அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எட்டுத்திக்கும் மதயானைகள் - 01   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Wednesday, 28 February 2007

எட்டுத் திக்கும் மதயானைகள்.. 
01. 
'பல துண்டங்களானாலும்                                   மண்புழு வாழும் சூட்சுமத்தை                             நானும் இப்போது                  கற்றுக்கொண்டிருக்கிறேன்..'

அப்பால் தமிழ் பதிப்பகத்தால் தொகுத்து அண்மையில் பாரிசில் வெளியிடப்பட்ட 'பரதேசிகளின் பாடல்கள்' என்னும் கவிதைத் தொகுப்பில் உள்ள ஒரு கவிதை முறி இது. இலங்கைத் தமிழ்சமூகத்தின் குடித்தொகையில் முப்பது வீதமானோர் கடல்கடந்து வாழ்கின்றனர் என்பதை முதலில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 1970களில் இலங்கைத்தீவில் அரசியல் முனைப்புற்று சுயநிர்ணய போராட்டம் உருப்பெற்றதன் விளைவாகவே இவர்கள் கடல் கடந்தனர் என்பதையும் கவனத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். அண்ணளவாக ஒரு மில்லியன் மக்கள்தொகையினர் இந்தியா உட்பட உலகின் எட்டுத்திக்கிலும் பரவி அகதிகளாகவும் புலம்பெயர்ந்த சமூகங்களில் ஒன்றாகவும் வாழ்கின்றனர். அதிலும் பெருந்தொகையானோர் கனடாவிலும் ஐரோப்பாவிலும் அடர்த்தியாய் குழுமியுள்ளனர். இதில் இக்கட்டுரையாளனாகிய நான் ஐரோப்பாவில் பிரான்சில் 1991ம் ஆண்டு முதல் வாழ்ந்தும் புலம்பெயர் வாழ் தமிழ் சமூகத்தின் அசைவை கவனித்தும் அதில் ஊடாடியும் வருபவர்களில் ஒருவன். அதிலும் தமிழ்க்கொடி அடிக்கடி உயர்ந்தும் தாழ்ந்தும் பட்டொளி வீசி பறக்கும், ஐரோப்பா வாழ் தமிழர்களின் தமிழ் கலாசார விற்பனை மையமாக விளங்கும் பாரிசின் லா-சப்பேல் பகுதிக்கு அடிக்கடி வந்து தமிழ்க் கலாசாரத்தை சுவாசித்து விட்டு்ச் செல்லும் பரதேசிகளில் ஒருவன். நான்கு தமிழ் புத்தகக் கடைகளும், தமிழில் கற்கும் சாரதி பயிற்சி நிலையங்களும், மொழிபெயர்ப்பு பணியகங்களும், தாய்த்தமிழகத்தில் இருந்து கோடம்பாக்கம் தொழிற்சாலை தயாரிப்புகளாக, நாசகார நச்சுக்கதிர்களை காவிநிற்கும் சின்னத்திரை, பெரியதிரைகளின் ஒலி ஒளி நாடா குறுந்தகடுகள் விற்கும் - வாடகைக்கு விடும் கடைகளும், பூக்கடை, பழக்கடை, மிட்டாய்கடை, மீன்கடை, இறைச்சிக்கடை என நானாவித வியாபார நிலையங்களும் என பரவிக்கிடக்கும் இந்த லா-சப்பேல் பகுதி, எழுபதுகளுக்கு முன்னர் தமிழர் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்தது என்றால் இன்றைக்கு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அண்ணளவாக ஒண்ணேகால் இலட்சம்(125,000) தமிழ்பேசும் மக்கள் தற்போது பிரான்சில் வாழ்வதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. தொண்ணுறுகளில் பிரான்ஸ் நாட்டின் பிரபல நாளிதழான Le Monde குட்டி இந்தியா என அடையாளம் காணப்பட்ட இந்த லாசப்பேல், தற்போது இரண்டாயிரத்தில் குட்டி யாழ்ப்பாணம் என அடையாளப்படுத்துகின்றது. தமிழர்களின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள இப்படியான ஒரு கடைத்தெரு அல்லது மையம் - இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் தவிர்த்து - உலகில் வேறெங்கும் இல்லை என்றே கூறலாம். இலங்கைத்தமிழரின் வருகைக்கு பின்னரே எனைய தமிழரும் வியக்கும் வண்ணம் தமிழர் வாழ்வியலின் அசைவியக்கம் பிரான்சில் உச்சம் பெற்றது என்பதை அனைவரும் ஏற்கின்றனர். இருபத்திநான்கு மணிநேர ஒலி, ஒளி ஊடகங்களும், வாராந்தர அச்சு ஊடகங்களும் அரசியல் - இலக்கிய சஞ்சிககைகளும் நூல் வெளியீடுகளுமென அமர்க்களப்படுகின்றது நாளாந்த வாழ்வு. பொருளாதார வசதிகள் போதாமையால் தாயகங்களில் இயலாமல் போன அனைத்து ஆடம்பரக் கனவுகளும் சடங்குகளும் கோடம்பாக்கம் சினிமாக்களைத் தோற்கடிக்கும் படியாக அரங்கேற்றமாகின்றன. பாரிஸ் தெருக்களில் சிதறும் தேங்காயும் காவடியாட்டமும்,களியாட்டமுமாய் வடமிழுக்க தேரோட்டம் நிகழ்கின்றது. கோயில்களை நாடுவோரின் தொகை அதிகமாக இருப்பதால் புதிதுபுதிதாக கோயில்கள் முளைத்த வண்ணமும் உள்ளன. தாயகங்களின் நல்லவை - அல்லாதவை அனைத்தும் நாற்றுகளாக மறுநடுகையாகி விருட்சமாக வளர்கின்றன. தமிழில் பயணக்கட்டுரை எழுதியவர்கள் தாங்கள் சென்ற நாடுகளில் தமிழர்களை தேடி, தமிழக உணவு தேடி அலைந்ததாக எழுதியிருப்பர். தற்போது ஆபிரிக்கா தென் அமெரிக்கா தவிர்த்த ஏனைய எந்த பெரு நகரிலும் தமிழரில் தடுக்கிவிழும் நிலையே உள்ளது. பிரான்சில் இருந்து வெளிவரும் சஞ்சிகைளில் ஒன்றான Marianne (02-08oct.2004 No389 என்னும் சஞ்சிகையில் `நீ எங்கிருந்து வருகிறாய் என்பதை சொல் நான் உனது வேலையை சொல்கிறேன்' என்னும் தலைப்பிட்ட கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. எந்தெந்த தேசியத்தார் எவ்வெவ் பணிகளில் அதிகமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து எழுதப்பட்டிருந்த அக்கட்டுரையில், இலங்கையில் இருந்து வந்திருப்பவர்கள் உணவகங்களில் வேலை பாாக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தது. பாரிசின் பல்வேறு உணவகங்களின் பிரதான பணியாளர்களாக ஆக்கிரமித்து இருப்பவர்கள் இலங்கைத் தமிழராவர். இதேபோல் பெரும்பான்மையினர் துப்பரவுப் பணியாளராகவும் உள்ளனர்.

`இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் முற்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த மலேசிய புலப்பெயர்வுதான் யாழ்ப்பாணத்தின் கடல்தாண்டி வாழத் தலைப்பட்ட முதல் நிகழ்வாகும். ஆனால் இது இவர்களுக்கு வருத்தத்தை அளித்ததாகத் தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் கூலிகளாக அல்லாமல் இரண்டாம் நிலை அதிகாரிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதனால்தான் போலும் மலேசியத் தமிழ் இலக்கியம் தொகுக்கப்பட்டபோது அதில் இலங்கைத் தமிழரின் குரல் பதிவாகவே இல்லை (தற்போது தீவிர ஆராய்ச்சிகளின் பின் சில படைப்புகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன). அதற்கடுத்து, இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னும் முன்னும் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் படிப்பிற்காகச் சென்று இலண்டன் கனவை சமூகத்தில் உருவாக்கிய இலண்டன் பயணமாகும். இதற்குப்பன் 1960களின் பிற்பகுதியில் எண்ணெய் வளநாடுகளை நோக்கிய செல்வம் தேடும் பயணமும் புலப்பெயர்வும் நிகழ்கின்றது. இந்தப் புலப்பெயர்வுகள் தனியே பொருளாதாரக் காரணியைக் கொண்டவை. அதற்கும் பின்னர்தான் மிகப்பெரிய அளவினதாக, 1980களில் தற்போதைய (ஐரோப்பா,கனடா, அவுஸ்திரேலியா) புலப்பெயர்வு தொடங்கியது. இப்புலப்பெயர்வுக்குப் போரும் பொருளாதாரமும் முக்கிய காரணங்களாகும். இந்தப் புலப்பெயர்வில் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மையினர் சாதாரணர்கள், சாமானியர்கள், பாமரர்கள் இன்னும் இந்துத்துவா மொழியில் கூறினால் சூத்திரர்கள்.

`எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து இலங்கைத் தமிழரில் அநேகர் பிரான்சுக்குள் வந்து சேரத் தொடங்கினர். குறிப்பாக, எண்பத்தேழுக்குப் பின்னர்தான் அலைஅலையக நம்மவர் பிரான்சுக்குள் படையெடுத்தனர். பிரான்சுக்குள் வந்து சேர்ந்தோரை மூன்று வகையினராகக் கொள்ளலாம்.' இலண்டனுக்குள் நுழைவதற்கென்றே பயணத்தை தொடங்கி பிரான்சுக்குள் முடங்கிப் போனோர் ஒருவகையினர். ஏதேனும் ஒரு வெளிநாட்டுக்குப் போவோம் திரவியம் தேடுவோம் என்றெழுந்த அலையில் அள்ளுண்டு பிரான்ஸ் என்னும் நாட்டுக்குள் வந்து சேர்ந்தோர் இன்னொரு வகையினர். இந்த இருவகையினரையும் மையமிட்டு ஊராகவும் உறவாகவும் வந்து சேர்ந்தோர் மூன்றாவது வகையினர். இந்த மூன்று வகையினரே பிரான்சில் இலங்கைத் தமிழரின் வாழ்வியல் போக்கை வடிவமைத்தவராவர்.

பிரான்சுக்குள் வந்து சேர்ந்தோரில் பெரும்பான்மையினர் பாரிஸ் நகருக்குள்ளேயே முதலில் முடங்கிக் கொண்டனர். ஆனால் பிற்பாடு புறநகர்ப்பகுதிகளிலும், பாரிஸ் நகருக்கு தொலைவில் உள்ள நகரங்களிலும் வாழத் தொடங்கிவிட்டனர். ஆனாலும் அவர்களும், ஏனைய ஐரோப்பா வாழ் இலங்கைத் தமிழர் அனைவரும் பாரிசின் மையத்திற்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். ஏனெனில், ஐரோப்பாவிலேயே தமிழ்க் கலாசாராம் விற்கும் மையமாக பாரிஸ் நகரத்தின் 'லா- சப்பேல்' பகுதி நிலைபெற்றுவிட்டது.

இச்சூழலானது ஒருவர் பிரெஞ் படிக்காமலே தமிழ்மொழி அறிவுடன் வாழ்ந்து மடிந்துவிடலாம் என்னும் துணிபை அளிக்கக்கூடியது என்றால் மிகையான கூற்றல்ல.

இன்னும்வரும்..

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(5 posts)
 


     இதுவரை:  24806315 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3913 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com