அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 01 December 2020

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிர்வாணியின் பூனை வளர்ப்பு.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Saturday, 30 June 2007

வானிலை அவதான மையத்தின் அறிவிப்புகளில் இனிவருங்காலங்களில் நம்பிக்கை கொள்வதில் பயனில்லை என்னு மட்டும் தெரிகிறது.  நேற்றைய அறிவிப்புகளின்படி இன்று காலநிலை இல்லை.
வெளியில் புறப்படும் நேரம் பார்த்து வானம் துமிக்கிறது.

நீண்ட நாட்களுக்கு முன் தொலைந்து போன பூனைப்பண்ணைக்காரன் ஒருவன் பற்றிய நினைவுகளும் விசித்திரமாக மூளைக்குள் துமிக்கிறது. ஒரு கனவிலிருந்தோ அல்லது ஒரு இன்மையிலிருந்தோ இன்னொரு கனவிற்கு அல்லது இன்னொரு இன்மைக்குப் பயணிக்கும் பாதையில் பல தடவை சிறைப்பட்டுக்கொண்டு ஒவ்வொரு முறையும் தப்பித்துத் தொலைந்தொழியும் அவன் எங்காவது இன்னொரு சிறையில் தப்பித்துக் கொள்வதற்கான பிரயத்தனத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறான்.

அவனின் இருத்தலின் ஒரே நியாயம் சிறையுடைப்புத்தான்.
அவனின் ஒவ்வொரு பாதையும் அவனுக்குச் சிறைபிடிப்புத்தான். சென்றடையும் இடமும் சிறைப்பிடிப்புத்தான். அவன் அலையும் வழிகளில் அவன் பின்னால் பூனைக் கூட்டம் ஒன்று அலைவது போலான ஒரு பிரமை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். சிறையுடைப்பிற்கான ஒரேவழியாக அவன் பூனை வளர்ப்பை மேற்கொண்டிருந்தான். தொலைந்து போனவன் தொலைந்து போனவனாகவே இருந்து விடட்டும். எதற்காகத் துமித்துக்கொண்டேயிருக்கிறான் என்றுதான் புரியவில்லை ?

ஊர்களைத்  தாண்டினான். அப்போ அவனுக்கு ஊர்கள் சிறையாயிருந்தன.  நாடுகளைத் தாண்டினான். அப்போ அவனுக்கு நாடுகள் சிறையாயின. கண்டங்களைக் கடந்தான். கண்டங்களும் சிறையாயின. ஆகவே பூனை வளர்ப்பு மட்டுமே சாத்தியமானது. ஓரே நேரத்தில் தனது அனைத்துச் சிறைகளிலும் இருந்து கொண்டே அவன் பூனைகளுக்கும் பெயர் சூட்டிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு சிறையின் கதவிடுக்குகளிலிருந்தும் பூனைகள் புறப்பட்டுக்கொண்டேயிருக்கும் விசித்திரத்தை உள்ளுணரும் வேளைகளில் சிறைக்கதவுகள் சிதறிப்போகும். அப்போ யாரும் தன்னைப் பின்தொடராதிருக்கும் வகையிலான முன்னெச்சரிக்கையாக ஒரு தடவை திருப்பிப் பார்த்து விட்டு ஓடிக்கொண்டேயிருப்பான். மீண்டும் ஒரு சிறைவந்து அவனை அகப்படுத்திக்கொள்ளும்.

அலட்சியங்களும், அற்பங்களும், அத்தியாவசியங்களை அடித்துச்செல்லும் வேகத்தில் அமையும் அவனின் பயணங்கள்.

நான் என்பது ஒரு நிஜமா? அன்றில் நான் யாரோ காணும் கனவா? புலன்கள் உள்வாங்முடியாத் தொலைவிற்குள் வீழ்ந்த அவன் இன்போ நான் காணும் கனவு. அவனில்லை. அவனென்பது எனது ஊகம். ஒரு உள்மனப்பிரதிமை. அப்படியானால் ஏன் இன்னமும் துமித்துக்கொண்டிருக்கிறான்?

இறந்து போன, தன்னிலும் பாரமான மாடுகளை அவன் ஏன் இத்தனை பிரயத்தனப்பட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டிருக்கிறான்? இழுப்பதற்கு ஒரு மாடுகூட உயிருடன் இல்லாதபோதும் எதற்காகப் பிணங்களை வண்டிகளில் ஏற்றி அடுக்கிக்கொண்டான்? ஆடைகளை அரித்துப்போடும் எலிக்கூட்டத்துடன் தனக்குள்ள நட்புணர்வை வெளிப்படையாக அவன் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால், தன்னையறியாமல், தன்னையும் மீறி தன் நிர்வாணத்தை உலகிற்குக் காட்டிவிடவேண்டும் எனும் நோக்கில் அவன் எலிகளுடன் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தங்களின் படியே அவனின் ஆடைகள் அரிக்கப்பட்டன. அவன் நிர்வாணியானான். எலிகள் மீது பழியைப் போட்டுக்கொண்டான்.

