அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow குமாரபுரம் arrow குமாரபுரம் - 10
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


குமாரபுரம் - 10   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Wednesday, 14 March 2007

10.

நாவற்பட்டை நான்கைந்து நாட்களுக்குள்ளாகவே குமாருவின் காயத்தை ஆற்றிவிட்டது. நிலவிலே அவனைத் தேடி ஓடிவந்த சித்திரா, நிரந்தரமாகவே அவனுடன் தங்கிவிட்டாள். பல மாதங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு, பல நாட்களாக ஆயத்தம் செய்து, சில நாட்கள்வரை கொண்டாடிச் செய்யப்படும் திருமணங்களைப் போன்று இவர்களுடைய திருமணம் நடக்காவிடினும் குமாரு, சித்திரா ஒரு இரவுக்குள்ளாகவே கணவனும் மனைவியுமாக ஆகிவிட்டிருந்தனர். இனி அவர்களைப்பற்றி வசை கூறுவதிலோ, தூற்றித் திரிவதிலோ ஊராருக்கு எந்த வகையான சுவாரஷ்யமும் ஏற்படப்போவதில்லை. ஒன்றிரண்டு வாரங்களுக்குள்ளாகவே அது பழங்கதையாகிப் போய்விட்டது.
ஆனால், குலசேகரத்தாருக்கோ இவர்களுடைய திருமணம் ஒரு மாபெரும் அவமானமாக, தோல்வியாகத் தோன்றியது. தன் மகனுடைய எதிர்காலம் இனிமேல் சித்திராவினால் பாதிக்கப்படாது என்றபோதும், அவர் எதிர்பார்த்தபடி தன்னுடைய அடியாட்களைக் கண்டு குமாரு பயந்தோடவில்லை, ஊரவரின் பழிச்சொல்லைக் கேட்டு சித்திரா உயிரை விட்டுவிடவில்லை என்பதைக் கண்டதும் அவருடைய மனம் கொதித்துக் கொண்டது.

 
கத்தியையும் எடுத்துக் கொண்டல்லோ வெட்ட வந்தாள் அந்தச் சிறுக்கி! என்று பொருமினார்.


இவ்வளவுக்கும் சித்திராவின் தாய் குலசேகரத்தாருடைய தங்கைதான்!
சித்திராவின் தந்தை வன்னியசேகரம்பிள்ளை குலசேகரத்தாருடைய தங்கையை மணந்துகொண்டது, அவருக்கு வேறு ஒருவரும் அந்த வயதில் மணமுடிப்பதற்குப் பெண் கொடாமையே! ஏழ்மையில் வாடிய குலசேகரத்தார் தன் தங்கையைக் கொடுத்து வன்னியா குடும்பத்தில் நுழைந்து கொண்டார்.
வன்னியா குடும்பத்தின் ஒரே வாரிசான வன்னியசேகரம்பிள்ளை தனது வாலிபப் பிராயத்தில் கொழும்பில் பெயர்போன கல்லூரியில் படித்தவர். அந்த நாட்களில் தனது குடும்பச் செல்வங்களை மட்டுமல்ல, தனது இளமைச் செல்வத்தையும் கண்கடை தெரியாமல் விரயமாக்கியிருந்தார். அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று மது, மாது இரண்டிலும் மூழ்கி வருவது அவரது சிறப்பியல்புகளில் ஒன்றாக இருந்தது.

 
நாற்பத்தைந்து வயதுக்குப் பின் அவருக்குத் திருமண ஞாபகம் வந்ததும், இழந்துவிட்ட இளமையை ஒரு கன்னி உறவுதான் மீட்டுத்தரும் என்று பலர் சொல்லக் கேட்ட காரணமாகத்தான்! அந்த நப்பாசையினாற்றான் அவர் குலசேகரத்தாரின் தங்கை பதினாறு வயதுப் பாக்கியத்தை மணமுடித்தார். அடுத்தடுத்து ஐந்து பெண்களை அவருக்குப் பெற்றெடுத்த அவள், அவருடைய முதிர்வயது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தன் ஆரோக்கியத்தை இழந்துநின்ற வேளையிற்றான், இரத்த அழுத்த நோய் வன்னியசேகரம் பிள்ளையவர்களை வாரிச் சென்றது.

