அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தாசீசியஸ் நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கானா பிரபா  
Monday, 04 June 2007
பக்கம் 4 of 8

கானா பிரபா: இதே வேளை இன்னும் பல மேடையேற்றங்கள்  குறிப்பாக எந்தையும் தாயும், சிறிசலாமி போன்ற நாடகங்களையும்  மேடையேற்றியிருக்கின்றீர்கள். அந்த அனுபவங்களையும்  சொல்லுங்களேன்.?

தாசீசியஸ்: குறிப்பாக நான் இலங்கையிலே எடுத்துக்கொண்டால்  ஞானம் இலம்பேட்டின் 'பிச்சைவேண்டாம்' ரசியத் தழுவல் நாடகம்.  அதை மேடையேற்றும் பொழுதும் கவனமாகத்தான் இருக்கவேண்டி  இருந்தது. ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் சிங்கள நாடகங்கள்  எல்லாம் தழுவல் நாடகங்களையும், மொழிபெயர்ப்பு நாடகங்களையும் மேடையேற்றிக் கொண்டு தங்களுடைய சுயத்தை இழந்த காலமாக   இருந்தது. ஆனால் தமிழ் நாடகங்கள் அப்படியல்ல, எங்களுடைய  நாடகங்களில்  நவீனத்துவம் இல்லை,  மேடைநிகழ்ச்சிகள் இல்லை  என்றாலும் கூட எங்களுடைய சுயம் தமிழ் மக்களுடைய  நாடகங்களின் சுயம், நாங்கள் கடன் வாங்காத ஒரு நிலை எங்களிடம் இருந்தது. தமிழ் நாடகங்களில் ஏதோ ஒரு வகையில் அவை பேணி  காப்பாற்றப்பட்டு வந்தன. ஆதலால் ஒரு தழுவல் நாடகத்தையோ  அல்லது ரசிய நாடகத்தையோ கையாள்வதில் மிகக் கவனமாக  நாங்கள் இருக்க வேண்டியதாக இருந்தது. நமது மொழி,  மேடையமைப்பு இவற்றில் கூட எங்களுடைய  வடிவங்களுக்கூடாகத்தான் மேடையேற்ற வேண்டியிருந்தது.  ஏனென்றால் ரசிய கலாச்சார அதிகாரி அந்த நாடகத்தைப்  பார்ப்பதற்காக வந்தவர் கூறினார். நாங்கள் பல இலட்சம் கொட்டி  மேடையேற்றுகின்ற ஒரு நாடகத்தை  நீங்கள் நாலு தடிகளுடன்,  இரண்டு சாக்குத் துண்டுகளுடன், இரண்டு மூன்று படுக்கை  விரிப்புக்களுடன் மிக அழகாக நடத்திவிட்டீர்கள். இந்த நாடகத்தை  எங்கேயும் கொண்டு போகலாம். மேடைப் பொருட்களைக்கூட மடிச்சு  ஒரு வண்டியில் வைத்துக் கொண்டுபோகலாம். நாங்கள் அங்கே  பெரிய லொறிகளைப் பிடித்துத்தான் கொண்டுபோக வேண்டும். மிக  நேர்த்தியாக இருந்தது என்று அவர் கூறியிருந்தார்.
