அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 7 arrow பெண் என்றாலே நிர்வாணம்தான் - ஆணாதிக்க ஓவியமொழி குறித்து
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பெண் என்றாலே நிர்வாணம்தான் - ஆணாதிக்க ஓவியமொழி குறித்து   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Thursday, 01 July 2004

(1)

எமது பார்வைகள் பெரும்பாலும் தன்னிலைகள் சார்ந்தவை. இனம், வர்க்கம், பால், சாதி மதம் என ஏதோ ஒன்றைச் சார்ந்துதான் நாம் ஒவ்வொருவரும் வரையறுக்கப்பட்டிருக்கின்றோம். அல்லது வரையறைகளை உருவாக்கியிருக்கிறோம். சிந்தனையாளர் தாமஸ்லாஸ் சொல்வது போன்று  மனித உலகின் சட்டம் என்பதே வரையறு அல்லது வரையறுக்ப்படு என்பதுதான். நமது இயங்குதளத்திற்கு ஏற்ப பேசு பொருள்கள் மாறுகின்றன, சமூகப் பார்வைக் கோணங்கள் வேறுபடுகின்றன. அவ்வளவுதான். இவற்றிற்கு அப்பாற்பட்ட சிந்தனைகள் இருப்பதாகச் சொல்வதெல்லாம் வெறும் பாசாங்கு . தன்னிலை சார்ந்த பார்வைகள் பிழையென்பதல்ல வாதம். ஆனால் இவ்வாறான தன்னிலை சார்ந்த கருத்தியல்கள் (சில விளிம்பு நிலைக் கருத்தியல்கள் விதிவிலக்கானவை) பிற தன்னிலைகளை மறுதலிக்கும் அடக்கி ஒடுக்கும் அதிக்கக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது என்ற, உண்மையில்தான் நாம் அதிக கவனக்குவிப்பைச் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பெரும்பான்மை இனம் சிறுபான்மைகளை அடக்கியாழ முற்படுகிறது. முதாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்த்தை சுரண்டி வாழ்கிறது. ஆண்பாலர் பெண்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கின்றனர். உயர்சாதி எனப்படும் பிரிவினரால் சில மக்கட்பிரிவினர் ஒடுக்கப்படுகின்றனர், இம்சிக்கப் படுகின்றனர். மக்களில் அதிகமானவர்களை பற்றியிருக்கும் மதம் சிறுபான்மையோரின் மதநம்பிக்கைளை இழிவுபடுத்துகின்றது, அவர்களின் தனித்துவத்தை சிதைக்க முற்படுகின்றது. இவ்வாறு ஒடுக்குமுறைக்குள்ளாகும் பிரிவினர் தமது தனித்துவத்தையும், சுய இருப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். தமக்கான கருத்தியல்களை தாமே வடிவமைத்துக் கொள்கின்றனர். தமக்கான போராட்ட வழிமுறைகளை  வடிவமைத்துக் கொள்கின்றனர். மீண்டும் தன்னிலை சார்ந்த பார்வைகளே மேலெழுகின்றன. இந்த வகையில்தான் தேசியம் , பெண்ணியம், தலித்தியம் போன்ற கருத்தியல்கள் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.

(2)

நாம் ஆணியப்பார்வை என்னும் தன்னிலை சார்ந்த பார்வையிலிருந்து விலகி நவீன ஆண்ஓவியர்களின் ஓவிய மொழியைக் கட்டவிழ்க்க முயல்வோம். நாம் பொதுவாகவே  தன்னிலை சார்ந்து (ஆண் நோக்கில்) சிந்திக்கும் பழக்கம் உடையவ்ர்களே அன்றி, பெண்ணிலை சார்ந்து சிந்திக்கும் பழக்கமுடையவர்களல்ல. நான் என்னையும் உள்ளடக்கி ஆண்களைச் சொல்கிறேன். à®‡à®¤à¯ காலாதிகாலமாக கடத்தப்பட்டு வரும் ஆண் தலைமைத்துவ பண்பு நிலை. எமது பேச்சு எழுத்து செயல் எல்லாவற்றிலும் பெண்களுக்கு இரண்டாம் இடம்தான். இந்நிலைமையானது முற்ப்போக்கு, பிற்போக்கு, மார்க்சியம், பின்நவீனத்துவம், ஆன்மீகம் போன்ற வட்டங்களையெல்லாம் தாண்டியது. இதன் காரணமாகத்தான் இது ஒரு ஆண்மேலாதிக்க சமூகமென, பெண்களால் இலகுவாகச் சொல்ல முடிகிறது.. உண்மையும் அதுதான். எனது அவதானத்துக்கு உட்பட்ட வகையில் பெரும்பாலான நவீன ஓவியர்களின், நவீன ஓவியர்களெனெ சிலாகிக்கப் படுபவர்களின் பெண் பற்றிய புரிதல், பெண் என்றாலே நிர்வாணம்தான். அவர்களின் ஓவிய மொழியில் இரண்டு பெரிய முலைகள், பெரிய பிருஸ்டம் அவ்வளவுதான் பெண்.