தன் தங்கையை வன்னியசேகரம்பிள்ளைக்குக் கொடுத்த கையோடு ஒன்றுக்கும் வழியில்லாமலிருந்த குலசேகரத்தாரும் தங்கையோடு போய் ஒட்டிக்கொண்டார். அந்தத் திருமணம் நடந்தபோதே வன்னியா வளவின் சொத்துக்களில் பெரும்பகுதி கரைந்து விட்டிருந்தது. எஞ்சியிருந்தவற்றை வன்னியவளவுக் காரியஸ்தர் என்ற ஸ்தானத்திற்கு உயர்ந்தவிட்ட குலசேகரத்தார் மிகவும் சாதுரியமாகத் தனது பெயருக்கு மாற்றிக்கொள்ள அதிக காலம் எடுக்கவில்லை. ஒரு கையில் சீமைச் சாராயத்தை வைத்துக்கொண்டு மற்றக் கையில் பத்திரத்தைக் காட்டினால் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் இட்டுவிடக்கூடிய வன்னியசேகரம்பிள்ளையின் சொத்துக்கள் அனைத்துமே குலசேகரத்தாரின் பெயருக்கு இரகசியமாக மாறிவிட்டிருந்தன. அந்தக் கடனுக்கு, இந்த ஈட்டுக்கு என்றெல்லாம் காணி, பூமி கைமாறியதாகத்தான் ஊரில் கதை. காலக்கிரமத்தில் அந்தச் சொத்துக்களை விற்று நூற்றைம்பது ஏக்கருக்கும் அதிகமாக நல்ல வயற்காணிகளையும், தோட்டந்துரவுகளையும் தனக்கென வாங்கிக்கொண்டார் குலசேகரத்தார். வன்னியாவளவில் இனிமேலும் இருப்பதனால் எந்தவித பிரயோசனமும் இல்லையெனக் கண்டபோது, செத்த நாயால் உண்ணி கழருவதுபோல, மெல்ல விலகிக் கொண்டார் அவர்.

இவற்றையெல்லாம் உணர்வதற்கோ, அவற்றையிட்டு அலட்டிக் கொள்வதற்கோ வன்னியசேகரத்தார் சுய உணர்வோடு இருந்த சந்தர்ப்பங்கள் மிகமிகக் குறைவு. அவரும் பொக்கொன்று போனதன் பின் அங்கு போய்வருவதைக்கூட வெகுவாகக் குறைத்துக் கொண்டார் குலசேகரத்தார்.

சித்திராவுக்குப் பதினொரு வயதாக இருக்கையில் அவளுடைய தகப்பனார் இறந்தார். கடைசித் தங்கையான செல்வம் அப்போது கைக்குழந்தை. கணவனும் போய், குலசேகரத்தாரும் அந்தக் குடும்பத்தை விட்டகன்றபின், சித்திராவின் தாய் ஏக்கம் பிடித்தது போலாகிவிட்டாள். யாரோடும் அதிகமாகப் பேசாமல் சதா படுக்கையிலேயே விழுந்து கிடந்த அவளுக்குச் சித்தப் பிரமையோ என்று ஊரார் பேசுமளவிற்கு அவள் உடைந்து போனாள். ஒருநாள் அவளும் போய்விட்டதன் பின்னர் குலசேகரத்தார் வன்னியா வளவு உறவை அடியோடு மறந்தே போனார்.

நொடித்து விழுந்து என்றோ மக்கிவிடவிருந்த அந்தக் குடும்பத்தை வன்னிச்சியார்தான் அந்தத் தள்ளாத வயதிலும் தாங்கி நடத்தினாள். வன்னியா வளவுத் தோட்டத்திலிருந்து வரும் தேங்காய் கிடுகு முதலியவற்றைக் கொண்டு மிகவும் சிக்கனமாய்க் குடும்பத்தை நடாத்திக் கொண்டிருந்தாள் அவள்.

