ஒருவரை எழுதச்சொல்லிக் கேட்பது அடிக்கடி நடக்கும் ஒரு விசயமல்ல. அப்படி ஒருவரை கேட்கிறதே எழுதப்படப்போபவரிடம் ஒரு விசேசம் இருக்கிறதென்பதையே காட்டுகிறது. எளிமையான, தன்முனைப்பற்ற, மென்மையாகப் பேசும், முட்டக் குடிக்கும், ஆனால், ரிஷி போன்ற, நீண்டகாலப் பிரம்மச்சரியான, நீண்ட தாடியுடைய ஒருவரின் மனப்படம் எனக்கு அவரைப்பற்றி இருக்கிறது. அது 18 வருடப் பழைய நினைவு. அப்படியான அந்த மனிதரில் என்ன விசேசம் இருக்கிறது?
(ஏ.ஜே.யின் தாடி யாழ்ப்பாணத்தில் பழக்கமானதொரு காட்சி. பின்லாடனுடைய நீண்ட தாடி உலகப் படத்தில் காணக் கிடைத்தற்கு முந்தியதொன்று அது)
தன் முதல் எழுத்துக்களால் பெயர்பெற்ற ஏ.ஜே.கனகரட்னா என்ற அம்மனிதர், ஜனவரி 1982 தொடக்கம் யூலை 1983 வரை யாழ்ப்பாணத்திலிருந்து வந்த Saturday Review  என்ற பத்திரிகையில், சாகசங்கள் நிறைந்த முதற்கட்டத்தில், என்னுடன் வேலை பார்த்தவர். என் பத்திரிகை வாழ்க்கை ''உருண்டோடும் கல்'' போன்றது. 30 வருடம் கொழும்பில் பத்திரிகை வாழ்க்கை, என் தகுதிக்கு (!) ஐந்து இராஜினாமா. சிலோன் டெயிலி நியுஸ், சிலோன் டெயிலி மிறர், ஜெ.வோல்ரர் தொம்சன்ஸ், இலங்கை ரூறிஸ்ற் ப்போட், கொழும்பு பிளான் பியுரொ என்ற ஐந்தின் பின் கடைசியில் யாழ்ப்பாணத்திற்கு சற்றடே றிவியுவின் ஸ்தாபன ஆசிரியராக, யாழ்ப்பாண நூலகம் எரித்த பிறகு ஒரு கோபக்கார மனிதராகக் போய்ச் சேர்ந்தேன். நாட்டில் கொந்தளிப்பான நிலைமை இருந்த காலமது. என் பத்திரிகை வாழ்விலும் கொந்தளிப்பான கால ஆரம்பம் அது. ஆசிரியக் கருத்துச் சொல்லுதலில் பத்திரிகை ஆபத்தாகவே வாழ்ந்தது. ஜயவர்த்தன அரசின் வரவேற்பற்ற கவனம் எங்களில் என்றுமே இருந்தது. இறுதியில், கொழும்பு அதிகாரம் எங்களில் கடைப்பிடித்த பொறுமையை இழந்து, பத்திரிகையைத் தடை செய்தது. ஆசிரிய அலுவலகத்தை மூடியது. என்னைக் கைதுசெய்ய அலைந்தது.

போர்க்குணத் தன்மையுடன் எம் பத்திரிகைத்துவம் இருந்தபோதும் தென்னிலங்கையில் நாங்கள் பலரை நண்பர்களாகப் பெற்றோம். ஏனெனில் சற்றடே றிவுயு மட்டுந்தான் ஒரு சர்வாதிகார ஆட்சிக் காலத்தில் ஒரேயொரு எதிர்ப்புக் குரலாக இருந்தது. நான் பத்திரிகையில் விவாதங்களை ஊக்குவித்தபோது, ஏ.ஜே. மென்மையான விசயங்களை உள் கொணர்ந்தார். அவர் பணித்துறையைச் சேர்ந்தவராக இருந்தபடியால், யாழ்ப்பாணக் காட்சிகளை கூட்டிக் குறைக்காமல், அவர்களுடைய அனுவங்களை ஆழமாக அனுபவித்து எழுதினார். 1982 க்கு முன்பு அவரைச் சந்திக்கும் நல்லதிஷ்டம் எனக்குக் கிட்டியிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் 1983 க்குப் பிறகு இந்த 18 வருடங்களிலும் அது கிட்டவில்லை. ஆகவே, அந்தக் குறுகிய காலத் தொடர்பு அவரைப் பற்றிய அறிவுடன் எழுத எனக்குத் தகுதியைத் தந்திருக்கிறதா? அது எனக்கு நிச்சயமில்லை. ஆனால் சளைக்காத, புலம்பெயர் எழுத்துக்களின் இலக்கிய ''மருத்துவிச்சி''யான பத்மநாப ஐயர் அப்படி நினைக்கிறார். அவர் நினைக்கிறது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஏ.ஜே.