Sunday, 01 July 2007
விடுதலையின் விரிதளங்களும், வாழ்வின் புதிரான முடிச்சுகளும் - 04
'விடுதலையில்' மிசேல் பூக்கோ பற்றிய அறிமுகம் பின்வருமாறு உள்ளது. "பூக்கோ சமுக உலகத்தையும் மனித உறவுகளையும் ஒரு புதிய பரிமாணத்தில் வித்தியாசமாக நோக்கியவர். அறிவுலகங்களை அகழாய்வு செய்தவர். அவற்றின் ரிசி முலங்களை கண்டு பிடித்துக் காட்டியவர். அதிகார உறவுகளின் சிலந்தி வலைக்குள் மனித வாழ்வு சிக்குண்டு கிடப்பதை மிகவும் நுட்பமாக எடுத்து விளக்கியவர். அறிவுலகமும் அதிகார உலகமும் கூட்டுச்சேர்ந்து மனித அடக்குமுறைக்கு ஒத்துழைக்கும் தந்திரோபாயங்களை பிட்டுக்காட்டியவர்" என்று நீள்கிறது.
அதாவது அறிவுலகத்தை சமுக வாழ்வியக்கத்தின் ஆழத்தில் அலசிப்பார்த்த பூக்கோவிற்கு ஒரு விசித்திரமான உண்மை புலப்பட்டது. அறிவுலகமானது தனியுலகமாக நின்று, மனித விமோசனத்திற்கு வெளிச்சம் காட்டவில்லை. மாறாக, அது அதிகார உலகத்துடன் கைகோர்த்து நின்று மனிதர்களை விலங்கிட்டு வைத்திருக்கிறது என்ற கசப்பான உண்மையை அவர் கண்டுகொண்டார். ஆரம்பத்தில் மாக்சிய சிந்தனையாளராக தன்னை தகவமைத்துக் கொண்டபோதிலும் பின்பு அதிலிருந்து தன்னை விடுவித்து நீட்சேயின் கண்டனத் திறனாய்விலும் அவரது மரபு முல (geneological) விசாரணை முறையிலும் கவர்ச்சி கொண்டு பொய்மைகளைப் போர்த்தியவாறு, மறைபொருளாகப் புதைந்து கிடக்கும் மெய்மைகளைக் கண்டு கொள்வதற்கான மூலங்களைத் தேடும் விசாரணையே சிறந்ததென உணர்ந்து நீட்சேயின் வழி தழுவி வேர்களைத் தோண்டும் தனது ஆய்வை உலகிற்கு அறிவித்தார். அதுதான் 'அறிவின் அகழாய்வு' என அழைக்கப்படுகிறது.
1926 இல் பிரான்சில் பிறந்த மிசேல் பூக்கோ (michel foucault) ஒழுங்கமைப்பு, அதிகாரம், பாலியல் குறித்த நுண் அரசியல் ஆய்வுகளினூடாக அறியப்பட்ட ஒரு முக்கியமான தத்துவ அறிஞர். அதிகாரம் பற்றிய இவரது ஆய்வுகள் நீட்சேயின் அணுகுமுறையை அதன் எல்லை நோக்கி விரித்துச் சென்றன என்று 'விடுதலை'யில் அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.
"நான் இங்கு பேச விரும்பும், முன்வைக்க விரும்பும், விவாதிக்க விரும்பும் கருத்துக்கள் ஒரு கோட்பாட்டையோ அல்லது ஒரு முறையியலையோ பிரநிதித்துவப்படுத்துபவை அல்ல" என்பதை ஒத்ததான ஒரு வாசகத்துடன்தான் மிசைல் பூக்கோவின் அனேகமான உரையாடல்களோ, எழுத்துக்களோ ஆரம்பிக்கும். பூக்கோவை ஆழ்ந்து கற்றவர்களுக்கு இது வெளிப்படையான ஒன்று.
இதற்கு அவர் முன்வைக்கும் காரணங்கள் பல இருந்தபோதிலும் அவற்றுள் முதன்மையானதாக, நீண்ட தேடலின் விளைவாய் - ஆழ்ந்த புரிதலின் அடிப்படையில் எழுந்த தனது தர்க்கரீதியான ஆய்வின் முடிவைக்கூட ஒரு கருத்துத் திணிப்பாகவும், அதிகார மீறலாகவும் அவர் கண்டார். அதன் அடிப்படையிலேயே மேற்குறித்த வாசகம் அவரிலிருந்து தொடர்ச்சியாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. இதனூடாக தனது கருத்தை - முடிவை நிராகரிப்பதற்கான எல்லா உரிமைகளையும் எமக்கு வழங்குகிறார்.