முன்பு வெறும் குலசேகரமாகவிருந்து தங்கையை வன்னியாவளவில் கட்டிக் கொடுத்தபின் குலசேகரம்பிள்ளை ஆகிவிட்டிருந்த கங்காதரனுடைய தகப்பனார், வன்னியா வளவுச் சங்கதிகளை அறிந்து மிகவும் கொதிப்படைந்திருந்தார்.

எப்படியும் சித்திராவையும், வன்னிச்சியாihயும் பழிவாங்கித் தீரவேண்டுமென்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. இரண்டு நாட்களாக மூளையைப் போட்டுக் கொண்டபோதுதான் அவருக்கு அந்த மணியான யோசனை தோன்றியது.

உடனேயே எழுந்து சிவப்பிரகாச முதாலாளியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு அவருடன் வன்னியாவளவு சம்பந்தமாக வெகுநேரமாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிய குலசேகரத்தார், இதுகும் போனபிறகு கிழவி என்ன செய்யிறாள் எண்டு பாப்பம்! என்று தனக்குள் சிரித்துக் கொண்டார்.


000

குமாருவும் சித்திராவும் தம்பதிகளாகி இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. ஒருநாள் மாலை முல்லைத்தீவு பிரசித்த நொத்தாரிசு சிற்றம்பலத்துடைய சிவப்புக் கார் வன்னியா வளவுக்கு வந்தபோது, நிர்மலாவைத் தவிர மற்றத் தங்கைகள் பாடசாலைக்குச் சென்றிருந்தனர். வன்னிச்சியார் தனது வழமையான இடத்தில் அமர்ந்திருந்தாள்.

சிற்றம்பலத்தாரைக் கண்டதும், 'வாருங்கோ பிரக்கிராசியர்!" என்று வரவேற்றுத் தனக்குப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு 'என்ன சங்கதி? கனகாலத்துக்குப் பிறகு?" என்று வன்னிச்சியார் கேட்டபோது, 'எல்லாம் உங்கடை அலுவலாய்த்தான் வந்தனான் வன்னிச்சியார்! இந்த வீட்டையும், தென்னந்தோட்டத்தையும் தனியூத்துச் சிவப்பிரகாசத்தாருக்கு நம்பிக்கையறுதி எழுதி, காசு பத்தாயிரம் வாங்கினவர் வன்னியசேகரம்பிள்ளை! நம்பிக்கையறுதி முடிஞ்சு இப்ப இரண்டு வரியமாகுது!" என்று தனக்கேயுரிய அமைதியான முறையில் பவ்வியமாகக் கூறினார் நொத்தாரிசு.

வன்னிச்சியாரின் தலையில் இடி விழுந்தது. இந்தத் தோட்டத்தையெண்டாலும் வைச்சுக்கொண்டு இந்தக் குமருகளை ஒருமாதிரிக் கரை சேத்துப்போடுவன் எண்டு நம்பியிருந்தனே! இதையும் இந்தப் படுபாவி வித்துக் குடிச்சிருக்கிறானே! நான் இப்ப இந்தப் புள்ளையளையும் கொண்டு எங்கை போவன்? என்று அவள் மனம் ஓலமிட்டது.

அவளால் எதையுமே கொஞ்சநேரம் பேசமுடியவில்லை. பின்பு தன்னைச் சுதாரித்துக் கொண்டு, 'எப்பவாம் நாங்கள் எழும்போணும்?" எனக் கேட்டபோது, அவளுடைய கம்பீரமான குரல் தளர்ந்து போயிருந்தது. சிற்றம்பலத்தாருக்கு வன்னிச்சியாihப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.

