அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 25 September 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 30 arrow ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியம் பெறும் ஒரு கவிதைத் தொகுப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியம் பெறும் ஒரு கவிதைத் தொகுப்பு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி  
Monday, 12 February 2007

ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு "மைல்கல்லாக" அமையும் மறுமலர்ச்சிச் சஞ்சிகையில் (1946 - 1948) வெளிவந்த கவிதைகளை செல்லத்துரை சுதர்சன் இங்கு தொகுத்துத் தந்துள்ளார். சாரதாவின் சிறுகாவியத்தைத் தவிர்ந்த மறுமலர்ச்சிக் கவிதைப் படைப்புகள் யாவும் இடம்பெற்றுள்ளன.

ஆறுமுகநாவலர் மறைவு முதல் 1950/60 களிலே தோன்றும் முற்போக்கு எழுத்தாளர் இலக்கிய இயக்கம் வரையுள்ள காலப்பகுதியின் இலக்கிய வரலாற்றுப் பின்புலம் இன்னும் சரியாகத் தெளிவுபடுத்தப்படவில்லை. 1880 முதல் 1950 வரை உள்ள காலப்பகுதியினை இலக்கிய வரலாற்று நிலைநின்று வகுக்க முனையும் பொழுது, மறுமலர்ச்சி சஞ்சிகையின் தோற்றமும் அதன் மூன்று வருடகாலச் செயற்பாடும் பின்நோக்கிப் பார்க்கப்படும் பொழுது ஒரு காலப் பிரிகோடாக அமையும் தன்மையினைக் காணலாம்.

நாவலரின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்த சேர் பொன். இராமநாதன் காலப்பகுதி 20 ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களிலும் முக்கியம் பெறுகிறது எனலாம். ஆனால், 1924 இல் யாழ்ப்பாணத்தில் தொடங்கிய மாணவர் காங்கிரஸ் இலங்கையிலேயே முதற்றடவையாக தேசிய மொழிக் கல்வி, பூரண சுதந்திரம் போன்ற விடயங்களை எடுத்துப் பேசுகிறது. அடிப்படையில் சேர் பொன். இராமநாதனின் சேவைத் துவக்கத்தை முதன்மையாகக் கொண்டிருந்த ஈழகேசரியான (1930) படிப்படியாக இந்தப் புதிய எழுச்சியின் சின்னமாக அமைகிறது. எனினும், அது முற்றிலும், நவீன தமிழ் இலக்கிய ஆக்கம், விமர்சனம் ஆகியனவற்றை வேண்டிய அளவு முதன்மைப்படுத்தவில்லை என்பர். மேலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் மூன்று தசாப்தங்களிலும் நவீன இலக்கியத்துக்கான சில முன் முயற்சிகள் அமைவதைக் காணலாம்.

இந்த வகையில் பாவலர் துரையப்பாப்பிள்ளை (1872 - 1921) மிக முக்கியமானவர். இவர் யாழ்ப்பாண நிலைப்பட்ட ஒரு கவித்துவப் பாரம்பரியம் வளர்க்கப்படுவதில் முக்கிய ஆர்வம் காட்டினார். நாவலர் தொடங்கிய செல்நெறியில் மேற்சென்று ஒரு புதிய பரிமாணத்தினைப் பாவலர் துரையப்பாப்பிள்ளை ஏற்படுத்தினார்.

ஒருபுறத்தில் மாணவர் காங்கிரஸ் வழியாக வந்த உந்துதல்களால் தமிழ் இலக்கியப் பரிச்சயம் பெற்றும், தமிழகத்தின் நவீன இலக்கிய வளர்ச்சிகளால் குறிப்பாக, 1935 முதல் முக்கியப்படும் மணிக்கொடிக்கால புனைகதை, கவிதை, வளர்ச்சிகளாலும் ஊக்கம் பெற்ற ஓர் இளம் தலைமுறையினர் தமக்கு வேண்டிய ஓர் ஆக்கக் களத்தை ஈழகேசரி கூட வழங்கவில்லை என்று கருதுவதில் நியாயம் இருக்கவே செய்தது. இத்தகைய உந்துதல்களால் ஒன்றிணைந்த தமிழ்ப்பயில்வு வழிவந்த இளம் தமிழ் படைப்பாளிகள் தமக்கெனத் தோற்றுவித்துக் கொண்ட இலக்கிய நிறுவனமே மறுமலர்ச்சிச் சங்கம் (13.06.1943) ஆகும்.

