அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 34 arrow கனகுவின் கதை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கனகுவின் கதை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மக்ஸ்வெல் மனோகரன்  
Friday, 18 May 2007
கத்தியெடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பார்கள். கனகு துவக்கெடுத்தவன். துவக்கோடுதான் திரிந்தான். துவக்கில்லாமல் அவன் வாழவில்லை. துவக்கோடு பிறக்கவில்லையே தவிர மற்றும்படி அவனும் துவக்கும் ஒன்றாகியேயிருந்தன.
 
அவன் வேட்டைக்காரன். எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் படத்தை மட்டும் அவன் நாற்பத்தியேழு தடவை பார்த்திருக்கிறான். வெடிகார வைரமுத்துவிடம் வேட்டை பழகியவன். மடத்தல் சின்னத்தம்பியோடு காடு கண்டவன். பச்சை ஆறுமுகத்தோடு கலைப்பு வேட்டையாடியவன். கோவிந்தனிடம் பன்றியை வாட்டப்பழகியவன்.
 
பதின்மூன்று வயதில் தனியாக காட்டில் வேட்டைக்குப்போய் தனியே பன்றி சுட்டவன். காடென்றால் தொலை தூரமல்ல. காட்டின் ஒரு ஓரமாகவே அவனின் வீடிருந்தது. பன்றி அவன் வீட்டருகில் வந்தது. வந்த பன்றியை யாராவது விடுவார்களா? அவன் பன்றியைச் சுட்டான். அவனுக்கு துவக்கில் குறிபார்க்க வைரமுத்து நல்லாகத்தான் பழக்கியிருந்தார். 
 
பத்து வயதில் யாராவது துவக்கை கொடுப்பார்களா? சட்டப்படி அப்படிக்கொடுப்பதே பெரும் தப்பு. ஆனால் அந்தத் தவறை வைரமுத்து செய்தார். அவருக்கு அது தவறென்று தெரியவில்லை. தெரியாமல் செய்தால் அது தப்பில்லை என்பார்கள்.ஆகையால் வைரமுத்து செய்தது தப்பேயில்லை.
 
பத்து வயதில் துவக்கெடுத்தாலும் கனகு ஒரு தடவைகூட அதனால் எந்த வம்பிலும் சிக்கவில்லை. அதனால் வைரமுத்துவும் எந்தச் சிக்கலிலும் மாட்டவில்லை.
 
 
கனகு பெரிய வேட்டைக்காரனாக கலக்கினான். அவனைப் பெரியபெரிய ஆட்களெல்லாம் பார்த்து வியந்தார்கள். வியந்து கொண்டாடினார்கள். கொண்டாடிக் கொண்டாடியே இறைச்சியைத் தின்றார்கள்.
 
யாழ்ப்பாணத்திலிருந்து காரில் வருவார் முத்துக்குமாரு முதலாளி. முத்துக்குமாரு முதலாளிக்கு வேட்டையில் தனிருஷி. அதற்காக அவர் லீவெடுத்துக்கொண்டு தண்ணிப்போத்தல்களுடன் வருவார். இப்போதுபோல தண்ணியைக் காசுக்கு விற்காத காலத்தில் விற்ற தண்ணி அது. சுத்தமான தென்னஞ்சாராயப் போத்தல்கள் ஒரு டசின் காருக்குள்ளிருக்கும். களுத்துறை ஒறிஜினல் வடி.
 
கார்வந்து கனகுவின் வீட்டருகில் நின்றால் கனகுவுக்கு உதவியாக நின்ற சின்னக்கிளி ஓடிப்போய் காரைத்திறந்து பெட்டியைதூக்கி வந்து கொட்டிலுக்குள் வைப்பான். அவன்தான் அந்தப்போத்தல்களின் மூடியை முதலில்    திறக்கும் ஆள். அவன் ஊத்திக் கொடுத்தால்தான் முதலாளிக்குப் பத்தியப்படும். கனகு இந்த விசயத்தில் அதிகம் தலையிட மாட்டான். அவனுக்கு இதில் அவ்வளவு நாட்டமுமில்லை. முதலாளி வற்புறுத்தினால் அவர் கோவித்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக சாட்டுக்கு கொஞ்சம் எடுத்துக் கொள்வான். அதுவும் எப்போதுமல்ல. முதலாளியும் கண்டபபடி அவனை வற்புறுத்தமாட்டார்.
 
