அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 10 December 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 31 arrow தாகத்தின் ஒளியும் நிழலும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தாகத்தின் ஒளியும் நிழலும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கருணாகரன்  
Thursday, 01 March 2007

ஒளியைத் தொடர்கின்ற ஒரு பயணி.

kajaani

இவர்தான் கஜானி :: இவரின் ஒளிப்படத் தொகுப்பினைப் பார்வையிட...


வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜானிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார். ஒளியினூடாக நமது ஆன்மாவில் அவர் நிகழ்த்தும் நடனம் பெரியது. அது கட்டற்றது. எல்லையும் ஓய்வுமற்றது. நம்மை வியப்புக்குள்ளாக்குவது. நாம் விட்டுவிலகிய யதார்த்தங்களில் மீண்டும் நம்மை இணைக்கமுயல்வது.

காலங்களைக் கடந்து செல்லும் பிரக்ஞைபூர்வமான தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் இயற்கையையும் எதிர் இயற்கையையும் படைக்கிறார் கஜானி. கஜானியின் படைப்புலகம் இயல்பினூடாக ஆச்சரியங்களை உருவாக்கும் தன்மையுடையது. இதனால் அவருடைய படங்கள் ஒருபோது பேரிசையாகவும் இன்னொருபோது பெருநடனமாகவும் இருக்கின்றன. வேறு ஒருபோது அழகிய ஓவியங்களாகவும் பிறிதொருபோது உன்னத சிற்பங்களாகவும் வேறொரு சமயத்தில் மெய்ததும்பும் கவிதைகளாகவும் கூட அவை தோன்றுகின்றன.
கஜானியின் ஒளிப்படங்கள் இயற்கையை மறுபடைப்புச் செய்கின்றன. அதேவேளை சிதையும் சூழலின் தவிப்பையும் அதன் மூலத்தையும் அவை சாட்சிபூர்வமாக்குகின்றன. இயற்கையை அவர் படைப்பாக்கம் செய்யும் போது நாம் விட்டுவிலகிய இயற்கைக்கு மீண்டும் நம்மை சிநேகமாகவும் வலிமையோடும் அழைத்துச் செல்கிறார். நமது வாழ்க்கை எப்படியெல்லாம் இயற்கையைப் புறக்கணித்தும் நிராகரித்தும்விட்டு அலைகிறது என்பதை அவருடைய மறுப்படைப்பாக்கம் பெறுகின்ற இயற்கை நமக்கு உணர்த்துகின்றது. நாம் பொருட்படுத்தத்தவறிய உலகத்தை மீண்டும் நம்முன் நிகழ்த்தி இதனைச்சாதிக்கிறார் கஜானி.

நாம் பொருட்படுத்ததவறும் சூழல் பற்றிய குற்றவுணர்ச்சி அப்போது நம்மை ஆழமாகப் பிளக்கிறது. மனதில் அது வலியையெழுப்புகிறது. ஆனால் அதேவேளை இந்ததவறு தொடர்ந்துவிடாமல் நம்மைச் சூழலோடும் இயற்கையோடும் இணைக்கும் பதிவாக அவரின் படைப்பியக்கமிருக்கின்றது. தண்டனைகளை விதிக்காமலே நம்மை நாமே ஒழுங்குபடுத்தி இணைத்துக் கொள்கிற மாதிரி ஆக்கிவிடுகிறார் அவர்.