 
அதன்பிறகு எனக்கு ஒரு பெரிய திறவுகோலாக என்னுடைய நாடக  வாழ்க்கையில் உதவி புரிந்தது 'கந்தன் கருணை'. அது என்.கே.  ரகுநாதனுடைய மூலக்கதை. அம்பலத்தாடிகளுக்காக  இளையபத்மநாதன் காத்தவராயன் மெட்டில் எழுதிய அந்நாடகத்தை  அனைவரும் பார்க்கக்கூடிய, இரண்டு மணித்தியாலத்திற்கு  நடக்கக்கூடிய ஒரு மேடை நாடகமாக சுருக்கி அமைப்பதற்கு  அவர்கள் அனுமதியைத் தந்தார்கள். அந்த நாடகத்தில்தான் நான் ஒரு துணிச்சலான காரியத்தைச் செய்தேன். அதாவது யாழ்ப்பாணக் கூத்து  வடிவில் வடபாங்கு, தென்பாங்கு மன்னார் மாதோட்ட வடபாங்கு  வடிவம், மட்டக்களப்பு வடிவங்கள், காத்தவராயன், மலையக  வடிவங்கள் இவைகள் எல்லாவற்றையும் கலந்து கண்டிய  நடனத்தையும் சேர்த்து எங்கட கூத்தாட்டங்களையும் சேர்த்து  நாடகத்தை தயாரித்தேன். அங்கே மௌனகுருவின் பங்களிப்பு  குறிப்பிடத்தக்கது. அவர் நடிகனாக வந்தபொழுது அதாவது  அந்நாடகத்தில்  அவர் கந்தனாக நடித்தார். அவர் எங்களுக்குத் தந்த  ஆட்டப் பயிற்சியை, எல்லோரும் கற்றோம். இதில் அவர் பாடல்களும் எழுதினார், அத்துடன் முருகையன் எழுதினார். கவிஞர் சிவானந்தன்  எழுதினார். நா.சுந்தரலிங்கம் எழுதினார், இளையபத்மநாதன் எழுதினார், சண்முத்துலிங்கம் எழுதினார், தாசீசியஸ் எழுதினார்.  இப்படியெல்லாரும் கூடி நாங்கள் கட்டுக் கட்டாக எழுதி நாடகத்தைக் கொண்டுவந்த பொழுது பலர் இந்த நாடகம் சரிவருமா என்று  கேட்டார்கள்.  நான் அவர்களுக்குகூறியது எதிர்காலத்தில் நாடகம்  தனியொருவர்தான் அமர்ந்து எழுதவேண்டும் என்றில்லை. நாடகம்  எழுதும்போது ஒரு பிரிவாக,  கூட்டாகச் சேர்ந்திருந்து எழுதும்போது  தான் மிகவேகமாக நாடகங்கள் வரும் என்றேன். அந்த நேரத்தில்  நான் கூறியதை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கந்தன்  கருணை அதை வெற்றியென்று காட்டியது. அங்கே மட்டக்களப்பு  ஆட்டவடிவம், மன்னார் ஆட்டவடிவம், யாழ்ப்பாணத்துச்  ஆட்டவடிவம் இன்னும் காத்தவராயன் நடை இவைகள் எல்லாம் வந்து சேர்ந்தது.  கண்டிய நடனம் வந்து சோந்தது. இவைமூலம் ஒரு தேசிய நாடக  வடிவத்துக்கான ஆரம்ப புள்ளியிடப்பட்டது என்றும் விமர்சகர்கள்  கூறினார்கள். அது எனக்கு ஒரு கண் திறப்பாக இருந்தது. என்னுடைய நாடக வளர்ச்சிக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்  பின்னர் பொறுத்தது போதும் என்ற நாடகம். அந்த நாடகம் நான்  எழுதியதுதான். நான் தயாரித்ததுதான். அது ஐனாதிபதி விருது,  நடிகர்களுக்கான விருது பிரான்சிஸ் ஜெனம் இப்படியாக பல  விருதுகளை அந்த நாடகம் பெற்றது.  ஒரு நவீனநாடகத்தின் வழியே  ஒரு கருத்தைச் சொல்லுவதற்கு எங்களுடைய கூத்து வடிவங்களை  எவ்வளவு சிறப்பாக  கையாளலாம் என்பதை காட்டியது. இவைகளை  மனதில் வைத்துக்கொண்டுதான் நான் எழுதினேன். அது சிறப்பாக  வந்ததோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது. அல்லது என்ன  பாதிப்பை ஏற்படுத்தியதோ என்றும் எனக்குத் தெரியாது. ஆனால்  விருதுகளைப் பெற்றது அது ஒன்றுதான். அதேவேளையில் எங்களின்  காத்திரமானதொரு நாடகப் பண்புகளை, மரபான கூத்துப் பண்புகளை  மிகச் சிறப்பாக 'புதியதொரு வீட்டிலும்' கையாண்டேன். ஏனென்றால்  அந்த நாடகத்தை நாங்கள் திருகோணமலையில்  மேடையேற்றியபோது கைலாசபதியும் அங்கே விடுமுறைக்காக  வந்திருந்தார். புதியதொரு வீட்டை நாங்கள் எத்தனை தடவை  கொழும்பில் மேடையேற்றினாலும்கூட அவருடைய துணைவியார்  கட்டாயமாக வருவார். அவர் விடுமுறையில் அங்கிருந்தததால்  கணவரையும் இழுத்துக்கொண்டு நாடகத்திற்கு வந்திருந்தார்.  