அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 01 April 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத்தமிழர் பண்பாட்டடையாளம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பேராசிரியர் பொ.இரகுபதி  
Monday, 16 April 2007
பக்கம் 2 of 3
ஈழத்தமிழ் பண்பாட்டு அடையாளம் இன்று எதிர்நோக்கும் பெருஞ்சவாலொன்று உண்டு. ஈழத்தமிழர் தம் தாயகம் விட்டு உலகளாவிப் பரந்திருக்கையில் எவ்விதமாக, எவ்வகையான, பண்பாட்டு அடையாளத்தைப் பேணப்போகின்றார்கள் என்பதே அந்தக் கேள்வி. புலம்பெயர்ந்தோரை இழந்துதான் எமக்குப் பழக்கம். அந்தக்காலம் இலண்டனுக்குப் போனவர்களை மட்டுமல்ல கொழும்புக்கு போனவர்களையும் இழந்திருக்கிறோம். உலகப் போரின் விளைவாக, ஒரு புறநடையாக, மலாயா, சிங்கப்பூர் போனவர்களில் ஒருபகுதி திரும்பிவந்து இங்கு குறிப்பிடத்தக்க பல சமூக, பண்பாட்டு மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அங்கு தங்கி நின்றோரும் இந்தியத் தமிழருடன் இணைய விரும்பாது இலங்கையர் என்ற அடையாளத்தைப் பேணி வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.


இன்றைய காலம் வேறு. சனத்தொகையில் பெரும்பான்மையை வெளியே அனுப்பிவிட்டுச் சிறுபான்மை உள்ளுரில் இருப்பது
முன்னெப்போதும் நடவாத விடயம். முன்போலல்லாது இன்று மாறியுள்ள உலகச் சூழலில் புலம் பெயர்ந்தோரை ஏற்றுக்கொண்ட பெரும்பாலான நாடுகள் அவர்களைத் தம்முடன் கரைந்து போகும்படி சொல்லவில்லை. மாறாக, தங்கள், தங்கள் பண்பாட்டு அடையாளங்களைப் பேணி, நிறுவிக்கொண்டு வாழும்படி சொல்கிறார்கள். அது அந்த நாடுகளுக்குப் பெருமை என நினைக்கும் மனப்பான்மை இன்று முன்வைக்கப்படுகிறது. நாம் முன்னர் கூறிய பண்பாட்டுப் பன்மைத்துவம் என்பது தாராண்மை ஜனநாயகத்தின் முக்கிய அலகாக அமைந்ததன் வெளிப்பாடு இது.
அவுஸ்ரேலியாவில் இது வேடிக்கையானதொரு நிகழ்வாயிற்று. புலம்பெயர்ந்தோர் கணக்கெடுப்பின்போது வீட்டில் பேசும் மொழி என்னவென்று கேட்கப்பட்டது. மாறிய சிந்தனைகளை உணராத எம்மவர், ஆங்கிலம் பேசுகின்றோம் என்றனர். இதனால் தாம் அவுஸ்ரேலியத் தேசிய ஓட்டத்தில் இணைவது சுலபம் என்று நினைத்தார்கள். புலம்பெயர்ந்த சீனரும், வியட்நாமியரும், அராபியரும் தத்தம் மொழிகளையே வீட்டில் பேசுவதாகச் சொன்னார்கள். எம்மவரது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, அவுஸ்ரேலிய அரசு வீட்டில் சுயமொழி பேசும் புலம்பெயர்ந்தோருக்கு அதிக உதவி அளித்தது - அவரவர் மொழியையும் பண்பாட்டையும் பேணுவதற்கு. தாமதமாக விழித்தெழுந்த எம்மவர், அடுத்த கணக்கெடுப்பில் வீட்டில் தமிழ் பேசுவதாக ஒத்துக்கொண்டார்கள்.
புலம்பெயர்ந்தோர், புலம்பெயர்ந்த இடங்களில் தங்கள் பண்பாட்டு அடையாளத்தை நிறுவவேண்டும், பேணவேண்டும் என்பது இன்று கட்டாயமாகிவிட்டது. பண்பாட்டு வேர்களைத் தேடி தாயகத்தை அண்ணாந்து பார்த்தால், தாயகம் அர்ச்சகர்களையும் மேளதாளத்தையும் புழுக்கொடியல் பனாட்டு போன்றவற்றையும் தவிர வேறெதையும் கொடுக்க வக்கில்லாத சமூகமாகிவிட்டது. அரசியலிலும் பண உதவியிலும் இருக்கும் பாலம் பண்பாட்டில் இல்லை. மூன்றாவது தலைமுறையை இழந்து விடுவோமோ என்ற அச்சம் எல்லோரிடமும் உள்ளது. பண்பாட்டு பாலம் இல்லாவிட்டால் எதுவும் நிலைக்காது. புலம்பெயர்ந்தோரை இழந்துவிடுவது எமக்கு கட்டுப்படியான காரியமல்ல.
