அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


தாசீசியஸ் நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கானா பிரபா  
Monday, 04 June 2007
பக்கம் 7 of 8

கானா பிரபா: இதேவேளை நவீன நாடகம் மற்றும் அவற்றினுடைய  செயற்பாடுகள், நீங்கள் உள்வாங்கி அவற்றை வெளிப்படுத்திய விதம்  போன்ற பல அம்சங்களைத் எமக்குத் தொட்டுக்  காட்டியிருக்கின்றீர்கள். நாடகத்துறை தவிர்ந்து ஊடகத்துறையிலேயும் உங்களுடைய கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறீர்கள். அதைப் பற்றியும் சொல்லுங்களேன்.?

தாசீசியஸ்:  ஊடகத்துறை என்னும்போது நான் திரும்பவும்  மண்ணுக்குத்தான் போக வேண்டும். அங்கே இலங்கை வானொலியில் தமிழ்ப் பிரிவில்; நாடக மேடைப்பாடுகள் என்ற ஒன்றை  கே.எம்.வாசகர் அறிமுகம் செய்தார். கூத்துப்பாடல்களை விளக்கி  அவற்றை மேடையேற்றுவதற்கு எனக்கு இடமும் தந்தார். ஒரு நாலு  ஐந்து ஆண்டுகள் நான் அதை தொடர்ச்சியாகச் செய்துகொண்டு  வந்தேன். அதற்காக நான் போகாத கிராமங்கள் இல்லை என்றே  கூறலாம். தமிழீழத்தில் வடக்கிலும் கிழக்கிலும் சுற்றியுள்ள  பகுதிகளெல்லாம் சென்றேன். அதேபோல சிங்களப் பகுதிகளுக்கும்  குறிப்பாக புத்தளம், சிலாபம் நீர்கொழும்பு இங்கெல்லாம் சென்றேன்.  ஏனெனில் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடக  வடிவங்கள் அங்கும் இருந்தன. ஆகவே அந்தப்  பகுதிகளுக்குக்கெல்லாம் நான் போயிருந்தேன். வடிவங்களைத்  திரட்டினேன். பயன்படுத்தினேன். அப்பொழுது ஊடகம் எனக்கு தந்த  அறிமுக உதவியால் நான் இங்கே லண்டன் வந்ததும் பி.பி.சியில்  பணிபுரிய வாய்பளித்தது. அப்பொழுது தனியாக ஒரு வானொலியைத்  தொடக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கவில்லை. நான்  இலண்டன் வந்த பொழுது கிட்டு அவர்கள் இங்கிருந்துதான் தனது  அனைத்துலகப் பணியை ஆரம்பித்தார். அப்ப அவரோட நட்புக்  கிடைத்தது. நானும் அவரும் ஒரு விழாவில் சந்தித்தோம். அங்கே  எங்களுடைய களரி குழுவினர் ஒரு பாடலை நாடக வடிவில்  கொடுத்தார்கள். பாடல் எனும்போது நாங்கள் எப்பொழுதும்  எங்களுடைய பாரம்பரிய பாடல் வடிவங்களுக்குத்தான் நான் போவது  வழக்கம். அந்தப் பாடல் வடிவில் ஒரு பெரிய விடயத்தை அங்கே  பாடியவர்கள் விளக்கினார்கள். அடுத்தநாள் முதல்முறையாக  தமிழ்நாட்டில் இருந்து தமிழ் அகதிகளை கப்பலில் ஏற்றி திருப்பி  அனுப்ப இருக்கிறார்கள். முதல்நாள் இந்த நிகழ்ச்சியில் திரும்பிப்  போகப் போகிற அந்த அவல நிலையை, உயிருக்காக அங்க  ஒடினதுகளை திருப்பி அனுப்புற நிலையை நாங்கள் மன்னார்  பாடல்வடிவத்தில் எடுத்து வழங்கினோம். அந்த அரங்கில் மன்னார்  மக்கள் தான் கூடுதலாக இருந்தனர். அங்க கூடியிருந்த மக்கள்  அழுதார்கள். அரங்கம் அழுதது. கிட்டுக் கூட தேம்பியபடி இருந்தார்.  நான் எங்கள் பாடலுக்காகச் இதைச் சொல்லவில்லை. அந்தச் சூழல்  அப்படி இருந்தது. அதாவது அடுத்தநாள் எங்கடை மக்கள் போகப்  போகிறார்கள் என்பதைக் கூறுவதற்கு எங்களுக்குக் கிடைத்த  சந்தர்ப்பம் தானொழிய எங்களின் பாட்டுத்தான் அங்க வெட்டி  விழுத்தினது என்றில்லை.  அந்தச் சந்தர்ப்பத்திற்கு எங்கள் பாடல்  பொருந்தியது அவளவுதான். அன்றிரவு நிகழ்ச்சி முடிந்ததன் பின்னர்  நானும் கிட்டுவும் நீண்ட நேரம் அந்த இடத்தில் இருந்து  பேசிக்கொண்டிருந்தோம். அவர் அந்தப் பாடலால் நிறையக்  கவரப்பட்டிருந்தார் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.  