கமெரா அவருடைய இனிய பயணியாக அவருக்கு ஒரு நெகிழ்ச்சிமிக்க துணையாக இருக்கிறது. பல சமயத்திலும் மாயங்களை நிகழ்த்தும் விதமாக அல்ல. பதிலாக மீண்டும் மீண்டும் இயற்கையோடும் சூழலோடும் வாழ்வை இணைப்பதற்தான ஆர்வத்தையும் அவசியத்தையும் தூண்டும் விதமானது என்பதே இங்கே பொருள்.
நமது குற்றவுணர்ச்சிகள் கொடிபோல படர்ந்து செல்லாமல் தன்னுடைய படங்களின் மூலம் அதனை கரைத்தொழிக்கிறார் கஜானி. கஜானியின் கமெரா எதனிலும் கட்டுண்டுவிட வில்லை. அவர் இயற்கையை படமாக்கும் அதே ஆர்வத்தோடும் நுட்பத்தோடும் துயரப்படும் மனிதர்களையும் படமாக்குகிறார். அதனூடே அவர்களின் வாழ்கையைப் பகிர்ந்து கொள்கிறார்.
அத்துடன் அதைக் கவனப்படுத்தி சமூகத்தின் முன் சமர்ப்பிக்கிறார். புறக்கணிக்கப்பட்டிருக்கும் அந்த மக்களை அவர் அங்கீகரிக்கிறார்.
கஜானியின் ஏராளமான படங்களில் நெருக்கடிமனிதர்களின் வாழ்வையும் ஆன்மாவையும் காணமுடியும். குறிப்பாக உழைக்கும் மனிதர்கள் பற்றியபடங்கள் இதில் முக்கியமானவை. சிறுவர்கள் முதல் சகல வயதிலும் உழைக்கும் மனிதர்கள் ஆண் , பெண் வேறுபாடின்றியிருக்கிறார்கள். அதிலும் பெண் உழைப்பாளர்கள் சிறுவர் நிலை உழைப்பாளர்கள் முக்கியமான கவனத்திற்குரியவர்கள் ஆகின்றார்கள்.

இன்று அதிக கவனம் பெற்று வரும் சிறுவர் மற்றும் பெண்கள் உரிமை குறித்த கவனத்திற்கும் யதார்த்தத்திற்குமிடையிலான முரணை துல்லியமாக்குகின்றார் கஜானி.
யதார்த்தத்தில்; பெண்கள் கலாச்சார ரீதியாகவும் சமூகவாழ்கையின் நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் இன்றும் இரண்டாம், மூன்றாம் நிலைகளியே உள்ளார்கள். சிறுவர் நலன்குறித்த சிந்தனைகளும் சட்டங்களும்; விழிப்புணர்வும் முன்னரைவிட வலுவடைந்தபோதும் இன்றும் சிறுவர்கள் உழைப்பாளர்களாகவும் கல்வி மற்றும் வாழக்;கை உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை ஆதாரப்படுத்துகிறன கஜானியின் ஒளிப்படங்கள். பல சந்தர்ப்பங்களில் கஜானியின் கமெரா பொறுப்புள்ள சாட்சியாகப் பேசுகின்றது.

சமூகம் மீதான கரிசனையும்;சகமனிதர்கள் மேலுள்ள பரிவும் அக்கறையும்தான் இதன் அடிப்படை. நாம் வாழுகின்ற சூழல் எப்படிச் சிதைந்துபோய்யிருக்கிறது என்பதைக்காட்டுவதன் மூலம் நமக்குரிய பொறுப்பை அவர் உணர்த்த முற்படுகிறார்.
நாம் நாளாந்தம் பல இடங்களிலும் சாதாரணமாகக் காணுகிற காட்சிகளை ஆழப்படுத்தி அவர் காட்டுகிறார். அதன் மூலம் தொடர்ந்தும் நாம் அந்தக்காட்சிகளை சாதாரணமாகக் கடந்து போய்விடமுடியாதபடி அவர் ஆக்குகிறார். இதன் மூலம் சூழலின் சிதைவுகள் குறித்த அக்கறையை நமது புலனுள் நுழைத்து வளர்த்து நமக்குள் அதை நொதிக்கச் செய்கிறார்.
கமெராவை வெறுமனே ஒரு தொழில்நுட்பக்கருவியாகவோ காட்சியை பதிவு செய்யும் படமாக்கல் சாதனமாகவோ வெறுமனே கஜானியால் கையாளமுடியவில்லை.