'சிவப்பிரகாசத்தார் காணியைத் திருத்தி வீட்டைப் புதுப்பிக்கப் போறாராம்! இந்த ஆவணியிலை அவற்றை பொட்டைக்குச் சம்பந்தம் முற்றாகிக் கிடக்குது.... சீதணமாய் இந்த வளவைத்தானாம் குடுக்கிற.... நீங்கள் ஒரு கிழமைக்கே..." என்று இழுத்தார் நொத்தாரிசு.

வன்னிச்சியார் மேற்கொண்டு எதுவுமே பேசவில்லை. நொத்தாரிசு மெல்ல விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். அந்த வீடும் வளவும் பிறத்தியாருக்குச் சொந்தமாகிவிட்டது. அந்த வீட்டிலே பிறந்து ஒரு அரசகுமாரியைப்போல் வாழ்ந்து, ஒரு அரசியைப்போல ஆண்டனுபவித்த அந்த நாட்களின் இனிய நினைவுகளை மனதிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றிக் கொண்ட வன்னிச்சியார், நிர்மலாவைக் கூப்பிட்டுப் பொருட்களையெல்லாம் புறப்படுவதற்காக ஆயத்தம் செய்யச் சொன்னாள். அந்த வீட்டில் மேலும் ஒருகணம் இருப்பதை வெறுத்த வன்னிச்சியார், சித்திராவிடம் போய்வருவதாக நிர்மலாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

குமாருவின் சிறிய வளவிலே, அடுப்படிக்குள் அலுவலாக இருந்த சித்திரா, பெத்தாச்சி வருவதைக் கண்டதும் சந்தோஷம் மிக்கவளாய், அவளை எதிர்கொண்டழைக்க ஒழுங்கைக்கு ஓடினாள்.

வழமையாகக் கம்பீரமும் மிடுக்கும் துலங்கும் பெத்தாச்சியின் முகம் ஏன் இப்படி வாடிக் கிடக்கின்றது? எதற்குமே அதிகமாகக் கலங்காத அந்த விழிகள் ஏன் இப்படிச் சிவந்து வீங்கியிருக்கின்றன? சித்திராவின் நெஞ்சு துடித்தது.

'என்ன பெத்தாச்சி?" என்று அவள் பயத்துடன் கேட்டதும், 'இனிமேல் எங்களுக்கு வீடு வாசலுமில்லை சித்திரா! வன்னியாவளவு நம்பிக்கையறுதியிலை மாண்டு போச்சுது!" என்று பெத்தாச்சி தளர்ந்த குரலில் கூறியபோது, சித்திரா விக்கித்துப் போனாள்.

எனினும் தனக்கேற்பட்ட கலவரத்தை வெளியே காட்டாது, அவளை அழைத்துச் சென்று அமைதியாக விஷயத்தைக் கேட்டபோது சித்திரா மலைத்துப் போனாள்.

ஒருகாலம் அந்தப் பிரதேசத்துக்கே முடிசூடா ராணியாக விளங்கிய வன்னிச்சியாருக்கு இன்று இருக்க ஒரு குடிசை இல்லை! பணமில்லாவிடினும், பழையதானாலும் ஒண்டிக் கொள்வதற்கு ஒரு கூரை இருந்ததே! மானத்தோடு வயிற்றைக் கழுவிக்கொள்வதற்குத் தோட்ட வருமானம் இருந்ததே! இனிமேல் தங்கைகள் என்ன செய்வார்கள்? ஏன்தான் எங்களுக்கு இப்படிச் சோதனையோ எனக் கலங்கி அழுதாள் சித்திரா.

வண்டியில் யாருக்கோ விறகேற்றிக் கொடுத்துவிட்டு அப்போதுதான் வீட்டுக்கு வந்த குமாரு, விஷயத்தைக் கேட்டதும் சற்றுத் திகைத்துத்தான் போய்விட்டான்.

'இனி இருந்து அழுது என்ன பிரயோசனம்? வா சித்திரா! போய் உன்ரை தங்கச்சியளையும் கூட்டிக்கொண்டு சாமான்களையும் எடுத்துக்கொண்டு வருவம்!