அதிகாரத்தின் அனைத்துத் திசைகளிலும் பயணம் செய்து அதன் அடியாழம் வரை சென்று அதன் நுண்ணிய அதிர்வுகளை கண்டறிந்த - அதிகாரத்தை எதிர்ப்பதையே தனது வாழ்வியல் செல்நெறியாகக் கொண்டிருந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாரால் இத்தகைய புரிதலை வெளிப்படுத்த முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்.
"அதிகாரம் ஏதோ ஒரு தருணத்தில் ஒன்றிலிருந்து தோன்றி மற்றதற்குச் செல்கிறது. எல்லாவித உறவுகளிலும் அதன் உற்பத்தி நடக்கிறது. அதிகாரம் எங்கும் நிறைந்திருக்கிறது. இப்படிக் கூறுவது அது எல்லாவற்றையும் தழுவியுள்ளது என்பதனால் அல்ல. அது எல்லா இடங்களிலிருந்தும் வருகிறது என்ற காரணத்தினால்தான்" என்ற பூக்கோவின் ஆய்வு, அதிகாரம் மையம் கொள்ளும் நுண்தளங்கள் (micro centers of power) பற்றிய ஆழந்த புரிதலை எமக்குத் தருகிறது.
யார் சொன்னது, அதிகாரம் அரசியலிலிருந்தும் துப்பாக்கிகளிலிருந்தும் பிறப்பதாக.... அது ஒரு உளவியல் நிறுவனத்திடமிருந்தும் - ஒரு மனநல மருத்துவரிடமிருந்தும் - ஒரு உளவியற் பேராசிரியரிடமிருந்தும்கூட பிறக்கமுடியும். பிறந்திருக்கிறது......
அண்மையில் எனது நண்பரும் கவிஞருமான க.வாசுதேவனின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அவர் தனது அலுவலக வாசலில் தொங்கவிட்டிருக்கும் வாசகத்தில் காணப்பட்ட "அதிகாரமும் வன்முறையும் சக படைப்பாளிகளிலிருந்து கூட பிறக்கின்றது" என்ற வரிகள் அதிகாரத்தின் எல்லையை விரிவாக்கம் செய்கின்றன.
கடந்த வருடம் எனது மீள்வாசிப்புக்குரிய நூல்களில் ஒன்றாக அவரது "தொலைவில்" கவிதைத்தொகுப்பும் இருந்தது இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று. ஆனால் அத் தொகுப்பு ஈழத்தமிழ்ச் சூழலில் போதிய கவனத்தைப் பெறவில்லை என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. உக்கிரமான ஒரு மொழியில் அகதி வாழ்வின் வலிகளைப் பேசும் அவரது கவிதைத் தொகுப்பு கவனிக்கப்படாதது ஈழத்தமிழ்ச் சூழலின் வேறு ஒரு பக்கத்தை எமக்குக் காட்டுகிறது. இது ஒரு பொதுமையான நிகழ்வாக இருந்தபோதிலும் இதைத் தனி மனித அவலமாகவும் பார்க்கலாம்.
சந்தோசமோ கவலையோ பகிர்ந்து கொள்வதற்கு இனி வாழ்வில் ஆள் இல்லை என்று உணரும் ஒரு தருணம் எத்தகையது என்று எனக்குத்தான் தெரியும். சொன்னால் நம்புவீர்களா! இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் என்னோடு தனது சக வாழ்வைப் பகிர்ந்து கொண்டது ஒரு எலிதான். நம்புவதற்குக் கஸ்டமாக இருக்கிறதா?
இந்த காலகட்டத்தில்தான் 'விடுதலை' யின் தரிசனம் கிடைத்ததை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.