ஆண் ஓவியர்களைப் பொருத்தவரையில்  வாழ்வியலின்
இன்னல்களை சித்தரிப்பதானாலும். அதன் அழகைச் சித்தரிப்பதானாலும், போரின் கொடூரத்தைக்காட்டுவதானாலும், சமூகப் பிரச்சனைகளைச் சித்தரிப்பதானாலும் கட்டாயமாக ஒரு பெண்ணின் நிர்வாணம் தேவைப்படுகிறது. அடக்குமுறைக்கு எதிராக பெண்;கள் வெகுண்டெழும்  போதும் பெண்கள் ஆடையில்லாமல்தான் இருக்க வேண்டுமென்பது ஆண் ஓவியர்களின்  எதிர்பார்ப்பு. இவ்வாறான சித்தரிப்புகள் நவீன ஆண் ஓவியர்கள் மத்தியில் ஒரு நோய்க் கூறாகவே பரவியிருக்கிறது. இங்கு தமது எண்ணத்திற்கு ஏற்ப பெண் உடலைக் கையாளும் அதிகாரத்தை ஆண் ஓவியர்கள் எடுத்துக் கொள்கின்றனர். தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப்ப பெண்களை உருவாக்குகின்றனர். நிலந்தி வீரசேகர என்னும்  ஓவியை செல்லுவது போன்று ஆண்களால் உலுவாக்கப்படும் பெண். உண்மையில் இதனை நாம் நுனுகிப் பார்ப்போமானால் பெண் எனக்கு கட்டுப்பட்டவள், எனக்கு கீழானவள், நான் அவளை எப்படி வேண்டுமானாலும் கையாளக் கூடிய அதிகாரமுடையவன் என்ற, சராசரி ஆண் புத்திதான் நவீன ஓவியர்கள் எனப்படுபவோரையும் ஆட்கொண்டிருக்கிறது . அந்தப் புத்திதான் அவர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது.

இந் நிலைமை தமிழ்ச்சூழலுக்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல.இது ஒரு உலகளாவிய நிலைமையாகச் சொல்லக் கூடியது. நாம் பிக்காசோவை அறிவோம்..அவர் நவீன ஓவியத்தின் பிதாமகரென கொண்டாடப்படுபவர். இன்று வரை உலகளவில் நவீன ஓவியர்களின் ஆதர்சமமாக விளங்குபவர். கியூபி-ம் என்னும் ஓவியப் பாணியில் அவரது பங்களிப்பு அசாதாரணமானதெனச் சொல்லப்படுகிறது. உருவச்சிதைப்பு என்ற அடிப்டையில் நவீன ஓவியத்திற்கு முப்பரிமாண முறைமையை வழங்கியவர் பிக்காசோ. சமாதானப் புறா இவரது படைப்பு. போரும் அமைதியும், கொரியாவில் படுகொலை, ஆவிக்ணான் நங்கையர், குவர்ணிகா போன்றன பிக்காசோவின் அற்புத படைப்புகளாகச் கொல்லப்படுபவை. பிக்காசோ பிரான்ஸின் ஆவிக்ணான் நகர விலைமாதர்களின் இன்னல்களினால் தாக்குண்டதன் விழைவே, ஆவிக்ணான் நகர நங்கையர் என்ற படைப்பு. ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது பிராங்கோவிற்கு உதவியாக வந்த நாஜி விமானங்களால் அழிக்கப்பட்ட வராலாற்றுச் சிறப்பு மிக்க நகரமே குவர்ணிகா. பிக்காசோ அந்த அழிவை தனது தூரிகையால் அற்புதமான படைப்பாக்கியிருக்கின்றார். குவர்ணிகா தனக்குள் ஏற்படுத்திய அனுபவத்தை ஜப்பானிய எழுத்தாளரும், ஓவியருமான ஒக்கமாட்டோ இப்படி விபரிக்கின்றார்.