அப்போதுதான் அவர் எங்களுக்கு கட்டாயாமாக ஒரு வானொலி  ஒன்று வேணும் என்று சொன்னார். மக்களிடம் கொண்டு செல்வதற்கு நல்லதொரு ஊடகம் வேணும் என்றார். அந்த நேரம் எங்களிடம்  வசதிகள் இருக்கவில்லை. பிறகு கிட்டுவும் மறைந்து போனார்.  அதற்குப் பிறகு இந்த இணையம் வந்து வசதிகள் எல்லாம் ஏற்பட்ட  பிற்பாடுதான் தொண்ணூற்றியேழில் குறைந்த செலவில ஒரு  வானொலியை தொடக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். அப்பொழுது என்னுடைய சில நண்பர்களையும், ஞானரட்னசிங்கம் விக்கினராஐh  ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு ஐ.பி.சி தமிழ் வானொலியைத்  தொடக்கினோம். ஐரோப்பாவில் இலவசமாக அந்த வானொலி  ஒலிபரப்பானது. அது இலங்கையையும் எட்டியது. இந்த வானொலி  ஐரோப்பாவில் ஒரு தனித்துவத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தியது  என்றுதான் கூறுவேன். பி.பி.சியை பொறுத்தமட்டிடல் சங்கரண்ணா,  அவர் எனக்குத் தந்த பயிற்சி ஒரு ஊடகத்தில் பேசுவதற்கான பயிற்சி அது மிகச் சிறந்தது. இனி தமிழ் என்று எனக்கு நல்ல கற்பித்தலைத்  தந்தது என்றால் என்னுடைய பேராசிரியர் கணபதிப்பிள்ளை,  பேராசிரியர் வித்தியானந்தன் பேராசிரியர் செல்வநாயகம் பேராசிரியர்  சதாசிவம் இவர்கள் எல்லாம் வருகிறார்கள். கவித்துவத் தமிழ்  எனக்குத் தந்ததென்றால் முதலில் மகாகவி, முருகையன், சில்லையூர் செல்வராஐன். அதன் பின்னர் நாடகத் தமிழோடு எனக்கு நல்லறிவைத் தந்த மதிப்புக்குரிய கண்ணியவான் குழந்தை சண்முகலிங்கம்;. இனி  நான் இந்தியாவில் இருந்த காலத்தில் அதாவது அலுவலக  வேலையாக பி.பி.சி நிறுவனத்திற்காக நான் அங்க போயிருந்தேன்.  அப்பொழுது ஐந்து ஆறு மாத காலத்தில் என்னோடு கூடி எனக்கு  நிறைய உதவி புரிந்த மங்கை, ரி.ஆர்.எஸ்.வி இவர்களெல்லாம் எனது மொழியைத் துலக்கினார்கள். எனது பேச்சு வழக்கை துலக்கினார்கள்  எனது சிந்தனையை துலக்கினார்கள். அதன் பின்னர் நான் சிறிது  காலம் ரி.ரி.என் தொலைக்காட்சியில்கூட அதன் பணிப்பாளராக  இருந்தேன். தயாரிப்புத்துறைப் பணிப்பாளராக. அதன் பின்னர்  இப்பொழுது தமிழ்க் குடில் என்னும் இணைய வானொலி. ஐ.பி.சி  யால் வெளியே வந்த பின்னர் தமிழ்க் குடிலைத் தொடக்கினேன்.  ஆனால் அதனை தொடர்ந்து என்னால் நடாத்திக் கொண்டிருக்க  முடியவில்லை ஏனென்றால் நான் சுவிற்சிலாந்துக்குப் அவர்களுடைய தயாரிப்பில் உதவுவதற்காக போகவேண்டியிருந்தது. அதன் பின்னர்  உலகம் பூராவும் புலம்பெயர்ந்த தமிழ்ப் பிள்ளைகளுக்காக  பள்ளிப்பாட நூல் ஒன்றைத் தயாரித்தார்கள். அந்த நூற்பணி  ஆக்கத்திலும் நான் நான்கு ஆண்டுகள் கலந்து கொண்டேன்.  இப்படிப்பல. இயல்பீடத்தினர் இந்த விருதைத் தந்தபோது எதற்காக  இந்த விருதைத் தருகிறார்கள். நாடகத்துக்காக தருகிறார்களா அல்லது ஊடகத்திற்காகவா என்று ஒரு கேள்வி எனக்குள் இருந்தது. அவர்கள்  கூறினார்கள் நாடகத்திற்காகத்தான் என்று. ஆனால் இன்று நான்  முழுக்க முழுக்க ஈடுபட்டிருப்பது ஊடகத்துறையில்.



     இதுவரை:  24716517 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4133 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com