மறுமலர்ச்சி எனும் இச்சொல் பாரதியாரை முக்கியத்துவப்படுத்துகிற தமிழுக்கான புதிய சமூகப் படைப்பாக்க வளர்ச்சிகளைக் கோரி நிற்கின்ற இயக்கத்தினர் பயன்படுத்திய சொல்லாகும். இந்த மறுமலர்ச்சிக் சங்கத்தின் பிரதான ஒழுங்கமைப்பாளர்களாக வரதர், அ.செ. முருகானந்தன், அ.ந. கந்தசாமி, பஞ்சாட்சர சர்மா ஆகியோர் விளங்கினர். எனினும், இது அக்காலத்தில் இருந்த இடதுசாரிகளையும் இலக்கிய ஆர்வலர்களையும் தன்னிடத்துக் கவர்ந்து நின்றது என்பதும் மறுமலர்ச்சிக் கவிதைகள் என்ற இந்த நூலுக்கு சுதர்சன் தருகின்ற ஆய்வு ரீதியான வரலாற்று அறிமுகம் மூலம் தெரியவருகிறது. தமிழின் தொன்மையையும் மரபையும் மாத்திரம் அழுத்தாமல், அது மீண்டும் மக்கள் நிலையில் பூரண பயன்பாடு உள்ளதாக மலர வேண்டும் என்ற கருத்தினை மறுமலர்ச்சி என்ற இச்சொல் குறித்து நிற்கிறது எனலாம். அந்தவகையில் நோக்கும் போது மறுமலர்ச்சி இயக்கமே ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் சமூகநிலைப்பட்ட இலக்கிய வளர்ச்சிக்கு பிரக்ஞைபூர்வமான காலாக அமைகிறது எனலாம்.

இன்னொரு வகையிற் சொன்னால், அன்றைய நிலையில், ஈழத்தில் (யாழ்ப்பாணத்தில்) நிலவிய சமூக நிலைப்பட்ட பிரச்சினைகளைப் பொருளாகக் கொள்வதை இவர்கள் ஆக்க இலக்கியத்துக்கான ஒரு கோட்பாடாக்கிக் கொண்டனர். இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம் போன்றோர் இவர்களுக்கு முன் எழுதினர். எனினும், அவர்களது எழுத்துக்கள் கலைமகள் முதலிய சஞ்சிகைகளில் வெளிவந்திருந்தன. எனினும், இலங்கையர்கோனிடத்து இத்தகைய ஒரு சமூகக் கடப்பாட்டுணர்வு முனைப்புற்று நின்றது எனக் கூறமுடியாதுள்ளது. ஈழகேசரிக் காலம் முதலே இப்பண்பு சமூகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை படிப்படியாக வளர்ந்துவந்தது. எனினும், அதனை ஒரு கோட்பாடாக வளர்த்துக்கொள்பவர்கள் மறுமலர்ச்சிக்காரரே. ஆனால், இவர்களுள் அந்தளவுக்கு மேல் அக்கருத்து முன்னெடுப்புப் பற்றிய சிந்தனைகள் நிலவின எனக் கூறமுடியாது. அத்தகைய சிந்தனை 1940 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வலுப்பெறும் இடதுசாரிக் கட்சிகளின் வருகையுடனேயே ஏற்படுகிறது. இப்படிப்பார்க்கும் பொழுதுதான் மறுமலர்ச்சிச் சங்கமும் சஞ்சிகையும் 1950, 60 களில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடக்கம் சமூக இலக்கியப் பேரியக்கத்துக்கான நகர்வு முனையாக, தளமாக அமைகிறது.