ஒரு வாரம் பல்லைக் கடித்துக்கொண்டு இருந்துபார்த்தேன். புத்தகங்களும் வாசிப்பும் என்று நாட்கள் நகர்ந்தபோதும் அதைப் பகிர்ந்துகொள்ள ஆளில்லாதது மனஅடுக்குகளின் ஒழுங்கைச் சீர்குலைத்து தீராத மனநோய்க்குள் அமிழ்த்திவிடுமோ என்ற ஐயம் துளிர்விடுவதும், இனி உன் வாழ்வு அப்படித்தானே என்ற யதார்த்தம் மனத்தில் பேயாய் அறைவதும் என்று ஒரு போராட்டம் என் மனக்குகைகளில் நடந்துகொண்டிருந்த ஒரு தருணத்தில்த்தான் அந்த எலியின் பிரவேசம் நிகழ்ந்தது.
முதல் நாள் இரவு படித்து முடித்துவிட்டு குறிப்பெடுப்பதற்காக எனது மேசையில் வைத்திருந்த அல்பேர்ட் காம்யூவின் (albert camus) அந்நியன் (stranger) நாவலின் விளிம்புப் பகுதியை பதம் பார்த்ததனூடாகத்தான் 'அது' அறிமுகமாகியது. புத்தகத்தை கடித்துவிட்டதே என்ற கோபம் ஒருபுறம் கொப்புளித்துக் கொண்டிருக்க மனத்தின் மறுபக்கம், என்னுடன் ஒரு உயிர் வீட்டில் உலாவுகின்றது என்ற சந்தோசத்தில் குதூகலிக்கத் தொடங்கியது.
அது என் கைகளுக்குள் சிக்காதபோதும் என் கண்ணெதிரே நடமாடித் திரிந்தது. இரவில் எதையாவது அரித்துக்கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்டால்தான் எனக்குத் தூக்கமே வரும் என்ற நிலைவரை எமது உறவு வளர்ந்தது.
பொதுவாகவே எலி மனித உடலின் 'விபரீதமான பாகங்களைக்' குறிவைக்கும் என்று எங்கோ கேள்விப்பட்டதையும் மறந்து என் படுக்கையில் ஓடித்திரிவதற்கும் அனுமதித்தேன். எனது தனிமனித வாழ்வின் இருப்புக்கு அது ஒரு அர்த்தத்தை தந்தததாகவே நான் நம்பினேன்.
எனது நூல்கள் சிலவற்றையும் அது அவ்வப்போது பதம் பார்க்கத்தொடங்கியிருந்தது எனக்குப் பெரும் தொல்லையாக இருந்தது. இதற்கு ஒரே வழி அதற்கான உணவை தயார்செய்து அது உலாவித் திரியும் இடங்களில் வைப்பதுதான் என்று முடிவு செய்து அதற்கான உணவை தயார்செய்து அதற்குரிய இடங்களிலேயே வைத்தேன்.
இரு நாட்கள் அது சாப்பிட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது. எனக்குச் சந்தோசம். இனி புத்தகங்களுக்கு எலியிடமிருந்து விடுதலை. ஆனால் முன்றாம் நான்காம் நாட்கள் எலி உணவை முகர்ந்து பார்த்த அடையாளங்கூட இல்லை என்பது ஒரு புறம் இருக்க அதன் நடமாட்டத்தையும் காணவில்லை. தொடர்ந்த நாட்களில் அது முழுவதுமாகக் காணாமல் போயிருந்தது.
அதற்கு நான் உணவைத் தயார்செய்து வைத்ததை அது வேறுவிதமாகக் கற்பனை பண்ணியது போலும். இடம் மாறிவிட்டது. மீண்டும் என்னைத் தனிமை சூழ்ந்து கொண்டது. வாழ்க்கையில் ஒரு உயிரை அளவிற்கதிகமாக நம்பக்கூடாது - நேசிக்கக்கூடாது என்பதை நான் புரிந்து கொண்ட இரண்டாவது சம்பவம் அது. உங்கள் வீட்டில் எலித்தொந்தரவு இருந்தால் இப்படி முயற்சித்துப் பாருங்களேன்......
பிரபல ரஸ்ய எழுத்தாளர் தஸ்தாயெவ்ஸ்கி (fydor dostoevsky) எழுதிய 'மரண வீட்டின் குறிப்புக்கள்' நாவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் தனது சிறைச்சாலை அன்றாட நிகழ்வுகளை அறைக்குள் உள்ள ஒரு சிலந்தியுடன் பகிர்ந்து கொள்வதாகப் படைக்கப்பட்டிருக்கும். தான் தனியாக இல்லை, தன்னோடு ஒரு சிலந்தி கூட இருக்கிறது என்ற உறவு மட்டுமே தன்னை வாழவைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுவதாக அந்தப் பாத்திரப் படைப்பை மிக உயிர்ப்புடன் படைத்திருப்பார் தஸ்தாயெவ்ஸ்கி.
இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் எனது வாழ்வை அந்த எலியுடன் பகிர்ந்து கொண்டதும் இத்தகைய தனிமைச்சிறையிலிருந்து என்னை நானே மீட்டுக்கொண்ட ஒரு நடவடிக்கைதான்.
தனிமைதான் ஒரு மனிதனை மகானாக்குகிறதோ இல்லையோ உண்மையான மனிதனாக்குகிறது. தனிமையில் இருக்கும் போதுதான் அவன் தன்னளவிலேயே நிறையக் கேள்விகளை எதிர் கொள்ள நேரிடுகிறது. அந்தக் கேள்விகளினூடாக அவன் ஒரு முழுமையை எய்துகிறான். வாழ்வின் நெருக்கடி ஏற்படுத்திய வலியில் இருந்து பிறந்த அந்தத் தனிமையினூடாக நகரும் அவனது எஞ்சிய வாழ்வில் கருணையும் நேசமும் எல்லையில்லாத மனித அக்கறையும் நிரம்பத் தொடங்குகிறது. முடிவில் தான் சார்ந்த சமுகத்தின் நெருக்கடி சார்ந்த, பிரச்சினை சார்ந்த சில அடிப்படைக்கேள்விகளிற்கான பதில்களை முன்வைக்க முற்படுகிறான் அந்த மனிதன்.
ஒரு உளவியல் நிறுவனத்தைப் பற்றியும் அதன் ஒழுங்கீனங்கள் பற்றியும் அங்கு பணிபுரிந்த பேராசிரியர் பற்றியும் அவரது குடும்பத்தினரது அதிகார அத்துமீறல் பற்றி எல்லாம் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த ஒட்டுமொத்த கூட்டணியால் எனது வாழ்வு தடம்புரண்டதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் செய்தது குற்றம்தான் என்ற போதிலும் அதை முன்வைக்கும் அதிகாரம் எனக்குக் கிடையாது. நான் அன்ரன் பாலசிங்கம் என்ற மகத்தான மனிதரினூடாக மிசேல் பூக்கோ என்ற மேதையை கண்டடைந்தவன். அதன் வழி பார்த்தால் யார் மீதும் குற்றம் சுமத்தும் அதிகாரம் எனக்குக் கிடையாது. இந்தக் குற்றம் சார்ந்து எனது ஆழ்ந்த புரிதலின்படி அந்த உளவியல் நிறுவனத்தினர் ஒரு குறியீடு மட்டுமே. அதாவது அந்த நிறுவனத்தினூடாகவும் அங்கு நடந்த சம்பவத்தினூடாகவும் எமக்குத் தெரிவது பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு அந்நிய ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் ஒரு நகரத்தின் வீழ்ச்சி. ஒரு இனத்தின் பண்பாட்டு வீழ்ச்சி. ஒரு இனத்தின் கலாச்சார வீழ்ச்சி. இன்று இவர்களும்; இவர்களது நிறுவனம் மட்டுமல்ல சிங்கள ஆக்கிரமிப்புக்குள் உள்ள பல நிறுவனங்கள் - பல மனிதர்கள் இந்த வீழ்ச்சியை அடையாளப்படுத்துகிறார்கள் - தெரிந்தும் தெரியாமலும் என்று இரு வழிகளிலும் இது நடந்தேறுகிறது.
எனவே குற்றங்கள் ஆராயப்பட வேண்டியனவேயொழிய தண்டிக்கப்பட வேண்டியவையல்ல. அங்கு நடந்த குற்றத்தின் மூலம் எது? அவர்களை அதை நோக்கி நகர்த்தியது எது? என்று ஆராய்ந்து அத்தகைய குற்றங்கள் இல்லாத சமுகமாக தமிழ்ச் சமுகத்தை மாற்றுவது எப்படி என்று சிந்திப்பதும் அதன் வழி செயற்படுவதும்தான் சமூகம் சார்ந்ததாக இருக்கும். தண்டிப்பது தனி மனிதன் நலன் சார்ந்தது.
