Thursday, 14 June 2007
01.
நீ என்ன சொல்கிறாய்….
னௌனம் கீறிய என் வார்த்தைகளை விழுங்கிப்போகும் உன்பார்வைகளில்… மிதந்து வருகின்றனவா ஏதேனும் எனக்கான சேதிகள்….
அலைகள் ஓய்ந்தபின் ஆழ ஊடுருவும் பார்வைகளுக்குச்சிக்காது… ஏகாந்தத்தில் நுழைந்துவிடுகிறது… நீ எறிந்த கல்….
அர்த்தமற்று உளறும் என்பேச்சு… சில பொழுதுகளில் விக்கித்து நிற்கும் என் மௌனம்… போதுமானதாயிருக்கிறதா? நான் உனக்குள் நிகழந்துவிட….
02. நான் வெற்றுத்தாள்களை வாசிக்கிறேன்…. குருதியும் ரணங்களும் வழியும் துயரத்தின் மிகு சொற்கள் அத்தாள்களின் மீது உறைந்துள்ளன….
எழுதப்படாதிருக்கிற எந்தச்சேதியிடமும் புன்னகையில்லை….
தன் பின்னலைத்தளர்த்திய ஒரு கிழவியின் சாபத்தின் சொற்கள் ஊரை நிறைத்தது…
பின்பொருநாள்… பூவரசம் வேலிகளைத் தறித்தபடியெழும் கோடரியின் கரங்கள் ஒரு குழந்தையிடமிருக்கக் கண்டேன்…. தடுக்கமுயலும் கிழவியிடமிருந்து எழும் இயலாமையின் சொற்கள் தேய்ந்து போயிற்று கைவிளக்கைப்போல
03.
என் கவிதையின் கரங்கள் நீண்டபடியிருக்கின்றன சொற்களைத்தேடி….
தாயிடமிருந்து தப்பும் ஒர் தனியன் குஞ்சைப்போல சிக்கிக்கொள்ளாது தப்பியலைகின்றன சொற்கள்…
ஊழியோய்ந்த நிலத்தில் எஞ்சிய ஒற்றைக்குழந்தையின் திணறலென அழுதபடியிருக்கிறது என் கவிதையும் அதன் மனமும்….
04.
திடீரென… தடங்களற்று எழும் வாசனையைப்போல் முளைக்க்pறது உன் மீதான பரியம்….
05.
விளக்கை மேயும் பூச்சி….
வேட்டைக்குத் தயாராகிறது பல்லி பூனையின் நிழற்கரங்கள் தன்மீது படிவதை அறியாது….
06.
தலைகளாலான தெருவில்….
குழந்தைகளின் புன்னகைள் நிரம்பிய வண்ணங்களை விற்றபடி போகிறான் பலூன்காரன்….
தன்புன்னகையைக் கேட்டு வீரிட்டழும் ஒரு குழந்தை விக்கித்து ஓய்கையில்…
ஏனோ எச்சில் ஒழுக என்பெயர் சொல்லிச்சிரிக்கும்… அவனது முகம் கடந்து போகிறது என்னை….
07.
ஒரு கவிதை எனை அழைத்துப்போகிறது ஊருக்கு…..
தும்புமிட்டாஸ் காரனின் கிணுகிணுப்பிற்கு அவிழ்கிற அம்மம்மாவின் சுருக்குப்பையைப்போல.. அவிழ்ந்து கிளம்புகின்றன ஞாபகங்கள்….
சிட்டுக்குருவியின் இறகுகளில் பின்னப்பட்டிருந்தது வாழ்க்கை.. ஒரு வேட்டைக்காரனின் குறிக்குள் வீழ்ந்தபின் வரையறுக்கப்பட்ட வானத்திடம் அதிசயங்கள் ஏது மில்லை….
நான் ஓடிவருதற்குள் கடந்து போய்விட்டிருந்தான் துப்புமிட்டாஸ்காரன்… நான் நின்று கொண்டிருக்கிறேன்… அழைப்பதா? திரும்புவதா? எனத்தெரியாது….
தடங்கள் இறுகிக் கொண்டன…
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts) |