உண்மையில், மறுமலர்ச்சிச் சங்கத்தையும் சஞ்சிகையையும், ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையாகவே கொள்ள வேண்டும். இந்தச் சஞ்சிகையில் இடம்பெற்ற சிறுகதைகளை செங்கை ஆழியான் ஒரு தொகுதியாகக் கொண்டுவந்துள்ளார். மேலே கிளம்பும் பல எடுகோள்களுக்கு அந்தச் சிறுகதைகளுக்குள்ளே ஒரு மௌனசாட்சியம் இருப்பதை உணரலாம். இப்பொழுது செ. சுதர்சன் அந்தச் சஞ்சிகையில் காணப்படும் சிறுகாவியம் தவிர்ந்த கவிதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். மறுமலர்ச்சிச் சங்கமும் சஞ்சிகையும் ஒரே நேரத்தில் அன்றிருந்த இலக்கியப் போக்குடன் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், அதேவேளை, தமிழகத்துடன் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் யாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணத்து வாழ்வியலை கவிதைப் பொருளாகக் கொள்வதிலும் ஒரு முக்கிய சிரத்தை காட்டியுள்ளது என்பதனை இத்தொகுதி நன்கு வெளிக்கொணருகிறது. உண்மையில் இந்த இலக்கிய வரலாற்றுப் பின்புலத்தை நன்கு புரிந்துகொண்டாலே தான் அந்தக் கவிதைகளில் காணப்படும் அழகியல் அம்சங்கள் பற்றி நாம் கவனம் செலுத்த முடியும். ஏற்கனவே, இருந்தவற்றுடனான தொடர்ச்சிப் பேணுகையும் புதிய அழகியல் உணர்கையும் எவ்வாறு இக்கவிஞர்களிடையே காணப்படுகின்றன என்பது ஒரு மிக சுவாரஸியமான ஆய்வுத்தேடலாக அமையும். இந்தக் கவிதைத் தொகுதியில் இடம்பெறுவோரைப் பார்க்கும்போது மஹா கவி உருத்திரமூர்த்தி இந்த மறுமலர்ச்சிப் பின்புலத்தினூடாகவே வருகிறார் என்பது ஒரு முக்கிய தரவாகிறது. உண்மையில் இந்தப் பின்புலத்தினூடாக வந்து 50, 60 கால ஈழத்துத் தமிழ்க் கவிதையைச் செழுமைப்படுத்தியோர் நாவற்குழியூர் நடராஜன், சோ. நடராசன், மஹா கவி இவர்களை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

ஆய்வில் முதல் நூல்களுக்குச் செல்லும் ஆய்வுப் பண்பு அருகிவிட்ட இந்நாட்களில் பல்கலைக்கழக இளம் ஆய்வாளர் சுதர்சன் மறுமலர்ச்சிச் சஞ்சிகைகளை மிக நுண்ணிதாக ஆராய்ந்துள்ளார். ஆராய்ந்து வருகிறார் என்பது மகிழ்வு தருகின்ற ஒரு விடயமாகும்.

சுதர்சன் மேற்கொண்டுள்ள இவ் ஆராய்ச்சியும் அதன் பெறுபேறாக வெளிவரும் அவரது இந்த நூல் முயற்சிகளும் 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியிற் காணப்பட்ட முக்கிய சாதனைகளுக்குக் காரணமாக விளங்கிய காரணிகளை வெளிக்கொணரும். ஆராய்ச்சியில், ஆய்வுக்கு அடித்தளப் பண்பு ஆய்வுக்கான முறையியல் ஆகும். அந்த முறையியல் பற்றிய பொருத்தமான வழிகாட்டல்களைப் பெற்றுள்ள சுதர்சன் தமது ஆராய்ச்சிப் பணியினை மேலும் மேலும் ஆழப்படுத்தித் தன்னை வளர்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இத்தொகுதியின் அறிமுகத்தை வாசிக்கும்போது ஏற்படுகிறது. அவரால் ஈழத்து ஆய்வுத்துறைக்குப் பயன் உண்டு. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றி ஆர்வம் கொண்டுள்ள யாவருக்கும் இத்தொகுப்பு நூல் பெரிதும் உதவும். சுதர்சன் பணிகள் வெல்க.

நன்றி:தினக்குரல் 
 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 25 Sep 2023 12:11
TamilNet
HASH(0x55f9e8877750)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 25 Sep 2023 11:53


புதினம்
Mon, 25 Sep 2023 12:11
     இதுவரை:  24044955 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 1312 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com