முத்துக்குமாருவைப்போல கனகுவிடம் வேறு ஆட்களும் வருவார்கள். வரும்போது ஆளாளுக்கு ஏதாவது தண்ணிப் போத்தல்களுடன்தான் வருவார்கள். சிலவேளை அந்தக் கொட்டில் வீடு பெரும் பிரபலங்களின் சந்திப்பு மையமாகிவிடும். அங்கே அப்போது அரசியல் பேசப்படும். சிலசமயம் கடும் விவாதங்கள் கூட ஏற்படும். ஆனால் எதிலும் கனகு அகப்பட்டுவிட மாட்டான். அவனுக்கு அரசியல் விளங்கும். அரசியல் தொடக்கம் ஊர் உலகத்தில நடக்கிற காரியங்களெல்லாம் அவனுக்குத்தெரியும். ஆனால் எதைப்பற்றியும் வாய் திறக்கமாட்டான்.
 
அவன் தன்னுடைய திறமையையெல்லாம் வேட்டையில்தான் காட்டினான். வேட்டை அவனுக்கு நல்ல வாலாயமாகியிருந்தது. துவக்கைத் தூக்கினால் ஏதாவதொன்றை வீழ்த்தாமல் கொட்டிலுக்குத் திரும்பமாட்டான். அப்படித் திரும்பவும் முடியாது. கொட்டிலில் அவனின் வருகைக்காக ஆட்கள் காத்திருப்பார்கள். சட்டி காத்திருக்கும். தண்ணி அடித்த வயிறு காத்திருக்கும். வெறுங்கையோடு வந்து என்ன செய்யமுடியும். காத்திருப்பவர்களை ஏமாற்றமுடியுமா? அவனை நம்பியல்லவா காத்திருக்கிறார்கள்.
 
ஒருநாள் அவன் ஆறு பன்றிகளைச் சுட்டான். அன்றிரவு தொடக்கம் அடுத்த நாள் பின்னேரம் பொழுது இருளும்வரை நாரி உழைய உழைய பன்றிகளை வாட்டி, பங்கு போடவேண்டியிருந்தது. இரண்டு பன்றிகளை விற்றான். இரண்டைப் பங்காக்கினான். ஒன்றை வாட்டி வத்தல் போட்டான். அன்றைக்கு உதவிக்கு சின்னக்கிளியோடு வசந்தனும் அருளப்புவும் நின்றார்கள். அருளப்புமட்டும் அன்று ஒருபோத்தலை உள்ளுக்குள்ளே தள்ளினான். நெருப்போடு நிற்பவன் அப்படிக் குடித்தால்தான் நிற்கமுடியும் என கனகு நினைத்தான். சுட்ட பன்றியை வாட்டவேணுமே. வாட்டி வத்தல் போடவேணுமே. போடாமல் நாறவிடமுடியுமா? 
 
இப்படி எக்கச்சக்கமாக பல நாட்களில் உருப்படிகள் சிக்கியிருக்கின்றன. சிலவேளை கொட்டிலுக்குள் ஆட்கள் காத்திருக்கும்போது கனகு உருப்படிகளுக்காக காட்டில் அலைந்திருக்கிறான். ஒரு உருப்படியைக்கூட கண்ணால் பார்க்கவே முடியாமலிருந்திருக்கிறது. கடவுளே இதென்ன சோதனையா? அப்போது இந்தத் தொழிலே வேண்டாம் போலிருக்கும். ஆனால் முடியுமா? அவன் விட்டாலும் அவனுடைய வாடிக்கைக்காரர் விடுவார்களா?
 
பதின்மூன்று வயதில் தனியாக நின்று பன்றியைச்சுட்டவன். எத்தனைபேர் அதைப்பார்த்தும் கேட்டும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.   இப்போது தொழில் வாய்க்குதில்லையென்று சொல்ல முடியுமா?
 
எப்போதாவது  இரண்டு நாட்களுக்கு ஒரு மெல்லிய பஞ்சிக்குணம் வரும். அப்போது தலையிடிக்குது என்று பேசாமல் படுத்து விடுவான். அந்த நேரம் கனகுவிடம் வாற ஆட்களை சின்னக்கிளிதான் கவனிப்பான். சின்னக்கிளியும் வேட்டைக்காரன்தான். கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்களே. அதுமாதிரி. அவன்தான் வேட்டைக்குப்போவான். ஆனால் அவனுடன் கூடப்போகிறவர்கள் காதைப்பொத்திக் கொள்ளவேணும். அந்த அளவுக்கு அவன் தானே காட்டின் ராஜா என்கிற மாதிரி கதைவிடுவான். கனகு நிற்குமிடத்தில் வாய்திறக்காத பிராணியல்லவா. சந்தர்ப்பம் கிடைக்கும்போது   விட்டுவைப்பானா.
 