யின் நிரந்தர இருப்பிடமாக உள்ள யாழ்ப்பாணத்திலிருந்து நான் பிடுங்கப்பட்டு 18 வருடங்களாகப் போனபின்னும், இன்னும் அவர் எனது பிரக்ஞையில் இருந்து கொண்டுதான் இருக்கிறார். அது விசித்திரமானதாக இருந்தபோதிலும், சற்றடே றிவுயு தொடர்புகள் நின்று பல நீண்ட வருடங்கள் சென்ற பின், அந்த மனிதரைப்பற்றி நான் அதிகம் அறிந்து கொண்டேன். கூடுதலாக நினைத்துக் கொண்டேன். அதற்குத் திரும்பவும் பத்மநாப ஐயருக்குத் தான் நன்றியுடையனாக இருக்கிறேன். ஏனெனில் அவர் தான்  Third Eye  பிரதியொன்றை எனக்கு அனுப்பியவர். அவ்வெளியீடு செங்கலடியிலுள்ள, கிழக்குப் பல்கலலைக்கழகத்திலிருந்து வரும் ஆங்கில இதழ். அவ்விதழ் ஆங்கிலத்திலுள்ள சிருஷ்டி எழுத்துக்களுக்கும் கோட்பாட்டு விவாதங்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கிறது. அந்தக் குறிப்பிட்ட இதழில் ஏ.ஜே.யின் எழுத்துக்கள் பலவும் வெளியாகியும் இருந்தன. அந்த இதழை வாசித்தபோது அவரின் ஆங்கில இலக்கியத்துடனான தொடர்புபற்றி எனக்குப் புதியதொரு தரிசனம் கிடைத்தது. என் யாழ்ப்பாண பத்திரிகை நாட்களில் அது எனக்கு முற்றுமுழுதாகக் அறியக் கிடைக்காததொன்று. 
அவருடைய பேராதனை நாட்களின் பின் ஏரிக்கரைப் பத்திரிகைத் துறைக்கு தடம்மாறி வந்தார். ஏரிக்கரை பத்திரிகை வலதுசாரிப் பிற்போக்கின் கோட்டை. மாக்ஸிஸக் கருத்துக்கள் உள்ள றெஜி சிறிவர்த்தன, கைலாசபதி, ஏ.ஜே. போன்றவர்களுக்கு அப்பபத்திரிகைகளில் ஏன் கவர்ச்சி வந்தது என்பது என்னைக் குழப்பியதொரு விசயம். எதிரானவை ஒன்றை ஒன்று கவரும் என்பதாலா? அல்லது, பத்திரிகைத்துறைக்கும் இலக்கியத்துக்கும் ஒருவித தொடர்பு இருக்கிறது என்பதாலா? எனது கருத்து என்னவென்றால், சிருஷ்டி இலக்கியத்திலுள்ள ஆர்வங்களை பத்திரிகைத்துறை ஒரேயடியாகக் கொன்று போடும் என்பதே. ஒரு வங்கி எழுத்தர் கவித்துவ உணர்திறனை சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் ஒரு பத்திரிகையாளனால் ஒரு நாவலை எழுதுவது அத்தனை சுலபமல்ல. ஆனால் நினைத்துப் பார்க்கையில் ஒருவன் உழைத்துச் சாப்பிட வேண்டும் என்ற சாதாரண உண்மையும் இருக்கிறதே. எனக்கு இலக்கிய ஆர்வம் இருபதாவது வயதிற்குப்பின் செத்துப் போய் விட்டது. அதற்குக் காரணம் பத்திரிகைத்துறையில் எனக்கிருந்த பைத்தியமாக இருக்கலாம். அல்லது ஜேம்ஸ் ஜொய்சின் யுலிசஸ் நாவலை வாசிக்க முயற்சித்ததால் வந்ததாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். ஆனால், ஏ.ஜே. இலக்கியத்துக்குரியவர். ஏரிக்கரையும் பின்னர் சற்றடே றிவுயுவும் அச்சு எழுத்துடன் ஆன்மீக உறவு கொள்ள அவருக்கு ஒரு சாதாரண சந்தர்ப்பத்தை அளித்திருக்கலாம். வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரியாக இருக்கும் ஒரு மனிதரைப்;பற்றி அப்படி ஒப்புமைப்படுத்தக் கூடாது என்றாலும், சட்டரீதியாக பத்திரிகைத்துறையை அவர் விவாகம் செய்திருக்கிறார் என்றும், இலக்கியத்துறையை அவருக்குப் பிடித்த வைப்பாட்டியாக வைத்திருக்கிறார் என்றும், என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை! ஏரிக்கரையில் இருந்த காலத்தைப்பற்றிச் சொல்கையில், (அது சிலவேளை உண்மையில்லாமல் இருக்கலாம்) விவரணப்பகுதி எழுத்தாளராக இருந்து விவரணப்பகுதிக்கு அவரை ஆசிரியராகப் பதவி உயர்வு செய்தபோது அதை எதிர்த்து அந்த வேலையை உதறித்தள்ளினார் என்று மற்றவர்கள் சொல்வதை நான் கேள்விப் பட்டிருக்கிறேன். அந்தக் கதை கட்டுக்கதையாக இருந்தாலும், அதை நான் நம்பத் தயாராக இருக்கிறேன்.