அப்படிக்கையாள்வது அந்தச்சாதனத்துக்கும் சமூகத்துக்கும் தவறானது என்ற தெளிவு கஜானிக்கு இருக்கிறது. கமெராவை அறிவுபூர்வமாக அதன் பெறுமானத்திற்குரியவாறு அவர் கையாள்கின்றார்.
தமிழ்ச் சூழலில் புழங்கும் கமெராக்கள் பன்முகத்தன்மையையும் ஆழத்தையும் இழந்தவை. வளர்ச்சியடையாத கமெரா பார்வையே தமிழ்ச்சூழலில் அதிகமுண்டு. கமெரா மூலம் நிகழ்த்தப்பட்டிருக்கவேண்டிய மிகச்சிறிய வேலைகள்கூட முழுமையாகாத நிலையே நமது சூழலில் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சாதனைகள் குறித்து நாம் எப்படிச் சிந்திக்கமுடியும்?

முடிவிலாப்பயணத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் பேரியற்கையையும் வாழ்வையும் ஒரு புள்ளியில் வைத்து அள்ளிக்கொள்கிறது. ஒளிப்படம் நிலையற்ற காட்சிப் புலத்தையும் ஒளித்தருணத்தையும் அதன் போக்கில் வைத்துவிட்டு ஒரு புள்ளியை அல்லது ஒரு பகுதியை வெட்டி நிலைப்படுத்தும் பேரியக்கம் அது.

ஒளித்தருணம் நிலையற்றது. அது சதா மாறிக்கொண்டேயிருப்பது. பொருட்களும் இடங்களும் மாற்றமடைந்துகொண்டேயிருப்பன. வேகமாக மாறும் ஒளித்தருணத்தையும் அதன் வழியான காட்சிப்புலத்தையும் பதிவு கொள்வதன் மூலம் மாறாப்புள்ளியொன்றை தன்வசப்படுத்தி விடுகிறது ஒளிப்படம். அது நிலையற்ற காட்சிகளை நிலைப்படுத்திக்கொள்ளும் வலிமை பொருந்திய வடிவம். மாறியபடியிருக்கும் காட்சிப்புலத்தை அதன்வழி நகரவிட்டு ஒரு தருணத்தை அல்லது ஒரு புள்ளியை அள்ளிக்கொள்ளும் ஒளிப்படம். மாறிய தருணங்களின் மாறிய காட்சிகளின் ஓர் மாறா அடையாளம். ஒரு தருணமும் ஒரு காட்சியும் இருந்ததற்கான ஆதாரம் அது. ஒரு புதிரான வடிவம். குலையும் வடிவத்தில் குலையா வடிவம்.

ஒளிபடங்கள் ஒரு வகையில் அழியா ஞாபகம். அது காட்சியொன்றின் ஞாபகம். மேலும் ஒளித்தருணமொன்றின் ஞாபகம். இந்த ஞாபகத்தின் வழி அது ஒரு காட்சியினதும் தருணத்தினதும் நிலை. நிலையின்மைக்குள் ஊடுருவும் நிலை. இத்தகைய வலிமைமிக்க நவீன கலைவடிவத்திற்கும் தமிழ்ச்சூழலுக்குமான நெருக்கம் மிகக்குறைவு.
தொழில்நுட்பம் பாதியும் கலை ஆழுமை பாதியுமாக இணைந்து திரட்சியுறும் ஒளிப்படக்கலை உலகளவில் நீண்டகாலமாக பெரும் அதிர்வுகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்திய தூண்டல்களின் வடிவமும்கூட.

இன்றைய தகவல் யுகத்தில் ஒளிப்படம் வகிப்பது அல்லது பெறுவது முதன்மையான பாத்திரம். ஒளிஊடகம் மற்றும் அச்சு ஊடகத்துறையில் ஒளிப்படங்களின் வலிமையும் அதிகம். பேசாப்படங்களாக நின்று அவை பேசும் சங்கதிகள் நிறைய. அத்துடன் வாழ்வின் சகல பருவங்களிலும், சகல நிலைகளிலும் தடையின்றி மிக இயல்பாக சேர்ந்தும் ஊடுருவியும் ஒளிப்படக்கலை நிற்கிறது.

