அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அறிவை மக்கள்மயப்படுத்தல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சுரேஷ் கனகராஜா  
Thursday, 19 October 2006

பலராலும் நன்கு புரிந்துகொள்ளப்படாத இலக்கிய  மரபொன்று எம் சமுதாயத்தில் இருந்து வருகிறது.  இத்தகைய எழுத்துக்களை 'அறிவுப் பரம்பல்' (knowledge  dissemination) இலக்கியம் என்று அழைக்கலாம். பல ஆய்வுத் துறைகளில் ஆங்கிலத்தில் அல்லது பிறமொழிகளில்  வெளிவரும் நூல்கள், கட்டுரைகள் பற்றிய தகவல்களையும், அவற்றில் இடம்பெறும் வாதங்களையும், பொது  வாசகர்களுக்காகத் தமிழில் தரும் எழுத்துக்கள் இம்மரபில்  அடங்கும். சினிமாப் படங்கள், நாடகங்கள், நாவல்கள்,  சிறுகதைகள், கவிதைகள், கண்காட்சிகள் போன்ற  துறைகளில் வேறு மொழிகளில் இடம்பெறும் வெளியீடுகள்  பற்றிய கட்டுரைகளும் இதில் அடங்கும். இந்த மரபு  மொழிபெயர்ப்பிலிருந்து வேறுபட்டது. மொழிபெயர்ப்பாளன்  மூலநூலை இயன்றளவு ஒட்டியே மொழிபெயர்க்க  வேண்டும். ஆனால் 'அறிவு பரப்பும்' கட்டுரைகளில்  எழுத்தாளன் மூலத்தை வாசித்து நன்கு கிரகித்து விட்டு,  ஓரளவு தனித்துவத்தோடும், விமர்சனக்  கண்ணோட்டத்தோடும், அந்த அறிவை தன் சொந்த  வார்த்தைகளில் எமக்குத் தருகிறார். அதேநேரம் இத்தகைய  எழுத்துக்கள் 'அறிவு உருவாக்க' (knowledge construction)  எழுத்துக்களிலிருந்து வேறுபட்டவை. அறிவுருவாக்கலில்  எழுத்தாளர் தம் சொந்தச் சிந்தனைகளையும் ஆய்வுக்  கண்டுபிடிப்புக்களையும் புதிதாக வெளியிடுகின்றார். ஆக்க  இலக்கியப் படைப்புக்களும், எழுத்தாளனின் சொந்த  சிந்தனைகளையும் கண்ணோட்டத்தையும் தருவதால்  இவையும் சில சமுதாயங்களில் 'அறிவுருவாக்க' எழுத்து  மரபில் அடக்கப்படுகின்றன. ஆனால், 'அறிவுப் பரம்பல்'  எழுத்துக்களில் பிறருடைய படைப்புக்களைப் பற்றியே  எழுத்தாளர்கள் பேசுகின்றனர்.