இண்டு நாளின்பிறகு பழையபடி காடும் கனகுவும் தான். சின்னக்கிளிக்கு கனகுவின் நிலைமையெல்லாம் தெரியும். அதுக்குத்தோதாக நடந்து கொள்வான். காடுபழகியவன். அப்படியான ஆள்தான் இந்தத் தொழிலக்குத்தோது. 
 
கனகுவின் இறைச்சிக்காக ஏங்காதார் யாருண்டு? விதவிதமாக சுட்டுத்தள்ளிக்கொண்டேயிருப்பான். உக்கிளான் வேணுமா, முயல் வேணுமா, முள்ளம்பன்றி வேணுமா காட்டுக்கோழி, செங்கால் நாரை, ஆலா, பன்றி, மான், மரை எதுவென்றாலும்.
 
சுண்டிக்குளத்திற்கு வலசைவரும் கூழைக்கிடாக்கள் ஒரு சீசனில் கனகுவிடம் மாட்டிவிடும். ஒரு கூழைக்கிடா ஆறு கிலோ இறைச்சி தேறும். காட்டுக்கோழியில் ஒன்று ஒன்றரைக் கிலோதான் வலிக்கமுடியும். புறாவில் இப்படி நிறையெல்லாம் கிடையாது. ஆனால் புறா இறைச்சி தனி ருஷி. அதைவிட ருஷியானது கானாங்கோழி. அது குளக்கரையோரக் காடுகளிலதான் கூட்டமாக வாழும். இதேமாதிரித்தான் காடை, கௌதாரி என்றும் சிறுபறவைகளுண்டு. ஆக்காத்தி முட்டை சாப்பிட்டிருக்கிறீர்களா? அபபடியொரு முட்டையின்   ருஷிசியை உங்களின் வாழ்நாளில் உங்கள் நாக்கறிந்திராது. நிலம்பதுங்கியின் முட்டையும் அப்படித்தான்.
 
குளக்கரையில் வளையெடுத்து மறைவாக முட்டையிட்டிருக்கும் அவை. நாயோ, பாம்போ, நரியோ    கண்டு விடாதபடி கஞ்சலையும் குப்பைகளையும் இழுத்து மூடியிருக்கும். ஆனால் கனகு வளையைக்கண்டு பிடித்து விடுவான். ஆனால் எப்போதும் அந்த முட்டைகளை எடுக்கான். பாவம் பறவைகள் என்ற இரக்கம். தாய்ப்பறவையின் தவிப்பை அவன் அறிவான்.   பின்னாட்களில் பறவை முட்டைகளை எடுப்பதையே அவன் விட்டுவிட்டான்.
 
கனகு சீசனுக்கேற்ற மாதிரி தொழிலை மாற்றி வைத்திருந்தான். அதுக்குத்தோதாக எந்த வேட்டைக்கு எந்தத் துவக்கென்று தனித்தனியாக மூன்று துவக்குகள் அவனிடமிருந்தன. ஒன்று பெல்ஜியம்  à®’றிஜினல் துவக்கு. அதுக்கு பத்தாம் நம்பர் தோட்டா போடவேணும். மற்ற இரண்டும் கனகுவின் தாயாரிப்புகள். இன்னும் சரியாகச் சொன்னால் அவற்றை கனகுவும் பயில்வானும் இணைந்தே தயாரித்திருந்தார்கள். உள்ளுர்தயாரிப்பு.
 
பயில்வான் இந்தமாதிரி விசயத்தில் தேர்ந்த ஆள். ஏறக்குறைய தன்னுடைய அந்தச்சிறிய கம்மாலையில் இதுவரையில் முப்பது துவக்குக்கு மேல் செய்திருப்பான். அதனால் அவனுக்கு எப்பவும் இறைச்சிக்கே பஞ்சமில்லை. அவனிடம் துவக்கை வாங்கியவர்களில்   யாராவது ஒருவர் எப்படியும் அவனிடம் இறைச்சியுடன் வருவார்கள்.
 
செய்த துவக்குகளில் ஏதாவது பிரச்சினையென்றால் அவனிடம்தானே வரவேணும். அப்படிவரும்போது சும்மாவரமுடியுமா.
 
அதுமட்டுமல்ல அவன்செய்த துவக்கை வைத்துத்தானே தொழிலைச் செய்கிறார்கள். அவனுக்கு மட்டும் அதில் பங்கில்லையா.
 
