அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 01 April 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத்தமிழர் பண்பாட்டடையாளம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பேராசிரியர் பொ.இரகுபதி  
Monday, 16 April 2007
பக்கம் 3 of 3
புலம்பெயர்ந்தோர் செய்யவேண்டிய பண்பாட்டுக் கடமையொன்று உண்டு. கலியாணம், சாமத்தியச் சடங்கு, பிறந்தநாள் கொண்டாட்டம், கோயில் திருவிழா - இனிப்போதும் அல்லது பிறகு பார்க்கலாம். தேவை: உணவு, சுகாதாரம், கல்வி, பாற்சமத்துவம், சூழற்பாதுகாப்பு, தொடர்பு சாதன வளர்ச்சி.
சரியான உணவு என்பது இருப்பின் அடிப்படை. உணவாலும் சுகாதாரத்தாலும் மனப்பான்மையாலும் ஒரு மக்கட் கூட்டத்தின் உடலமைப்பை ஒரு தலைமுறைக்குள்ளேயே மாற்றலாம் என்பதற்கு யப்பானியர் சிறந்த உதாரணம். உலகப்போருக்கு முன் குள்ளர்கள் எனப் பெயரெடுத்திருந்த யப்பானியர் இன்று ஐரோப்பியருடன் ஒப்பிடக்கூடிய உடலமைப்புடன் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்தோர் பிள்ளைகளின் வளர்ச்சியை உள்ளுரில் யுத்தகாலத்தில் அகப்பட்டோர், அகதிமுகாம்களில் இருப்போர் பிள்ளைகளுடன் ஒப்பிட்டால் உணவின் அருமை தெரியும். உணவாலும் மனஉந்துதலாலும் வளர்ந்த நாடுகளில் பூப்பெய்தும் வயது முன்சென்றதை அனைவரும் அவதானித்திருப்பர். சரியான உணவு கிடைக்காமைக்கு வறுமையும் உணவுத் தட்டுப்பாடும் மாத்திரம் காரணமன்று. மனப்பான்மை என்பது இங்கு முக்கியமானது. உணவுக்காகச் செலவழிப்பதா அல்லது நகைநட்டு சேகரிப்பதா என்பதைத் தீர்மானிப்பது மனப்பான்மை. அது பண்பாட்டால் வருவது.
பண்பாட்டு நிறுவனங்களுக்குள் முதன்மையானது கல்வி நிறுவனங்கள். 'அன்னசத்திரம் ஆயிரம் கட்டலும்' என்ற பாரதி பாடல் எல்லோருக்கும் தெரியும். எழுத்தறிவித்தல் மாத்திரம் இன்று கல்வியல்ல. சர்வதேச சமூகத்துடன் போட்டிபோட வேண்டிய கல்வி எங்களுக்குத் தேவை. பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எங்கள் கல்வி நிறுவனங்கள் மெல்லச் செத்துக்கொண்டிருக்கின்றன. எது கல்வி என்று தெரியாததால் வந்த வினை. கல்வி, இன்று அரசின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது ஆறுதல் தரும் விடயம். ஆனால், இந்த நிலையை வியாபார நிறுவனங்களே பயன்படுத்துகின்றன.
புலம்பெயர்ந்தோரது பண்பாடு சார்ந்த கல்வித் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய இயலாத நிலையில், பிறநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வணிக நோக்குடன் இறங்கி இருக்கின்றன. மகாஜனா போன்ற பள்ளிக்கூடங்களைக் கட்டியவர்களின் மனப்பான்மையுடன் எங்கள் பிள்ளைகளுக்கு, இன்று தேவையான கல்வியைக் கொடுக்கும் நிறுவனங்கள் வரவேண்டும். இருக்கின்ற நிறுவனங்களையே புனரமைக்கலாம்.