அறிவுப் பரம்பல் எழுத்துக்கள் வேறு சமுதாயங்களிலிருந்து  வந்தாலும் எம் சமுதாயத்தில் இவற்றின் இடம் சற்று  வித்தியாசமானது. உதாரணமாக, மேற்கத்தைய  சமுதாயத்தின் புத்திஜீவிகள் 'அறிவுருவாக்க'  கட்டுரைகளையே பெருமளவு எழுதுகின்றனர். இத்தகைய  எழுத்துக்களே அவர்களுக்கு மதிப்பைத் தேடிக்  கொடுக்கின்றன. ஓர் ஆய்வாளனின் கணிப்பின்படி, ஒரு  மேற்கத்தைய புத்திஜீவியின் எழுத்துக்களில் ஐந்து  சதவீதமானவை மட்டுமே பொதுமக்களுக்கு தன் சொந்த  ஆய்வை அல்லது தன் துறையின் புதிய சிந்தனைகளைச்  சஞ்சிகைகளில் அல்லது பத்திரிகைகளில் வெளியிடும்  முயற்சிகளாக அமைகின்றன. பொதுவாக, இத்தகைய  பணியை மேற்கில் பத்திரிகையாளரிடம் விட்டு  விடுகின்றனர். மாறாக, தமிழ்ப் புத்திஜீவிகள் பிரசுரிக்கும்  எழுத்துக்களில் கணிசமான அளவு அறிவுப் பரம்பல்  முயற்சிகளே என்பதை நாம் நன்கு அறிவோம்.  (சிலவேளைகளில், எம் சொந்த சிந்தனைகள் என்ற  போர்வையில் நாம் பிரசுரிக்கும் சில கட்டுரைகள் கூட, நாம்  அறியாமலே வேறு நூல்களிலிருந்து நாம்  பொறுக்கியவையாகி விடுவதுண்டு. மூல நூல்களை  அடையாளங் காட்டும் மரபு எம் சமூகத்தில் ஆழமாக  வேரூன்றாததால், எல்லாவற்றையும் எம் சொந்த  முயற்சிகளாக வாசகர்களுக்கு முன்வைக்கக்கூடியதாக  இருக்கின்றது) தமிழ்ப் புத்திஜீவிகளும் கல்விமான்களும்  அறிவுப் பரம்பல் எழுத்துக்களை பெரியளவில்  பிரசுரிப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன. 1. ஆங்கில  மொழிப் பாண்டித்தியம் படிப்படியாக எம்மவர்கள் மத்தியில்  அருகிப்போக, வெளிநாடுகளில் இடம்பெறும் புதிய ஆய்வு  நடவடிக்கைகளையும் கண்டுபிடிப்புக்களையும் தமிழ்  வாசகர்களுக்கு அளிப்பது இன்றியமையாத அறிவுசார்ந்த  பணியாக இருக்கிறது. 2. இப்பணியைச் செய்யக்கூடிய  ஆங்கில அறிவு சில புத்திஜீவிகளிடம் மட்டுமே இருக்கிறது. 3. சிறப்பான துறைகளில் இடம்பெறும் புதிய அறிவைப்  புரிந்துகொள்ளக்கூடிய பாண்டித்தியம் சிலரிடம் மட்டுமே  இருக்கின்றது. 4. பல்துறைசார்ந்த முறையில் (interdisciplinary ) அதிகமாக இடம்பெறும் முன்னணி முயற்சிகள், பழைய  பாணியில் தம் துறைசார்ந்த ஆய்வில் மட்டும்  நின்றுகொள்ளும் அறிவாளிகளால்கூட புரிந்துகொள்ள  முடியாது போகிறது. உண்மையில், ஆங்கில அறிவுள்ள ஒரு புத்திஜீவி என்ற தகைமைகூட இப்பணியைச் செய்வதற்குப்  போதாது. குறைந்தபட்சம் இருமொழிகளிலும் (சொந்த  மொழியிலும், வேற்று மொழியிலும்) சரளமுள்ளவராக  இருப்பதோடு, பல்துறைக் கண்ணோட்டமுள்ள புத்திஜீவிகளே இப்பணியைச் செய்யவும் முடியும்.