எனது நூலின் மையம் யாழ்ப்பாண நகரத்தை சுற்றியதாகத்தான் பின்னப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களிற்கான மூலத்தை அந்நகரமே வழங்குகிறது. அந்நிய ஆக்கிரமிப்பும், அதனூடாகத் தோற்றம் பெற்ற சில மேட்டிமைச் சக்திகளும் அதன் வழி தோற்றம் பெற்ற நிறுவனங்களும் அவை வெளிப்படுத்தும் அதிகாரமுமே குற்றத்தின் தோற்றுவாய்களாகின்றன.
எனவே தனிமனிதர்களைத் தண்டிப்பதும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதும் பிரச்சினையை பிரக்ஞைபூர்வமாக அணுக வழிசெய்யாது. அந்நகரத்திலிருந்து, அந்நகரை மையப்படுத்தும் நிறுவனங்களிலிருந்து வெளிப்படும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதும் அதன் வேர்களைக் கண்டறிவதும்தான் சரியானதாக இருக்கும். எனது சுயவரலாற்று நூல் அதைத்தான் செய்ய முற்படுகிறது. இதை மிசேல் பூக்கோவின் மொழியில் சொன்னால் எனது நூலின் மையமான குறிக்கோள் அதிகார நிறுவனங்களையோ, அதிகாரக் குழுக்களையோ, அதிகாரம் உடைய மேட்டிமை வர்க்கத்தையோ தாக்குவது அல்ல. மாறாக, அதிகாரத்தின் நுட்பத்தை அதன் வடிவத்தைத் தாக்குவதாகும்.
இதற்கு அதிகாரம் பற்றிய ஆழ்ந்த புரிதல் அவசியம். மிசேல் பூக்கோவை முன்னிறுத்தி அதிகாரம் குறித்து 'விடுதலையில்' அன்ரன் பாலசிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "அதிகாரமானது சமுகப்படிநிலையின் சிகரத்தின் மீது குவிந்து கிடக்கவில்லை. அல்லது அரசின் நிர்வாகச் சிம்மாசனத்திலிருந்து ஆட்சி புரியவில்லை. அன்றி, அது ஆளும் வர்க்கத்தின் அசையாச்சொத்துமல்ல. அதிகாரமானது எந்தவொரு மையத்திலிருந்தும் பிரவாகம் எடுக்கவில்லை. அது எங்கும், எல்லா இடங்களிலும் வியாபித்து நிற்கிறது. எங்கெல்லாம் மனிதர்கள் உறவு கொண்டு, கூட்டாக - குழுவாக அமைப்பாக இயங்குகிறார்களோ அங்கெல்லாம் அதிகார உறவுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதிகாரம் மையம் கொள்ளும் நுண்தளங்கள் (micro - centers of power) பல ரகமானவை. அது குடும்பத்திலும் இருக்கிறது. கோவில் நிர்வாகத்திலும் இருக்கிறது. அதிகாரம் என்பது அரசியலுக்குச் சொந்தமானதல்ல. அதன் வீச்சு பரந்தது. அது சிறிய அளவிலும் பெரிய அளவிலும் எல்லா சமுக நிறுவனங்களிலும் பரந்து செறிந்து கிடக்கிறது."
இன்று யாழ்ப்பாணத்தில் எமது விடுதலைப்போராட்டத்தின் மீதும் அதன் பண்பாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்தும், நுண் அதிகாரத்தைக் கட்டவிழ்த்து விடும் மையங்களாக பல்கலைக்கழகம், மருத்துவமனை, பிற கல்விக்கூடங்கள், தேவாலயங்கள், கோவில்கள், தொண்டு நிறுவனங்கள்,அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் (ngo) அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், மதகுருக்கள், போதகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
இந்த உண்மை மேற்குறிப்பிட்டவர்களுக்கு சினத்தையோ ஆச்சர்யத்தையோ தரலாம். ஆனால் நிஜம் என்னவோ அதுதான்.