தமிழ் வாழ்வில் சுருங்கிய நிலையில் மிக வரையறுக்கப்பட்ட வடிவங்களுக்குள் அடங்கியதாகவே ஒளிப்படம் பொதுப்புழக்கத்தில் இருந்து வருகின்றது. ஒளிப்படத்தைக் கலையாகவும் அதனை விரிந்த தளங்களில் அணுகுவதிலும் புரிந்துகொள்வதிலும் பெரும் தயக்கங்கள் நிரம்பி வழிகின்றன.

புறக்கணிக்க முடியாதவாறு ஒன்றிணைந்து நிற்கும் ஒளிப்படக்கலையின் மெய்ச் சாத்தியப்பாடுகளைப் புறக்கணிக்கும் போக்கே தொடர்கிறது. மிகச்சிறிய வட்டத்தினர் மட்டும் உயிர்ப்பு நிரம்பிய ஒளியின் சகாசங்களையும் அதன் நுட்பங்களையும் நாடகத்தையும் கவனிக்கின்றனர்.

அரசியல் மற்றும் சமூகவியல் புலத்தில் ஒளிப்படம் பெற்றிருக்கும் இடத்தைக் கடந்த நூறு ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகள் சொல்கின்றன. இன்றும் அச்சு ஊடகங்கள் தொடக்கம் சகல ஊடகங்களும் ஒளிப்படத்தினூடாகப் பலரையும் பலதையும் அறிதலாக்கியபடியே இருக்கின்றன.ஏதோ ஒரு நாட்டிலுள்ள ஒருவரை, ஒன்றை, ஒரு காட்சியை உலகம் முழுவதற்கும் ஒளிப்படம் அறிமுகப்படுத்தி வைக்கிறது.
ஒரு பருவத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை அவருடைய இன்னொரு பருவத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளும் பரவசம் எத்தனை இனியது. அதன் எல்லை மிகப்பெரியதல்லவா. ஞாபகத்தை மீட்டிப் பார்க்கவும் வரலாற்றைக் கற்றுக்கொள்ளவும் தன்னை நெகிழ்ந்து கொடுக்கிறது ஒளிப்படம்.

இன்று ஒளிப்படங்கள் ஊடகத்தளங்களில் நிரம்பிக் கிடக்கின்றன. முடிவுறா உரையாடலையும் பகிர்வையும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஒளிப்படங்கள் கனவின் சாயலுடையவை. கழிந்த காட்சி கனவு இப்போது கழிந்துகொண்டிருக்கின்ற காட்சியும் கனவு. நிஜம் எத்தனை உண்மையாக இருந்தாலும் அது அடுத்த கணம் கனவாக மாறிக்கொண்டிருக்கின்றது. நிஜம் தோற்றுக்கொண்டேயிருக்கின்றது. கனவு நிலைக்கிறது. கழிந்த போனதெல்லாம் இனிக் கனவுதான். ஞாபகத்தின் துளிர்போல சிறகுடையது கனவு. அந்தக்கனவின் முகமாக ஒளிப்படம் மாறிவிடுகிறது. கழிந்த காட்சி கனவாகிவிட ஒளிப்படம் மட்டும் நிஜமாக அந்தக்காட்சியின் மெய்யாக மாறும் விந்தை அது.


ஒளியை ஆளும் ஒரு கலைஞன் காட்சியை தன் அக ஒழுங்கிற்கும் விரிவிற்கும் ஏற்ப அதனை இழைக்கின்றான். எண்ணற்ற வேர்களையும், இலைகளையும், பூக்களையும் அவற்றின் வண்ணங்களையும, வாசனைகளையும் கனிகளையும் அவற்றின் சுவையையும் மரம் என்ற வடிவத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு சிறு விதை போல நல்லதொரு ஒளிப்படம் எல்லா உயிர்ப்புகளையும் தன்னுள் அடக்கியபடியிருக்கிறது. அதற்கு வாசல்களும் அதிகம் திசைகளும் அதிகம்.