'மத்து', 'செங்காவலர் தலைவர் யேசுநாதர்' என்ற இரு  நூல்களிலும் இடம்பெறும் கட்டுரைகளை வாசித்தபோது  ஏ.ஜே.கனகரட்னா எப்படியான திறமையுடன் அறிவுபரம்பல்  இலக்கியப் பணியை ஆற்றியிருக்கிறார் என்று நான்  வியந்தேன். இன்று பல நாடுகளிலும் வாழும் முன்னணி  ஆய்வாளர்கள், ஆங்கிலத்திலேயே தம் கண்டுபிடிப்புக்களை  பிரசுரிக்க, சுயமொழி பாண்டித்தியம் மட்டும் உள்ள  அறிவாளிகள் (எந்த நாட்டிலிருந்தாலும் சரி) தம் அறிவுசார்  முயற்சிகளை திறம்படச் செய்ய முடியாது. இந்த வகையில் பார்க்கும்போது, ஏ.ஜே. இந்நூல்களில் ஆற்றும் பணி தமிழ்ப்  புத்திஜீவிகளுக்குக்கூட இன்றியமையாதது. மேலும்,  புலமைசார் வட்டங்களுக்கு வெளியே சாதாரண மக்கள்கூட  ஆங்கிலத்தில் வெளிவரும் சர்வதேச அறிவுக்  களஞ்சியத்தை ஏ.ஜே.யின் பணியால் புதினப்  பத்திரிகைகளில் அல்லது சஞ்சிகைகளில் வாசித்துப்  பயன்படக் கூடியதாக இருக்கிறது என்பதைச்  சிந்திக்கும்போது இவ்வெழுத்து மரபைக் குறித்து ஒரு புதிய  மதிப்பு என் மனதில் பிறந்தது. ஏ.ஜே. ஆக்க இலக்கியத்தில்  அல்லது சொந்த ஆய்வு முயற்சிகளில் கைவைக்காமல் தன் திறமைகளை வீண் போக்குகிறாரே என்று  கவலைப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஏ.ஜே.  செய்யாதவற்றைப் பற்றிக் குறைகூறாமல், அவர் சாதித்த  காரியத்தை மெச்சுவது இனியாவது அவசியம். அவருடைய  அறிவுப்பரம்பல் எழுத்துக்களை நாம் கணக்கெடுக்காமல்  இருப்பதற்குக் காரணம், மேற்குலகில் இடம்பெறுவது  போன்று நாம் அறிவுருவாக்க எழுத்து மரபுக்கே  முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைத்தான்  காட்டுகிறது. ஆனால் ஆங்கிலமொழிப் பாண்டித்தியமும்  சர்வதேச இலக்கிய அறிவுசார் கண்ணோட்டமும்  அருகிப்போய்க்கொண்டிருக்கும் எம் சமுதாயத்திலாவது  அறிவுப்பரம்பல் பணியை நாம் வித்தியாசமான முறையில்  மதிப்பீடு செய்ய வேண்டும்.

இந்த அறிவுப்பரம்பல் இலக்கிய மரபு மேலும்  வளரவேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.  ஏ.ஜே.யைப் போன்று பன்மொழிப் பாண்டித்தியமும்  பல்துறை ஆர்வமும் உள்ளவர்கள் எம் சமுதாயத்தில்  இன்னும் தேவை. எனினும், இப்பணியைத் திறம்படச்  சாதிக்க இவ்வடிப்படைத் தகைமைகளோடு  நின்றுவிடமுடியாது. ஏ.ஜே. கையாண்ட சில சிறப்பான  யுக்திகளை, அவர் கட்டுரைகளில் அடையாளங்காண்பது  இப்பணியை வளர்க்க உதவியாக இருக்கும் என்று  நம்புகிறேன். அந்த எதிபார்ப்போடு பின்வரும்  அவதானிப்புகளை முன்வைக்கிறேன்.

ஒரு புதிய சிந்தனையை அல்லது நூலைத் தக்க பின்னணி  அறிவில்லாது விளங்கிக்கொள்ள முடியாது. ஆங்கிலம்  நன்றாகத் தெரிந்திருந்தாலுங்கூட சில ஆய்வாளரின்  கட்டுரைகளை வாசிக்கும்போது அவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம் எமக்குத் தேவையான  அடிப்படை அறிவு எம்மிடம் இல்லாததே ஆகும். ஆனால்,  ஏ.ஜே. ஒரு சிந்தனையை அல்லது நூலை விபரிக்கும்போது,  தன் பரந்த வாசிப்பின் பயனாக, அச்சிந்தனையின்  சரித்திரப்  பின்னணி, அதைச் சார்ந்த எடுகோள்கள்,  ஆய்வாளனைப்பற்றிய சொந்த விபரங்கள் போன்றவற்றைத்  தருவதால் நாம் பொருளைச் சற்று இலகுவாக விளங்கக்  கூடியதாக இருக்கிறது. உதாரணமாக, 'செங்காவலர் தலைவர் யேசுநாதர்' நூலில், புளொக்கின் 'பன்னிருவர்' கவிதையை  விமர்சிப்பதற்கு முன், புளொக்கின் வாழ்க்கை, அவருடைய  பெற்றோரின் சிந்தனைப் போக்கு, அவருடைய சமூக  அந்தஸ்து, அவரைப்பற்றிய சமகால முக்கியஸ்தர்களான  லூனசாஸ்கி, லெனின் போன்றோர் கொண்டிருந்த மதிப்பீடு  என்பன தரப்படுவதால், இக்கவிதையின் அர்த்தத்தை நாம்  ஆழமாக விளங்கிக்கொள்ள முடிகிறது. அப்படியே,  'பானையும் சட்டியும்' கட்டுரையில் லெயிங்கின்  புரட்சிகரமான சிந்தனைகளை அறிமுகப்படுத்துமுன்  அவருடைய கல்வி, தொழில் வரலாறு, தென்னிலங்கை  விகாரையில் தியான நடவடிக்கைகளில் ஈடுபட்டமை,  சஞ்சிகைகளுக்கு அவர் கொடுத்த பேட்டி, ஏனைய  பிரசுரங்களின் விபரம் என்பன தரப்படுவதால் அவருடைய  சிந்தனையை நாம் தக்க முறையில் விளங்க முடிகிறது.

