அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மரணத்தின் வாசனை – 01   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த.அகிலன்  
Monday, 19 March 2007

01.

ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்….


கண்ணீரும் கம்பலையுமாக ஒரு தாய் கதறுகிறாள்
'எனது மகனைக் காப்பாற்றுங்கள் அவன் எனக்கு வேண்டும் தயவு செய்து காப்பாற்றுங்கள்'.
சீடர்கள் எல்லாரும் காத்திருந்தார்கள் நிகழப்போகும் அதிசயத்தின் சாட்சியாய் இருக்கப்போகிறோம் என்கிற முறுவல் அவர்களிடம் மிதந்து கொண்டிருந்தது.
புத்தர் அமைதியாய் சொன்னார் 'அம்மா மரணமே நிகழாத வீட்டில் இருந்து ஒரே ஒரு பிடி கடுகு வாங்கிவா' புத்தரின் முகம் புன்னகை மாறாதிருக்கிறது.
அவள் தெருவெங்கும் ஒடினாள் தன்மகனைக்காப்பாற்றி விடுகிற வெறியில் ஓடினாள் ஆனால் மரணம் இறுதியில் அவளை வென்றுவிட்டது. மரணம் காற்றைப்போல எங்குமிருந்தது. மரணத்தின் வாசனை தெரியாத ஒரு பிடி கடுகு கூட இந்தப் பூமியில் கிடையாது.
மரணத்தை வென்று விடுகிற ஆசை எல்லோருக்கும் உண்டு ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற சாகசவீரனைப்போல் மரணம் வாழ்க்கை முழுவதும் நம்மோடு கூட வருகிறது . கடைசிவரை பின்னாலேயே ஒடி வந்து இறுதியில் முந்திக்கொண்டு விடுகிறது.
எனது வழியில் கடந்து போன மரணத்தின் சுவடுகளின் சிலகாட்சிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
அப்பாவின் மரணத்தை பார்த்திருக்கிறேன் மிகநெருக்கமாக மரணத்தின் வாசனை அவர் முகத்தில் மிதந்து கொண்டிருக்க அவரது இறுதிவார்த்தைகள் எனக்கானவையாய் இருந்தன.
எனக்கு அப்போது 7 வயது. அதற்கு முன்பாக என்னிடம் மரணம்குறித்த சேதிகள் அனுபவங்கள் ஏதும் கிடையாது. என்னிடம் மரணம் குறித்து இருந்ததெல்லாம் சவஊர்வலமும் அதில் கொழுத்தப்படுகின்ற சீனா வெடி குறித்த பயமும் தான். அதைவிடவும் 'பொடிக்கு கையைக்காட்டாதடா கைஅழுகிப்போகும்' என்ற அக்காக்களின் வெருட்டலுக்கும் நான் பயந்து போயிருந்தேன். கை அழுகிப்போகாதிருக்க சவஊர்வலங்களைப் பார்க்கிறபோதெல்லாம் கையைப் பின்னால் கவனமாய் கட்டி மறைத்திருக்கிறேன். என்னையும் மீறிக் கையைக்காட்டிய பொழுதொன்றில் கை அழுகப் போகிறது என்று அழுது அழுது ஊரைக் கூட்டியிருக்கிறேன்.
இப்போது அப்பாசெத்துப்போனார். பாம்பு அப்பாவைக்கடித்துவிட்டது என்றவுடனேயே எல்லாரும் பதறினார்கள். அப்பாவை சூழ்ந்து கொண்டார்க்ள். எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்பாவைச்சுற்றி நின்ற சனங்களுக்குள் நான் இடறுப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பாவைக்காப்பாற்றி விடவேண்டும் என்று எல்லோரும் நினைத்தார்கள் அப்பாவை தூக்கிக்கொண்டு எல்லோரும் றோட்டுக்கு ஒடினார்கள். சந்தி வைரவர் கோயிலடியில் கிடத்தினார்கள். அவர்கள் நினைத்திருபார்கள் வைரவர் காப்பாற்றி விடுவார்.
அப்போதெல்லாம் இந்தியராணுவம் எங்கள் றோட்டுச்சந்தியில் முகாமிட்டிருந்தது. அஞ்சரை மணியோட பெரிய வட்டம் வட்டமாக முள்ளுக்கம்பிகளை போட்டு வீதியைமூடிவிடுவார்கள். யாரும் போகமுடியாது ராணுவ வாகனங்களைத்தவிர யாரும் போகமுடியாது. அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதற்கு ராணுவத்துடன் யார்யாரேவெல்லாம் கதைக்கிறார்கள் நான் குரல்களை மட்டும் கெட்டுககொண்டிருந்தேன். என்னால் மனிதர்களின் கால்களை மட்டும் தான் பார்க்கமுடிந்தது. சேர் மூர்திசேர் பாம்புகடிச்சிட்டுது சேர். à®¯à®¾à®°à¯‹ இந்திய ராணுவத்திடம் கெஞ்சினார்கள். No, No à®°à®¾à®£à¯à®µà®®à¯ பலமாக மறுத்துக்கொண்டிருந்தது. நான் சனங்களின் கால்களிடையில் நசிபட்டுக்கொண்டிருந்தேன். கால்களிடையில் புகுந்து புகுந்து அப்பாவிடம்போனேன். அப்பா ஏன்அழுகிறார்? 