பரஸ்பரம் புரிந்துகொள்ள முடியாத, புலம்பெயர்ந்தோர் பிள்ளைகளையும் ஊரிலிருப்போரையும் பற்றி எவ்வளவோ எழுதியாகிவிட்டது. புலம்பெயர்ந்தோர் இங்கு முன்னர் சொன்ன பாண்பாடு தொடர்பான கருத்துமாற்றங்களுக்குப் பழக்கப்பட்டவர்கள். கருத்துமாற்றங்களைப் பார்க்க கண் திறக்கவில்லையானால் பண்பாட்டு பாலம் அமையாது. பண்பாடு என்பது நாம் கொடுப்பது மாத்திரம் அல்ல, வாங்கியும் கொள்வது. பண்பாடு ஒருமைத்தன்மையுடையது. அது சாசுவதமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கைகளுக்குப் பழக்கப்பட்டு போனவர்களுக்கு பண்பாட்டின் பன்மைத்துவமும் மாறுந்தன்மையும் சிரமமாக இருந்தாலும் அது ஒன்றும் எங்களுக்கு புதியது அல்ல. தமிழ்மொழியின் பண்பாட்டுப் பன்மைத்துவத்தை ஏற்கனவே பார்த்தோம். எமது சாதியமைப்பே பண்பாட்டு பன்மைத்துவம்தான். சாதியமைப்பின் பெருஞ்சிக்கல் அதிலுள்ள ஏற்றத்தாழ்வு. சாதியையொட்டிய வாழ்வியல் விழுமியங்கள் சிக்கல் அல்ல. இன்று இந்தியாவில் இது பெருமைக்குரிய விடயமாக முன்வைக்கப்படுகின்றது.


மகாஜனாவின் புகழ்பெற்ற பழைய மாணவரான, மறைந்த எழுத்தாளர் அளவெட்டி செல்லக்கண்டு முருகானந்தத்தின் பெயரில் உள்ள செல்லக்கண்டு, அவரது தாயின் பெயர் என்பது சிலருக்கே தெரியும். அவர் சார்ந்த சமூகத்தின் பண்பாட்டு மரபு அது. இந்த மரபை நாம் இழந்துவிட்டோம், இகழ்ந்தும் இருக்கிறோம். ஆனால் இன்று பிரான்சில் பாற்சமத்துவம் கோரிப் போராட்டம் நடத்தியவர்கள் தாயின் பெயரைப் பிள்ளையின் முன்பெயராக வைக்கும் உரிமையை வென்றெடுத்துள்ளார்கள். இது புதிய பண்பாட்டு அலையாக எங்களுக்கு வந்துசேரும் நாள் வெகுதொலைவில் இல்லை. இயல்பாக இருந்ததை இழந்துவிட்டு, புதிதாகத் தேடவேண்டியிருப்பது பண்பாட்டு அடிமைத்தனம்.
ஈழத்தமிழர், கண்களை அகலத்திறந்து, புலம்பெயர்ந்த நம்சோதரருடன் செம்மையான பண்பாடடு இடைத்தாக்மொன்றை நடத்தினால், பல பண்பாட்டு விழுமியங்களை நாம் உள்வாங்கிக் கொள்வதுடன் உலகளாவிய பண்பாட்டு அடையாளமொன்றையும் உருவாக்கலாம். இது அரிய சந்தர்ப்பம். எல்லோரது செழிப்பிற்கும் அவசியம். இதில் பத்திரிகை போன்ற ஊடகங்கள் செய்யக்கூடியது நிறைய உண்டு. ஈழத்தமிழர், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டின் பாதுகாவலர் நாமே என்னும் பெருமையை சற்று மறக்க வேண்டியிருக்கலாம். இலங்கையின் பிற சமூகக் கட்டுமானங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விழுமியங்கள் ஏராளம்.
இந்த உலகளாவிய போக்கும் எங்களுக்கு புதியதல்ல. சற்று மறந்திருக்கிறோம். கிரேக்கரும், உரோமரும் வந்ததும், முஸ்லீம்களாக முன்னர் தொடங்கியே அரபுக்கள் வந்ததும், சீனரும் தென்கிழக்காசிய நாட்டவர்களும் வந்ததும், நாங்கள் அங்கெல்லாம் போனதும், தென்னாசியாவின் பலபாகங்களுடனும் தொடர்பு கொண்டிருந்ததும், காலனித்துவ காலத்தில் உலக வர்த்தகத்துடன் நெருக்கமாக தொடர்புபட்டிருந்ததும், சர்வதேசக் கடற்பாதைகளின் கேந்திரத்தானத்தில் இருந்ததும், எங்களது வரலாறு - தொல்லியல் சான்றுகளை தட்டிப்பார்த்தால் தெரியும். அந்த இடைத்தாக்கங்களின் ஊடாகத்தான் எங்கள் பண்பாட்டு அடையாளம் உருவானது. யாழ்ப்பாணத்து அரசர் பாராசீக மொழியில் தன்னுடன் உரையாடினார் என்கிறார் இபின்பத்துதா. கிறிஸ்தவமும் இஸ்லாமும் அவை எழுந்த ஆரம்பகாலத்தில் இருந்தே எம்முடன் நெருங்கிய தொடர்புடையவையாய் இருந்தன. எங்களது வரலாற்றின் இந்த சர்வதேசப் பரிமாணங்கள் இன்னும் சரியாக வெளிக்கொணரப்படவில்லை. சிங்கள - பெளத்த தேசியத்துடன் போட்டி போட்டுக்கொண்டு தொன்மையை மாத்திரம் நிறுவுவதில் முனைப்பாக இருந்ததால் சொல்லாத சேதிகள் இவை. கடந்த காலங்களில் கிடைத்த தொல்லியற் சான்றுகளில் கவனிக்காமல் விட்டவற்றைத் திருப்பி ஒருக்கால் பார்த்தாலே புதிதாகப் பலவற்றைக் கூறலாம்.     இதுவரை:  18623930 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10771 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com