மேலும், ஏ.ஜே. தமிழ்மொழியில் சரளமாக  எழுதக்கூடியதுமட்டுமல்லாமல், தமிழ் இலக்கியத்திலும்  பண்பாட்டிலும் கொண்டிருந்த நாட்டம், அந்நிய  சிந்தனைகளை எம் உலகப் பார்வைக்கு எட்டக்கூடிய  முறையில் எழுதக் கூடிய சாத்தியத்தையும் அவருக்குக்  கொடுக்கிறது. புளொக்கின் கவிதையைப்பற்றிப் பேச  முன்னர், அவருக்கு ஒப்பாகப் பாரதியார் ரஷியப் புரட்சி  பற்றிப் பயன்படுத்திய ஆன்மீகரீதியான உவமானத்துடன்  ஏ.ஜே. தொடங்குகிறார். லெயிங்கின் உளவியலை  அறிமுகப்படுத்தமுன் கட்டுரை எழுதப்படும் நாட்களில்  திரையிடப்பட்ட 'குடும்ப வாழ்க்கை' என்ற படத்தின்  கதையைச் சுருக்கமாகக் கூறி, அதிலுள்ள கருத்துக்களை  லெயிங்கின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு அலசுகிறார்.  கடினமான சிந்தனைகளை எம் பண்பாட்டோடு  தொடர்புபடுத்தி எழுதுவது எம் கிரகிப்பிற்கு உதவியாக  அமைகிறது.

இதைவிட, அதிகமான எல்லாக் கட்டுரைகளிலும் தான்  எழுதத் தெரிவுசெய்த விடயத்தை எம் சமுதாயத்தில்  இடம்பெறும் முக்கிய விவாதங்களின் அல்லது  கரிசனைகளின் கண்ணோட்டத்திலேயே ஏ.ஜே. பேசுகிறார்.  வெளிநாட்டில் இடம்பெறும் சமகால ஆய்வுகளை அல்லது  சிந்தனைகளைப் பயன்படுத்தி எம் சமுதாயத்தின்  பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதே இந்த அணுகுமுறையின் குறிக்கோள். எனவே, அமெரிக்க  இலக்கியத்தை பிரித்தானிய இலக்கியத்திலிருந்து வேறாகப்  பிரித்து ஒரு தனி மரபை வளர்க்க எடுத்த முயற்சிகளைப்  பற்றிய ராவின் நூலை விபரிக்க முன்னதாக எம்  எழுத்தாளரின் மத்தியில் தென்னிந்திய இலக்கியத்திலிருந்து  பிரிந்த மரபு வளர முடியுமா என்ற உள்ளுர் விவாதத்தை ஞாபகப்படுத்துகின்றார். மேலும், ஆங்கிலமொழி 16ஆம்  நூற்றாண்டளவில் கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து  பிரிந்த ஒரு தனித்துவமான மொழியாக வளருவதற்கு  எடுக்கப்பட்ட முயற்சிகளைப்பற்றிய ஜோன்சின் நூலை  விபரிக்க முன்னர் எம்மவர்கள் மத்தியில் தமிழைப்  போதனாமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் வளர்க்கலாமா என இடம்பெற்ற விவாதங்களை ஞாபகமூட்டுகிறார்.  இத்தகைய ஓர் ஆரம்ப பந்தியின் பின்னர் ஏ.ஜே.  சொல்லாமலேயே நாம் மிகுதிக் கட்டுரையை எம் சொந்தப்  பிரச்சினைகளின் கண்ணோட்டத்திலே  வாசித்துக்கொள்கிறோம். எனினும், இந்நூல்களின்  கோணத்திலிருந்து எம் விவாதங்களில் தான்  வகுத்துக்கொள்ளும் நிலைப்பாட்டையும் எமக்குப் பயனுள்ள படிப்பினைகளையும் கட்டுரை இறுதியில் ஏ.ஜே. தெரிவிக்கத் தவறுவதில்லை.