பேராதனை ஆங்கிலத்துறை இலக்கியத் திறனாய்வை ஒரு வழிபாட்டுத்துறையாகவே வழிபட்டு வந்தது. பல்கலைக்கழகம், கவிஞர்களையும் நாவலாசிரியர்களையும் உற்பத்தியாக்கும் இடம் என்று ஒருவரும் எதிர்பார்ப்பதில்லைத் தான். ஏ.ஜே. நுண்மாண் நுழைபுல இலக்கியத் திறனாய்வாளன். அதில் தான் அவருடைய பலம் இருக்கிறது. பழைய பரம்பரையினராகிய எங்கள் பலரைப்போல, அவரும் ஆங்கில மொழியில்; பாதுகாப்பாக இருந்தார். ஆனால் ''சிங்களம் மட்டும்'' சட்டம் அவருக்கு உணர்ச்சிபூர்வமான சவாலாக வந்தது. தாய் மொழியில் அவர் புதிதாகக் காதல் கொண்டார். விரைவாக இரண்டு இலக்கியங்கள் இடையேயும் வியாக்கியானப்படுத்துபவராகவும் பாலம் கட்டுபவராகவும் அவர் மாறினார். சிருஷ்டி எழுத்து உண்மையில் வேறொரு விசயம். யாழ்ப்பாணம் புலமையாளர்களையும் பண்டிதர்களையும் உருவாக்கும். ஆனால் யாழ்ப்பாண மனிதன், தென்னிலங்கையில் உள்ள சிங்களச் சகோதரனைப் போலவல்லாது, வித்தியாசமான விழுமிய அமைப்பைக் கொண்டவன். அது அவனுக்கு சிருஷ்டித்துவத்தையும் கற்பனையையும் எளிதாகக் கொடுக்க விடாது. முக்கியமாக ஆங்கிலத்தில். அதற்கும் இரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன. கவிஞரும், வெளியீட்டாளருமாகிய தம்பிமுத்து ஒருவர். கொஞ்சம் குறைவாக மற்றவர், சிறுகதை ஆசிரியர் அழகு சுப்பிரமணியம். அவர்கள் இருவரும் பிரித்தானிய மண்ணிற்குச் சென்று தாங்கள் அடைய வேண்டியதை அடைந்தார்கள்.
(அழகு யாழ்ப்பாணத்திற்குத் திரும்பி வந்தது பிழையானதொரு விசயம். அவரை எனக்கு நன்றாகத் தெரியும்.. சிலோன் டெயிலி மிறரில் அவரைப் பற்றியும் அவர் எழுத்துக்களைப் பற்றியும் ஒரு பத்தி எழுதினேன். கொஞ்சக் காலத்துக்குப் பின் அவர் வாழும் தகுதி உணர்வுகளைத் தொலைத்து விட்டு, இறுதியில் சுய இரக்கத்தில் உழன்று, அவல உருவமாகி விட்டார்.)
1983 இல் யாழ்ப்பாணத்தை விட்டு நான் ஓடத் தள்ளப் பட்டேன். அந்த யாழ்ப்பாணம், இந்தப் பதினெட்டு ஆண்டுகளும் பிரளய மாற்றங்கள் பலவற்றைக் கண்டது. ஒரு காலத்தில் உறுதியான ஓர் இடமாக இருந்த அது, இன்று நிரந்தமற்ற, துயரத் தன்மையை தன் முகத்தில் அப்பி வைத்திருக்கின்றது. என் மனக்கண்ணில் ஒரு தன்னந் தனிய, தாடியுள்ள உருவம் ஒன்று, அங்கு எதுவுமே நடக்காத மாதிரிப் போகிறதென்றால் அது, ஏ.ஜே.கனகரட்னா தான்!


லண்டன், டிசெம்பர் 4 2001

நன்றி:காலம்


     இதுவரை:  24714020 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4261 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com