இவ்வாறெல்லாம் விரிவுகொண்டிருக்கும் ஒளிப்படத்துறையில் ஈடுபாடு கொண்ட கஜானி தன்னுடைய ஒளித்தருணங்களை தான் அள்ளிய சில புள்ளிகளை காட்சிப்படுத்தியுள்ளார். இங்கே காட்சி என்பது வெறுமனே ஒரு பொருளின் தோற்றத்தையோ ஒன்றின் அடையாள விரிப்பையோ குறிப்பதல்ல. அவர் ஒளி அடுக்குகளை கண்டவிதமே.
ஓளியின் வடிவங்களை அறிந்துகொள்வதில்;தான் ஒரு ஒளிப்பதிவாளரின் திறனும் பலமும் தங்கியிருக்கிறது.

ஓளி நாடகத்தை வைத்துத் தான் புரியும் விந்தைகள் மூலம் பார்வையாளரின் அகப்புலத்தைத் திறக்கும் ஒளிப்பதிவாளரே சிறந்த கலைஞர்.
போரின் நெருக்குவாரங்கள் ஒரு ஒளிப்படக்கலைஞரை உந்துதலுடன் செயற்பட வைப்பது இயல்பு. போரின் பிடியில் இருக்கும் சூழல் சடுதியான சிதைவுகளுக்குள்ளாவதால் ஒளிப்படக்கலைஞரின் கவனம் அங்கே இயல்பாகக் குவிகிறது. முதற்கணத்திலிருந்த காட்சி அடுத்த கணத்தில் முற்றாக அழிந்துவிடும் அல்லது சிதைந்துவிடும் நிலை போர்க்களத்திலேயே அதிகமுண்டு. ஒரு குண்டுவீச்சோ, செல்தாக்குதலோ அச்சூழலின் விதியை மாற்றி விடுகிறது சடுதியாக.

இத்தகைய நிலையில் ஒளிப்படக்கலைஞர் இரண்டு தருணங்களையும் ஒரு படச்சுருளிலேயே படமெடுக்கும் நியதிண்டு. இது போர்ச்சூழலுக்கே பெரிதுமுடையது. இவ்வாறானதொரு சூழலில்த்தான் மக்கள் வாழ்க்கையும் இருக்கும்.

போர்க்காலம் ஒன்றின் மக்கள் திரளில் வாழும் ஒளிப்படக்கலைஞர் செயற்படும் விதம் தீவிரமானது. நிழலும் தீப்பிடித்தெரியும் வாழ்க்கையுடைய சூழலது. தன் சூழலையும் தன் காலத்தையும் சர்வதேச எல்லைகளை நோக்கி விரிக்கக்கூடிய சாத்தியங்கள் அந்தச் சூழலின் ஒளிப்படங்களுக்கும் ஒளிப்படக்காரர்களுக்குமுண்டு
-கஜானி இந்தக் குறைநிறையை மாற்றமுனைகிறார். கமெராவை அதன் பொருள் பொதிந்த நிலையில் கையாள வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். அதிலும் தனியே ஒளியையும் சட்டகத்தையும் கையாள்வதன்மூலம் மட்டும் எதையும் படமாக்கிவிட முடியும் என்ற இலகுவான பொறிமுறையைவிட்டு விலகவேண்டும் என்ற விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் அவர் இயங்குகிறார்.

-ஒளியினூடாக காட்டப்படும் வினோதங்கள் ஒளிப்படத்தில் கூடுதல் கவர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.ஆனால் அது மட்டும் ஒளிப்படத்தின் வெற்றியாகாது. அது முன்மாதிரியாகப் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையுமல்ல எனபதை கஜானியின் ஒளிப்படங்கள் வாதிடுகின்றன.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக ஒளிப்படத்துறையில் ஈடுபட்டுவரும் கஜானியின் அனேக படங்கள் பல இதழ்களிலும் நூல்களிலும் வெளியாகியிருக்கினறன. ஆயிஷா, ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள், எலும்புக்கூட்டின் வாக்குமூலம், இருள் இனி விலகும், இனி வானம் வெளிச்சிரும் எனப்பல நூல்கள். இவை தவிர சர்வதேச ஒளிப்பட இதழ்களிலும் கஜானியின் படங்கள் பிரசுரமாகியுள்ளன.