வருகின்ற பங்கிறைச்சியுடன் அரைப்போத்தலை உள்ளே தள்ளி அன்றைய பொழுதைப் போக்குவான். ஆனால் தொழில் படுக்காது. கம்மாலையை அவன் மூடிய நாளே இல்லை.
 
அவனுடைய அந்தக் கம்மாலையை நம்பித்தான் கத்தி அடிக்கிறதுக்கு ஆட்கள் வருகிறார்கள். அரிவாளைத்தீட்ட வருகிறார்கள். கத்தி, கோடாரி, மண்வெட்டி, சத்தகம், புல்லுக்கிண்டி, உழவாரம், கொக்கைச்சத்தகம், குப்பைவாரி, பாக்குவெட்டி என எல்லாத்தையும் அந்தக்கம்மாலையில் வைத்தே பயில்வான் அடித்துத்ள்ளியிருக்கிறான். 
 
நெருப்பைத் தின்று தின்றே அவன் வளர்ந்தான். இரும்பைக்காய்ச்சியே அவன் வித்தைகள் செய்தான். வில்லுத்தகடுகளில் அவன் அடித்த கத்திகள் இந்த உலகம் பூராகவும் போயிருக்கிறது. லண்டனில் இருந்து வந்த கந்தையரின் ராசன் மட்டும் ஆறு கத்திகளை வாங்கிப்போயிருக்கிறான். கனடாவுக்கு யோகனும் றதியும் ஆனந்தனும் வாங்கிப்போயிருக்கிறார்கள். இன்னும் நோர்வே, சுவிஸ், டென்மார்க், பிரான்ஸ் ஜேர்மனி என்று பல இடங்களுக்கும் பலரும்வந்து வாங்கிப்போயிருக்கிறார்கள்;.
 
கத்திகளில்தான் எத்தனை வகையுண்டு. காட்டுக்கத்தி. வெட்டுக்கத்தி. மீன் வெட்டும் கத்தி. அரிவாள் கத்தி. புல்லுக்கத்தி. கொடுவாக்கத்தி. நீர்வேலிக்கத்தி. வேட்டைக்கத்தி. வில்லுக்கத்தி. கனகுவிடம் பயிலவான் அடித்த ஆறு கத்திகள் உண்டு. 
 
சுற்றுச்சூழல் ஆட்கள் கனகுவைக்கண்டால் ஏராளம் வழக்குகளைத் தொடுத்துவிடுவார்கள். பறவைகள் விலங்குகளை அழிப்பதைத் தடுப்பதற்கு ஏராளம் சட்டங்களுண்டு. கனகுவுக்கு அதெல்லாம் தெரியாது. அவன் இதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு அடடாத்துப் பண்ணவில்லை. 
 
வேட்டையாடி எப்போதும் ஒரு சாகசக்காரனே.  அந்தச்சாகசம் ஒருபோதும் துவக்கைக்கீழே வைக்கவிடாது. வெல்,வெல் என்றுதான் அது உள்ளுக்குள்ளே தூண்டிக்கொண்டிருக்கும். எத்தனை வெற்றிகளைப் பெற்றாலும் அந்தத்தாகம் அடங்காது. அது தினவெடுத்தக் கொண்டேயிருக்கும்.
 
அதுதான் கனகுவுக்கும் நடந்தது. அவனிடமிருந்த துவக்குகளால் அவன் எத்தனையோ உருப்படிகளைச் சுட்டுப்போட்டிருக்கிறான். அந்தத் துவக்குகளால் அவன் பல சாகசங்களை பலருக்கு நிகழ்த்திக் காட்டியிருக்கிறான். அவனுடைய வேட்டையின் நுட்பத்தைப் பார்த்தே பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். குறிதப்பாத வெடி. அத்தனை சீரான துவக்குகள். துவக்குகள்தான் அப்படி சீராக இருந்தனவா. அல்லது கனகுதான் துவக்குகளைச் சீராக்கி வைத்திருந்தானா. அவன் தேர்ந்த வெடிகாரன். அனுபவமும் நிதானமும் அவனை அப்படியாக்கியிருந்தன.
 
ஆனாலும் அவனுக்கு தாகம் தீரவில்லை.
 