"அன்று எனக்குள் உண்டான அதிர்ச்சி வெறும் திகைப்புக்கும், அச்சத்திற்கும், மனித அட்டூழியத்திற்கும், மேற்பட்டது. கட்டுக்கடங்கா கோபாவேசம் கித்தானில் வெடித்துச் சிதறுகிறது. அதில் கானும் உணர்ச்சி வெளிப்பாடு என்னை நிலை குலையச் செய்து விட்டது”

இவ்வாறு புறச் சூழல் நிலைமைகளை அற்புதமான படைப்புகளாக்கிய பிக்காசோவால் பெண்களை மட்டும் இறுதிவரை புரிந்துகொள்ள முடியவில்லையாம். பிக்காசோவின் பெண் பற்றிய சில சித்தரிப்புகள் அதிர்ச்சியளிப்பனவாக இருக்கின்றன. அதே வேளை பிக்காசோவின் இன்னொரு முகத்தை அடையாளம் காட்டுபவையாகவும் இருக்கின்றன. வோல்லார்ட் என்பாரது ஆடம்பரமான தொகுதிக்காக நூறு செதுக்கோவியங்களை வரைந்திருக்கின்றார் பிக்காசோ. அனைத்து ஓவியங்களும் உணர்வூட்டக் கூடிய வகையிலான சித்தரிப்புகளாகும். காளை முகமும் மனித உருவமும் கொண்ட புராணப் பாத்திரம் பெண்களை பலாத்காரப் படுத்துவதான ஓவியங்கள். பிக்காசோ தனது காதலி ஜாக்குலின் ஹ_டின் சிறு நீர் கழிப்பதாக ஒரு ஓவியத்தை வரைந்திருக்கின்றார். எலும்பும் தோலுமான ஒரு பெண்னை கூரிய நகங்களால் குத்திக் கிழிப்பாதக இன்னொரு ஓவியம்.. பிக்காசோ விரும்பிய பெண்கள் எல்லோரும் மாடலாக நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.. சமாதானப் புறாவை உருவாக்கிய அதே பிக்காசோதான் பெண்களை இழிவு படுத்தும் இவ்வாறான சித்தரிப்புகளையும் ஆக்கியிருக்கிறார். எனினும் பிக்காசோவின் இந்த முகத்தை யாரும் பார்ப்பதில்லை. ஏனெனில் பிக்காசோ இப்பொழுது ஒரு ஓவியப்புனிதர். புனிதர்களை கேள்விக்குள்ளாக்கலாமா? அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லவா. உண்மையில் புனிதர், புனிதம் ஆகிய சொற்களுக்குப் பின்னால்தான் பதுங்கிக்கிடக்கிறது அநேக அசிங்கங்கள்.

(3)

நிர்வாண சித்தரிப்புகளில் புனித நிர்வாணம் என்ற ஒன்றைப் பற்றி சொல்கிறார் தமிழக கலை விமர்சகர் இந்திரன். NAKED என்பது சங்கடத்தைக் கொடுக்கும் ஆடைகளைந்த உடம்பின் நிலை. NUDE என்பது சகஜபாவத்திலிருக்கிற, தன்னம்பிக்கையோடு கூடிய, சமநிலையிலிருக்கிற உடம்பின் நிலை. ஓவியர்களும் சிற்பிகளும் இந்த சகஜபாவத்திலுள்ள நிர்வாணத்தைத்தான் தங்கள் படைப்பில் கையாள்கிறார்கள். "இங்கே வசதி கருதி NAKED என்பதை நிர்வாணம் என்றும் NUDE என்பதை புனிதநிர்வாணம் என்றும் வைத்துக்கொள்ளலாம்." - என்பது இந்திரன் வாதம் (பார்க்க தீராநதி - ஆகஸ்ட் 2003)
இங்கு  நிர்வாணம்  என்பது புனிதமானதா, அல்லது அழகானதா என்பதல்ல பிரச்சனை. இந்திரன் சொல்லுவது போன்று அது புனிதமானதாகவே இருக்கட்டும்.. ஆனால் அந்த புனித நிர்வாணம், அழகியல் ரசிப்பக்குரிய நிர்வாணம் பெண் உடலோடு மட்டும் மட்டுப்படுத்தப்படுவதன் சூட்சுமம் என்ன என்பதுதான் நமக்குரிய கேள்வியாக இருக்கிறது. இன்றைய ஆணியமுதலாளித்துவ உலகில் பெண் உடல் என்பது ஒரு நுகர்வுப் பொருள். சனரஞ்சக ஊடகங்களிலிருந்து கோடாம்பாக்க சினிமா வரை பெண் உடல்தான் பெரும் மூலதனம்.. இவற்றின் பார்வை என்னவென்றால் எந்தளவிற்கு பெண் உடலில் ஆடை குறைகிறதோ அந்தளவிற்கு இலாபம் கூடும். பெண் உடல் என்பது ஆண்களின் பாலியல் உணர்விற்கான தீனிப் பொருள். இந்நிலைமை நவீன ஆண் ஓவியர்களும் துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். முதலாளியச் சந்தையில் நிர்வாணப் பெண் சித்தரிப்புகளுக்குத்தான் விலை அதிகம்.. ஏனெனில் இன்றைய நவீன ஓவியம் என்பதே ஜந்து நட்சத்திர ஹொட்டேல்களின் படுக்கையறைகளையும், வரவேற்பறைகளையும் அலங்கரிக்கப் பயன்படுபவைகளாகவும், பெரும் பணக்காராகளின் இல்லங்களில் தொங்குபவையாகவும் இருக்கின்றதேயன்றி சாதாரண மக்களுக்கு எட்டக் கூடிய நிலையிலில்லை. அவை அபூர்வமாகத்தான் சாதாரண மக்களின் பார்வைக்கு எட்டுகின்றன.. சில விதிவிலக்கான ஓவிய செயற்பாட்டாளர்களும் இருக்கவே செய்கின்றனர். இவர்கள் தமது வரைபுகளை மக்களை நோக்கி கொண்டு செல்கின்றனர். நாட்டுப்புற கலை வடிவங்களை உள்வாங்கி புதிய ஓவிய மரபொன்றை உருவாக்க முயல்கின்றனர். மேற்கின் வரைபுகளில் திருப்தி கொண்டு, சுருங்கிப் போகாமல் வேரிலிருந்து எழ முயல்கின்றனர். எனினும் இவ்வாறானவர்கள் மிக அரிதானவர்களே.