ரியூட்டறிகளுக்கும் குறிப்புகளுக்கும் பழக்கப்பட்டுப்போன எங்கள் பிள்ளைகள் பல்கலைக்கழகம் வந்தாலும் புத்தகத்தைத் தொட அஞ்சுகிறார்கள். ஆங்கிலத்திற்கு அஞ்சுகிறார்கள். கணனிக்கும் இணையத்தி்ற்குமாவது அஞ்சாமல் இருக்கட்டும். பிறந்தநாள், சாமத்தியச் சடங்கு செலவுகளுக்குப் பதிலாக கணனி வாங்கிக் கொடுங்கள். இணையத் தொடர்பைக் கொடுங்கள். ஆங்கிலம் மட்டுமல்ல இன்னுமுள்ள உலக மொழிகளெல்லாம் இங்கு கற்பிக்கப்படவேண்டும். அடுத்த தலைமுறையில், நெருங்கிய உறவினருடன் உரையாடுவதற்கே இந்த உலக மொழிகள் தேவைப்படும் நிலையில் இருக்கிறோம். ஒரு காலத்தில் வேறு நாடுகளிலிருந்து, ஆபிரிக்காவில் இருந்தும் கூட, மாணவர்கள் யாழ்ப்பாணம் வந்து கல்வி கற்றார்கள். சர்வதேசத் தரம் வாய்ந்த கல்வியால் எம்மவர் உலகெங்கும் சென்று தொழில் பார்த்தார்கள். அந்த நிலை வரவேண்டும். இன்று பண்பாட்டு காரணங்களுக்காக இந்தியாவின் சர்வதேசப் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது போல புலம்பெயர்ந்த எமது பிள்ளைகள் இங்கு வந்து சர்வதேசக் கல்வி கற்கும் நாள் வரவேண்டும். இன்றைய போர்ச் சூழல் இதற்குப் பொருத்தமற்றதாக இருக்கலாம். ஆனால், நாளை அந்நிலை வரக்கூடிய அடித்தளம் இப்பொழுதே இடப்பட வேண்டும்.
பள்ளிக்கூடங்களுக்கு ஊடாக வரவேண்டிய மற்றொரு முக்கிய பண்பாட்டு அடித்தளம் பாற்சமத்துவம். இது இல்லாத பண்பாட்டிற்கு இன்றைய உலகில் இடமில்லை. உலகளாவிய ஈழத்தமிழ் பண்பாட்டு அடையாளத்தைக் கட்டவும் முடியாது. பாற்சமத்துவம் என்பது சமவேலைவாய்ப்பு, கல்விவாய்ப்பு, சொத்து, பொருளாதார உரிமை போன்றவை மட்டுமன்று. இவை இன்று பெரிய சிக்கல்களும் அல்ல. பால் வேற்றுமை பாராட்டாத மனப்பான்மை உருவாவதே பாற்சமத்துவம். இது பண்பாட்டால் வருவது. பள்ளிக்கூடங்களில் இருந்து தொடங்கப்படவேண்டியது.
எங்கள் கல்வி நிறுவனங்களை ஆண் - பெண் கல்வி நிறுவனங்கள் என்று பாகுபடுத்தியதில் காலனித்துவ மத நிறுவங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. ஆரம்பத்தில் பெண் கல்விக்கு வித்திடுவதற்கு அது தேவைபட்டிருந்தாலும் காலப்போக்கில், கல்வி நிறுவனங்களில் பால் பிரித்துப் படிப்பிப்பதுதான் எங்கள் பண்பாடு என்பது நாங்களே வரித்துக்கொண்ட ஒன்று. கிராமங்களில் சைவப்பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்ட பொழுது இப்பிரிப்பு இடம் பெறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். பெண் கல்வி குறித்துத் திட்டவட்டமான கருத்துக்களைக் கொண்டிருந்த பாவலர் துரையப்பாபி்ள்ளை தாபித்த மகாஜனா இதற்குச் சிறந்த உதாரணம். ஆனால் பட்டணத்து மிஷனறி பள்ளிக்கூடங்களுடன் போட்டியிட விரும்பிய இராமநாதன் துரையும் பிற்காலத்தில்  இந்துக்கல்லூரியும் பிரித்தே கற்பித்தார்கள். பால் பேதம் பாராட்டாத மனப்பான்மைக்கும், பால்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும், உலகளாவ வேண்டியதொரு சமூகத்தின் தேவைகளுக்கும், கல்விக்கூடங்களிலிருக்கும் இந்தப் பாகுபாடு இன்று அவசியமற்றது, தடையாயிருப்பது. மகாஜனாவில் படித்தவர்களுக்குக் கூட்டுக்கல்வியின் அருமை தெரியும். மனம் இருந்தால் மாற்றம் இப்பொழுதே செய்யக்கூடியது. தேவை - பொதுசன அபிப்பிராயம்.