ஒருநாள். அன்று மழை பெய்திருந்தது. பின்னேரம் மெல்லிய வெயில் பொன்னிறமாக எறித்தது. இந்த நேரம் வேட்டைக்குப்போகலாம். வெட்டைகளில் மான்கள் வந்து மிதக்கும். மழை ஓய்ந்தபிறகு வெயில்காய அவை அப்படி வரும். அவனுக்கு அதெல்லாம் தெரியும். எப்போது எங்கே என்ன உருப்படிகள் வருமென்று அறியாமல் ஒரு வேட்டைக்காரனா? 
 
அன்று சின்னமணியும் இல்லை. அவன் மாடுகளுக்கு வைக்கலேற்றப்போனவன.  à®‡à®©à¯à®©à¯à®®à¯ திரும்பவில்லை. வருவதற்கு இன்னும் ரண்டு நாளாவது ஆகும். அதுவரை பொறுத்திருக்கமுடியுமா. நல்ல பொழுது. அதை வீணாகக்கழிய விடலாமா. அருளப்புவைக் கூப்பிடலாம். ஆனால் அவர் வீட்டில் நிற்பாரோ தெரியாது.
 
இப்போது வயல் வெட்டுக்காலம். எல்லாரும் வயலோடும் வீட்டோடும்தான் நிற்பார்கள். ஆனால் மழை பெய்திருக்கிறது. வயலில் வேலை செய்யமுடியாது. இப்போது வீட்டில்தானிருப்பார். அப்படியென்றால் அருளப்புவைக்கூப்பிடலாம் என்று அவன் நினைத்தான்.
 
அதற்கிடையில் அவன்ர கொட்டிலுக்கு முன்னே வந்து நின்றது ஒரு வாகனம். யாருடையது? அவன் கொட்டிலுக்குள்ளிருந்து தலையை நீட்டிப்பார்த்தான். அவனுடன் பழகியதில்லை. புதிசு. ஆனால் அதைப்பல தடவை பார்த்திருக்கிறான்.
 
மூன்றுபேர் குதித்தாரர்கள். ஒருவன் மட்டும் ஆறுதலாக இறங்கி வந்தான். இன்னொரு ஆள் இறங்கவேயில்லை. 
 
'அண்ணை, கனகண்ணை' நிக்கிறாரோ என்று சற்றுத்தயங்கி ஒருவன் கேட்டான். எல்லோருடைய கைகளிலும் துவக்குகள். படையினர் வைத்திருப்பதைப்போல. எல்லாம் புதுசு. கனகுவிடம் இருப்பதெல்லாம் பழசு. இவை முழுப்புதுசு. இப்பதான் பெட்டியைத்திறந்து   எடுத்துக்கொண்டந்ததுபோல பளபளத்துக்கொண்டிருந்தன. கனகுவுக்கு இந்தத் துவக்குகளைப்பற்றித் தெரியும். அவன் அவற்றைத் தூக்கிப் பார்த்திருக்கிறான். அதை வைச்சிருக்கிற பெடியளோடை பழகியிருக்கிறான். ஆனால் ஒருபோதும் அவற்றால் அவன் சுட்டுப்பார்த்ததில்லை. 
 
கைகளில் அப்படிப் புதுத்துவக்குகள் இருந்தாலும் கனிவோடுதான் அவனை விசாரித்தார்கள். 
 
'நிற்கிறார்' என்றபடி வெளியே வந்தான்.
 
வந்தவர்களில் இரண்டுபெருக்கு கனகுவை நல்லாத்தெரியும். அவன் வீட்டுக்குள்ளிருந்தபடியால் அவர்களால் அவனை அடையாளம் காணமுடியவில்லை. 
 
இப்போது கண்டுவிட்டார்கள். கனகுவுக்கும் அவர்களைத்தெரியும். அவர்களுக்கு மகிழ்ச்சி. 
 
'மழைபெய்ஞ்சு விட்டிருக்கு. வேட்டைக்குப்போகலாம் எண்டு யோசிக்கிறம். நீங்கள் வந்தா நல்லாயிருக்கும்.' 
 
இது அவனுக்குப் புது அனுபவம். ஆசைப்படுகிற பெடியள். கூட்டிக்கொண்டு போகலாம். ஆனா இந்தமாதிரி நேரத்தில சின்னமணி நின்றால் வலு உதவியாயிருக்கும். அவனில்லையே,   என்ன செய்வது? பரவாயில்லை. தனியாகப்போவோம்.
 
