அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கனவின் பொருளுரையீர்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வேம்படிச் சித்தன்.  
Thursday, 25 January 2007

களிகொண்ட மனமொன்றுகூடும் அதிகாலையொன்றில்
காட்டினிடையேகித் தனியனாய் நடைபயின்றேன்.
மனிதருடன் உரையாடல் சலித்து
மரங்களுடன் உரையாடும் அவாவெழுந்து
ஊர்தாண்டி உவகையுடன் தொலைந்தேன்.

பசுமைக்கும் பழுப்புக்கும் இடைப்பட்ட பருவமது.
பார்வைக்கு இதமளித்ததெனினும் காட்டினிலும்
பதுங்கிக்கிடந்ததோர் ஊமைச் சோகம்.
எதிர்காலமெண்ணித் துயருற்றாற் போலான
ஏக்கமெங்கும் மரங்களிலும் கிளைகளிலும்
பற்றிப் படந்ததுபோல் ஒரு தோற்றம்.

ஆரூடக்காரனே, எம்மொழியைப் புரிந்தாய்நன்று.
எம்முடனே நட்பிழைந்தாய் நன்று.
வானமொளியிழக்கும் பருவமிது
நம் வாழ்வும் என்னாகுமென்றெண்ணித்
துயிலிழக்கும் காலமிது.
தன்னந்தனியர்களாய் நின்றிருந்தோம்நாமிங்கு
வந்தாய் நீ நன்றி என உரைத்தன மரங்கள்.
 
நாகரீக மனிதம் நாட்டினிடை புரியும்
கோரங்கள் தாங்காது மனங்கோணிச் சலிப்புற்றுக்
காட்டினிடை வந்தேன் ஆரூடம் நானறியேன்
அனுபவித்தறிந்ததன்றி வேறெதிலும் நாட்டமிலேன்
கேட்டதற்குப் பதில் சொல்வேன்
என்னருமை நண்பர்களேயென நானுரைத்தேன்.

குருவிச்சை படர்ந்து கூனிநின்ற மரமொன்று
நீண்ட கிளைக்கரம் தாழ்த்தி
ஒரு இலையை நீட்டித் தன் எதிர்காலம்
பற்றியோர் ஆரூடம் சொல்க என அழைத்தது.

கரத்தால் இலைபற்றி
கருத்தால் அதில் படர்ந்த ரேகைகளைப் பற்றி
ஆரூடம் சொன்னேன்.

காற்று வரும் மழைவரும் சிலநாளில்
தோற்றுவிடும் மரமே உன் கனவு.
மாற்று வழியேதுமின்றி
நீ  இலையுதிர்ந்து போய்விடுவாய்.
ஏற்றுத் தன்விதியைப் போற்றியிருத்தலன்றி
வழிவேறு உனக்கிலை.
இதுவேயுன் இலை சொல்லும்
செய்தியெனப் பகன்றகன்றேன்.

இன்னொரு கிளையின் இன்னொரு இலையில்
இன்னமும் உலராதிருந்தவொரு
முன்னையநாள் மழைத்துளி தன்னைப் பாராமல்
போவதேனெனக் குறைகூறிக்கொண்டது.

புலருமோர் பொழுதில்
உலர்வதற்கே நீயுதித்தாய் நீர்த்துளியே
போற்று நின்விதியைத் தோற்றுவிடாதிருக்க
மாற்று வழியுனக்குமிலையெனுங்
கூற்றுணர்வாய் எனக்கூறியகன்றேன்.

சிலபோழ்து போகக் காற்றும் வீசியது
கதிரவனும் வந்துதித்தான்.

காலமெனும் காற்றினிடை அகப்பட்டுக்
கழன்றுலர்ந்து வீழமுன்னர் வாழ்தலினைப்
போற்றிடுமின் போற்றிடுமின் மானிடரே
அஃதன்றித் தோற்றிடலே நேர்ந்துவிடும்
என எண்ணியென் வழிதொடர்ந்தேன்.

இலையுதிரும், பிஞ்சுதிரும், காயுதிரும்
இறுதியில் வேர்பாறி மரம்சாயும் எனவோர்
இரவுப் பாடகன் இன்னோர் கனவில்
பாடியது இக்கனவினுள் வீழ்ந்ததும்
நானெழுந்தேன் வியர்த்துடலம் நடுங்கிது.

கனவுகளை விரித்துப் பொருளுரைப்போர்
யாரேனும் கண்டெனக்குச் சொல்வீரோ
யான்  கண்டதன் கருப்பொருளை ?

 


     இதுவரை:  24772586 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1997 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com