'அப்பா அப்புசாமியிட்ட போட்டு வாறன் பிள்ளை வடிவாப்படியுங்கோ' அவர் குரல் தளுதளுத்தது. அந்த வார்த்தைகளின் இறுதியையும் நிரந்தரத்தையும் என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் மரணம் மறுபடி ஆளைத் திரும்பத்தராது என எனக்கு அப்போது புரியவேயில்லை.
இந்தியராணுவம் இறுதிவரை அப்பாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக விடவில்லலை. அப்பா செத்துப்போனார். வைரவரும் கைவிட்டார்.
அப்பாவை வீட்டைகொண்டு வந்து கிடத்தினார்கள். யார்யாரோ என்னைக்கட்டிப்பிடித்து அழுதார்கள் நான் கொஞ்சம் அசௌகரியப்பட்டேன் அவ்வளவுதான். துக்கம் எல்லாம் அப்போதிருக்கவுமில்லை தெரியவுமில்லை. நான் அப்பாவை கிட்டபோய் பார்த்தேன் அவர் விழிகள் ஒருமுறை திறந்து மூடியது போலிருந்தது. நான் நிச்சயமாய் பார்த்தேன் அந்த வெளிறிய வழிகளை அதில் வழிந்து கொண்டிருந்த எம்மைப்பிரிய முடியாத வலியைப் பார்த்தேன். யாரிடமும் சொல்ல முடியவில்லை அப்பா முழிப்பு என்று. அந்த வேதனை இன்றைவரைக்கும் எனக்கு உண்டு. (நான் இப்போது யோசிப்பது உண்டு அது ஒரு பிரமையோ என்று) ஒரு பிரமையின் ஞாபகங்கள் இருபது வருடம் தாண்டியம் மனசில் தங்கியிருப்பது என்பது ம்… .
ஒப்பாரி காதைக்கிழித்தது. பிறகு எல்லாம் வேகமாக நடந்தது. நான் அப்பா இப்போது பொடி என்பதால் அப்பாவுக்கு முன்னுக்கு கையை வெளியில் எடுக்காமல் பின்னாலேயே கட்டிக்கொண்டிருந்தேன். அல்லது அப்பாதானே கையை எடுக்கலாமா விடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது அப்பாவுக்கு நிறையப்பேர் கண்ணீர் அஞ்சலி அடித்தார்கள். நான் அதையெல்லாம் ஒரு மூட்டைக்கு மேலிருந்து உரத்து மரண அறிவித்தல் பாணியில் வாசித்துக்கொண்டிருந்தேன்.
நான் அழவேயில்லையா அழுதேன். கடைசியாக சுடலையில் அப்பாவைக்கொழுத்தியபோது. அப்பா இனிமேல் வரவே மாட்டார் என்று எனக்கு புரிந்த போது வீறிட்டு கத்தினேன். யார் யாரோ என்னை அணைத்தார்கள் சமாதானப்படுத்தினார்கள். சோடா கொடுத்தார்கள். இப்போதும் அந்த அழுகை உறங்கிக்கொண்டிருக்கிறது எனக்குள்.
இப்போது 18 வருடங்கள் கழித்து மரணம் பற்றி எனக்கிருந்த எண்ணங்களை அனுபவங்களை எழுதலாம் என்று நினைத்து தொடங்கினேன். அப்பாவின் மரணத்தை தவிர்த்து விட்டு எப்படி? அப்பா எனக்கு சரியாக நினைவுகளில் பதியாத பிம்பம். அவர் மரணம் என்னை நிச்சயமாக பாதித்தது. என்னிலும் அதிகமாக தம்பியை அதைவிட அப்போதுதான் பிறந்திருந்து தங்கையை (அவளுக்கு அப்பாவின் முகமே தெரியாது) அந்த மரணம் பாதித்தது. அப்பனில்லாப்பிள்ளைகள் என்கிற இலவச இணைப்பு அனுதாபம் என்னோடு எப்போதும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவுகளையும் தந்து கொண்டேயிருக்கிறது.
18 வருடம் கழித்து இப்போது யோசித்தேன் இதற்கெல்லாம் காரணம் யார் அப்பாவா அந்த நேரம் அவரைக்கடித்த பாம்பா இல்லை அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவிடாத இந்தியராணுவமா? (அவர்கள் கட்டளைக்கு பணிபவர்கள்) அல்லது இந்திய ராணுவத்தை இங்கே அனுப்பினாரே ராஜீவ்காந்தி அவரா? யார் நண்பர்களே.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


     இதுவரை:  24712811 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5724 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com