அவன் சம்மதித்தான். தன்ர துவக்கை எடுத்து சரிபார்த்து தோளில் மாட்டினான். இடுப்புப்பட்டியில் மூன்று தோட்டாக்கள். ஒன்று மட்டும்தான் புதிசு. மற்றதெல்லாம் அடைச்சது. கையால் அவனே மருந்தடைத்தது. ஆறு தீப்பெட்டி மருந்தை   உருத்திக்கொட்டி சைக்கிள் குண்டுகளை அதற்குள் இட்டு நிரப்பி அடைத்தது. இப்படி அடைக்கும்போதுதான் கணபதிப்பிள்ளைக்கு கைபோனது. லோகன் கண்ணில்லாமல் இருக்கிறான். ஆபத்தான வேலைதான். வேட்டை என்றால் சும்மாவா?
 
ஜீப்பில் ஏறினான். அவனை முன்னுக்கே இருத்தினார்கள். இப்போது ட்றைவர் மாறிவிட்டான். ஜீப் சீறியது. கனகு வழிகாட்ட அது சொன்னபடி காட்டில் வளைந்து நெளிந்து போய்க்கொண்டிருந்தது.
 
வேட்டைத்திடலில் நின்றது ஜீப். இறங்கி கனகு முன்னே நடந்தான். பின்னால் அவர்கள். அநேகமாக அவன் எப்போதும் நடந்து வருகிற காட்டுக்குள் இன்று ஜீப்பில் வந்திருக்கிறான். முன்னர் சிவலிங்கத்திடம் ட்றக்ரர் நின்றபோது அதில்   வந்திருக்கிறான். ட்றக்ரர் வெளிச்சத்தில் கண்வெட்டாமல் சிக்குகிற மான்களைச் சுடுவது தனி ரேஸ்ற். அப்படியே வெளிச்சத்துக்கு கண்வெட்ட முடியாமல் மான்கள் திகைத்துப் போயிருக்கும். அதுவும் கிளையல்லவா. 
 
சிவலிங்கம் ட்றக்ரர் எடுத்ததே வேட்டைக்குத்தான் எண்டு ஊரில் கதைகூட அபபோது அடிபட்டது. அந்தளவுக்கு அது கனகுவுடன் காட்டில் ஓடியது. பாவம்   சிவலிங்கம். அவன்ர கடைக்கு பொம்மர் அடிக்கேக்க ட்றக்ரரும் சேர்ந்து அழிஞ்சுபோச்சு. இது சிவலிங்கத்தைவிடவும் கனகுவுக்குத்தான் சரியான கவலையாக இருந்தது. 
 
வேட்டைக்கு ட்றக்ரர் தோதான வாகனம். தரவையில் மான் கூட்டத்தையோ, பன்றிக்கூட்டத்தையோ கண்டால் ட்றக்ரரால் கலைக்கலாம். வழிமறித்தால் அப்படியே அசையாமல் கிளை நிக்கும். அப்படி ருஷி கண்டவனுக்கு அதை இழப்பதென்பது சாதாரணமல்ல.
 
இப்போது வெட்டையின் எதிர்ப்பக்கத்துக்கு வந்துவிட்டார்கள்.
இனி அவதானம் வேணும். எல்லோரின் கையிலும் துவக்கிருக்கு. நிதானமாக இருக்கோணும். அவசரப்படக்கூடாது. சற்று நின்று கனகு அடுத்து என்ன நடக்கவேணும் எண்டு விளக்கம் சொன்னான். காட்டுக்கு அவன்தான் ராஜா. அவன் சொல்வதைக்கேட்க வேணும். அதற்காகத்தானே அவனை அழைத்து வந்திருக்கிறார்கள்.
 
அடுத்த அரைமணி நேரத்தில் கனகு எதிர்பார்த்தபடியே ஒரு மான் கிளை. பெடியளுக்கு அவசரம். அவர்கள் போராளிகள். சுடுவதற்குப் பயிற்சியெடுத்தவர்கள். வெடிவைப்பதில் தேர்ந்தவர்கள். எல்லோரின் கையிலும் துவக்கிருக்கிறது. ஆனால் யார் இப்போது சுடுவது. கனகு சுட்டால் ஒரு மான்தான் விழும். நிற்பதோ கிளை. பதினைந்து உருப்படிகள் இருக்கும். விடலாமா. 
 
பொறுப்பாக வந்த போராளி தான் வெடிவைக்கலாமா என்று கேட்டான். கனகு குட்டிகளைக் காட்டினான். குட்டிகளுக்கு வெடி படக்கூடாது.
 