-தமிழ்ப்பெண் ஒளிப்படக்கலைஞர்களில் கஜனிக்கு இருக்கின்ற கூடுதல் சிறப்பம்சம் அவர் போர்க்களப்படங்களையும் பிடித்துள்ளவராக இருப்பதன்மூலம் கிடைக்கிறது. வெளிச்சூழலிலும் போர்க்களச்சூழலிலும் கவனம் பெறக்கூடியமாதிரியான இருதள இயக்கம் இது. அநேகமாக அபூர்வமாகவே இது வாய்க்கும்.

விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்காப்படையினருக்கும் இடையிலான போர்க்காட்சிகளை ஆச்சரியப்படுமளவில் அவர் படமாக்கியிருக்கிறார். படையினர் கைவிட்டுச்சென்ற காப்பரண்கள், படைத்தளங்கள், மக்களில்லாத கிராமங்கள், இடப்பெயர்வுகள், சூனியப்பிரதேசங்கள் என சகலவற்றையும் அவர் படம்பிடித்துள்ளார். இன்னும் மக்கள் வாழும் நகரங்களிலும் கிராமங்களிலும் படையினர் ஆக்கிரமித்து நிற்பதையும் அவருடைய கமெரா சாட்சி பூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளது.

எவையெல்லாம் இன்று தன் சூழலை நெருக்கடிக்குள்ளாக்குகின்றனவோ அவற்றை அவர் எதிர் வினையாக்குகின்றார். அவருடைய பலமும் ஆயுதமும் கமெராதான். மறுக்கமுடியாத சாட்சியாக அந்தப்படங்கள் நிரூபணம் கொள்கின்றன.
பெண்பேராளிகளின் களமாடல் தொடக்கம் களவாழ்வுவரையான தொகுதிப்படங்கள் தமிழ்பெண்வாழ்வில் ஏற்பட்டிருக்கும் பண்பாட்டு விரிதலுக்கு புதிய அடையாளக்குறியானவை. அந்தப் பெண்களின் உடை தொடக்கம் அவர்களின் வாழ்முறைகள் அத்தனையும் தமிழ்ச்சூழலுக்கும் தமிழ்ப்பெண்பற்றிய புறச்சூழலுக்கும் அதிர்ச்சிகரமான ஒரு காட்சிப்புலமே.
விடுதலைப் புலிகளின் பெண்போராளிகள் பற்றிய படங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிறைய வெளியாகியிருக்கின்றன. இதில் கஜானியின் படங்களும் அடங்கும். ஆனாலும் கஜானியின் ஒளிப்படங்களை ஒன்று சேரத்தொகுத்துப் பார்க்கும்போது அவர் பெண்போராளிகளின் வாழ்வையும் ஆற்றலையும் காட்சிப்புலத்தின் வழியாக சீராக ஒழுங்குபடுத்தியுள்ளமையைக் காணலாம். இன்றுள்ள போராட்டவாழ்வில் பெண் வாழ்க்கையும் அதன் அடையாளமும் பெற்றுள்ள இடத்தை அவர் கவனங்கொண்டுள்ளார். பெண்போராளிகளின் பல பரிமாணங்களையும் துலங்கவைக்கும் நோக்கில் அவருடைய பல படங்கள் உள்ளன. துலக்கம்பெறவேண்டிய அனைத்துப் பகுதிகளிலும் அவர் ஒளிபாய்ச்சுகிறார். அவற்றை அவர் போக்கஸ் ஆக்குகின்றார்.