கைலாசபதிக்கு பின்னால் இருந்த யாரோ ஒருவர். 'ஆ நாடகத்தில்  ஏணித்தரு வந்திட்டுது பிறகென்ன பிரச்சனைக்கு  தீர்வு   சொல்லப்போயினம்" என்றார். இது கைலாசபதிக்கு கேட்டுட்டுது.  நாடகம் முடிந்தவுடன் அவரைக் கூப்பிட்டு அதென்ன ஏணித்தரு  என்று எதோ சொல்லுறியள் என்று கேட்டிருக்கிறார். 'ஏணித்தரு  வந்துதே எண்டால் நாடகத்தில் ஒரு தீர்ப்பு வரும்தானே.  காத்தவராயன் கூத்தை எடுத்துப் பாருங்கள், கத்தோலிக்க மரபு  கூத்தை எடுத்துப்பாருங்கள், காலா காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிற நாடக வடிவங்களை எடுத்துப் பாருங்கள், சைவநாடக  வடிவங்களை எடுத்துப்பாருங்கள் ஏணித்தரு வந்திட்டது எண்டால்  தீர்ப்பு வந்துவிடும். இப்ப ஏணித்தரு வந்து போட்டுது" என்றிருக்கிறார்.   உண்மையிலேயே அந்த நாடகத்தில் கல்யாணத்தை முடித்து  வைக்கிற தீர்ப்பு அந்த இடத்தில் வருவதற்காக நான் அந்த ராகத்தை  போட்டிருந்தேன். கைலாசபதி என்னைக் கூப்பிட்டுக் கேட்டார் 'தம்பி நீ உந்த ராகம் உதுக்காகத்தான் போட்டனியோ அல்லது தற்செயலாக  வந்ததா?" என்று உடனே சொன்னேன் 'கூத்து மரபில் இருந்து  வருகின்றவன். ஆனபடியால் பாடலாக வருகிற நேரத்தில, அதை  அப்படித்தான் போடவேணும். அப்போதுதான் எங்களுடைய கூத்தின்  சிறப்பு. அந்தக்கூர்மை வெளியில வரும். அதற்காகத்தான் அதை  தேர்ந்து எடுத்தேன்' என்று சொன்னேன். 'இதுகளையெல்லாம்  எங்களுக்கு முன்கூட்டியே சொல்லியிருக்கலாமே, நாங்கள்  இதைப்பற்றிப் பேசும்போது மற்றவர்களுக்கும் சொல்லியிருக்க  வாய்ப்பாயிருக்குமே' என்றார். நான் சொன்னேன் 'இல்லை என்னுடைய வேலை ஒரு பொருளைப் படைப்பது. அதை விமர்சிப்பது, அதைச்  சந்தைப்படுத்துவது, அதற்குப் பேர் சூட்டுவது உங்களுடைய வேலை.  விமர்சகர்களுடைய வேலை. அதைக் கற்கவேண்டியது உங்களுடைய  வேலை. என்னுடைய தேவைக்கு நான் கற்றேன். உங்களுடைய  தேவைக்கு நீங்கள் கற்கவேண்டும்' என்றேன். அவர் என்னுடைய  ஆசிரியர் என்றாலும் ஒரு நண்பர் போல என்னால் அதை மனம்விட்டு அவரிடம் சொல்ல முடிந்தது. இப்படி நவீனங்களை நாங்கள்  புகுத்துகிறோம் என்றால் வேணுமென்று நாங்கள் புகுத்துவதில்லை.  தேவை கருதித்தான். வயித்துக் குத்துக்கு மருந்து என்னும்போது  காணியில உள்ள புல்லு பூண்டுகளை கொண்டுபோய் மருந்து என்று  கொடுக்கமுடியாது. அதே போலதான் எங்களுடைய ஒவ்வொரு  நாட்டுக் கூத்துகளில் உள்ள பண்புகள் வேறு வேறு  நவீனத்துவங்களுக்கு வேறு வேறு மாதிரியாக கருத்துக்களைச்  சிறப்பாக கூறுவதற்கு உதவியாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டு  நாங்கள் அதைச் செய்ய வேண்டும்.