இப்போது கனகுவும் சுடுவது. அவர்களில் ஒருவரும் சுடுவது என்று தீர்மானம். சட்டென்று ஏனோ முடிவை மாற்றி அவர்கள் கனகுவையே சுடும்படி சொன்னார்கள். அவர்களையும் சுடும்படி அவன் வற்புறுத்தினான். அவர்கள் அவனையே சுடும்படி சொன்னார்கள். ஆனால் தங்களின் துவக்கை அவனிடம் கொடுத்தார்கள். அவன் துவக்கோடு பழகியவன். ஆயிரம் தடவைக்குமெல் வெடிவைத்தவன். ஆனால் இது புதுசு. பழக்கமில்லாததது. தயங்கினான். வேண்டாமென்றான். ஆனால் உள்ளுர ஒரு தாகமிருந்தது. வாய்த்திருக்கிறது சந்தர்ப்பம். விடுவதா? அவர்கள் ஊக்கப்படுத்தினார்கள். பார்க்கலாம். ஒருகைபார்த்துவிடலாம்.
 
கனகு ஒரு துவக்கைக் கையில் வாங்கினான். முந்தி அதனால் அவன் சுட்டுப்பார்க்கவில்லை என்றாலும் அதன் பொறிமுறையை அறிந்திருந்தான். இப்போதும் அதை விளக்கினார்கள்.
 
அதுவொரு புது அனுபவம். கொஞ்சம் பாரமாக இருந்தது. தூக்கி நிமிர்த்தி குறி பார்த்தான். எதிரே மான்கிளை. துல்லியமாக குறி தெரிகிறது. யார் துரோணர். யார் அருச்சுனன்.
 
இப்போது சின்னமணி நின்றிருக்கவேணும். கனகு ஒரு போர்வீரனைப்போல நின்ற இந்தக்காட்சியை அவன் தன்வாழ்நாள் முழுக்க வாடிக்கையாளர்களுக்கு சொல்லிக்கொண்டேயிருப்பான். 
 
தீர்ந்தது வெடி. ஒன்றல்ல இரண்டல்ல. பத்துப்பதினைந்துக்கு மேல். ஒரே அழுத்தலில் தீர்ந்து விட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை.
 
கனகுவுக்கு மெல்லியதாக உடம்பு ஆடியது. ஒரு கணம். ஒரேயொரு கணத்தில் ஏழுமான்களும் இரண்டு குட்டிகளும் கண்ணெதிரே துடித்தன. கனகு இதை எதிர்பார்ககவில்லை. ஏன் ஒருவருமே இதை எதிர்பார்க்கவில்லைத்தான்.
 
எது நடக்கக்கூடாது என்று எதிர்பார்க்கப்பட்டதோ அது நடந்துவிட்டது. இனியென்ன செய்யமுடியும். இப்போது கனகுவின் இதயம் நடுங்கியது. வார்த்தைகள் வரவில்லை. ஏதோ குற்றத்தைச் செய்துவிட்டதாக உணர்ந்தான்.
 
கூடநின்ற அவர்களும் ஒன்றும் பேசவில்லை. ஒருகணம் எல்லாமே ஸ்தம்பித்து விட்டது. வேட்டைக்கு வரும்போதிருந்த உற்சாகம் முற்றாக வடிந்துவிட்டது. இனியெதுவும் செய்யமுடியாது.
 
மான்கள் வண்டியில் ஏற்றப்பட்டன. குட்டிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. அதுதான் பெருஞ்சங்கடத்தைக் கொடுத்தது. யாருக்கும் வேண்டாமென்றால் அவை ஏன் சுடப்பட்டன. அவற்றை எடுத்துச்செல்லவும் முடியாது. விட்டுப்போகவும் முடியாது. என்னசெய்வது.
 
அது தீர்மானங்கள் செய்யமுடியாத கணம். தன்வாழ்நாளில் அவன் இப்படியோரு பெரும் துன்பத்தில் சிக்கியதில்லை. அவன் இன்று வேட்டைக்கு வருவதற்கும் திட்டமிட்டிருக்கவில்லை. அதற்குத்தோதான சூழலும் இருக்கவில்லை. ஆனால் இப்போது எல்லாம் நடந்து விட்டன. 
 
அந்தக்கணத்தை எப்படிக் கடப்பதென்று யாருக்கும் தெரியவில்லை. வண்டியை மெல்லச் சாரதி நகர்த்தினான். ஆனாலும் அந்தக்குட்டிகள் அங்கே தனியாகக் கிடந்தன. அந்தக்காட்டில் இப்போது அந்தக் குட்டிகள் மட்டும்தான் மிஞ்சியிருப்பது போலிருந்தது. செய்யப்பட்ட குற்றம் கண்முன்னே சாட்சியாகத் திரண்டு கிடக்கிறது.
 