குமாருவின் உறுதி சித்திராவுக்கு மட்டுமல்ல, வன்னிச்சியாருக்கும் மிகவும் ஆறுதலைக் கொடுத்தது.

அவர்களுடைய பொருட்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் முதலியவற்றை வண்டியில் இரண்டு மூன்று தரமாகக் கொண்டுவந்த சேர்த்தபொழுது, நடுராத்திரிக்கு மேலாகிவிட்டது.

முற்றத்து வெண்மணலிலே பெத்தாச்சியைச் சுற்றி உட்கார்ந்திருந்த தங்கைகளுக்கு உணவைக் கொடுத்துவிட்டு அவர்களுடன் கூடவே அமர்ந்திருந்தாள் சித்திரா.

தேய்பிறை நிலவு மங்கிய ஒளியைச் சிந்தி அழுதது. பாக்கை இடித்து வாயில் போட்டுக் குதப்பிய பெத்தாச்சி, நெடியதொரு பெருமூச்சை விட்டு, 'அந்த நாளையிலை இஞ்சை குமாரபுரத்திலை இராசாங்கம் பண்ணின எங்கடை வன்னியங்கள் செய்த அக்கிரமந்தான் இண்டைக்கு இந்தக் குமருகளின்ரை தலையிலை வந்து நிக்குது! ... ம்ம்... எண்டைக்குத்தான் இந்தப் பழி கழியுமோ!" என்று பிரலாபித்தாள்.

அவள் எதைக் குறிப்பிடுகின்றாள் என்பது சித்திராவுக்கும் தங்கைகளுக்கும் அவள் அடிக்கடி சொல்லக் கேட்டுத் தெரிந்திருந்தாலும், தற்போது குமாருவுக்கும், செல்லையருக்குமாக பெத்தாச்சி அந்த விபரத்தை மீண்டும் விளக்கமாகக் கூறினாள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு அடங்காப்பற்றை ஆட்சிசெய்த வன்னியர்கள் காலத்தில் குமாரபுரம் சீர்பல கொண்டு விளங்கியது. சித்திரவேலாயுதர் கோவில் சிறப்புடன் திகழ்ந்தது. குமாரபுரப் பிரதேசம் நீர்வளம் நிலவளம் உடையதாய், குடிசனப் பெருக்கம் நிறைந்ததாய், வன்னிய மன்னரின் நல்லாட்சியில் திளைத்திருந்தது.

அந்தச் சந்ததியின் பரம்பரையின் ஒரு காலகட்டத்தில், இரு சகோதரர்கள் - பெரிய வன்னியன், சின்ன வன்னியன் என்ற இருவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது,

குமாரபுரத்தில் அக்கிரமம் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது.

அம்மையன், கரியன் என்ற இரு அடியாட்களைத் தலைமையாகக் கொண்ட ஒரு கும்பல் இச் சகோதரர்களின் அக்கிரமச் செயல்களை அவ்வப்போது நிறைவேற்றி வந்தது.

தோழர்கள் போலத் தோள்மேல் கைபோட்டுத் திரிந்த இச் சகோதரர்கள் பெண்பித்துப் பிடித்தவர்களாம். சித்திரவேலாயுதர் கோவிற் திருநாட்களுக்கு அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்து மக்கள் வந்து குவிந்திருக்கும் வேளைகளில், அடியாட்கள் புடைசூழ இச் சகோதரர்கள் பெண்கள் கூட்டத்தை நோட்டமிட்டு வருவார்களாம். அவர்களுடைய கண்களில் அழகான இளம்பெண்கள் தட்டுப்பட்டுவிட்டால், உடனே வண்ணானை அனுப்பி, அப்பெண்களைச் சுற்றி வெள்ளைச் சீலை பிடித்து அரண்மனைக்கு வரச்செய்து அனுபவித்து மகிழ்வார்களாம்.