அடுத்து நீங்கள் கேட்டீர்கள் இங்கே புலம்பெயர்ந்ததின் பின்னென்று,   புலம்பெயர்ந்ததின் பின் வேரறுந்து வந்தவன் நான். அகதியாக  வந்தவன் நான். அகதியாகத்தான் என்னுடைய மக்கள் இங்கே  வாழ்கிறார்கள், வாழ்ந்தார்கள். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு  நாட்டுக்குப் போக முடியாத நிலை. ஜேர்மனியில் எல்லாம் ஒரு  நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்குப் போகமுடியாது.  அப்படியான ஒரு இறுக்கத்துக்குள்தான் எங்களுடைய மக்கள்  வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இங்கே வந்த பின் நாடகப் பயிற்சிகளை இலண்டனில் 'களரி' என்றதொரு அமைப்பின் மூலமாக நடத்திக்  கொண்டிருந்தேன். அதை சிறப்பாக நான் நடத்திக் கொண்டிருந்தேன்  என்பதைவிட அதில் ஈடுபட்ட இளைஞர்கள் குறிப்பாக சுந்தரம்  சிறிஸ்கந்தராஜா, நாவரசன், விக்னராஜா, கோபு இப்படியானவர்கள்  சிறப்பாக ஒழுங்குபடுத்தி நடத்திக்கொண்டிருந்தார்கள். அதே போல  பாலேந்திரா ஒரு பக்கத்தில் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார்.   தொடர்ச்சியாக பெரிய நாடகங்களில் மிக அருமையாக தன்னை  அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற ஒரு பெருங் கலைஞன் அவர். இன்றும் நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள்  வேறு வேறு துறைகளுக்குப் போய்விட்டோம். இங்கு வந்து  'சிறிசலாமி' என்ற நாடகம் சுவிற்சிலாந்தில் போடவேண்டிய ஒரு  தேவை இருந்தது. ஏனென்றால் இங்கிலாந்து போன்ற நாடு அல்ல  சுவிற்சிலாந்து. இங்கிலாந்தில் உள்ளவர்ளுக்கு இலங்கை, இந்தியா  அவர்களின் குடியேற்ற நாடுகளாக இருந்த படியால் தொடர்பு  இருந்தது. சுவிற்சிலாந்து மக்களுக்கு வெள்ளைத் தோலைத் தெரியும்,  கறுப்புத்தோலைத் தெரியும் இடையில உள்ள ஒரு பிறவுண்  நிறத்தோலைத் தெரியாது. பிறவுண் நிறம் என்பது ஊத்தையோ  என்றுதான் அவர்கள் தமிழ் மக்களைக் கேட்டார்கள். ஏன் நீங்கள்  குளிக்கவில்லையா ஏன் இப்படியிருக்கிறீர்கள் என்றெல்லாம்  கேட்டார்கள். அப்பிடியான சுவிற்சிலாந்து மக்களுக்கு நாங்கள்  எவ்வகையான பாரம்பரியத்தில் இருந்து வந்திருக்கிறோம். ஏன்  நாங்கள் இங்க ஓடிவந்தோம் என்பதைக் கூறவேண்டிய ஒரு தேவை  இருந்தது. அதைக் கூறுவதற்கு கலைவடிவம்தான் சிறந்த வடிவம்  என்பதைக் கண்டார்கள். குறிப்பாக அன்ரன் பொன்ராஜா அங்கே  இருந்தார். அவர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரியில்  என்னுடைய மாணவராக இருந்தவர். குழந்தை சண்முகலிங்கம்  அவர்கள் திருநெல்வேலியில் நடத்துகிற அந்த நாடகப்பள்ளியில்  மாணவராக இருந்தவர். அங்கே கற்றுத்தேர்ந்தவர். அவர்  சுவிற்சிலாந்தில் இருந்து ஒரு அழைப்பை அனுப்பினார்.