இதை நான் சொல்லவில்லை. மிசேல் பூக்கோவின் 'the archaeology of knowledge' என்ற ஆய்வின் முடிவு சொல்கிறது. எனவே இது பற்றி நாம் ஆழமாகப் பார்ப்பது நல்லது. அதனூடாகவே ஈழத்தமிழ்ச்சூழலின் அறிவுலகங்கள் என்று சொல்லப்படுகிற மேற்படி நிறுவனங்களின் புனித முகமுடிகளை நாம் கிழித்தெறியலாம். அதன் வழி அவற்றின் அதிகாரங்களைக் கட்டுடைக்கலாம்.
ஒரு போராடும் இனக்குழுமத்தில் போராளிகள் தவிர்ந்து யாரும் புனிதர்கள் கிடையாது. ஆனால் மேற்படி அறிவுலகங்களும் ஆன்மீக நிறுவனங்களும் புனிதப்பூச்சுக்களைப் பூசியபடி கண்ணுக்குத்தெரியாத அதிகாரங்களை போராட்டத்தின்மீதும் பண்பாட்டின்மீதும் செலுத்தி வருகின்றன. எனது நூலில் பூக்கோவை முன்னிறுத்தி மேற்படி 'புனிதர்களின்' புனிதசாயத்தை அமிலம் ஊற்றிக் கழுவியிருக்கிறேன். இதற்காக எனது நூலின் 200 பக்கங்களை விழுங்கியிருக்கிறது இந்தக் கூட்டணி. இனி ஈழத்தமிழ்ச் சூழலில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், மத போதகர்கள் கடவுள்களாக அரிதாரம் பூசித்திரிய முடியாது. அவர்கள் எல்லோரையும்போல் சாதாரண மனிதர்கள் அவ்வளவுதான். ஏனெனில் அறிவும் அதிகாரமும் இணைவது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார் பூக்கோ. நாமும் மேற்குலகில் பல அறிவுஜீவிகள், கல்விமான்களுடன் உறவுகளை பேணிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருக்கும் தலைக்குப் பின்னால் எந்த ஒளிவட்டமும் கிடையாது. ஆனால் யாழ்ப்பாணத்தில் பலருக்கு கால் தரையிலிருந்து இரண்டடி மேலெழும்பிய பிரமை. மக்களும் பகுத்தறிவின்றி அவர்களுக்கு ஒரு புனித அடையாளத்தைக் கொடுத்துவிட்டார்கள். விளைவு அவர்களிடமிருந்து அதிகாரமும் வன்முறையும் வெளித்தள்ளப்படுகிறது. ஒருசில புத்திஜீவிகள் தவிர்ந்து மற்றவர்களுக்கு தாம் போராடும் இனம் ஒன்றின் பிரதிநிதிகள் என்ற பிரக்ஞையே இல்லை. அவர்களின் மொண்ணைத்தனத்தை பூக்கோவினூடாக முடிந்தளவு எனது நூலில் அம்பலப்படுத்தியுள்ளேன். எனது நண்பர் ஒருவர் சொன்னார் " யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு மருத்துவருடன் உரையாடுவதும் ஒன்றுதான் சிங்கள ஆமி ஒருவனுடன் உரையாடுவதும் ஒன்றுதான். ஏனெனில் இரண்டுமே பதட்டம் நிறைந்தவை". மருத்துவம் என்ற தொழிலின் மகத்துவத்தையே கேள்விக்குள்ளாக்கும் விடயங்கள் இவை.
"எந்தவொரு தத்துவ அறிஞரையும் அவருக்கு இணையாகக்கூற முடியாது. மற்றவர்கள் இயற்கையானது எனப்பார்த்தவற்றில் அவர் வரலாற்றைக்கண்டார். மற்றவர்கள் அத்தியாவசியமானவை என நினைத்தவற்றின் இடத்தில் அவர் தற்செயல் நிகழ்வுகளைப் பார்த்தார்" என அலெக்ஸாண்டர் நெகமாஸ் என்ற அறிஞர் பூக்கைவைப் பற்றிக் குறிப்பிட்டது இந்த இடத்தில் நினைவு கொள்ளத் தக்கது.
எமது விடுதலையைப் பின்னடையச்செய்யும் சிறிய விடயங்களைக்கூட நாம் நுண்மையாகக் கண்டறிந்து களைய வேண்டும். அதுதான் ஒரு முற்போக்கான இனமாக தமிழினம் வளாந்து செல்ல வழி வகுக்கும்.
கட்டுரையாளரின் தொடர்ப்புக்கு: parani@hotmail.com
இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts) |