(4)

நவீன ஓவியத் துறையைப் பொருத்தவரையில் ஒப்பீட்டளவில் ஆண் ஓவியர்களின் பங்கு பற்றலே அதிகம். ஓவியமொழி முழுக்க, முழுக்க ஆண் நோக்கிற்குட்பட்டதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஈழத்துச் சூழலைப் பொருத்தவரையில் வாசுகிஜெயசங்கர், அருந்ததி, ரஞ்சனி போன்ற ஒரு சில ஓவியைகளே தமது சுவடுகளைப் பதித்துள்ளனர். இவர்களது வெளிப்பாடுகள் ஆண் மேலாதிக்க ஓவியமொழியை கேள்விக்கு உள்ளாக்குவனவாகவும், அவற்றை மறுதலிப்பனவாகவும் இருக்கின்றன. பெண் என்றாலே நிர்வாணம்தான் எனும் ஆணிய வரையறையை சிதைத்து, பெண்னை  பெண்ணாக சித்தரிக்கின்றன. பெண்ணின் பல்வேறு சமூக எதிர்கொள்ளல்களை  பெண்ணின் உணர்வுசார்ந்தும், அறிவுசார்ந்தும் பார்க்கின்றன. இது பற்றி சிங்களப் பெண் ஓவியையான நிலந்திவீரசேகர இப்படிச் சொல்கிறார்  “ஓவியத் துறையில் வெவ்வேறுபட்ட கோணங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக லியனார்டோ டாவின்சி என்னும் ஓவியர் மோனாலிசாவை சித்தரித்தது தமக்குத் தேவையான முறையிலாகும். அதற்கு அவர் தேவையான அழகு, நிறம், உருவமைப்பு, என்பவற்றை பாவித்துள்ளார் அனைத்துக் கலைஞர்களும் இம் முறையில்தான் தமக்கு உரியதான நீள அகலங்களுக்கு எற்ப “பெண்களை உருவாக்கியுள்ளனர்” நான் ஆண்களால் ஏற்படுத்தப்பட்ட
உருவத்தை உடைத்தெறிந்து பெண்ணாக பெண்னைப் பார்ப்பதற்கும், பெண் என்ற ரீதியில் அவர்களை உருவாக்கவும் முனைகின்றேன் “இவ்வாறான பெண்ணியல் நோக்கிலான ஓவிய வரைபுகளை தொடர்ச்சியாக முதன்மைப்படுத்துவதன் ஊடாகவும் , அவற்றை தொடர்ச்சியாக முன்தள்ளுவதனூடாகவும்தான் ஆண் மேலாதிக்க ஓவியமொழியை கேள்விக்குள்ளாக்குவதும், ஆண் ஓவிய முடிபுகளை ஓரம் கட்டுவதும் சாத்தியமாகும். ஓடுக்குமுறைகளும், இழிவுபடுத்தல்களும் தொடரும் போதே, மாற்றுத் தேடல்களும், எதிர்ச்செயற்பாடுகளும், எதிர்க்குரல்களும் எமக்கு அவசியமாகின்றன. 

(இக்கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கருத்தாடல் பகுதியில் நீங்கள் எழுதாலாம்)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(5 posts)


மேலும் சில...
அப்பால் பற்றி
புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி
விலங்குப் பண்ணை
யாழ்ப்பாணப் பண்பாட்டின் தெரியப்படாத பக்கங்கள்
காணாமல் போனவை

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 11:21
TamilNet
HASH(0x557291c11858)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 11:21


புதினம்
Fri, 29 Mar 2024 11:21
















     இதுவரை:  24716110 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4422 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com