சிதம்பரத்திற்குக் காணிகள் எழுதி மடங்கள் கட்டிவிட்ட எங்கள் சமூகத்திலிருந்து இனறு எவரும் சிதம்பரம் போவதாகத் தெரியவில்லை. தமிழ்முருகனிடம் போவதும் அருகிவிட்டது. சாயிபாபா, ஐயப்பனாவதற்கு இணங்கிவிட்ட ஐயனார், ஆஞ்சநேயர், துர்க்கை, சமயபுரம் மாரியம்மன், மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி - இவை, சமயத்தின் புதிய போக்குகள். இந்தியாவிற்கு யாத்திரை வரும் புலம்பெயர்ந்தோரில் ஒரு பகுதி சாயிபாபாவிடமும் மற்றவர்கள் சமயபுரம், மேல்மருவத்தூர், சபரிமலைக்கும் போகிறார்கள். இவற்றுக்கூடாக புதிய வர்க்க பேதங்கள், புதிய ஆதர்சங்கள், பாரம்பரிய நிறுவனங்களில் நம்பிக்கையின்மை போன்றவை வெளிப்பட்டாலும் இந்தச் செல்நெறிகளை அமைப்பியல் (Structuralism) ரீதியாக ஆராய்ந்தவர்கள், இவற்றிற்கூடாகச் சமூகத்தில் புரையோடிப்போன பால்நிலைசார்ந்த சிக்கலொன்றும் வெளிப்படுவதாகச் சொல்கிறார்கள்.
தொடர்புசாதனப் புரட்சி யுகத்தில் நாம் வாழ்கிறோம். வலையும் பின்னலுமாக எதையும் எவரும் கட்டுப்படுத்திவிட முடியாத காலம் இது. பி்ள்ளைகள் எதைப்பார்க்கிறார்கள் என்று பெற்றோர் இங்கும் அஞ்சுகிறார்கள். அங்கும் அஞ்சுகிறார்கள். எதையும் எப்படிப் பார்ப்பது என்று பெற்றோரும் பள்ளிக்கூடங்களும் சொல்லிக்கொடுக்க முடிந்தால் பண்பாட்டைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை. நீலப்படம் பார்ப்பதென்பதைவிட நீலப்படம் பார்த்துத்தான் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இளைஞர்களையும் யுவதிகளையும் வைத்திருக்கும் பண்பாட்டுவக்கிரம் கூடிய சிக்கல் தரக்கூடியது.
மகாஜனா போன்ற பண்பாட்டுப் பாரம்பரியம் உள்ள கல்வி நிறுவனங்கள் எம்மிடம் மிகக்குறைவு. மகாஜனாவின் புலம்பெயர்ந்த பழைய மாணவர்கள் நினைத்தால், இதை மீளவும் கட்டலாம். உலகளாவிய ஈழத்தமிழர் பண்பாட்டு அடையாளத்திற்கு அடித்தளமிடும் வகையில் கட்டலாம். கல்வி தனியார் மயப்பட்டு வருங்காலத்தில், அரசின் கற்கைநெறிகளுக்கு அப்பாலும் சிலவற்றைச் செய்யக்கூடிய சுதந்திரம் அரச கல்வி நிறுவனங்களுக்கும் இன்று உண்டு. இதைப் பயன்படுத்தி, சில வசதிகளையும் இன்று யாழ்பாணத்தில் கிடைக்காத, ஆனால் தேவையான கற்கை நெறிகளையும் அறிமுகப்படுத்தினால், மகாஜனா அந்தக் காலத்தைவிட சிறப்பாக வர வழியுண்டு.
ஈழத்தமிழரது பண்பாட்டு அடையாளத்தின் விரிவான பரிமாணங்களைத் தருவது இவ்வுரையின் நோக்கமல்ல. அடிக்குறிப்புகளிட்ட ஆய்வுக்கட்டுரையாகவும் இதைத் தயாரிக்கவில்லை. பண்பாட்டு அடையாளம் பற்றிய விழிப்புணர்வை இது தருமானால் அது இவ்வுரையின் பயன். இன்று, தேசத்தை வைத்துக்கொண்டோ, அல்லது தேசங்கடந்தோ, பண்பாட்டு அடையாளத்தின் அடிப்படையில், உலகந்தழுவிய சமூகத்தை எந்த மக்கட்குழுவினரும் கட்டலாம். பொருத்தமான பண்பாட்டு அடிப்படைகளுக்கூடாக அதைச் செழிப்புள்ளதாகவும் ஆக்கலாம். புதிய உலகின் சிந்தாந்தச் சூழலும் தொடர்புசாதனப் புரட்சியும் இதற்கு வாய்ப்பானவை. உண்மையில் தேவைப்படுவது ஒன்றுதான் - அது, மனப்பான்மை மாற்றம்.
இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)
 
     இதுவரை:  18624010 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 10789 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com