அந்த சிறிசலாமி நாடகம் தமிழ் மக்களுடைய பாரம்பரியத்தையும்  அவர்கள் ஏன் ஓடிவந்தார்கள், ஏன் உலகம் பூராவும்  ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கும் ஒரு நாடகம். அந்த  நாடகம் முதலில் தமிழில் எழுதி அடுத்து ஆங்கிலத்திற்கு  மொழிபெயர்த்து பிறகு சுவிஷ்-ஜேர்மன் மொழியில் அதை  வடித்தோம். அந்த நாடகத்தைப் பார்க்க ஐந்து சதவிகிதம்கூட தமிழ்  மக்கள் வரவில்லை. அது போடப்பட்டது முழுக்க முழுக்க சுவிஸ்  மக்களுக்காக. முப்பத்தியாறு மேடைகளில் அரங்கேற்றப்பட்டது.  அரங்கம் நிறைந்த மேடைகள். அதன் பின்னர் தமிழ் மக்கள் பற்றிய  கருத்து சுவிஸ் மக்களிடையே மாறத் தொடங்கியது. அவர்களை  அன்போடு பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் ஓடிவந்தது  பொருளாதாரத் தேவைகளுக்காக அல்ல உயிரைக் காப்பாற்றிக்  கொள்ள என்பதைப் புரிந்து கொண்டார்கள். அங்கே ஒரு இனக்  கருவறுப்பு நடப்பதைப் புரிந்து கொண்டார்கள். அவர்களை அனைத்து  வேலைகளிலும் அமர்த்தத் தொடங்கினார்கள். இன்று சுவிற்சலாந்தில்  ஒவ்வொரு மாநிலமும் வெளியிடுகின்ற ஆண்டறிக்கையைப்  பார்த்தால் தமிழ் மக்களின் பங்களிப்பு, அவர்களுடைய பணி நேர்த்தி,  நம்பகத்தன்மை இவற்றைப் பற்றியெல்லாம் போற்றி எழுதுகிறார்கள்.  அவர்களுக்காக தொழிலதிபர்களே குரல்கொடுக்கிறார்கள்.

சுவிற்சிலாந்தில் அதனை அடுத்து 'புரூடர் கிளவுஸ் உண்ட்  பிறின்சென் பாண்டவாஸ்" (பாண்டவர்களும் கிளவுஸ் முனிவரும்)  என்ற இன்னுமொரு நாடகம், அதுவும் மூன்று மொழிகளில்  வெளியானது. பொதுவாக புலம்பெயாந்த நாங்கள் தமிழ்  மக்களுக்குத்தான இங்கே நாடகம் போடுகின்றோம். ஆனால்  சுவிற்சிலாந்தைப் பொறுத்த மட்டில் அது ஒரு புறைநடையானது  என்றே சொல்லவேண்டும். அந்த ஒரேயொரு நாடுதான் தனது மெயின் ஸ்ரிம் தியட்டர்கள் மூலம் தனது நாட்டு மக்களுக்காக தமிழ்  நாடகங்களை மேடையேற்றுகிறது. இப்போ அன்ரன் பொன்ராஜா அவர் அங்கே நாடகப் பள்ளியொன்றையும் அமைத்துள்ளார். அவர்;  தொலைக்காட்சியிலும் ஒரு நடிகர். சுவிஸ் நடிகராகவே அவர் அங்கே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார். தமிழ் நடிகராக அல்ல. கடந்த ஆண்டு அவர் லுத்ஷான் நகர விருதும் ஒரு நாடகத்திற்காக பெற்றிருந்தார்.  அதன் பின்னர் முழுக்க முழுக்க டொச் மொழியிலான 'கப்பி பேத்டே  வில்லியம்ரெல்"  என்ற நாடகத்தில் இறுதிப் பகுதியில் இருபது  நிமிடம் ஈழத்துக் கூத்து வடிவங்கள், தெருக்கூத்து ஆடைகள்,  ஆட்டங்களைச் சேர்த்து செய்தார். தமிழும் டொச்சும் சேர்ந்தே  நாடகத்தில் வந்தாலும் அந்த நாடகத்திற்குள்ளே இறுதிப் பகுதி  இருபது நிமிடமும் தமிழுக்கென்றே ஒதுக்கியிருந்தார்கள்.  வில்லியம் ஜேம்ஸின் கதையை தமிழில் கூத்தாகப் பாடிக் கொடுக்கும்  அந்தப்  பகுதியை நெறிப்படுத்துவதற்காகவும் அலங்காரப்படுத்துவதற்காகவும்  நானும் அன்ரன் பொன்ராஐாவோடு சேர்ந்து போயிருந்தேன். நான்  அந்த நவீனத்துவ நாடகக் கல்வியைக் கற்றதால் மேலைநாட்டு  அரங்குகளில் அவர்களுக்கு சலிப்பூட்டாத வகையில், அவர்கள்   பார்த்து நயக்கும் வகையில், நாடகங்களை கொண்டு வருவதற்கு  உதவியாக இருந்தது. அதுதான் நவீனத்துவ நாடகக் கல்வியைக்  கற்றதால் எனக்குக் கிடைத்த பயனென்று நான் நினைக்கிறேன்.



     இதுவரை:  24712813 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5726 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com