அந்தப் பெண்கள் இணங்காவிடிலோ, அல்லது அவர்களைச் சார்ந்தவர்கள் யாராவது இடைஞ்சலாகக் குறுக்கிட்டாலோ, அம்மையனும் கரியனும் அவர்களைக் கறுத்தான்மடு என்றழைக்கப்படும் நீர்மடுவுக்கு இழுத்துச் சென்று, அவர்களுடைய காதுத் துவாரங்களினுள் கூர்மையான கறணைப் பாவட்டந்தடியை அடித்து இறுக்கிச் சித்திரவதை செய்தபின் முதலைகளுக்கு இரையாகப் போட்டுவிடுவார்களாம்.

இவர்களுடைய அக்கிரமங்களும், அட்டுழியங்களும் எல்லைமீறவே, மக்கள் குமாரபுரத்தை விட்டுக் குடிபெயர்ந்து, வன்னியின் வேறு கிராமங்களுக்குச் சென்றுவிட்டனர். ஆலயத்துக்குச் சாதாரண நாட்களில்கூட மக்கள் வருவதற்கு அஞ்சி நடுங்கவே, நாளைடைவில் கோவிலும் பாழடைந்து விட்டது. இவற்றுக்கெல்லாம் காரணமாகவிருந்த அந்தச் சகோதரர்களுடைய மறைவுக்குப் பின் குமாரபுரமே காடாகிப் போய்விட்டது.

'அந்தப் பொண்புரசுகள் வடிச்ச கண்ணீர்தான் இண்டைக்கும் இந்தப் பொட்டையளைப் போட்டு வருத்தூது!"

வன்னிச்சியாரின் கதையை யாவரும் கவனமாகக் கேட்டிருந்தனர்.

..... எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் யாரோ இருவர் செய்த தவறுக்கு நாங்களா துன்பப்பட வேண்டும்? அப்பா சொத்துச் சுகமெல்லாவற்றையும் விற்றுக் குடித்ததால் அல்லவா எங்களுடைய குடும்பம் இப்படி அல்லல் படுகின்றது!... பெத்தாச்சி எப்போதும் இப்படித்தான்..... பழங்கதைகளை நம்பிக்கொண்டு..... பாவம்! அவள்தான் என்ன செய்வாள்!.....எனச் சித்திரா எண்ணிக் கொண்டாள்.

குமாரு சிந்தனை வயப்பட்டவனாக தன்னுடைய வளவுக்கு எதிரே கிடந்த காட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு ஒரு யோசனை பிறந்தது.

'சித்திரா! உந்தக் கோயிலுக்கு முன்னாலை கிடக்கிற காடு உங்கடை குடும்பத்துக்குத்தானே!" அவன் அவசரமாகக் கேட்டான்.

'ஓம்! உந்தக் காணி கோயில் சொத்து!... உதை ஒருதருக்கும் விக்கேலாது எண்டபடியால்தான் என்ரை மோன் உதைக் கவனியாமல் விட்டவர்!... இல்லாட்டிக் கோயிலைக்கூட வித்துப்போட்டுக் குடிச்சிருப்பார் என்ரை அருமை மோன்!" சலிப்புடன் கூறினாள் வன்னிச்சியார்.

அவளுடைய பதிலைக் கேட்ட குமாரு, புதிய உற்சாகத்துடன் எழுந்து, 'உந்தக் காடு கிடக்க பிறகு நாங்களேன் கவலைப்படுவான்! கொஞ்சத்தை வெட்டியெரிச்சுத் திருத்தி நாங்கள் எல்லாருமாய்ப் பாடுபட்டமே எண்டால் சோக்கான தோட்டம் செய்யிலாம்!" என்றான்.

அவனுடைய முகத்திலே தெரிந்த நம்பிக்கையையும், குதூகலத்தையும் கண்ட சித்திராவுக்கும் தங்கைகட்கும் புதியதொரு தெம்பு ஏற்பட்டது.

'காலமையே காடு வெட்டத் துடங்கோணும்!" நிர்மலா துடித்தாள். 'வா அக்கா! இப்பவே போய்க் காணியை ஒருக்காப் பாப்பம்!" பவளம் ஆவலுடன் கேட்டபோது, சித்திரா குமாருவின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது போன்று அவனைப் பார்த்தாள்.