வண்டியிழுக்க ஒரு மாடும் உயிருடன் இல்லாதபோதும் செத்தமாடுகளை வண்டியில் ஏற்றி அடுக்கியவனின் நிர்வாணம் எலிகளின் உதவியால் வெளிப்பட்டுக்கொண்டது. ஆடைகளை அரித்த எலிக்கூட்டத்திற்குப் பசிதீர்ந்திருக்கலாம். ஆனால், எலிகள் அவனின் உடந்தைகள் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

எலிகளுடன் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கையில் அவன் பிரத்தியேகமான ஒரு சரத்தையும் இணைத்திருந்தான். எலிகளுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தம் எவ்வகையிலும் தனக்குள்ள பூனை வளர்ப்புரிமையைப் பாதிக்கக்கூடாதென்பதே அவ்விதி.

நிர்வாணியாகி எலிக்கூட்டத்தையும், பிணமாடுகளையும் விட்கறன்ற வேளையில்தான் ஆரம்பித்தது அவனின் சிறையுடைப்புப் படலம். சிறையுடைப்புப் படலம் ஆரம்பமான வேளையில்தான் ஆரம்பமாகியது பூனைவளர்ப்பு.

நள்ளிரவொன்றில், இருளோடு இருளாக வந்த ஒரு தாடிக்காரன் தனது பூனைகளின் கழுத்துகளை நெரித்துக்கொன்றபின் அவன் மீண்டும் ஒட ஆரம்பித்தவன்தான். இன்னொருகண்டத்தில் சிறைப்பிடிக்கப்பட்டான்.

பூனைகொல்லிகள் பூமியெங்கும் இருப்பதாக அவனுக்குப் பயம் பற்றிக்கொண்டபோதே அவன் கறுப்புப் பெட்டிகளில் பூனைகளை இரகசியமாக வளர்க்க ஆரம்பித்தான். தான் வளர்த்த பூனைகளையெல்லாம் தானே கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டதான ஒரு பொய்ப்பிரச்சாராத்தையும் முடுக்விட்டிருந்தான். தன்னிடம் பூனைகள் இருப்பதை யாரும் கண்டுவிடக்கூடாதென்பதிலுள்ள அவனின் அக்கறை இப்போ வலுத்துவிட்டது. யாருக்காகவும் தனது பூனைகளை வெளிப்படுத்தக் கூடாதென்பதிலும் அவன் உறுதியாகவிருந்தான்.

அவன் ஓடிக்கொண்டிருக்கும்போது அவனைப் பார்ப்பவர்கள் யாரும் அவனிடம் பூனையில்லை என்பதை நம்பமறுத்தார்கள். ஏனெனில் எப்போதும் அவன் பின்னால் ஒரு பூனைக்கூட்டம் ஓடிக்கொண்டேயிருப்பதுபோலிருக்கும். அவன் பூனைகளின் நிழலைப் போன்று உருவெடுத்திருந்தான்.

மந்திர உச்சாடனம் போல், ஆயிரம் பெயர்களைப் பூனைகளுக்காக அவன் உச்சரித்துக்கொண்டாலும், அனைத்துப் பூனைகளையும் ஓரே பெயரால் அழைக்கவேண்டும் எனும் அவா அவனுக்குள் நீண்டு வளர்ந்து கொண்டே சென்றது. 

அனைத்துப் பூனைகளையும் ஒட்டுமொத்தமாகச் சோகம் என நாமமிடுவதாக அவன் இறுதி முடிவெடுத்வேளையில் வானம் துமித்துக்கொண்டிருந்தது.

எல்லாக் கண்டங்களிலும் வானம் துமித்தக்கொண்டிருந்தது. எல்லாக்கண்டங்களிலும் இரகசியப் பூனைவளர்பாளர்களின் வானங்களெல்லாம் அவன் துமித்துக்கொண்டிருந்தான்.

வானிலை அவதான மையத்தின் அறிவிப்புகளில் இனிவருங்காலங்களில் நம்பிக்கை கொள்வதில்லை பயனில்லை என்னு மட்டும் தெரிகிறது.  நேற்றைய அறிவிப்புகளின்படி இன்று காலநிலை இல்லை.
வெளியில் புறப்படும் நேரம் பார்த்து வானம் துமிக்கிறது.

(மெலிஞ்சி முத்தனின் 'மனக்குகை உரையாடல்கள்' என்னும் ஆக்கத்தின் எதிரொலியாக இது எழுதப்பட்டது. நன்றி: அலை ஓசை)

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)


     இதுவரை:  19968604 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4256 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com