 
எல்லோரிடமும் எல்லா ஞாபகங்களும் அழிந்து விட்டன. அந்தக்குட்டிககள்தான் இனிக் காலகாலத்துக்கும் நினைவில் மிஞசப்போவதைப்போலப்பட்டது.
 
பல்லைக்கடித்துக்கொண்டு, மனதை அடக்கியவாறு அந்தக் குட்டிகளை ஒரு ஓரமாக சிறு பற்றையொன்றின் மறைவில் தூக்கிப்போட்டான். கைகள் நடுங்கின. தன்னுடைய மனம் அதற்குமுன் ஒருபோதும் அப்படிப் பதறிதை அவன் உணர்ந்ததில்லை.
 
வாகனம் திரும்பி வந்துகொண்டிருந்தது. ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை. போகும்போதிருந்த உற்சாகம் திரும்பும் போதில்லை. அதைக் காடுதின்று விட்டது. வாகனத்தில் உருப்படிகள் தாராளமாக உண்டு. அதுகூட மகிழ்ச்சியை அளிக்கவில்லை.
 
கொட்டிலுக்கு முன்னே ஜீப் நின்றபோது அதிலிருந்த மூத்த போராளி இறங்கிவந்து கனகுவிடம் சொன்னான்  
 
'அண்ணை, ஆரும் எதிர்பார்க்கேல்லை. அப்பிடி நடக்குமெண்டு. அப்பிடி நடக்க வேணுமெண்டும் ஆரும் விரும்பேல்லை. ஆனா நடந்துபோச்சு. எங்களுக்கொண்டு விளங்கீட்டுது. இனிமேல் ஆரும் இப்பிடி வேட்டை ஆடக்கூடாதெண்டு.'
 
இது நடந்து கொஞ்ச நாளில ஒரு பொது அறிவிப்பைக் கனகு கேள்விப்பட்டான். காட்டில் வேட்டை ஆடுவதற்கு புது நடைமுறைகளும் விதிமுறைகளும் வந்திருந்தது. அதில் மான் மரை போன்ற உருப்படிகளைச் சுடக்கூடாதென்றும் சொல்லப்பட்டிருந்தது.
 
கனகுவுக்கு இப்போதுதான் ஏதோ ஒரு ஆறுதல் ஏற்பட்டது போலிருந்தது. அவன்ர தொழில் படுக்கப்போகிறதென்று அவன் கவலைப்படவில்லை. பிழைப்பதற்குத் தொழிலா இல்லை இந்தப்பூமியில். சின்னமணி பிழைக்கவில்லையா. அருளப்பு வாழவில்லையா.
 
அவன் பிறகும் வேட்டைக்குப் போனான். துவக்கோடுதான் திரிந்தான். தொட்டில் பழக்கத்தை லேசில் விட்டுவிட முடியுமா. ஆனால், மறந்தும் தவறியும் அவன் விதிகளைக் கடக்கவில்லை. விதிமுறைப்படியே வேட்டை ஆடினான். மூன்று துவக்குகளில் ஒன்றைக்கூட அவன் யாருக்கும் விற்கவில்லை. அவனைத்தேடி பிறகும் அவனுடைய ஆட்கள் வந்தார்கள்தான். கொட்டிலில் கலகலப்பும் இருந்தது.
 
 
ஒருநாள் கனகு எங்கோ போய் விட்டுத்திரும்பினான். அவனும் அவனுடன் கூடவே இன்னொரு கூட்டாளியும். எதிரேவந்த வாகனமொன்று அவர்களை மோதியது. யாரும் எதிர்பார்க்கவில்லை. கனகு அந்த இடத்திலேயே பலியானான். யாரும் எதிர்பார்க்காத சாவு அது.
 
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பார்களே. ஆனால் கனகுவின் சாவு இப்படித்தான் நிகழ்ந்தது. அவனுடைய கொட்டிலில் மூன்று துவக்குகளையும் சின்னமணியும் அருளப்புவும் பங்கு போட்டுக்கொள்வார்கள். அதிலும் அந்த பெலஜியம்    ஒறிஜினல் துவக்கை யார் எடுப்பார்கள்.
 
இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(7 posts)

மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 15:06
TamilNet
HASH(0x559f03e19478)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 15:06


புதினம்
Thu, 28 Mar 2024 15:06
















     இதுவரை:  24712715 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5646 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com