'அதுக்கென்ன! நிலவு காலிச்சிட்டுதானே! வாருங்கோ!" என்றபோது சித்திராவும் தங்கைகளும் உற்சாகத்துடன் கூடச்சென்றனர்.

குமாரு குடியிருந்த வளவுக்கு நேரெதிரே ஒழுங்கையை ஒட்டியவாறு, பற்றைகளும் சிறுமரங்களும் மண்டிவளர்ந்து அந்தக் காடு காணப்பட்டது. அதன் நடுவே சில பனைகள் தலைதூக்கி நின்றன.

'அக்கா! முத்திரையன் கட்டிலை மிளகாய்க் கண்டு வைச்ச சனங்களெல்லாம் எவ்வளவு காசு சம்பாதிச்சுப் போட்டுதுகள் தெரியுமே!.... நாங்களும் மிளகாய்க்கண்டு வைச்சமேயெண்டால்!" ஆவல் மேலிடக் கூறினாள் நிர்மலா.

'தண்ணிக்கு என்னடி செய்யிற? கிணறுவெட்ட எவ்வளவு செலவு தெரியுமே!" சித்திரா கவலைப்பட்டாள்.

'தண்ணியைப்பற்றி நீங்கள் யோசிக்கத் தேவையில்லை!.... வாருங்கோவன் காட்டிறன்!..." என்ற குமாரு அந்தக் காட்டின் கிழக்குக் கோடிவரை அவர்களை அழைத்துச் சென்றான்.

அந்த எல்லையிலே நின்று மேற்கே பார்க்கையில், சித்திரவேலாயுதர் கோவில் நிலவிலே உயரத்தில் தெரிந்தது.

'பாத்தியளே! கோயிலடிப் பக்கம் நல்ல உயரம்! .. இஞ்சை இந்தப் பக்கம் சரியான பள்ளம்!... அங்கை பாருங்கோவன் பிரப்பம் பத்தையை!... நல்ல தண்ணி ஊறிப் பாயிற இடத்திலைதான் பிரம்பும், மின்னியும் முளைக்கும்!.... துரவொண்டை வெட்டிப் போட்டால் பட்டையாலை தண்ணி இறைக்கிலாம்!..." என்று குமாரு விளக்கவும், சகோதரிகளின் சந்தோஷம் எல்லை மீறிவிட்டது.

அங்கிருந்து வீட்டுக்கு வந்தபோதும், நித்திihக்குச் சென்றபோதும் அவர்கள் நாளைக் காலையிலே செய்யவேண்டிய வேலைகளைப்பற்றி உற்சாகத்துடன் பேசிக்கொண்டனர்.

அன்று மாலையில் இனிமேல் நாங்கள் எப்படி வாழப் போகின்றோம்? என ஏங்கிய அந்த இளம் நெஞ்சங்கள், நமக்கும் ஒரு எதிர்காலம் உண்டு! என்ற நம்பிக்கையுடன் அமைதிகொண்டன.

 


மேலும் சில...
வணக்கம்
முதல்பதிப்பு
குமாரபுரம் - 01
குமாரபுரம் - 02
குமாரபுரம் - 03
குமாரபுரம் - 04
குமாரபுரம் - 05
குமாரபுரம் - 06
குமாரபுரம் - 07
குமாரபுரம் - 08
குமாரபுரம் - 09
குமாரபுரம் - 11-12
குமாரபுரம் - 13
குமாரபுரம் - 14-15
குமாரபுரம் - 16, 17, 18
குமாரபுரம் - 19
குமாரபுரம் - 20
குமாரபுரம் - 21 - 22
குமாரபுரம் - 23 - 24
குமாரபுரம் 25 - 26
குமாரபுரம் 27 - 28
குமாரபுரம் - 29 - 30

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08
TamilNet
HASH(0x55da811c32b8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 18:08


புதினம்
Thu, 28 Mar 2024 18:08
















     இதுவரை:  24713566 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6413 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com