ஒளியைக்கையாள்கை மற்றும் சட்டகங்களின் கவனம் பின்னகரும் சில படங்களும் இவருடைய சேகரிப்பிலுண்டு. ஆனால் அவை படமாக்கப்பட்ட சூழ்நிலையும் களமும் வேறு. படமெடுப்பதற்கு அவகாசமற்ற சூழ்நிலைகளிலும் களத்திலும் அவற்றில் சில படமாக்கப்பட்டிருக்கின்றன.
தீர்மானிக்கப்பட்டிருக்காத சூழ்நிலைகளில் இயங்கும் ஒளிப்படக்கலைஞருக்குள்ள சவால்கள் எப்போதும் நெருக்கடிகள் நிறைந்தவை. குறிப்பாக போர்க்களம் மற்றும் அதுபோன்ற திடீர்ச் சந்தர்ப்பங்கள். அதில் தேர்வென்பது நெருக்கடிச் சூழ்நிலையும் அந்தக் களமுமே. அப்படியான தருணங்களில் எடுக்கப்படுகின்ற படங்கள் அவை எதிர்கொண்ட சவால்களுக்குரியவாறு பெரும் நிலைபேறைப் பெறுகின்றன. அப்படியான நிலமைகளின் போது எடுக்கப்பட்ட பல சர்வதேசப் புகழ் பெற்ற படங்கள் நமது ஞாபகப்பரப்பில் அழியாதவாறு பதியம் பெற்றிருக்கின்றன. பல ஒளிப்படக் கலைஞர்கள் இந்தச் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதில் கஜானியும் சேரத்துடிக்கிறார்.

கஜானி தன்னளவில் தனக்குச் சாத்தியமான எல்லைவரையில் இயங்கியிருக்கிறார். அவருடைய கவனத்திற்கமைய இந்த ஒளிப்படங்கள் பதிவாகியுள்ளன.
போர்ச்சூழலில் ஒடுக்கப்படும் இனமொன்றின் பிரதிநிதியாக நின்று கொண்டு ஒளிப்படத்துறையில் இயங்குவதென்பது மிகவும் சிரமம். தமிழ்ச் சூழலில் ஒளிப்படம் குறித்த ஆர்வமுள்ள அளவுக்கு அதன் கலைப்பெறுமதி குறித்த புரிதல் இல்லை. இது ஒளிப்படத்துறையில் இயங்கும் ஒருவருக்கு இன்னொரு மறைமுகமான நெருக்குவாரம். இதைவிட இத்துறைபற்றி கண்டுகொள்ளாத்தனம் வேறு. இவையெல்லாம் சேர்ந்து தமிழ் வாழ்வில் ஒளிப்படத்துறையை ஒடுக்கிவைத்துள்ளன.

கஜானிகஜானி இத்தகைய சூழலை எதிர்கொண்டபடிதான் இயங்குகின்றார். கஜானி தன்னார்வத்தின் வழி செய்த பயணத்தின் புள்ளிகளைக் கோர்வையாக்கியுள்ளர்.
கஜானியின் படங்கள் கொந்தழிக்கும் ஒரு சமூகத்தினது ஆன்மாவை காட்சி ரூபமாக்குகின்றன. இதற்காக அவர் தீராத தாகத்தோடு கமராவில் இயங்குகின்றார். இதற்கு அவர் தன்வாழ்வையும் ஈடுபாட்டையும் மக்கள் விடுதலை குறித்த திசையில் வைத்திருப்பமே அடிப்படை.

அவருடைய புலனில் பதியம் பெற்றுள்ள சமூக்கக் கவனம் சக மனிதர்கள் பற்றிய அக்கறை இயற்கை மற்றும் பிரபஞ்சம் மீதான பிரியமெல்லாம் அவரை முன்னோக்கி நகர்த்துகின்றன.

அவர் ஒளியை விரும்புகின்றார். ஒளியே அவருடைய ஆதாரம். ஒரு வகையில் சொன்னால் அவர் ஒளியைத் தொடர்கின்ற ஒரு பயணி.


மேலதிக இணைப்பு:

1. கஜானியின் ஒளிப்படத் தொகுப்பு
2. "தெகல்கா" இதழில் கஜானி பற்றி வெளிவந்த கட்டுரை

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 10 Dec 2024 21:13
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Tue, 10 Dec 2024 21:13


புதினம்
Tue, 10 Dec 2024 21:13
















     இதுவரை:  26129457 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10482 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com