மேலும் எந்தக் கொள்கையையோ நூலையோ  படைப்பையோபற்றி எழுதினாலும், ஏ.ஜே. அதை ஓர் அகன்ற கோணத்தில் வைத்துப் பார்த்து, அதன்  முக்கியத்துவத்தையும் தாற்பரியத்தையும் கவனமாக  ஆராய்வார். புளொக்கின் 'பன்னிருவர்' கவிதையில் யேசுநாதர் செங்காவலர் தலைவராக இடம்பெறுவதைக் குறித்து  ரஷ்யாவில் ஆன்மீகவாதிகளும் இடதுசாரிகளும் எழுப்பிய  விமர்சனத்தை ஏ.ஜே. வாசகர்களுக்குத் தருகிறார். இதன்  அடிப்படையில் புளொக்கின் தரிசனத்தை நியாயப்படுத்த  மூன்றாவது ஓர் கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்.  அடுத்தது, 'இலக்கியத் திருட்டு' என்ற கொள்கையைப்பற்றி  எழுதும்போது, அது ஏன் நிலமானியச் சமுதாயத்திற்கு  முன்னர் மேற்கில் இடம் பெறவில்லை, இன்றும் ஏன்  கீழைத்தேச நாடுகளில் முக்கிய இடம்பெறுவதில்லை என்ற  கேள்விகளை எழுப்பி ஒரு பரந்த பார்வையை எம்மில்  வளர்க்கிறார். இறுதியில், டான் ஜேக்கப்ஸனின்  சிறுகதையைச் சொல்லி, இலக்கியத் திருட்டைப்பற்றிப் புதிய கேள்விகளை எழுப்புகிறார். இப்படியாக, ஒரு படைப்பையோ  கருத்தையோ பல கோணங்களிலிருந்து பார்க்கக்கூடியதாக  இருப்பது தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த பெரும்  பாக்கியமே. ஏ.ஜே.யின் பரந்த அறிவின் பயனாகவே எமக்கு  இந்த ஆசீர்வாதம் கிட்டுகிறது.

கடைசியாக, எல்லாக் கட்டுரைகளிலும் ஏ.ஜே.யின் சமூகம்  சார்ந்த வர்க்க ரீதியான ஒரு விமர்சனக் கண்ணோட்டம்  தெளிவாக இடம்பெறுகிறது. அவர் எழுத எடுத்துக்கொண்ட  விடயத்தை சமூக, அரசியற் போக்குகளின் பின்னணியில்  ஆழமாக விமர்சிக்கிறார். உதாரணமாக, 'பானையும் சட்டியும்' கட்டுரையில் ரஷியாவில் மாறுபட்ட கருத்துள்ளவர்களை  பைத்தியக்காரர் என்று கூறி தண்டிப்பதற்காக உளவியல்  பயன்படுத்தப்படுகிறது என்ற அமெரிக்காவின்  குற்றச்சாட்டை விமர்சிக்கிறார். பல உதாரணங்களுக்கூடாக  ஜனநாயகரீதியான மேற்குலகிலும் அதன் விழுமியங்களுக்கு எதிரானவர்கள் பைத்தியக்காரர்கள் என கணிக்கப்படும்  உண்மையை அம்பலப்படுத்துகிறார். 'தொட்டப்பன்' என்ற  படத்தை விபரிக்கும்போது, இந்த மாஃபியாக் குழுவினரின்  ஈவிரக்கமற்ற கொலைகளைப்பற்றி ஒரு கண்டனமும்  இடம்பெறாததுபற்றி கேள்வி எழுப்புகிறார். இறுதியில், இந்தப் படம் ஹொலிவுட்டுக்கே ஏற்ற பாணியில்  பணமுள்ளவர்களின் பலத்தை மிகைப்படுத்தி, வன்முறையை மலிவுபடுத்தும் ஓர் ஜனரஞ்சகப் படைப்பாகவே அமைகிறது  என நாம் முடிவு செய்கிறோம். அப்படியே, 'இலக்கியத்  திருட்டு' தனியுடைமைவாதத்தால் உந்தப்பட்ட ஒரு  நடைமுறை என்று ஏ.ஜே. வைக்கும் வர்க்கரீதியான  கண்ணோட்டம் ஆழமான கேள்விகளை எழுப்புகின்றது.

இந்த வகையில், எந்தவொரு வெளிநாட்டு ஆங்கிலப்  படைப்பையும் தன் தனித்துவமான பார்வையும்,  விமர்சனமும், பரந்த கண்ணோட்டமும், எம் சமூகப்  பிரச்சினைகளுக்குரிய தொடர்பும் இல்லாமல் எமக்கு அவர்  தருவதில்லை. எமக்கு அறிமுகப்படுத்தும் படைப்பில்  எவற்றைப் பேச தெரிவு செய்கிறார், எந்தக்  கோணத்திலிருந்து பார்க்கிறார், எத்தகைய கண்ணோட்டத்தை எம்மில் வளர்க்கிறார் என்று நாம் சிந்திக்கும்போது,  ஏ.ஜே.யின் எழுத்துக்களில் ஒவ்வொரு வசனத்திலும்  அவருடைய சொந்த முத்திரை இருக்கிறது என்பதை நாம்  உணரலாம். இத்தகைய கட்டுரைகள் எம் சிந்தனையையும்  அறிவையும் வளர்ப்பதோடு, எம் சொந்த இலக்கிய,  பண்பாட்டு வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளை எமக்கே  உரிய பாணியில் தீர்க்கவும் வழிவகுக்கின்றன. எனவே,  ஏ.ஜே. இவ்வெழுத்து வடிவத்தைக் கையாண்ட விதத்தில்  இரு பெரிய உண்மைகள் இருக்கின்றன. 1. மேற்கத்தைய  படைப்புக்கள், அந்நிய கருத்துக்களை எம்மேல் திணிக்கும்  கலாசார காலனித்துவத்தை ஏ.ஜே. முறியடிக்கிறார்.  அப்படைப்புக்களை எமக்கேயுரிய பாணியில், விமர்சனக்  கண்ணோட்டத்தோடு, எம்முடைய தேவைகளுக்கு  ஏற்றமுறையில் கிரகிக்கச்செய்வதால் இது கைகூடுகிறது.  மேற்கத்தைய அறிவாலும் கலைகளாலும் பண்பாடுகள்  அடிமைப் படுத்தப்படுகின்றன என்ற பயம் நிலவும் இந்த  நாட்களில் ஏ.ஜே. கையாண்ட யுக்தி முற்போக்கானது. 2.  'அறிவுருவாக்க' எழுத்துக்கும் 'அறிவுப்பரப்பல்'  இலக்கியத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு ஏ.ஜே.யின்  எழுத்துக்களில் சுருங்குகின்றது. ஏ.ஜே. வெளிநாட்டு  அறிவுருவாக்கப் படைப்புகளை எமக்கு  அறிமுகப்படுத்தினாலும், அவற்றைத் தன் சொந்த  அறிவாலும் விமர்சனக் கண்ணோட்டத்தாலும் இடையீடு  செய்து, எம் சமூகத்தைக் குறித்த புதிய ஆய்வையும்  கேள்விகளையும் அறிவையும் தன் கட்டுரைகளில்  வளர்க்கிறார். அதாவது, ஏ.ஜே.யின் அறிவுப்பரம்பல்  கட்டுரைகள் புதிய அறிவை உருவாக்குகின்றன. இதனால்  தான் அடுத்த வருடம் வெளிவரும் Geopolitics of Academic  Writing and Knowledge Production (University of Pittsburg  Press)  என்ற என் நூலை ஏ.ஜே.க்கு சமர்ப்பித்திருக்கிறேன்.  அறிவாக்கத்தில் மேற்குலகிற்கும் மூன்றாம் உலக  நாடுகளுக்குமிடையே நிலவும் ஏற்றத் தாழ்வை இந்நூலில்  ஆய்வுசெய்யும்போது, ஏ.ஜே. இப்பிரச்சினையை எதிர்கொள்ள எடுத்த முயற்சிகளை என்னால் வியக்காமல் இருக்க  முடியவில்லை.

        


     இதுவரை:  24785306 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2492 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com